
எங்கள் பயணம் ஐஸ்லாந்தின் தென் திசையிலிருந்து கிழக்குத் திசையில் அதாவது நோர்வே பக்கம் இருந்தது .நோர்வேயையும் ஐஸ்லாந்தையும் பிரிப்பது அத்திலாந்திக் சமுத்திரம். இதைக் கடந்து தான் வைக்கிங் குழுவினர் அக்காலத்தில் பாய்மரக்கப்பல்களில் ஐஸ்லாந்து மட்டுமல்ல, கிறின்லாந்து மற்றும் அமரிக்காவரை சென்றார்கள். ஐஸ்லாந்தில் ஆயிரம் வருடங்கள் முன்பாக குடியேறினார்கள்
இதுவரை காலமும் நியூசிலாந்து உலகத்தில் கடைசியாக உருவாகிய நிலப்பகுதி என நினைத்த எனக்கு 64 மில்லியன் வருடங்கள் முன்பு ஐஸ்லாந்து உருவாகியது எனக் கேட்டபோது வியப்பளித்தது. அதைவிட ஐஸ்லாந்தின் மத்தியபகுதி இன்னமும் இளையது. பூமியில் கிட்டத்தட்ட இமய மலைத்தொடர் உருவாகியது (50மில்லியன்.) இதே காலத்தில்தான் .
இப்படி பூமியின் பல பகுதிகள் பல்வேறு காலங்களில் உருவாகியது என்பதை பாறைகளின் வயதால் விஞ்ஞானிகள் கணித்துள்ளார்கள். ஆனாலும் பைபிளில் சொல்லப்பட்டது போல ஒரே நாளில் புவி இறைவனால் உருவாக்கப்பட்டதென கிட்டத்தட்ட 5-6 பில்லியன் மக்கள் நம்புகிறார்கள். உண்மையும் நம்பிக்கையும் இருளையும் ஒளியையும் போன்றது . ஒன்றின் இடத்தில் மற்றது இருப்பது கிடையாது.
நாங்கள் சென்ற ஐஸ்லாந்தின் கிழக்குப் பகுதியில் அதிக மிருகங்கள் உள்ளன. அத்துடன் மனித குடியேற்றமும் இந்தப் பகுதியாலே ஆரம்பத்தில் நடந்தது.
ஆரம்பத்தில் ஐஸ்லாந்துக்கு ஆதி குடியேற்றவாசியாக இருந்த ஒரே மிருகம் துருவ நரி மட்டுமே. அவை, பனியால் நிலமும் கடலும் இணைந்திருந்த காலத்தில் நடந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. 11, 700 வருடங்கள் முன்பாக பனிப்பாறைகள் விலகியதால் இங்கேயே தங்கிவிட்டன. நரிகள், ஆணும் பெண்ணும் ஜோடியாக வாழ்வதுடன் மீன்கள், இறந்த சீல்கள் மற்றும் பறவைகளின் முட்டைகள் என பலதையும் உண்பதால் இங்கு தொடர்ந்து வாழ்ந்தன.
மற்றைய மிருகங்கள் எல்லாம் பிற்காலத்தில் 874ன் பின் வந்தவர்களால் ஐஸ்லாந்திற்கு கொண்டு வரப்பட்டன. ஏற்கனவே நான் சொன்ன ஐஸ்லாந்து குதிரைகள், செம்மறிகள் என்பன இதில் அடங்கும். அதை விடத் துருவ மான்கள் (Reindeer) உள்ளன. கிட்டத்தட்ட 10,000 மான்கள் வசிப்பதால் ஒரு வருடத்திற்கு 400 மான்களே வேட்டைக்காரர்கள் கொல்ல அனுமதியுண்டு. இதனால் வேட்டையாட லொத்தர் போட்டு அனுமதி கொடுப்பார்கள். இங்கு புற்கள் அதிகம் இல்லாதபடியால் மேயும் மிருகங்களின் என்ணிக்கை குறைவானது.
நான் பார்த்த செம்மறிகளும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மிருகங்கள் போல் உடல் பருமனில் பெரிதாகத் தெரியவில்லை . ஏன் புல்லில்லை எனக் கேட்டால் காடுகள் மரங்கள் விறகுக்காகவும் வீடுகள் கட்டவும் குடியேறியவர்களால் அழிக்கப்பட்டதால் வெறுந்தரையில் எந்த உரமும் இல்லை. அத்துடன் நிலம் பனி மற்றும் அணைந்த எரிமலைக் குளம்புகளால் மூடப்பட்டுள்ளது.
சில காலங்களில் ஐஸ்லாந்தினர் மின்ங்(Mink) என்ற நரி வகையை அவற்றின் தோலுக்கு வளர்த்தார்கள். ஆனால் அவை கூண்டுகளிலிருந்து தப்பி வெளியேறியதால் தற்போது காட்டு மிருகமாகி, கோழிகளை பண்ணைக்குள் வந்து கொல்லுகிறது . எங்கள் வழிகாட்டியின் கூற்றுப்படி நரிகள் உணவுக்கு மட்டுமே கொல்லும், ஆனால் மின்ங் தேவையில்லாததும் கோழிகளை கொல்லும் .
ஐஸ்லாந்து பாம்புகள் நுளம்புகள் இல்லாத நாடு என்பதில் ஆச்சரியமில்லை. குளிரில் அதிக மனிதரகளோ மிருகங்களோ இல்லாதபோது அவை என்ன செய்யும்?
எங்களது அட்டவணையில் இருந்தது பனிப்பாறைகள் மிதக்கும் ஏரியாகும் . இந்த இடத்தில் பல ஜேம்ஸ் பொண்ட் படங்கள் மற்றும் கொலிவூட் இவற்றில் சில (A View to a Kill, Die Another Day, Lara Croft: Tomb Raider, and Batman Begins,)
துருவத்திற்கு வெளியே நிரந்தரமான பனிப்பாறைகள் உள்ள இடம் ஐஸ்லாந்தாகும் . தற்போதும் 10 நிரந்தரமானபனிப்பாறைகள் கொண்ட மலைகள் உள்ளன. . அதாவது அவை கோடையிலும் உருகியதில்லை . தற்போது புவி வெப்பமடைவதால் அந்தப் பனிப்பாறைகள் வெப்பமடைந்து துண்டு துண்டாக உடைவதுடன் உருகி வழியும் போது அவை தங்கள் உராய்வால் வாவியாகின்றன. இங்கு கடல் வந்தால் அவற்றை ஃயோட் (Fjord) என்போம் . இந்தப் பகுதியில் ஐஸ்லாந்தின் பெரும்பாலான நிரந்தர பனிப்பாறைகள் உருகி இந்த கிழக்குப் பகுதியாலே கடலிற்குள் ஆறுகளாக ஓடுகின்றன. . நாங்கள் பார்க்கும்போது பனிப்பாறைகள் பெரிய பாளங்களாக வாவி நீரில் மிதந்தன. அவைகளில் வயது பல மில்லியன் வருடங்களாக இருக்கலாம். இந்த பனிப்பாறைகள் கொண்ட வாவி பல காலமாக இல்லை 1934ல் பனிப்பாறைகள் பின் வாங்கியபோதே இந்த வாவி உருவாகியது.
இரு கண்டங்களின் உராய்வினால் புவியியல் மாற்றங்கள் ஐஸ்லாந்தில் விரைவாக ஏற்படுகிறது. பனிப்பாறைகள் உருகிய பின்பு மலைகளில் மண்ணும் கல்லும் மீதியாகிறது.
(Breiðamerkurjökull Glacier) பனி மலையிலிருந்து நீல நிறமான பனிப்பாறைகள் உடைந்து இந்த வாவியை அடையும் . இங்கிருந்து அவை அருகிலுள்ள அத்திலாந்திக் சமுத்திரத்தை அடையும்போது கடற் கரையெல்லாம் பனிப்பாறைகள் மிதக்கும். பனிபாறைகள் பார்ப்பதற்கு வைரங்கள் போல்த் தெரிவதால் இந்த கடற்கரையை வைர கடற்கரை(Diamond Beach) என்பார்கள்.
இந்த கடற்கரை கருமையானது என்பதால் தூரத்தில் பார்க்கும்போது இந்த பனிகட்டிகள் கருமையான வெல்வெட் துணியில் வைத்து வைரங்களை நமக்கு நகை வியாபாரி தந்து பார்ப்பது போன்ற தோற்ற மயக்கத்தை எமக்கு தரும் .
எங்களுக்கு பனிப்பாறைகள் மிகக்கும் அந்த (Jokulsarlon Glacier Lgoon) வாவில் ஒரு மணி நேரம் படகு பயணம் இருந்தது . குளிரில் விறைத்தபடி பனிப்பாறைகள் மத்தியில் போவது ஆரம்பத்தில் உற்சாகமாக இருந்தது. அங்குள்ள பனிகட்டிகள்மேல் படுத்துறங்கியபடியிருந்த சீல்கள், கடலில் மகா விஷ்ணு உறங்குவதாக ஏபி நாகராஜன் படத்தில் வந்ததைவிட திவ்வியமான காட்சியாக இருந்தது. இந்த வாவியில் மீன்கள் அதிகம் வருவதால் உணவுக்கு பஞ்சமில்லை. அதைவிட சீல்களின் எதிரிகளான திமிங்கிலங்கள் இங்குள்ள சிறிய ஆற்றின் மேலுள்ள பாலப் பகுதியை கடந்து இந்த வாவிக்கு வர முடியாது என்பதால் இவைக்கு அவுஸ்திரேலியாவில் சோஷல் செக்யூரிட்டியின் பணமெடுத்து வாழ்வது போன்ற யோகமான சீவியம். உணவு, பாதுகாப்பு, உறைவிடமும் இருக்கும்போது எவரையும் அசட்டை செய்தபடி சயனிக்கலாம் !
இங்குள்ள வாவி மட்டுமல்ல, பனிப்பாறைகளும் பார்க்கும்போது நீல நிறமாக தோன்றியது. எதிரே வரும் ஒளியை தடுப்பதற்கு நீரிலோ அல்லது பனிப்பாறைகளில் காற்றோ மற்ற மாசுப்பொருட்களோ இல்லை. அப்பொழுது என் நினைவுக்கு வந்தது வட ஐரோப்பியரது கண்களில் மெலனின் இல்லை என்பதாலே அங்கு நீலமாகத் தெரிகிறது. ஒளி அங்கு ஊடுருவி பட்டு தெறிக்கிறது. (Blue colour is not a colour but a reflection).
பௌதீகமாக நீர் உறைதலை பனி என்கிறோம் ஆனால் பனியில் பல விதங்கள் உள்ளது . நீங்கள் ஐரோப்பாவில் குளிர் காலத்தில் கொட்டும் பனியை கையில் எடுத்து பார்த்தால் அதில் 90 வீதம் காற்று உள்ளது. கொஞ்சம் இறுகிய பின் எடுத்துப் பார்த்தால் மணியாக இருப்பது (Granular snow) இதில் 50 வீதம் காற்று உள்ளது. இதை விட நாங்கள் குளிர் சாதனப்பெட்டியில் இருக்கு பனிக்கட்டியில் காற்று 20-30 வீதம். ஆனால் இந்த வாவியில் மிதக்கும் பனிப்பாறைகளில் 20 வீதமே காற்று உள்ளது .
இந்த வாவியில் உள்ள பாறைகள் மலையில் ( Breiðamerkurjökull Glacier) இருந்து வந்தவை மட்டுமல்ல, பல வருடங்களைக் கடந்தவை . சாதாரணமாக பெய்யும் பனி பனிபாறையாகுவதற்கு பல காலம் எடுக்கும். பல காலம் வளரும் மரத்தில் ஏற்படும் ஆண்டு வளையங்கள் போன்ற படிமுறை வளர்ச்சி பனிப்பாறைகளிலும் காணப்படும். இப்படியான அடையாளங்களின் மூலம் பனிப்பாறைகளின் வயதைக் கணிக்க முடியும் .
நாங்கள் பார்த்த இந்த பனிகட்டிகள் 5 வருடங்கள் இந்த வாவியில் மிதந்து அங்குள்ள சிறிய ஆறு வழியாக கடலில் கலந்த போதிலும் அவற்றின் ஆயுட்காலம் பல மில்லியன் வருடங்கள் மலைகளில் கழிந்தவை.
இங்கு பனிப்பாறைகள் குகை வடிவங்களாக உள்ளது அவற்றின் உள்ளே சில காலத்தில் உல்லாசப் பயணிகளை போக அனுமதித்தார்கள். சமீபத்தில் திடிரென பனிப்பாறை உடைந்தது மரணம் சம்பவித்தது. தற்பொழுது இதை தடுத்துள்ளார்கள். இந்த இடத்தில் ஷாருக்கானும் கஜோலும் பாடல் காட்சி வரகிறது . காட்சியில் அவரகளது படகைக் காட்டாது வாவியில் நடந்து பாடுவதாக “புத்திசாலித்தனமான “ காட்சியை அமைத்துள்ளார்கள்
அடுத்து எங்கள் பயணம் கடற்கரை ஓரத்திலுள்ள 600 பேர் வசிக்கும் சிறிய கிராமம் (Djupivogur )இந்த கிராமம் மீனவர்கள் அதிகமாக வசிக்கும் அழகிய கிராமம். கடற்கரையில் ஏராளம் படகுகள் நின்றன. அதை விட இங்கு செங்குத்தான பாறைகள் எரிமலையினது தாக்கத்தால் உருவாகியதால் இந்த இடம் பாறைகளில் ஏறுபவரகள்(Rock climping) பிரபலமானது . இந்த கிராமம் ஐஸலாந்தில் அமைதியான மனமகிழ்வாக வாழ்பவர்கள் இடமாக (Cittaslow movement) சொல்லப்படுகிறது .
அடுத்து நாங்கள் சென்றது (Möðrudalur) 1500 அடிகள் உயரமான மலைப்பிரதேசம் . இதுவே ஐஸ்லாந்தில் உயரமான விவசாயப் பண்ணைகள் உள்ள இடமாகும். எங்களால் செம்மறிகளையும் பார்க்க முடிந்தது . அத்துடன் மிகவும் குளிரான இடம். குளிர்காலத்தில் -34 சென்டி கிரேட் உறை நிலைக்குக் கீழே போக கூடிய இடம் . மரத்தாலான சிறிய வீடுகள் மேல் மண்கள் போட்டிருந்தார்கள் . அழகான ஒரு சிறிய தேவாலம் இங்கு உள்ளது அது ஒரு விவசாயியால், அவனது மனைவியின் நினைவாக கட்டப்பட்டது தனி ஒருவனாக இந்த தேவாலயத்தை கட்டி முடித்ததுடன் தேவாலயத்தின் பலிபீடயும் கட்டி வண்ணத்தையும் அடித்ததாக சொல்கிறார்கள் . அந்த தேவாலய வளாகத்தை சுற்றி பார்த்தபோது அவனது உடல் அங்கு புதைக்கப்பட்டு அதன்மேல் நடுகல்லிருந்தது .
எத்தனையோ தனவான்கள், வீரர்கள் தலைவர்கள் பலர் உலகத்தின் பல சவக்காலையில் தேடுவாரற்கு இருக்கும்போது ஜோன் ஸ்ரிவிவன்சனது செயல் அவனை பலரும் நினைப்பதுடன், என் போன்று எங்கோ உள்ள ஒருவரை எழுத வைத்துள்ளது: அதை படமெடுக்க வைத்துள்ளது. சாதாரண மனிதர்கள் தங்கள் வாழ்வில் செய்யும் சில விடயங்கள் அவர்களை நம்மிடையே பல காலமாக நினைக்க வைத்துள்ளது என்பது என் மனதில் அப்பொழுது நினைக்க முடிந்தது.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.