மத்தியப் பிரதேசத்திற்கு போனால் பீம்பேத்கா (Bhimbetka) என்ற இடத்தை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று நண்பர் கூறியபோது, அதன் முக்கியத்துவம் எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. என் பயண முகவர் கூட அதை முதலில் குறிப்பிடவில்லை. ஆனால் இறுதிநேரத்தில் கேட்டபோது, "நிச்சயமாக ஏற்பாடு செய்கிறோம்" என்றார்.

போபாலிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில், விந்திய மலைத்தொடரின் தெற்கு பகுதியில், காடு சூழ்ந்த 15 சதுர கிலோமீட்டர் பரப்பில் இந்த குகைகள் அமைந்துள்ளன.

என்ன விசேஷம்?

இந்தியாவில் கற்காலம், இடைக்காலம், பிற்காலம் என மனிதன் வாழ்ந்த பல்வேறு சமூகங்களின் ஆதாரங்கள் ஒரே இடத்தில் காணப்படும் அற்புதமான சான்றுகள்தான் இங்கு உள்ள குகை ஓவியங்கள். "பீமனின் ஓய்விடம்" அல்லது "பீமனது குன்று" என்ற பெயருடன் தொடர்புபடுத்தி அழைக்கப்படுகிறது.

உள்ளூர் மக்கள் இதனை மகாபாரதத்தின் பீமன் வாழ்ந்த இடமாக நம்பினாலும், இன்று இதன் வரலாற்றுப் பெருமைக்காக யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது.

எனது அனுபவம்

நாங்கள் சென்ற நாள் வெப்பம் 40 செ. அடித்தது. மத்தியப் பிரதேசத்தின் வழியாக கடகரேகை (Tropic of Cancer) செல்கிறதால், கோடைகால வெயில் நேரடியாகத் தலையில் தாக்குகிறது. அங்கு நான் சுமார் பத்து குகைகளைப் பார்த்தேன்.

என்றோ வாழ்ந்த குகைமனிதர்களைப் பற்றிய ஆர்வம் எனக்கு அதிகமில்லை; ஆனால் சியாமளா என்னைச் சேர்ந்துகொண்டு அலைந்ததால், பார்த்துவிட்டேன். அதோடு, சங்கப்பாடல்களின் சில வரிகளும் நினைவுக்கு வந்தன.

கலம்செய் கோவே கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே! [புறநானூறு 256 'அகலிதாக வனைமோ!)


வண்டியின் ஆரத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டு வண்டியும் அதன் ஆரமும் போகும் வழி எது என்பதை அறியாது அது போகும் போக்கில் தானும் ஒட்டிக் கொண்டு சென்ற சிறிய வெண்ணிறம் உடைய பல்லியைப் போலவே இந்தத் தலைவனுடன் நானும் அவனை அன்றி வேறு வெளி உலகம் அறியாது இத்தனை காலம் வறண்ட பல நிலங்களை அவனுடன் ஒட்டிக் கொண்டு இத்தனை ஆண்டுகளாக என் வாழ்க்கையையும் கடந்து விட்டேன். இப்பொழுது அவனை இழந்த பின் நான் தனியே வாழ்வது எங்கனம்? ஆகவே அவனுடன் கூடவே எனக்கும் ஒரு இடத்தை அந்தத் தாழியில் இருக்குமாறு அதை அகலமாகச் செய்வாயாக என்கிறாள். இதில் இருக்கும் சோகம் மனதை கலங்க அடிக்கும் ஒரு மாபெரும் சோகம். ஆழியை விடப் பெரிய ஒரு சோகத்தை இத்தனை சிறு வரிகளில் அடைத்து விட்டிருக்கிறார் அந்தப் புலவர்.

உலகளாவிய ஒப்பீடு

இதேபோன்ற கற்கால ஓவியங்கள் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளிலும் உள்ளன என முன்பே கேள்விப்பட்டிருந்தேன். அவுஸ்திரேலியாவில் இதுவரை பார்க்கவில்லை.

குகை ஓவியங்கள்

இங்குள்ள ஓவியங்களில் சில 40,000 ஆண்டுகளுக்கு முந்தையவை எனக் கூறப்படுகின்றன. அவை பெரும்பாலும் மனிதர்களின் வேட்டை மற்றும் நடனம் குறித்தவை.

இடைக்கால ஓவியங்கள் – ஈட்டி, அம்பு போன்ற ஆயுதங்களுடன் மனிதர்கள்.

பிற்கால ஓவியங்கள் – குதிரை, யானைச் சவாரிகள், சடங்குகள்.

சிறிய குகைகளுக்கிடையே ஒரு பெரிய மண்டபம் போன்ற குகை உள்ளது. அது அக்காலத்தில் சமூகக் கூடங்களுக்கும், முடிவெடுக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இங்குள்ள ஓவியங்கள் வேட்டை, நடனம், சடங்கு ஆகியவற்றைக் காட்டுவதால், அக்கால சமூகம் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்து தலைமை, வேலைப் பிரிவுகள், சமூக ஒழுங்குகள் உருவானது என்பதையும் வெளிப்படுத்துகின்றன.

இரும்புத்தாது, சுண்ணாம்பு என்பன நீர், மிருகங்களின் கொழுப்பு மற்றும் தாவரங்களின் பசையுடன் கலந்து வரையப்பட்ட ஓவியங்கள் இவை. பாறைகளை முன் பண்படுத்தாமல் வரையப்பட்ட ஆரம்ப ஓவியங்களின் மேல் பிற்காலத்தில் வந்தவர்களால் மீண்டும் அவற்றின் மேல் வரையப்பட்டுள்ளன. வரைவதற்கு மயிர் அல்லது மரத்தாலான தூரிகைகளோடு கை விரல்களும் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு புதைக்கப்பட்ட மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கரடுமுரடாக கற்கள், செதுக்கப்பட்ட கல் உபகரணங்களுடன், செப்பு மற்றும் இரும்பு உபகரணங்களும் உள்ளன. இதன் அடிப்படையில், பழைய கற்காலம், புதிய கற்காலம், செப்புக்காலம் மற்றும் இரும்புக் காலம் என மனிதர்கள் தலைமுறையாக மட்டுமல்ல நாகரிகத்தின் தொடர்ச்சியாக வாழ்ந்த இடமாக இதை கணிக்கப்படுகிறது.



இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.