
 எழுத்தாளர்  சிவராசா கருணாரன் 'NPP புரியாத புதிர் புரிந்தும் புரியாத பதில்' என்றொரு முகநூற் பதிவிட்டிருக்கின்றார். அதில் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருக்கின்றார்.
எழுத்தாளர்  சிவராசா கருணாரன் 'NPP புரியாத புதிர் புரிந்தும் புரியாத பதில்' என்றொரு முகநூற் பதிவிட்டிருக்கின்றார். அதில் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருக்கின்றார்.
1. NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா?  
2. அப்படித் தீய சக்தியான NPP யை மக்கள் எப்படி – எதற்காக ஆதரித்தனர்? 
3. NPP யின் ஆதரவாளர்கள் இதைக்குறித்தெல்லாம் இன்னும் பேசாதிருப்பது ஏன்? 
4. இதுவரையில் இனவாதம் பேசியவர்களை விடவும் இதுவரையில் இனவாதத்தை முன்னெடுத்த கட்சிகளை விடவும் NPP யினரிடம் இனவாதம் மேலோங்கி உள்ளதா? 
5. NPP ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மக்களுக்கு ஆதரவானவை அதிகமா? எதிரானவை அதிகமா? 
6. NPP செய்யத் தவறிய, தாமதித்த விடயங்கள் இருக்கலாம். ஆனால், அது செய்த (மேற்கொண்ட) விடயங்களில் பாரதூரமான எதிர்விளைவுகள் எவை? 
7. ஊழல் குற்றச்சாட்டுகளோடு தொடர்புபட்டதாகச் சொல்லப்படும் முக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகளில் 10 பேர் வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மக்கள் அபிப்பிராயம் என்ன? அரசியற் தரப்புகளின் நிலைப்பாடு என்ன? 
8. “NPP தமிழ் மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அளவுக்கு அதிகமாக தமிழ் மக்களின் பக்கமாகச் சாய்கிறது” என்ற சிங்களக் கட்சிகளின் எதிர்ப்பிரச்சாரத்தை எப்படி நோக்கலாம்? “தமிழ்க் கட்சிகளுக்குப் பயந்து பல விட்டுக் கொடுப்புகளை ஜனாதிபதியும் (அநுரகுமார திசநாயக்கவும்) NPP யும் செய்வதை அனுமதிக்க முடியாது”  என்று சொல்லும் சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச, சரத் வீரசேகரா போன்றோர் சொல்கிறார்கள். 
9. ஏனைய சிங்களக் கட்சிகளைப்போல, ஏனைய இனவாதிகளைப்போலவே NPP யும் உள்ளது. NPP யினரும் செயற்படுகிறார்கள்‘ என்று தமிழ்த்தேசியத் தரப்பினர் சொல்கின்றனர்.  அப்படியென்றால் எது உண்மை? 
இறுதியில் 'ஆனால், எவையும் NPP யோடு உறவில்லை. இது எதைக் காட்டுகிறது? (நாளைய கட்டுரையில்)'  என்று குறிப்பிட்டிருக்கின்றார்.  இவையெல்லாம் மிக முக்கியமான கேள்விகள்.இவரது பதில்களைப் பார்க்க முன்னர் இவற்றுக்கான என் பதில்கள் அல்லது கருத்துகள் இவை

1. 'NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா?  
இதற்கு முக்கிய காரணம். மேற்படி கட்சிகள் எல்லாம் ஆதிக்கம் செலுத்திய அரசியற் களத்தில் தேசிய  மக்கள் சக்தி மிகவும் பலத்துடன் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கியுள்ளது. வடகிழக்கில், மலையகத்தில் எல்லாம் இவ்வித தென்னிலங்கைக் கட்சியொன்று இதுவரை ஆதிக்கம் செலுத்தவில்லை. மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை. இதுவரை காலமும் இப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த அரசியல் கட்சிகளால் தம் கைப்பிடிகளிலிருந்து  அதிகாரம் இன்னொரு சக்தியிடம் செல்வதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதுதான் பிரதான காரணம்.
தேசிய மக்கள் சகதி ஒரு புரட்சிகர அமைப்பிலிருந்து உருவான கட்சி. வர்க்கரீதியாகச் சமூக, பொருளாதார, அரசியல் அடக்குமுறைகளுக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மக்களின் வர்க்க விடுதலையை மையமாக வைத்து , இளைஞர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பிலிருந்து உதித்து   முதலாளித்துவ அரசியலுக்குள் குதித்த கட்சி. தத்துவார்த்தரீதியாக வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. இதுவரை காலமும் அவர்கள் அவர்களது அரசியல் தத்துவத்துக்கேற்ப எடுத்த முடிவுகளுக்கெல்லாம் தமிழ்க்கட்சிகள் இனவாதம் பூசின. அதே சமயம் இனவாதக் கூறுகளும் அக்கட்சியின் கடந்த கால அரசியலில் ஆதிக்கம் செலுத்தியதும் தவிர்க்கப்படாத உண்மை. எவ்விதம் வர்க்கவிடுதலைக்காகப் போராடிய மார்க்சியவாதிகளைத் தமிழ்த்தேசிய அரசியல் உருமாற்றியதோ, அது போலவே ஜேவிபியையும், ஏனைய தென்னிலங்கை மார்க்சியக் கட்சிகளையும் சிங்களத்தேசியவாத அரசியல் உருமாற்றியது. அதே சமயம் ஈர் இனங்களிலும் உருமாறாத இடதுசாரிகள் தொடர்ந்தும் இருந்து வந்திருந்தாலும், அவர்கள் பலமற்றவர்களாகவே இருந்து வந்தார்கள்.  இந்நிலையில் கடந்த காலங்களிலிருந்து  படிப்பினைகள் பெற்று , தம்மை வளர்த்தெடுத்து, நாட்டு மக்களின் பேராதரவைப்பெற்றுத்  தேசிய மக்கள் சக்தி ஆட்சியை,அறுதிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியிருக்கின்றது.  இனவாதமிருக்கும் வரையில் நாட்டைப் பொருளாதாரரீதியாக முன்னேற்ற முடியாது என்பதைத்தேசிய மக்கள் சக்தி உணர்ந்திருப்பதையே அதன் தலைவரும் , ஜனாதிபதியுமான அநுர குமார திசநாயக்கவிம் இனவாதத்துக்கெதிரான உரைகளும், செய்ற்பாடுகளும் புலப்படுத்துகின்றன. உண்மையில் இது  , தென்னிலங்கை அரசியலைப் பொறுத்தவரையில், கத்தியில் நடப்பதைப் போன்றது. அவர் அவ்விதமே நடக்கின்றார். ஒவ்விரு அடியையும் நிதானமாகவே எடுத்து வைக்கின்றார். 
- எழுத்தாளர் சிவராசா கருணாகரன் -
தென்னிலங்கையில் ஆட்சியை இழந்தவர்கள், ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மைப்பாதுகாக்கும் பொருட்டு இனவாதத்தைக்கிளப்புவார்கள். உதாரணத்துக்கு மாவீரர் நினைவு கூரலின்போது தமிழ், சிங்கள் அரசியலில் இன்வாதம் கிளப்பப்பட்டது. இனவாதிகளால் பொய்யான தகவல்கள் சமூக, ஊடகங்களில் பரப்பப்பட்டன. ஈரினத்திலிருந்தும் பயங்கரவாததடைச்சட்டத்தின் மீது கைதுகள் இடம் பெற்றன. இதனையொட்டி பாராளுமன்றத்தில் சிங்கள அரசியல்வாதியொருவரால் இனவாதம் கிளப்பப்பட்டது. அப்போது தேசிய மக்கள் சக்தி அமைச்சர் ஒருவர் அவரை இனவாதி என்றார். அதை நீக்கும்படி  இனவாதம் கிளப்பியவர் கேட்டபோதும் அவர் கிளப்பியது இனவாதமே. நீக்கமுடியாது என்று தேசிய மக்கள் சக்தி அரசு மறுத்து விட்டது. அண்மையில் கூட யுத்த முடிவினை நினைவூகூரும் நிகழ்வுகளில் அவரது உரையினையொட்டி இனவாதம் கிளப்பப்பட்டது. ஆனால் அதனை வெற்றிகரமாக  முறியடித்ததாகவே உணர்கின்றேன். தமிழ்ப் போராளிகளின் , மக்களின் நினைவு கூரல்களையும் அவர்கள் நியாயப்படுத்தி உரையாற்றினார்கள். வரவேற்கத்தக்க விடயம். ஆனால் நம் அரசியல்வாதிகள் எவரும் அதனை உணர்ந்ததாகவோ , வரவேற்றதாகவோ தெரியவில்லை.
இதுபோல் தென்னிலங்கை அரசியல்வாதிகளால் தேசிய மக்கள் சக்தி அரசின் மீது சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் இனவாதம் கிளப்பப்பட்டு வருகின்றது. இதனை அமைதியாக, ஆனால் உறுதியாக எதிர்த்துச் செயற்பட்டு வருகின்றது தேசிய மக்கள் சக்தி அரசு.  இந்த உறுதி நிலைத்து நிற்குமா அல்லது தேசிய மக்கள் சகதியும் நிர்ப்பநதங்களுக்குப் பணிந்து விடுமா என்பதைக் காலம் வெளிப்படுத்தும். பணிந்து விடாமல், உறுதியுடன் செயற்பட்டால், அதற்குரிய பல்லின மக்களின் ஆதரவும் நிலைத்து நிற்கும். மேலும் வளரும். இல்லாவிட்டால் இனவாத அரசியல்  மீண்டும் வெல்லும். அதைத் தடுக்கும் வகையில் உறுதியுடன் செயற்படுவதன் மூலம் இலங்கை அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் தேசிய அரசியல் சக்தி நிலைத்து நிற்கும் சாத்தியமுண்டு.
இவ்விதமாகத் தேசிய மக்கள் சக்தி இனவாதத்துக்கெதிராகச் செயற்படுகையிலேல்லாம் தார்மிக ஆதரவை வழங்க வேண்டியது அவசியமென்பதை உணர்ந்து ஏனைய இன அரசியல் கட்சிகள் செயற்படுவதாகத்தெரியவில்லை. அவர்களது நோக்கமெல்லாம் இழந்த அரசியல் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதுதான்.அதற்கு ஒரே வழி இனவாத அரசியல்தான். வடக்கைப் பொறுத்தவரையில் தமிழ் அரசியலுக்கு அது ஒருவகையில் உதவியிருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.  நடந்து முடிந்த உள்ளூராட்சித்  தேர்தல் அதற்கு நல்லதோர் உதாரணம். ஆனால் அது ஆரோக்கிய்மான அரசியலா?
2. 'உண்மையிலேயே NPP தீய சக்தியா? அப்படித் தீய சக்தியான NPP யை மக்கள் எப்படி – எதற்காக ஆதரித்தனர்? ' என்றும் கருணாகரன் கேள்வியினை எழுப்பியிருக்கின்றார்.
மக்கள் தேசிய மக்கள் சக்தியைத் தீய சக்தியாகக் கருதவில்லை. அநுர குமார திசநாயக்கா தம் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒருவராகக் கருதுகின்றார்கள். தற்போது தேசிய மக்கள் சக்தியின் பலமே அநுர குமார திசநாயக்காதான். அவரது  குடும்பப்பின்னணி, எளிமை, தர்க்கரீதியாகப் பேசும் ஆற்றல், உணர்வு பூர்வமாக மக்களின் பிரச்னைகளை உணர்ந்து உரையாற்றும் தன்மை எல்லாம் மக்களைக் கவர்ந்திருக்கின்றன என்பதுதான் உண்மை. இதுதான் பல்லின மக்களையும் அவர் கவரக் காரணம்.
3. 'ஊழல் குற்றச்சாட்டுகளோடு தொடர்புபட்டதாகச் சொல்லப்படும் முக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகளில் 10 பேர் வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மக்கள் அபிப்பிராயம் என்ன? அரசியற் தரப்புகளின் நிலைப்பாடு என்ன?'  
இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி நிதானமாகச் செயற்படுவதாகத் தெரிகின்றது. சின்ன மீன்களைப் பிடித்துப்போட்டுப் பெரிய மீன்களைப்பிடிக்கும் தந்திரத்தைக் கையாளவ்துபோல் தெரிகின்றது. ஆரம்பத்திலேயெ பெரிய மீன்களின் மீது கை வைத்தால், அவர்களுக்கிருக்கும் மக்கள் ஆதரவால்  நிலைமை கட்டு மீறி விடலாம். ஆனால் சின்ன மீன்களைப்  படிப்படியாகப் பிடித்து ,மக்களைத் தயார் படுத்திய பின், பெரிய மீன்கள் மீது கை வைக்கையில்  ,மக்கள் அதனை ஏற்கனவே எதிர்பார்க்கும் மனநிலையில் இருப்பார்கள். எனவே கிளர்ச்சிகளுக்குப் பதில் ஆதரவளிப்பார்கள். இவ்விதமே எனக்குத்  தோன்றுகின்றது. இத்தந்திரத்தையே அவர்கள் கையாள்கின்றார்கள் என்று  கருதுகின்றேன்.
4.  'ஏனைய சிங்களக் கட்சிகளைப்போல, ஏனைய இனவாதிகளைப்போலவே NPP யும் உள்ளது. NPP யினரும் செயற்படுகிறார்கள்‘ என்று தமிழ்த்தேசியத் தரப்பினர் சொல்கின்றனர்.  அப்படியென்றால் எது உண்மை? '  
தமிழ்க்கட்சிகள் தம் அதிகாரத்தைக்காப்பாற்ற இப்படித்தான் கூறுவாரகள். வேறு வழியில்லை. இல்லாவிட்டால் , புகலிடத்தமிழர்களின் பணத்தில் தங்கியிருக்கும் பெரும்பாலான ஊடகங்கள் அவர்களைக் காறித்துப்பிவிடும். இதுவரை சுமந்திரனுக்கு நடந்தது அதுதான். ஆனால் அதை மீறி அவர் தன்னை உறுதியாக்கி விட்டார். இனிக்  காறித்துப்பிய ஊடகங்களும், புகலிடச் சக்திகளும் அவரை அரவணைத்துச் செல்லும் நிலைதான் யதார்த்தம்.
அநுர அரசு பதவிக்கு வந்ததிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. இது ஆரோக்கியமான செயற்பாடு. இதனைப் புகலிட வானொலியொன்றில் நேயர் சுட்டிக்காட்டியபோது,இனவாதத்தைத்தொடர்ந்து கக்கி வரும் அறிவிப்பாளர் கூறுகின்றார் 'எங்கள் காணிகளை அவர்கள் விடுவிக்கின்றார்கள். அதிலென்ன இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் நாம் மயங்கக்கூடாது.' இதுவரை காலமும் ஆட்சிக்கட்டிலிருந்த அரசுகளால் விடுவிக்கப்படாமலிருந்த காணிகள் விடுவிக்கப்பட்டிருகின்றன. அதனை வரவேற்கும் மனநிலை அந்த ஊடகவியலாளருக்கில்லை. நம் அரசியல்வாதிகளுக்கும் இல்லை. 
இவை கருணாகரனின் கேள்விகளுக்கான் என் பொதுவான  பதில்கள். தேசிய மக்கள் சக்தி அரசு இனவாதத்துக்கெதிராக  உறுதியுடன் செயற்பட்டால், இனவாதிகளின் அரசியல் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து விடாமல் உறுதியுடன் இருந்தால், ஊழல்களுக்கு எதிராக உறுதியாக செயற்பட்டால், சிறுபான்மை இனங்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயற்பட்டால், நாட்டைப் பொருளாதாரரீதியில் முன்னேற்றும் செயற்பாடுகளை இன, மத,மொழி வேறுபாடற்று முன்னெடுத்தால், இலங்கை அரசியலில் நிலைத்து நிற்கும், நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும். செய்யுமென்று எதிர்பார்ப்போம். யாருமே எதிர்பாராத வகையில் ஆட்சியைப் பிடித்துச் சாதித்திருக்கின்றார்கள். இதையும் சாதிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம். நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பது ஒன்றுதான் நம்மிடமுள்ள ஒரேயொரு வழி.