24  உறவு                   
 
வே.ம.அருச்சுணன் – மலேசியாநொந்து போயிருக்கும் மனைவிக்கு ஆறுதலாக இருக்கட்டுமே,என்பதற்காக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை  வீட்டுக்கருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு மனைவியைத் தவறாமல் அழைத்துச் செல்வதை,வழக்கப் படுத்திக் கொள்கிறார் தினகரன். கணவன் மனைவி இருவரும் இறைவன் சந்நிதியில் மகனின் விடுதலைக்காக  நெஞ்சுருகிப் பிராத்தனைச் செய்வர். மகன் நல்லபடியாக விடுதலை அடைந்து நலமுடன் வீடு திரும்பிவிட்டால்,பத்துமலைத் திருமுருகனுக்குக் குடும்பத்துடன் பால்குடம் எடுப்பதாகத் தினகரன் வேண்டிக் கொள்வார். வழிபாடு நடத்தப்படும் நாள் அன்று,அம்பிகை மனம் சாந்தி அடைந்தவராகக் காணப்படுவார்.மகனைப் பற்றிய சஞ்சலம் ஏதுமின்றி அமைதியுடன் இரவில் தூங்குவார். தினகரனுக்கும் மனைவியின் அமைதியான உறக்கம் கண்டு சற்று ஆறுதல் கொள்வார். முருகா....! மனைவிக்கு நீதான் அமைதியைக் கொடுக்க வேண்டும்.உன்னைவிட்டால் எங்களுக்கு வேறு கதியேது....? மனமுருகி மனதில் வேண்டிக் கொள்வார்! வழக்கம்போல் கணவன் மனைவி இருவரும் தத்தம் பணிகளுக்குக் காலையில்  சென்று மாலையில் வீடு திரும்பினாலும் பழைய சுறுசுறுப்பும் உற்சாகமும்  இல்லாமல் மனம் சோர்ந்து காணப்படுவர்! பார்த்திபன் சிறைவாசம் அனுபவிக்கும் காலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டில் இரண்டு முறைகள் அவனைச் சென்று கண்டு வந்தார்கள்.அவனைக் கண்டு வந்த பிறகு அம்பிகை மேலும் கவலை அடைந்தார்.இதனால் அவனைச் சென்று காண்பதை தினகரன் தவிர்த்து வந்தார்.
 


இதற்கிடையில் பார்த்திபன் விடுதலையாகும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது! காத்திருந்த  அந்த  இனிய நேரத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் சிறைச் சாலையிலிருந்து இனியச் செய்தி தொலைபேசி வழி வருகிறது! விடுதலை ஆகும் நாளுக்கு ஆறு மாதத்திற்கு முன்னாடியே பார்த்திபனின்  நன்னடத்தையினால் விடுதலைச் செய்யப்படுவதாக  அதிகாரி தினகரனிடம் அறிவிக்கிறார்!
 
இந்த இனிய செய்தியை அம்பிகையிடம் சொன்ன போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு  அளவே இல்லை! கடும் வெப்பத்திற்குப் பிறகு வீசிய தென்றலின் இதத்தை உணர்கிறார் அம்பிகை. இறைவன் தன் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து விட்டதாகக் கணவரிடம் கூறி மகிழ்ந்து போகிறார்.
 
மகனை வரவேற்க வீட்டைச் சுத்தம் செய்கிறார்.புதிய திரைச்சீலைகள் மாற்றுகிறார்.சோபாக்களுக்குப் புது உறைகள் மாற்றுகிறார். மகனின் அறையை முழுவதுமாகச் சுத்தம் செய்கிறார்.படுக்கைக்குப் புதிய பெட்ஷீட் போடுகிறார். பழைய திரைச்சீலைகளுக்குப் பதிலாகப் புதிய திரைச்சீலைகளை மாற்றுகிறார்.கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மகனின் அறையைச் சுத்தம் செய்வதில்  அவர் சிரத்தை எடுத்துக்கொள்ளாமல்  இருந்தார்.
          
பார்த்திபன் விடுதலையாகும் முதல் நாள் இரவு மகனின்  பற்றிய நினைவலைகளில் மூழ்கிப்போயிருந்த அம்பிகை இரவெல்லா தூங்காமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார்.
        
மறுநாள் அதிகாலையிலேயே அம்பிகை எழுந்து வீட்டில்   இறைவழிப் பாட்டை நெஞ்சுருகச் செய்கிறார்.மனைவியின் இறை வழிப்பாட்டில் கணவரும் கலந்து  மெய்மறந்து போகிறார். கடவுளின் கருணையை எண்ணி அவரது கண்களும் பனித்தன!          
          
காலை ஒன்பது மணிக்கெல்லாம்  மகனை  எதிர் கொண்டழைக்க சிறைக்கூட வாசலில் அம்பிகை பதற்றமுடன் காணப்படுகிறார்.அவரின் கண்கள் சிவந்து காணப்படுகின்றன.கருத்திருக்கும் வானம் எந்த நேரத்திலும்  மழை பெய்வதற்காகக் காத்திருப்பதைப் போல மகனைக் காண்பதற்கு ஆவலுடன் கணவர் மற்றும் சில நண்பர்களுடன் பார்த்திபனை  வரவேற்கக்  காத்துக் கொண்டிருக்கின்றனர்!
 
சரியாகக் காலைப் பத்து மணிக்குப் பார்த்திபன் சிறையை விட்டு வெளியே  வருகிறான்! மெலிந்த உடலும், கண்களில் உருண்டோடும் கண்ணீருமாக அவன் அம்மாவின்  கால்களில்   விழுந்து  வணங்குகிறான்!  “அம்மா….என்னை மன்னிச்சிடுங்கம்மா….! இனி உங்கப் பேச்சைத் தட்டமாட்டேன்மா….!” சிறு குழந்தையைப் போலக் குலுங்கி குலுங்கி  கண்ணீர் விட்டுஅழுகிறான்!
          
அப்பா  தினகரன்  மிகுந்த   வருத்தமுடன்  பேசாமல்  தாய்ப்  பிள்ளைகளுக்கு  மிடையே  நிலவியப் பாசப்  பரிமாற்றத்தை  அமைதியுடன்  பார்த்துக்  கொண்டிருக்கிறார்! 
           
“அப்பா….!என்னை மன்னிச்சிடுங்கப்பா….! உங்களை  நான் தலைக்குனியச்  செஞ்சிட்டேன்!”  கண்ணீர்  சிந்தியபடி  அப்பாவின்   கால்களில் விழப்போனவனைத்  தடுத்து  நிறுத்தி   மார்புடன்  அணைத்துக் கொள்கிறார்.


 25 அனுபவங்கள்
 
வே.ம.அருச்சுணன் – மலேசியாமகனை  அணைத்து  மகிழ்ந்து  பல  ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. சிறு குழந்தை  போல்,  மகன் தேம்பித் தேம்பிஅழுகிறான்,நிதானமாகத் தினகரன்தோளைத்தட்டிக் கொடுக்கிறார்.
“சிறையில்….பல  அனுபவங்களைப்  பெற்றுவிட்டேன்!  வாழ்வில்  இனி   தவறே  செய்யமாட்டேன்   அப்பா!”  மகனின்  கண்களில்  மடை திறந்த   வெள்ளமாகிப்  போன  கண்ணீரைத்  துடைக்கிறார்.  தயாராக   இருந்த காரில்   ஏறி  வீட்டிற்குப்  பயணமாகின்றனர் !  காரில்   தாயார்  மகனின் கையைப் பிடித்துக்கொண்டு, பல  நாட்கள்   பேச  வேண்டிய  விசயங்களை ஒரே நாளில் பேசிமுடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பேசிக்  கொண்டே  வருகிறார். பார்த்திபன்  அம்மாவுக்கு  அடங்கிய பிள்ளையாக  அமைதியாகப் பதில்  கூறிக் கொண்டே  வருகிறான் . ஒரு மணி  பயணத்திற்குப் பின் வீட்டை  அடைகின்றனர்.புதிய  வீட்டிற்கு வருவது போல், பல  மாதங்களுக்குப் பிறகு பார்த்திபன் வீட்டினுள் காலடி எடுத்து  வைக்கிறான்.   வாசலில்   அவனது கால்கள்  பல  மாதங்கள் படாமல்   இருந்தன! கார் சுத்தமாகவும்   பாலிஸ்  செய்யப்படிருந்தது. அவன் காரை  ஓட்டுவதற்குத் தகுதி  இழந்து போனதை  எண்ணி  வருந்துகிறான்.கார் ஓட்டும் உரிமம் போக்கு வரத்துத் துறையால் பரிமுதல் செய்யப்பட்டிருந்தது!
 
ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மூவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு உண்கிறார்கள்.அம்மா சமைத்த உணவை உருசித்து உண்கிறான் பார்த்திபன். அற்றுபோன குடும்ப உறவு மீண்டும் தொடங்கியதில் தினகரன் மிகுந்த மகிழச்சியடைகிறார்.இந்த இனிய சூழலை  தொடரவைப்பதில் தினகரன்  கவனம் செல்கிறது. 
          
தன் ஒரே மகனின் எதிர்காலம் மீண்டும் ஒரு சுனாமியில் சிக்குண்டு சிதைந்து போவதை விரும்பாத தினகரன் முதலில் பார்த்திபனுக்கு ஒரு வேலைத் தேட வேண்டும். காலாகாலத்திலே அவனுக்கு ஓரு கால் கட்டைப் போட்டுவிட்டால் மீண்டும் பழைய சூழலுக்குச் செல்ல மாட்டான்.  வீட்டுக்கு  அடங்கிய  பிள்ளையாக   இருப்பான் என்ற   எண்ணத்தை மனைவியிடம் கலந்தாலோசிக்கிறார்.
        
“பார்த்திபன்,வீட்டுக்கு வந்து ஒரு மாதம் ஆயிடுச்சு.சிறையில்தான் ஒன்றரையாண்டு சிறைப்பட்டுக் கிடந்தான்.சொந்த வீட்டிலுமா அவன் சிறைப்பட்டு இருக்கனும்,சொல்லு அம்பிகை...?”
 
“ஆமாங்க.....வெளியில் எங்கும் போகாமல் எந்த நண்பர்களையும் பார்க்காமல் வீட்டுக் காவலில் இருப்பதுபோல வீட்டிலேயே அடைந்து கிடக்கிறான்.பார்க்கச் சங்கடமா இருக்குங்க! முதல்ல அவனுக்கு ஒரு வேலையை ஏற்பாடு செய்யுங்க!” மகனின் நிலையைப் பச்சாதாபத்தோடு எண்ணிப்பார்க்கிறார் அம்பிகை.
 
“பார்த்திபன் வேலை செய்த முதலாளி எனக்கு வேண்டப்பட்டவர். மகன் வேலைப் பற்றி நேற்று அவரிடம் பேசினேன்.திறமையான வேலைக்காரன் என்பதால் மகனுக்கு மீண்டும் வேலைக் கொடுப்பதில் ஆட்சேபம் இல்லை என்று சொன்னார்.விரும்பினால் மகன் நாளையே வேலையில் சேரலாமுனும் சொன்னார்!” 
 
“அப்படியா....சொன்னார்?  பார்த்திங்கலா….நம்ம பையன் மீது மற்றவங்க வைச்சிருக்கிற நல்ல மதிப்ப நினைக்கும் போது பெருமையா இருக்குங்க!” ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்’ வள்ளுவரின் குறள் அம்பிகை நினைவுக்கு வருகிறது; அவரது  கண்களில் ஆனந்த கண்ணீர் மடை திறந்த வெள்ளமாகிறது.
  
பார்த்திபன் மீண்டும் தனது பழைய வேலையில் சேர்கிறான். எல்லாரிடமும் கலகலப்புடன் பழகும் சுபாவம் கொண்ட அவனை மீண்டும் சந்தித்ததில் அங்குப் பணிபுரியும் அனைவரும்  அன்புடன் வரவேற்று மகிழ்கின்றனர்.ஓர் இடைவெளிக்குப் பின் மீண்டும் தன்னுடன் வேலை செய்த நண்பர்களைச் சந்தித்ததில் புத்துணர்வு கொள்கிறான்.பழைய சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்குகிறான்.  
 
வழக்க நிலைக்குத் திரும்பிவிட்ட மகனின் முகத்தில் மகிழ்ச்சியையும் புதுப்பொலிவையும் கண்ட பெற்றோர்கள் சந்தோசமடைகிறார்கள்.காலை வேளையில்  அம்மா எழுப்பும் வரைக் காத்திராமல் அதிகாலையிலேயே எழுந்து காலைக் கடனுக்குப்பிறகு இறைவனை வணங்குவதில் முனைப்புடன் செயல் படுவதைக் கண்டு அம்பிகை மனம் மகிழ்ந்து போகிறார்.
 
பார்த்திபனுக்குப் பெண் பார்க்கும்  படலத்தில் பெற்றோர் தீவிரம்  காட்டத்  தொடங்கினர்.சொந்தத்தில்   பல  பெண்களைப்பற்றி  ஆய்வு  மேற்கொண்ட  பின், மிகவும் நம்பிக்கையான  உறவுக்காரப்  பெண்னைக்  கேட்கத்தீர்மானிக்கின்றனர்.
 
பார்த்திபனிடம்விசியத்தைக்கூறியபோது,அவன் மறுப்பு ஏதும் கூறவில்லை!  மகனின்  சம்மதம்  கிடைத்ததால் பெற்றோர்    மகழ்ச்சியடைகின்றனர்.விரைவாக மகனுக்குத் திருமணம்  செய்து வைப்பதில் அவர்கள்    முழுமூச்சுடன் செயலில் இறங்கிவிடுகின்றனர்.


26 திருமணம்

வே.ம.அருச்சுணன் – மலேசியாசொந்தத்தில்  பெண் பார்த்தால் பிரச்னைகள்  வராது  என்ற  எண்ணத்தில் முன்பே பார்த்திபனுக்குப் பெண் கொடுக்க மிகவும் ஆர்வமாக இருந்த தூரத்து உறவான, கதிரவன் குடும்பத்தில் சம்பந்தம் பேசுவதற்கு முன்பாகத் தொலைப்பேசி வழியாக விபரம் சொல்ல அழைக்கிறார் தினகரன். சொல்லி வைத்தார் போல் மறுமுனையில் கதிரவன்தான் பேசுகிறார்.
 
“ஹலோ….! கதிரவனா பேசுறது...?”

“கதிரவன்தான்......பேசுறேன். தினகரன்தானே பேசுறது.....?”

“வணக்கம்,ஐயா....! என்னோட குரலை உடனே கண்டு பிடிச்சிட்டுங்கிலே?”

“பல வருசமா கேட்கிறக் குரலாச்சே.....அவ்வளவு சீக்கிரத்தில  மறந்திட முடியுமா தினகரன்? “

“நலமா இருக்கிறீங்களா....?”

“ஆண்டவன் புண்ணியத்தால நலமா இருக்கேன்....! நீங்க எப்படி இருக்கிறீங்க?”

“நல்லா இருக்கேன்....! ஆமா பையன்....வீட்டுக்கு வந்துட்டாரா.....?”

“ஆமாங்க கதிரவன்....! பையன் வீட்டுக்கு வந்து மூன்று வாரமாச்சு....!”

“ஓ....அப்படியா....? பையனை இனி ஒழுங்கா....கவனிச்சிக்கங்கையா.....!”

“நிச்சயமா....!”

“ஆமா....என்ன விசியம்....?”

“நல்ல விசியம் தான்....!”

“அப்படியா....ரொம்பச் சந்தோசம்....சொல்லுங்க தினகரன்!”

“நான் சுற்றிவளைக்க விரும்பல...நேரா விசியத்துக்கு வந்திடுறேன்!”

“தினகரன்....நாம நேற்று இன்னைக்கா பழகுறோம்.....பீடிகைப் போடாம
விசியத்துக்கு வாங்க...!”

“நம்ம....பையனுக்குக் கல்யாணம் செய்யலாமுனு இருக்கோம்....!”

“நல்ல காரியமாச்சே…..!தள்ளிப் போடாம உடனே செஞ்சிடுங்க....!”

“நீங்க மனசு வைச்சா மகனுக்குக் கல்யாணத்த உடனே முடிச்சிடலாம்....!” 

“தினகரன் நீங்க என்ன சொல்றீங்க....!”

“ஆமாங்க கதிரவன்.....உங்க மகளை என் மகனுக்குத் திருமணம்செய்ய விருப்பப்படுறோம் உங்க விருப்பத்தைச்   சொல்லுங்க...?”

 “உங்கப் பையனுக்கு என் மகளைக் கொடுக்கிறேன்னு சொன்னது உண்மைதான்....! அது இரண்டு வருசத்துக்கு முன்னாடி!”

“அப்படின்னா....! உங்க முடிவுல இப்ப மாற்றமிருக்கா...?”

“நான் சொல்றேனு வருத்தப் படாதிங்க தினகரன், நான் எப்பவும் வெளிப்படையாப் பேசுவேன்னு உங்களுக்கேத் தெரியும்....!”

“நாம.....உறவுக்காரங்க.உங்க மனசுல இருக்கிறத தயங்காமச் சொல்லுங்க, இதுல வருத்தப்பட என்ன இருக்கு.... !”

“என்னடா இவன் மூஞ்சில அடிச்ச மாதிரிப் பேசுறான்னு நீங்க என்னைத் தப்பா நினைக்கக் கூடாது!  ஜெயிலுக்குச் சென்று வந்த உங்கப் பையனுக்கு மகளைக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை, என்னை மன்னிச்சிடுங்க...!”
 
திடீரென, இருவரின் உரையாடலில் ஓர் இறுக்கம் ஏற்படுகிறது! மறுமுனையில் கதிரவன்  ரிஷிவரை   வைக்கும்  ஓசை பலமாகக் கேட்கிறது!

மலை போல நம்பிக்கொண்டிருந்த நெருங்கிய உறவினர் கதிரவன் ஒட்டு உறவு  இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சற்றும் எதிர்பாராமல் பேசியது தினகரனுக்குப் பெரும் அதர்ச்சியைத் தருகிறது!
 
பெண்  கொடுப்பார்கள்  என்று முழு நம்பிக்கையுடன் இருந்த தினகரனுக்கு கதிரவனின் கேள்வி, மற்ற உறவினர்களின் மீதும்   அவநம்பிக்கையை  ஏற்படுத்தியது!  கதிரவனுடனானத்        தொலைப்பேசி
உரையாடலுக்குப் பின் கணவரின் முகம் வாட்டமடைந்ததைக் கண்ட அம்பிகை துணுக்குறுகிறார்!
 
“என்னங்க....பெண்வீட்டுக்காரங்க என்ன சொன்னாங்க….?” விபரமறிய ஆவலுடன் கேட்கிறார் அம்பிகை.

“ம்.....என்ன சொல்லுவாங்க....?” கவலை தோய்ந்த முகத்துடன்  பதில் கூறுகிறார்.

“அவர்கள்.....என்ன சொன்னாங்கிறத, மறைக்காமச் சொல்லுங்க அமைதியுடன் அம்பிகைக் கேட்கிறார்.

“செயிலுக்குப் போன நம்ம மகனுக்குப் பெண்ணைக் கொடுக்க முடியாதுன்னு, கதிரவன் முடிவாச் சொல்லிட்டாரு....!”
 
“இரண்டு வருசத்துக்கு முன்னாடி தன் மகளைப் பார்த்திபனுக்குக் கட்டி வைக்கலாம்னு சொன்ன அவரா இன்றைக்கு மாற்றிப் பேசுறாரு....?  ஆச்சரியமா இருக்கே!”
 
“இதுல ஆச்சரியப் பட என்ன இருக்கு அம்பிகை....நம்ம நேரம் சரியில்ல!  நாம வலியப் போனாலும்,சொந்தங்கள் தலை தெரிக்க ஓடுதுங்க.பலம் கொண்ட யானை தரையில் இருக்கும் வரையில்தான் அதற்குப் பலம், சேற்றில் தவறி விழுந்துவிட்டால் அது தன் முழுபலத்தையும் இழந்துவிடும். யானையைப் போன்ற நிலைதான் இப்போது நமக்கும்!”
 
“நிலைமை கொஞ்சம் தடுமாறி போயிருக்கும் இந்த நேரத்தில சொந்தங்கள் ஓடோடிவந்து நம்மைக் கைத்தூக்கிவிடுவாங்கனு பார்த்தா.....! எப்ப கீழே சறுக்கி விழுவோம், நம்பமீது ஏறி குதிரை ஓட்டலாமுனு கனவு காண்கிறார்கள்!

 [தொடரும்]