கண்ணால் சிரித்து ,பேசி காவியம் பாடிய மகள் இறந்து போன பிறகு  , வெளியில் எங்கையாவது போய் வந்தால் நல்லது ' என தோன்றியது .  நோவாகோர்ஸியாவிலிருந்த  பூமலர்  , தில்லையையும் , ஜெயந்தியையும்  " எங்க வீட்டிற்கு வாருங்களன் .  துக்கத்திற்கு ஒரு மாற்றமாக இருக்கும்" என அழைத்திருந்தாள் .மகள் பிறந்ததிலிருந்து ஆஸ்பத்திரியும் , வீடும் , மருத்துவர்  ...என அதில்  ஓடிக் கொண்டிருந்தவர்களுக்கு .....இருபது வருசம் ஓடியதே தெரியவில்லை ." போவோம்  " என முடிவெடுக்க ...இந்த கொரோனா ... குறுக்கிட்டு  விட்டது .  நாம் ஒன்று நினைக்க வைரஸொன்று நினைக்கிறது .

         நடக்க முடியாத அதிசயமாக வர்த்தகம் , அரச நிர்வாகக் கதவுகள் எல்லாம் அடைப்பட்டன . 'ஒன் லைன்' என்கிற 'ஈ' வழித் தொடர்ப்புகளால் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும் .  மக்கள்  ,   அனைவரும் கட்டாயம் பழகத் தான் வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டது  .  இந்த இறுக்கம் தளர் நிலைக்கு வந்த போது தெரிந்தவர்கள்  சிலரின் மரணங்கள்  ,  எம்  வீட்டுக் கதவையும் வந்து தட்டி விடலாம் என்ற பயபீதியை ஏற்றியது . புயல் கடக்கவில்லை . ஒருவாறாக கோவிட்டுக்கு வக்சீன் கண்டு பிடிக்கப்பட்டு விட்டது . ரஸ்யா தான்  ... முதலில் கண்டு பிடித்தது .   ரஸ்யாவுடன் சேர்ந்திருந்தால் வேளைக்கே எமக்கு வக்சீன்  கிடைத்திருக்கும் . பிறகு ,   ஒரு மாதிரியாக  மாற்றம் மெல்ல படர தொடங்கிது . ஒரு முறை...ஏற்றல் நடந்து . பிறகு இரண்டாவது முறை .  பதற்றத்தை வக்சீன் வெகுவாக குறைத்து விட்டது . இருந்த போதிலும்   மனிதர் பலியாகிக் கொண்டேயிருந்தனர் . ' பலி ' நிற்கவில்லை .

    " உள் நாட்டில்  பயணம் செய்யலாம் " என அரசு அனுமதியை வழங்கியது .  ஆனால் , இரண்டாவதாக   ஏற்றிய  மொடோனா  , இருவருக்குமே இதயத்தில் ஒரு படபடப்பை ஏற்படுத்தி விடுகிறது . கடவுள் வரம் கொடுத்தாலும் .... ஐயர் , விடாது  குறுக்கே வந்து நிற்கிறார் . மருந்து பரம்பரை அலகுகளில் கை வைத்திருக்கிறது . " ஆஹா !  நாம்   ஒருவேளை  தேவர்களாக மாற   போறோமா ? " . வாழ்வில்  , சலிப்பு  , சச்சர  , சந்தோசமின்மை , விரக்தி... இவற்றை   தானே கண்டோம் . அதற்கு பலன் கிடைக்க    இருக்கிறதோ ? . ஆனால் , தில்லை ,  உதைத்த எந்த   பந்து   கோல் இறங்கியது ?  . ஜெயந்தியே அதிகமாக பயந்து  விட்டாள் .  சாதாரணம்  பயம் மூட்டாது . இவன் இணைய வெளியில் ஒன்றுக்குப் பத்தாக கொட்டுகிற கலவை விமர்சனங்களை செய்திகளை , கட்டுரைகளை  வாசித்து ..இது வக்சீன்  வேலை தான் என்பதை அறிந்திருந்தான் . இங்கே , ஒவ்வொருத்தருக்குமே  ஒரு மருத்துவர் இருக்கிறார் . அவரும் பெட்டிக் கடையைத்  திறக்க ,   ஜெயந்தி மருத்துவ  சந்திப்புகளுக்கு போய் வந்து கொண்டிருந்தாள் .  பக்தி பூர்வமாக    வேறு  யோகாவிலும்  இறங்கினாள் . பயணம் பின் போடப் பட்டு விடுமோ? என்ற பயம் தான் . தீவை   ,  அதிக ஆவலுடன் பார்க்க  விரும்பினவள் . " அபாயம்    ஒன்றுமில்லை , பயப்படாமல்   போய் வாருங்கள் " என மருத்துவர்   கூறிவிட்ட பிறகு  , நின்று யோசிக்கவே கூடாது .

ஜெயந்தி , வாட்ஸப்பில்  " நாம்  வருகிறோம்" என  பூமலருக்கு செய்தியை  அனுப்பினாள் .


புறப்பாடு

          " படுக்கை விரிப்புகள் , தலையணை உறைகள் , கொம்பேடர் (குளிருக்கு போர்த்தும்  போர்வை  ) ...எல்லாவற்றையும்  தோய்  " ஜெயந்தி  சொன்னாள் . தில்லைக்கு சரியெனவே பட்டது . தோய்த்து  விரித்தான் .    பிறகு , வார போது தயாராக இருக்க வேண்டும் . அவள்    அப்பார்ட்மெண்ட் நிலைத்தை  வக்கூம்  பிடித்து  (  மொப் பேப்பர்களால்  )  மொப் பண்ணினாள்  .இரண்டு  ,  மூன்று  நாளில்  , தூசி விளையத் தொடங்கி விடுகிறது . வரும் போது  கூட்டில்  அது   உருள  நாம் ஓடிப் பிடித்து விளையாட  நேரிடும் .  நாம்  நடமாடா விட்டால் ...தூசி   குறைவாய் இருக்கும் என்ற  எதிர்பார்ப்பு .  ஒரு முன்னேற்பாடு .

        பழைய ஆடைகள் சரி வராது என புதிய செட்   டீசெட்  , காலுறை ,பெனியன்...தலை தீபாவளிக்கு வாங்கிறது போல வாங்கி விட்டோம் .  ஜெயந்தி  அவற்றை  ஒரு பையினுள் போட்டு சூட்கேசிற்குள்  ( வைப்பதற்கென ஜீப்புடன் கூடிய பைகள் விற்கின்றன )  வைக்கிறாள் . வலுவான தயாரிப்பு . தில்லைக்கு  இதெல்லாம் சரி வராது .யூனிபோர்ம் மாதிரி ...ஆடைகளை அணிபவன் . பச்சைக் கலர்  சேர்ட் பிடிக்கும் . கசங்கல் ...இருக்கு  ,இல்லை  என்றெல்லாம் கவலை கிடையாது . பச்சை ஒதுக்கப் படுகிறது .   தெரிந்ததை  எடுத்து அயன் பண்ணுகிறாள் .  வாழ்க்கையில் , அயன் பண்ணியதை  போடப் போகிறான் . குளிர்ப் பெட்டியில்  உள்ள  உடைக்காத பால்களை  உடைத்து சிங்கில் ஊற்றுகிறான் . .உணவுப் பொருட்களை பையில் போட்டு கட்டி  கீழே  கொண்டு ...சேதனப் பின்னில்  போட்டும் வந்தாயிற்று .  பத்து நாட்கள் வீட்டிலே யாரும் இருக்கப் போவதில்லை திரும்பி வருகிற போது எதையாவது மறந்து விட்டுப் போனால்  நாறும் .  அந்த மணத்தை அகற்ற பல நாள்  போராட வேண்டியிருக்கும் . முந்தி  ,  ஜெயந்தியின் அண்ணர்மார்களின் குடுபங்களோடு   காயத்திரியையும் கூட்டிக் கொண்டு   மூன்று நாள்கள் கொட்டேஜ்க்கு ச் சென்று கழித்து விட்டு வந்த போது ஏற்பட்ட  பாடம் .  

      வேலை  ,  கண்ணையும் , உள்ளத்தையும் குருடாக்கி  விடுகிறது  .  வேற பிரச்சனைகளை எடுத்து பார்க்க விடாமல் செய்து விடுகின்றது .  வருசத்தில் ஒரு சில நாள்கள்  ... இப்படி  போய்  வருவது  , மெசினை நிறுத்தி எண்ணெய் விட்டு   ஒய்வு கொடுப்பது  போன்றது .  மனிதர் கட்டாயம்  தூயக் காற்றைச் சுவாசிக்க வேண்டும்  ; கண் நிறைந்த  இயற்கைக் காட்சிகளை பார்த்து ரசிக்க வேண்டும் ;   குருவி , பறவைகளின்  பேச்சுச் சத்தம்   காதில் வந்து விழ வேண்டும்  .   இயற்கையிலே எல்லாமே நிறைந்த்திருக்கின்றன . நாம்  நகரை விட்டு வெளியே வந்தாலே  எல்லாமே  தெரியும்  . நம் அராலிக்கிராமம் வேறு , வட்டுக்கோட்டை வேறு , சுளிபுரம் வேறையாய்  ..இருக்கவில்லையா . ஒவ்வொன்றுமே  தனி   உலகம்.

   நோவோ கோர்ஸியா  ஒரு  தீவு  மாகாணம் , ரொரொன்ரோவியிருந்து   இரண்டாயிரம் கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கிற  உலகம் . இரண்டு  மணி நேரத்தில் அந்த உலகத்தினுள் புகப் போகிறார்கள்.


வானில் ஒரு உலா

       கனடாவின் பறப்புப் பறவையில் ஏறினார்கள் . நிலத்தில் ஊர்வதை விட   , வானில் ..பறப்பது  வேற மாதிரியானது . காலம்  எவ்வளவு விரைவாக ஓடி  விட்டிருக்கின்றது . இலங்கையிருந்து பேயறைந்து  வந்திறங்கிய பிறகு , அந்த  பறவையிலே   ஏறவே இல்லையே . பலர்  , போராட்ட சமயத்திலும் கூட    ஊருக்குப் போய்  விட்டு  வந்திருக்கிர்கள் . இவர்களுக்கு  தான்  கொடுப்பினை இல்லை இங்கிருப்பவர்களைக் கேட்டால் " போகவில்லை "  என்று ஏங்கிறார்கள் ; போனவர்களைக் கேட்டால் " நீங்கள்  பெரிதாக நட்டப்படவில்லை  " என்கிறார்கள் . இருந்தாலும் நம்ம ஊர் , நம்ம ஊர்  தானே . " என்ன இருந்தாலும் நம்ம ஊருக்கு போய் வராமல்  இருக்கலாமா ? ,  எந்தக் காரணத்திற்காகவும் நமது நிலத்தை நாம் இழக்க மாட்டோம்  "  என்கிற  பாலாஸ்தீனர்கள் , " இன்று  ,இஸ்ரேல் நில அபகரிப்பைச் செய்தாலும் ...நாளை வெளியேற வேண்டியவர்கள் " என்று   அறைந்து பேசவில்லையா  ! .  பிராஜாவுரிமைகளைப் பறித்து , இனப்படுகொலைகள் செய்தவர்கள்  . (  இவர்களாக செய்யாது வெளிச் சக்திகளின் தூண்டுதல்களால்  செய்திருந்தாலும் கூட ) இரக்கமே  அற்றவர்கள் தான் . பிரிட்டனின் காலனி அரசே  எமது எல்லா நிலைகளுக்கும்  காரணம் .  ..இன்று தொடர்ந்து  பேரவலப் பட்டுக் கொண்டிருப்பதற்கும்  அதுவே  காரணம் . அதனாலே , தில்லை  ,  உக்ரேன் போரையும்  இரவல் போராக கருதி  வெறுக்கிறான் .  இந்தப் போர்  உண்மையில் ஒரு பனிப்போர் .  "  ஈழத்தமிழர் "  இனப்படுகொலையையே கண்டாயிற்று . ஐ .நா சபையே   ஒன்றும்   செய்யவில்லை  . இந்த போரை உறுத்துப் பார்க்கவா போகிறது ? , இவன் இருக்கிற  நாட்டுத் தலைவர் அதை " சுதந்திரப் போர் " என்கிறார் .  நாகேசின் நகைச்சுவை ! . ' நாடு அதில் ' முதல் போட்டிருக்க வேண்டும் . இலாபத்தை இழக்க விரும்பவில்லை  . நமக்கேன் வம்பு  . அவரவர்   அரசியல் விரும்புற மாதிரி  வாழட்டுமே  .  

     முதல் தடவையில்     விமானம் ஏறியதே ஏறத்தாழ மறந்து போய் விடிருக்கிறது . ஜெயந்தி சிறுமியைப் போல உள்ளே பார்க்கிறாள் .

      அவனை முடித்து   என்ன தான்  கண்டிருக்கிறாள் ? , சந்தோச வரைபு கீழ்நோக்கிச் சென்றது தான் மிச்சம் .  இங்கேயும்  முற்பது வருசங்கள் குப்பைக் கொட்டி விட்டாயிற்று .  ஒரு ஈழத்து புத்திர , புத்திரியின்  ஆயுட் கால  எல்லை . ஊரிலே  சின்ன மெண்டிஸ் இருபத்தைந்து வயதிலேயே  இறந்து போய் விட்டான் . ஊரில் , தொழினுட்பக்கல்லூரியில் அவனுடன் படிக்கிற போது   நண்பன் ஒருத்தன் கூறினான் . " சிலர் தம்மைக் கடவுளாக நினைக்க வெளிக்கிட்டதாலே தான் எமக்கு  இந்த அவலங்களெல்லாம்  " கடவுள்  மறுப்பு அவசியம் போலத் தான் தோன்றுகிறது . அவர் எங்களையும் கை விட்டு விட்டாரில்லையா ? சுமார் இருபது வருசங்கள் காயத்திரிக்கு பின்னால் ஓடிக் கொண்டிருந்தார்கள் . அவள் கண்ணை மூடி  விட்ட பிறகும் கூட  உள்ளத்தில் சிரிச்ச முகத்தில் அழகாக முளித்துக் கொண்டு தானிருக்கிறாள் .  அவள் மேல் கொஞ்சம்  அதிகமாகவே  கருணையைப் பொழிந்து விட்டார் . அவள் மடியில் இருந்து சிரித்துக் கொண்டே இருப்பது போல இடைக்கிடை தோன்றுகிறது .  அதிருஸ்டம் இழந்தவளா.. ?  , இல்லை அவளோடு சேர்ந்து அரைவாசி உயிரும் போய் விட்ட நாம் யார் ? .  பிறந்தால் ஸ்மார்ட்டாக வாழவேண்டும் என்பது ஒரு முறை ? .  மாணவப்பருவத்தில் ஓரளவு ஹீரோவா இருந்திருந்தால் சிறிது சொல்லும்படியாக வாழ்ந்திருப்பானோ? .  நாட்டின் அரசியல் வேறு  கீழ்மையானது .  அறிவியலற்ற நம் சமூகத்தினர் வேறு உபத்திரம் கொடுக்கிறார்கள் .  உலகம்  , உருண்டை என்று யார் சொல்லியது ? . இவர்களின் எண்ணங்கள் எல்லாமே தட்டையாக இருக்கிற போது ...எப்படி உருண்டையாக இருக்கும்  .  அது தட்டையானது தான் . ஒருத்தரின் அனுபவம் ஒருத்தருக்கு உதவுகிறதில்லை .  இந்த கோவிட்டால் மனித சுவடே இல்லாமல் அழிந்து போய் விட்டால் என்ன செய்ய போகிறார்கள்   . வாழ வேண்டியவர்கள் போகிறார்கள் . வாழ வேண்டாதவர்கள் ....எல்லாரும் இருந்து உபத்திரவம் கொடுக்கிறார்கள்  . ஒருவேளை , அறம் செத்து விட்டது தான் அதற்குக் காரணமோ? .

      குலுக்கலுடன் விமானம் தரையிலிருந்து மேலேறுகிறது .  சிந்தனை கலைகிறது  " சுவிங்கம் வேண்டுமா ? " என்று மனைவி கேட்கிறாள்    .  " காது அடைக்கும்  அடைப்புகளும் வைப்பது நல்லது . மெல்லுறதும் நல்லது "என்று  சித்திரா  ஜெயந்திக்கு கூறி இருந்தாள் .  " வேண்டாம்  " என்கிறான் . பயணிகள் ,  விமானக் கோதிலுள்ள குட்டி ஜன்னல் மறைப்புகளை ஏற்றி வெளியில்  பார்க்கலானார்கள் . அவசர வேளையில் திறக்கிற   கதவோட ஒட்டி இவர்களுடைய இருக்கைகள் இருந்ததால்  இவர்களுக்கு ஜன்னல்  இருக்கவில்லை . முன் இருக்கையில் இருந்தவரின்..ஜன்னலுடாக களவாக இவர்களும் வெளியே பார்க்கிறார்கள் .  அலுத்துப் போனவர்கள் மூடியும் விட்டிருந்தனர் . நிலத்திலுள்ளவை சிறுசுகளாக மாறி விட்டிருக்கிறது . இதை எல்லாம் நேரிலே பார்க்கிற போது சிறுவர்களின் மனநிலை பற்றிக் கொள்கிறது .  எப்பவும் தரைக்கு மேலே மிதப்பது ஒரு அலாதியான அனுபவம் தான் . மேகங்களை ஊடுரூவிப் பறக்கிறது . பக்திச் சொட்டும் திரைப்படங்களில் பார்த்த பஞ்சு மேகங்கள் பல மிதக்கின்றன .இவன் அவற்றை கற்பனக் காட்சிகள்  என்றே  நினைத்திருந்தான் .  உண்மையிலே பஞ்சு மேகங்களை பார்க்கவும் முடிகிறது தான் . அகதியாய் வந்த போது  ஏறிய விமானம் இதை விட 2 ..,3  மடங்கு  பெரியது . கே .எல் .  எம் . அதில் ஜன்னல் இருந்ததே நினைவில் இல்லை .

      ஜன்னலுக்கு பக்கத்தில் இருந்தவருக்கு  விரைவில் அலுத்து விட்டது . அடைப்பை இழுத்து மூடி விட்டார் .

      இந்த விமானத்தில்  கழிவறை  இவர்களுடைய இருக்கைக்கு அண்மித்து  இருக்கிறது  . வானில் ஒரு  நடை போட வேண்டாமா ? என்ன .  கழிவறைக்கு நடந்து சென்றான் .  எந்த ஒரு ( சிறிய) குட்டி அறையிலும் மனிதனால் ஜீவிக்கவே ( வாழ )  முடியும் என்பதை நீரூப்பிக்கிற மாதிரி   கழிவறை கிடந்தது .  யப்பானியர்  இப்பவே  குட்டி ஹோட்டேல்களையே கட்டி குடியேறி விண்வெளியில் வாழ்வதற்கு  பயிற்சி எடுக்கிறார்கள் . ஆனால் , நமக்கும் நிம்மதியாய் வாழ ஒரு ஏக்கர்  காணித்துண்டாவது  இருக்க வேண்டி  இருக்கிறது . தோட்டமும் செய்ய வேண்டுமல்லவா . பாரதக்கதையில் கெளரவர்கள் ஒரு பிடி நிலம் கூட குடுக்க மாட்டோம் என்பது போலவே முரண்டு பிடித்தபடியே நம் அரசு கிடக்கிறது .  இந்த ஜென்மங்கள் எந்த காலத்தில் திருந்தப் போகிறார்கள்  ?  கழிவறை சுத்தமாகவே இருக்கிறது . இருந்து தான் சிறுநீர் கழிக்க வேண்டும் .  அதைக் கையாலுவது சட்டென புரியாததால்  ,  நின்றபடியே ஆடி...கழிக்கிறான் . கைக்கு சோப் போட்டு கழுவவும் குட்டி நீர்த்தொட்டி கிடக்கிறது .   கையை துடைக்க  , உலர்த்த ...தேட வேண்டியிருந்தது .  இல்லா விட்டால் ...என்ன , காற்சட்டையில் துடைக்கவா தெரியாது . பிறகும்   ,  ஒரு தடவை சென்ற போது தான் கண்டு பிடித்தான் . குப்பைத் தொட்டியுடன் பேப்பர்கள் மறைந்து கிடந்தன.  வந்து இருக்கையில் அமர தள்ளு வண்டிகளில் பானம் , சன்விச் , கோப்பி ,  டீ ...கொண்டு வந்தார்கள் . ஒருவேளை,  பெரிய விமானத்தில் மட்டும் இலவசமாக வழங்குவார்கள் போல இருக்கிறது . பின்னால் வருகிறவர் சிறிய வங்கி மெசினுடன் கார்ட்டுகளைப் பெற்று பணத்தை அறவிட்டுக் கொண்டு வந்தார். சாதாரண விலையை விட இரண்டு மடங்கு விலையில் இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை .

        பூமலர் , "  ஹலிஃபக்ஸ் விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் கோப்பிக்கடை ரிம் கொட்டனில் நிற்கிறேன் . பரிசோதனை முடிந்த பிறகு தொலைபேசியில் அழை . வருகிறேன் " என 'வாட்ஸ் அப்'பில் எழுத்தில் செய்தி அனுப்பி இருந்தாள் . இருபது நிமிசம் லேட்டாக விமானம் வந்திறங்கியது . அரை மணி நேரத்தில் , செக்கப் எல்லாம் முடிந்து சூட்கேட்ஸையும் இழுத்துக் கொண்டு வெளியில் வந்து விட்டார்கள் . "  நான் இங்கே நிற்கிறேன் " என்ற பூமலரின் குரல்  செல்பேசியில் கேட்டது . அங்க  , இங்க என்று அலங்க , மலங்க கரை வரிசையில் பார்க்க பலரின் கார்களுக்கு முன்னால் நின்று கை அசைப்பது தெரிந்தது .  பொதிகளை ஏற்றி விட்டு  வாகனத்தில்  ஏற கோப்பிக் கப்புகளை எடுத்து தந்தாள் .  இவளும் ஜெயந்தியைப் போலத் தான் செலுத்தும் வளையத்திற்கு கிட்டவாக  இருந்து செலுத்தினாள்  .  வாகனம்  வீதியில் இறங்கியது   .  கோப்பி குடித்துக் கொண்டிருக்க  "  இங்கே பஸ் சேவை வலு  குறைவு . ஊபர் சேவை அறவே கிடையாது . நண்பர்களும் , குடும்பத்தினரும் தான் வந்து ஏற்றிச் செல்கிறார்கள் " என்றாள் . " இப்ப , மாகாண கைவே  103 இல் ஏறி , விரைவிலே மாகாணக் கைவே 101 இற்கு  இறங்கி விடுவோம்  " என்றாள் . ஒன்ரோரியோவிலுள்ள செமி கைவே போல இருந்தது . அவற்றில், சிலவற்றுக்கு ரவிக் லைட்  இருக்கும் . இதிலே இல்லை . அவ்வளவு தான் .    மற்றதில்  இறங்கி , வடக்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்தது   . இருபுறமும் மரங்களும் , விவசாயப்பண்ணைகளும்   ...மாறி , மாறி வந்து கொண்டிருந்தன . வாகன நெரிசலைக் காணவில்லை . சிலவேளை துப்பரவா  கூட இல்லை  . புதிய நாட்டுக்குள் வந்தது போல தோன்றுகிறது .

  " திரும்பவும் ஓடி வர களைப்பாயில்லையா? " என்று  பூமலரிடம் கேட்டான் . " இங்கே எல்லா இடமும் தூர தூரமாகவே இருக்கின்றன .  ஓடி , ஓடி பழகி விட்டது " என்கிறாள் . ஒரு மணி நேர ஓட்டம் . அந்த கைவேயிலிருந்து வெளியில் வந்தவுடனேயே வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள் . அவளுடைய மரவீடு  , நீல நிறத்தில் வித்தியாசமான தோற்றத்தில்  இருந்தது . ஒன்ராரியோவில் சுற்றுப் புறத்தை செங்கற்களால் கட்ட  ,  இங்கே வைனல்( பிளாஸ்டிக்) பலகைகளால் அடைக்கிறார்கள் . மொன்றியல் ,கியூபெக் பக்கம் இலங்கையில் தமிழ் தாயகப் பகுதியில் உள்ள மாதிரியே கொங்கிறீட்டில் செய்யப்பட்ட கற்களைக் கொண்டு கட்டுறதாக சொல்லப்படுகிறது . இடத்திற்கு இடம் வித்தியாசங்கள்  காவிக்   கிடக்கின்றன . சிறுவர் கையில் கலர்ப் பென்சில்களைக் கொடுத்து  வர்ணங்கள் பூச விட்டது போல அயலிலும் ஒரே இஸ்மன்  ரகம் . மஞ்சள் ,சிவப்பு , ஊதா...என வீடுகள்  கண்ணை அப்படியே   கவ்வுகின்றன . நீயூபவுண்லாண்டிலும் இதே ரகம் ...என்பதை தொலைகாட்சி திரைகளில் பார்த்திருக்கிறான் . இது ஒரு குறிப்பிட்ட ஐரோப்பிய வீட்டு .... முறையாக இருக்க வேண்டும் .

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.