அத்தியாயம் ஐந்து - அடுத்த  நாள்

இதற்கு மேலே செல்கிறார்கள் . புளொமின்டன் " லுக் அவுட் " , என்கிற அதிகமான மலையின் உயரப் புள்ளி வருகிறது . அதிலிருந்து கீழ் நோக்கி அதிகளவு சரிவைப் பார்க்கலாம் . கண் கொள்ளாக் காட்சிகள்  கண்களை நிறைக்கின்றன . அதிலிருந்து பார்த்தால் கஸ்பி நிலங்களையும் பார்க்கலாம் என்றால் இன்னொரு புறத்தில் இவர்கள் இருக்கிற வீடும்  இருக்க வேண்டும் .  சற்று  செல்ல சிவப்பு மண் சுவருடன் பள்ளத்தில் இறங்கிற கடற்கரை . ஓரிரு மரங்களின் வேர்கள் சிறிது வெளியில் தெறிய  முக்கால்வாசி வேருடன் சுவர் மண்ணுடன் நிற்கிற மரங்கள் . மண்ணை அரித்தாலும் சரிந்து விழாது உறுதியாகக் கிடக்கிற மண்ணாகக் கிடக்க வேண்டும் . நம்மூரில் என்றால் மரம் சரிந்து விழுந்திருக்கும் . மண்ணும் தான் . அப்படி கரை தோறும் அங்காங்கே கடற்கரைகள்  இருக்கின்றன .

    அவ்விடத்தில் தான் அதிகபட்ச உயர் அலைகள் அடிப்பதாகவும்  கூறப்படுகிறது . அந்த தீவின் நில மட்ட உயரங்களைப் புரிந்து கொள்ள சிரமப் படுகிறான் . நில அளவையியல்  அறிவு அவசியம் தேவைப்படுகிறது . தில்லைக்கு  தட்டுத் தடுமாறிய ... நிலையிலே கிடக்கிறது .

      கடலுக்குள் நீட்டிக் கொண்டிருக்கிற  துண்டு நிலப்பரப்பில்  இருக்கிற  பசுமைக் காட்டினுள் ஐந்து கிலோ மீற்றர்  , பத்து  ...என அதிக தூரம் நடக்கிற சுற்றுக்கள் இருக்கின்றன .  நானும்  பிள்ளைகளும் நடந்திருக்கிறோம்  " என்கிறாள் பூமலர் .  " பூச்சிகள் ...மலை ஏறுவது போல நடக்க முடியாது " என ஜெயந்தி கூற அதை தவிர்த்து விடுகிறார்கள் . ஆனால்  , கடற்கரை அழகாகவேக் கிடக்கிறது .  " கல்லை அலை அடித்து குகையை ஏற்படுத்தி இருக்கிறது எல்லாம் மேலே செல்ல தான் வருகிறது . நீருக்கு நடுவே சிற்பி போல செதுக்கிய உருவங்களும் கிடக்கின்றன " என்று  விபரிக்கிறாள் பூமலர்  .    நீரும் லேசு பட்டதில்லை  .     

     மேலே ஏறி  தேனீரையும் ...கொண்டு வந்ததையும் சாப்பிடுகிறார்கள் . இவர்கள் நடந்த ஈர மண்ணை நீர்  வந்து மூடி இருக்கிறது . ..நீர் வந்து அபகரித்து விடுகிறது . ஆனால் ,  திரும்ப விட்டு விட்டு போகிறதல்லவா .  நிலையற்ற நிலவுரிமையை ஜனநாயக பண்புடன் பார்த்தால் ... எவ்வளவு நல்லாயிருக்கும்  .  தீவுமகள் மகிழ்ந்தல்லவா போய் விடுவாள் .

 'கலோவீன்' என்கிற ஒரு  கொண்டாட்டம் இங்கே இருக்கிறது . அது உண்மையிலே கல்லறையிலே உள்ள முன்னோர்களுக்கு வைக்கிற (பார்டி ) விருந்து என்றே சொல்கிறார்கள் . தீபாவளிக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதாக... தில்லை  வாசிச்சிருக்கிறான் . முன்னோருக்கு படைத்து  ஒளியேற்றி சந்தோசப்படுத்துவது தான் அடிப்படை . முதல் மனிதர் கொண்டாடிய ஒரு நிகழ்வைத் தான் ...தத்தமது கற்பனைகளுடன்  இன்று பலரும்  கொண்டாடி வருகிறார்கள் .

     ரஸ்யாவிலிருந்து    .....  தான் இதை 'சோம்பி'யாக கற்பனை பண்ணிறது ஏற்பட்டிருக்கிறது போல இருக்கிறது . கடுங்குளிர் . இருண்ட சதுப்புக் காடுகள் . நம்மூரிலும் காடுகளில்  ...உருவங்கள் நடமாடுவதாக பிரமைகள் உண்டு . அமெரிக்க ..சினிமா இதை பிரபல்யப்படுத்தி இருக்கிறது . அதை உலகம்  எடுத்துக் கொண்டு விட்டிருக்கிறது . கலிங்கத்துப்பரணி என்கிற இலக்கிய நூலிலும் .... இடம் பெறுகிறது 'சோம்பி'யாகவே இருக்க வேண்டும் .  இன்றைய  மனிதர்கள் அதில் உள்ள நன் நோக்கை  விட்டு விட்டு  கொடூர பார்வையைப்  பார்க்கிறார்கள் போல படுகிறது .  ஈழத்தில் , சிங்களவர் , தமிழரை சோம்பியாக அல்லவா அலைய விட்டிருக்கிறார்கள் . மாற்றி விட்டார்கள் . அது தான் வருத்தமளிக்கிறது   .
                                                              
அனபொலி கோட்டை

      கடற் கொள்லையருடன் வந்த பிரெஞ்சுக்காரர்கள் , அனபொலியில் மிக்மக் பழங்குடியினர் வளப்பமாக வாழுவதை  , விவசாயம் செய்கிறதைப் பார்த்தார்கள் ,  அனபொலி கணவாய் மண் நெல் போன்ற தானியங்களிற்கு வளமானதில்லை .  பழமரங்களுக்கே ஏற்றது .பெருமளவில் அப்பிள் இங்கே இயற்கையாகவே  விளையிறது . இராணுவம் நிச்சியமாக தன் நடத்தையைக் காட்டாமல் இருந்திருக்காது .அவர்களின் நிலத்தை பறித்து பிரெஞ்சு மக்களுக்கு கொடுத்திருக்கும் .  பிளேக் போன்ற நோய்களால் நிறைய பழங்குடி மக்கள் இறந்தனர் என்கின்றனர் . எனவே பாலியல் தொடர்புகளுடாகவும்  கொடுமைகள்  நிகழ வாய்ப்பு இருக்கின்றன . எத்தனை  கிரிசாந்தி , எத்தனை  இசைப்பிரியாக்களோ ? . சரித்திரம் தணிக்கை செய்து தானே எழுதப்படுகிறது .  குற்றவாளிகளையும் " ஹீரோ"  என்று தானே  புகழ்கிறது .   பிரெஞ்சுப்படையினரின் ஒரு தண்டனை முறையைப் பாருங்கள் . பீரங்கியின் வாய் முனையில் ஒரு ஆளைக் கட்டி விட்டு சிதற  சுடுறது . பிரிட்டன ,பொது வெளியில் துடி , துடிக்க ஆளை தூக்கில் போட்டு மகிழ்கிறது  .  பிரிட்டனின்  முறையே  சிறந்தது என்ற ஒரு பார்வை   இருக்கிறது .  நாகரிகம் மயக்குகிறது . " நாலு நாள்  ...சட்டமாக வைத்திருந்தால் ஐந்தாம் நாள் இயல்பாகி விடுகிறது .  ஏன் அதிகாரத்தை வழங்காதிருக்கிறார்கள் ? . ஜனநாயக உரிமை எல்லாம் பறிக்கப்படுகிறது ? புரிகிறதா ? " என்று சொல்லி  தில்லையின் நண்பன் கதிர் குறும்பு விடுவான் .  பிரிவினை பேசுறது ; பயங்கரவாதம் எல்லாம் அந்தக் கால ராஜதுரோகக் குற்றங்கள் . இந்தக்கால தவ்வல்கள் கூட எல்லாம்  தெரிந்தது மாதிரி பேசுகிறார்கள் .  இந்த நாட்டுக் குடிமகனுக்கு ஒரு மாகாணம் கூட கிடையாது . ஏன்? அது சிறு வெடிப்பு . கற்பனை செய்து பார். வெடிப்பு பரவி , பரவி ...இந்த கண்டம் முழுதுமே கடைசியில் சொந்தக்காரர் கையில் போய் விடுகிறது .... பீத்தல் பயம்  " கதிர் அடங்க மாட்டான் . " சூரியனை  தலைவனாக கடவுளாக கொண்டாடுறதில் நியாயம் இருக்கிறது  " .இப்படியே அலட்டிக் கொண்டு போவான் . சிரிக்க , சிந்திக்க ..என எடுத்துக் கொள்ள வேண்டியது தான் . இந்தச் சிங்கள இனமும் தமிழ் மண்ணில் குசாலாக  குந்தி இருக்கிறது . எவ்வளவு காலம் இருக்கும் என்பதையும் தான் பார்ப்போம் . " நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் . உங்கள் ஆசை நெஞ்சில் கையை வைத்துச் சொல்லுங்கள் ! " . புத்தர் இந்த கோதாரிப்பிடித்த ஆசையை தானே   விடு என்று  சொல்லி  போராடியிருக்கிறார் . யார் கேட்டார்கள் ? .

        பிரெஞ்சுப் புரட்சியின் போது கில்லட் கத்தி (மருத்துவரின்  சத்திரச்சிகிச்சை கத்தியைப் பார்த்து வடிவமைக்கப்பட்டது )வெட்டும் தண்டனை முறையைப் பார்த்து  அரச குடும்பங்களே பதறிப்  போயின . பிரெஞ்சு அரச குடும்பமும் இம்முறையாலே கொல்லப்பட்டனர் . அரபுநாட்டினரின் தண்டனை முறை வேறு விதமானது  .    அது இன்னும்  பயங்கரமானது , அதை விடுவோம் .  நோவாகோர்ஸியா முழுதும் பிரெஞ்சு மக்கள் பரவி வவசாயப் பண்ணைகளை ஏற்படுத்திக்  கொண்டனர் . அனபொலி  தான் பிரதான பகுதி .  தலைநகர் பகுதி . ஃபண்டி வளைகுடாவில் , பழங்குடி மக்கள் அனபொலி பேசினிலும் , மினாஸ் பேசினிலும்  அதிகளவில் சமண் மீன்களையும் வேறு  பிடித்து வந்திருந்தார்கள் . அதுவும் பிரெஞ்சுக்காரர் கைற்கு மாறின .  ஒரு சமூகத்தின் சாவிலே இன்னொரு சமூகம் வாழ்கிறது  ,எழுகிறது .  இந்த  விதி  மாற வேண்டும் .  மாற்றப் பட வேண்டும்.

      சமண் மீனின்  . வாழ்க்கை வட்டம் விநோதமானது  .  முட்டை இட நன்னீருக்குச் செல்கின்றன .  இருவகை நீரிலும் வாழக் கூடிய  மீன் இனம் .  கடலை நோக்கி ஓடி வரும் நதி திரும்பி ஓட முடியாதவை . எனவே நதி  அகண்ட பெரிய நதியாக ஒன்றில்  இருக்க வேண்டும் .  உயர் அலையின் போதே நதி ஓட்டம் திரும்பி ஓட வாய்ப்பு இருக்கிறது . பெற்றோர் மீன்கள் அங்கேயே இருந்து  இறந்து விடுவதாகவும் கூறப்படுகிறது . பெருகிய குஞ்சுகள் நீந்தி  தேக்கத்திற்கு வருகின்றன .  முட்டை இடும் காலத்தில் இவையும் ... நன்னீரிற்குச் சென்று முட்டைகளை இட்டு , அதே வட்டத்தைத்  தொடர்கின்றன .   தற்போது குடியிருப்புகளாலும் , தொழிற்சாலைகளாலும் இந்நதிகள் அசுத்தப்படுவதால் ..... சமணின் விளைச்சல் அரைவாசிக்கு மேலே குறைந்து போய்க் விட்டிருக்கிறது . எச்சரிக்கை சமிக்ஞைகள் விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன . கனடாவில் நிறைய சுத்திகரிப்பு நிலையங்கள் எழுந்தவாறிருக்கின்றன . இது பாறைத் தீவு . அமைத்து , செயல்பட வைப்பது எல்லாமே கஸ்டமாக இருக்கிறது . எப்படியோ சமாளிக்கிறார்கள்  போல இருக்கிறது  .  இல்லை அழிய விட்டுக் கொண்டிருக்கிறார்களோ ?  இயற்கையை காப்பாற்றுறோம் என்று அழித்து கொண்டு தானே இருக்கிறார்கள் . பேசுவது ஒன்று ; செய்வது ஒன்று . இந்தக் குணம் இலங்கையருக்கு மட்டுமில்லை எல்லாருக்கும் இருக்கின்றது .

     இங்கே நதியில் உயர் , தாழ் மின்சாரப் பிறப்பி (நிலையம் ) ஒன்றையும் கூட  அமைத்திருக்கிறார்கள் .

     கியூபெக் மாநிலம் பிரிட்டனின் கையில் வீழ்ந்த பிறகு பிரெஞ்சுகாரர்களின் கை ஒடிந்து போய் விடுகிறது  .  அம்மினிசன்கள்(துவக்கு குண்டுகள் ) அத்திலாந்திக் கடல் மூலமாக பிரான்ஸ் அனுபுறதில் சிரமத்தை அடைகிறது . புயல்கள்  வேறு .   இத்தீவைச் சுற்றி நிறைய கப்பல்கள்  சிதைவுகள் இன்னம் கூட எடுக்கப்படாது   கடலுக்குள் கிடக்கின்றன .

    அனபொலிக் கோட்டை பிரிட்டனின் கையில் வீழ்ந்து போனது .  பிரெஞ்சுப் படையின் நெஞ்சில் அந்த தோல்வி  கனன்று எரிந்து கொண்டேயிருந்தது . பின் வாங்கி மினாஸ் தேக்கத்தின் அயலில் ஆன் கோட்டையைக் கட்டிக் கொண்டு தரித்து நிற்கிறது . அனபொலி சுற்றயலில் பிரெஞ்சுக்குடிகள்  இருந்தன , பிரெஞ்சுத் துருப்புகள் அவர்களுள்  ஊடுருவி அதிகாரிகளைக் கடத்துறதும்  , கொலை செய்றதும் , கோட்டையைத் தாக்குறதுமாக  நித்திய தலைவலியைக் கொடுத்துக் கொண்டே இருந்தன . கடைசியில் ஆன் கோட்டையும் கைப்பற்றப்பட்டு விடுகிறது .  இது நிகழ  சுமார் ஏழாண்டுகள் வரையில் போர் நிகழ்ந்திருக்கிறது . கனடாச் சரித்திரம்  " ஏழாண்டுப் போர் " என்று குறிப்பிடுகிறது . பிரெஞ்சுக் குடிகள் இருந்தால் மேலும்   அபாயம் .  ஊடுருவி தாக்குவார்கள் என்ற அச்சத்தில் பிரிட்டன்  நோவாகோர்ஸியாவிலிருந்த  6000 இற்கு மேற்பட்ட  பிரெஞ்சு மக்களின்  பிரஜாவுரிமையை உடனடியாக பறித்து  ( சில நாள்களில் ) வெளியேறி விட வேண்டும்  " என்று கடுமையாக கட்டளை இட்டு விட்டது .  இலங்கை மலையக மக்களின் பிரஜாவுரிமை பறித்திற்கு இது தான் முன் மாதிரி . ஒருவேளை மலையகத்திலும்  பிரிட்டனே பின்னால்  நிற்கிறதோ என்று  தில்லை சந்தேகிக்கிறான் . தமிழர் பிரச்சனை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது .  
 
       வெளியேற்றத்தில்  மக்களுக்கு  எந்த வித உதவிகளையும் செய்ய முன் வரவில்லை என்ற விமர்சனமும் இருக்கின்றது . அபாயகரமான அத்திலாந்திக் கடல் வழியே வெளியேற வேண்டியிருந்து . சுயமாக மூட்டை கட்டி  நடந்து குழந்தைக் குட்டிகளுடன்  மிகுந்த மனக்குமுறலுடன்  பிரிய முடியாது பிணைக்கப்பட்ட விவசாயப் பண்ணைகளையும் விட்டு கண்ணீர் மல்க இடம் பெற்ற பிரெஞ்சு அகாடியரின் இடப்பெயர்வு   பெரும்  துயரகரமானது . இவர்களுடைய நிலத்தை கனடாவில் குடியேறி இருந்த ஸ்கொட்லாண்ட் வழி வந்த அகாடியர்களிடம்  கொடுக்கப்பட்டிருக்கிறது . களவாக அங்கே நின்று தம் நிலத்திற்குப் போனவர்கள் நிலம் பறிபோய் இருப்பதை பார்த்து மனம் வெதும்பி இருக்கிறார்கள் .

     வாகனத்தில் பல திருப்பங்களுடனான வீதிகளில் பயணித்து விவசாய நிலங்களைப் பார்த்து வருகிற  போது பூமலர் , " நாளை  ,  இங்கே இருக்கிற காஸ்பி வைனரி வயலுக்கு போகலாம் . அவ்வயலிலே இருக்கிற உணவகத்தில் சாப்பிட்டு பிறகு , அங்கேயே  இறங்கி  திராட்சை தோட்டத்தில் நடந்து பார்ப்போம்( விடுவார்கள் )" என்றாள் . வெளிநாட்டுக்காரர்களே பெரிய வைன்  குடியர் . கஸ்பி என்ற இப்பகுதியில் பெருமளவு  திராட்சையே வைத்திருக்கிறார்கள் . சூரியக்காந்திப் பூ  வயல்களும்  இருக்கின்றன .

 கயூன் நாடு

    பிரெஞ்சு அகாடியர்கள் இடம் பெயர்ந்த  லூசியான மாநிலத்தில்  (அச்சமயம் பிரெஞ்சுக் காலனி  )   கயூன் என்ற பெயரில்  குட்டி  நாட்டை (டவுணை   ) ஏற்படுத்தி இருக்கிறார்கள் . நாம் மாலைதீவில் ஒரு தீவை ஈழநாடு என ஏற்படுத்த விரும்பியது போல ...ஒரு கோபம் , ஒரு தளம் . அங்கே நோவாகோற்சியாவிலிருந்து இடம் பெயர்ந்த  சோகத்தை , வலிகளை  சேகரித்த பிரமாண்டமான அரும்பொருட்காட்சியகம்  ஒன்று  இருக்கிறது . அங்கே இவாஞ்ஜிலின் , தேவதையாகவும் , ராணியாகவும்   சிலைகளாக .... நிற்கிறாள்  . ஆங்கிலேயர் ராணியை வழிபடுறவர்கள் . அதனால்  தான்  ... ராணியாகவும்  அவளுக்கு  ஒரு     சிலை . ஏழை ராணி . ( யானை மாலை போட்டதாலே ஆள வந்த ராணி போல  அதிருஸ்டக்காரப் பெண் )' கயூன்   ' க்கு என்ன அர்த்தம் ? . நோவாகோர்ஸியாவை பிரெஞ்சுகாரர் அழைத்த  பெயரோ  ? தெரியவில்லை . அன்று  , லூசியான மாநிலத்தை பிரெஞ்சுக் காலனியாக ஆங்கிலேயர் ஏற்றிருக்கவில்லை . ஆனால் , அவர்கள் கையில் தான் இருந்தது .  இவர்களை  யார் கேட்டார்கள் ?   . காலத்திற்கு காலம்  ஒவ்வொருவர் பொலிஸ்காரராக நிற்க முயல்கிறார்கள் .  யாழ்ப்பாணத்தில் சிங்கள பொலிஸ் நிற்கிறது .

   பிறகு , அம்மாநிலத்தை நெப்போலியன்  அமெரிக்காவிடம் கொடுத்து  விட்டதாக ,வித்ததாக ...கேள்வி . பிரிட்டன் அங்கே , கனடிய  பழங்குடியினருக்கு   என்று  ஒரு மாநிலத்தை  ஏற்படுத்திக் கொடுக்க நினைத்திருந்தார்கள் . அந்த சிந்தனையும் அதோடு  மடிந்து விட்டது . கனடா , முதல் குடியினர் என அழைக்கத் தொடங்கியதுடன் அவர்கள் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளியும்   வைத்து விட்டது . அதிகாரப் பரவலாக்கமற்ற  , ஒப்பந்தங்களுடனான சலுகைகள் , வசதிகள் ...என்ற  வகையில் தான் இன்றும்  பழங்குடியினர் பிரச்சனைகளை அணுகுகிறார்கள் . அப்படி இருக்கிறதாலே அக்குடியினரின் குழந்தைகள் , சிறுவர்கள் கொன்று புதைக்கப்பட்டது  , நிறைய இளம் பெண்கள் குலையுண்டு போய் இருப்பது ,சீரழிவுகள் ஒப்பேறுகின்றன . இலங்கையில் இனப்படுகொலை .இது கலாச்சாரப் படுகொலை என அழைக்கப்படுகிறது . மனித உரிமைப் பிரச்சனையில் இந்நாடும் சிக்குப் பட்டே கிடக்கிறது .

     இங்கே எவ்வளவு பெரிய நிலம் இருக்கிறது . ஒன்ரோரியா மாநிலமே பெரிய நாடு போன்றது .  அதில் பல  ஐரோப்பிய நாடுகளையே அடக்கி விடலாம் . கொடுக்கிறதுக்கு  மனமுமில்லை  . பிரிட்டனில்  ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸ் பேர் பெற்றது . இங்கே நிகழ்ந்த பெண்களின் தொடர்க் கொலைகளை கண்டறிய அவர்கள் உதவியை நாடலாம் . வெளிக்கு கனடா  , அவுஸ்ரேலியா என்று அழைக்கப்ப்பட்டாலும்  இவை பிரிட்டனின் மாநிலங்கள் தாம் . அந்த சிந்தனை  இல்லை . இங்கிருப்பவை சிஸ்டம் பிழை , சிஸ்டம் பிழை என்ற பல்லவியையே பாடிக் கொண்டிருக்கின்றன . பிரிட்டன் , இந்தியாவையும் மாநிலமாக வைத்திருக்கவே விரும்பியது . அரசகுடும்பத்தால் தான் சுதந்திரம் வழங்கப்பட்டது . காந்தியும் நேரத்தை வீணடிக்காது  பாகிஸ்தான் என்று துண்டாடிக் கொடுத்த  போதிலும்  ஏற்றுக் கொண்டார் . அது  ஜின்னாவால் ...பிரிக்கப்படவில்லை . பிரிட்டனாலே நடைபெற்றது . பிரிவினை இந்தியாவிற்கு இன்றும்  தலைவலியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது . இவர்களைப் பார்த்து இலங்கையும் ஈழப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க பல வழிகளை கையாண்டு வருகிறது . ரஸ்யா , உக்ரேன் பகுதிகளை தன்னோடு சர்வசன வாக்கெடுப்புடன் சேர்த்துக் கொண்டதுடன் ....பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியும் வைத்து விட்டது . முட்டாள் உக்ரேன் அரசுக்கு தான் இன்னமும் புரியவில்லை . உலக விதிகள்  விளங்கவில்லை . இனி எதைப் பற்றிக் கதைக்கப் போறார்கள்  . இந்த விதிப்பிரகாரம் தான் போக்லாண்ட் தீவு , பிரிட்டனுக்கு சொந்தமானது , கரிபியன் தீவுகள் , மெக்சிகோப் பகுதிகள் அமெரிக்க மாநிலமானது , பல தீவுகள் பிரெஞ்சு மாகாணமானது   .  பெரிய நாடுகள்  எப்பவும்  சிறிய நாடுகளை முட்டாளாக்கிக் கொண்டு தானிருக்கிறது . இலங்கை , உக்ரேன்  ....போன்றன பலிக்கடாகள்  .

     கனடாவில் பழங்குடியினருக்கு என கொடுக்கப்பட்ட நிலப்பகுதிக்கு அருகில் எல்லாம் ஆங்கிலேயருக்கான சிறிய டவுண் ஒன்றும் இருக்கிறது . அவர்களுக்கு தான் அரச அதிகாரங்கள் .  இவர்களுக்கு இல்லை . இவர்கள் அதில் சேரலாமா , இல்லையா ? தெரியவில்லை . மத்திய அரச பகுதியில் உயர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு வருகிறது   இடம் பெற்று வருகிறது . கனடா , ( காந்திஜி " ஹரிஜன்கள்" ( கடவுளின் குழந்தைகள் ) என அழைத்தது போல)  இவர்ககளையும்  அழைத்து   வருகிறது  .  இவற்றை   பாராட்டவே  வேண்டும் . இப்ப தான் இவர்களுக்கென தனித்துவமான பொலிஸ் ஸ்டேசன்களை  திறக்க வேண்டுமென சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள் . அடுத்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வருகிற போது இவர்களுடைய திட்டங்களை எல்லாம் குப்பைக் கூடைக்குள் எறிந்து விடும் .   எழுத்தாளர்கள் இவர்களைக் குறித்து மேலும்  ஆய்வுக்கட்டுரைகளை  எழுதி வரல் வேண்டும் . தமிழ்ப் பத்திரிகைகளிலுமிவர்களுக்கென தினகரனில் குறிஞ்சிப்பரல் பகுதி போல  ஒரு தனி பகுதியையே ,   நிகழ்ச்சி நிரலையே ..ஏற்படுத்த வேண்டும் .   இவர்களின் அனுபவங்களும் எமது விடுதலைக்கு  தேவை .

கஸ்பி திராட்ஸைத் தோட்டம்

        யாழ்ப்பாணத்தில் பணப்பயிரான புகையிலை வைத்தது போல அனபொலி கணவாயில்    கஸ்பி பகுதியில் திராட்சை அதிகமாக செய்கை பண்ணுகிறார்கள் . பூமலரின் வீட்டிலிருந்து பத்து கிலோ மீற்றருக்குள் இருக்கும் . அதிக தூரத்தில் இல்லை.  விரைவாக திராட்சை தோட்டத்துடன் இருந்த உணவகத்தை அடைந்து விட்டார்கள் . லொப்ஸ்டர் கடலுணவு போட்ட சவுடார் சூப் , சன்விச் ..என எடுத்து டிசெர்ட்டும் எடுத்து சாப்பிடுகிறார்கள் . திராட்சை தோட்டத்தில்  இறங்கி படங்களையும் எடுத்துக் கொண்டு  நடக்கிறார்கள் . சீமேந்து தூண்களிட்டு வரிசை ,   வரிசையாக பந்தலிடடிருக்கிறார்கள்  . திராட்சை  பச்சைக்காய்களுடன் கிடக்கின்றன . கீழே சரிந்து கொண்டு போகும் நிலக்காட்சிகளையும்...பார்க்க முடிகிறது .

      ஈழத்தில் சுயமாக மாகாணவரசு நிலவுமானால் வடமராட்சி வைன்கள் இந்நேரம்  இங்கிருக்கும் வைன்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் . சுழியர்கள்  நிச்சியமாக செய்திருப்பார்கள்  . வலிகாமம் , தென்மராட்சிப் பகுதிகளில்   திராட்சை அவ்வளவாக செய்கை பண்ணப் படவில்லை .  மண்தான் காரணமாக இருக்கும் என நம்புகிறான் . படித்த மாணவர் திட்டத்தில் அவன் வயயொத்தவர்கள் ...வடமராட்சியில் திராட்சையில்  ஈடுபட்டதை  வியப்போடு பார்த்திருக்கிறான்.   அவர்கள் எப்பவும் துணிச்சல் மிக்கவர்கள் தான் என்று சொல்லப்படுகிறது .

        இன்று , அநாகரிக அரசால் எல்லாமே அழித்து சிதைக்கப்பட்டிருக்கிறது . மீண்டும் அது உயிர் பெறுமா  ? ...பட்ட மரம் தளிர்க்குமா, தழைக்குமா? ஏக்கமாக கிடக்கிறது . மழைக் குணமாக இருந்தது .  அதோடு வீடு திரும்பி விட்டார்கள் . அவனுக்குத் தான் பொன்னியின் செல்வன் புத்தகம் இருக்கிறதே . பூமலருக்கும் , ஜெயந்திக்கும் கதைக்க நிறைய விசயங்கள் இருந்தன .

தேவாலயங்கள்

      அவர்கள் அடுத்த நாள் 'ஹைவே ஒன்'னிலே (லோக்கல் கைவே  இலக்கம் ஒன்று வீதீ )  ஓடி  இயற்கைக் காட்சிகளையும் , சிறு டவுண் போன்ற குடியிருப்புகளையும் பார்த்துக் கொண்டு  டிக்பியைத் தாண்ற போது ,  பூமலர் "  கடலில்  இங்கேயும் திமிங்கிலங்களைப்    (  கடல் ராஜாக்களைப் )  பார்க்க கூட்டிச் செல்கிறது  இருக்கிறது " என்கிறாள்  . தொடர்ந்து  " இதிலே மனிதச் செயற்பாடுகள் எதுவும் இல்லை . தூர தள்ளி நின்று பார்த்தால் பறவைகள் கூட நம்மை மரம் என்று நினைத்து வந்து எம்மேல் அமரும் அல்லவா .அது போல திமிங்கிலமும் ...மனிதர்களை  பொருட் படுத்துவதில்லை . இயற்கை ஆர்வலர்களின் குரல்கள் இங்கே ஒன்றும்  ஒலிப்பதில்லை . எப்படி அந்த உருப்படி உடலை தூக்கி நீருக்கு மேலாக பாய்ந்து குத்துக் கரணம்   போட்டு  உடலை புரட்டி விளையாடுகின்றன . ஆச்சரியமாக இருக்கும் " என்கிறாள் . ஆள்களைக் கொல்கிற திமிங்கிலம் பற்றி தான் அவன்  கதை , கதையாகக் கேட்டிருக்கிறான் . இங்கே அபாயமற்றவையாய் இருக்கின்றனவே . சுறாவையே பயங்கர கடல் மிருகமாக கூறப்படுகிறது . அதில் , முலையூட்டியும்  ,   முட்டையிட்டு குஞ்சு பொறிக்கிறவையும்  இருக்கின்றன . மொத்ததில் அவை எல்லாமே கெட்ட சுறா   தான்  .  இயற்கை எத்தனை சுவாரசியமான  பாடங்களை வைத்திருக்கின்றது .

     அப்படியே சென்று ஒரு தேவாலயத்தை அடைந்தார்கள் .

     பத்து வருடங்களாக பொறுமையுடன்  ஒவ்வொரு கற்களாக  கொண்டு வந்து  கட்டிய சாதனை தேவாலயம் அது . " கோயில் இல்லா ஊர் பாழ் "  என்கிற இந்து க்களைப் போல  பிரெஞ்சுகாரர்களும்   முதலில் ஒரு பெருங்கோவிலைக் கட்டி ,  பிறகு அதைச் சுற்றி க் குடியிருப்புகளை எழுப்புகிறார்கள் . சொந்த நாட்டில்  எழுப்புறது நல்ல விசயம் . ஆனால்  , அன்னிய மண்ணைப் பிடிக்க எழுப்புறது நெஞ்சை நெருடுகிறது  .  நீளகாலம் எடுததிற்கு ...எதிர்ப்புக்கள் பலமாக இருந்ததே இருக்கலாம் . குருக்கள் கொல்லப்பட்டால் ..அவ்விடத்திலேயே உடலை  புதைத்து   புனிதர்களாக்கி ...விட்டு  பலமாக நிற்பதே  தொடர்கிறது . ஜெயந்திக்கும்  , பூமலருக்கும் கோயில்களை பார்ப்பதில்   கொள்ளை ஆசை .  தில்லைக்கு அதன் கட்டிடக்கலையைப் பார்ப்பதில் விருப்பம் . நேரம் . திருத்த வேலைகளுக்காக மூடப்பட்டிருந்தது .  எனவே வெளிப்புறத்தில் நின்று கோயிலோடு .'.கிளிக்'குகளை தட்டினர் . செல்போன் கமரா காவுறதை இல்லாமல் செய்திருக்கிறது . கத்தோலிக்கர்கள் அழகிய சிலைகளையும்  கோவிலைச் சுற்றி நிறுத்தி விடுகிறவர்கள் . யேசு நாதர் பேசுகிறார் . அவருடைய மலைப் பிரசங்கம் தான் பிரபல்யம் . அக்காட்சியாய் தான் இருக்கும் . " ஒரு கன்னத்தில் அறைந்தால் , மறு கன்னத்தையும் காட்டு " . யேசுநாதர் கூறியது தான் . காந்திக்கும் பிடித்த வசனம் . காந்தி  கூறியதில்லை  .  

     " இன்னொன்று முழுக்க மரத்தால் கட்டப்பட்ட பெருங்கோவில்  இருக்கிறது . அது திறந்திருக்கலாம் .உள்ளே என்ன அழகான ஓவியங்கள் எல்லாம் வரைந்திருக்கிறார்கள்  . ஒரு தடவை பார்த்திருக்கிறேன் " என்றாள் பூமலர் . அதே வீதியில் மேலும் ஓடினோம் . போற போதே ஜெயந்தி செல்லில் குகூகிளில்  பார்க்க  , அதுவும் திருத்த வேலையில் மூடப்பட்டிருக்கிறது . கனடாவிலே முதலில் மரத்தால் எழுந்த தேவாலயம் அது தான்     . " இது , எழுதப் படிக்கத் தெரியாத ஒரு  ஐரோப்பியரின்  தலைமையிலே பல ஆண்டு  காலம்  எடுத்து கட்டி முடிக்கபட்டிருக்கிறது  " என்கிறாள் .  பாடம் படியாத மேதைகளும் உண்டு  .  அதிலும்   நின்று...பல ' கிளிக்' குகள் .

     திரும்பி வரும்  போது  " இங்கே தமிழ்ச் சனம் குறைவு . சைவக்கோயில்கள் இல்லை என்றே கூறலாம் . ஒரு குரோசரி கடை கலிபஸில் திறந்திருக்கிறார்கள் . இங்கே இருப்பவர்கள் எப்பவும் குழுவாகச்  சேர்ந்து பார்ட்டி போல ஒன்று கூடுகிறார்கள். பொட்லக் பார்ட்டி . ஒவ்வொருவரும் ஒவ்வொரு கறிகளைச் சமைத்துக் கொண்டு வருவார்கள் .  கோடை  காலத்தில்  காய்கறி  பயிரிடுகிறார்கள் . விளையிறதை பகிர்ந்தும் கொடுக்கிறார்கள் . அப்படித் தான் நாம் பழகிறோம் " என்றாள்  பூமலர் .  இங்கே பூமலருடன் படித்தவர்கள்  சிலர் வீட்டிலே தோட்டமும் போட்டிருக்கிறார்கள் . மிதவெப்பநிலை கொண்ட தீவு . வளமிக்கமண்ணைக் கொண்ட அனபொலிவலிப்  பிரதேசம் .  மழை அதிகமாக பெய்கிறது . நல்லபடியாய் விளைகிறது . விவசாயம் செய்த அனுபவமுள்ளவர்கள் வெற்றிகரமாகவே இங்கே  , என்ன..... , கனடாவில் எந்த பகுதியிலுமே  ஜீவிக்கலாம் . பூமலர் குளிர்பெட்டியில் , உறைப்பகுதியில் காய்கறிகளை  கழுவிப் போட்டு வெட்டி சிறிய பைகளில் போட்டு வைத்திருக்கிறாள் . எடுத்து ,  எடுத்து சமைக்கிறாள் . " சித்திராவும் சுமியும் ரொரொன்ரோவிற்கு போய் விட்டால் எனக்கு இப்படி இருக்கிறதே போதுமானதாக இருக்கிறது  " என்கிறாள் . வாட்ஸப்பும்  , முகநூலும் அவளுக்கு பெரிதும் உதவுகின்றன .

      கையோடு கொண்டு வந்த தேனீர்  ,சிப்ஸ் , சன்விச் எல்லாம் முடித்திருந்தார்கள் .
                                                                                                             
     வீட்டிற்கு வந்த பின் பூமலர் தோசை சுட்டாள் . ஜெயந்தி கறி ஒன்றைச் செய்தாள் .  குளித்து சாப்பிட்ட பிறகு  , தில்லை ,    தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருக்கிற  ஒபீஸ்ரூம்க்கு வந்தான் .அங்கே இருந்த பெரிய கவுச்சிலே(கதிரை) இருந்து கொண்டு பொக்ஸ் சனல்களை தட்டி , தட்டி பார்த்தான் . ரொரொன்ரோ சனல்கள் வட்டம் போட்டுக் கொண்டிருந்தன .  சலிக்க ...அதற்கொரு குட்பை . அறவே துண்டித்திருப்பது நல்லாயிருப்பது போலவும் தோன்றியது . " கரபானா " எல்லாம் முடிந்திருக்கும் .  அங்கத்தைய பரபரப்பு  தலையிடிகள் , தினமும் சுட்டுச் செய்திகள் ....என      ஒன்றும்   இல்லை  .  வீடு எரிந்து அதில் சாகிற துயரச் செய்திகளும் இல்லை . பிரிட்டனில் ஒரு தமிழ்க் குடும்பம் எரிந்த பிறகு , ஒரு கிழமை வரையில் தொடர்ந்து கேட்டு வந்தான் . ரொரொன்ரொ நகரிலே தினமும் ஒரு வீடு எரிந்தது . சிறுவர்களும் , கூட தாயோ , தந்தையோ ... இறக்கிறார்கள் . மனது பெரிதா வலித்தது . அரசுகளிற்கு ...சாக்களைக் குறித்து அக்கறை இல்லை . பழங்குடியினரின் சாக்களும் அப்படியே கரைந்து போய்க் கொண்டிருக்கிறது . இலங்கைச் சிங்களவர் கலவரத்தில் நிகழ்த்திய கொடுமைகளை மறுபடியும்  பார்க்கிறோம் . சபிக்கப்பட்டவர்கள்  எல்லா இடங்களிலும் இருந்து கொண்டு தானிருக்கிறார்கள் . நாம் போராட வேண்டியது ஒட்டுமொத்த மக்களுக்காவும் தான் . எமது விடுதலைப் போராட்டத்தில்  கால் வைக்கிற போதே எம்மில் உள்ள அத்தனை மிருகங்களும்  வெளிய வந்து விடுகின்றன . இயக்க மோதல் வலி நெஞ்சில் கிடக்கிறது . இவர்களுக்காக எப்படி போராடப் போறோம் ?

      சாப்பாட்டு அறையிலிருந்து ஜெயந்தியும் , பூமலரும் கதைத்துக் கொண்டிருக்க மேலே இருக்கிற ரூமுற்குப் போய் பொன்னியின் செல்வன்  பாகங்ககளை அள்ளிக் கொண்டு வரப் போனான் . பூமலர் " உனக்கு தேனீர் வேண்டுமானால்  வந்து போட்டு எடுத்துக் கொண்டு போ " என்கிறாள் . சின்ன வயசில் அவளுக்கு குட்டு குட்டி பல தடவைகள் அழ வைத்திருக்கிறான் . அதை மறந்து விட்டு பாசமாக இருப்பாள் . இப்பவும் இருக்கிறாள் . படிகளில் ஏறியதில்  அலுப்பு ஏற்பட ...மேல்தட்டு மூலையில் இருந்த சாமி அலுமாரியை , இதுவரை பெரிதாக கவனிக்கவில்லை   நின்று பார்த்தான் .  குட்டி , குட்டி யாக பல்வேறு நிலையில் தும்பிக்கையுடன் பிள்ளயார் சிலைகள்  .  படையாக நிற்கிறார் . பரம்பரை அலகு கோணல்மாணலாகிப்  விகாரமாகிப்  பிறந்தவர்களிற்கு  வாழ்வில் ஒரு பிடிப்பை ஏற்படுத்த பிள்ளையார் கடவுளைக் கொண்டு வந்தார்களோ ? என்று அவன் நினைப்பவன் . அவன் அப்படி பலரைப் பார்த்திருக்கிறான் . பச்சாபப்பட்டிருக்கிறான் . கொழும்பு கொட்டகேனாவில் ஒரு பிச்சைக்காரன் " கடவுள் எல்லாருக்கும் சமமாகவே குறைகளை வைத்திருக்கிறான் . உனக்கும் ஒரு பெரிய குறை கிடக்கும் அதை  ஒரு காலத்தில் உணர்வாய்" என்று கூறியதும் அவன் சாபம் இடுகிறானா?  நினைத்தும்  ஞாபகம் வந்தது .

       அவனுடைய குடும்பத்திலும்  யாரோ ஒருவர் ஒவ்வொரு காலத்திலும் பிள்ளையார் விசிறிகளாகவே இருந்திருக்கிறார்கள் .

       சின்ன வயசில் பெரியக்கா பிள்ளையார் பக்தை .  வீட்டின் பக்கத்திலிருந்த பன்றிகொட்டுப் பிள்ளையார் கோவிலுக்கு  நித்திய பூஜைக்கு தவறாமல் போய் வருவார் ." பிள்ளையார்  , பிள்ளையார் ...பெருமை வாய்ந்த பிள்ளையார் " பாடலையும் பாடுவார் . அதற்கு முந்தி சின்னம்மா ...இருந்தார் . கோவிலே கங்கைவேணி நிற்பதும் நினைவில் வந்தது . இவன்  ,  தங்கச்சி போற போது  மோதகம் , அவல் , பொங்கல் ... இப்படி ஏதாவது ஒன்றை தருகிற அண்ணர் .   இப்ப தங்கச்சி .   பிள்ளையார் அதிசயமான கடவுள் தான் .  வட இந்தியாவிலிருந்த சமணர்கள் தான் எல்லா தெய்வங்களையும் பிறக்க வைத்தவர்கள் . வாதாபிக் கணபதி என அவர்கள் தொழ ...பிறகு  சைவக்கடவுளாகவும் பீடமேறினார் . இவனும் பிறகு தொழப் போறான் .  ரொரொன்ரோ திரும்பிய பிறகு , அண்மையில் , கங்கை அமரன் எழுதிய வாழ்வின் நினைவுகள் பற்றிய ஒரு  நூலை வாசித்திருந்தான் . அதிலே ,  " அண்ணர்  ஒவ்வொரு நாளும் காலையிலும்  சாமிப்படத்திற்கு முன்னால் நின்று கும்பிட்டு விட்டே காரியங்களை ஆரம்பிப்பார் . அவரைப் பார்த்து நானும் பழகி விட்டிருக்கிறேன் . சிறிது பாதகமாக நடைபெற்றிருந்தாலும் மனசு உடைந்து போகாமல் ஏற்றுக் கொள்கிறது . நன்மையாய் தான்  இருக்கிறது " என்கிறார் . அன்றிலிருந்து பூமலர் கும்பிடுற பிள்ளையாரை  இவனும் ,( பூமலர்  ,  ஜெயந்திக்கு  கொடுத்திருக்கிற பிள்ளையார் சிலையை)  களவாக கும்பிட்டு வாரான் . ஏதோ ஒரு சக்தி காப்பாற்றும் என்ற நம்பிக்கை . இல்லா விட்டாலும் பரவாயில்லை . அவன் கும்பிடுற புண்ணியம் தங்கச்சிக்கு போய்ச் சேரட்டும் .

       புத்தகங்களை  எடுத்துக் கொண்டு திரும்பினான் .

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.