- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -


க.பாலேந்திரா இலங்கையில் நான் மிகத் தீவிரமாக இயங்கிய 76-82 காலப் பகுதியில் , நாடகங்களை தொடர்ந்துமேடையேற்றியது மட்டுமல்ல , நாடகங்கள் பற்றிய விமர்சன கூட்டங்கள் , பத்திரிகை வாயிலாக நாடகங்கள் பற்றிய விவாதங்கள் போன்ற பலவற்றையும் நடத்தினோம்.நாடகம் குறித்து மிக உக்கிரமான விவாதங்கள் நடந்த காலம் அது.விவாதத்தின் மையப் புள்ளியாக நான் நெறிப்படுத்தி மேடையேற்றிய நாடகங்கள் அமைந்தன.

இலங்கையில் தேசிய அளவிலான பத்திரிகைகள் எமக்கு களம் கொடுத்தன. தமிழகத்தில் இப்படியான நிலைமை இருக்கவில்லை.1982 இல் நான் தமிழகம் சென்ற போது ஒரு இலக்கிய ஆளுமை என்னிடம் கூறியிருந்தார். அங்கு அப்போது, தீவிர நாடக முயற்சிகளுக்கு பெரிய பத்திரிகைகளில் ஒரு single column news கூட கொடுக்க மாட்டார்கள் என்று கூறினார்.

1979- காலப் பகுதியில் "தினகரன்"பத்திரிகையின் ஆசிரியப் பீடத்தில் அப்போது பணி புரிந்த திரு ஈ கே ராஜகோபால் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க "மேடைப் பிரச்சினைகள் " என்ற தலைப்பில் ஒரு பத்தி சில வாரங்களுக்கு எழுதினேன். அதில், நான் முக்கியமாக முன் வைத்த நவீன தீவிர தொடர்ந்த நாடகமேடையேற்றங்களின் தேவை பற்றியும்,நாடகப் பிரதிகளின் பஞ்சம் , சினிமா,வானொலி போன்றவற்றுக்கும் நாடகத்துக்கும் உள்ள வேறுபாடுகள் போன்ற பல விடயங்கள் பகிர படடன. இளைய தலைமுறை நாடக ஆர்வலர்களுக்கு அன்றைய ஈழத்து நாடக சூழலைப் பற்றி அறிந்து கொள்ளவும்,வரலாற்றை அறிந்து கொள்ளவும் இந்த எனது பதிவுகள் உதவலாம்.

"மேடைப் பிரச்சினைகள் " கட்டுரை ( பத்தி ) தொடரின் முதலாவதை இன்று பகிர்கிறேன்.தொடர்ந்து மற்றைய பதிவுகள் வரும்.
இந்தமுதலாவது கட்டுரை 03-06 1979 இல் பத்தி எழுத்தாக வருவதற்கு முன்னர் எனது நெறியாள்கையில் மழை , கண்ணாடி வார்ப்புகள் பலி , நட்சத்திரவாசி,ஒரு யுகத்தின் விம்மல் ,பசி,புதிய உலகம் பழைய இருவர்,ஒரு பாலை வீடு ஆகிய நாடகங்கள் பல தடவைகள் மேடையேறியிருந்தன.

மேடைப் பிரச்சினைகள் 1 (தினகரன் 03-06 1979)

"இலங்கையில் தமிழ் நாடகம் வளரவில்லை" என்று பல காலமாக ஒரு குரல் கேட்டுக் கொண்டுதானிருக்கிறது. அங்கும் இங்குமாக சில பாய்ச்சல்கள் சில திருப்புமுனைகள் சல மைல்கற்கள் அவ்வளவு தான் என்பது மற்றொரு குரல். இந்த நன்முயற்சிகள் மக்களிடம் சென்று ஒரு பாதிப்பை ஏற்படுத்தத் தவறிவிட்டன. ‘நாடகம்’ என்று பரவலாக மேடையேறுபவை பல நகர்ப் புறங்களிலானாலும் சரி, கிராமங்களிலானாலும் சரி நாடகமாகவும் இல்லாமல் சினிமாவாகவும் இல்லாமல் அரங்கேறும் ஏதோ ஒன்று.

“எதைச் செய்தாலும் எப்படிப்பட்ட தரமற்ற பாமர ஈடுபாடாக இருப்பினும், கலை, கலைஞன் என்ற அங்கீகாரமும் விருதுகளும் புகழும் கிடைத்து விடும் என்ற நிலையில், மலிவான புகழ், பணம் இவற்றின் தேடலிலேயே, அத்தேடலின் பெற்றியே இவ்வங்கீகாரத்தைக் கொடுத்து விடுமாயின் உண்மையான கலை வாழ்விற்கு இடமிருப்பதில்லை. தமிழகத்தில் இந்நிலை இன்னும் கீழ்நோக்கிச் சென்றிருகு;கிறது” என்கிறார் தமிழ்நாட்டு விமர்சகர் ஒருவர். அதன் பாதிப்பு இங்கும் செறிந்திருக்கிறது. அந்தப் படுமட்டமான அடிநிலை சொன்னால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கோபம்கூட வரும். நாம் முகம் கொடுக்க வேண்டிய கசப்பான உண்மை. இது மிகப் பரிதாபகரமானது.

‘மக்கள் எதற்குத் தகுதியானவர்களோ அதையே பெறுகிறார்கள்’ என்று ஜனநாயகத்தைப் பற்றி ஒரு கூற்று உண்டு. இது எமது நாடக ரசிகர்களுக்கும் பொருந்துமா? பாவம்! ஆவர்களும் தான் என்ன செய்வார்கள்? தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரானாலும் சரி, எம்மவர்களானாலும் சரி, இவர்கள் வைக்கும் கோஷம் இதுதான் “மக்கள் இதையே விரும்புகிறார்கள்” மக்கள் வேறு வழியின்றி இந்தச் சினிமாக் குப்பைகளைத்தான் ஏற்க வேண்டியிருந்தது. ரசனை உணர்வு மழுங்கிப் போய்விட்ட இந்த விஷச் சூழலிலிருந்து விடுபடுவது கொஞ்சம் சிரமம்தான்!

'மழை 'நாடகத்தில் பாலேந்திரா & ஆனந்தராணி பாலேந்திரா -

தற்போது ஆரோக்கியமான திசையில் எமது நாடகம் வளரக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன என்றுதான் சொல்ல வேண்டும். அங்கங்கே பரவலாக, நாடக மேடையேற்றங்கள், விமர்சனங்கள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் குறிப்பாக யாழ் நகரிலும் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன. காத்திரமான நாடக முயற்சிகளை இனங்கண்டு, பத்திரிகைகள், வானொலி போன்ற சாதனங்களும் ஆதரிக்கத் தொடங்கியுள்ளன. பல ‘நாடகக்காரர்கள்’ நாடகத்தை விட்டு சினிமாவுக்குப் போய்விட்ட இந்த வசதியான சந்தர்ப்பத்தை இடைவெளியை இம்முயற்சிகள் ஈடுசெய்து, எம்மிடையே புதிய ரசனைப் பயிற்சியை ஏற்படுத்தும் நம்பிக்கை தோன்றியுள்ளது. ஒரு மாற்றம், ஒரு புதிய மரபு. ஒரு புதிய மதிப்பு ஏற்படும் சாத்தியம் கூறுகள் தோன்றியுள்ள இந்நிலையில் மேடைப் பிரச்சினைகள், நாடகப் பரிமாணங்கள் பற்றி உரத்துச் சிந்திப்பது பொருத்தமானது.

புதிய உத்வேகத்தோடு நாடக இயக்கங்கள் ஆரம்பமாகியுள்ளபொழுது, புதிய சர்ச்சைகள், விவாதங்கள், கருத்துகள் தோன்றாமல் இருக்க முடியாது. அவற்றைப் பகிரங்கமாக விவாதிப்பதும் புரிந்து கொள்வதும் எமக்கு ஒரு புதிய பார்வையைத் தரும்.தற்போது தோன்றியுள்ள இவ்விழிப்பு வளம்பெற, செழிக்க முதல் தேவை நாடகங்கள். அடுத்தபடி இவை மேடையேற வேண்டும். நாடகக் கலை முறைகள், கலை நுட்பங்கள், நாடகக் கலைச் சரித்திரம், உலக நாடக வளம் பற்றிய அறிவும், பயிற்சியும் உடைய குழுக்கள் வேண்டும். புதிய ரசனைப் பயிற்சியை அளிக்கும் வல்லமையுடைய வலுவான மேடையேற்றங்கள் வேண்டும். இவற்றில் ஈடுபாடு கொண்டு உழைக்கும் அமைப்புகள், பணநெருக்கடிகள், சிரமங்கள் ஏற்படினும் தமது பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அதே நேரத்தில் நாம் இவைபற்றி அணுகு முறைகள் பற்றி பயிற்சி பற்றி நாடகப் பிரக்ஞை பற்றி அவ்வப்போது கருத்துப் பரிமாறிக் கொள்ளலாம்.


நாடகமும் ரசிகர்களும்

1979 இல் நான் என்னுடைய 27 ஆவது வயதில் , இலங்கையில் வெளியாகும் "தினகரன் " பத்திரிகையில் தொடராக எழுதிய "மேடைப் பிரச்சினைகள் " கட்டுரை ( பத்தி ) தொடரின் முதலாவது பதிவை நேற்று பகிர்ந்தேன். பலர் இதனை வாசிப்பது மகிழ்ச்சி. இன்று இரண்டாவது கட்டுரையை பகிர்கிறேன்.

தொடர்ந்து மற்றைய பதிவுகள் வரும்.இந்த தொடர் பதிவுகளில் "நாடகம் என்றால் என்ன?" நாடகத்தில் இடம் பெறும் சொற்கள் (வார்த்தைகள் ), வானொலி நாடகங்கள், சினிமா ஆகியவற்றுக்கும் மேடை நாடகத்துக்குமான வேறுபாடுகள் ஆகியன பேசப்படும். இவை இளைய நாடக மாணவர்களுக்கு பயனுள்ளவையாக அமையும் என நம்புகின்றேன்.

இந்தக் கட்டுரை 10-06 -1979 இல் பிரசுரமாவதற்கு முன்னர் எனது நெறியாள்கையில் மழை , கண்ணாடி வார்ப்புகள் பலி , நட்சத்திரவாசி,ஒரு யுகத்தின் விம்மல் ,பசி,புதிய உலகம் பழைய இருவர்,ஒரு பாலை வீடு போன்ற நாடகங்கள் பல தடவைகள் மேடையேறியிருந்தன.

இவற்றை மையமாக வைத்து மிக உக்கிரமான நாடக விவாதங்கள் நடைபெற்றன. அந்த விவாதங்களும் பின்னர் பதியப்படும். நவீன ஈழத்து தமிழ் நாடக வரலாற்றில் மிக முக்கியமான காலம் அது.

1979 இன் பிற்பகுதியிலேயே நான் நெறிப்படுத்திய யுகதர்மம் (The Exception and the Rule by Bertolt Brecht), நாற்காலிக்காரர் ஆகிய நாடகங்கள் மேடையேறின.தொடர்ந்து பாதல் சர்க்காரின் முகமில்லாத மனிதர்கள் , மோகன் ராகேஷின் அரையும் குறையும் , கிரிஷ் கர்நாட்டின் துக்ளக் ஆகிய நாடகங்களை 1982 வரை மேடையேற்றினேன்.


மேடைப் பிரச்சினைகள் 2 - தினகரன் 10-06-1979

நாடகம் ஒரு நேரடிக் கலை குழு நிகழ்ச்சி. மற்ற எல்லாக் கலைகளையும் விட பார்வையாளர்கள் என்ற பிரிக்க முடியாத அம்சத்தை இணைத்தது. சினிமா, வானொலி, ரெலிவிசன் போன்றவற்றில் ரசிகர்கள் வெறும் ஏற்பவர்களே நாடகத்தில் அப்படியல்ல. ரசிகர்கள் இடைவிடாது பங்குபற்று பவர்களாக இருக்கின்றனர்.

எனவே நாடகம் நிகழ்த்தும் போது ‘யாருக்கு நிகழ்த்துகிறோம்’ என்ற உணர்வு இருக்க வேண்டும். எந்தவொரு அணுகலும் சூழலைப் பொறுத்தே அமையும். எம்முடைய பரிதாபமான நாடகச் சூழலை மனதிற் கொண்டு பார்க்கும் போது நம்முடைய தற்போதைய தேவை ‘நாடகமென்றால் என்ன?’ என்ற பிரக்ஞையை எழுப்புவதும் அதை ஏற்கச் செய்வதுமாகவே இருக்க வேண்டும். இது தற்போது நகர்ப்புறங்களிலும் பல்கலைக்கழகங்களிலும், படித்தோர் மட்டத்தில் அங்கங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இப்பொழுது சற்று முனைப்புப் பெற்றிருக்கிறது. இதனையே ‘புதிய நாடகச் சூழல்’ என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேன். இதை இன்னும் அகலித்து செழுமைப்படுத்த வேண்டும்.

சென்ற வருடம் என்னால் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகத்திற்கு “நாடகம் ரசிகர்களை பின்னே விட்டு முன்னே சென்று விட்டது” என்று ஒரு விமர்சனம் வைக்கப்பட்டது. மக்களை விட்டு கலைகள் அதிக தூரம் முன்னே சென்று விட முடியாது என்பது உண்மையாயினும் சினிமாக் குப்பைகள் மலிந்து காணப்படும் இந்த விஷச் சூழலிலிருந்து விடுபடுவதற்கு நாடகத் தயாரிப்பாளர்கள் சற்று முன்னே சென்று பார்வையாளர்களைப் பயிற்றுவிக்கும் பொறுப்பு உடையவர்களாகிறார்கள். "மக்கள் இதனையே விரும்புகிறார்கள்” என்று சமரசம் செய்து கொண்டு சமூகப் பொறுப்புணர்வு இல்லாமல் பாமர ரசனைக்குத் தீனி போட முடியாது. சமூகப் பொறுப்புணர்வு என்பது கலையுணர்வின் பிரிக்க முடியாத மற்றொரு பரிமாணம் அல்லவா? எனவே, நாடகத் தயாரிப்புகள், பார்வையாளர்களை பயிற்றுவிப்பவையாக, காலத்தின் தேவையை ஒட்டி சற்று முன்னே செல்பவையாக இருக்கலாம் என்று கூறும் அதேவேளையில் பார்வையாளர்களின் முக்கியத்துவத்தை இன்னும் ஆழமாகப் பார்ப்பது பயனுடையது.
'யுகதர்மம்' நாடகக் காட்சி

நாடகம் என்பது நடிகர்களுக்கும் அவையினருக்கும் நடைபெறும் "கொள்வினை கொடுப்பினை நிகழ்ச்சி” என்று, நெட்டோஸ்வி குறிப்பிடுவது போல பார்வையாளர்களை முற்றாக ஒதுக்கி விட்டு நாடகம் முன் சென்றுவிட முடியாது. ஏன் ஒரே நாடகத்தின் வெவ்வேறு நிகழ்த்தலில் கூட அந்தந்த இடத்தில் கூடும் பார்வையாளர்களின் பாதிப்பை நாடக நிகழ்தலில் அவதானிக்க முடியும். ஏனெனில், நாடகத்தில், படைப்பும் அதனை அனுபவித்தலும் இடைவெளியின்றி நிகழ வேண்டியிருக்கிறது. “பின்னர் பார்த்துக் கொள்ளலாம்” என்று ஒதுக்கிவிட முடியாத ஒரு வடிவம் நாடகம்.

நாடகம் ஒரு சமூக சக்தியாக, நாடகமும், ரசிகர்களும் பரஸ்பரம் பாதிப்பை ஏற்படுத்தி வளம் பெறுவதற்கு, அதற்கும் வாழ்க்கைச் சூழலுக்கும் உறவு இருக்க வேண்டும். ரசனைப் பயிற்சியும், நாடக வளர்ச்சியும் உடன் நிகழ்வுகளாக ஏற்பட வேண்டும்தான். ஆனால் தற்போதைக்கு, நாடகத் தயாரிப்புகள் முன்செல்ல வேண்டிய ஒரு தேவை உண்டு என்றே கருதுகிறேன்.


"நாடகம் என்றால் என்ன ?"

நேற்று முன்தினம் 41 வருடங்களுக்கு முன்னர் நான் " தினகரன் " பத்திரிகையில் 10-06-1979 இல் எழுதிய "மேடைப் பிரச்சினைகள் " தொடரின் இரண்டாவது பகுதியை பதிவிட்டிருந்தேன் .அதற்கு முதல் நாள் முதலாவது கட்டுரை பதிவாகியிருந்தது.

இந்தக் கட்டுரைகளுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதாக உணர்கிறேன். பலர் பின்னூட்டங்களில் இதனை தெரிவித்தனர். சிலர் அந்தக் காலங்களில்- 40 வருடங்களுக்கு முன்னர் -மேடையேற்றப்பட்ட எனது நாடகங்கள் மழை , கண்ணாடி வார்ப்புகள் யுகதர்மம் ஆகியவை இன்னும் பசுமையாக தங்கள் நினைவில் உள்ளதாக எழுதி யிருந்தனர்.அது தான் நேரடி அரங்கின் மகிமை.

நல்ல நாடகங்கள் பார்வையாளர் மன வெளியில் நாடகம் முடிந்த பின்னரும் சஞ்சரிக்கும், சஞ்சரிக்க வேண்டும் என்று பல தடவைகள் கூறியுள்ளேன். 40 வருடங்கள் கழித்தும் அவர்கள் மனதில் எமது நாடகம் பற்றிய நினைவுகள் அழியாமல் இருப்பது எமது ஆற்றுகைகளுக்கு கிடைத்த வெற்றி. அது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி.யுகதர்மம் பாடல் வரிகளை பலர் நேரிலும் பாடிக் காட்டுவதுண்டு. நேற்றும் ஒருவர் "வலிந்த கால்கள்"பாடலை நினைவில் வைத்திருந்து குறிப்பிட்டிருந்தார்.இவர்கள் எனக்கு நேரடியாக அறிமுகமில்லாதவர்கள்.

இன்று மூன்றாவது கட்டுரை பதிவாகிறது. இது "நாடகம் என்றால் என்ன ?" எனறு பேசுகிறது. தீவிர நாடக ஆர்வலர்களுக்கும் , மாணவர்களுக்கும் பயன்படும் என நம்புகிறேன்.கவிஞர் இளவாலை விஜேயேந்திரன் தனது பின்னூட்டத்தில் நேற்று இதனை குறிப்பிட்டு எழுதியிருந்தார்.

இந்த கட்டுரை தினகரனில் 17-06 -1979 இல் பத்தி எழுத்தாக பிரசுரமாவதற்கு முன்னர் எனது நெறியாள்கையில் மழை , கண்ணாடி வார்ப்புகள் பலி , நட்சத்திரவாசி,ஒரு யுகத்தின் விம்மல் ,பசி,புதிய உலகம் பழைய இருவர்,ஒரு பாலை வீடு போன்ற நாடகங்கள் பல தடவைகள் மேடையேறியிருந்தன.இவற்றுள் பலி, ஒரு யுகத்தின் விம்மல், பசி, ஆகியவை குறு நாடகங்கள். மற்றவை பெரிய தயாரிப்புகள்.

இவற்றை மையமாக வைத்து மிக உக்கிரமான நாடக விவாதங்கள் நடைபெற்றன. அந்த விவாதங்களும் பின்னர் பதியப்படும். நவீன ஈழத்து தமிழ் நாடக வரலாற்றில் மிக முக்கியமான காலம் அது. இவை பற்றி நாடகம் பயிலும் மாணவர்கள் அறிந்திருப்பது நல்லது.

1979 இன் பிற்பகுதியிலேயே யுகதர்மம் , நாற்காலிக்காரர் ஆகிய நாடகங்கள் மேடையேறியன.தொடர்ந்து பாதல் சர்க்காரின் முகமில்லாத மனிதர்கள் , மோகன் ராகேஷின் அரையும் குறையும் , கிரிஷ் கர்நாட்டின் துக்ளக் ஆகிய நாடகங்களை 1982 வரை மேடையேற்றினேன் .

நான் 1977-1982 காலப் பகுதியில் இளையவர்களுடன் "நாடகம் என்றால் என்ன ?" என்பது குறித்து உரையாடியும் பல பயிற்சி பட்டறைகள் நடத்தியுமுள்ளேன் . இவை மொரட்டுவ பல்கலைக் கழகம் ,வித்தியோதய பல்கலைக் கழகம், கொழும்பு பல்கலைக் கழகம், மருத்துவக் கல்லூரி,பேராதனைப் பல்கலைக் கழகம் , கொழும்பு றோயல் கல்லூரி, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி ஆகிய இடங்களில் நடந்தன.இதைத் தொடர்ந்து நாடகங்கள் தயாரிக்கப் பட்டு மேடையேற்றப் பட்டன. பேராதனையில் மட்டும் அங்குள்ள மாணவர்களை வைத்து நாடகம் தயாரிப்பது சாத்தியப் படவில்லை.

01-12-77இல் மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் நடந்த "நாடகம் என்றால் என்ன ?" கருத்தரங்கு குறித்தும் ,14-11-1979 இல் என்னுடன் இலங்கை வானொலி நாடகத் தயாரிப்பாளர் கே எம் வாசகரும் கலந்து கொண்ட கருத்தரங்கு குறித்தும் வெளி வந்த பத்திரிகை செய்திகளை இத்துடன் பகிர்கிறேன்.


மேடைப் பிரச்சினைகள் 3 -  தினகரன் 17-06-1979

"நாடகம் என்றால் என்ன? என்ற பிரக்ஞையை எழுப்புவதும், அதை எம் மக்கள் ஏற்கச் செய்வதும் தான் தற்போதைய அவசரத்தேவை" என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேன். நாடகத்தின் அடிப்படைத்தன்மைகளைப் பற்றிய தெளிவு சம்பந்தப்பட்டவர்களுக்கு அவசியம்

அதைவிடுத்து, பயிற்சியின் தேவை பற்றியோ, அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலோ, குறைந்தபட்ச சிரமமோ இல்லாமல் நாடகமேடையேற்றத்தை இலகுவாக எண்ணிக் கொண்டு நாடகம் ‘போடுபவர்கள்’ தான் எம்மில் அதிகம். நாடக மேடையேற்றம் ஒரு காத்திரமான, சிரமமான விஷயம் என்ற உணர்வே இல்லாமல் ‘போட்டடிக்கும்’ இவர்கள் தான் எமது நாடக வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள்.

ஆவலும் உத்வேகமும் கொண்ட இளம் தலைமுறையினர் இது பற்றிய ஆரோக்கியமான சிந்தனைப் போக்குடன் செயல்படுவது அவசியம். நாடகத்தின் அடிப்படைத் தன்மைகளை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

நாடகம் என்பது நிகழ்த்திக் காட்டுவது. ஆம், ஒரு நிகழ்ச்சியை வர்ணிப்பதே நாடகம். ஒரு ‘நிகழ்தலின்’ படிப்படியான முன்னேற்றத்தை நாடகம் காட்ட வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் மனித வாழ்வோடு இணைந்த ஒரு நிகழ்வுக் கோவையை காட்டுவது நாடகம். இது மேடை என்ற தளத்தில் அதன் கள பரிமாணத்துக்குட்பட்டதாக நீள, அகல உயரங்களுக்குட்பட்டதாக அதாவது ஒரு எல்லைக்குட்பட்ட வெளியில் நிகழ்கின்றது. காலத்தையும் ‘வெளி’யையும் சார்ந்து நிற்பது நாடகம். இந்த எல்லைக்குள் தான் இது நிகழ முடியும்.

ஒரு விஷயத்தை எடுத்துரைக்கும், "நரேட்டிவ் ’’ என்கிற தன்மையும், கவித்துவமும் நாடகத்தில் காணப்பட்டாலும் கூட சம்பவங்கள் நிகழ்தல் என்பதே நாடகத்தின் அடிப்படைத் தன்மையாகும். நாடகத்தில் சம்பவங்கள் சொல்லப்படுவதில்லை. காட்டப்படுகின்றன.

‘தியேட்டர்’, ‘டிராமா’ என்ற மூல கிரேக்க சொற்களுக்குரிய, மூல அர்த்தத்தை நோக்கினாலே இது இலகுவாகப் புரிந்துவிடும். ‘தியேட்டர்’ என்றால் ‘பார்க்கும் இடம்’ என்றும் ‘டிராமா’ என்றால் ‘செய்து காட்டுதல்’ என்றும் பொருள். எனவே நாடகத்தில் விஷயங்களை சொல்லாதீர்கள் காட்டுங்கள்.

இந்த ‘நிகழ்த்திக் காட்டுதல்’ சரியான கருத்துப் பரிமாற்றத்திற்கு வழிசமைப்பதாக இருக்க வேண்டும். நெறியாளன், நடிகன் என்ற கருவி மூலம் தான் நாடகாசிரியனின் கருத்து பார்வையாளனைச் சென்றடைகிறது. நாடகப் படைப்பு பொருள் பொதிந்ததாக மாற வேண்டுமெனில் இந்தக் கருவியானது வலுவுள்ளதாக, அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். மேடைமொழி இலாவகமாகக் கையாளப்பட வேண்டும்.

இசை, ஒளி, ஒப்பனை, மேடைப் பொருள்கள் என்று பல கூறுகள் மேடையேற்றத்திற்கு உதவி புரிந்தாலும், மனித அவயவங்களும் மேடையுமே அதி அத்தியாவசியமானவையும் மிகப் பழமையானவையும் ஆகும். இவற்றை மட்டுமே கொண்டு ஒரு வலுவான மேடையேற்றம் சாத்தியமாகும்.

நாடகாசிரியன் பல வார்த்தைகளால் விளக்க முடியாத பல விஷயங்களை மேடையில் பாத்திரங்கள் நிற்கும் இடங்களையும் கோணங்களையும் கொண்டு எளிதில் விளங்க வைத்து விடலாம். மேடையில் நடிகர்கள் நிகழ்த்துகிற படிவங்கள், கோலங்கள், சலனங்கள், சைகைகள், மேடைச் செயல்கள் தான் மேடை மொழியாகும். இது அர்த்தமுள்ளவகையில் வலுவாக கையாளப்பட வேண்டும்.

நடிகன் ஒரு பேச்சாளன் போல நின்று ஒலிவாங்கிகளுக்கிடையில் துள்ளல் நடையிட்டு வசனங்களை ஒலிவாங்கிக்கு உமிழ்ந்து விட்டு "போஸ்" கொடுப்பதும், தான் மறந்த வசனத்தை ‘கொப்பி’ பார்ப்பவரிடம் கேட்பதற்காக மேடையோரம் செல்வதும் மிகக் கேவலம். மிக மிகக் கேவலமல்லவா?

மேடையின் பரப்பு முழுவதையும் உயரம் உட்பட இயங்கிக் கொண்டிருக்கும் மேடைச் சித்திரங்களால், பார்வைப்படிவங்களால் நாடகாசிரியனின் செய்திக்கு வலுவூட்டக்கூடிய வகையில் நிகழ்த்திக் காட்டுவது தான் நாடகம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.