- அவ்வப்போது பதிவுகள் இணைய இதழில் முகநூலில் பதிவு செய்யப்படும் சிறப்பான பதிவுகள் மீள்பிரசுரம் செய்யப்படும். இது அவ்வகையான  பதிவுகளிலொன்று. எழுத்தாளரும், புகைப்படக்கலைஞரும், கடலியற் துறையில் ஆழ்ந்த  அறிவும் மிக்க தயமந்தி சைமன் அவர்களைத் தமிழ்க் கலை, இலக்கிய உலகு நன்கு அறியும். அவர் முகநூலில் அண்மைக்காலமாகப் பதிவு செய்து வரும் கடலட்டை பற்றிய பதிவுகளில் இப்பதிவும் ஒன்று. - பதிவுகள்.காம் -


"......... ஏனெண்டால், இந்தத் தொழில் எங்களுடயவர்களுக்குத் தெரியாத ஒரு தொழில்...."  -அங்கஜன் இராமநாதன் , பா.உ. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி.-

சீனர்களை வரவேற்க நீங்கள் எந்தக் காரணங்களைச் சொல்லிக் கொண்டாலும் ஏதோ..... போனால் போகட்டுமென மனதை ஆற்றுப் படுத்தலாம். இப்படியொரு காரணத்தை அங்கஜன் சொல்வதென்பது மிகமிகக் கேலித்தனமாக இருக்கிறது.  "கைக்கெட்டிய கூலிக்காக கடப்பெட்டிய விடுப்பை விதைப்பதுபோல்"  குத்துமதிப்பில் கருத்துச் சொல்லப்படாது. இது ஒரு சரியான தலைமைத்துவப் பண்புமல்ல. எல்லாத் தரப்பாரின் கரிசனையும் இப்போ கொஞ்சக் காலமாக இலங்கைக் கடல்மீதும், கடல் வளங்கள் மீதும், கடற்சூழல் மீதும் மையங் கொண்டிருக்கின்றது. இந்தப் பெரும் பேறுபெற்ற காலமானது இலங்கை வரலாற்றின் பக்கங்களில் பிளாட்டினத்தில் பொறித்து பவுத்திரப்படுத்தி வைக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதேவேளை மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இப்படியான பொறுப்பு மிக்கவர்கள் ஊடகங்களுக்கு முன்னால் தோன்றிப் பிரசங்கிப்பதற்குமுன் உங்கள் பேசுபொருள் தொடர்பாக ஆய்ந்தறிந்து, சரியான தெளிவோடு பேச வேண்டும். நீங்கள் ஒரு இனக்குழுவின் தலைவர்கள். பல லட்சம் மக்களின் தலைச்சன் பிரதிநிதிகள். மிகப்பெரும் பொறுப்புமிக்க பணியைத் தாங்கியிருக்கிறீர்கள். ஒவ்வொரு வார்த்தைகளையும் பொறுப்போடும், கவனத்தோடும் பேசவேண்டும். காவோலையின்மேல் பெய்வதுபோல் சகட்டுமேனிக்க்கு வாயில் வந்ததையெல்லாம் குத்துமதிப்பில் பேச முடியாது. அறிவுசார் உலகமும், பகுத்தறியும் அடுத்த தலைமுறையும் உங்களை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றது.

இலங்கையில் கடலட்டைத் தொழில்
 
இரண்டாம் உலகமகா யுத்தம் முடிந்த காலத்திலேயே கடலட்டை எமக்கு அறிமுகமாயிற்று. நாச்சிக்குடா மம்முக் காக்கா என்று கரையோரச் சமூகங்களால் கொண்டாடப்படும் முக்கம்மது காக்கா. (இவர் "லத்தீப் மாஸ்ரர்" என்று 70களில் மிகவும் அறியப் பட்ட ஒரு முஸ்லிம் ஆசிரியரின் தந்தை என்று நினைக்கிறேன்) மற்றும் நாச்சிக்குடா ஹச்சுக்காக்கா, கறுத்த மரக்காயர், சூசை போன்றோர்களது முயற்சிகளால் கடலட்டைத் தொழில் எமது கரையோர மீனவச் சமூகங்களிடையே மிகப்பெரும் வருமானம் ஈட்டும் தொழிலாக நடைமுறையில் இருந்தது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் ஆட்சியை ஏற்ற காலப் பகுதியில் இந்தக் கடலட்டைத் தொழில் கூட்டுறவுச்சங்கங்கள் மூலமாக தொழிலாளர்களுக்கான சிறு கடன்களை வழங்கியும்,  கடலட்டைத் தொழிலுக்கான உபகரணங்களை மானிய விலையில் கொள்வனவு செய்ய ஆவன செய்தும் ஊக்குவித்தது. இந்தக் காலகட்டத்தில் கடலட்டைத் தொழில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. (இவர்களே பின்னைய காலங்களில் இதற்கு எதிராக செயற்பட்டு பின்னடையச் செய்தார்கள் என்பது இன்னொரு கதை).

இந்தக் கூட்டுறவு முறையின் மூலம் ஒவ்வெரு தொழிலாளர்களும் தனது உற்பத்தியைத் தமது பெயரிலேயே சிங்கப்பூர்ச் சந்தைக்கு கடற்தொழிற் சமாசத்தின் மூலம் நேரடியாக அனுப்பி வைத்தார்கள். அங்கு சந்தையில் இவர்களது உற்பத்திக்கான விற்பனைத் தொகையானது, ஏற்றுமதிச்செலவு, குறைந்தபட்ச சந்தைத்தரகு, மிகக்குறைந்த நிர்வாகக் கொமிஷன் என தள்ளுபடிபோக மீதி அந்தப் படிக்கே சிங்கப்பூர் பண மதிப்பான வெள்ளியாகவே இலங்கை மக்கள் வங்கிக்கு வந்து சேரும். ஒரு வாரத்துக்குள் இலங்கை ரூபாயாக ஒவ்வொரு தொழிலாளியின் கணக்கிலும் வைப்பிலிடப்படும். இவையெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்.....? எனது தந்தையார், மற்றும் உறவினர்களின் வழியில் நானும் எனது 16ஆவது வயதில் (1978) நான் தனியாகப் பிடித்த கடலட்டைகளை இந்தக் கூட்டுறவுச் சங்க மூலியமாக ஏற்றுமதி செய்து சிங்கப்பூர் வெள்ளியில் பணம் கிடைக்கப் பெற்றவன்தான். 1972ஆம் ஆண்டு காலப்பகுதியில் மறவன்புலவுச் சச்சிதானந்தன் கடலட்டை தொடர்பான R.O (ஆய்வு அதிகாரி, அல்லது றிசேர்ச் ஒபிசர்) என நியமிக்கப் பட்டார். சச்சி மாமாவின் ஆய்வுப் பிரகாரம் எமது கடலில் 35வகையான கடலட்டை இருக்கிறதென அறிக்கை சம்ர்ப்பித்தார். 1972-73. இந்தக் கடலட்டைகளில் சர்வாங்க ஆயுள் 8 மாத காலம் என்றும் சொன்னார்.

இல்லை, கடலட்டையின் ஆயுள் 18  மாதங்களில் இருந்து 24 மாத காலங்கள் வரை என எம் போன்ற சாதாரண தொழிலாளர்கள் ஆதாரங்களோடு நிறுவினோம். காரணம், மறவன் புலவு சச்சிதானந்தம் தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட கடலட்டை இனங்களானவை களக்கடல் அட்டைகளாகும். களக்கடலில் மட்டும் தங்கி வாழும் கடலட்டைகள் மழைக்காலத்தில் நன்நீர் தாக்கத்தால் விரைவில் உடல் அழுகி இறந்து விடக் கூடியன. ஆனால் ஆழ்கடல் அட்டையானது இந்த மழைநீர்த் தாக்கத்துக்கு உட்படாதவை. தவிர, மறவன்புலவு சச்சிதானந்தம் சொன்னதுபோல எமது கடற்பிரதேசத்தில் 35வகையான கடலட்டை இனங்கள் மட்டுமல்ல, 60இற்கும் மேலான இனங்கள் உண்டு. (சாட்டாமாறு, தாழை, கோரை போன்ற கடற்தாவரங்களில் ஒட்டுண்ணிகளாக இருக்கும் பல சிறு அட்டையினங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை) இப்போ இந்த ஆய்வுகளல்ல முக்கியம். பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் சொல்வதுபோல் எமது மக்களுக்கும் கடலட்டைக்கும் யாதொரு பாத்தியதையோ, தொடர்போ இல்லை என்பதை ஏற்க முடியாததற்கான விபரங்களை முன் வைப்பதே முக்கியம். இவை பற்றி எழுதுவதானால் பலநூறு பக்கங்களை எழுத முடியும். நாச்சிக்குடா ஹச்சுக்காக்காவுக்குச் சொந்தமான ஒரு காணியை அட்டைச் சங்கத்துக்கான கட்டிடம் அமைக்க 70களில் ஒதுக்கிக் கொடுத்தார். அது செயற்படுத்தப்படாமல் போய் விட்டது. அதுபற்றி அறியக் கிடைக்கும் தகவல்:

பின்னான காலங்களில்  மறைந்த இராசநாயகம் (கிளிநொச்சி அரசாங்க அதிபர்) நாச்சிக்குடாவில் குடியமர்ந்த மக்களுக்காக அந்தக் காணியை பொதுத் தேவைக்கென ஒதுக்கிக் கொடுத்தார். (இப்போ அதுதான் ஒரு வேளாங்கண்ணி ஆலயம் அமைக்க ஒதுக்கப் பட்டுள்ளதாக அறிகிறேன்) ஒன்றை மட்டும்தான் சொல்ல முடியும். கடல்வளங்கள் பற்றிப் பேசுவதற்கு முதல் குறைந்தப்ட்சம் அவை பற்றிய புரிதலை உங்களுக்கு ஏற்படுத்துங்கள். அந்த மக்களோடு சென்று உரையாடுங்கள். அங்கஜன் எங்காவது ஒரு கரையோரப் பிரதேசத்தில் சென்று மீனவ மக்களுடன் ஒருமணி நேரமாவது உரையாட வேண்டும். கடலட்டைத் தொழிலாளர்கள் தீவகத்திலிருந்து முத்துச்சிலாபம்வரை இருக்கிறார்கள். குறைந்தபட்சம் யாழ்ப்பாண கடற்தொழில் சமாசத்திடமாவது சென்று இந்த விடையங்கள் பற்றிக் கேட்டு அறிந்து வந்து பேசலாம்.  உண்மையாகவே நீங்கள் செய்திருக்க வேண்டியது இந்தக் கரையோர மக்கள் மத்தியிலிருந்து, எமது கடல், வளங்கள், தொழில்முறைகள் பற்றித் தெரிந்த நபர்களை உங்கள் தரப்பில் உள்வாங்கி, உங்கள் பிரதிநிதிகளாக அமர்த்தியிருக்க வேண்டும். அதுதான் விடாதே. சாதிய அரசியல் உங்கள் மண்டைக்குள் சாணியாகக் குவிந்துகிடக்கும்வரை இது நடவாது.


பிற்குறிப்பு:- 1.

இலங்கையில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அவர்களோடு ஒத்தாசையாக, சிப்பந்திகளாக இருந்த சீனர்கள் பிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்தபின்னால் இவர்களும் நாடு திரும்ப வேண்டியிருந்தது. இலங்கையில் குறிப்பாக மன்னார் யாழ்ப்பாணக் கடற்பகுதியில் பெருவாரியாகக் கிடைக்ககூடிய கடலட்டைகளை தங்கள் நாட்டுக்குப் பதனிட்டு ஏற்றுமதி செய்யும்பொருட்டு அணுகியவர்களில் சிலரின் பெயர்களே மேலே குறிப்பிட்டுள்ளேன். இதேபோல் மன்னார் பள்ளிமுனை மருசால், விடத்தல்தீவு ஜேம்ஸ், அந்திரேஸ், லுக்காஸ், மற்றும் வலைப்பாடு முடியப்பு, இரணைதீவு அமிர்தம், குருநகர் சிலுவைராசா, நாவாந்துறை ஞானப்பிரகாசம், நயினாதீவு நாகமுத்தர், புங்குடுதீவு சின்னத்துரை, மெலிஞ்சிமுனை பாக்கியநாதர், கெட்டில் கதிர்காமர் போன்று பல முக்கியமான நபர்கள்.

இந்தக் கடலட்டைகளை எப்படிப் பதனிடுவது என்பது போன்ற முறைகளை சீனர்களே எமது தொழிலாளர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். தவிரவும் அதனைப் பதனிடுவதற்கான பிரம்மாண்டமான சீனச்சட்டிகளையும் அனுப்பி வைத்தார்கள்.
ஆரம்பத்தில் களக்கடலில் மட்டும் செய்யப்பட்டுவந்த கடலட்டைத் தொழில் பின்நாட்களில் ஆழ்கடல் தொழிலாக மாற்றமடைந்தது. மன்னாரிலும், தீவகத்திலும் இருந்த பாரம்பரிய சங்கு முத்துக்குளித் தொழிலாளர்கள் இதனைப் பெருமெடுப்பில் மேற்கொண்டார்கள்.

அன்று கால் வைக்கும் களக்கடலெல்லாம் குவிந்து காணப்பட்ட இந்த அட்டை இனங்கள் ஒட்டுமொத்தமாக அழிந்து போனதற்கான காரணம் ட்ரோலர் தொழிலாகும். அதிலும் இந்திய இழுவைப் படகுகளின் ராட்சத இரும்புக் குண்டுகளாலும், கதவுகளாலும் இந்த அட்டை இனங்களே மொத்தமாக அழிந்து போயிற்று. இப்போ பண்ணை முறைகளில் அறிமுகப் படுத்தப்படுவது மரபணுமார்றுக் கடலட்டைகளாகும். அன்றும் கலடட்டைத் தொழிலைச் சொல்லிக் கொடுக்க சீனர்கள்தான் வந்தார்கள். ஆனால் அவர்கள் சொல்லிக்கொடுத்துவிட்டுப் போய் விட்டார்கள். இப்போ அவர்களே வந்து தொழில் செய்ய அனுமதிப்பெதென்பதும் ஒருவகை ஆக்கிரமிப்புத்தான் என்பது எனது அபிப்பிராயம். தற்போது பூநகரி கவுதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அவர்களே அனுமதி பெற்று அமைத்து அறுவடை செய்வதென்பது ஏற்புடையதல்ல. அவற்றை எமது மக்களே மேற்கொள்ளட்டும் என்பது எனது கருத்து. தவிரவும், கடலட்டை வளர்ப்புக்கான பண்ணைகளை அமைக்கும் கடற்பகுதியை மிகவும் நிதானமாகத் தேர்வு செய்ய வேண்டும்.

இதில் மிக முக்கியமாக அவதானிக்க வேண்டிய இரண்டு விடயங்கள்:

1. இயற்கையாகவே மேய்ச்சலுக்காகவும், இருப்புக்காகவும், விருத்திக்காகவும் மீன்கள் வந்து நடமாடும் பகுதிகள் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.
2. உள்ளூர்த் தொழிலாளர்களுக்கு இடையூறு இல்லாத இடங்களாகத் தேர்வு செய்ய வேண்டும்.

பிற்குறிப்பு:- 2.

கடலுக்கு மாபாதகம் செய்யாமல்  சரியான இடங்களை தேர்ந்தெடுங்கள்.  இதுதான், இதைத்தான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்;- கடலட்டை வளர்ப்புக்கான பண்ணைகளை அமைக்கும் கடற்பகுதியை மிகவும் நிதானமாகத் தேர்வு செய்ய வேண்டும். இதில் மிக முக்கியமாக அவதானிக்க வேண்டிய இரண்டு விடயங்கள்:

1. இயற்கையாகவே மேய்ச்சலுக்காகவும், இருப்புக்காகவும், விருத்திக்காகவும் மீன்கள் வந்து நடமாடும் பகுதிகள் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.
2. உள்ளூர்த் தொழிலாளர்களுக்கு இடையூறு இல்லாத இடங்களாகத் தேர்வு செய்ய வேண்டும்.// என்று.

ஆனால், இந்தப் பண்ணைகள் அமைக்கப் பட்டுள்ள இடங்களெல்லாம் இயற்கையான கடல்வள அபிவிருத்திக்கு மிகவும் பாதகமானைவைகளாகும். பொருளாதார ரீதியாக மொத்த அறுவடை கிடைக்கிறது என்பதற்காக தாய்மைக் கருவறையை அறுக்க முடியாது. கடலின் உணவுச்சங்கிலியை சிதைப்பதனூடாக நீண்டகால வளங்களை இல்லாதொழிப்பது

இந்த இடங்கள் மிகவும் வளமான வாட்டாளை நிலங்களாகும். நிலமீன்களான ஓரா, ஒட்டி, திரளி, கெடுத்தல் முதற்கொண்டு, மேல்மீன்களான பாலை, கயல், சிறையா, பாரை, முரல் போன்ற இனங்களும் தமது உணவு வேட்டைக்காக வந்துபோகும் திடல்கள். தவிரவும் தாழம் இறால் இனங்களின் உற்பத்தி இடங்களும் இவைகள்தான். கடல்தாவரங்களான இந்தத் தாழை, அறுகு, கோரை போன்றவற்றில் இருக்கும் பூச்சிபுழுக்களை வேட்டையாடவே மீன்கள் இந்தத் தாழங்கடலுக்குள் வந்துபோகும். இதனால் இரண்டு நன்மைகள் நிகழ்கின்றன. கடற்தாவரங்களை அரிக்கும் பூச்சிபுழுக்களை மீன்கள் வேட்டையாடுவதால், தாவரங்கள் தப்பித்துக் கொள்வதோடு அதிக விளைச்சலையும் காணும். இந்தத் தாழங்காடுகள் வளம்செழித்து இருப்பதால் மீன்வளங்களின் வருகையும் பெருக்கமும் அதிகமாகும். மேற்படி அட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் இருக்கும் கடற்தாவரங்களான தாழைகளை அவதானித்துப் பாருங்கள். பலகாலம் பாவனையற்றுப் பாசிப்படை சூழ்ந்த கிணறுபோல், செழும்பும் சேறும் பிடித்து, முனைகள் அழுகிச் செத்துப்போகும் நிலையில் நிற்கின்றன. காரணம் இந்தத் தாவர்களை உண்ணும் பூச்சி புழுக்களை வேட்டையாடும் மீனினங்கள் இந்தப் பிரதேசத்துக்குள் வரமுடியாதப்டி பட்டிவேலிகள் அடைத்து நிற்கின்றன. பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் இந்த அட்டைப் பண்ணைகளுக்காக நாட்டின் பொதுவளங்களான இத்தனை பெரிய பிரதேசங்களைத் தனியார்களுக்கு நீண்டகால (இலவச) குத்தகைக்குக் கொடுப்பதென்பது இம்மியளவும் முறையானதல்ல. அப்படி, கடலட்டைப் பண்ணைகள் அமைப்பதால் மிகப்பெரும் பொருளாதார வருவாய் கிடைக்கிறது, இதனால் ஏழை மீனவர்கள், தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது என்ற கருத்தையும் மறுதலிப்பதற்கில்லை. அதற்கான சரியான இடங்களைத் தேர்வு செய்யுங்கள் என்பதுதான் எனது விநயமான வேண்டுகோள். சரியான இடங்கள் எது?


களக்கடல் அல்லாமால், இறக்கமான ஆழ்பகுதிகளில் அமைந்துள்ள மணற்தரைகளே இதற்கு சிறந்த இடம். (இந்த இடங்கள்கூட, மண்புழுக்களை உழுது உண்ணும் கிளக்கன், நகரை போன்ற மீனினங்களின் மேய்ச்சல்த் தறைகள்தான். ஆனால் இந்த இனங்கள் இப்போ எமது கடலில் முன்னையப்போல் பெருவாரியாக இல்லை.) பெருமணற் பகுதிகளைத் தேர்வு செய்து அட்டைப் பண்ணைகளை அமைப்பதால் ஏற்படும் சிறப்புகளில் சில;- சேற்று நிலங்களில் வளர்க்கப்படும் அட்டைகள் உணவாக சேற்றைத்தான் உண்ணுகின்றன. இந்தவகையில் வளர்க்கப்படும் அட்டைகள் வைரம் குறைந்ததாகவும், நிறை குறைந்ததாகவும் காணப்படும். அதேவேளை பெருமணற் பகுதிகளில் வளற்கப்படும் அட்டைகள் அந்த மணலை உண்பதால் அதிக வைரமாகவும், நிறை கூடியதாகவும் காணப்படும். இந்த விளக்கத்தைப் பாரம்பரிய அட்டைகுளிகாரரை அணுகிக் கேட்டால் சொல்வார்கள். எமது கடற்பிரதேசங்களில் இப்படியான வேறுபட்ட நிலங்களில் இயற்கையாக விளைந்த அட்டைகளிலிருந்து இவற்றை அனுபவரீதியாகக் கண்டவர்கள் எங்களது தொழிலாளர்கள். ஒரு பதனிடப்பட்ட அட்டையைத் தூக்கிப் பார்த்தே சொல்வார்கள் இது எந்தக் கடலில் பிடிக்கப்பட்ட அட்டை என்று. வடக்கில் கடலட்டை வளர்ப்பதற்காகப் பண்ணைகள் அமைக்ககூடிய இடங்களென NARA அமைப்பு குறித்துக் கொடுத்த இடங்களையும் சில வருடங்களுக்குமுன் எனக்குப் பார்க்கக் கிடைத்தது. மேலே நான் குறிப்பிட்ட எந்தவித தெளிவும் அற்றவர்களாக அந்த இடங்களைச் சிபார்சு செய்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட அமைச்சும், நிர்வாகமும், அதிகாரிகளும், நிறுவனங்களும் இனிமேலாவது இந்தப் பண்ணைகளுக்கான சரியான இடங்களைத் தெர்வு செய்து, எமது பாரம்பரிய, நீண்டகாலப் பயன்பாடுடைய வளங்களைக் 'காமேந்து' பண்ணுங்கள்.