- கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் தனது முகநூற் பதிவாக 'வாழிய சென்னை' என்னுமொரு கவிதையினைப் பதிவு செய்துள்ளார். சிறப்பான கவிதை. தற்போதைய கொரோனாக் கால ஊரடங்கால் முடங்கிக்கிடக்கும் சென்னையில் வாழும் கவிஞரின் உணர்வுகளின் வெளிப்பாடு. அண்மைக்காலக் கவிதைகளில் மீண்டும் மீண்டும் என்னை வாசிக்கத்தூண்டிய கவிதை. ஜெயபாலனின் கவிதை மொழி என்னை மிகவும் கவர்ந்த மொழி. கவிதையை முழுமையாகக் கீழே தந்துள்ளேன்.. வாசித்துப் பாருங்கள். - வ.ந.கி -
 
வாழிய சென்னை!
 
- வ.ஐ.ச.ஜெயபாலன் -
 
மீண்டும் ஊரடங்கு.
கொலம்பசுகள் கிராமங்களைத் தேடி
கப்பற் பாய்களை விரித்தனர்.
ஏனையோர் கான்கிரீட் பொந்துகளுள்.
கொரோனாவையும் காவலரையும் தவிர
வீதிகளில் யாருமில்லை என்கிறார்கள்.
மாலைக் கருக்கலில் நிழற்சாலைகளூடு
பெசன்ற்நகரை சுற்றுகிற நான்கூட
மொட்டைமாடியில் எட்டுப் போட்டபடி.
ஜப்பான் குண்டுவீச்சில்கூட
சென்னை இப்படி முடங்கியதில்லையே.
*
கீழே தெருவில்
வெண் பூஞ்சிரிப்பை இழக்கிற வேம்பு
பிஞ்சுகளால் நிறைகிற அழகை
பறவைகள் பார்த்துச் செல்கின்றன.
சாலை ஓர மரங்களின்மீது
குச்சியோடு காகங்கள் பறக்க
கிளர்ச்சியடைகிற ஆண் குயில்
”கூடு கட்டி முடியப்போகுது வாடியென
கூவி கூவி தன் துணையை அழைக்குது.
*
”நீ வாயால கூடுகட்டுவாய்?” என
சிடு சிடுத்த பெட்டைக் குயிலை
யாசிக்கும் ஆண் குயிலின் பாடல்
மொட்டை மாடியில் நிற்கிற
என் நெஞ்சையே தைக்குதே.
*
வாழ்வு கடல் போன்ற ஓயாத புத்துயிர்ப்பு.
இது ஆறு குளங்களை தின்கிற கோடைதான்
எனினும் கடல் ஒருபோதும் அஞ்சுவதில்லை.
ஆயிரம் காட்டுத் தீகளும் அணைய
சாம்பரில் பூத்துக் குலுங்கும் புல்வெளிபோன்ற
இந்த மாநகரமும் வலியது.
அது ஒருபோதும் புலம்புவதில்லை.
*
”என் காற்றும் மண்ணும தூய்மையாகிவிட்டது
சிட்டுக் குருவிகளே மீண்டும் வருங்கள்” என
அந்த மாநகரம் பாடுகிறது.