- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். -  பதிவுகள்.காம் -


எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனிபாவின் முகநூற் குறிப்பொன்று! - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனிபாவின் முகநூற் பதிவொன்று என் மனத்தைக்  கவர்ந்தது. 'நானும் எழுத வந்தேன்' என்பது தலைப்பு.  எழுத்தாளர் திக்குவல்லை கமால் வில்லிதேவசிகாமணி விருது  பற்றி ஹனிபாவுக்குக் குறிப்பிட்டு அவரது 'மக்கத்துச் சால்வை' நூலை அவ்விருதுக்காக அனுப்பும்படி கூறுகின்றார்.

விண்ணப்பிப்பதற்குரிய காலம் குறுகியதாகவிருந்தது. ஹனிபா அவர்கள் 'மக்கத்துச் சால்வை'யின் ஐந்து பிரதிகளை எடுத்துக்கொண்டு தபால் நிலையம் செல்கின்றார். அனுப்பச் செலவு ரூபா 350 என்கின்றார்கள்.  அது அன்றுள்ள வாழ்க்கைச் செலவில் அதிகமான தொகை.  அவரிடமிருந்ததோ ரூபா 200. விருதும் வேண்டாம். எதுவும் வேண்டாம் என்னும் மனநிலையில் ஹனிபா அவர்கள் திரும்ப முற்படுகையில் 'போஸ்ட் மாஸ்டர்'  கே.எல்.எம். புகாரி  அவர்கள் மீதிப்பணத்தைத் தாமே போட்டு புத்தகங்களை அனுப்பி வைக்கின்றார். அந்நூலுக்கு விருதும் கிடைக்கின்றது.

அவ்விருது அனுபவத்தையும் ஹனிபா அவர்கள் மேற்படி முகநூற் பதிவில் விபரிக்கின்றார். அவ்விருதில் பேசிய  நடுவர்களில் ஒருவரான எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதையும் ஹனிபா அவர்கள் பதிவு செய்திருக்கின்றார்:

"இலங்கையிலிருந்து வந்த மக்கத்துச் சால்வை சிறுகதைத் தொகுதியிலுள்ள கதைகள், அதன் தமிழ் எங்களுக்குப் புரியவில்லை என்று என்னுடைய சக நடுவர் நண்பர்கள் சொன்னார்கள், நான் சொன்னேன்: இலங்கை வாசகர்கள் சென்னைத் தமிழைப் படிக்கிறார்கள், கோவில்பட்டித்தமிழை,கோயம்புத்தூர் தமிழைப் படிக்கிறார்கள்… என்று பல பெயர்களைச் சொல்லி இந்தத் தமிழையெல்லாம் அவர்கள் உள்வாங்கி இரசிக்கிறார்கள். அப்படியென்றால் நீங்கள் ஏன் ஹனிபாவின் தமிழ் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்கிறீர்கள். அந்தக் கதை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு எழுத்தும்இலக்கியமும் புரியவில்லைஎன்றுதான் அர்த்தம் என்று'"

ராஜம் கிருஷ்ணன் அற்புதமான மனுஷி. எழுத்தாளர்.  இலங்கைத் தமிழ் எழுத்து பற்றி அன்று அவ்வப்போது இளக்காரமாகக்  கருத்துகள் தெரிவித்த தமிழக எழுத்தாளர்களுக்கு அவர் கொடுத்த அற்புதமான சாட்டையடியாக அமைந்திருக்கும் கூற்று அது.

இப்பதிவு மேலும் சில விடயங்களையும் பதிவு செய்கின்றது. நல்ல உள்ளங்களின் காலம் அறிந்து செய்த உதவி பற்றியும் பதிவு குறிப்பிடுகின்றது. எழுத்தாளர் திக்குவல்லை கமால், தபால் அதிபர் கே.எல்.எம். புகாரி   ஆகியோரின் காலமறிந்து செய்த உதவி தன்னமலமற்றது. மதிப்புக்குரியது.

எவ்விதம் இலாபமும் வைக்காமல் சொந்தச் செலவில் ஆயிரம் பிரதிகள் அச்சடித்து அவற்றில் 900 பிரதிகளை இலவசமாகக் கொடுத்தது பற்றியும் ஹனீபா அவர்கள் மேற்படி பதிவில் பதிவு செய்திருக்கின்றார். துயரம் மிகுந்த உண்மை.


முகநூற் குறிப்புகள் : நானும் எழுத வந்தேன்..  - எஸ்.எல்.எம்.ஹனிபா -

எனது 15 வயதில் பத்திரிகைகளுக்கு கடிதங்களும் தினகரன்புதன் மலரில் சில கவிதைகளும் எழுதினேன். அதனைத் தொடர்ந்துஎனது18 வயதளவில் ராதாவில் ‘நெஞ்சின் நினைவினிலே’ என்ற எனது முதல் கதையை எழுதுகிறேன். அதன் பின்னர் சன்மார்க்கம் என்ற கதையை இன்ஸான் பத்திரிகைக்காக லத்தீப் அவர்களிடம் கொடுத்து அதுவும் பிரசுரமாகிறது. இன்னாட்களில் இளம்பிறை ரஹ்மான் எஸ்.பொ. அறிமுகமாகின்றார்கள். எனது கதை இளம்பிறையில் அப்படியே அன்றுப் பிறந்த மேனியாக எந்த வெட்டுக்குத்தும் இல்லாமல் பிரசுரமாகிறது. பின்னாளில் அன்புமணி மூலம் வீரகேசரி ராஜகோபால் அவரிடம் வேட்டை என்னும் கதையைக் கொடுக்கிறேன். படித்துவிட்டு இந்தக் கதையை அடுத்தடுத்த வாரம் நாங்கள் பிரசுரிப்போம் என்றார். அத்துடன் இலங்கையில் கிட்டத்தட்ட இருநூறுக்கு மேற்பட்ட சிறுகதை ஆசிரியர்கள் இருக்கிறார்கள். நான்கு வருடங்களுக்கு ஒரு கதையைத்தான் பிரசுரிக்கலாம் என்று சொல்லிவிட்டு, உனக்காக வருடத்தில் இரண்டு கதையைப் போடுகிறோம் என்று சொன்னார். நான் எழுதவில்லை.

எழுதத் தொடங்கிய இந்த ஐம்பது, ஐமபத்தைந்து வருடங்களுக்குள் நாற்பது, நாற்பத்தைந்து கதைகளை எழுதியிருக்கிறேன். அதிலும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் நான்கு, ஐந்து கதைகள்தான் தேறும். மக்கத்துச் சால்வை பலராலும் பெரிதும் விரும்பி படிக்கப்பட்டது. ஆனாலும்பத்து வருட இடைவெளியில் நான் எழுதிய 'கடுகு 'கதைதான் எனக்கு மிகவும் உவப்பானது.

என்னுடைய நாற்பதாவது வயதில்தான் ஒரு புத்தகத்தைப் போடுவோம் என்று சீட்டுக் கட்டி, 39000 ரூபாயில் 1000 பிரதிகளை கத்தோலிக்க அச்சகத்தில் அச்சிட்டேன். புத்தகத்தின் கொள்விலை 39 ரூபாய். நான் போட்ட விலையோ 40 ரூபாய். எனது பிரதேசமக்கள்எல்லோரும்.. வாங்கிப் படிக்கட்டும் ; நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதைப் பார்க்கட்டும் என்ற ஒரு ஆசையில் இலாபமில்லாமல் போட்டுவிட்டேன். , வசந்தம் புத்தகசாலை,ஹாதி புத்தகசாலைகளுக்கு 25 பிரதிகளளவில் கொடுத்திருப்பேன். அதில்ஹாதியும் வசந்தமும் எனக்கு காசு தந்தார்கள். மற்ற கணக்கு வழக்கு எனக்குத் தெரியவில்லை. 900 புத்தகங்களளவில் நான் இலவசமாகவே கொடுத்திருக்கிறேன். ஒருநாள் இதை இளங்கீரனிடம் சொன்னபோது நீ என்ன பாரி வள்ளலா? ஏன் அப்படிச் செய்தாய்? என்று என்னிடம் சினந்தார்.

இடையில் ஒரு நாள் திக்வல்லை கமாலிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வருகிறது : 'அருமை நண்பா, சுபமங்களாவும் லில்லிதேவசிகாமணியி னரும் சேர்ந்து வருடந்தோறும் சிறுகதைகளுக்குப் பரிசு சொடுக்கிறார்கள். அயல் தேசத்துக்கும் கொடுக்கிறார்கள். உங்களது மக்கத்துச் சால்வையை அவர்களுக்கு அனுப்புங்கள்… கட்டாயம் அதற்கு பரிசு கிடைக்கும்  என்கிறார்.புத்தகங்கள் அனுப்ப வேண்டிய கடைசித்தேதிக்குஇரண்டு வாரங்கள்தான் இருந்தன. நான் ஐந்து புத்தகங்களைப் பார்சல் செய்துகொண்டு ஓட்டமாவடி தபால் நிலையத்துக்குப் போகிறேன். அங்கே கே.எல்.எம். புகாரி என்பவர் போஸ்ட் மாஸ்டராக இருக்கிறார். புத்தகங்களை நிறுத்துப் பார்க்கச் சொன்னால் 340 ரூபா வேண்டுமென்றார். நான் கொண்டுவந்த பணமோ 200 ரூபாய். அப்போது 200 ரூபாய்க்கு 1 கிலோ மாட்டிறைச்சி வாங்லாம். எனக்கு வேண்டாம்… விருதும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் புத்தகத்தைத் தா என்று கேட்டேன். இல்லை நான் அனுப்புகிறேன் என்று மீதிப் பணத்தைப் போட்டு அவர் அனுப்பிவிட்டார். அனுப்பிச் சரியாக இரண்டு வாரங்களின் பிறகு கடிதம் வருகிறது. 'இந்தப் போர் காலத்தில் கதைகள் எழுதுவதும் புத்தகமாக்குவதும் அதைத் தபாலில் எங்களுக்கு அனுப்புவதும் பெரும் காரியம்தான். வரும் மே மாதம் 3ம் வாரம் விழா அன்னபூர்ணா அரங்கில் இடம்பெறும்.'

   - லில்லிதேவசிகாமணி விருது பெறும் எஸ்.எல்.எம்.ஹனீபா -

அந்தக் கடிதம் எனக்குஒரு சேதிசொன்னதுஎனக்கும் பரிசில் கிடைக்கும். பல்லிச்சாத்திரம் பலிதமானது.நான் பாஸ்போட் எடுப்பதற்கு ஆயத்தமானேன். எனது கதைக்கு விருது கிடைத்தது. என்னுடைய போக்குவரத்துச் செலவாக ரூபா 15000 தந்தார். மேடையில் 10000 தந்தார். எனக்கு ஒரு சால்வை போர்த்தினார்கள்.

            - எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் -

மேடையிலிருந்த ராஜம் கிருஷ்ணன், (அவர் காலமாகிவிட்டார்),  பேசும்போது,

'இலங்கையிலிருந்து வந்த மக்கத்துச் சால்வை சிறுகதைத் தொகுதியிலுள்ள கதைகள், அதன் தமிழ் எங்களுக்குப் புரியவில்லை என்று என்னுடைய சக நடுவர் நண்பர்கள் சொன்னார்கள், நான் சொன்னேன்: இலங்கை வாசகர்கள் சென்னைத் தமிழைப் படிக்கிறார்கள், கோவில்பட்டித்தமிழை,கோயம்புத்தூர் தமிழைப் படிக்கிறார்கள்… என்று பல பெயர்களைச் சொல்லி இந்தத் தமிழையெல்லாம் அவர்கள் உள்வாங்கி இரசிக்கிறார்கள். அப்படியென்றால் நீங்கள் ஏன் ஹனிபாவின் தமிழ் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்கிறீர்கள். அந்தக் கதை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு எழுத்தும்இலக்கியமும்புரியவில்லைஎன்றுதான் அர்த்தம் என்று'

சொன்னார். கிடைத்த விருதுகளை விட மேடையில் அவரது உரைதான் எனக்கு பெரிய விருதாக இருந்தது.

- எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் முகநூல் பக்கத்திலிருந்து..-