- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். -  பதிவுகள்.காம் -


ஈழத்து இலக்கிய பரப்பில் நின்று வென்று வாழ்வது எப்போதும் சாத்தியமில்லை என்பதில் மாற்று கருத்தில்லாதவன் நான். எவ்வளவு எழுதியும் இயங்கியும் நின்றாலும் ஒரு எழுத்தை செயலை கொண்டாடவும், சமூகத்திடமும் அடுத்த தலைமுறையிடமும் கொண்டோடவும் மனமில்லாத மானிடர் வாழ்கின்ற இலக்கிய உலகம் ஈழத்துக்கு உரிய தனிக்குணம்.

இலக்கியத்தையும் அதனுடனான செயற்பாடுகளையும் கோட்பாட்டு குண்டுச் சட்டிகளுக்குள்ளும் மெட்டுக்குடி மனோபாவத்துடனும் ஒதுக்கி வைக்கும் ஒரு கூட்டம் இருக்கும் வரை ஈழத்து இலக்கியம் என்றும் உச்சமாக பேசப்படப் போவதில்லை. இத்தகைய அபத்தங்களையெல்லாம் கண்டு கொள்ளாமல் பேசினால் என்ன? கொண்டாடினால் என்ன? என்ற முடிவோடுதான் இன்று இளையவரும் மூத்தவரும் எழுதியும் இயங்கியும் வருகிறார்கள் என்பது கசப்பான உண்மை.

திட்டமிட்ட இருட்டடிப்புகளும் ஒதுக்குதல்களும் மலிந்தும் பதிந்தும் போன இங்கு அவற்றையெல்லாம் சட்டை செய்யாமல் தன் வழியில் தனி வழியில் ஓடிக்கொண்டே இருக்கிறார் பரணீதரன் என்ற இலக்கிய மானுடன்.  முன்கோபி; மரியாதை தெரியாதவன் என்றெல்லாம் அவரை பற்றி என்னிடமும் அவரின் நண்பர்களிடமும் கோள் சொன்னவர்கள் உளர்;அதை அவரும் அறிவார். ஆனால் அவரை முன்கோபியாகவும் மரியாதை இன்றி பேசவும் வைத்தவர்கள் எம்மைப்போன்றவர்கள். அவரின் கருணையால் நூல்களையும் வெளியீடுகளையும் கண்டவர்கள்; இலவசமாக நூல்களையும் இதழ்களையும் பெற்றவர்கள் மனச்சாட்சி அற்று போகும் போது அவர் தன்னிலை இழக்கிறார். அவரும் மனிதன் தானே?

சிறுகதை,கட்டுரை எழுத்தாளராக பல நூல்களை எழுதியுள்ள பரணிதரன் ஜீவநதி,கடல்,நடி,நாங்கள் முதலான மாத இதழ்களை இடையறாது தந்து கொண்டிருக்கிறார். 2022வரை 186 பல்சுவை இதழ்களையும், நாவல், ஹைக்கூ, சிற்றிதழ், என்பற்றுக்கான சிறப்பிதழ்கள், இவற்றுடன் ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமைகள் (சீமான் பத்தினாதன், திக்குவல்லை கமால், மண்டூர் அசோகா, தாமரைச் செல்வி, குந்தவை, சோப, கோகிலா மகேந்திரன், குப்பிளான் சண்முகம், கலாமணி உள்ளிட்ட) பலரைப்பற்றியதுமான சிறப்பிதழ்களையும் கொண்டு வந்திருக்கிறார்.

ஈழத்தில் தமிழ் பதிப்புத் துறை குமரன், பூபாலசிங்கம், லங்கா என்ற பெரிய கைகளில் இருந்த வரலாற்றை மாற்றி ஜீவநதி என்ற தனிப்பெயரை நிலைநாட்டி இருக்கிறார் பரணிதரன். இந்த ஆண்டு வரை 270 மேற்பட்ட தலைப்புகளில் நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டுள்ளதுடன் தேசிய, மாகாண விருதுகளையும் அவரின் பதிப்புகள் வென்றுள்ளன. சென்ற ஆண்டு தனி ஒருவனாக நின்று, வடமராட்சியில் ஒரு மாபெரும் புத்தக திருவிழா ஒன்றை செய்து முடித்தவர்.

நான் மேலே சொன்ன இருட்டடிப்புகள் ஒதுக்கல்கள் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்தவர் அவர். ஆனாலும் தான் கொண்ட கொள்கையில் நின்று வழுவாமல்; தன் பணி என்ன? தான் அடையவேண்டிய இடம் எது? என்று அறிந்து தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் நதி பரணி. அவரின் எழுத்துகள், செயற்பாடுகள் தொடர வேண்டும். என்றும் நலமுடன் வாழுங்கள் அண்ணே!