படித்தவர்கள் பலர் பிற நாடுகளில் வாழ்ந்து , தம் பொருள் வளம் பெருக்குவதையே நோக்காகக்கொண்டு வாழ்கையில், இவர் தான் கற்றதை, அறிந்ததைத் தன் மண்ணுக்கு வழங்குவதற்காக வந்தார். தன் மண்ணின் அனர்த்தங்களை எதிர்கொண்டு , சமூக, அரசியல் ரீதியிலும் அவற்றைக் களையத் தன் பங்களிப்பினைச் செய்தார். அதற்கு இவருக்கு எம் மண்  கொடுத்த பரிசு? தூக்கிப் போற்றிப் பாதுகாத்திருக்க வேண்டிய மண் புழுதியிலே போட்டு மிதித்துச் சீரழித்தது. எம் மண்ணின் வரலாற்றின் அவமானம் இம்மண்ணின் மகளின் மடிவு! முடிவு! தானிழைத்த வரலாற்றுத் தவறினை, இவரை நினைவில் வைப்பதன் மூலம் ஓரளவு தீர்த்துக்கொள்கிறது. எந்தக் கல்வி நிலையத்துக்காக இவர் தன் வாழ்வையே அர்ப்பணித்தாரோ அந்தக் கல்வி நிலையம் இதுவரை இவரை நினைவு கூர்ந்திட என்ன செய்தது? ஒரு சிலை கூட வைத்ததா? நினைவு  கூர்ந்ததா? மிகவும் வெட்கக்கேடான விடயமென்னவென்றால் .. இவரிடம் கல்வி கற்றவர்களில் சிலரே இவரின் முடிவுக்கும் காரணமாக இருந்தார்களென்ற தகவல்கள்தாம்.

என் வாழ்க்கையில் ஒரு முறையாவது இவரை நான் சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.  அதனை  நினைவினில் பாதுகாத்து வைத்திருக்கின்றேன். அப்பொழுது நான் நினைக்கவில்லை அதுவே இவரைச் சந்திக்கும் இறுதிச் சந்தர்ப்பமாக இருக்கப்போகுதென்பதை.  இப்பொழுதும் என் நினைவில் அச்சந்தர்ப்பம் நேற்றுத்தான் நடந்ததுபோல் நினைவிலுள்ளது.

எண்பத்திரண்டு என்று நினைக்கின்றேன். நண்பருடன் கைதடியில்  இயங்கிக்கொண்டிருந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிக்கு மொறட்டுவைத் தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையுடன் சென்றபோது மாணவர்களுடன் உடலொன்றை அறுத்துக்கூறுபோட்டவாறு பாடம் நடத்திக்கொண்டிருந்த இவரைச் சந்தித்தேன். நுட்பத்தை அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு வழங்க இன்முகத்துடன் வரவேற்ற இவரது தோற்றம் இன்னும் நினைவில் பசுமையாக நிற்கிறது.

இவரை நினைவு கூர்வதுடன் எம் வரலாற்றில் இவருக்கேற்பட்டது போன்ற சம்பவங்கள் இனியொருபோதும் நடைபெறாதவாறு என்று சங்கற்பம் செய்துகொள்வோம்.  

* ராஜினி திரணகமவின் பிறந்தநாள் பெப்ருவரி 23. நினைவு கூர்வோம்! என்றும் நினைவில் வைப்போம்!