ஒரு ஐரோப்பிய தமிழ் வானொலியில் இருந்து கொரனா வைரஸ் தொற்றுத் தொடர்பாகவும் தடுப்பு முறைகள் தொடர்பாகவும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்குமாறு அழைப்பு வந்தது. ஐரோப்பா வாழ் தமிழர்களிடையே கொரனா வைரஸ் விழிப்புணர்வை உருவாக்குவது உயிர்களைக் காக்கும் என நம்பி நானும் கலந்து கொண்டு நிரூபிக்கப் பட்ட விஞ்ஞான மருத்துவத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். சில வாரங்களின் பின்னர் தமிழகத்தில் சின்னக் கலைவாணர் நடிகர் விவேக் மாரடைப்பினால் காலமானார். தடுப்பூசியை முதல் நாள் போட்டுக் கொண்டதால் விவேக் காலமானார் என சமூக வலை ஊடகங்களில் "இணையவெளி டாக்டர்கள்" நோய் நிர்ணயம் செய்ய ஆரம்பித்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் நானும் அதே ஐரோப்பிய வானொலியை செவி மடுத்த போது கோவிட் தடுப்பூசிகள் பற்றி விஞ்ஞான, மருத்துவத் தரவுகளுக்கு மாறான கற்பனைகளை ஒலி பரப்பிக் கொண்டிருந்தார்கள். இப்படியான ஒரு "சிறு பிள்ளை வேளாண்மை" நிகழ்ச்சியில் என் பெயரை இணைத்துக் கொண்டமைக்காக என்னை நானே நொந்து கொண்டு இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என யோசித்த படி இதை எழுதுகிறேன்.

எங்கள் தமிழ் ஊடகப் பரப்பில் - அது யூ ரியூப் சனல்களாகவோ அல்லது சில வானொலிகளாகவோ இருப்பினும்- அறிவியலை விட அறிவியல் போல தோற்றமளிக்கும் "அவியல்கள்" மேலோங்கியிருப்பதாக நான் கருதுகிறேன். இதற்கான எண்ணிக்கை ரீதியான (quantitative) தரவு என்னிடம் இல்லாவிட்டாலும், அனுபவ ரீதியான (empirical) ஆதாரங்கள் பல என்னிடம் உண்டு. இந்த போலி அறிவியல் கருத்துகளின் மேலாண்மைக்கு காரணங்கள் எவை, தரவுகளின் அடிப்படையிலான அறிவியலை எப்படி மேலோங்க வைப்பது என்று சுருக்கமாகப் பகிர்வதே இந்தக இரு பாகத் தொடர் கட்டுரையின் நோக்கம்.

காரணங்கள் எவை?

"ஜனநாயகமயப் படுத்தப் பட்ட அறிவு" என்பது 18 ஆம் நூற்றாண்டில் அச்சு ஊடகங்கள் பல்கிப் பெருக ஆரம்பித்தமையோடு உருவான ஒரு கருப்பொருள் - மிக நல்ல விடயம். அச்சில் வெளிவந்த நூல்களினால் அறிவு குறுகிய நிபுணர் வட்டங்களினுள் அடங்கி விடாமல், ஆர்வம் கொண்ட நிபுணர்கள் அல்லாத பொது மக்களிடமும் பரவ இந்த ஜனநாயகமயமான அறிவியக்கம் காரணமானது. தொழில் நுட்பப் புரட்சியென்பது கிட்டத் தட்ட இந்த அறிவுப் பரவலின் விளைவே. பிரபல கண்டு பிடிப்பாளர் தோமஸ் எடிசனின் நியூஜேர்சி ஆய்வு கூடத்தைத் தரிசித்தோர், கூரை முட்டும் புத்தக அலுமாரிகளில் சீராக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் ஆயிரக் கணக்கான கரிய நிற நூல்களைக் கண்டிருப்பர் - அவை அமெரிக்க காப்புரிமைப் பிரசுரங்கள் (US Patents), எடிசனின் பெருவாரியான கண்டுபிடிப்புகளின் அடிப் படைகள், ஏனையோரால் கண்டறியப் பட்டு, அமெரிக்க அரசினால் பொது வெளியில் பகிரப் பட்ட இந்தப் பிரசுரங்களே. இது, ஜனநாயகமயமான அறிவுப் பரம்பலின் சமூக நன்மைகளைப் பறை சாற்றும் ஒரு நல்ல உதாரணம்.

இன்று இந்த ஜனநாயக மயப்படுத்தப் பட்ட அறிவின் உள்ளே ஒளிந்து கொண்டு தான் போலி அறிவியல் எங்களிடையே வலம் வருகிறது. இணையத்தின் வரவுடன் அறிவுப் பரம்பலும் அதிகரித்தது, ஆனால் அறிவு, நிபுணத்துவம், தரவுகள் ஆகிய பதங்களின் வரைவிலக்கணங்களும் இணைய வழி அறிவுப் பரம்பல் செயற்பாட்டின் போது மாற்றப் பட்டிருக்கின்றன என்பது என் அபிப்பிராயம். சிறந்த உதாரணமாக மேற்குறிப்பிட்ட ஐரோப்பிய வானொலியின் "கோவிட் நிபுணரை" எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஒரு சட்டவாளராகவும், எழுத்தாளராகவும் அறிமுகம் செய்யப் படுகிறார். ஆனால், இந்த நிபுணரின் கோவிட் 19 தொடர்பான அறிவு, ஆய்வு அனுபவம், நோயாளிகளைப் பராமரித்த அனுபவம் என்பவை பூச்சியமாக இருக்கும் நிலை கவனிப்பிற்குரியது. குறைந்த பட்சம் ஏதேனுமொரு உயிரியல் துறையில் ஒரு விஞ்ஞானக் கட்டுரையை வாசித்து விளங்கிக் கொள்ளும் இயலுமையாவது இந்த "வானொலி நிபுணரிடம்" இருக்கிறதா என்பது சந்தேகத்திற்குரியது. எனவே ஒரு பெருந்தொற்று வேளையில், உயிர்களையும், உடல் நலத்தையும் பாதிக்கக் கூடிய ஒரு நுண்ணுயிர் பற்றிக் கருத்துரைக்கும் ஒருவரின் தகுதி இணைய வாசிப்புத் தவிர வேறெதுவும் இல்லை என்பது தெளிவாகிறது.

நிபுணத்துவத்தைக் கட்டுப் பாடுகளற்ற விதமாக வரையறை செய்வது போலவே, அறிவிற்கும் எந்தத் தகுதி காண் அளவீடும் இல்லாத வரைவிலக்கணம் வழங்கப் படுகிறது. உதாரணமாக, பெருந்தொற்றுக்கள் ஏன் உருவாகின்றன என்ற கேள்விக்கு "எழுபதுகளில் இருந்தே சில நாடுகளில் அதிகரிக்கும் உலக சனத்தொகையைக் கட்டுப் படுத்தும் முகமாக அரசுகள் இரகசியமாக எடுக்க ஆரம்பித்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியே பெருந்தொற்றுகள்" என்ற பதிலின் அறிவியல் மூலங்கள் எவை? இவை போன்ற சதித்திட்டக் கோட்பாடுகளைப் பரப்பும் இணையங்களில் பகிரப் படும் தகவல்கள் அறிவியல் ரீதியானவையா என்பது குறித்த தரக் கட்டுப் பாடுகள் இல்லாமல் ஒரு புதிய ரக "அறிவியல்" அறிமுகம் செய்யப் படுகிறது.

பொருளாதாரத்தில் பணம் மையப் பொருளாக இருப்பது போலவே அறிவியல் துறைகளில் தரவுகளே (Data) மூலப் பொருட்கள். போலி அறிவியலாளர்கள் இந்தத் தரவுகளை இரண்டு விதமாகப் பயன்படுத்துகிறார்கள். ஒன்று: உண்மையான ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட தரவுகளில் இருந்து தேர்வு செய்து பொறுக்கியெடுத்த தரவுகளைப் பயன்படுத்துதல் - இதை cherry-picking என்பார்கள். இரண்டாவது: ஆய்வுகள் மூலம் பெறப்படாத முடிவுகளை கற்பனையாக உருவாக்கிப் பயன்படுத்துதல். கோவிட் 19 குறித்து இணைய வெளியில் பரவும் பல போலி அறிவியல் பகிர்வுகள், நுணுக்கமாக இந்த இரு முறைகளையும் பயன்படுத்தி தகவல் நுகர்வோரை உண்மை பொய் அறிய இயலாத நிலையில் வைத்திருக்கின்றன. உதாரணமாக, சில கோவிட் தடுப்பூசிகளால் மிக அரிதாக ஏற்படும் பின் விளைவான இரத்தக் கட்டியேற்படல் பற்றிய தகவல்களைக் குறிப்பிடலாம். கருத்தடை மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு இரத்தக் கட்டியேற்படுவதற்கான வாய்ப்புகள் ஏனையோரை விட அதிகம் என்பது நிரூபணமான மருத்துவத் தரவு. ஆனால், கருத்தடை மருந்துகள் எடுத்துக் கொள்ளும் பெண்களில் கோவிட் 19 தடுப்பூசிகள் இரத்தக் கட்டியேற்படும் ஆபத்தை அதிகரிப்பதாக எந்த ஆதாரமும் இல்லை. மேற்குறிப்பிட்ட இரு இரத்தக் கட்டி நிலைமைகளும் வெவ்வேறு உடற்றொழிலியல் பொறிமுறைகளைப் பயன்படுத்துவதால், அதிகரித்த ஆபத்து இல்லையென்பது முறைப்படி மருத்துவம் அல்லது உயிரியல் அறிந்தோருக்கு நன்கு புரிந்திருந்தாலும், இணைய வாசிப்பில் மட்டுமே தகவல் சேகரிப்போரிடம் இந்தத் தகவல் இல்லை - எனவே கருத்தடை மருந்து, பெண்கள், கோவிட் தடுப்பூசிகளின் ஆபத்துக்கள் பற்றித் தாராளமாக "அவியல்" நடந்து வருகிறது.

தினசரி காலை எழுந்து ஒரு ஆய்வு கூடத்திற்குச் சென்று பணியாற்றிச் சம்பளம் பெறும் ஒரு ஆராய்ச்சி விஞ்ஞானியான எனக்கு "தரவுகள்" என்பது ஒரு புனிதமான சொற்பதம். ஒரு தொகுதி தரவுகளைப் பெற்றுக் கொள்ள பல மாதங்கள், வருடங்கள் விஞ்ஞானிகள் உழைக்க வேண்டியிருக்கிறது. பத்துப் பரிசோதனைகளை ஒரு பதில் தேடி மேற்கொண்டால் அவற்றுள் இரண்டு வியாக்கியானம் செய்யத் தகுந்த தரவுகளைத் (interpretable data) தரும் – இது the best case scenario. இந்த தரவுகளை விஞ்ஞானக் கட்டுரையாக எழுதி சஞ்சிகைகளுக்கு அனுப்பி வைத்தால், குறைந்தது மூன்று துறை சார் விஞ்ஞானிகளால் (peer reviewers) அது பரிசீலிக்கப் பட்ட பின்னர் மேலதிக திருத்தங்கள் நாடித் திருப்பி அனுப்பப் படும். எழுத்தாளர் குழு திருப்திகரமாகத் துலங்கல் காட்டிய பின்னரே தரவுகள் பிரசுரம் செய்யப் படும் - இந்தப் பிரசுர முயற்சி மட்டுமே மாதக் கணக்கில் நடைபெறும் ஒரு உழைப்பாக இருக்கும். இத்தகைய தரக் கட்டுப்பாடுகள் எதுவும் அற்ற தரவுகள், விஞ்ஞானத் தரவுகள் என்ற வகைப் படுத்தலுக்குள் அடக்கப் படக் கூடாது என்பது என் அபிப்பிராயம்.

எனவே தான், தமிழ் மக்களிடையே இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் நம்பிக்கையான தரவுகள் மட்டுமே நுகர்வுக்கு அனுமதிக்கப் பட வேண்டும் என நான் நம்புகிறேன். இது பேச்சுச் சுதந்திரத்தை மறுதலிக்கும் ஒரு முயற்சியாக அல்லாமல், உயிர்ப்பாதுகாப்பு, பொதுச்சுகாதாரம் என்பன பேணப்பட அவசியமான ஒரு நடைமுறை எனக் கருதுகிறேன். இன்றைய காலத்தில் விமானமொன்றில் எழுந்து நின்று "குண்டு" என்று சத்தமிடுவதை பொதுப் பாதுகாப்புக் கருதி எப்படித் தடை செய்திருக்கிறார்களோ , அதே போல கோவிட் 19 பற்றிப் போலி அறிவியல் தகவல்கள் பரப்பப் படுவதையும் தன்முனைப்பாகத் தடுக்க வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.