யமுனா ராஜேந்திரன்உலகின் தலைசிறந்த ஆவணப்பட இயக்குனர்கள் என நாம் சிலரைக் குறிப்பிட முடியும்; அதுபோல உலகின் தலசிறந்த ஆவணப்படங்கள் எனவும் சிலவற்றை நாம் குறிப்பிட முடியும். இலத்தீனமெரிக்காவின் ஜெட்டினோ மற்றும் சொலானஸ், பிரான்சின் கிரிஸ் மார்க்கர் போன்றவர்கள் உலகின் ஆவணப்பட மரபை உருவாக்கிய மேதைகள் என்றால், அவர்கள் உருவாக்கிய எ கிரின் வித் எ கேட் (A Grin with a Cat) த ஹவர் ஆப் த பர்னசஸ் (The Hour of the Furnces)  போன்ற ஆவணப்படங்களை நிரந்தரத்துவம் பெற்ற உன்னதக் கலைப்படைப்புகள் என நாம் குறிப்பிடலாம். இந்த இயக்குனர்களின் வரிசையில் வைத்துப் பேசத்தக்க இந்திய ஆவணப்பட இயக்குனர் என ஓருவரைக் குறிப்பிட வேண்டுமானால், அவர் ஆனந்த் பட்வர்த்தன் எனத் தயங்காமல் குறிப்பிடலாம்; அதுபோல உலகின் தலைசிறந்த ஆவணப்படங்களில் ஒன்றாக அவர் உருவாக்கிய ஜெய் பீம் காம்ரேட் ஆவணப்படத்தையும் நாம் முன்வைக்கலாம். குறிப்பிட்ட வரலாற்றில் வாழ நேர்ந்த மக்கள்திரளின் ஆற்றலையும், அவர்கள் எதிர்கொண்ட அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளையும், அந்த வரலாற்றில் வைத்து அவர்கள் அடைந்த தனிநபர்ப் பாடுகளையும், அவர்களது விடுதலைத் தேட்டத்தையும் பதிவு செய்தவை இவர்கள் உருவாக்கிய ஆவணப்படங்கள். கிரிஸ் மாக்கரின் எ கிரின் வித் எ கேட்(1977) நிலவிய சோசலிசம் நெருக்கடிக்கு உள்ளான காலகட்டத்தில், 1968 பாரிஸ் மாணவர் தொழிலாளர் எழுச்சியின் பத்து ஆண்டுகளின் பின்  உருவாக்கப்பட்டது. சொலானஸ், ஜெட்டினோவின் த ஹவர் ஆப்த பர்னசஸ்(1968) சே குவேரா பொலிவிய மலையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலைமையில் இலத்தீனமெரிக்க மக்களை நோக்கிய புரட்சிகர அறைகூவலாக உருவாக்கப்பட்டது.

ஐரோப்பிய புரட்சிகர அரசியல் என்பது, அதனது நிலவிய இடதுசாரிப் பாரம்பர்யம் என்பது கேள்விக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு காலத்தில், கிரிஸ் மார்க்கரின் ஆவணப்படம் வெளியானது. ஐரோப்பிய சோசலிச அனுபவங்கள், தேசியவிடுதலை அரசியல் போன்றவற்றை அதில் ஈடுபட்டவர்களின் நேர்முகங்களின் வழியில் தனது படத்தில் ஆவணப்படுத்தினார் கிரிஸ் மார்க்கர். இன்றும் பல்வேறு தத்துவார்த்த விவாதங்களை எழுப்புவதாக அப்படைப்பு இருக்கின்றது. சே குவேராவின் மரணத்தையடுத்து கொதிநிலையில் இருந்த இலத்தீனமெரிக்காவில் ‘ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகத் தன்னை இழத்தல் என்பதுதான் ஒரே தேர்வு; அதுவே விடுதலைக்கான பாதை’ எனும் செய்தியை முன்வைத்தது சொலானஸ் மற்றும் ஜெட்டினோ உருவாக்கிய த ஹவர் ஆப் த பர்னசஸ். காலனியம், காலனியம் உருவாக்கிய அறிவுஜீவி, ஆயுத விடுதலைப் போராட்டம் என மிகப்பெரும் விவாதத்தை இலத்தினமெரிக்கா எங்கிலும் விதைத்தாக அந்த ஆவணப்படம் இருந்தது.

இதுபோலக் கடந்த அரைநூற்றாண்டில் இந்திய சமூகம் எதிர்கொண்ட முக்கியமான அத்தனை நெருக்கடிகளையும் நிகழ்வுகளையும் ஆவணப்படுத்தி இந்தியாவெங்கிலும் மிகப்பெரும் அரசியல் விவாதங்களை உருவாக்கியனவாக, இந்திய அரசுக்குத்; தொந்தரவு தருவதாக ஆனந்த் பட்வர்த்தனின் படைப்புக்கள் இருக்கின்றன. அவசரநிலைக் காலம், இந்து முஸ்லீம் பேரழிவுகள், பாப்ரி மஜீத் உடைப்பு, காலிஸ்தான் பிரச்சினை, தொழிலாளர் அவலம், இடசாரிகளுக்கும் தலித்தியர்களுக்கும் இருக்கும் உறவும் முரணும் என அரைநூற்றாண்டுகாலமாக ஆவணப்படங்களை உருவாக்கி வரும் படைப்பாளியாக ஆனந்த் பட்வர்த்தன் இருக்கிறார். அரைநூற்றாண்டு இந்திய வரலாறு இரத்தமும் சதையுமாக, ஓலமும் கூக்குரலுமாக, எக்காளமும் கொண்டாட்டமுமாக, கேள்விகளும் கண்டனங்களும் கோரிக்கைகளுமாக அவரது ஆவணப்படங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 

நாம் வாழும் காலம் அடையாள அரசியலின், பன்முகத்துவத்தின், வித்தியாசங்களின் காலம். தேசிய இனப் பிரச்சினையின், பழங்குடி மக்களின், தலித் மக்களின், விளிம்புநிலை மக்களின் விடுதலை குறித்த பிரச்சினைகனை விவாதிக்கும் நெருக்கடியான காலம்.

ஆனந்த் பட்வர்த்தன் உருவாக்கிய ஜெய் பீம் காம்ரேட்(2011) தலித் பாடகரும் கவிஞருமான விலாஸ் கோக்ரேவின் வாழ்வையும் மரணத்தையும் முன்வைத்து, நம் காலத்து விடுதலை அரசியலின் மிகமுக்கியமான ஒரு பிரச்சினையை விவாதத்துக்கு எடுத்திருக்கிறது. 1997 ஆம் ஆண்டின் நாளொன்றின் பகல்பொழுதில் மும்பை தெருக்களில் ஆவாஹன் நாட்ய மஞ்சின் பாடகரான விலாஸ் கோக்ரேவின் குழுவினரின் 'சாதி மத ஏற்றத் தாழ்வுகளை மறப்போம், தொழிலாளருடன் கைகோர்ப்போம்’ என ஓங்கி ஒலிக்கும் அழைப்புப் பாடலுடன் துவங்கும் ஆவணப்படம், 2011 ஆம் ஆண்டு மத்தியில் நவீன அம்பேத்கரின் வருகைக்காகப் பாடிக் கொண்டிருக்கும் கபீர் கலா மஞ்சின் பாடகியான ஷீத்தலின் புதிய அம்பேத்கருக்கான எதிர்பார்ப்புக் குரலுடன் முடிகிறது.

இருநூறு நிமிட ஆவணப்படமான ஜெய் பீம் காம்ரேட்  கவிஞனும் பாடகனுமான விலாஸ் கோக்ரேவின் தற்கொலைக்கான காரணங்களைத் தேடிச் செல்வதில் துவங்குகிறது. அம்பேத்கரியராகவும் மார்க்சிஸ்ட்டாகவும் சமவேளையில் இருந்த கோக்ரே, ஆவாஹன் நாட்ய மஞ்ச் எனும் மார்க்சிய லெனினியக் கலைக்குழவில் இருந்த கோக்ரே, தலித்தியக் கட்சியான இந்தியக் குடியரசுக் கட்சி மேடைகளில் பாடியதனையடுத்து, அமைப்பின் கட்டுப்பாட்டை மீறிவிட்டார் எனும் காரணம் காட்டி அமைப்பிலிருந்து வெளியேற்றப்படுகிறார். தனது மனைவியை வறுமையிலிருந்து மீட்பது, திருமண வயதில் இருக்கும் தனது மகனுக்கு தனது வீட்டில் இன்னொரு அறை கட்டிக் கொடுப்பது எனும் தேவைகளுக்காக, பொருளாதார நோக்குக் கருதி, தேர்தல் அரசியலில் ஈடுபடும் அம்பேத்கரிய இயக்கமான குடியரசுக் கட்சி மேடைகளில் அவர் பாடப்போனது அவர் செய்த குற்றம் என்கிறார்கள் ஆவாஹன் அமைப்பினர்.

அவரது வெளியேற்றத்தினால் அவர் மனமுடைந்து இருந்த தருணம் அது. இந்தச் சந்தர்ப்பத்தில் 1997 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 11 ஆம் திகதி மும்பை ரமாபாய் நகரில் பத்து தலித்துகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அன்று அதிகாலை பாபாசாகேப் அம்பேத்கரின் சிலை மீது செருப்பு மாலை போட்டிருப்பதைக் கண்டு கொதித்தெழுந்த தலித்துகள் சாலை மறியலில் ஈடுபடுகின்றனர்;. அங்கு வரும் மகராஷ்டிர அரசாங்கத்தின் ரிசர்வ் போலிஸ் படை சாலை மறியலைப் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்து நான்கு நாட்களின் பின், ஜூலை 15 ஆம் நாள் பம்பாயின் முலுந்த் பகுதியிலுள்ள சித்தார்த் நகர் சேரியில் வசி;த்து வந்த விலாஸ் கோக்ரே அம்பேத்கரியர்களுக்கு தனது வீட்டின் உள் சுவரில் ஒரு செய்தியையும் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார்.

“போலிஸ் துப்பாக்கிச் சூட்டைக் கண்டனம் செய்கிறேன். துப்பாக்கிச் சூட்டில் பலியான அம்பேத்கரின் புதல்வர்களுக்கு மரியாதைக்குரிய வணக்கங்கள். அம்பேத்கரியர்கள் நீடூழி வாழ்க”.

தூக்கிலிட்டுக்கொள்வதற்கு முன் இந்த வாசகங்களை எழுதிய அவர், தனது தலித்தன்மையையும் அம்பேத்கரிய அடையாளத்தையும் நிலைநாட்டும் வகையில் தனது தலையைச் சுற்றிலும் நீலவண்ணத் துணியைக் கட்டிக்கொண்டார். கோக்ரேயின் தற்கொலைக்கான காரணங்கள், அது பற்றிய ஆவஹான் நாட்ய மஞ்ச் சார்ந்தவர்களின் வியாக்யானங்கள் என்பதாகப் படம் நகர்கிறது. இந்த விவாதங்களில் ஆவஹான் நாட்ய மஞ்சில் அவரோடு செயல்பட்ட கவிஞர் வரவராவ், மக்கள் பாடகர் கத்தார் போன்றவர்கள், அத்தோடு மேலும் இரு செயல்பாட்டாளர்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்தது கொள்கிறார்கள். சாதியை மேல்கட்டமானத்தில் வைத்து விளக்கும் மார்க்சிய விளக்கத்தை கத்தார் மறுக்கிறார். பிறிதெருவர் கோக்ரே தற்கொலை செய்யும் முன்பு தலையில் கட்டியிருந்தது நீலமல்ல, ஊதா நிறமாகவும் அது இருக்கலாம் என எள்ளல் தோன்றச் சொல்கிறார்.

பிறப்பில் தலித்தியரும் மார்க்சியருமான கத்தார், விலாஸ் கோக்ரே தன்னை முதன் முதலில் சந்தித்தபோது தனக்கு நல்ல உணவளிக்க விரும்பியதையும் அவரது வறுமை அதற்கு இடமளிக்கவில்லை என்பதையும் நெஞ்சுறுகச் சொல்கிறார்.

”விலாஸின் வருகைக்குப் பிறகுதான். ஆவஹான் கலைக்குழுவுக்கு எழுச்சி கிடைத்தது. முதலில் மனதைக் கவர்வது குரல்தான். மீராவை எடுத்துக் கொள்ளுங்கள், துக்காராமை எடுத்துக் கொள்ளுங்கள், சிறிய இசைக் கருவியைக் கொண்டு அவர்கள் கிருஷ்ணனாகவும் ராமனாகவும் ஆகியிருக்கிறார்கள். சின்னதொரு இசைக் கருவியைக் கொண்டு எங்களைப் போன்ற மக்கள் பாடகர்கள், புரட்சிக் கவிஞர்கள், புழுதியிலிருந்து வந்த நாங்கள், அவர்களது பாதையைப் பின்பற்றுகிறோம். ஆதனால்தான் மக்களை ஈர்க்கும் இடத்தில் நாங்கள் நிறகிறோம்” என தனது தோழன் விலாஸ் கோக்ராவுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் கத்தார்.

காதல் பிரிவையும் விரகத்தையும் வெளியிடும் கவாலிப் பாடல்களைப் பாடும் பாடகனாகத் துவங்கிய விலாஸ் கோக்ரே, பின்னாளில் அதனை விட்டொழித்து தலித் மற்றும் தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைப்பாடும் பாடகனாக ஆகினார் எனச்; சொல்லும் அவரது புதல்வனது திருமணக் காட்சிகளும் ஆவணப்படத்தில் இடம்பெறுகின்றன. அவரது புதல்வனான மிலிந்த் கோக்ரேவுக்கு இப்போது அவனது தந்தையின் புரட்சிகர மரபுடன் தொடர்பு மங்கிவிட்டது என அவர் பதிவு செய்கிறார்.

விலாஸ் கோக்ரேவின் பாடலுடன் துவங்கி பாடகி ஷீத்தலின் பாடலுடன் முடியும் ஆவணப்படம், கோக்ரேவின் தற்கொலைக்கான காரணங்களை தேடிச் சொல்வது போலவே, நக்சலைட் பயங்கரவாதி எனும் குற்றச்சாட்டின் பேரில் மகாராஷ்டர அரசினால் கைது செய்யப்படும் ஷீத்தலின் வாழ்வு குறித்தும் பேசுகிறது. பெண் தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட தாய்க்கு மகளாகப் பிறந்த ஷீத்தல், மாணவர் இயக்கத்திலிருந்து தனது சகோதரனுடன் கபீர் கலா மஞ்ச் குழவில் சேர்கிறார். அக்குழுவின் கவிஞனும் பாடகனுமான தோழனை இளம் வயதிலேயே மணந்து கொள்கிறார். தொழிலாளி வர்க்கத்தினர், விளிம்பு நிலையினர், தலித்துகள் ஒற்றுமையை வலியுறுத்தும் கபீர் கலா மஞ்ச்சினர், காங்கிரஸ் பிஜேபி சிவசேனாவுடன் சமரசம் செயது கொண்டுவிட்ட தலித் தலைவர்களைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். பாடலும் பறையும் கெண்டு சமூகத்தை மாற்றுவோம் எனும் அவர்களை இந்துத்துவ ஆதரவு மகாராஷ்ட்ர காவல்துறை நக்சைலைட் பயங்கரவாதிகள் எனக் குற்றம் சுமத்தி வேட்டையாடுகிறது. அந்த வேட்டைக்குத் தப்பி ஷீத்தலும் அவரது கணவனும் தலைமறைவாகி விடுகிறார்கள்.

ஜெய் பீம் காம்ரேட் ஆவணப்படம் இந்தத்தகவலுடன் முடிந்தாலும், தலைமறைவான ஷீத்தலும் அவரது கணவர் சச்சின் மாலேவும் 213 ஆம்ஆண்டு ஏப்ரல் 2 ஆம் திகதி மும்பை காவல்துறையில் சரணடைகிறார்கள். சரணடைந்தாலும் தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை அவர்கள் முழுமையாக மறுதளித்தார்கள். கர்ப்பமுற்றிருந்த ஷீத்தல் பிணையில் வருவதற்கு முயன்ற போதும் மும்பை நீதின்றம் ஜீன் 4 ஆம் நாள் தீர்ப்பன்படி அவருக்குப் பிணை மறுத்தது. மறுபடியும் ஜீன் 28 ஆம் திகதி உசிசநீதிமன்றம் மனிதாபிமான அடிப்படையில் அவர் பிணையில் வெளிவர அனுமதி வழங்கியது.

பாட்டாளி வர்க்க மற்றும் தலித்திய ஒற்றுமையை வலியுறுத்திய இரு பாடகர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இந்தப் படம் ஒரு புரட்சிகர இசைப்பயணத்தின் அனுபவத்தை நமக்குத் தருகிறது. இசைப் பயணம் போல் தோன்றும் இந்த ஆங்கில ஆவணப்படத்திற்கு கவித்துவமான, ஆற்றொழுக்கான, அற்புதமான தமிழ் மொழிபெயர்ப்புக்களை ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர்.சீனிவாசனும் அவரது நண்பர்களான மகிழ்நன், மில்லர், வி.எ.சூர்யா, மதியழகன் சுப்பையா போன்றவர்கள் தந்திருக்கிறார்கள்.

ஷீத்தல் சாதே ஆவணப்படத்தின் இறுதியில் பாடும் ஒரு பாடலின் தமிழ் வடிவம் இவ்வாறு இருக்கிறது :

" நாம் நவீன காலத்திற்கொரு
அம்பேத்கரை உருவாக்குவோம்
புதிய யுகத்தின் அம்பேத்கர்
நமக்கு என்ன சொல்கிறார்?

ஓடுக்கப்படுபவர்கள் ஒன்று சேருங்கள் என்கிறார்
சமத்துவத்திற்கான அழைப்பை
அவர் விடுக்கிறார்
சாதியத்திற்குச் சமாதிகட்ட அழைப்பை விடுக்கிறார்
பெண்களின் விடுதலைக்கான அழைப்பை விடுக்கிறார்
பணக்கார ஆண்டைகளின் ஆட்சிக்கு முடிவுகட்ட
அழைப்பை விடுக்கிறார்
உண்மையான ஜனநாயகப் பரட்சியைக்
கொணரவேண்டும் என்கிறார் அம்பேத்கர்

அம்பேத்கர் சந்தைச் சரக்காகிவிட்டார்
அவரை விளம்பரப்படுத்துகிறார்கள்
கசாப்புக் கடைக்காரர்கள் எல்லாம் கூடிவிட்டனர்
சிலர் வாக்குகளுக்கு அவரை விற்கிறார்கள்
சிலர் தனிப்பட்ட நலனுக்கு விற்கிறார்கள்

ஓ! எங்கள் அன்புக்குரிய அண்ணலே
சிலையிலிருந்து எழுந்து வாருங்கள்
துதிப் பாடல்களிலிருந்து வெளியேறி வாருங்கள்
சந்தைக் கடையிலிருந்து வெளியேறுங்கள்
புதிய சிந்தனையோடு வெளியே வாருங்கள்
போராட்டத்திற்குத் தலைமை தாங்குங்கள்
மீண்டும் அம்பேத்கர் வருவார்
ஆனால் அவதாரமாக அல்ல

நம்மை அமபேத்கர் போராடச் சொன்னார்
படித்தவர்கள் ஒன்றுபட்டார்கள்
பின்னர் சமரசம் செய்துகொண்டார்கள்
அவர்களிலிருந்து அம்பேத்கர் தோன்ற மாட்டார்
கயர்லாஞ்சிப் படுகொலைகளுக்குப் பிறகு
யார் தெருவுக்கு வந்துப் போராடினார்களோ
அவர்களிடமிருந்துதான் அம்பேத்கர் தோன்றுவார்
அதற்காக என் தாய் காத்திருக்கிறாள் "

பாடல்களும் கவிதைளும் அரசியலும் கருத்தியல் சரச்சைகளும் கொண்ட இந்த ஆவணப்படம் பல்லடுக்குகள் கொண்ட சொல்முறையை வரித்துக் கொண்டிருக்கிறது. அம்பேத்கரின் வாழ்வும் பங்களிப்பும் பற்றி இப்படம் பேசுகிறது. எழுபதுகள் துவங்கி மராட்டிய மாநிலத்தில் தலித் பாந்தர் இயக்கத்தின் நாற்பதாண்டு கால தோற்றம் வளர்ச்சி தேய்வு சீரழிவு பற்றி இப்படம் பேசுகிறது. இந்துத்துவ சக்திகளிடம், காங்கிரஸ் கட்சியினரிடம், சிவசேனாவிடம்  எவ்வாறு மராட்டிய தலித் இயக்கம் சரணடைந்தது என்பது குறித்து இப்படம் பேசுகிறது. மார்க்சியர்களுக்கும் தலித்தியர்களுக்கும் இடையிலான நிரவப்படாத முரண்கள் குறித்து இப்படம் பேசுகிறது. தலித் மக்களின் மீது தொடுக்கப்படும் வன்முறைகளை கயர்லாஞ்சி அனுபவத்தை முன்வைத்து இப்படம் பேசுகிறது. அரசு, நீதித்துறை, காவல்துறை போன்றவற்றில் நிலவும் சாதிவெறி பற்றி இப்படம் பேசுகிறது. மரத்வாடாக்கள், சித்பவன் பார்ப்பனர்கள், மோடி பிஜேபி சிவசேனா வகையினர் எவ்வாறு இட ஒதுக்கீட்டுக்கும், வன்கொடுமைச் சட்டத்திற்;கும் எதிராக ஒருமித்த சக்தியாகத் திரண்டு வருகிறார்கள் என்பதைப் படம் சொல்கிறது. மார்க்சிய அமைப்புகளில் உள்ள மேல்சாதித் தலைமை பற்றி இப்படம் பேசுகிறது.

அரசு ஒடுக்குமுறை குறித்த அக்கறை இன்றைய தலித் அரசியல் இயக்கங்களிடம் இல்லை என்பதனை இப்படம் சுட்டிக்காட்டுகிறது. மனுஸ்மிருதியை அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் கைகாட்டிவிட்டு, அரச ஒடுக்குமுறையைக் காணாது விடும் போக்கின் ஆபத்தை படம் சுட்டிக்காட்டுகிறது.

ஜெய் பீம் காம்ரேட் குறித்த அதியற்புதமானதொரு அரசியல் பகுப்பாய்வுக் கட்டுரையை மார்க்சியரும் அம்பேத்கரிருமான ஆனந்த டெல்டும்டே எழுதி, அக்கட்டுரையை தமிழக மார்க்சியரான எஸ்.வி.ராஜதுரை மொழிபெயர்த்திருக்கிறார் (ஜெய் பீம் காம்ரேட் : உயிரெழுத்து : ஆகஸ்ட் 2012). அக்கட்டுரையில் ஆனந்த டெல்டும்டே, தலித் அரசியல் தொடர்பாக முன்வைக்கும் இரண்டு அவதானங்கள் இன்றைய ஈழ, தமிழக நிலைமைகளில் ஒப்பிட்டுப் பேசத்தக்கதாகும்.

குறிப்பாக ஈழ நிலைமையில் இன்று தலித் அரசியல் பேசுகிறவர்கள் இலங்கை அரசு தொடர்பாக, அந்த அரசின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் சர்வாதிகார யாப்பு முறை, அதனோடு முஸ்லீம்,கிறித்தவ மக்களின் மீதான தாக்குதல்கள் போன்றவற்றைக் காணாது விடுதல் எனும் ஆபத்து குறித்து ஒப்பீட்டளவில் பேசத்தக்கதாகும்.

ஆனந்த் டெல்டும்டே, அரசும் அது குறித்த தலித்திய வட்டார அணுகுமுறையும் குறித்து இவ்வாறு சொல்கிறார்:

“தலித் வட்டாரங்களில் அரசு பற்றிய புரிதல் எப்போதுமே பிரச்சினைக்குரியதாகவே இருந்து வந்துள்ளது. அம்பேத்கரைட் இயக்கம் உருவாகத் தொடங்கிய காலத்தில், சாதி இந்துக்களுக்கும் தலித்துகளுக்குமான மோதலில், காலனிய அரசு ஒரு நடுநிலையான மத்தியஸ்த அரசு என்று கருதப்பட்டு வந்தது. சாதி இந்துக்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் என்னும் இன்னொரு சண்டைக் களத்தை உருவாக்குவதை தலித்துகள் தவிர்க்க வேண்டும் என்னும் நடைமுறை உத்தியின் மூலம் மேற்சொன்ன கருத்துக்கான விளக்கத்தை டாக்டர் அம்பேத்கர் வழங்கினார்."

"காலனிய அரசு தொடர்பான இந்த நடைமுறை உத்தி சார்ந்த பார்வை, காலனிய அரசு போனபிறகும் இறுகிப்போன பார்வையாக மாறியது. அரசு நடுநிலையானது, மத்தியஸ்தர் போன்றது என்பதோடு நிற்காமல் அது தலித்துகளுக்கு நன்மை வழங்கக்கூடியது என்னும் கருத்துக்கும் வலுவூட்டப்பட்டது. அப்படி வலுவூட்டுவதற்காக, அம்பேத்கர்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர், சுதந்திரத்துக்குப் பிந்திய இந்திய அரசு அவர் வடிவமைத்த முறையில்தான் நிறுவப்பட்டது என்னும் கருத்தும் பரப்பப்பட்டு வந்தது“.

“அம்பேத்கர் இந்தக் கருத்தை ஏற்கவில்லை என்ற போதிலும் தலித் வெகுமக்களை அரசுக்குக் கட்டுண்டு செய்வதற்காக அவரது விளக்கங்கள் சுயநலச் சக்திகளால் சௌகரியமாகப் புறக்கணிக்கப்பட்டன. அரசு என்பது நடுநிலையானது, மத்தியஸ்தர் போல செயல்படுவது, தலித்துகளுக்கு நன்மை செய்வது என்னும் கருத்து வலுப்படுவதற்கு அரசு வழங்கும் இட ஒதுக்கீடும், குடிமைச் சமுதாயத்திலுள்ள சாதி முரண்பாடுகளும்கூடக் காரணமாக இருந்தன என்பது உண்மைதான். எனவேதான் வீராவேசமாகப் பேசுகின்ற தலித் பேச்சாளர் பாய் சங்காரெ, துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மனோகர் காதம் என்னும் போலிஸ் ஆணையாளர் அந்தக் குற்றத்தைச் செய்ததற்குக் காரணம் மனு நீதிதானேயன்றி, அரசு யந்திரத்தின் ஏவலர்கள் யாரும் அல்ல என்று கூறியதன் மூலம் அரசின் பருண்மையான குற்றச்செயலுக்கான பொறுப்பை அதன் மீது சுமத்துவதற்குப் பதிலாக வேறுபக்கம் திருப்பினார். ரமாபாய் நகர் நிகழ்ச்சி பற்றிய விவரங்கள், அதில் அரசு யந்திரம் சம்பந்தப்பட்டிருந்ததைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தபோதிலும் தலித்துகள், ஏன் அந்தத் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களும்கூட, அதை முழுமையாக மறந்துவிட்டனர். மனுநீதியை இகழ்ந்து பேசுவதில் மகிழ்ச்சியடைய மட்டுமே தலித்துகள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில், அது அவர்களையும் அவர்களது தலைவர்களையும் மனு நீதிக்கு எதிராகப் போராடுவது என்னும் பெயரால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் செய்வதற்கு உதவுகிறது“.

“ஆளும் வர்க்கங்களின் நீண்டகால நலன்களைப் பராமரிக்கும் கருவி என்னும் வகையில் அரசால் ஒரு போதும் நடு நிலையானதாகவோ தலித்துகள் உள்ளிட்ட சமுதாயத்தின் கீழ்மட்ட மக்களுக்கு நன்மை செய்கின்ற ஒன்றாகவோ இருக்க முடியாது. தலித்துகள் உள்ளிட்டச் சமுதாயத்தின் கீழ்மட்ட மக்களின் உணர்வுப்பூர்வமான போராட்டங்கள் மூலமே அரசை அடக்க முடியும். தலித்துகள் மீது வன்கொடுமைகள் நடக்கும் ஒவ்வொரு நேர்விலும் அரசின் உண்மையான தன்மை அம்பலப்படுகிறது என்றாலும் தலித்துகளின் அரசியல் கலாச்சாரம் அதை அவர்கள் பார்க்க முடியாமல் செய்கிறது“.

தமிழ்தேசியவாதிகள் அவர்கள் ஆயுதமேந்தியவர்களாயினும் பாராளுமன்றவாதிகளாயினும் அவர்கள் சாதியவாதிகள் எனும் அணுகுமுறையின் அடிப்படையில், இலங்கை அரசின் அத்தனை ஒடுக்குமுறைகளையும், மனித உரிமை மீறல்களையும், போர்க்குற்றங்களையும், இஸ்லாமிய, கிறித்துவத் வழிபாட்டுத் தலங்களின் மீதான அரசின் தாக்குதல்களையும் காணாது விடும் நிலைக்கு மட்டுமல்ல, ஈழ தலித்தியத்தை முன்வைத்தர்களை இலங்கை அரசு ஆதரவாளர்களோடும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. இதற்கான பிரதானமான காரணம் தலித்திய அரசியலை விடுதலை அரசியலாக அல்ல, அடையாள அரசியலாக மட்டுமே அவர்கள் புரிந்து கொண்டிருப்பதனால்தான். மட்டுமன்று வித்தியாசம் எனும் பின்நவீனத்துவ அடிப்படையில் இருந்து தமிழக தலித்தியத்தை அதனது கோட்பாட்டாளர்கள் வரையறை செய்ததும் இந்நிலைபாட்டுக்கான காரணமாக இருக்கிறது. இதனையே ஈழ தலித்தியத்தை முன்வைத்தர்கள் ஸ்வீகரித்துக் கொண்டார்கள்.

அரசு தொடர்பான நிலைபாட்டை அடுத்து தலித் அரசியலை இட ஒதுக்கீட்டு அரசியலாகவும் அடையாள அரசியலாகவும் மட்டுமே குறுக்குவதில் உள்ள ஆபத்து குறித்தும் ஆனந்த் டெல்டும்டே பேசுகிறார்:

“தலித்துகளில் மிக மிகச் சிறு எண்ணிக்கையிலானவர்களே இட ஒதுக்கீட்டின் மூலம் வாழ்க்கையில் முன்னுக்கு வந்துள்ளனர். ஆனால் இவர்கள் பெரும்பான்மையான தலித்துகளின் அரசியல் செயல் திட்டத்தைக் கடத்திச் சென்றுள்ளதுடன், பொருளாதார ஆதாயங்கள் அனைத்தையும் தங்களின் ஏகபோகமாக்கிக்கொண்டு தலித் வெகுமக்களை வெறும் உணர்ச்சிகரமான அடையாள அரசியலுக்குள் அடைத்து வைத்துள்ளவர்கள். தலித் வெகுமக்கள் மிகுந்த திறமையுடையவர்கள.; ஆனால் அவர்களது திறமைகள் யாவும் தலித் அடையாளம் என்பதை ஊக்குவிப்பதற்காக விரயமாக்கப்படுகின்றன. தலித் இயக்கத்தைக் கட்டும் போதும் இந்து மதத்தை விட்டு வெளியேறும்போதும் வழிபாட்டுக்குரிய மாற்று விக்கிரகமும் அடையாளமும் தேவைப்பட்டன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவற்றையே ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு, தேவைக்கு அதிகமான வகையில் தொடர்ந்து பாடல்கள், இசை ஆகியவற்றின் மூலமாக மட்டுமின்றி சொற்பொழிவுகள், எழுத்துகள் ஆகியவற்றின் மூலமாகவும் கடைபிடித்துக் கொண்டிருப்பது, கடவுள் வழிபாடு போன்ற நசிவுக் கலாச்சாரத்தின் தன்மையைத்தான் - பழைய விக்கிரகத்துக்குப் பதிலாகப் புதிய விக்கிரகம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றாலும் - கொண்டிருக்கிறது. இது அம்பேத்கரின் உணர்வுக்குப் பகையானது“.

அடையாள அரசியல் குறித்து பிறிதொரு தமிழக மார்க்சியரான நா.முத்துமோகன் சுட்டுவதும் இங்கு கவனம் கொள்ளத்தக்கதாக இருக்கிறது:

“அடையாள அரசியல் என்ற நிகழ்வுப் போக்கைக் கோட்பாடுகளின் துணைகொண்டு அணுகும்போது பல கருத்தாக்கங்கள் முன்னுக்கு வருகின்றன. அடையாள ஒற்றுமை, அடையாளத்தினுள் தொழிற்படும் வேறுபாடுகள் என்பவை முதன்மையான கருத்தாக்கங்கள். இவ்விரு கருத்தாக்கங்களே இயங்கியல் என்ற சொல்லாக்கத்தை நியாயப்படுத்துகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றை முதன்மைப்படுத்தும்போது இயங்கியல் பழுதுபடும்” (முன்னுரை : தமிழ் அடையாள அரசியலின் இயங்கியல் : 2011).

தமிழக தலித் இயக்கங்கள் தலித் விடுதலை இயக்கங்கள் எனும் அளவில் அல்லாது குறிப்பிட்ட சாதி சார்ந்த அடையாள அரசியலையே தேர்ந்து கொண்டிருக்கின்றன. ‘அடையாள ஒற்றுமை, அடையாளத்தினுள் தொழிற்படும் வேறுபாடுகள்’ என்பதில் அடையாளத்தினுள் தொழிற்படும் வேறுபாடுகளையே அவை முதன்மையாகக் கொண்டிருக்கின்றன. இக்காரணத்தினால்தான் வன்கொடுமைச் சட்டத்திற்கு எதிராக பாமக தலைவர் ராமதாஸ் தமிழக இடைநிலைச் சாதிகளை ஒன்றுபடுத்திய போதும், இளவரசனின் தற்கொலையை முன்வைத்தும் 'தலித் எனும் அடையாள ஒற்றுமையை' அவர்களால் கட்டியெழுப்பமுடியவில்லை. இவ்வாறாக இருந்தாலும் கூட, ஒரு வளர்ச்சிப் போக்கான மாற்றத்தை விடுலைச் சிறுத்தைகள் அமைப்பு வெளிப்படுத்தியது. இரு சாதிகளுக்கு இடையிலான வன்முயைறயாக இப்பிரச்சினையை மாற்றாமல், அதனை பெரியாரியர்கள், மார்க்சியர்களிடம் கையளித்த, பிரதான எதிரிகளுக்கு எதிரான ஜனநாயகப் பார்வைதான அந்த வளர்ச்சி நோக்கு. 

இதுவன்றி, பௌத்தம் இயல்பிலேயே அமைதி மார்க்கம் என்கிற இறையியல்(theological) பார்வைக்கு அப்பால், அரசியல் அதிகாரமும் பௌத்தமும் இணையும்போது அது எவ்வாறு பிற மதங்களைப் போலவே கொலைவெறியாட்டம் நடத்துகிறது எனும் பார்வையும் இன்று அவசியமாக இருக்கிறது. குறிப்பாக 'தெரவாடா பௌத்தம் கடைபிடிக்கப்படும் நாடுகளில் ஏன் ராணுவமும் அரசியலும் மற்றமையின் மீது கட்டற்ற வன்முறையை ஏவுகிறது?' என்பது குறித்த பார்வையும் இன்று அவசியமாக இருக்கிறது.

இதனையே மராட்டிய தலித் அரசியல் அனுபவத்தில் இருந்து டெல்டும்டே வேறுவகையில் ஞாபகப்படுத்துகிறார்.

ஆரம்பத்தில் ஜெய் பீம் காம்ரேட் படத்தினை கிரிஸ் மார்க்கரின் 1968 மாணவர் எழுச்சி குறித்த படத்துடனும், ஜெட்டினோ,சொலானசின் த ஹவர் ஆப் த பரினசஸ் படத்துடனும் ஒப்பிட்டுப் பேசினேன். நிலவிய சோசலிசத்தின் வீழ்ச்சியின் பின் இன்று மார்க்சியர்கள் பல்வேறு சவால்களை எதிர் கொண்டு வருகிறார்கள். சோசலிசம் எனும் கருத்தமைவு அல்லது சமூகத்திட்டம் மறுவரையறைக்கு உள்ளாகி வருகிறது. அடையாள அரசியல், புதிய சமூக இயக்கங்கள், சூழலியல் மாசுக்கேடு, பெண்ணியம், தேசிய இனப் பிரச்சினை, விளிம்பு நிலையாளர் பிரச்சினை போன்றவற்றுக்கு அது முகம் கொடுத்துத் தீரவேண்டும். இந்திய நிலைமையைப் பொறுத்து இப்பிரச்சினைகளின் குவிமையமாக சாதியப் பிரச்சினை இருக்கிறது.

தலித்தியக் கோட்பாட்டாளர்கள் முன்வைக்கிற, இடதுசாரி இயக்கங்களின் மேல்சாதியத் தலைமை, அதிலுள்ள பார்ப்பனிய மனப்பான்மை போன்ற பிரச்சினைகள் நேர்மையாக அணுகப்பட வேண்டும். தலித் பாடகன் விலாஸ் கோக்ரேவின் தற்கொலைக்குக் காரணமாக  இப்பிரச்சினைகளை மார்க்சியர்கள் நேர்மையாக அணுகவில்லை என்பதைத்தான் மக்கள் பாடகன் கத்தார் சொல்கிறார்; ஜெய் பீம் காம்ரேட் ஆவணப்படமும் சொல்கிறது. ஆவணப்படம் விவாதிக்கும் மையமான பிரச்சினைகளில் இது முக்கியமானது.

தலித் பிரச்சினை இன்று சர்வதேசியமயமாக ஆகியிருக்கிறது. இதனை சர்வதேசிய மயப்படுத்துவதை இந்திய அரசு விரும்பவில்லை. எல்லா வகையிலும் அது இந்தச் செயல்போக்கைத் தடுக்க முனைகிறது. இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் தீண்டாமை ஒழிப்பு சட்டமாக ஆகியிருக்கிறது. மேற்கத்திய பல்கலைக் கழகங்களில் தலித்திய ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஆம்னஷ்டி இன்டர்நேசனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச், மைனாரிட்டி ரிப்போர்ட்ஸ், புளோட்டோ பதிப்பகம் போன்றன தலித் பிரச்சினை குறித்து ஆய்வு அறிக்கைகளையும் நூல்களையும் வெளியிட்டிருக்கின்றன. இத்தயை முயற்சிகள் எல்லாம் இந்தியாவைப் பிளக்கும் முயற்சிகள் என இந்துத்துவவாதிகள் புத்தகங்களும் எழுதி வெளியிடுகிறார்கள். கனடாவில் ஜெய் பீம் காம்ரேட் திரையிடலும் கருத்தரங்கும் தொடர்பாக நான் ஆனந்த் பட்வர்த்தனுடன் தொடர்பு கொண்டபோது கூட அவர் அமெரிக்க கனடிய சுற்றுப் பயணத்தில்தான் இருந்தார்.

ஜெய் பீம் காம்ரேட் ஆவணப்படம் உலக மனிதனை நோக்கி எடுக்கப்பட்ட தலித் வரலாற்று ஆவணம். விடுதலை அரசியலும் மார்க்சியமும் குறித்த சமகால கோட்பாட்டு விவாதங்களுக்கான ஒரு பங்களிப்பு. பூர்வகுடி மக்கள், புதிய சமூக இயக்கங்கள், அடையாள அரசியல், நிறவாத அரசியல் போன்றவற்றை அணுகுவதற்கு உலகெங்கிலுமுள்ள மார்க்சியர்களுக்கு இந்த ஆவணப்படம் படிப்பினைகளையும் ஆலோசனைகளையும் அணுகுமுறைகளையும் கொண்டிருக்கிறது. இந்த அரிய ஆவணப்படத்தினை தமிழ்த் துணைத்தலைப்புக்களுடன் வழங்கிய நண்பர்கள் மிகப்பெரும் வரலாற்றுக் கடமையைச் செய்திருக்கிறார்கள்.

Courtecy : Uyirmmai, September 2013, India
பதிவுகளுக்கு அன்ப்பியவர்: யமுனா ராஜேந்திரன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.