- 2015 முதலே ஆங்கிலத்தில் புனைவுகள் எழுதிவரும் ஜெயந்தி சங்கர் 1995 முதல் இலக்கியவுலகில் தொடர்ந்து இயங்கி வருபவர். தற்போது ஆங்கிலத்தில் தனது முதல் நாவலை எழுதி முடித்து நூலாக்கத்திற்காகக் காத்திருக்கும் இவர் தனது ஆங்கிலச்சிறுகதைகளை தானே இந்நூலில் மொழியாக்கம் செய்துள்ளார். இவை Dangling Gandhi என்ற இவரது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையின் தமிழ் வடிவம். Dangling Gandhi என்ற இவரது ஆங்கில நூல் இரண்டு முக்கிய அனைத்துலக விருதுகளையும் இந்தியாவில் சில விருதுகளையும் வென்றுள்ளது. இவரது ஆக்கங்கள் வேற்றுமொழியில், குறிப்பாக ஆங்கிலம், ரஷ்யம், இந்தி, ஃப்ரெஞ்சில் மொழிபெயர்ப்பு கண்டு வருகின்றன. தமிழ் நூல்களுக்கு ஆனந்தவிகடன் நம்பிக்கை விருது உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் முக்கிய விருதுகளும் வாங்கியுள்ள இவரது ஒவ்வொரு நூலுமே ஏதோவொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அண்மைக்காலமாக ஓவிய முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். -


முனைவர் இரா பிரேமா: வணக்கம், ஜெயந்தி சங்கர். ‘ஊசலாடும் காந்தி’ மொழியாக்க நூலின் எனது வாசிப்பு அனுபவம் குறித்து உங்களுடன் உரையாட விருப்பம். -

ஜெயந்தி சங்கர்: உரையாடுவோம், டாக்டர். பிரேமா.

முனைவர் இரா பிரேமா: பெரும்பாலும் இந்தக் கதைகளுடைய பின்னணி இந்தியாவாகவும் இந்திய கிராமங்களாகவும் சிங்கப்பூரைப் பற்றிய வரலாற்றுக் கட்டுமானமாகவோ அல்லது நடப்பியல் ரீதியிலான சில பிரச்சினைகளை உள்ளடக்கியவையாக இருக்கின்றன. இவற்றை எழுத எதற்காக ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

ஜெயந்தி சங்கர்: இந்த சிறுகதைகளுக்காக நான் கண்டிப்பாக ஆங்கிலத்தை கையில் எடுக்கவில்லை. மாறாக, ஆங்கிலத்தில் எழுதுவது என்று முடிவெடுத்தபோது எனக்குள் நெடுங்காலமாகவே ஊறிக்கிடந்த சம்பவங்கள், கதைகள், கதாமாந்தர்கள் அம்மொழிக்கேற்ப உருக்கொண்டன. ஆங்கிலத்தில் எழுதாமலிருந்திருந்தால், இவை கண்டிப்பாக தாமதமாகவேனும் தமிழில் உருவாகியிருக்கும். அவ்வளவுதான்.

என் வரையில், எனது சிந்தனைகள் பெரும்பாலும் காட்சிகளாக, ஒலி/ஒளிக் கோர்வைகளாகவே இருக்கின்றன. கற்பனை அவ்வாறு விரிகையில் அரிதாகவே நான் சொற்களில் சிந்திக்கிறேன். அவ்வாறு சிந்திக்கையில் ஆங்கிலத்தில் அதிகமும், தமிழில் குறைவாகவும் சொற்கள் எனக்குள் எழுவது எப்போதுமே உணர்ந்ததுண்டு. ஒரே இடத்தில் அதிக காலம் நான் வசித்தது சிங்கப்பூரில்தான். இளமையில் இந்தியாவெங்கிலும் பல்வேறு மாநிலங்களில் வளர்ந்தவள். 1990 முதலே நான் சிங்கப்பூரில் வாழ்கிறேன். குடும்பத்தில் மூத்தவர்கள், அவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள் என்று பலரும் பல நேரங்களிலும் பகிர்ந்து கொண்டவை எனக்குள் அகலாமல் ஆழக் கிடந்து வருகின்றன.

உதாரணத்துக்கு ‘விசிறி இழுப்பவன்’ (Punkah Wallah) என்கிற கதையை எடுத்துக் கொள்வோம். என் அப்பா பிறப்பதற்கும் முன்னால் நடந்ததாக அப்பாவின் நண்பர், சர்தார்ஜி அங்கிள் ஒருவர் பகிர்ந்து கொண்ட விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது அந்தக் கதை. அப்போது நாங்கள் ஷில்லாங்கில் வசித்தோம். இந்தக் கதையில் நான் பின்புலத்துக்காக சிலவற்றை எழுதுகையில் இன்றைக்கு வாசிப்பவருக்கு வரலாற்றுக் கட்டுமானம் போலத் தோன்றலாம். எனினும், கதைகளின் நோக்கமே வேறு. அது பேச முனைவதும்kஊட வேறு. கதைகள் பேசும்காலமும் வேறு என்பதால், இக்கதைகளை வாசிக்கையில் வாசக மனம் சட்டென்று உள்வாங்கவும் ஏற்றுக் கொள்ளவும் தவறலாம். அதற்கு முக்கியக் காரணம் படைப்பாளியின் வயது, பின்புலம் போன்றவற்றை இயல்பாகவே சேர்த்தே பார்க்கிறதல்லவா வாசக மனம். அது சற்றே விலகினால், கதையை உள்வாங்குவது சுலபம்.

முனைவர் இரா பிரேமா: ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தக் கதைகள் ஏதேனும் இதழ்களில் வெளியாகியிருக்கின்றனவா? அல்லது நேரடியாக நூலாக்கம் பெறுகின்றனவா?

ஜெயந்தி சங்கர்: வாசிப்போம் சிங்கப்பூர் சிறுகதை 2011ல் உள்ளூர் காலாண்டிதழான (அச்சிதழ்) Ceriphல் பிரசுரங்கண்டது. அதனை வாசித்த ரஷ்ய மொழிபெயர்ப்பாளர் ஒருவர் அந்த இதழாசிரியர் மூலமாக என்னைத் தொடர்புகொண்டு அனுமதி பெற்று அதனை ரஷ்ய மொழியில் மொழியாக்கம் செய்து தனது தொகுப்பிலும் சேர்த்தார். The Wagon என்ற அச்சிதழ் ஒன்றை அண்மையில் அமரரான சித்தன் பிரசாத் நடத்தினார். அதன் இரண்டாவது இதழில் 'மயிற்பீலி விசிறி' பிரசுரிக்கப்பட்டு நல்ல கவனம் பெற்றது. தில்லியில் ஓர் எழுத்தாளர் தொகுத்த விளிம்பு நிலையில் இருப்பவர்களைக் குறித்த கதைகள் அடங்கிய 'the Other' என்ற Anthologyயில் 'என் அம்மா ஒரு பெண்ணியவாதி; என்ற சிறுகதை சேர்ப்பதற்குத் தகுதிபெற்றது. indianruminations என்ற இணைய இதழில் பிரசுரிக்கப்பட்ட உழத்திப் பெண் என்ற கதையும் inOpinion இணைய இதழில் பிரசுரங்கண்ட'எல்லைகளுக்கு அப்பால்' கதையும் பலராலும் சிலாகிக்கப்பட்டன. மற்ற கதைகள் நேரடியாக மூல‌நூலில் இடம்பெற்றன.

முனைவர் இரா பிரேமா: நீங்கள் ஒரு சிங்கப்பூர்வாசி. சிங்கப்பூர் ஒரு கடல் சூழ் தீவு. அது நெய்தல் நிலம். கடலுக்கு அருகிலேயே வசிக்கின்றீர்கள். எனினும், உங்கள் கதைகளில் கடல்புறம் வந்ததாகத் தெரியவில்லை. கடலைவிட மலையை தான் உங்களுக்கு அதிகம் பிடிக்கிறது என்று உங்கள் கதைகள் மூலம் அறியமுடிகிறது. முதல் கதையும் ‘தாய்’ கதையும் மலைப் பிரதேசத்தில் நடப்பவை. இது இயல்பாக நடந்ததா?

ஜெயந்தி சங்கர்: தமிழில் நான் ‘நெய்தல்’ என்ற ஒரு நாவலே எழுதியிருக்கிறேன் என்பது சிறு தகவலுக்கு. கண்டிப்பாக, எழுதுவதற்கு நிறையவே இருக்கின்றன. இன்னும் ஆக்கங்கள் என்னிலிருந்து உருவாக வேண்டியுள்ளன. 2015 முதல் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியுள்ளேன். இன்னும் போகவேண்டிய தூரம் மிக அதிகம். நெய்தல் நிலம் சார்ந்து எழுதவும் வாய்ப்புகள் பல ஏற்படும். அது ஒருபுறமிருக்க, எல்லாவிதமான இயற்கைக் காட்சிகள் நிரம்பிய நிலப்பரப்பையுமே மிக ரசிப்பேன். இருந்தபோதிலும், எனக்கு மலைகள்தான் மிக விருப்பமாக இருக்கின்றன என்பதும் ஒருவகையில் உண்மைதான்.

முனைவர் இரா பிரேமா: இக்கதைகளில் சொல்லப்பட்டவை 50 விழுக்காட்டுக் கதைகள் விளிம்புநிலை மனிதர்களைப் பற்றியவையாக இருக்கின்றன. ஆனால், விளிம்பு நிலையில் இருந்துகொண்டு எழுதப்படும் கதைகளில் காணக் கூடிய இயல்புத் தன்மை இவற்றில் இல்லை. அதற்கான காரணமும் எனக்குப் புரியும். ஏனெனில், விளிம்புநிலையில் வாழக்கூடிய சிங்கப்பூர்வாசியாக நீங்கள் இல்லை. கண்ணால், கண்ட, காதால் கேட்ட, அனுபவித்தவற்றை கதைப்படுத்தியிருக்கிறீர்கள். அதனால், ஓர் அந்நியத் தன்மையை உணர்கிறேன். இதனை என்னுடைய தனிப்பட்ட கருத்தாக மட்டுமில்லாமல் பெரும்பாலான வாசகர்களுக்கும் இது போன்ற உணர்வேற்படும் என்று நினைக்கிறேன். இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

ஜெயந்தி சங்கர்: படைப்பாளி ஒரு தனிமனிதராக தனக்கேற்பட்ட அனுபவத்தை மட்டுமே தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க‌ முடியுமா? கற்பனையிலேயே பல்லாயிரக்கணக்கான வாழ்க்கைகளை வாழ்ந்துவிடத் துடிக்கும் மனம் கொண்ட படைப்பாளி தன்னையும் தன்னியல்பையும் தக்க வைத்துக் கொண்டபடியேதான் அவ்வாறு எண்ணற்றவர்களின் வாழ்க்கையையும் வாழ்ந்து உணர்வுகளையும் பெறுவதால் பெரும்பாலும் ஒருவித பிழற்வு நிலையில் இருக்கவும் நேர்கிறது. அது ஒருபுறமிருக்க, விளிம்பு நிலையில் இல்லாத படைப்பாளி விளிம்பு நிலையில் உள்ளவர்களின் கதைகளை எழுத முடியுமா? சிறப்பாகவே எழுதமுடியும். உண்மையில் அவ்வாறான உணர்வுகளையும் வலிகளையும் தனதாக்கிக் கொண்டு எழுதுவதால் முடியும். சின்ன உதாரணத்துக்காக இப்படிச் சொல்லலாமா? மரணங்கள், பெற்ற பிள்ளையின் மரணத்தைக் காணும் பேரவலம், பாலியல் வல்லுறவுகள், கயமைகள் எங்குமே நிகழ்கின்றன, இல்லையா? அவற்றை எழுத முனையும் படைப்பாளி அவற்றை அனுபவிக்காமல் எழுதியிருக்கிறார் என்பதை மனத்திலிருந்து எடுத்தெறிந்து விட்டு வாசிக்கையில் மட்டுமே புனைகதைகளை சரியாக வாசகர் உள்வாங்குவார்.

இத்தொகுதியில் கதைவெளி, மாந்தர், காலம் எல்லாமே தமிழ்வாசகருக்கு அதிகமும் பரிச்சயமில்லாததாக இருப்பதாலும்கூட அவ்வாறு தோன்றலாம். எந்த பூகோள எல்லையிலும் விளிம்பு நிலையில் இருப்பவர்களின் கதைகள் சொல்லப்பட்டே வருகின்றன. ஒரே பகுதியில் ஒரே சமூகத்தை சார்ந்து சொல்லப்படும் பல கதைகளின் மொழியும் பலவிதமாய் அமைகின்றன. படைப்பாளியின் பெயரை நீக்கிவிட்டு கதையை வாசிக்கக் கொடுத்து விட்டு பின்னர் படைப்பாளியின் பெயரைச் சொல்வது நமது தமிழ் வாசகர்களுக்கு மிக ஏற்ற முறையாக இருக்குமோ என்று பலதடவை நான் பயிலரங்கம் நடத்துகையில் வலியுறுத்திப் பேசியது இப்போது நினைவிலாடுகிறது.

முனைவர் இரா பிரேமா: இந்தக் கதைகள் பெரும்பாலும், பொதுவாக சிறுகதைகளுக்கு இலக்கணமாக சொல்லப்படுகின்ற ஒரே சிட்டிங்கில் படித்து விடுகிற கதைகள் அல்ல. எந்தக் கதையையுமே நான் ஒரே சிட்டிங்கில் படிக்கவில்லை. காரணம், அவற்றில் இருந்த கனம். அவற்றில் இருக்கக்கூடிய உத்திகள். பொதுவாக, இந்தக் கதைகளைப் பொருத்தவரைக்கும், சாதாரணமாக கதை கூறும் எழுத்தாளர்களிலிருந்து நீங்கள் பலபடிகள் மேலே சென்று உத்திகளோடு வாசகனை திரும்பத் திரும்ப வாசிக்க வைத்து கதையினுடைய கருவை, கதைகூறும் பாங்கை புரிந்து கொள்ள வைத்திருக்கிறீர்கள். என்னைப் பொருத்தவரை ஆங்கில மூலத்தில் படிப்பவராக இருந்தாலும் சரி, தமிழ் மொழியாக்கத்தை வாசிப்பவராக இருந்தாலும் சரி, உடனடியான வாசிக்கக் கூடிய கதைகளாக இவை இல்லை. தேர்ந்த எழுத்தாளரால், தேர்ந்த வாசகனுக்கு எழுதப்பெற்ற கதைகளாக அமைந்துள்ளன என்பது என்னுடைய கருத்து. இதைப் பற்றி நீங்கள் கூற விரும்புவது?

ஜெயந்தி சங்கர்: எந்த மொழியானாலும், புனைவில் படைப்பாளியும் வாசகரும் இணைந்து பயணிக்கக்கூடிய காலம் இது. வாசகருக்கு இலகுவாக சிறுகரண்டியைக் கொண்டு ஊட்டிவிடும், அவருக்கு எளிதாகப் புரியவேண்டுமென்றே எழுதுப்படும் சிறுகதைகளுக்கான காலம் எப்போதோ காலாவதியாகிவிட்டது. ஆங்கிலம், தமிழாக்கம் என்பதையெல்லாம் கடந்தும், கண்டிப்பாக இந்தக் கதைகள் பொழுதுபோக்குக்கதைகளோ அறநெறி கூறும் வழக்கமாக கதைகளோ அல்ல. தற்கால நவீன கதை சொல்லலில் வரக்கூடிய இந்தக் கதைகள் வாசகரின் ஈடுபாட்டையும் வாசிப்பில் உழைப்பையும் கோரக்கூடியன. அவை வாசகர் தரப்பில் இல்லாது போகும்பட்சத்தில் இக்கதைகள் அவரை சென்றடையாது என்பதும் உண்மைதான்.

முனைவர் இரா பிரேமா: இந்நூலில் பெரும்பாலும் நெடுங்கதைகளாக இருக்கின்றன என்பதை கவனிக்க முடிகிறது. இது குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

ஜெயந்தி சங்கர்: தமிழில் நெடுங்காலமாக சிறுகதைகளுக்கு உரிய இலக்கணங்களாக பொதுவாக அறியப்படும் எவ்விதக் கோட்டுக்குள்ளும் பயணிக்காத கதைகள் இவை. கதைக் கரு, கதாபாத்திரம் இணைந்து இக்கதைகளை உருவாக்கியுள்ளன என்றுகூடச் சொல்லலாம். சீரிய பரிட்சார்த்தங்களாக, முதன்மை பாத்திரங்களே முன்செலுத்தும் கதைகளாக, எந்தத் திட்டமிடலோ, தாக்கமோ இல்லாமல் உருவான‌ ஆக்கங்கள் இவை. மயிற்பீலி விசிறி என்ற சிறுகதையை வாசித்த முதல் வாசகர்களுள் ஒருவர் இடாலோ கால்வினோவின் தாக்கம் இருப்பதாகச் சொன்னார். அதன்பிறகுதான் அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு நான் இடாலோ கால்வினோவின் ஆக்கங்களைத் தேடி வாசிக்க முயன்றேன்.

முனைவர் இரா பிரேமா: பொதுவாகவே உங்களுக்கு இடங்களைப் பற்றிய அறிவும், பிரதேசங்களைக் குறித்து அறியும் ஆர்வமும் இனங்கண்டு கொள்ளக் கூடிய அறிவும் இருக்கிறதாக உணர்கிறேன். எந்தக் கதையை எடுத்துக் கொண்டாலும் இந்தத் தெருவில் சென்றார்கள், இந்த மண்டபத்தில், இடத்தில் இருக்காங்க, நூலகத்தில் இருக்காங்க என்று இடங்கள் குறித்துப் பேசுகிறீர்கள். இந்த 12 கதைகளை வைத்து இவற்றை அவதானிக்கிறேன். இடங்கள், நிலப்பரப்பு சார்ந்த ஆர்வம் உங்களுக்கு எப்போதுமே இருந்துள்ளதா?

ஜெயந்தி சங்கர்: சிறுவயது முதலே சுற்றுப்புறத்தை, புதிய இடங்களை அமைதியாக அவதானிப்பது என்னில் படிந்திருக்கிறது என்பதை நான் எழுதத் தொடங்கிய பிறகுதான் அறிந்துகொண்டேன். பல்வேறு மாநிலங்களில் வளந்தவள் நான். புதிதாகப் போகும் இடங்களில் படிந்து பழகுவது எனக்குள் ஏற்பட்டதோர் இயல்பாகவே இருக்க வேண்டும். ஒரு கதைக்கு கதாமாந்தர், தம் இயல்பு எத்தனை முக்கியம் என்று நாம் அறிவோம். கதாபாத்திரம் வாழுமிடம், வசிக்குமிடம் அல்லது சம்பவம் நடக்குமிடம் போன்றவற்றை காட்சிப்படுத்தினால், வாசகர் கதைக்குள் போகவும் உணர்ந்து நன்கு ரசிக்கவும், யோசிக்கவும் மேலும் சிறப்பாக முடியும் என்று நம்புகிறேன்.

பழந்தமிழிலக்கிய‌ங்களில் திணை விவரிப்புகள் மிகத்தூக்கலாக இருக்கும் வாழ்க்கைமுறைக் குறிப்புகளை, ஹெமிங்வேயின் கதைவெளியில் வாசித்த விவரணைகளை உள்வாங்கிய நமக்கு இதெல்லாம் புதிதா என்ன?

முனைவர் இரா பிரேமா: இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட கதைகளாக விரிகின்றன. இது திட்டமிட்ட ஒன்றா?

ஜெயந்தி சங்கர்: இந்நூலில் உள்ள ஒரு சிறுகதையைத் தவிர மற்ற சிறுகதைகள் 2014 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. இருபதாண்டு காலம் தமிழில் எழுதி வந்த நிலையில் நான் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியதும் முன்னரே நடந்திருக்க வேண்டியது, தாமதமானது. எந்தவிதத் திட்டமுமின்றி தேர்ந்தெடுக்கப்பெற்ற பல்வேறு கருப்பொருள்களில் எழுதினேன். இந்தக் கேள்வியை எதிர்கொள்ளும் இந்த தருணத்தில் பின்னோக்கி சிந்திக்கையில்தான் அவை அவ்வாறு இயல்பாய் அமைந்து போயின என்பதை நானுமே உணர்கிறேன். எனினும், சமகாலத்தைப் பேசும் கதைகள் ஐந்து இதிலுண்டு என்பதனையும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

முனைவர் இரா பிரேமா: 1920கள் தொடங்கிய‌து காந்தி சகாப்தம். 1948ல் அவர் இறந்த பின்னரும் கிட்டத்தட்ட 40, 50 ஆண்டுகள் அவர் அதிகம் பேசப்பட்டிருக்கார். இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் தனது அகிம்சை போராட்ட முறையால் பலரையும் கவர்ந்திருக்கிறார். அத்தோடு சில போராட்ட முறைகளுக்கும் அவரது கொள்கை துணை நின்றிருக்கிறது. குறிப்பாக, மார்ட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்களுடைய போராட்டங்களை சொல்லலாம். ஆனால், இன்றைக்கு இந்தியாவிலும் சரி, உலகளவிலும் சரி காந்தியம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. இந்தியாவிலோ புறந்தள்ளப்பட்டு வருகிறது. அச்சூழல் உருவாகி வருகிறது. அதனால் உங்களுடைய சிறுகதைக்கும் நூலுக்கும் அப்பெயர் வைக்கப்பட்டுள்ளதா?

ஜெயந்தி சங்கர்: எந்தப் பண்பாடும் மரபும் போற்றுவதுதான் அகிம்சை என்பதும். அவ்வாறு காலங்காலமாக நிலவி வந்திருந்த ஓர் உன்னதச் சிந்தனையைத் தனியே பிரித்து அதிக‌ முக்கியத்துவம் அளித்து முதன்மைப் படுத்தியதோர் அரிய பணியைச் செய்தவர் காந்தியடிகள். அவரது சுதந்திரப் போராட்டம் அகிம்சாவழியில் நடக்க வேண்டுமென்று அவர் மிக முனைந்தார்; முன்னெடுத்தார். அவரிடமிருந்த அகிம்சை என்ற ஒரே ஆயுதம் அவருக்கு முக்கியமானது. அதனைக் கூர் தீட்டும் பணியும்தான். அவ்வகையில் உலகளவில் அவரும் அவரது அகிம்சாவாதமும் எப்போதுமே முக்கியத்துவம் பெறும். காந்தியைக் குறித்தும், அவரது கோட்பாடுகள் குறித்தும் சாதாரணமாக யாருக்குமே தெரிந்தவைதான் நான் அறிந்தவையும். எல்லோருக்குள்ளும் காந்தியின் கோட்பாடான அகிம்சை தங்கிப் போவது போலதான் எனக்குள்ளும் இறங்கியிருக்கிறது. உலகளவில் அகிம்சை என்பதன் மீதான புரிதலுமே தற்காலத்தில் மாற்றங்கள் கண்டு வருகின்றது என்பது நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. அது ஒருபுற‌மிருக்க, நூலில் உள்ள ஒரு சிறுகதையில் வரும் சின்னஞ்சிறு சம்பவம் அக்கதைக்கு அத்தலைப்பை அளித்த‌து. அந்தத் தலைப்பு தற்காலப் போக்குகளுக்குப் பொருத்தமானதாக அமைந்திருப்பதை உணர்ந்து கொண்டதால், நூலுக்கான தலைப்பாக அதனை நான் தேர்ந்தெடுத்தேன். தலைப்பும் அந்தக் கதையுமேகூட உண்மையில் ஒரு படிமமாகவே விளங்குகின்றன. மற்றபடி, நூலில் என் மனத்துக்கு அதிகம் பிடித்த சிறுகதைகள் வேறு, அதற்கான காரணங்களும் வேறு.

முனைவர் இரா பிரேமா: இந்தத் தொகுப்பின் கதைகளில் கதையைக் காட்டிலும் விவரணைகள் அதிகமாக உணர்கிறேன். இதைப் பற்றிய‌ தங்களுடைய கருத்தென்ன?

ஜெயந்தி சங்கர்: ஆங்கில மூல நூலை வாசித்த ஒரு வாசகி விவரணைகள் சில இடங்களில் குறைவாகவும் பல இடங்களில் கச்சிதமாகவும் இருப்பதாய்க் கூறினார். ஆக, வாசக அனுபவம் மிக வேறுபட்டது. இந்தச்சிறுகதைகள் காலங்களை, நிலப்பரப்பை எல்லாம் கடந்து விரிகின்றன என்கிற நிலையில் அவ்வந்த காலகட்டம், அவ்வந்த நிலப்பரப்பு சார்ந்த உணர்வுகளை வாசகருக்குள் உருவாக்கி அதனூடே கதை சொன்னால் மட்டுமே முழுவதுமாக உள்வாங்க முடியும். அந்த‌க் கருப்பொருள்கள், கதைகள், கதைகளின் காலம் ஆகியன கோரிய விவரணைகளை தக்கவாறு அளவோடு செதுக்கிக் கொடுக்கவே முயன்றிருக்கிறேன்.

முனைவர் இரா பிரேமா: ஓர் எழுத்தாளராக ஆங்கிலத்தில் இக்கதைகளை நீங்கள் எழுதியது, ஒரு மொழிபெயர்ப்பாளராக அவற்றை நீங்களே மொழியாக்கம் செய்தது, ஆகிய இரண்டில் நீங்கள் எதை அதிகம் விரும்பினீர்கள்? ஏன்? இதில் ஒன்றை விட மற்றொன்று எளிதாக இருந்ததா, கடினமாக இருந்ததா?

ஜெயந்தி சங்கர்: படைப்புவெளிதான் எப்போதுமே என் மனத்துக்கு மிக நெருக்கமானதாக இருந்து வருகிறது. ஆகவே, முதலில் ஆங்கிலத்தில் எழுதியபோதுதான் மிக மகிழ்ச்சியடைந்தேன். சவாலையும் உண‌ர்ந்தேன். மொழியாக்கம் கோரியதைக் காட்டிலும் , ஆங்கிலத்தில் எழுதுகையில்தான் வடிவம், கச்சிதம் சார்ந்த சவால்கள் பலவும் என்னுள் எழுந்தன. கதைகள் உருவாகி வருகையில், அதே சவால்கள் மெல்ல மெல்ல விலகி, மனத்துக்கு மிகுந்த உவகையும் ஏற்பட்டது.

முனைவர் இரா பிரேமா: தங்களுடைய மொழிபெயர்ப்பில் ஒருவித தூய தமிழ்த் தன்மை காணப்படுகிறதே, அது ஏன்? ஏனென்றால், இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் தூய தமிழ் பேசப்படுவதோ எழுதப்படுவதோ இல்லை. அதனால், இதில் ஓர் அந்நியத்தன்மை காணப்படுகிறதோ என்று தோன்றுகிறது. இதைப் பற்றிய தங்கள் கருத்து என்ன?

ஜெயந்தி சங்கர்: இரண்டு விஷயங்களை நாம் மறக்க முடியாது. முதலாவது, கதைகள் நடக்கும் காலம். இரண்டாவது, இவை மொழியாக்கம் என்பது. தமிழ் மொழியானது அரை நூற்றாண்டுக்கு முன்னர் பேசப்பட்டது போல இப்போது இல்லை. ஆங்கிலத்துக்குமே அது பொருந்தும். அரை நூற்றாண்டு, ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் புழங்கப்பட்ட ஆங்கிலம் இன்று புழக்கத்தில் இல்லை, அல்லவா?
அவ்வகையில் கதாபாத்திரங்கள், கதை நிலங்கள், சம்பவங்களுக்குத் தேவைப்பட்ட எளிய மொழியைத் தேர்ந்தெடுத்தேன். தற்காலக் கதாபாத்திரம் பயன்படுத்தும் சொல்லை அரை நூற்றாண்டுக்கு முன்னர் உலவும் கதாபாத்திரம் பயன்படுத்த வழியில்லை. இப்போதுமே, வட்டாரத்துக்கு வட்டாரம் மொழியானது வேறுபடுகிறது. குறிப்பிட்ட சமூகத்தினர் தங்களிடையே, அல்லது வீட்டுக்குள் பேசும் தமிழானதுகூட முன்பு போல இப்போது கிடையாது. முதலில் மொழியாக்கம் செய்ய முயன்ற நண்பர் மாதிரி அனுப்பியதுமே, அந்த மொழியாக்கம் கொஞ்சம் நெருடலாய் கரடுமுரடாய்த் தோன்றியதால்தான் நானே செய்வதென்று தீர்மானித்தேன். அதுவுமே நல்லதாகப் போயிற்று. கூர்மையும் இலகுவுமாக மொழியாக்கம் அமைந்துவிட்டது.

முனைவர் இரா பிரேமா: இந்தக் கதைகள் அதிக அளவிலான வரலாற்று ஆவணங்களாக விளங்குகின்றன. இதற்காக தாங்கள் தகவல்கள் திரட்ட எடுத்துக் கொண்ட கால அளவும் பிரயத்தனங்களும் கதையை எழுதிய கால அளவை விட அதிகமாக இருந்ததா?

ஜெயந்தி சங்கர்: புதிய கதை சொல்லலுக்குப் பழக்கப்படாத வாசக‌ருக்கு ஏற்படும் உண‌ர்வுதான் இது. அவ்வந்த காலகட்டம், அவ்வந்த நிலப்பரப்பு சார்ந்த உணர்வுகளை வாசகனுக்குள் எழுப்பி அதனூடே கதைகள் நகர்வதால் வரலாற்று ஆவணங்களாக விளங்குவது போன்ற உணர்வேற்படுவது இயல்புதான். எனினும், கதைகளின் நோக்கம் கண்டிப்பாக அதுவல்ல. கதைகளை எழுதும்போது இருக்க வேண்டிய கவனக்குவிப்பும், கற்பனைச் செயல்பாடும் கச்சிதப்படுத்துவதும்தான் என்னிடமிருந்து காலத்தையும் உழைப்பையும் கோரின.
கதைகளும் கதாமார்ந்தர்களும் கதைநிலங்களும் சம்பவங்களும் அவைசார்ந்தகாலமும் எனக்குள்ளே சிறுவயது முதலே இருந்து வந்த நிலையில், கதைகளை எழுதுகையில் சில தகவல்களை சரிபார்த்துக் கொண்டேன் என்பதைக் கடந்து பெரிதாக நேரமோ பிரயத்தனங்களோ தேவை இருக்கவில்லை.

முனைவர் இரா பிரேமா: இந்த நூலில் நேரடிக் கதை என்று சொல்லக் கூடியவை 20 விழுக்காடு தான் இருக்கின்றன. பெரும்பாலும் இன்றைக்கு 'போஸ்ட் மாடனிஸ்டிக் தியரி', 'நான் லீனியர்' எனக் கருதக் கூடிய கதைகளாக அமைந்துள்ளன. இவை இயல்பாய் அமைந்தனவா, அல்லது திட்டமிடப்பட்ட ஒன்றா? தமிழில் தாங்கள் எழுதிய கதைகளை ஆய்வு நோக்கில் ஒட்டுமொத்தமாக திட்டமிட்டு வாசிக்காவிட்டாலும் ஓரளவு பரவலாக வாசித்திருக்கிறேன். அதனால், சாதாரண ஒரு வாசகியாக உங்கள் எழுத்தைப் பற்றி ஓரளவு அறிவேன். குறிப்பாக சிறுகதைகளைப் பற்றி. நான் பார்த்தவரை அவற்றில் நான் லீனியர் எழுத்துமுறை இருந்தது போலத் தெரியவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் எழுதுகையில் அந்த உத்திகளைப் பயன்படுத்தினீர்களோ என்று அறிய ஆர்வம்.

ஜெயந்தி சங்கர்: இந்தக் கதைகள் திரண்டு உருவாகி வருகையில் நான் உணராததும், எழுதி முடித்து வாசிக்கையில் நான் உணராததும் பின் நவீனத்துவக் கூறுகளும் ’நான் லீனியர்’ கூறுகளும். அக்கூறுகள் கதைகளில் இயல்பாய் அமைந்து போனதாக முதல் இரு வாசகர்கள் சுட்டும் வரை அந்தத் திசையில் நான் யோசித்திருக்கவே இல்லை. அது பற்றிய பேச்சு வந்ததும்தான், எனக்குள் இருந்த வாசகி அவற்றை அடையாளம் கண்டுகொண்டாள். எப்போதுமே கதை சொல்லல் உத்தியை நான் கருப்பொருளுக்கு ஏற்ப யோசித்து முடிவெடுப்பதுண்டு. எனினும், எழுதுகையில் எனக்கு பெரும்பாலும் இசங்கள், தியரிகள் போன்வற்றில் கவனங்கள் செல்வதில்லை. பிற்பாடு ஆக்கத்தை வாசகர் வகைமைக்குள் அடைக்கையில் தள்ளி நின்று அவதானிக்கும்போதுதான் எனக்குமே சரியெனப் புலனாகிறது.

முனைவர் இரா பிரேமா: நன்றி, வணக்கம்.

ஜெயந்தி சங்கர்:  உங்களது மேலான வாசிப்புக்கு மிக்க நன்றி, வணக்கம்.