(நிசான் கார் தொழிற்சாலையில் (Renault nissan automotive india Pvt ltd) பணிபுரியும் தோழர்கள் மத்தியில்“சூம்” (zoom) இணைய வழியில் வகுப்பெடுத்தேன், கலந்துரையாடினேன். அதன் எழுத்து வடிவத்தை இங்கே காணலாம். அந்த காணொளியைக் கீழே காணலாம்.)

இன்று இயக்கவியலைப் (Dialectic) பார்க்கப் போகிறோம். இயற்கை, சமூகம் ஆகியவை ஒரு விதிக்குள் தான் இயங்குகிறது. அனைத்து நிகழ்வுகளையும், விதி என்று கூறிடமுடியாது. அதாவது நிகழ்வது அனைத்தும் விதியாகாது. அவசியமான, உறுதியான, மீண்டும் மீண்டும் நடைபெறுவதையே விதி என்று கூறப்படுகிறது. செழிப்பாக வளர்ந்து கொண்டிருக்கும், இன்றைய சமூகம், ஒரு மாறுதலுக்கு உட்பட்டு, அடுத்தப் புதிய சமூகத்திற்கு மாறும் என்பதை இயக்கவியல் ஏற்றுக் கொண்டு, விளக்குகிறது. அதனால் தொழிலாளர்களுக்குத் தேவையான அணுகுமுறை இயக்கவியல் ஆகும். இன்றைய சுரண்டும் சமூகம் நீடித்திருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இயக்கவியலை மறுக்கின்றனர். அவர்கள் இயக்கவியலுக்கு மாறான இயக்கமறுப்பியலை ஏற்கின்றனர். இன்று நாம் இயக்கவியலைப் பற்றிப் பார்ப்போம்.

மார்க்சியத் தத்துவமான, பொருள்முதல்வாதம் இயக்கவியல் அணுகுமுறையையே ஏற்கிறது. அதனால் தான் மார்க்சியத் தத்துவத்தை, இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. மார்க்சிய அரசியல் பொருளாதாரம், இயக்கவியலால் அணுகப்பட்டது. மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்கிற நூல், இயக்கவியல் முறையால் எழுதப்பட்டது. அதனால் தான், மார்க்சியர்கள், கம்யூனிஸ்டுகள் இயக்கவியலை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இயக்கவியலின் தொடக்கத்தை. பண்டைய காலத்தில் காணலாம், இந்தியாவில் தர்க்கவியல் அணுகுமுறை பண்டைய காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றே ஆகும். இயக்கவியலை அன்று தர்க்கவியல் என்றே அழைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் logic என்று அழைக்கப்படுகிறது. அதே போலப் பண்டைய கிரேக்க தத்துவவாதிகள் இயல்பிலேயே இயக்கவியலை அதாவது தர்க்கவியலை கடைப்பிடிப்பவர்களாக இருந்துள்ளனர். ஆனால் இடையில் அம்முறை கைவிடப்பட்டது. பின்னால் வந்த தத்துவவாதிகள் இயக்கவியலை ஏற்றுக் கொள்ளவில்லை. ஜெர்மனியில், ஹெகல் என்கிற தத்துவவாதியால் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கவியல் கொண்டுவரப் பட்டது. ஹெகலினுடைய, இயக்கவியலின் தொடர்ச்சி என்று மார்க்சிய இயக்கவியலைக் கூறினாலும், இரண்டும் ஒன்றல்ல - வேறுபட்டதாகும். ஹெகலின் இயக்கவியல் கருத்துமுதல்வாத மாயவாத தன்மையில் சிக்கியிருக்கிறது. மார்க்சின் இயக்கவியல் கருத்துமுதல்வாத பிடியில் இருந்து விடுபட்டு, தலைகீழ் மாற்றத்தைப் பெற்றுள்ளது. அதாவது மார்க்சின் இயக்கவியல் பொருள்முதல்வாதத் தன்மையானது இங்கே இத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, மார்க்சிய இயக்கவியலைப் பற்றிப் பார்ப்போம்.

ஒருநிகழ்வு நடைபெறுகின்றது என்றால், அது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தில் இருந்து, விடுபட்டுத் தனித்துச் செயற்படுவது கிடையாது. ஒன்றுடன் ஒன்று தொடர்பின்றி எந்த நிகழ்வும் நடைபெறுவதில்லை. அனைத்தும் பரஸ்பரத் தொடர்பில் இருக்கிறது. இந்த இணைப்பை பொருளாயத ஒருமை என்று கூறப்படுகிறது. அனைத்து இடைத்தொடர்புகளையும் நிறுவுகின்ற பொது விதிகளைத் தான் இயக்கவியல் விதிகள் என்று அழைக்கப்படுகிறது.

இயக்கவியலின் பொதுவிதிகள் மூன்றாகும்.

1) அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றமாக மாறுவது பற்றிய விதி.
2) எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய விதி.
3) நிலைமறுப்பின் நிலைமறுப்பு பற்றிய விதி

இந்த மூன்று விதிகளும் தனித்தனி விதிகள் தான், என்றாலும், ஒன்றை ஒன்று பின்னிப்பிணைந்து உள்ளது. இதில் உள்ள, எந்த விதியையும், தனியாகப் பிரித்துப் புரிந்து கொள்ள முடியாது. மூன்றையும் புரிந்து கொண்டால் தான், ஒவ்வொரு விதியையும் சிறப்பாகப் புரிந்து கொள்ள முடியும். மூன்று விதிகளையும் பார்த்துவிட்டு, ஒவ்வொரு விதியாக மீண்டும் பார்க்கும் போது மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

முதல் விதியைப் பார்ப்போம்.

1) அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றமாக மாறுவது பற்றிய விதி.

ஒரு பொருளை வேறுபடுத்திக் காட்டுவது, அது மற்றொரு பொருளின் பண்பைவிட வேறுபட்டதாக இருப்பதனால் தான். ஒரு பொருள் மற்றொரு பொருளுடன் வேறுபட்டுக் காணப்படுவதனால் தான் உலகில் பல்வேறு பொருட்களை இனம் காண முடிகிறது. கார் என்றும் பஸ் என்றும் வேறுபடுத்துவது, அதன் பண்புகளைக் கொண்டு தான். நான்கு அல்லது ஆறு பேர் அமர்ந்து செல்லக்கூடியது கார். நாற்பது அல்லது ஐம்பது பேர் அமர்ந்து செல்லக்கூடியது பஸ். நான் மிகமிக எளிய உதாரணத்தையே அதாவது அமவர்பவர்களின் எண்ணிக்கை வேறுபாட்டையே இங்கே கூறியுள்ளேன். காருக்கும் பஸ்சுக்கும் உள்ள பல அளவுகளில் உள்ள பண்பு வேறுபாடு உங்களால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அதாவது கார் தொழிலாளர்களான உங்களால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். உதாரணம், விதியைப் புரிந்து கொள்வதற்குத் தான். அந்த உதாரணத்தைக் கொண்டு விதியை குறுகிக்கிக் கொள்ளக்கூடாது. விதியின் விரிவானப் பொருளின், ஒன்றை மட்டுமே அந்த உதாரணம் விளக்குகிறது. விதியின் பல்வேறு பகுதிகளில் ஒன்றைத் தான், ஒவ்வொரு உதாரணமும் விளக்குகிறது. அதனால் உதாணரத்தை புரிந்து கொண்டது, விதியைப் புரிந்து கொண்டதாகாது. உதாரணங்கள் விதியின் ஒரு பகுதியை மட்டுமே விளக்குகிறது.

இந்த விதி அளவு மாற்றங்கள் பண்பு மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை விளக்குகிறது. ஒரு பொருள், மற்றொரு பொருளாக மாறுவதற்கு, அதன் அளவு மாற்றமே காரணம் ஆகும். அதாவது ஒரு பொருளில் உள்ள உள்முரண்பாடுகளில் ஏற்படுகிற அளவு மாற்றமே அதன் பண்புநிலை மாற்றத்துக்குக் கொண்டு செல்கிறது. ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். இந்த உதாரணம் வடிவ மாற்றமாக இருந்தாலும், இதுதான் எளிய உதாரணமாகும். ஹெகல் காலத்தில் இருந்தே, இந்த உதாரணத்தையே உதாரணமாகக் கொள்ளப்படுகிறது. அந்த உதாரணம் நீர் ஆகும். நீர், 100 டீகிரி செல்சியஸ் கொதி நிலைக்கு உள்ளாகும் வரை, அது நீர் என்ற பண்பையே கொண்டுள்ளது. 100 டீகிரி செல்சியஸ் அளவைத் தொட்டவுடன் அது ஆவி என்கிற பண்பு கொண்ட வடிவ மாற்றம் அடைகிறது. அதாவது திரவ நிலையில் இருந்து ஆவி நிலைக்குச் செல்கிறது. அதே போல் நீர், குளிர்ச்சுக்கு உள்ளாகும் போது அது 0 டீகிரி செல்சியஸ் அளவுக்குக் குறைவாகச் செல்லும் நிலையில், அது பனிக்கட்டி என்கிற பண்பைக் கொண்ட வடிவமாக மாறுகிறது. இங்கே திரவம் என்கிற நிலையில் இருந்து திட நிலைக்கு மாறுகிறது. இந்த நீர், ஆவி, பனிக்கட்டி என்கிற பண்பு மாற்றங்கள் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களால் தான் உருவாகுகின்றன. இது ஒரு எளிய உதாரணமே என்றாலும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு இதுவே சிறந்த உதாணரமாகும். அளவு மாற்றம் ஏற்படத் தொடங்கியவுடனேயே அதன் பண்பு நிலையில் மாற்றம் ஏற்பட்டுவிடுவதில்லை, குறிப்பிட்ட அளவு எல்லையைத் தொட்ட உடன் தான், அது மற்றொரு பொருளாக மாறுகிறது.

அனைத்தும் மாறிக் கொண்டு தான் இருக்கிறது. அதனுள் ஏற்படுகிற அளவு மாற்றம் படிப்படியாக வளர்ந்து, குறிப்பிட்ட எல்லையை எட்டியவுடன், அதன் பழைய பண்பு முடிவு பெற்று, புதிய பண்பாக மாறுகிறது. குறிப்பிட்ட அளவுநிலை மாற்றங்கள் ஏற்படும் வரை. பண்புநிலையில் மாற்றங்கள் ஏற்படுவதில்லை, என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். பிராண வாயுவுக்கும் ஓசோன் வாயுக்கும் உள்ள மூலக்கூறுகளில் எண்ணிக்கையில் மட்டுமே மாறுபடுகிறது. அதாவது பிராண வாயும் ஓசோன் வாயும் ஒரே மூலக்கூறுகளைக் கொண்டதாக இருக்கிறது. ஆனால் அதன் அளவு மாற்றமே அதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. இதன் மூலம் அளவு மாற்றமே பண்பு மாற்றத்தைத் தீர்மானிக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அளவுநிலையில் ஏற்படுகிற மாற்றங்கள் படிப்படியாக நடைபெற்று, குறிப்பிட்ட எல்லையைத் தொட்டவுடன், பழைய பண்பின் முறிவும், புதிய பண்பின் தொடக்கமுமாய், பாய்ச்சலாக ஏற்படுகிறது.

இதனை இன்னும் தெளிவாகக் கூறவேண்டும் என்றால், அளவுநிலையில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்பட்டவுடன், அந்த அளவு மாற்றம், பழைய பண்போடு முரண்படுகிறது. அந்த முரண்பாடு புதிய பண்புடைய பொருளை படைக்கும் போது தீர்க்கப்படுகிறது. இந்த இயக்கவியல், இயற்கைக்கும் சமூகத்திற்கும் பொருத்தமானது.

2) எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய விதி.

மூன்று இயக்கவியல் விதிகளில், இந்த விதியை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். பார்ப்பதற்கு இது ஒரு கடினமான விதியைப் போல இருக்கும் ஆனால் விளக்கம் பெற்றவுடன் இதனை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். பொருளாக இருந்தாலும் சரி, சமூகமாக இருந்தாலும் சரி அதன் உள்முரண்பாடே வளர்ச்சிக்குக் காரணமாகிறது. வர்க்க முரண்பாடே சமூக வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. அதே போலத் தான் ஒவ்வொரு பொருளுக்கும் அதில் உள்ள முரண்பாடே வளர்ச்சிக்குக் காரணமாகிறது. ஒன்றின் இருப்பு ஒற்றுமையைச் சார்ந்தது, வளர்ச்சி முரணைச் சார்ந்ததும். இந்த விதியில் இருக்கின்ற ஒற்றுமை என்பது அதன் இருப்பைக் குறிப்பிடுகிறது, போராட்டம் என்பது அதன் வளர்ச்சியைக் குறிக்கிறது. முரண் என்பதே போராட்டம் தான், அந்த முரணே அதன் வளர்ச்சிக்குக் காரணமாகிறது.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் எதிர்நிலைகள் பரஸ்பரம் முரண்பட்டு இருப்பது அவற்றின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. இந்த முரண்பாட்டை ஏன் ஒற்றுமை என்று குறிப்பிடுகிறோம், ஏன்னென்றால் ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை என்பதனால் தான் முரணின் ஐக்கியத்தை ஒற்றுமை என்று கூறப்படுகிறது. பொருள் அல்லது நிகழ்வின், முரண்பாட்டின் எதிர்க்கின்ற போக்கு அதாவது நிராகரிப்பது, அந்நிகழ்வில் காணப்படும் போராட்டமாகும். போராட்டம் என்றால் அவற்றில் இரண்டு இருந்தாக வேண்டும். ஒன்று மற்ற ஒன்றோடு தான் போராட முடியும். எதிர்நிலைகளின் ஒற்றுமை ஒப்பீட்டுத் (Relative) தன்மையானது, அவற்றுக்கு இடையே நடைபெறும் போராட்டம் அறுதியானது (absolute).

அதாவது ஒற்றுமை ஒரு கட்டம் வரை தான் செல்லுபடியாகும், அதற்குப் பிறகு அது குலைந்து போகும், ஆனால் போராட்டம் என்பது அந்தப் பொருள் மாறும்வரை தொடர்கிறது. அதனால் தான் ஒற்றுமை ஒப்பீட்டுத் தன்மையானதாகவும், போராட்டம் அறுதியானதாகவும் கூறப்படுகிறது. முதலாளி இல்லாமல் தொழிலாளி இல்லை. அதே போல் தொழிலாளி இல்லாமல் முதலாளி இல்லை. முதலாளித்துவ உற்பத்தி முறை நிலவ வேண்டுமானால், மூலதனத்திற்கு முதலாளியும் வேண்டும் தொழிலாளியும் வேண்டும். முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முதலாளி-தொழிலாளி இரண்டு பேரும் தேவைப்படுகின்றனர், இரண்டு பேரின் ஒற்றுமை அதன் வளர்ச்சிக்கு அவசியம்.
ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் உள்முரண்பாடு முற்றும்வரை, ஒற்றுமை மேலோங்கியே இருக்கும். குறிப்பிட்ட அளவு முரண் முற்றியவுடன், ஒற்றுமை குலைக்கப்பட்டுப் புதிய சமூக மாற்றம் ஏற்படும்.

3) நிலைமறுப்பின் நிலைமறுப்பு பற்றிய விதி

மேலே கூறிய இரண்டுவிதிகள், மீண்டும் மீண்டும் மறுக்கப்படுவதையே இந்த விதி கூறுகிறது. நிலை மறுத்ததும் புதிய ஒன்றால் நிலை மறுக்கப்படும். வளர்ச்சி என்பதைப் பரிணாமவாதமாகக் கொள்ளாமல், அதாவது வளர்ந்து கொண்டே செல்கிறது என்று கூறாமல், வளர்ச்சியின் ஒவ்வொரு இடைக் கட்டத்தையும் தனித்துப் பிரித்துக் கூறுகிறது இயக்கவியல். பனிக்கட்டி என்கிற நிலையில் இருந்து நிர் என்கிற நிலைக்கு மாறுகிறது என்றால். இதுவரை பனிக்காட்டியாக இருந்தது நிலைமறுக்கப்பட்டு நீர் என்கிற நிலையினைப் பெறுகிறது, அந்த நீர் என்பது வெப்பத்துக்கு உள்ளாகி ஆவியாகிறது என்றால் முன்பு புதியதாக நிலைபெற்ற நீர் பழையாதாகிப் போய், மறுக்கப்பட்டு ஆவி என்கிற புதிய நிலையினைப் பெறுகிறது. முதலில் பனிக்கட்டியாக இருந்தது நிலைமறுக்கப்பட்டு நீரானது, இப்போ நீரானது நிலை மறுக்கப்பட்டு, ஆவியாகிறது. இதே போல் தான் சமூகத்திலும் நடைபெறுகிறது.

ஆதி பொதுவுடைமை சமூகம் என்கிற நிலை, மறுக்கப்பட்டு அடிமை சமூகமாக நிலைபெற்றது, பின்பு அடிமைச் சமூகம் நிலை மறுக்கப்பட்டு நிலவுடைமை சமூகமாக நிலைபெற்றது, இந்த நிலவுடைமை சமூகம் நிலை மறுக்கப்பட்டு முதலாளித்துவச் சமூகம் நிலைபெற்றது. இயக்கவியலின் படி இந்தச் சமூகமும் நிலை மறுக்கப்படும். இயற்கையிலும் சரி, சமூகத்திலும் சரி இரண்டின் இயக்கமும் வளர்ச்சியும் இயக்கவியல் அடிப்படையில் தான் நடைபெறுகிறது. ஐக்கியப்பட்டு அதாவது ஒன்றுபட்டு இருப்பது, உள்ளேயே போராட்டதுடன் இருக்கிறது, அந்தப் போராட்டத்தின் அளவு, மாறிடும் போது அந்தப் பழையது நிலைமறுக்கப்பட்டுப் புதியது நிலைபெறுகிறது. இன்று புதியதாக நிலைபெற்றது வளர்ச்சி அடைந்து அதுவும் நிலைமறுக்கப்படும். அதனால் தான் மூன்றாம் விதிக்கு நிலைமறுப்பின் நிலைமறுப்பு பற்றிய விதி என்று கூறப்படுகிறது.

அடுத்து இயக்கவியலின் வகையினங்களைப் பார்ப்போம். இந்த வகையினங்களை ஆங்கிலத்தில் Categories என்று அழைக்கப்படுகிறது. எந்த விஞ்ஞானத்திற்கும் அதற்கு உரிய வகையினங்கள் காணப்படும் அரசியல் பொருளாதாரத்திற்கு உரிய வகையினங்கள் உற்பத்தி சக்தி, உற்பத்தி உறவு, சரக்கு, உபரி மதிப்பு, மறுவுற்பத்தி போன்றவை ஆகும். அதே போல் இயக்கவியலுக்கும் வகையினங்கள் இருக்கின்றன. இந்த வகையினங்களை நன்றாகப் புரிந்து கொண்டால் தான் இயக்கவியல் விதிகளைப் புரிந்து கொள்வது முடியும்.

1. தனியானது, குறிப்பானது, சர்வப்பொதுவானது (Individual, particular, Universal)
2. காரணமும் விளைவும் (Cause and Effect)
3. அவசியமும் தற்செயலும் (Necessity and Chance)
4. உள்ளடக்கமும் வடிவமும் (Content and Form)
5. சாத்தியமும் எதார்த்தமும் (Possibility and Reality)
6. சாராம்சமும் புலப்பாடும் (Essence and Phenomenon)

இந்த ஆறு வகையினடங்களைப் புரிந்து கொள்ளாமல் இயக்கவியலின் மூன்று விதிகளைப் புரிந்து கொள்ள முடியாது.

1.தனியானது, குறிப்பானது, சர்வப்பொதுவானது (Individual, particular, Universal)

உலகில் காணப்படும் அனைத்துப் பொருளும் - நிகழ்வும் அவற்கு உரிய தன்னித் தன்மையையும், அவைகளுக்கு உரிய பொதுத் தன்மையும் பெற்றுள்ளது. முற்றுலும் ஒரே மாதிரியான இரண்டைப் பார்க்க முடியாது. ஒரே மரத்தில் காணப்படும் இலைகள்கூட, எந்த இரண்டும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவைகளில் சிறிய அளவு மாற்றத்தையேனும் கொண்டிருக்கிருக்கும். அதே நேரத்தில் அந்த இலைகளுக்கு இடையேயுள்ள பொதுத்தன்மை, அதாவது அவைகள் ஒரு குறிப்பிட்டவகை மரத்தின் இலைகள் என்கிற பொதுத்தன்மை கொண்டதாக இருக்கிறது. சமூகத்தில் காணப்படும் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் வேறுபட்டே காணப்படுகின்றனர். ஆனால் அனைவரும் மனிதர்கள் என்ற பொதுத் தன்மையினைப் பெற்றுள்ளனர். இவர் பெரியார், இவர் அம்பேத்கர், இவர் மார்க்ஸ் என்று பிரித்துக் கூறினாலும், அம் மூவரும் மனிதர்கள் என்கிற பொதுத் தன்மைப் பெற்றுள்ளனர். அனைத்தும் தனியானது, குறிப்பானது, சர்வப்பொதுவானது என்ற வகைக்குள் அடங்கும். மரம் என்பது தனியானது, மாமரம் என்பது குறிப்பானது, இம்மரம் தாவரவகையைச் சேர்ந்தது என்பது சர்வப்பொதுவானது.

சமூக மாற்றத்தையும் இதே போல் பிரித்தறியலாம். சமூக மாற்றம் நிகழும் என்பது சர்வப்பொதுவானது, அதில் தேசிய விடுதலை, ஜனநாயகப் புரட்சி, சோஷலிசப் புரட்சி என்பது தனியானது, தனிப்பட்ட நாட்டில் நடைபெற வேண்டியது குறிப்பானது. அதாவது, தேசிய அடிமை பெற்ற நாட்டில் தேசிய விடுதலைக்கான போராட்டம் நடைபெறும், நிலப்பிரபுத்துவ நாட்டில் முதலாளித்துவ ஜனநாயகத்துக்கான போராட்டம் நடைபெறும், முதலாளித்துவம் உள்ள நாட்டில் சோஷலிசத்திற்கான போராட்டம் நடைபெறும். இது குறிப்பானது. சமூகம் மாற்றத்திற்கு உள்ளாகும் என்பது சர்வப் பொதுவானது. தேசிய விடுதலை, ஜனநாயகப் புரட்சி, சோஷலிசப் புரட்சி என்பது தனியானது.
ஒரு தனிப்பட்ட நாட்டில் நடத்த வேண்டியது குறிப்பானது.

2. காரணமும் விளைவும் (Cause and Effect)

இந்த வகையினத்தை நிறையப் பேர் அறிந்திருக்க வாய்புள்ளது. ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு காரணம் இருக்கிறது, அதாவது ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கிறது. புகை வருகிறது என்றால் அங்கே நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். புகை விளைவு, நெரும்பு காரணம். அதாவது புகை என்கிற விளைவுக்கு நெருப்புக் காரணம் ஆகிறது. குறிப்பிட்ட காரணங்கள் நிலவும்போது குறிப்பிட்ட விளைவைக் கட்டாயம் ஏற்படுத்துகிறது என்பதில் அவற்றின் அவசியத்தன்மை அடங்கி இருக்கிறது. அவசியத் தன்மையைப் புரிந்து கொள்வதற்கு இந்த வகையினம் பயன்படுகிறது.

முதலாளித்துவ உற்பத்தியில், பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது என்றால், அதற்கு முதலாளித்துவ உற்பத்தி முறையில், உள்முரண்பாடு இருக்கிறது என்பது காரணமாகும். அந்த முரண்பாடு சோஷலிச சமூகத்தைத் தோற்றுவிக்கிறது. அதாவது சோஷலிச சமூகம் என்பது விளைவு. முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் உள்முரண்பாடு என்பது- காரணம், சோஷலிச சமூகத்தின் தோற்றம் என்பது அந்தக் காரணத்தின் விளைவு.
காரணம் இல்லாமல் விளைவு இல்லை. ஒவ்வொரு விளைவுக்கும் பின்னால் ஒவ்வொரு காரணம் இருக்கிறது.

3. அவசியமும் தற்செயலும் (Necessity and Chance)

தற்செயல் என்றால் அது நடைபெறலாம், நடைபெறாமலும் போகலாம். அவசியம் என்பது காரணத்தின் விளைவாய் நடைபெறுவதாகும். கரு மேகம் திரண்டு இருந்தால் மழை கண்டிப்பாகப் பெய்யும். அதாவது கரு மேகம் இருந்தால் மழை அங்கே அவசியம் பெய்தே தீரும். அதாவது சில தொடர்புகளுடைய இயல்புகளினால் ஏற்படுகின்ற, சூழ்நிலைமைகளால் உருவாவதே அவசியம். இதனைச் சற்றுக் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். புறநிலைமைகளின் உடைய வளர்ச்சியின் தவிர்க்க முடியாததின் விளைவாய் அவசியம் தோன்றுகிறது. தற்செயலும் முழுதும் காரணங்களற்ற நிலைமைகளில் தோன்றியதாகக் கருதக்கூடாது. தற்செயல் நிகழ்ச்சிகள் தோன்றுவதற்கான காரணங்களும் இருக்கவே செய்கின்றன. தற்செயல் என்பது காரணங்கள் இல்லாது தோன்றியதாகக் கருத முடியாது. அவசியம் போன்றே தற்செயலும் புறநிலையானவை, அதனால் தற்செயல் அவசியத்தின் வெளிப்பாடாக, அவசியத்துக்குத் துணைபுரிவதாக அறிந்து கொள்ள வேண்டும்.

தற்செயல் ஒப்பீட்டு நிலையானதுதான், அவசியத்தின் தொடர்புகளற்ற தற்செயல் என்பது கிடையாது. குறிப்பிட்ட நோக்கில் அது தற்செயலானது. அதுவே வேறொரு நோக்கியல் அவசியத்துடன் தவிர்க்க முடியாத தொடர்பு பெற்று இருக்கிறது. தற்செயல் என்பது நடைபெறலாம் அல்லது நடை பெறாமலும் இருக்கலாம். ஆனால் சாத்தியமானதே. அதாவது தற்செயல் எந்தச் சாத்தியமற்ற நிகழ்வையும் நடத்திக் காட்டுவதில்லை. தற்செயல் என்பது இடைத்தொடர்பின் ஒரு முனையே ஆகும். அதன் மற்றொரு முனை அவசியமாக இருக்கிறது. இயக்கவியல் பற்றிய அறியாமையே பலரை அவசியத்தையும் தற்செயலையும் எதிரெதிர் நிலையாகப் பார்க்கப்படுகிறது. தற்செயல் நடவடிக்கைகள் அதன் வளர்ச்சிப் போக்கில் அவசியமாகிறது. அவசியம் என்பதைத் தூய நிலையில் புரிந்து கொள்ளக்கூடாது. பல்வேறு தற்செயல் நிகழ்ச்சியின் தொடர்ச்சியில் தான அவசியமாகிறது.

இதனை ஒரு உதாரணத்தைக் கொண்டு விளக்குவோம். நிறைமாதக் கர்ப்பிணி இரயிலில் பயணம் மேற்கொள்கிறார். இடையில் பிரசவ வலி ஏற்பட்டு விடுகிறது. பிரசவிப்பதற்கு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. தற்போது அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அதே இரயிலில் ஒரு மருத்துவர் பயணம் செய்கிறார். அந்த மருத்துவரின் உதவியுடன் இரயில் பெட்டியிலேயே பிரசவம் சுகமாக நடைபெறுகிறது. மருத்துவரின் ரயில் பயணம் ஒரு தற்செயல் நடவடிக்கையே. ஆனாலும் இந்தத் தற்செயல் நிகழ்ச்சி பிரசவத்தின் தேவையை நிறைவேற்றி விடுகிறது. அந்த நபர் மருத்துவம் படித்து மருத்துவரானது தற்செயலானது அல்ல. அதற்கான கல்வியைக் கற்றவராக, மருத்துவராக இருக்கிறார். தற்செயலை அவசியத்திற்கு அப்பாற்பட்டதாகக் கருதக்கூடாது. தற்செயல் நடவடிக்கைகள் அதன் வளர்ச்சிப் போக்கில் அவசியமாகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

4. உள்ளடக்கமும் வடிவமும் (Content and Form)

அனைத்துப் பொருட்களும் - நிகழ்வுகளும் தமக்கு உரிய உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் கொண்டிருக்கின்றது. உதாரணத்திற்கு ஒரு காரையே எடுத்துக் கொள்வோம். ஒரு கார் பல்வேறு பகுதிகளைக் கொண்டது, இதில் உள்ள ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலைகளைச் செய்கிறது. இதனை முறையாகப் பொருத்தினால் தான் அனைத்தும் இணைந்து கார் செயற்படும். இதற்கு மாறாகக் காரின் பாகங்களைத் தவறாகப் பொருத்தனால் கார் செயற்படாது, ஓடாது. குறிப்பிட்ட முறையில் அதனைக் கட்டமைக்கப் பட்டிருந்தால் தான், அந்தக் கார் ஓடுகிற நிலையைப் பெறும். உள்ளடக்கத்திற்கும் வடிவத்திற்கும் இடையே தொடர்பு இருக்கிறது. உள்ளடக்கம் இல்லாது வடிவமோ, வடிவமற்ற உள்ளடக்கமோ இருக்க முடியாது. உள்ளடக்கம் வடிவம், ஆகியவற்றின் தொடர்வில் உள்ளடக்கம் தலைமைப் பாத்திரம் வகிக்கிறது. அதனால் தான் உள்ளடம் வடிவத்தைத் தீர்மானிக்கிறது என்று கூறப்படுகிறது. வடிவ மாற்றங்கள் உள்ளடக்கத்தை ஒட்டியே நடைபெறுகிறது. வடிவ மாற்றம் எந்த வகையில் காணப்பட்டாலும் அது உள்ளடக்கத்திற்குக் கட்டுப்பட்டதாகவே இருக்கும்.

முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு நாடாளுமன்ற ஜனநாயக முறையே பொருத்தமானது, அதாவது அந்த வடிவம் பொருத்தமானது. ஆனால் அது பிரதமரைத் தலைமையாகக் கொண்டோ, ஜனாதிபதியைத் தலைமையாகக் கொண்டே இருக்கலாம். பொருத்தமானதில் எதேனும் ஒன்று வடிவமாகப் பெறும். இயக்கவியல் என்றும் அதன் வகையினங்கள் என்று கூறுவதால், அனைத்தும் எளிதாக நடந்தேறுகிறது என்று பொருள் அல்ல. பல்வேறு போராட்டங்களுக்கு இடையே தான் அது நடைபெறுகிறது.

5. சாத்தியமும் எதார்த்தமும் (Possibility and Reality)

இந்த வகையினம் புலப்பாடுகளின் தோற்றத்தையும் அதன் வளர்ச்சியையும் பற்றிப் பேசுகிறது. எந்தப் பொருளும் நீடித்து நிலைத்து இருக்க முடியாது. அதற்கான சூழ்நிலை இருக்கும்வரையே நீடிக்கும், சூழ்நிலை மாறும் போது சூழ்நிலைக்கான புதிய மாற்றம் ஏற்படும். நடந்து முடிந்ததை எதார்த்தம் என்று கூறுவது, எதார்த்தத்தின் குறுகிய பொருளாகும். விரிந்த பொருளில் எதார்த்தம் என்பது புறநிலையில் நிலவுகின்ற அனைத்தையும் குறிக்கிறது. அதாவது புறநிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது, நாளை எதார்த்தாவதையும் சேர்த்துக் கூறப்படுகிறது. இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டது. இது எதார்த்தம், இந்தியா ஒரு சோஷலிச நாடாக மாறும் என்பதும் ஒரு எதார்த்தம் தான் ஆனால் அது இன்னும் நிகழவில்லை. ஆனால் அது நிகழக்கூடிய எதார்த்தமானதே ஆகும். நேற்று மழை பெய்தது அதனால் சாலையில் நீர், தேங்கி உள்ளது - இது எதார்த்தத்தின் குறுகியப் பார்வை. நாளை முதல் பெய்யப் போகிற மழை, வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கும், அதனால் வெள்ளம் ஏற்படும்- என்று முன்கூட்டியே எச்சர்ப்பதும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடு செய்வதும் எதார்த்தமே. ஆனால் இது இனிமேல் தால் சாத்தியப்படப் போகிறது. எதார்த்தமும் சாத்தியமும் இணைந்த ஒன்றாகும்.

முதலாளித்துவ உற்பத்திமுறையில் உள்முரண்பாட்டின் முதிர்ச்சியின் வெளிப்பாடாகப் பொருளாதார நெருக்கடிகள் தோன்றுகின்றன. எல்லாப் பொருளாதார நெருக்கடியும் புரட்சியை ஏற்படுத்துவதில்லை. இந்தத் தொடர் நிகழ்வில் காணப்படும், முரண்பாட்டின் முதிர்ச்சியில், புரட்சியை யதார்த்தமாக்கும் சூழ்நிலை காண்படுவது உண்மையே, ஆனால் அதற்கான தயாரிப்பு இல்லை என்றால் சாத்தியப்படாமல் போகிறது. அன்றைய மக்களின் கொந்தளிப்பை புரிந்து, முன்னணிப்படையாகச் செயற்படும் அளவுக்குக் கட்சி பக்குவம் பெற்று இருந்தால் தான் சமூக மாற்றம் சாத்தியமாகும்.

பொருளாதார நெருக்கடிகள் புரட்சிக்கான புறநிலைமையே ஆனால் அதற்கான தயாரிப்பில் கட்சி இல்லை என்றால், மக்களின் கொந்தளிப்பைப் பயன்படுத்தத் தெரியாமல் போனால், எதார்த்தம் கைவிட்டுப் போகும். சமூக மாற்றம் என்கிற எதார்த்தத்தைச் சாத்தியமாக்க வேண்டுமனால், கட்சி அதற்கான தயாரிப்பினால் பக்குவம் பெற்று இருக்க வேண்டும். இயற்கையில் சாத்தியமாக்கக்கூடியது எளிதில் எதார்த்தமாகிவிடுகிறது, ஆனால் சமூகத்தில் சாத்தியமாகக்கூடியது எதார்த்தமாக வேண்டுமானால் அதற்கு மக்களின் செயற்பாடும் கட்சியின், தலைமையும் தேவைப்படுகிறது. இதுவே சாத்தியப்படுவதற்கு இயற்கைக்கும் சமூகத்திற்கும் உள்ள வேறுபாடு ஆகும்.

6. சாராம்சமும் புலப்பாடும் (Essence and Phenomenon)

சாராம்சம் என்பது பொருளினுடைய அடிப்படைகளின் இணைப்புகளையும், உள்விதிகளையும், இணைத்த முழுமையைக் குறிக்கிறது. இவையே அப்பொருளின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. இந்தப் பொருட்களின் மாற்றம், வளர்ச்சி என்பது உடனடியாக மேற்பரப்பில் அதாவது புறவடிவத்தில் வெளிப்படுவதில்லை. அந்த மாற்றங்கள் புறவடிவத்தின் உள்ளே சூக்குமமாக மறைந்து கிடக்கிறது. ஆகவே இந்த மாற்றங்கள் புலன் உறுப்புகளால் நேரடியாக அறியப்படுவதில்லை. உள்ளார்ந்து இருப்பதை, சூக்கும சிந்தனையின் வாயிலாக அறியப்படுகிறது. புலப்பாடு என்பது நிகழ்வின் தோற்றாப்பாடேயாகும். ஒரு பொருளின் இயக்கத்தை அதாவது நிகழ்வை மனிதன் நேரடியாகப் புலன்களின் மூலம் அறிவதை இது காட்டுகிறது. அதாவது பொருளினுடைய நிகழ்வின் மேற்பரப்பை முதலில் மனிதன் கவனிக்கிறான். அதாவது வடிவத்தை முதலில் பார்க்கிறான். பொருளினுடைய நிகழ்முறையின் வெளிப்பாடான புறத்தோற்றத்தையே புலப்பாடு என்கிறோம். சாராம்சமும் புலப்பாடும் இரண்டும் ஒன்றிணைந்த பகுதியாகும். இதில் சாராம்சம் இல்லாமல் புலப்பாடு இல்லை. சாராம்சத்தில் தோன்றியது புலப்பாட்டு வடிவமாக வெளிப்படுகிறது. அதாவது சாராம்சமான உள்ளடக்கம் வடிவத்தில் வெளிப்படுத்துகிறது.

உதாரணத்தைப் பார்ப்போம்:-

மின்சாரம் என்பது சாராம்சமாகும், அந்த மின்சாரத்தின் ஆற்றல் மின்விசிறியாக, மின்சார ரயிலாக, மின்மோட்டாராக நமக்குப் புலப்படுகிறது. அதாவது இது வடிவம். எந்த ஒரு நிகழ்வின் புலப்பாடும், உள்ளே இருக்கும் சாரம்சத்தின் ஆற்றலையே பிரதிபலிக்கின்றன. முதலாளித்துவ உற்பத்தி முறையின் முரண்பாடு சாராம்சமாகும். இந்தச் சாராம்சத்தின் வெளிப்பாடு வர்க்கப் போராட்டமாகப் புலப்படுகிறது. வர்க்கப் போராம் என்பது அதன் வடிவமாகும். இயக்கவியலும் அதன் வகையினங்களும் இயற்கை செயற்பாட்டிலும் மாற்றத்திலும் காணலாம். அதே போலச் சமூக இருப்பிலும் மாற்றத்திலும் காணலாம். சமூக மாற்றத்தைக் கோருகிற உழைப்பாளர்கள், இயக்கவியல் அணுமுறையை அறிந்து கொண்டால், தாம் எதிர்பார்க்கும் எதார்த்தம் சாத்தியமாகும். இன்று நாம் பார்த்தது. ஒரு சுருக்கம் தான், இதனை விரிவாக நூல்களில் படித்துத் தெளிவு பெற வேண்டும்.

இன்று பேசியது, நான் எழுதிய “மார்க்சியத் தத்துவம்” என்கிற நூலில் எழுதப்பட்டதே. அதில் இருந்தே பெரும்பாலானவற்றை எடுத்து விளக்கு இருக்கிறேன். எனது நூலை மட்டுமல்ல, மார்க்சிய தத்துவ நூல்கள் பலவற்றைப் படிக்க வேண்டும். இந்த வகுப்பின் காணொளி:- https://www.youtube.com/watch?v=Ao1v6dIgtG4&t=1515s

கலந்துரையாடலுடன் காண:-

https://www.youtube.com/watch?v=m9ZkFnKXUC0&t=1642s

 

நன்றி: https://marxphilosophy.blogspot.com/