பகுதி ஒன்று!

அமெரிக்காவின் பட்டறைகல்லுக்கும், ரஷ்யாவின் கொடூர சம்மட்டி அடிகளுக்கும் இடையே அகப்பட்டு, நசுங்கி போன ஒரு தவளையின் கதையைப் போல இருக்கின்றது உக்ரைனின் இன்றைய நிலைமை என உலக விமர்சகர்கள், உக்ரைனின் நிலைமையை விசனத்துடன் வர்ணித்துள்ளார்கள்.

இவர்களின் விசனம் இருவகைப்பட்டது. ஒன்று அமெரிக்கா சார்பை அடிப்படையாகக் கொண்டது. மற்றது, அமெரிக்காவுக்கு எதிரான ரஷ்ய சார்பை அடிப்படையாக கொண்டது.

அமெரிக்காவின் கிழக்கு நோக்கிய விஸ்;தரிப்பானது, கட்டுக்கடங்காமல் சென்று, தனது வாசற்படிக்கே வந்து விட்டது என குமுறும் ரஷ்யாவும், இல்லையில்லை – நானொரு முதலாளித்துவவாதி – எனவே, பொருளியல் அம்சங்களுக்கான போட்டியில் ஈடுபடுவது அல்லது இறங்கி விடுவது சகஜமானது என வாதிடும் பைடனும், ஒருவருக்கொருவர், இன்று கச்சைக்கட்டிய நிலையில் உள்ளனர்.

அதாவது, நீதி–நியாயம் என்பன இரண்டாம் பட்சம். இதனை ஒரு பக்கமாய் கிடத்தி விடுங்கள். போட்டி ஒன்றே வாழ்வும் அதன் அர்த்தப்பாடும் ஆகும். எனவே, சமயத்திற்கு ஏற்ற வகையில், அத்தனை ஆயுத பிரயோகங்களும் நியாயமானதுதான் என்ற ரீதியில் அவர் அமெரிக்க காங்கிரஸில் ஆற்றிய, அண்மித்த, உக்ரையின் தொடர்பிலான உரை அவதானத்துக்குரியதே.

காரணம், “போட்டி சகஜமானது” என்றும் “நானொரு முதலாளித்துவவாதி” என்றும் அவர் வாதிடும் போது, இக்கூற்றானது, ஆயிரம் உள் அர்த்தங்களையும் ஆழமான பரிமாணங்களையும் கொண்டதாகி விடுகின்றது. மறுபுறத்தில், ரஷ்யா அடுக்கும் காரணங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாகவே உள்ளது.

ஆரம்பத்தில், தமது எல்லையிலேயே அணு ஆயுதங்கள் அல்லது ஏவுகணைகள் குவிக்கப்படுவதை நிறுத்துவதற்காகவும், உக்ரைன் தனது பாதுகாப்பைத்தேடி நேட்டோவில் இணைவதைத் தடுப்பதற்காகவும், நவீன நாசிசத்தின் ஸ்தாபிப்பை இல்லாதொழிப்பதற்காகவும் ரஷ்யா தனது தாக்குதலை ஆரம்பித்துள்ளது என கூறிய அதே நேரம், உக்ரையின் இன்று நீதி நியாயப்பாடுகளை இழந்துவிட்ட நாடாக மாறியுள்ளது – அங்கே ரஷ்யா மொழி பேசும் ரஷ்யா சிறுபான்மை இனத்தவர்கள் நசுக்கப்படுகின்றார்கள் - ரஷ்யா மொழி பாடசாலைகளிலும் அரச கருமங்களிலும் இருந்து அகற்றப்பட்டு இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது – உக்ரைனின் கிழக்கு பிரதேசமான டொன்பாஸ் பிரதேசத்து மக்கள் கொடூர இனப்படுகொலைக்கு கடந்த பல வருடங்களாய் ஆற்பட்டு வருகின்றார்கள். கடந்த ஏழு வருடங்களில் மாத்திரம் 13,000 குடி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு விட்டார்கள். இப்படியான உக்ரைனின் போரை நிறுத்த உக்ரைனாலேயே நான்கு நாடுகளின் (ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா , உக்ரைன்) மத்தியஸ்த்துடன் செய்துக்கொள்ளப்பட்ட மின்ஸ்க் உடன்படிக்கை இன்று, ஒருதலைப்பட்சமாக, உக்ரைனாலேயே தூக்கி எறியப்பட்டுவிட்டது.

இவ்வளவின் பின்னணியிலும் மேற்கின் ஆழமான, மறைகரம் உண்டு என்பது ரஷ்யா அடுக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்று.

இனி ஒளிந்துக்கொள்ளவோ அன்றி பின்வாங்கவோ ஒரு மூலைமுடுக்குக்கூட தனக்கு இல்லை என்ற அளவுக்கு இன்று ரஷ்யா தள்ளப்பட்டு விட்டது என்றும், எமது படைகள் மெக்ஸிக்கோவில், அமெரிக்காவின் வாசற்கதவுகளை தட்டிக் கொண்டு இருக்கவில்லை–ஆனால் எம்மைச்சுற்றி எமது வீட்டு வாசற்படிகளில் மேற்கின் படைகள் நிறுத்தப்பட்டு முடிந்துவிட்டது என்பதே புட்டினின் அடிப்படைக் குற்றச்சாட்டு. மறுபுறத்தில், உக்ரைன், “நானொரு சுதந்திர-இறைமை உள்ள நாடு என்பதன் முழு அர்த்தம் தான் யாது? எமது பாதுகாப்பை நாம் தேடிக்கொள்வதில் யாருடைய வழிகாட்டலும் எமக்கு தேவையில்லை. நாம் நேட்டோவிலும் இணையலாம் - ஐரோப்பிய யூனியனிலும் இணையலாம் - இதனை கேட்க ரஷ்யா யார்?” என்பது ஸெலன்ஸ்கியின் கேள்வி.

பதிலுக்கு ரஷ்யாவும், “உங்கள் பாதுபாப்பை நீங்கள் தேடிக்கொள்ளலாம். உண்மை. – ஆனால், அது எங்கள் பாதுகாப்பின் செலவில், எங்களை இக்கட்டில் தள்ளி விட்டு, அதற்கூடாகத்தான் உங்கள் பாதுகாப்பை நீங்கள் தேடிக்கொள்ள முற்படுவீர்கள் என்றால் அது பிரச்சினைக்குரியது,” என்பதே ரஷ்யாவின் வாதம்.

முடிவற்ற இத்தர்க்கத்தின் பின்னால், ரஷ்யா –மேற்கின் நலன்களும் முரண்களும் ஆழ வீற்றிருந்து ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக் கொள்கின்றன.

ஆனால் எந்தவொரு நிகழ்ச்சி நிரல்களுக்கும், ஒரு துவக்கமுனை வேண்டுமென்பது போல், தற்போதைய போருக்கான திருப்புமுனையாக செயற்பட்ட காரணிகளில், தலையானது, “நோர்ட்-2-ஸ்ட்ரீம்லைன்” என்ற எரிவாயு குழாய் திட்டம் என்றால் அது மிகையாகாது.

(2)

“நோர்ட்-2-ஸ்ட்ரீம்லைன்” திட்டம் மூலம், ரஷ்யா , உக்ரைனைப் புறக்கணித்து அல்லது அதனை புறந்தள்ளி, ஐரோப்பிய நாடுகளுக்கான, தன் எரிவாயு சந்தையை திறந்து விட முனைந்த ஓர் எரிவாயு குழாய் திட்டமாகும்.

கடலுக்கடியில் கிடத்தப்படும் இப்பாரிய எரிவாயு குழாய்களுக்கூடாக, ரஷ்ய எரிவாயு ஜெர்மனியை சென்றடையும். அதன் பின்னர், அங்கிருந்து அது முழு ஐரோப்பாவிற்குள்ளும் வலைப்பின்ல்கள் போன்ற குழாய் கட்டமைப்புகளுக்கூடாக அந்தந்த நாடுகளை சென்றடைந்து விடும். (ஒரு வருடத்தில் மாத்திரம் நோர்ட்-1- ஸ்ட்ரீம்லைன்” 1.9 ட்ரில்லியன் கன அடி எரிவாயுவை தனது குழாய்களுக்கூடாக விநியோகிக்கும். நோர்ட்-2-ஸ்ட்ரீம்லைன்” இது போன்ற இரு மடங்கு எரிவாயுவை விநியோகிக்கும் திறன் கொண்டது). இத்திட்டத்தின் பிரகாரம் ஜெர்மனியும் ஐரோப்பாவும் கொள்ளை லாபம் ஈட்டிக் கொள்ளும். ஆனால், அதேசமயம், இத்திட்டமானது, இன்றுவரை ஐரோப்பாவில் இருந்துவரும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கி விடும். இத்திட்டத்திற்கூடாக முழு ஐரோப்பாவையும், தனது காலடியில் கிடத்திக் கொள்ளும் அரசியல் திட்டத்தை ரஷ்யா முன்னெடுக்கின்றது என்பது அமெரிக்காவால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு.

ஆனால் ஜெர்மனியின் முன்னால் அதிபரான என்ஜலா மர்க்கலினதும் (Angela Merkal)– ரஷ்யா அதிபர் புட்டினதும் விடா முயற்சியின் பலனாக, இத்திட்டமானது, மீண்டும் மீண்டும், மேற்கின் தொடர்ச்சியான பொருளாதார தடைகளாலும் திட்டமிடப்பட்ட இடையூறுகளாலும் நிறுத்த முயற்சிக்கப்பட்டாலும், அத்தனை தடைகளையும் மீறி இப்பாரிய எரிவாயு குழாய்த்திட்டமானது– இறுதியில் கட்டி முடிக்கப்பட்டது. ஆறு கம்;பனிகளை (Gazprom, Uniper, Wintershall dea, OMV, Engie, Royal Dutch Shell) பங்கு பற்றுனர்களாக கொண்ட இப்பாரியத்திட்டத்தின் மொத்த செலவு 10 பில்லியன் யூரோக்களாகும். எரிவாயுவை இப்படியாகக் கொண்டு செல்லும் திட்டம் உலகில் வேறு எங்கும் காணக்கிட்டவில்லை என்றளவில் இத்திட்டம் விஞ்ஞானத்தின் வளர்ச்சி போக்கில், ஒரு மைல் கல் என கூறப்படுவதும் உண்டு. இறுதியில், குழாய்களில் எரிவாயும் நிரப்பப்பட்டு, எரிவாயு திறந்து விட, முழுதும் ஆயுத்தமான நிலையில் என்ஜலா மெக்கரல் தன் பதவிக்காலம் முடிந்து ஜெர்மன் அரசியலிலிருந்து விடைப்பெற்று வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த ஒலாஃப் சோல்ஸ் (Olaf Scholz) என்பவரோ ஆரம்பத்திலிருந்தே “நோர்ட்-2-ஸ்ட்ரீம்லைன்” திட்டத்திற்கு முழு விரோதமானவராக இருந்த அதே வேளை அழுத்தமான அமெரிக்க சார்பு நிலைப்பாட்டினையும் கொண்டவராக இருந்தார்.

“நோர்ட்-2-ஸ்ட்ரீம்லைன்” திட்டமானது செப்டெம்பர் 2021லேயே முடிவடைந்திருந்தாலும், எஞ்சலா மெக்கரலின் பதவிக்கால முடிவுடன் எரிவாயு குழாய்த்திட்டமானது இனியும் சாத்தியமுற போவதில்லை என்ற நிலைக்கு இறுதியாக புட்டின் வந்து சேர்ந்த போது, தான், முற்றிலும்; வஞ்சிக்கப்பட்டு விட்டதாய் உணர அவர் தலைப்பட்டார். இது சுமையேற்றப்பட்ட ஒட்டகத்தின் முள்ளந்தண்டை முறிக்கும் இறுதி சுமையானது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மேற்கு–ரஷ்யா உறவினை சுக்கு நூறாய் உடைத்தெறியும் இறுதி சுமை இதுவேயானது.

ஜெர்மனியின் ஒலாஃப் சோல்ஸ் 22 பெப்ரவரி 2022 அன்று நோர்ட்-2-ஸ்ட்ரீம்லைன்” நிறுத்தப்படும் என அறிவித்தார். (அதற்குரிய சான்றிதழை வழங்காமல் இருந்ததற்கூடு). புட்டின், இரு நாட்கள் கடந்ததும் கடக்காததுமாய், 24 பெப்ரவரி 2022 அன்று தனது படைகளை உக்ரைனுக்குள் நுழையுமாறு உத்தரவிட்டார். ஜெர்மன் அதிபர் ஒலாஃப் சோல்ஸின் மேற்படி அறிவிப்பை உக்ரைன் வானளாவ பாராட்டி வரவேற்றிருந்தது. இக்கயிற்றிழுப்பில் அல்லது இம்மிகக் கடுமையான மறைமுகப்போரில், உக்ரைன் என்ற நாடு, உரலுக்கும் உலக்கைக்கும் இடையில் சிக்கிய பாக்குத்துண்டானது.

எப்படியோ இருந்த உக்ரைனை, ஈற்றில், வெறும் வெற்று பாக்குத்துண்டாக்கிய பெருமை, முன்னைய கோமாளி நடிகராக, முகம் காட்டித் திரிந்த ஸெலன்ஸ்கியை சாரும் என்றால் அது மிகையாகாது. ஏனெனில், உலக வல்லரசுகளின் கயிற்றிழுப்பை, வெறும் “கோமாளிகளின் சர்கஸ்” என்று புரிந்து வைத்துக்கொள்ளும் ஆற்றலே உடைய அவர், இறுதியில் உக்ரைனையும் உக்ரைன் மக்களையும் தன்னுணர்வு இல்லாமலேயே, தற்போதைய கையறு நிலைக்கு கொண்டு வந்து இருத்திவிட்டார் என்பதிலேயே வரலாற்றின் துயரமும் வல்லரசுகளின் வஞ்சக வலைவிரிப்பும்; உள்ளடங்கிப்போகின்றது எனலாம்.


(3)

போர் ஆரம்பமாகும் முன்னரே, போர் குறித்த எச்சரிக்கை, ரஷ்யா வால், மிக அழுத்தமான முறையில், நடைமுறை ரீதியாக அறிவிக்கப்பட்டுவிட்டது என்ற உண்மை ஆழ்ந்து நோக்கத்தக்கது. (இது, போரை, ரஷ்யா , எவ்வாறு முடிக்கக்கூடும் என்பதனை சுட்டும் ஒரு உண்மையாகவும் இருக்கின்றது. ஏனெனில், இது சடுதியாக தோன்றிய ஓர் போர் அல்ல. பல நோக்கங்களையும் பல தயாரிப்புகளையும் உள்ளடக்கி கொண்ட ஒரு போர். ரஷ்ய படைக் குவிப்பானது மாத கணக்கில் நடந்தேறிய ஒன்று என்பது மாத்திரமல்லாமல், ‘குவிப்பும்-விலகலும்’ மாறி மாறி இடம்பெற்ற நிகழ்வாய் இது ரஷ்யா தரப்பால் அரங்கேற்றப்பட்டது. இக்குவிப்பு-விலகல் பின்னணியில், ரஷ்ய இராணுவத்திட்டங்;களும், கூடவே, அரசியல் கோரிக்கைகளும் உள்ளடங்கி இருக்கக்கூடும் என்பது தெளிவு.

ரஷ்யா வின் வெளிப்படையான கோரிக்கைகளில் தலையானதாக கூறப்பட்டவை:

1. நேட்டோ அல்லது மேற்கு தனது கிழக்கு நோக்கிய விஸ்த்தரிப்பை உடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
2. தனது பாதுகாப்பிற்கான எழுத்து மூல உறுதியினை, மேற்கானது, ரஷ்யா வுக்கு தாமதமின்றி உடனடியான வழங்க வேண்டும்
3. உக்ரைன் என்றுமே நேட்டோ அணியில் சேர்வதோ அன்றி அணுவாயுதங்கள் உக்ரைனில் நிறுத்தப்படுவதோ ஏற்றுக்கொள்ளப்படலாகாது.
4. நேட்டோ நாடுகள் என இன்று புதிதாய் அழைக்கப்படும், முந்திய ரஷ்யா சார்பு கம்யூனிஸட்; நாடுகளான போலாந்து போன்றவற்றை ‘நேட்டோ’ தன் உறுப்புரிமைகளிலிருந்து நீக்க வேண்டும்.

இவற்றில் நான்காவது கோரிக்கையை, நடைமுறையில் செயல்படுத்துவதில் உள்ள கஷ்டங்கள், ரஷ்யாவுக்கே விளங்கியிருக்காது என நம்புவது கடினமான ஒன்றுத்தான். ஆனால் செயற்படுத்தியிருக்கக்கூடிய, ஏனைய மூன்று கோரிக்கைகளின் தொடர்பிலும் கூட, மேற்கோ அல்லது உக்ரைனோ எந்தவொரு உறுதியான பதிலையும் முன்வைத்ததாக இல்லை என்பதும் ஆழ்ந்து அவதானிக்கப்படதக்கது.

அண்மையில், “பதிவுகளில்”, எழுதியிருந்த ‘நந்திவர்மன்’ கூட, உக்ரைன் தான் நேட்டோவில் இணையப்போவதில்லை அல்லது புடாபர்ஸ்ட் ஒப்பந்தத்தின் பிரகாரம் (1994) தான் அணுவாயுதங்களை என்றுமே ஏந்தப் போவதில்லை என்ற மிக தெளிவான உறுதி மொழியை கூட தர மறுத்தது ஏன் என்பது போன்ற கேள்வியை எழுப்பத் தவறவில்லை. ஆனால், உக்ரைனின் முன்னை நாள் ஹாஸ்ய நடிகரும், இன்றைய ஜனாதிபதியுமான, ஸெலன்ஸ்கி, மேற்படி வாக்குறுதிகளை வழங்காது உறுதியாக இருக்கும் பட்சத்தில், தனது நாடு நேட்டோ அமைப்பிலும், ஐரோப்பிய யூனியன் அமைப்பிலும் உறுப்புரிமையை பெறக்கூடியதாய் இருக்கும் என்றும், இது தமது அரசியல் செல்வாக்கை உக்ரைனில் வானுயர உயர்த்தி, வாழ்நாள் முழுவதும் தன்னை அரியாசனத்தில் இருத்திவிடும் என்றும் அவர் கண்ட கனவு, இன்றைய நிலமைகளுடன் நோக்கும் போது வெறும் கானல் நீராகி உள்ளதை அவதானிக்கலாம். சிரிப்பு நடிகரான இவர், தூக்கமயக்கத்தில் விழித்தவாறே, இத்தகைய பகல் கனவுகளை காண கிரமமாய் பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம் என்பது வேறு விடயம். இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் கனவு காண வைக்கும் நடைமுறை என்பது, இன்று உலகின் நடைமுறைகளில் பிரதானமான ஒன்றாக இருக்கின்றது-இருந்தும் வந்துள்ளது. இதன் காரணமாக, அவர் தனது உசுப்பேற்றும் வலதுசாரி அரசியல் நிலைப்பாட்டிலிருந்து சிறிதும் மாறாமல், டொன்பாஸ் சிறுபான்மையினர்களை துவாம்சம் செய்து அழிப்பதிலும், ரஷ்ய மொழியை தன் நாட்டிலிருந்து அப்புறப்படுத்துவதிலும், ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதிலும், மேலும் மேலும் மேற்கின் தூண்டுதல்களுக்கு பலியாகும் தன்மை கொண்டவராக இருப்பதிலும் தீவிரம் காட்டி வந்தார். இவை மறுபுறத்தில், புட்டின் தொடுக்க வேண்டிய போரை நியாயப்படுத்தி, விரைவுப்படுத்தியது எனலாம்.

அதாவது, தனது எந்தவொரு வேண்டுகோலும், நிறைவேற்றப்படாமல் இப்படியாக, உதாசீனப்படுத்தப்படுவது, ஒரு வழியில் போரைத் துவங்குவதற்கான நியாயப்பாட்டை புட்டினிற்கு வழங்குவதாயிற்று. ஆனால், போரானது, மேற்கையும் நேட்டோ நாடுகளையும் சேர்த்து போரில் உள்ளிழுத்து விடுமென்றால், அதற்கான தயாரிப்புகளுக்கும் தான் முகங்கொடுக்க தயார் என்ற அறிவிப்பை ரஷ்ய படைகள் முதலில் மேற்கிற்கு அறிவிக்க வேண்டியிருந்தது. இத்தயை ஒரு அறிவிப்பு, 19.02.2022 அன்று, ரஷ்ய அதிபர் புட்டின் தனது அணுவாயுத ஒத்திகை பயிற்சியை முன்னெடுத்ததன் மூலம் கிரமமாக அறிவிக்கப்பட்டதாயிற்று.

கடல் வழியாகவும் (நீர்முழ்கிகள் மூலம்) தரை வழியாகவும், வான் வழியாகவும் (குண்டுவீச்சு விமானங்கள் மூலம்) கிட்டத்தட்ட 14,000 அணுவாயுதங்களை செலுத்தும் ஆற்றல் கொண்டிருக்கும் ரஷ்யா , கடல் வழியாகவும், தரை வழியாகவும், அணுவாயுதங்களை காவி செல்லும் இரண்டு ஏவுகனைகளை எய்தும், நவீனd Hypersonic ஏவுகனைகளையும், வேறு பல்வேறு வகைப்பட்ட நவீன ஏவுகணைகளையும் ஏவி காட்சிப்படுத்தியும், ரஷ்யா தன் பலத்தை உலகிற்கு அறியத்தந்தது. ஆனால், ஸெலன்ஸ்கி அதற்கும் அசைந்தாரில்லை. நேட்டோவில், உக்ரைன் ஒரு உறுப்பு நாடாக இணைத்துக் கொள்ளப்படும் என்று மேற்கால் அவருக்கு தரப்பட்ட சத்தியத்தை அவர் உறுதியாக நம்பத் தலைப்பட்டிருந்தது இதற்கான காரணங்களில் வலுவான ஒன்றாக நாம் கருத இடமுண்டு. இப்படியாக அவர் அசைந்துக் கொடுக்காத சூழலில், ரஷ்யா தனது படைகளை 24.2.2022 அன்று, உக்ரைனில் நுழையுமாறு உத்தரவிட்டது. இதற்கான நேரடி-மறைமுக காரணங்கள் மேலே கூறப்பட்டுள்ளன.

(4)

போர் ஓர் சுழற்சி முறையில், சம்பந்தப்பட்ட சக்திகளின், ஏட்டிக்குப் போட்டியான நடவடிக்கைகளால், தன் வழியே தன் உக்கிர நிலையை நோக்கி நகரத் தொடங்கியது. போர் துவங்கிய மூன்றாம் நாள், இங்கிலாந்தின் வெளிநாட்டு அமைச்சர் Liz Truzz ரஷ்யாவுக்கு எதிராக விடுத்த எச்சரிக்கையானது போரில் மேலும் எண்ணெய் வார்ப்பதானது :

“ரஷ்யா உடனடியாக தன் இராணுவ நடவடிக்கையை உக்ரைனில் நிறுத்திக் கொள்ளாவிட்டால், அது நேட்டோ நாடுகளை ரஷ்யாவுடன் நேரடி மோதலுக்கு தூண்டி விட வழிவகுத்துவிடும்”.

இது, ஸெலன்ஸிக்கு எத்தகைய உற்சாகத்தை தந்திருக்கும் என்பது வெளிப்படை. இருந்தும் இது யாருக்காக ஆற்றப்பட்ட கூற்று என்பது ஒரு புறமாக இருக்க, ஏற்கனவே தன் அணு ஆயுத பலத்தை காட்சிப்படுத்தியிருந்த ரஷ்யா, இப்போது, தன் அணு ஆயுத படையை தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டது. (On Combat Duty) இவ் உத்தரவு, உலகெங்கும் இருந்த அணு ஆயுத நிபுணர்களை ஒரு கணம் அதிரச் செய்தது என்பதில் சந்தேகமில்லை.

ஏனெனில், அணு ஆயுதங்களை “தயார் நிலையில்” இருத்துவது என்பது பொதுவில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று. ஏனெனில், எந்தவொரு சிறு தவறோ அல்லது எந்தவொரு தற்செயல் நிகழ்வோ, ஓர் அணு ஆயுத செலுத்துகையை இயக்குவித்து, ஓர் அணு ஆயுத போரை கட்டவிழ்த்து விடும் தன்மைக் கொண்டது. ஆனால், ரஷ்யா வின் இவ் எச்சரிக்கை நகர்வுகளுக்கு கட்டுப்படாத நேட்டோ, தனது இரண்டாவது சுற்றை ஆரம்பித்தது. அதன் பிரகாரம், விமானங்களுக்கு எதிராக ஏவுகனைகளை நேட்டோ, உக்ரைனுக்கு உடனடியாக வழங்கும் என்ற அறிவிப்பு வெளியானது.

இவ் அறிவிப்பைத் தொடர்ந்து ரஷ்யா , பதிலுக்கு, தனது டோப்புல் (Topol)  அணு ஏவுகனையை தனது தந்ரோபாய இடங்களை நோக்கி நகர்த்தத் தொடங்கியது. இதற்கு பதிலடியாக 27.2.2022 அன்று ஸெலன்ஸ்கி தனது நாடு அணுகுண்டுகளை நோக்கி பயணப்படக்கூடும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இது மூன்றாவது சுற்றுக்கான அறிவிப்பானது. உக்ரைனில் பல்வேறு விதமான அணு ஆலைகள் உண்டு என்பதும் அவற்றில் செர்னோபில் அணு ஆலை “வளர்ச்சி” அடைந்த ஒரு கட்டத்தில் உள்ளதென்பது உலகமறிந்த ஒன்று. ஸெலன்ஸ்கியின், அணு ஆயுதங்களை நோக்கி பயணப்படுதல் என்ற அச்சுறுத்தலின் அல்லது முழக்கத்தின் பின்னணியில், ரஷ்யா படைகள் விரைந்து செயல்பட்டு செர்னோபில் அணு ஆலையை தன் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சேர்த்து அங்கிருந்த அனைத்து விஞ்ஞானிகளையும் தன் கைப்பிடிக்குள் அடக்கிக் கொண்டது.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.