திரு.சாந்திகுமாரின் எழுத்துக்கள் இரு தளங்களில் உருவாகின. ஒன்று இலக்கியம். மற்றது சமூக-அரசியல்-வரலாற்று கட்டுரைகள். இலக்கியம் அவரது சிறுகதைகளையும், இலக்கிய விமர்சனங்களையும், உலக இலக்கியத்தின் மொழிபெயர்ப்புகளையும் உள்ளடக்கும். அவரது சமூக வரலாற்று அரசியல் கட்டுரைகள் மலையக வரலாறு, மலையக சமூக உருவாக்கம், தத்துவ அரசியல் விமர்சனங்கள் என்ற வகையில் வகைப்படும். இங்கு, அவரது அரசியல் சார்ந்த தத்துவார்த்த பார்வை பின்புலமாய் இருக்க இன – சாதீய அடிப்படைகளை கேள்விக்குட்படுத்திய கட்டுரை இது.

1

"ஒவ்வொரு முன்னெடுப்பும் மனிதனாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. அவை, ஒவ்வொன்றும் மனிதனாலேயே, மேலும், பிரமாண்டமடைகின்றன."   -மக்ஸிம் கார்க்கி-

“மலையகம்”; என்ற குறியீடு, பல கேள்விகளையும், பதில்களையும் உள்ளடக்கிய ஒரு யதார்த்தம் என 1980களில் நந்தலாலா எழுத நேர்ந்தது. ஒரு 200 வருட கால நகர்வின் பின்னர் மலையகம் என்ற இவ்யதார்த்தம், வந்து சேர்ந்திருந்த, ஒரு வரலாற்று புள்ளியை, தன் வாழ்வின் மிக ஆரோக்கியமான காலப்பகுதியில், சரியாக எதிரொலித்த ஒரு சிலரில், சாந்திக்குமாரின் பெயர் மிக துலாம்பரமானது என்பதிலேயே அவரது முக்கியத்துவம் உள்ளடக்குகின்றது எனலாம். அது காலம் வரை, மலையகம் தொடர்பில் பனிமூடம் போன்ற ஓர் கற்பனை படர்ந்த கலங்கலான கருத்துப்படலமே எங்கும் பரவியிருந்ததாய் காணப்பட்டது. இது பொதுவானது. அதாவது, பனிமூடங்கள் என்பன உலகில் பொதுவானவைதான். ஏனெனில் கனவுகளிலும், பனி மூடங்களிலும் ஜீவிதம் நடத்துவதென்பது ஒருவகையில் வசதிகளையும், வாய்ப்புகளையும் உள்ளடக்குவதுதான் என ஆகிறது – யதார்த்தம் அதன் குரல்வலையை நசித்துப் போடும் வரை.

2
இவ்வகையில், இடதுசாரிகளின் கனவுகளிலும், மலையகம் என்ற இவ்யதார்த்தம், ஒரு பிரச்சினைகளும் இல்லாததாய் ஜீவிதம் கண்டது–புரட்சி வரட்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன். இருந்தும், 1930களில், இடதுசாரிகளின் கோட்டைகள் என வர்ணிக்கப்பட்ட இம்மலையகம், 50களில் தமது கட்சிகளின் தத்துவார்த்த புரள்வுகளினாலும், உள்ளிருந்து முகிழ்த்த புதிய யதார்த்தங்களினாலும், தன் இடதுசாரி சோபையை ஓரளவு களையத் தொடங்கியிருந்தது எனலாம்.

வரலாற்றின் இக் கட்டத்தில், இக்குறித்த இடதுசாரிகளின் மத்தியில் பாராளுமன்றவாதம் ஆழ வேரூன்ற தொடங்கியது இம்மாறுதலுக்கான காரணங்களில் ஒன்றென குறிக்கலாம். ஆனால், மலையக சார்பிலான எண்மரின் பாராளமன்ற தெரிவும், அதற்கெதிராக வகுக்கப்பட்ட விய10கங்களும், நகர்வுகளும், மலையகத்தை, அக்கட்டத்தில், பாதித்ததும் முக்கியமானவையே. மேற்படி பின்னடைவுகளை தாண்டி, இதன் அடுத்த கட்டமாக, 1960களில் சூள் கொண்ட ~ண் தலைமையிலான இயக்க செயற்பாடுகள் முக்கியம் பொருந்தியவையாகின்றன.

புரட்சி ஒன்றின் மீதே நம்பிக்கை கொண்டு, அவ் ஒன்றையே தனது குறிக்கோளாக்கி, தன் வேலைத்திட்டங்களை முன்னெடுத்த இவ்வியக்கம் ஆற்றிய சேவைகள் குறிக்கத்தக்கவை. பாராளுமன்றவாதத்தை நிராகரித்தும், அதனடியாக பிறப்பெடுக்கக்கூடிய ‘வாக்குகள் தேடல்’ என்ற கவலைகளை புறந்தள்ளியும் அதனடிப்படையில் ஓர் ஆதிக்கத்தை அல்லது அதிகாரத்தை நாடி ஓடும் சிந்தனை வேர் களைந்து, அதற்கேற்ற ஓர் அரசியலை வடிவமைத்து, ஓர் புதிய பரிமாணத்தை இலங்கை அரசியலில் புகுத்திய இவ்வியக்கம் மலையக தோட்டங்களின் உள்ளும் 1960களில் ஊடுருவியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாராளுமன்ற வாதமானது, தன் வளர்ச்சி போக்கில் தன் வாக்குத்தேடும் படலத்தால், நாட்டின் மதகுருக்களை பகைத்துக் கொள்ள கூடாது என்ற அரசியலை நோக்கி ஓடுகையில், தம் வாக்குரிமை உட்பட அனைத்தையும் இழந்திருந்த ஓர் பாட்டாளி வர்க்கத்தை நாடி அணுகியது, இவ்வியக்கத்தின் சமரசம் கடந்த ஓர் அரசியல் நிலையை சுட்டுவதாக இருந்தது.

இவ்வியக்கம் ஆற்றிய சேவைகள், நெஞ்சில் கொண்ட புனிதங்கள், குறித்த காலக்கட்டத்தில், வரலாற்று ரீதியாக, குறிப்பிடத்தக்கவைதான் என்றாலும், இவையும் ஓர் யதார்த்தத்தை கட்டுவிக்க தவறவில்லை. இவ் யதார்த்தம் மலையக தேசிய கேள்வியை கையேந்துவதில் அல்லது தொடர்பு படுத்திக் கொள்வதில், சிக்கலை எதிர்நோக்கியதாகவே இருந்தது. அதாவது, ராஜலிங்கம்-வெள்ளையன்-வேலுப்பிள்ளை - இவர்கள் முன்னெடுத்த போக்குகளில் இருந்து ~ண்னின் போக்கு முற்றாக வித்தியாசம் கொண்டிருப்பினும் - ~ண் இம் மக்களின் தேசியம் தொடர்பிலான கேள்வியை புறந்தள்ள நேர்ந்தது, புரட்சி தொடர்பிலான தன் அதீத நம்பிக்கை காரணமாக இருக்கலாம் என்றாலும் “குறித்த காலக்கட்டத்தில்” நாட்டில் பெருந்தேசியவாதம், இன்றுள்ள அளவில் நிறுவனமயமாக்கப்பட்டிருந்ததா என்பதும் மறுபக்க கேள்வியாகின்றது.

ஆனால், காலத்தின் கேள்விகளோ தட்டிக் கழிக்க முடியாதவை. வேறுவார்த்தையில் கூறுவதானால், காலத்தின் கேள்வியானது, தன் காலப்போக்கில், எத்தகைய வடிவங்களை வந்தடைந்தது என்பது வரலாற்று முக்கியத்துவம் கொண்டதே. இருந்தும், மண்ணின் இயக்கம், மலைகத்தின் இருப்பை மாற்றியமைப்பதில், பாரிய பங்காற்றவே செய்தது என்பதில் சந்தேகம் இல்லை. வாக்கிழந்த ஒரு மக்கள் சைனியத்தின் விடுதலைக்காக, இவ் இயக்கம், மலையகத்தின் பத்தாம் பசளி தலைமைகளுடன் முட்டி மோத முன்வந்ததற்கூடும், இவ்வியக்கம் பாராளுமன்ற வாதம் தோற்றுவிக்க கூடிய ஓர் சந்தர்ப்பவாத அரசியலில் இருந்து தன்னை விடுவித்ததற்கூடும், மலையகத்தின் இளைய தலைமுறையினரிடையே, இவ்வியக்கம் ஒரு புதிய விழிப்புணர்வை கட்டி வளர்க்க முற்பட்டது. இது ஒரு வகையில், இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை, என்ற மன உறுதியையும், காலூன்றும் திராணியையும் மலையக இளைய தலைமுறையினருக்கு கற்றுத்தர முன்வந்தது எனலாம்.

சுருங்கக் கூறினால், 30களில் சூள் கொண்ட, அம்சமானது, தன் பாராளுமன்ற வாதங்களால், காலப்போக்கில், சமரசங்களுக்கு உட்பட்டு விட, அதன் விமர்சனமாய் தோன்றிய மற்றுமொரு அலை, மலையகத்தை தாக்கி, புதிய கட்டுமானங்களை கட்டுவிக்க தொடங்கியது 60களின் புது நிகழ்வானது. ஆனால், இவ் இடதுசாரி சிந்தனைகளின் மத்தியில், இதனைத் தொடர்ந்து வந்த 1971இன் காலக்கட்டம், இதே மலையக தொழிலாளியை, இந்திய பெரு முதலாளித்துவத்தின் வாரிசு எனவும், இந்திய பெரு முதலாளித்துவத்தின் விஸ்தரிப்பு எனவும் அடையாளப்படுத்தி, சிறுமை கண்டது.

அதாவது, ஒரு புறம், 1960களுக்கு பிற்பட்ட காலக்கட்டத்தின் (இடதுசாரிகள் எனப்பட்டோர்) மலையகம் எழுப்பக்கூடிய அல்லது முழு நாடுமே எழுப்பக்கூடிய தேசிய கேள்வியில் இருந்து அந்நியப்பட்டு ஒரு புரட்சிகர அரசியல் நிலைப்பாட்டை ஏந்தி செயல்பட்ட போது, அதன் விமர்சனமாக தோன்றிய, பிறிதொரு இடதுசாரி கிளை, மலையக மக்களை, இந்திய முதலாளித்துவத்தின் வாரிசு என்று விளங்கிக் கொள்வதில் அக்கறை காட்டியது, இவ்வியக்கம் அடையக்கூடிய, அக்காலக்கட்டத்து வரலாற்று முடிவுகளை, சுவரில் எழுதியதாயிற்று. ஏனெனில், ஒரு சிறுபான்மை இனத்தை புறந்தள்ளி, ஆதிக்க சக்திகளுக்கு எதிராய் போராடுவது என்பது, ஆதிக்க சக்திகளின் பிரித்தாளும் நடைமுறைக்கு, ‘புரட்சிகர ரீதியில்’ பலிகடாவாவது, என்பதை விட இது, வேறொன்றில்லை - இது தத்துவார்த்த நடைமுறை சார்ந்த கேள்விகளை கடந்து வந்தாலும் கூட.

அதாவது, மாக்சியம் தான் கடந்து வந்த பாதையில், சந்தித்துள்ள இத்தகைய திசைமாறல்கள் இப்படியாக பற்பல வேறுபாடுகளை அடிப்படையாக கொண்டவைதாம். சுருங்கக் கூறின், பாராளுமன்ற வாதம், என்பது போன்ற சமரசங்களை கணத்துக்கு ஒதுக்கினாலும் புரட்சிகர அலைகள் முன்னெடுக்க கூடிய தேசியம் தொடர்பிலான கேள்வி, வரலாற்றின் காலப்போக்கில், நெருடுவதாக தொடர்ந்தே உள்ளது. இது, இலங்கை;கு மாத்திரமே உரித்தானவையல்ல. உலகலாவிய ரீதியில், இச்சிக்கல்கள் மீண்டும், மீண்டும், ஒரு சுழற்சி முறையில், மாக்சிய நடைமுறைகளில் முட்டி மோதியனவையாகவே உள்ளன - இன்றுரை. அயர்லாந்து முதற்கொண்டு, அன்றைய ர~;யாவின் தேசிய பிரச்சினைகள் ஈறாக இக்கேள்விகள், அவ்வவ் காலப்பகுதியில் முகம் கொண்ட மேற்படி சவால்கள் அனந்தம்.

காரணம், காலங்காலமாய், தலைமுறை தலைமுறையாய், சுரண்டலுக்கு வழிசமைத்திருக்கும் ஓர் சுரண்டல் சமுதாயத்தை, மேலும் வலுவுறச் செய்துக் கொள்ள இவ்வகை பிரிவினைகளே, அவ்வவ் ஆளும் வர்க்கங்களிற்கு ஈற்றில் கைக்கொடுக்கும் ஆபத்பாந்தவ சக்திகளாகின்றன. உதாரணமாக, 1968களின் இலங்கையை எடுத்துக் கொண்டால் டானியலின் பஞ்சமர் நாவலில், பிற்சேர்க்கையாக காணப்படும், அக்காலகட்டத்தின் செய்தி குறிப்புகள், 1960களின் இறுதியில் இலங்கையில் நிலாவிய அரசியல் சுவாத்தியத்தை அப்படியே படம் பிடித்து காட்டுவதாய் உள்ளது:

14-4-1968
கந்தசுவாமி கோவில் தேர் எரிப்பு… … எறிகுண்டுவீச்சு… துப்பாக்கிச்சூடு… கோவில் கதவடைப்பு…

15-4-1968
ஆலயப்பிரவேசகாரர் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது பெருங்கலவரம்… துப்பாக்கி குண்டுகளுக்கு இலக்காகி ஐயாண்ணன், மாயாண்டி என்போர் ஸ்தலத்திலேயே மரணம்… எறி குண்டுத்தாக்குதலுக்கு முத்து, சின்னாச்சி என்ற இரு பெண்கள் பலி…

25-4-1968
வட பகுதி எங்கும் ஒரே நாளில் 15 கோவில்களில் ஆலயப் பிரவேசம்…

01-5-1969
தரிசுநிலங்களை விவசாயிகள் முற்றுகை… … நிலைமையைக் கட்டுப்படுத்தப் பொலிசார் தடியடிப் பிரயோகம்…

28-8-1968
நீர் வேண்டும்: மகாவலி கங்கையை வடக்கே திருப்பு… என்ற… ஊர்வலகாரர்களை பொலிசாரும், வேற்று அரசியல்காரர்களும் அடித்துக் கலைத்தனர்…

31-12-1968
உரிய வேலை கேட்டுப் படித்த மாணவர்கள் ஆர்ப்பாட்டம்… … பொலிசார் குண்டாந்தடிப் பிரயோகம்… மூன்று மாணவர்கள் படுகாயம்…

28-2-1969
அமெரிக்கத் தூதுவருக்குக் கூழ்முட்டை வீச்சு… யுத்தவெறியர்கள் ஒழிக என்ற சுலோகத்துடன் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம், இருவர் கைது…

25-3-1969
வடபகுதிச் சாதிக்கொடுமைகளை விவரித்து தென் இலங்கையில் சித்திரக் கண்காட்சி… சிங்கள மக்கள் அதிர்ச்சி…

23-4-1969
வடபகுதி எங்கும் மா ஓவின் பாதம்… வடபகுதியின் சங்கானை சீனத்தின் சங்கானையாக மாறுகிறது. இதை அரசு உடனே தடுத்து அழித்துவிட வேண்டுமென்று பாராளுமன்றத்தில் தமிழ்த் தளபதி வேண்டுகோள்…

1-5-1969
சட்டத்தைமீறி மேதின ஊர்வலம்… ஊர்வலத்தி;ன் முன் வரிசையில் சென்ற எண்பருக்குப் பலத்த குண்டாந்தடித் தாக்குதல்… கேரளத்தைச் சேர்ந்த குருமரிக்காய் என்பவரும், அபயதுங்க என்ற சிங்களவரும்… அபாயகரமான நிலையில்… கண்ணீர்ப் புகைக் குண்டுகள்…

5-5-1969
“ ஆலயத்துள் பிரவேசிக்கச் சென்றவருக்கு தீப்பந்தால் சூடு… சூட்டுக் காயத்துக்குள்ளானவர் கடும் காயத்துடன் கோவில் மூலஸ்தானம் வரை ஓடிச்சென்றனர்…

15-5-1969
தென்னிலங்கையின் பல பகுதிகளில்; வடப்பகுதிச் சாதிக் கொடுமைகளை கண்டித்துக் கூட்டங்கள்… பாராளுமன்றம் சென்ற தமிழ்த் தலைவர்களை நோக்கிச் கூச்சல்…

20-5-1969
சாதிக்கொடுமைகளை பார்வையிட… தென் இலங்கை அரசியல் தலைவர்களும் பௌத்த குருக்களும் விரைவு…

5-6-1969
‘கந்தன் கருணை’ நாடகத்தில் அமளி துமளி. குழப்ப வந்தவர்களை கந்தனாக நடித்தவர் வேலால் தாக்கினார். நாரதர் தம்புராவால் அடித்தார்.

25-7-1969
வாக்குக்கேட்டு உள்ளே வராதே என்ற பர்னர்கள் பல கிராமப்புற முனைகளில் கட்டப்பட்டன… ஜனநாயக முறைகளை மறுக்கும் இயக்கங்களைப் ப10ண்டோடு அழிக்க வேண்டுமென தேர்தலில் நிற்கும் அரசியல் கட்சிகள் கூட்டாக அரசிடம் கோரிக்கை…

குறிப்பாக, 1968 முதல் 1969 வரையிலான இரு வருட காலப்பகுதியில், இலங்கையின் பெருவாரியான மக்களிடை நிலவிய இச்சமூக நடப்புகள், கோபதாபங்கள், அம்மக்களின் அதிருப்திகள், இவை ஆட்சியாளர்களுக்கு எதிராக, ‘நாடு முழுவதுமாய்’, எப்படி பரவி சூள் கொள்ள, மற்றும் ஒன்றிணைய துடித்தன என்பதனை, மேற்படி செய்தி குறிப்புகள், விஸ்தாரமாக இன்று எமக்கு எடுத்துக் காட்டுவதாயுள்ளது.
இப்போக்கு ஒரு புறம். மறுபுறம், மலையகத்திலும் இதே போக்கானது அந்நியமுறாமல், மலையகத்தையும் சேர்த்தே ஆட்டிப்படைப்பதாக இருந்தது.


[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.