4

வேறு வார்த்தையில் கூறுவோமானால், வரலாறு வரலாறாக–அதாவது ஆதிக்க சக்திகளால், தந்திரோபாய ரீதியாக, களமிறக்கி விடப்பட்ட மேற்படி நகர்வுகளால், இலங்கையின் அரசியல் சுவாத்தியமே சீர்குலைந்து மாற்றமுற்ற ஒரு நிலையில், இனவாத ஒடுக்குமுறைக்கான சுவாத்தியங்களும் அதன் பதில் விளைவான தேசியத்திற்கான முகிழ்ப்புகளும், களமிறக்கப்பட்ட நிலையில், இவை பொறுத்த மார்க்சிய நிலைப்பாடுகள் யாவை என்பதுவே கேள்வியானது.

சிறுபான்மை தேசிய முதலாளிகளும், பெருந்தேசிய முதலாளிகளும் (அல்லது ஒடுக்கும் சமூகத்தின் ஆதிக்க சக்திகளும் ஒடுக்கப்படுவோர் சமூகத்தின் ஆதிக்க சக்திகளும்) கைக்கோர்த்திருப்பதை தன் வாழ்நாள் முழுவதும், (தன் பல்கலைக்கழக வாழ்நாள் முடிந்ததிலிருந்து) நாள்தோறுமாய் பார்த்து வந்த ஒரு மனிதர், ஒரு பொழுது முடிய மறுநாள் காலை, தன் விதிமுறைகளை மாற்றியமைத்துக் கொள்வார் என எதிர்ப்பார்ப்பது–சற்றே அதிகமானது. இங்கேயே டானியலின் மேற்படி பத்திரிக்கை குறிப்புகள் முக்கியத்துவப்பட்டு போகின்றன.

இருந்தும் கார்ல்மாக்ஸ்–எங்கெல்ஸ்–லெனின் ஆகியோரின் விடயங்களில், இவ்வகை மாற்றங்கள், சடுதியாக, அதிலும் தக்க தருணங்களில் கைப்பற்றப்பட்டது என்பதும் உண்மையே. அதாவது, ஆட்சியாளர்களின் நடைமுறை தந்ரோபாயங்களை, மிக நுணுக்கமாக பின்தொடர்ந்து, அதற்கூடு உய்த்தெறியும் கூரிய அறிவுத்திறன் கொண்டு, வரலாற்று அனுபவங்களிலிருந்து தம் நகர்வுகளை வகுத்த மேதைமை அவர்களுடையது. இதனுடன் கூடவே, தத்துவம்-அரசியல் விஞ்ஞானம்-பொருளாதாரம் ஆகிய அனைத்து துறைகளையும் அரவணைக்கும் விசாலித்த பார்வையையும் அவர்கள் பின்புலமாகவே கொண்டிருக்க செய்தனர் என்பதும் குறிக்கத்தக்கதே. மறுபுறம், 1971ஐ அடுத்து வந்த காலப்பகுதியில், தூவப்பட்ட இந்நச்சு விதைகளின் மொத்த அறுவடை 1977 ஆகியது. இதன் பரிமாணங்கள் - இருந்த மிச்ச சொச்ச, இடதுசாரி சிந்தனைகளையும் நிர்மூலமாக்குவதாகவே அமைந்திட்டன.

மறுபுறத்தில், மேலே கூறியவாறு, சிறுபான்மையினருக்கிடையே தேசிய உணர்வுகளின் விழிப்பு நிலை, தனது புதிதான முகிழ்வுகளை புதிய பரிமாணங்களில் அடைந்து–பெருந்தேசிய இனவாத முறைகள், தமது வளர்ச்சியைக் கண்டு கொண்டது போலவே, இவையும் கண்டு கொண்டன – மக்களிடையே. இப்பின்னணியிலேயே சாந்திக்குமாரின் பார்வை முக்கியத்துவம், முன்னணி நோக்கி நகர்ந்ததாகவும் உள்ளது எனலாம்.

5

1971இல், தன் இருவருட சிறைவாசத்தின் பின்னர், இடம்பெற்றிருக்கக் கூடிய திரு.இரா.சிவலிங்கம் தொடர்பிலான அவரது விமர்சனத்திற்கூடு, திரு.சாந்திகுமார் தன் தீவிர சமூக அரசியல் வாழ்வுக்குள் அடியெடுத்து வைக்கின்றார் எனலாம். இரா.சிவலிங்கம், குறிப்பிட்டத் தருணத்தில், மலையகத்தில் முளைவிட்ட ஒரு மத்திய தர வர்க்கத்தின் ஒரு பகுதியை, அவர்களது நலனை பிரதிபலித்த ஒரு அரசியலை, குறித்த ஒரு காலகட்டத்தில் பிரதிபலித்தவராகின்றார். அவரது அக்காலக்கட்டத்திய பார்வை, எமது அவதானத்திற்குரியதுதான். மலையக பத்தாம் பசளிக் கட்சிகளை (தொண்டமான் ஈறாக) அவர் எதிர்த்த அதே தருணத்தில், தொழிலாளர் - அல்லது - இடதுசாரி நலன்களுடன் - தன்னை இனங்காட்டிக் கொள்ளாமல் - தன் இயக்கத்தை முன்னெடுப்பதில் நம்பிக்கைக் கொண்டவராக அவர் விளங்கினார்.

அதாவது, அக்கட்டத்தில் அவர் தொண்டமான் அரசியலின் விமர்சகராக இருந்த அதே கணத்தில் உழைக்கும் மக்கள் அணியில் இருந்து, தன் அரசியலை வேறுபடுத்தி கொள்ளும் தன்மையினையும் தன்னகத்தே கொண்டிருந்தார். இப்புள்ளியிலேயே சாந்திக்குமாரும் அவருக்குமிடையேயான வித்தியாசங்களும் வேறுபாடுகளும் வந்து சேர்கின்றன. பிரஞ்ஞை பூர்வமான, தன் அரசியல் விழிப்பை, தன் பல்கலைக்கழக நாட்களிலேயே சண்னின் வகுப்புகளில் இருந்தும்–பின், கார்ல்மார்க்ஸ்–ஏங்கெல்ஸ்–லெனின் போன்றவர்களின் சிந்தனைகளுக்கு ஊடாகவும் ஏந்த முற்பட்டிருந்த சாந்திகுமாரின் பின்புலம் இரா.சிவலிங்கத்தின் பின்புலத்திலிருந்து, அரசியல் ரீதியாக, வேறுப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் இருவரிடையேயும் ஒரு ஒற்றுமைக் காணப்பட்டது, ஓர் புதிய மலையகத்தின் தேசிய முகிழ்வை இருவருமே தத்தம் வழியில் வௌ;வேறாகஇனங்கண்டனர்-பிரதிபலித்தனர். இதுவே இரா.சிவலிங்கத்தையும், சாந்திக்குமாரையும் இனம்பிரிக்கும் எல்லைக் கோடுமாகவும் இருந்தது. இரா.சிவலிங்கம் தொழிலாளர் நலனை அல்லது இடதுசாரி சிந்தனைகளை – உள்வாங்க மறுத்து – மலையகத்தின் - மத்திய தர வர்க்கத்தின் - இன்னும் சரியாக கூறினால் - அன்று முகிழ்த்திருந்த – மலையகத்தின் படித்த இளைஞர்களின் நலனை, நுணுக்கமாக பிரதிபலிக்கத் தொடங்குகையில் - சாந்திக் குமாரின் பார்வையோ இதற்கு நேர் முரணாய் முழு உழைக்கும் மக்கள் அணியினரையும் தேசிய பார்வைக்கு அந்நியமாகாமல் அரவணைப்பதாக இருந்தது.

இரா.சிவலிங்கம் அவர்களுக்கு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுடன், 1970களின் முன்னும் பின்னும் கைக்கோர்ப்பதிலும் பிரச்சினை இருக்கவில்லை. ஆனால் சாந்திக்குமாரின் மலையக புரிதல் என்பது தேசிய சிந்தனைகளையும், கார்ல்மாக்ஸ்–எங்கெல்ஸ்–லெனின் முன்னெடுத்த தொழிலாள வர்க்க அடித்தளங்களையும் தனக்குரிய வகையில் உள்வாங்கி பிரதிபலிக்க முற்பட்டதாகவும் காணப்பட்டது. மலையகத்தில் முகிழ்த்த “இத்தேசிய உணர்வின்” கூறுகளை, அல்லது, இவ்வரலாற்றுக் கட்டத்தை சரியாக உள்வாங்கி அதனை தன் “வர்க்க அரசியலுடன்” பிணைத்ததிலேயே அவரது அரசியல் முக்கியத்துவம் உள்ளடங்குகிறது எனலாம்.

அதாவது, சண், பல்வேறு வரலாற்று காரணங்களால் உள்வாங்குவதில் சற்றே தாமதம் காட்டிய வரலாற்றின் அக்கணம் சாந்திக்குமாரால் சடுதியாக அடையாளம் காணப்பட்டு இறுகக் கைப்பற்றப்படுகின்றது. மறுபுறத்தில், ஒரு தேசிய கேள்வியானது, எவ்வளவு ஜாக்கிரதையாக கையாளப்படவேண்டியுள்ளது என்பதற்கு, லெனினின் எழுத்துக்களும், மகத்தான ரஸ்ய புரட்சியின் சாதனைகளும் இன்றுவரை சான்று பகர்வதாகவே இருந்தன.

6

அதாவது, ஒரு தேசிய கேள்வியானது, (அல்லது சிறுபான்மை இனங்களின் பிரச்சினையானது,) எப்படி எப்படி ஓர் ஆதிக்க சக்தியின் கண்ணோட்டத்தால் பிரதிபலிக்கப்பட கூடுமோ, அதே போன்று, அதற்கு மிக எதிரிடையாக, அதே தேசிய கேள்வி, ஒரு உழைக்கும் மக்கள் சைனியத்தின் நலன்களுக்கும் குந்தகம் ஏற்படா வகையில், மக்கள்சாரிகளால் கையேந்தப்பட்டு அவர்களின் உழைக்கும் தலைமைகளால் பிரதிபலிக்கப்பட்டாக வேண்டும் என்பதே படிப்பினையாகின்றது. ஆனால் இது வரலாறு சம்பந்தமானது.

அதாவது மேற்படி தேசிய கேள்வி, வரலாற்றின் எக்ககட்டத்தில் உள்ளது, இப்புள்ளியில் செயற்படும் எதிரெதிர் சக்திகளின் மொத்த பெறுமானம் யாது - இவற்றுடன் உழைக்கும் மக்களின் நலன் அந்நியப்படாது கைகோர்க்க வேண்டிய யதார்த்தம் - எவ்வகையானது - இவை, அனைத்தும் சம்பந்தப்பட்ட கேள்விகளாகின்றன. இக்கேள்விகளை சாந்திகுமார், தன் அரசியல் வாழ்வில் கேட்டுக் கொள்ள தவறவில்லை. இதனை வேறு வார்த்தையில் கூறினால், புரட்சி என்பது மக்கள் பங்கேற்கும் அல்லது அவர்களால் முன்னின்று நடாத்தப்படும் முன்னெடுப்புதான் என்பதில் அவருக்கு எந்தவித சந்தேகமும் இருந்ததாக தெரியவில்லை. அதாவது, தேசிய பிரச்சினையை புறந்தள்ளிய ஓர் புரட்சி – முக்கியமாக இலங்கை யதார்த்தத்தில் -நடந்தேற முடியாத சமாசாரம் தான் என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது. ஆனால், இதற்கெதிரான போக்குகளும், அக்காலக்கட்டத்திலும் சரி, மலையகத்திலும் சரி, இல்லாமலும் இருக்கவில்லை.

ரஷ்யாவில், நரோத்னிக்குகள், எவ்வாறு, ஓர் அந்நியமுற்ற விவசாய நலனை பிரதிபலித்தனரோ அல்லது இந்திய விடுதலை இயக்க போராட்ட காலத்தில் எவ்வாறு தீவிரவாதம், மக்களிடம் இருந்து தம்மை அந்னியம் கொண்ட நிலையில், தமது கோபங்களுக்கே முக்கியத்துவம் தந்த இளைஞர் அணிகளை உருவாக்கியதோ, அதே போன்று இலங்கையில் 1971 இன் எழுச்சியின் சமாசாரங்களிலும் இதனை காணலாம்.

7
மலையக வரலாற்றை அணுகிய பல்வேறு முயற்களில், எஸ். நடசேன் அவர்களின் முயற்சி ((The History of the Plantation People in Sri Lanka) ஒரு விதி விலக்காகின்றது. இருந்தும், எஸ். நடேசன் அவர்கள் தனது குறிப்பிடத்தக்க, அம்முயற்சியில், மலையக உருவாக்கம் பொறுத்தோ அல்லது மலையக சிறுபான்மை இனத்தின் தேசிய முகிழ்வுகள் பொறுத்தோ தொட்டாரில்லை. மறுபுறத்தில், மலையகம் என்ற பருப்பொருளை ஏதோ ஒரு வகையில் அணுகிய, பெரும்பான்மை புலமையாளர்களும், இந்திய விஸ்தரிப்பு வாதம் போன்ற எண்ணக்கருவை பின்புலமாக்கிக் கொண்டதாலோ என்னவோ, மலையக அமைப்பு முறையை ஒரு பின்னடைந்த அமைப்பு முறையாகவே அடையாளம் காண முயன்றனர். அதாவது அவர்களது பார்வையில், மலையகம் என்பது அல்லது பெருந்தோட்ட முறைமை என்பது, வளர்ச்சியுறா, ஒரு பின்னடைந்த அமைப்பு முறை என்பதும், வளர்ச்சியுற்ற அமைப்பு முறைகளான முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்ற முடிவுக்கும் அவர்கள் வந்து சேர்ந்தனர்.

இதற்கு அவர்கள் கூறும் தலையாய சமாதானம், உபரி லாபம் என்பது மீளவும், பெருந்தோட்ட அமைப்பு முறைக்குள் பிரயோகிக்கப்படவில்லை–அதற்குரிய வெளியும் அங்கில்லை என்பதாகும். இதனடிப்படையில் அவர்கள் வந்து சேரும் முடிவு, தென்னிலங்கை விவசாய கிராமங்களை விட, பெருந்தோட்ட அமைப்பு முறை அப்படி ஒன்றும் முற்போக்கான குணாம்சங்களை கொண்டிருக்கவும் இல்லை –மலையக தொழிலாளர் எனப்படுவோர் - “தொழிலாளர்” என்ற வரையறைக்குள்ளும் வந்து சேர்வதும் இல்லை என்ற முடிவாகும்.  இது கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற “இடதுசாரி” ஆட்சியாளர்களுக்கும் உற்சாகமான ஒரு வரப்பிரசாதமானது. மலையக பெருந்தோட்ட அமைச்சுக்கு பொறுப்பாகவும் அரசின் ஆட்சியாளர்களில் ஒருவராகவும் இருந்த அவர் - “தொழிலாளருக்கான” மாத சம்பளம் போன்ற கோரிக்கைகளை தட்டிகழிக்க வசதியாக, இவ்வாதம் அவருக்கு உதவி செய்யக்கூடியதாகவும் இருந்தது. அதாவது, மலையக தொழிளார்களை “பயிர்செய்கை விவசாயியாக” அல்லது “தொழிலாளர்” என்ற ஸ்தானத்தை விட குறைந்த ஸ்தானமான “பயிர்ச்செய்கை தொழிலாளி” என கண்டு, அத்தகைய ஒரு நாமகரணத்தையும் சூட்டி, அவர்களின் உழைப்பின், அதி உச்ச உபரியை தொடர்ந்தும் அபகரித்து ஆட்சி நடாத்தும் போக்கு, ஒரு இனவாத அணுகுமுறையின் நீட்சி என்ற வகையில் இப்படியாய் செயற்படுவதாய் இருந்தது– அஃது, புலமை முலாம் – அல்லது புரட்சி முலாம் ப10சப்பட்ட நிலையில், இருந்தாலும் கூட.

இதனையே திரு. சாந்திக்குமார், ஆங்கிலேய காலனித்துவத்தின் தொடர்ச்சி, இப்போது, இங்கே இன காலனித்துவத்தின் தொடர்ச்சியாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளது என வாதிட்டார். மறு புறத்தில், இதற்கு நேர் எதிரான வகையில், திரு.~ண்முகதாசனின் கணிப்பில், இந்த மலையகத் “தொழிலாளர்”, தொழிலாளிகளுக்குரிய அனைத்து அம்சங்களையும் அரசியல் படிமங்களையும் நாட்டின் புரட்சிக்கான அடிப்படை அந்தஸ்தினையும் ஏந்தியவர்களாக இருக்கின்றனர் என்ற கருத்து நிலைக்கு அவர், ஏற்கனவே வந்து சேர்ந்திருந்தார். இவ் இருவேறுப்பட்ட கருத்துநிலைகளின் பின்புலத்திலேயே திரு.சாந்திக்குமார் அவர்களின் மலையகம் தொடர்பிலான வரலாற்றுப் பார்வை, தன் முக்கியத்துவத்தை உள்ளடக்குகின்றது எனலாம்.

8

“ ‘முதலாளித்துவ உற்பத்தி முறையானது’ , மிக விரைவான முறையில் காலனிகளில், காலனித்துவ ஆட்சியாளர்களால் நட்டுவிக்கப்படுகின்றது” – என்பார் லெனின். ‘இதற்கு முன்பதாக’, இப்படியான காலனிகள், பிற நாடுகளுடன் “பண்டமாற்று” என்பதனைத் தாண்டி முதலாளித்துவ உற்பத்தி முறை என்ற வரையறைக்குள் காலடி எடுத்து வைக்காதவை என்பது அவரது நிலைப்பாடாகின்றது. (பார்க்க : The Discussion of Self Determination Summed up – October 1916.) (பண்டை இலங்கையும், தனது புகழ்பெற்ற வாசனை திரவியங்களுக்காக பண்டமாற்றில் ஈடுபட்டிருந்ததாக. வரலாறு கூறும்). லெனின், கைக்கொண்டிருந்த இத்தகைய வரலாற்று அணுகுமுறையும் அவதானிப்புகளும், மார்க்ஸ்-எங்கெல்ஸின் அணுகுமுறைகளுக்கு அந்;நியப்படாதவையே. மேலும், ஒரு வகையில் அவற்றின் நீட்சியே இது என்று கூட கூறத் துணியலாம்.

ஆனால் இலங்கையின் பெரும்பாலான இடதுசாரி சிந்தனையாளர்களுக்கு இக் கருத்து நிலைகள் அனைத்தும் அந்நியம் கொண்டவையே. அதாவது, அவர்கள் தம்மை தாம், ‘மார்க்ஸ்சிஸ்டுகள்’ என வரையறைப்படுத்திக் கொண்டாலும், அவர்கள் இலங்கையின் பண்டை “செழுமைகளில்” இருந்து தங்களை விடுவித்துக் கொண்டபாடில்லை. அதாவது, பாராளுமன்ற வாதத்தில், புகுந்த இவர்களின் காலனித்துவ எதிர்ப்பு அல்லது புரிதல் நாளடைவில், இந்தளவில் மட்டுப்பட்டு போனது தர்க்க ரீதியானதே. ஆனால் மறுபுறத்தே, பாராளுமன்ற வாதத்தை நிராகரித்து எழுந்த இடதுசாரி சிந்தனையாளர்களும் கூட, தமக்கு எதிராக ஆதிக்க சக்திகள் கைக்கொண்ட, மேலே கூறப்பட்ட, புதிய அணுகுமுறையினையும் அதன் மொத்த விளைபயன்களையும் கறாராக இனங்காண தவறினர் எனலாம்.

இதனாலோ என்னவோ, அவர்களின் பார்வையில், தேசிய பிரச்சினை –அல்லது சிறுபான்மை இனங்களின் பிரச்சினை என்பது, ஒரு புரட்சிகர பின்னணியில், சிக்கலற்றதாக –அல்லது குறைந்தபட்சம் தீவிரமாக வாதிக்கக் கூடிய ஒரு அம்சமாக இருக்கவில்லை என்றானது. புரட்சி அனைத்தையுமே நிவர்த்தி செய்து விடும் என்ற நம்பிக்கையே, மேலே கூறியவாறு, அவர்களிடம் மேலோங்கி நின்றது. இப்போக்கினையும், திரு.சாந்திகுமார், தன் எழுத்துக்களில் விமர்சிக்க முற்பட்டார் எனலாம்: (பார்க்க: சாந்திகுமார் கட்டுரைகள்). அவர் ஓர் இடதுசாரியாக இருந்தும், இடதுசாரி அணிகளை அவர் இவ்விதம் விமர்சிப்பதானது, புரட்சியின் மீது அல்லது இடதுசாரி சிந்தனை மீது அவர் கொண்டிருந்த அவநம்பிக்கை அல்லது தளர்வான நம்பிக்கை என்ற அடிப்படையில் அமைவதாகாது. மாறாக, யதார்த்தத்தில் நடந்தேறும் ஸ்தூலமான நகர்வுகளை அல்லது மாற்றங்களை சரியாக உள்வாங்கி, கிரகித்ததின் நேரடி விளைவு இது எனலாம். சிறுபான்மையினங்களின் அல்லது தேசியங்களின், தேசியம் சார்ந்த கேள்விகளின் முக்கியத்துவத்தை நிராகரித்து, வர்க்கப்புரட்சி ஒன்றையே குறிகோளாக கொண்டு இயங்கிய ரோசா லக்ஸம்பேர்க் போன்றோரை, லெனின் தன் எழுத்துக்களினால் தயவு தாட்சண்யமற்ற விமர்சனத்திற்கு உட்படுத்தினார். அவரது நிலைப்பாடு “புரட்சிகர பேரலையானது தேசியத்திற்கான முற்போக்கு அலைகளுடன் இணைந்தாக வேண்டும்” என்பதே ( The Revolutionary Proletariat and the Rights of Nations to Self Determination ) கேள்வி: ஆனால், இவ் இணைவானது எவ்வாறு ஏற்படும் –அதற்கான தேவைப்பாடுகள் யாவை? – அவற்றின் முன் நிபந்தனைகள் எவை என்பதுவே.

இப்புரிதலுக்கான முதல் நிபந்தனை, ஒடுக்கப்படும் சமூகம் எது என்பதனையும், யாரால் அச்சமூகம் அப்படி ஒடுக்குதலுக்கு உள்ளாகிறது என்பதனை பற்றிய கறாரான புரிதலாகும் என்பார் லெனின். மேலோட்டமாக பார்க்குமிடத்து, இக்கேள்விகள், பிரச்சினைகள் அற்ற – அல்லது சிக்கலற்ற, எளிதான கேள்விகள் போல் தென்படுவது, மயக்கம் சார்ந்த அல்லது ஒருவித முரண்நகை நிலைமையினையே குறிக்கின்றது எனலாம். ஆனால், வரலாற்று ரீதியாக, இடதுசாரிகள், ஆதிக்க சக்திகள் தீட்டிய மேற்படி தந்திரோபாய நகர்வுகளை– எதிர்கொண்ட விதங்களை, நுணுக்கமாக நோக்குமிடத்து, இக்கேள்வியின் உண்மை பரிமாணம் கறாராக வெளிக்கிளம்புவதாக இருக்கும்.

கைலாசபதி, தான் இறக்கும் தருவாயில் கூறியதாக கூறப்படும் கூற்றான, “தேசிய பிரச்சினைகள் தொடர்பில் நாம் தவறிழைத்து விட்டோம் என்றே நினைக்கின்றேன்” எனும் கூற்;று முக்கியத்துவம் அடங்கியதாகும். இது, இப்படி கூறப்பட்டதாக, கூறப்படுவது உண்மையாக இருக்கலாம் –அல்லது அப்படி இல்லாமலும் இருக்கலாம். ஆனால் விடயப்பொருள் என்னவோ ஓர் வரலாற்று உண்மையை எடுத்துரைப்பது என்றாகின்றது.
ஏனெனில், கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா முதல், கலாநிதி எஸ்.பி.டி. சில்வா வரை அல்லது 1971 இன் எழுச்சிகள் முதற்கொண்டு இன்று தொழிற்படக்கூடிய பெரும்பான்மை இடதுசாரிகள் வரையிலானோரை எடுத்துக் கொண்டால், இக்கேள்விக்கான பதில் கைக்கடங்காமலே சென்று விடுகின்றது, இதன் வெளிப்பாடு, இந்திய விஸ்தரிப்பு வாதமாகவும் – அவர்கள் “தொழிலாளர்” என்ற வரையறைக்குள் வரமாட்டாதவர்கள் தாம் என்பதும்–பெருந்தோட்ட முறை என்பது – முதலாளித்துவத்துடன் சம்பந்தமில்லாதது – கிராமிய பின்புலத்துடன் ஒப்பு நோக்குமிடத்து – முற்போக்கும் இல்லாதது என்பனவையான முடிவுகளுக்கு அவர்கள் வந்து சேர்வதாய் உள்ளது.

9

ஒடுக்குபவர் யார் - ஒடுக்கப்படுபவர் யார் என்ற புரிதலின் பின்னணியிலேயே “ஜனநாயகம்” தொடர்பிலான கருத்துநிலையும் முன்னிலை நோக்கி நகர்வதாய் உள்ளது எனலாம். ஏனெனில், “ஜனநாயகம்” என்ற இந்த கோட்பாடு, ஒருபுறம், “சம உரிமை” என்ற அந்தஸ்த்தை, சமூகங்களிடையே உள்ளடக்குவதாய் இருக்குகையில், மறுபுறம் அடிப்படை மனித உரிமைகள் என்ற கருத்து நிலையினையும் உள்ளடக்க கூடியதாக இருக்கின்றது–(ஒரு முதலாளித்துவ கண்ணோட்டத்திலும் கூட). ஒரு சமுதாயத்தில் இருக்கக் கூடிய ஜனநாயக ஏற்பாடுகள் அச் சமுதாயத்தின் ஒடுக்கப்பட்டோரின், இயக்கங்களின் வளர்ச்சிகளுக்கு வேண்டப்படும் அதிமுக்கிய தேவையாகின்றன.
தேசிய சிறுபான்மை இனங்கள் தொடர்பில் அவர் கொண்டிருந்த பல கருத்துக்களும் கூட, மேற்படி கருத்துக்களின் நீட்சியே என கருதவும் இடமுண்டு.

ஏனெனில், ஒரு ஜனநாயக அமைப்பு முறையிலேயே பத்திரிகைகளுக்கான–நூல்களுக்கான– அவற்றை அச்சிடுவதற்கான, கட்சிகளுக்கான– தொழிற்சங்கங்களுக்கான அமைப்பு முறைகளும் உருவாவதற்கான சாத்தியப்பாடுகளும் பரந்த அளவில் தோன்றுவதாய் உள்ளன. இத்தகைய ஒரு அடிப்படையிலேயே, பரந்துபட்ட மக்களின் அறிவூட்டப்படும் நடைமுறையும் சாத்தியமாகின்றது. ஆனால், இத்தகைய ஒரு ஜனநாயகம் விரும்பும் பார்வைக்கு எதிரான நிகழ்ச்சி நிரல்களும், இடது சாரி சிந்தனை போக்குகளின் மத்தியிலேயே, குடிகொள்ளாமலும் இல்லை.

உதாரணமாக, ரஷ்யாவின் நரோத்னிக்குகள் முதற்கொண்டு இந்திய விடுதலை இயக்கத்தின் அதிதீவிர போக்குகள் உள்ளடங்களாக, 1971 இன் எழுச்சிகள் ஈறாக – நிதானித்து நோக்குவோமானால் புரட்சியை, “நாம்” வெற்றிக் கொள்ளலாம். அல்லது புரட்சியை “நாம்” நடத்துவது “அவர்களுக்காக” – அதாவது “மக்களுக்காக” எனக் கூறப்படும் சூளுரைகள் அனைத்தும், மக்களில் இருந்து தம்மை அந்நியப்படுத்திக் கொண்டதன் விளைபயனாக உருவாகுவதே. (ஒரு கட்டத்தில், இலங்கையின் வடகிழக்கு இயக்கங்கள், மக்களில் இருந்து அந்னியப்பட்டு அல்லது மக்களை அந்னியப்படுத்தி, அவர்களை வெறும் பார்வையாளர்களாக மாத்திரம் நிறுத்தும் நிகழ்ச்சி நிரல் இவ்வகையில் நினைவுகூறத் தக்கதே).

இவ்வகை பார்வை அல்லது இவ்வகை அணுகுமுறை இன்றுவரைத் தொடர்கின்றது என்பதிலேயே வேதனைகளும் அடங்குகின்றன எனலாம். இத்தர்க்கத்தின் அடிப்படையிலேயே, இங்கிருந்தே, அதாவது, மக்களின் வேதனைகளைக் கட்டுவித்து அதற்கூடாக அவர்களை, ஒரு மாற்றத்தை நோக்கி, அசையச் செய்யலாம் என்ற சிந்தனைப் போக்கும் வெளிக்கிளம்புவதாய் உள்ளது. அதாவது, அப்படி மக்களின் வேதனையைக்கூட்டி, அதற்கூடாக அவர்களை ஒரு மாற்றத்தை நோக்கி அசையவைத்து அதற்கூடு சமூகத்தின் அசைவியக்கங்களை ஏற்படுத்தி, அதிகாரத்தை கைப்பற்றுதல் என்ற நப்பாசை இன்றைய தெற்கிற்கு மாத்திரமல்லாமல் வடக்கிற்கும், முக்கியமாக, எமது புலம் பெயர் சமூகத்திடையேயும், பொதுவானதாக, மேலோங்கும் சிந்தனைப் போக்காக திகழ்கின்றது. (இப்பார்வைகளுக்கூடாகவே, தற்போதைய அரசு கூட ஆட்சி பீடம் ஏற்றப்பட்டது என்ற உண்மையும் இங்கே நினைவ10ட்டிக்; கொள்ளத்தக்கதே). அதாவது, மக்களின் வேதனைகளைக் கூட்டி, அதற்கூடு மக்களை அசைப்பதும் அல்லது மக்களின் வேதனைகளை கூட்டி அதற்கூடாக சர்வதேசத்தை அசைப்பதும், வடக்கின் அல்லது புலம் பெயர் அரசியலின் மொத்த அரசியல் சாரமாகின்றது.

இது, லெனின் கொண்ட நடைமுறையிலிருந்து வித்தியாமுறுவது மாத்திரமல்லாமல் அதற்கு நேரெதிராக செயற்படும் போக்காகவும் இருக்கின்றது. இதனையே பாரதியின் வார்த்தைகளில் மீள கூறுவோமானால்: “பயிற்றி பல கல்வி தந்து இப்பாரை உயர்த்திடுவோம்” எனும் கற்கை நெறிக்கு நேர் எதிர் முரணானது. அதாவது, “பயிற்றி –பல கல்வி தந்து” என்பது இவர்களிடை அவசியமற்ற ஒன்றாகி விடுகின்றது. சுருக்கமாக கூறுவோமானால், புரட்சியை செய்யப்போவது “நாங்களே”, மக்களல்ல எனும் சிந்தனைப்போக்கே இங்கு ஆழ குடியேறி, மக்களை பகடைகளாகவும், பார்வையாளராகவும் மாற்றி இருத்தும் மனோ பாவமும், இதனடியிருந்தே பிறப்பெடுப்பதாக இருக்கின்றது.

இவ்வாறு, மக்களிடமிருந்து அந்நியம் காணும் போக்கிற்கு “ஜனநாயகம்” என்ற ஏற்பாடெல்லாம் தேவையற்றது – மிகையானது, என்பது மாத்திரமல்லாமல், குந்தகம் விளைவிப்பதாக கூட இருக்கின்றது. ஏனெனில், மக்களின் வேதனைகளை கூட்டி, அதற்கூடு அவர்களை நகர்த்துவது என்பதே, இவர்கள் தேறும் பின்னமாக இருக்கின்றது. மேற்கூறியவற்றை, தொகுத்து நோக்கும் போது, ஜனநாயகம் என்ற கருத்துநிலை, சம அந்தஸ்த்து என்ற ஓர் அடிப்படையில் இயங்க முற்படுமிடத்து, பெரும்பான்மை சமூகத்திடம் மாத்திரமின்றி, அவர்கள் இருவரிடையேயும் ஒரு புரிதலை தோற்றுவிக்கும் காரணியாகவும் செயல்படலாம். இதனாலேயே லெனின் அபிப்ராயப்படுவார்: “சமூக மாற்றத்திற்கான ஓர் போராளி, எத்தனைத் தீவிரத்துடன் தன் சமூக மாற்றத்துக்காய் போராடுவாரோ, அதே தீவிரத்துடன், அவர் சிறுபான்மையின் விடுதலைக்காகவும் போராடுதல் வேண்டும்” என.

இப்பார்வையானது, பிளவுப்படுத்தி ஆளும் ஆதிக்கச் சக்திகளின் உள்நோக்கமிக்க நகர்வுகளை வலுவிழக்க செய்யும் நடைமுறைகளை கொண்டதாகின்றது. இதே வேளை, இவற்றையெல்லாம் கடந்து, ஒடுக்கும் அல்லது ஒடுக்கப்படும் சமூகங்களில் தேசிய கலாச்சாரம் என்ற மூடிய போர்வைக்குள் இயங்கக்கூடிய விடுதலைச்சக்திகள் எனப்படுபவை ஈற்றில், தம் சொந்த ஆதிக்க வர்க்கங்களின் வளர்ச்சிகளுக்கு தலைமையை தாரைவார்ப்பதிலேயே இறுதியில் முடிவுறுவதாய் உள்ளது என்பதும் மனங்கொள்ளத்தக்கதே.

வர்க்கங்களை கடந்த அல்லது தாம் சேர்ந்த சமூகத்தில் புல்லுறுவிகளுக்கு எதிரான விமர்சனங்களை வைக்காது, அவற்றைக் கடந்து ‘தேசிய கலாசாரம்’ எனும் இத்தகைய குறுந்தேசியவாதம், அல்லது கனவு நிலை அரசியல் எனப்படுபவை நடைமுறை யதார்த்தத்தில் இருந்து அந்னியப்பட்டு எப்படி காலம் காலமாக ஆதிக்க சக்திகளுக்கு சேவை புரிகின்றனவோ அப்படியே மக்களின் தொடர் வேதனைகளுக்கு களம் அமைப்பவையாக இருக்கின்றன என்பதும் தவிர்க்க முடியாததாகின்றன.

இப்பின்னணியிலேயே, திரு.சாந்திகுமாரின் எழுத்துக்கள் தன் விமர்சனங்களை கட்டமைத்து கொள்கின்றன. மலையக உரிமைகள் பொறுத்து அவர் எந்தளவில் அக்கறைக் கொண்டிருந்தாரோ, அதே விதத்தில், மலையகத்தில் பின்னடைந்த அரசியல் சக்திகளுக்கு எதிராகவும், குறித்த காலப்பகுதியில் தன் எதிர் பிரசாரங்களை முன்னெடுப்பதில் தீவிர அக்கறைக் கொண்டிருந்தார் எனலாம்.


[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.