10

தேசிய சிறுபான்மைகளின் அல்லது தேசியங்களின் கேள்வி என்பது வரலாற்றின் ஏற்றப்போக்கில் எந்நிலையில் காணப்படுகின்றது அல்லது முழு சமூக அசைவின் பின்புலத்தில் எக்கட்டத்தை அடைந்துள்ளது என்ற கேள்விக்கான பதில் தீர்க்கமாக கண்டுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும் என்பது லெனினது பார்வையாக இருந்தது. தன் வேலைத்திட்டத்தை வகுத்துக் கொள்ள அல்லது இன்னமும் கறாராக கூறினால் தன் கோரிக்கைகளை கறராக கட்டமைத்துக்கொள்ள, இவ்வினாவானது முதலில் பதிலளிக்கப்பட்டாக வேண்டியதாகின்றது. உதாரணமாக, சாதீய போராட்டத்தை ~ண் கைக்கொண்ட தருணமும், தேசிய அல்லது இன ஒடுக்குமுறை போராட்டத்தை அவர் கைதவறவிட்டதாய் கூறப்படும் தருணமும் வரலாற்றில் வௌ;வேறானது. ஒன்று தேவைப்படுவது. மற்றது, கைலாசபதி குறிப்பிட்டது போல தவறவிடப்பட்டதாகின்றது. ஏனெனில், வரலாற்றின் போக்கில் (அல்லது ஆதிக்க சக்திகளின் காய் நகர்த்தல்களில்) இக்கேள்விகளின் வரலாற்று ஸ்தானமானது தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருப்பதாய் இருக்கின்றன. இவ்வகையிலேயே, இவற்றை சரியாக, சரியான தருணத்தில் பற்றிப் பிடிப்பது அதி முக்கிய தேவையாகின்றன.

இவ் அடிப்படையிலேயே, சாந்திகுமாரின் வரலாறு தொடர்பான – முக்கியமாக, மலையக வரலாறு தொடர்பான அக்கறைகள் குறிக்கத்தக்கனவாகின்றன. எஸ்.நடேசன் கொண்டிருந்த அதே அணுகுமுறையை – அவதாது வரலாற்றை கற்பதில் மூல பதிவுகளை தேடி, சேகரித்து, தன் பார்வையை அகல வீசி எறியும் ஓர் அணுகுமுறையை இருவரும் அவரவர் விகிதாசாரங்களில் கொண்டிருந்தாலும், இருவரது அரசியல் பின்புலமானது, ஒருவரில் இருந்து ஒருவர் தொடர்பில், சற்றே வேறுபடுகின்றது.

இதனாலோ என்னவோ – சாந்திகுமார் - தன் வரலாற்று ஆய்வுகளுக்கூடே மலையக சமூக உருவாக்கம் என்ற கருத்து நிலைக்கு வந்துசேர்ந்து, எஸ்நடேசனின் அணுகுமுறையிலிருந்து வேறுபடுகின்றார். கூடவே, இவ்வந்துசேர்கையானது லெனின் குறித்த அல்லது வலியுறுத்திய இடதுசாரி அடித்தளங்களுக்கு முரணற்ற வகையிலேயே அமைந்தது என்பதும் அவதானிக்கத்தக்கதே. சுருக்கமாக கூறினால், மாறிய ஒரு மலையக யதார்த்தத்தின், அக்காலப்பகுதியில் முளைத்த ஒரு மிக முக்கிய முளையை, சாந்திகுமாரின் எழுத்துக்கள் உள்ளடக்க செய்தன என கூறலாம். லெனினின் பார்வையில், இம்முரண்கள் யாவும் எதன் பின்னணியில் அல்லது எவ்வரலாற்று கட்டத்தின் பின்புலத்தில், உள்வாங்கப்பட வேண்டும் என்பது நடைமுறை சார்ந்த ஒரு கேள்வியாகின்றது. ஆனால், இதனை கச்சிதமாக பற்றுவதன் முதல் நிபந்தனை, வரலாற்றை சரிவர கற்பதே.
மலையக வரலாற்றை கற்க வேண்டிய இப்புள்ளியிலேயே சாந்திகுமாரின் மலையகம் குறித்த பார்வை தன் முக்கியத்துவத்தை உள்ளடக்குகின்றது.

11

வரலாற்றின் நகர்வுகளோடு, இன்றைய மலையகம் ஓர் புதிய வரலாற்று கட்டத்தை அடைந்துள்ளது. இதற்கியைய, மலையகத்தினுள் நடந்தேறியுள்ள மாற்றங்களும் பற்பல. பெருந்தோட்ட முறைமையின் சிதைவுகள், பெருந்தோட்ட தொழிலாளரின் பலங்குன்றிய நிலைமைகள், இதனை கச்சிதமாக பிரதிபலிக்கும் தொழிற்சங்கங்களின் கையறுநிலை, புதிய-கணிசமான, மத்திய தர வர்க்கத்தின் புதிய வருகை-இவர்களின் சமரசங்களும் உணர்வுகளும்-அவற்றைப் பிரதிபலிக்கும் இலக்கியமும், அரசியலும் - இப்படி எண்ணற்ற விவகாரங்களை சுமந்து, இன்றைய மலையகம் தொடர்ந்தும் தன் இருப்பை, இன்று முன்னிறுத்தி கொள்ள முனைந்து வருகின்றது. கூடவே, இதன் இன்றைய இருப்பை, தமக்கு சாதகமாக பாவித்துக் கொள்ளும் முயற்சிகளும் பற்பல சக்திகளால், பலவிதமாக, இன்று தொடர்வதாகவும், முன்னெடுக்கப்படுவதாகவுமே தெரிகின்றது. இந்தியா தொடக்கம் எமது புலம்பெயர் அரசியல் வரை மலையகத்தின் இவ்விருப்பை தத்தமக்கு சாதகமான முறையில் பாவித்து கொள்ள மேலும் நிகழ்ச்சி நிரல்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன - இது காலம் வரையிலான, இலங்கையின் ஆதிக்க சக்திகள் போன்றே.

இச் சூழ்நிலையிலேயே, “மலையக தேசியம்” என்ற கருத்தாக்கமும் இன்று எம்மிடை வலுவுடன் இறக்கிவிடப்பட்டுள்ளது. வர்க்கங்களைக் கடந்த, இம்மலையக தேசிய கோட்பாடானது, இறுதி கணிப்பில் யாருக்கு சேவை செய்ய முயற்சிக்கின்றது என்பதும் இதன் பின்னணிகள் யாவை என்பன தொடர்பிலும் கறாரான கணிப்புகள் எம்மிடம், தேவையான ஒன்றாக இருக்கின்றது.

வர்க்க நிலைக் கடந்த, “மலையக தேசியம்” என்ற இக்கோட்பாடு மனித கனவு நிலையை ஆழ ஸ்தாபிப்பதாகவும், மனிதரிடை கனவுகளை உற்சாகப்படுத்தி, வளர்த்து அவர்களை முன் நகர்த்துவதாகவும் உள்ளது. இவை தோற்றுவிக்க கூடிய கள நிலைமைகளை சரிவர புரிந்துக் கொள்ளல் என்பது அரசியல் பரப்பில் இன்று அதி முக்கியமான தேவைப்பாடாகின்றது. மக்களை வெறும் பலிகடாக்களாக்கும், இவ்வகை முயற்சிகளின் மொத்த பெறுபேறுகளை, இலங்கை வரலாற்றில், வட-கிழக்கிலும், தெற்கின் எழுச்சிகளிலும், எம்மக்களால் ஏற்கனவே மிகக்கராராக அனுபவிக்கப்பட்டவைதான். கனவு நிலைக்கு கொண்டு செல்லும் இவ்வேற்பாடுகள், காலம் காலமாக தொடர்வதாக இருந்தாலும், இவற்றிலிருந்து பெறப்படும் படிப்பினைகளோ அன்றி கிரகிப்புகளோ, ஒப்பீட்டளவில் மந்தமாக இருப்பதும், ஏற்கனவே நடந்து முடிந்த இவ் அகோரங்கள், ஒரு சிலரின் வசதி வாய்ப்புகளுக்காக இலகுவில் மறக்கடிக்கப்பட செய்யும் முயற்சிகளாய், அவர்களாலேயே முன்னெடுக்கப்படும் நியமங்களாகின்றன - இதற்கான பரப்புரைகளும் உருப்படியான கற்றலின்றி காலம் காலமாய் தொடர்வதாகவும் உள்ளன. மலையக வரலாற்றை பிழைப்பட புரிந்து வைத்தலும், மக்களை அல்லது இன்னும் சரியாக சொன்னால், இன்று புதிதாய் வருகைத்தரும் மலையகத்தின் பெரும்பாலான மத்தியத் தர வர்க்கத்தினரை உற்சாகப்படுத்தி, அவர்களுக்கான கனவுகளை வடிவமைத்து, அவர்களை கனவு நிலையில் இருத்துவதுமே இக்கருத்தாக்கத்தை நிலைநிறுத்தும் முன் நிபந்தனைகளாகின்றன.

இதனடிப்படையிலேயே, இன்றைய நூல்கள், இன்றைய உயர்க்கல்வி திட்டங்கள், இம்மத்தியத் தர வர்க்கத்தின் ஒரு சிலருக்கு தரப்படும் ஊக்குவிப்புகள், சிற்சில வேலைகளில் அவர்களுக்கு வழங்கப்படும் தொழில்வாய்ப்புகள் - கல்வி துறைச்சார்ந்த உயர்கல்வி புலமை ஏற்பாடுகள் அனைத்தும் நடந்தேறுவதாக இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், இலங்கையின் ஆதிக்கச் சக்திகள் பெருந்தோட்ட முறைமையை எவ்வாறு தமக்கு சாதகமாக பாவித்துக் கொள்ள முயன்றனவோ அன்றி முயல்கின்றனவோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல், ஏனைய சக்திகளும், இன்றைய மலையகத்தை தத்தமது சொந்த நலன் தொடர்பில் அணுகும் முயற்சிகள் தொடர்வதாகவே உள்ளன.

காலனித்துவ ஆட்சி தொட்டு, மலையகம் அல்லது பெருந்தோட்ட முறைமை என்ற உருவாக்கத்தை சுரண்டித் தீர்க்க, எப்படி தனது “சொந்த சமூகத்து”, மலையத்து கங்காணிகளே புல்லுருவிகளாக செயல்பட்டனரோ – அதனையொத்த நடைமுறையை – அல்லது ஏற்பாடுகளை, இன்னும் நாம் காணக்கூடியதாகவே இருக்கின்றது – வெவ்வேறு உருவங்களில் - வௌ;வேறு தளங்களில் - வௌ;வேறு வடிவங்களில். இதன் விளை பயன்களில் ஒன்றாக, மலையகம் ஒரு “சேமிப்பு சக்தி” எனும் கட்டுமானமும் அதன் பிறிதொரு முகமான “மலையக தேசியம்” என்ற அரசியலும் அவிழ்த்துவிடப்படுகின்றது. இவ்வகையில், மலையகம், யாரின் “சேமிப்பு சக்தி” அல்லது “ எதற்கான சேமிப்பு சக்தி என்பதெல்லாம் இச்சூழலில் ஏற்கனவே கூறப்பட்டது போல தொடர்புபட்ட வினாக்கள்தாம். இலங்கையின் புவியியல் சார்ந்த கேந்திரஸ்தானம் தன் முக்கியத்துவத்தை ஏந்தி நிற்குமாயின், இத்தகைய எழுந்தமான கோ~ங்கள் எழுவது இயல்பானதே – ஓர் அரசியில் கண்ணோட்டத்தில் நோக்குமிடத்து. சுருங்கக் கூறினால், இதே புவிசார் அரசியலின் ஆழமான நடைமுறையில், ஏற்கனவே ஒரு சேமிப்புச்சக்தி கைவிரிந்த நிலையில் அல்லது தம்மிருப்பை ஓர் அவலத்துக்குள் தள்ளி முடிந்த நிலைப்போக, மலையகமும், இனி இன்னுமொரு “சேமிப்பு சக்தியாக” தொழிற்பட வேண்டும் என்ற ஒரு சிலரின் அவா வினோதமானதுதான். இருந்தும், இக்கனவு நிலைக்கான ஏற்பாடுகளும் இருப்புகளும் வரலாற்று ரீதியாகவே, இருந்துவந்து தொடர்வதாயும் உள்ளன – பற்பல வித்தியாசங்களை அவையவற்றின் விகிதாசாரங்களோடு உள்ளடக்கி.

12

அடக்கு முறைகளின் காரணமாக, அமெரிக்காவுக்கு அகற்றப்பட்டு, ஓர் புலம் பெயர் சமூகமாக சென்ற, அயர்லாந்து புலம் பெயர் கூட்டத்தின் கோபதாபம் குறித்து மார்க்ஸ் கவலையுடன் தெரிவிப்பார்: “தமது சொந்த மண்ணிலிருந்து துரத்தி அடிக்கப்பட்ட ஐரிஸ் மக்கள்… வடஅமெரிக்காவில், தங்கள் பிரசன்னத்தை ஸ்தாபித்து, ஜனத்தொகை ரீதியாக பல்கிப் பெருகினர். அவர்களின் ஒரே சிந்தனை, ஒரே குறிக்கோள், ஒரே வன்மம் இங்கிலாந்தை பழி தீர்ப்பதுதான். .. …. ஆனால், அவ்வவ் நாட்டு, ஆதிக்க சக்திகளை பிரதிநிதித்துவம் செய்யும் அமெரிக்கா- இங்கிலாந்து ஆகிய இரு அரசுகளுமே, ஐரிஸ் மக்களின் இக்கோப உணர்வினை தமக்கு சாதகமாக பாவித்தனர் - அதில் வெற்றியும் கண்டனர்”. விடயம், தங்கள் மண்ணிலிருந்து, குறித்த பேராசை நலன்களுக்காக, புலம் பெயர்க்கப்பட்டு போன இம்மக்களின் கோபதாபங்களை, அதே ஆதிக்க சக்திகள், எப்படி எப்படி, தமக்கு சாதகமாக பாவித்துக் கொண்டனர் என்பதே ஆகும். இது இன்று வரைத் தொடர்கின்றது. இதன் ஒரு சிதறலையே, “மலையகம் எமது சேமிப்பு சக்தி” என்ற புலம் பெயர் அரசியலின் தத்துவத்திலும் உள்ளடங்கிப்போகின்றது எனலாம்.
ஐரிஸ் மக்கள் என்பார் நீண்ட நெடிய போராட்ட வரலாற்றைக் கொண்டவர்கள் தாம். அவர்களில், புலம் பெயர்ந்தோர், அன்றைய அமெரிக்க விடுதலைக்காக அமெரிக்கர்களுடன் இணைந்து, தன் வன்ம எதிரியான இங்கிலாந்தின் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராடி தம் இன்னுயிரை ஈந்துவதில் தம் கடமையும் கனவும் நிறைவேறுவதாக கணித்திருந்தனர்.

ஓர் அமெரிக்க விடுதலையை, தம் சொந்த விடுதலையாக புரிந்து வைத்திருந்த அம்மக்கள், அமெரிக்காவின் சுதந்திரத்தை அடுத்து, அமெரிக்காவானது ஐரிஸ் மக்களுடன் இணைந்து, இங்கிலாந்துக்கு எதிராக போரைத் தொடுப்பர் என்ற நப்பாசையையும் தம்மகத்தே வளர்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அமெரிக்கர்களோடு, தோளோடு தோள் நின்று, போராடிய அம்மக்களின் கனவுப் பொய்த்துப் போனது.
இன்னும் சரியாகக் கூறினால் அமெரிக்க சுதந்திரத்தை தொடர்ந்து அமெரிக்கா - இங்கிலாந்து அரசுகளின் இணைவில், அம்மக்களின் சுதந்திரம் அல்லது சுதந்திர வேட்கை அல்லது போராட்டம் தயவு தாட்சண்யம் இன்றி காட்டிக் கொடுக்கப்பட்டது.

புலம் பெயர்ந்த ஐரிஸ் மக்களின் கோபதாபங்களும் புரிதல்களும், இப்படியாக, தம் சொந்த நலன்களுக்காக பலியாக்கப்பட்டு போன ஒரு வரலாற்று பின்னணியிலேயே, மலையகம் குறித்த கனவுகளும் மாயைகளும் மேலே கூறியவாறு இன்று கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இவை, சேமிப்புச் சக்தி எனும் “பாவிப்பு” தத்துவங்களாகவும் “மலையக தேசியம்” எனும் வர்க்கங்களைக் கடந்து, கனவு நிலைகளை உள்ளடக்கி மலையக இளையத் தலைமுறையினருக்கு மாயத் தோற்றப்பாடுகளைக் காட்டுவதாய் உள்ளது. இருந்தும், இவற்றிலிருந்தான விடுபாடு எப்படி சாத்தியமாகும் - மலையகம் இன்று எழுப்பக்கூடிய கேள்விகளுக்கான சரியான பதில்களை எப்படித் தேடிக் கொள்ளலாம் என்பது இன்றையக் கேள்வியாகின்றது. இப்புள்ளியிலேயே நடேசன் - சாந்திக்குமார் போன்றோரின் எழுத்துக்கள் சரியான பரிசீலிப்புகளையும் அவற்றின் உள்ளடக்கங்கள் சரிவர உள்வாங்கப்பட வேண்டிய தேவைப்பாடுகளை முன்னிறுத்துவதாகவும் உள்ளன – ஓர் ஆக்கப்பூர்வமான நாளைய கட்டுவிப்பை தோற்றுவிப்பதென்றால்.

13

இன உணர்வுகளின் வலுவை அல்லது இன விடுதலை உணர்வின் வலுவான சக்தியினை, அதன் பல்வேறு பரிமாணங்களில், மிக ஆழமாக உணர்தோரில், குறிப்பிடத்தக்கவராக இருந்தவர்களில், லெனின் முக்கியமானவராகின்றார். கிட்டத்தட்ட, ரஸ்ய புரட்சிக்கு 14 வருடங்களுக்கு முன்பிருந்தே தேசியம் தொடர்பில், சிறுபான்மை இனங்கள் எழுப்ப கூடிய கேள்விகளை, தன் தலையாய வேலைத்திட்டங்களில், ஒன்றாக அவர் இனங்கண்டு கொள்கின்றார். (தேசிய சுயநிர்ணய உரிமைக்கான அவரது வேலைத்திட்டமும் எழுத்துக்களும் 1903லேயே – அதாவது, புரட்சிக்கு 14 வருடங்களின் முன்னரே ஆரம்பித்து விடுகின்றது. அதாவது கிட்டத்தட்ட ஒரு நீண்ட 14 வருட காலப்பகுதியில், சமரசங்களை அல்லது சந்தர்ப்பவாதங்களை கலைந்த நிலையில், தேசிய இனங்களின் உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்து, பரப்புரை செய்து, அதற்கூடு தம் நாட்டு மக்களின் இனவாத உணர்வுகளை களைந்தெறிந்து மக்களை ஆதிக்க சக்திகளின் பகடைகளாக அல்லது பிடிகளில் இருந்து விடுவிக்கும் நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுவதில் தலையாய பங்காற்றியுள்ளார்.)

முன்னரே குறித்தவாறு, இக்கேள்விகளை தாண்டாது, இதற்கான சரியான பதில்களையும் மாற்று பாதைகளையும் முன்வைக்காது, துயருறும் இம்மக்களை அரவணைத்து, அவர்களுக்கு தேவையுறும் அரசியல் போதனைகளை ஊட்டாது, நாட்டின் விடுதலை என்பது என்றுமே சாத்தியமில்லை என்ற தெளிவு மிக ஆரம்பத்திலேயே அவரிடம் காணப்படுவதாய் இருக்கின்றது. இப்புரிதல் நிலை இலங்கையின் விடுதலை போராளிகளிடம் என்றுமே வந்து சேர்ந்ததில்லை (இன்றுவரை) என்பது மேலே கூறியவாறு, மனங்கொள்ளத்தக்க விடயங்களில் ஒன்றே. பல்வேறு காரணங்களுள், இக்காரணத்தையும், அதாவது நாடு முழுதுமான ரீதியில், ஒன்றிணைந்து போராட முடியாத இக்காரணத்தை, தலையான காரணமாக, நாம், இலங்கையின் இளைய தலைமுறையினரினது போராட்டங்களின் தோல்விகளில் அடையாளம் காணலாம் - அது, இலங்கையின் வட-கிழக்கு போராட்டமாய் இருந்தால் என்ன அல்லது தென்னிலங்கையின் 1971 முதலான போராட்டங்களாய் இருந்தால் என்ன– விடயத்தின் சாராம்சம், என்னவோ, மேற்படி உண்மையினையும், பிரதான பின்னடைவுகளில் ஒன்றாய் இது ஏந்த தவறவில்லை, என்பதாகும்.
போராடும் சக்திகளை பிளவுறச் செய்வதும், அவற்றை ஒன்றிலிருந்து ஒன்று தனிமைப்படுத்தி, வலுவிழக்கச் செய்து, பின் அவர்களைத் தனித்தனியே அழித்துவிடுவது என்பதும் ஆதிக்க சக்திகள், காலம் காலமாய் பேணிவரும் நடைமுறைதான். இதனை போராடும் ராஜதந்திரம் அல்லது தர்மம் அல்லது அறம் என்றும் சொல்லப்படுகின்றது.

ஆனால், இதனை வெளிப்படையாக, கண்ணுக்கு தெரியாமல், கச்சிதமாக, அன்றைய நாளின் நடைமுறையோடு இணையும் வண்ணம் நாசுக்காக கட்டியெழுப்புவது ஆதிக்க சக்திகளின் சாமர்த்தியமான நகர்வுகளாகின்றது. இதனை, சரியானத் தருணத்தில் சரியாக உள்வாங்கி, சாதீயப் போராட்டத்தில் அல்லது அதற்கூடு அல்லது அதற்கூடும் - நாட்டின் அனைத்து போராடும் சக்திகளையும் ‘ஒன்றிணைத்த’ வரலாற்று நகர்வினை 'சண்’ மேற்கொண்டிருந்ததை நாம் மேலே பார்த்தோம். (இதன் ஒரு எதிரொலியைத்தான் டானியலின், மேலே காட்டப்பட்ட செய்திக்குறிப்புகளிலும் நாம் காணக்கூடியதாக இருந்தது). ~ண் கைக் கொண்ட இம்மார்க்சிய நடைமுறை, மார்க்சிய வழி வழி வந்த ஒன்றென நாம் கொள்வதே சரியானதாகும்.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.