“கிளிம்மின் 40 வருட கால வாழ்வு” என்னும் பிரமாண்ட நாவல் பற்றி மாக்சிம் கார்க்கி ” இது எனது வாழ்நாளின் உச்ச சவால் (Ultimate Test)என் மொத்த வாழ்வின் சாரம்” எனக் குறிப்பிடுவார். கிளிம் நாவலின் மூன்றாம் தொகுதி வாசிப்பு தவிர்க்க முடியாமல் எமது இன்றைய தமிழ் இலக்கிய உலகை ஒரு தரம் ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது.

1. தமிழ் இலக்கிய உலகு இன்று எதை நோக்கி நகர்கின்றது?.
2. ஜெயமோகன் போன்றோர் யாருடைய அல்லது எதனுடைய கதைசொல்லிகள்?

- என்பது போன்ற அடிப்படை வினாக்களை கிளப்புவதாக உள்ளது. இக்கேள்விகளே இக்கட்டுரையின் நான்காம் அத்தியாயத்தில் அலசப்படுகின்றன. முதல் மூன்று அத்தியாயங்களை வாசிக்க நேரங்களை ஒதுக்க முடியாதிருப்பின், எமது தமிழ் இலக்கிய உலகைப் பரிசீலனைக்கு உட்படுத்தும், நான்காம் அத்தியாயத்தினை அவசியம் வாசிப்பது முக்கியப்படலாம்.

1

கிளிம் வாழ்க்கையின் மூன்றாம் தொகுதி, அவனது 30களை பதிவு செய்வதாய் உள்ளது. 1905-ஞாயிறு படுகொலைகளை அடுத்து ரசியாவில் இடம்பெறும் புரட்சி அலைகளின் இறுதி, வீச்சும் வீழ்ச்சியும் இக்காலப்பகுதியிலேயே, நடந்தேறுகிறது. இப் படுகொலைகள் ரசிய வரலாற்றில் ஒரு திருப்பு முனை என்றும் கூறப்படுகின்றது. ஓர் அரசுயந்திரத்தின், உண்மை பண்பை, மிக கறாராக மக்களுக்கு அம்பலப்படுத்திய ஓர் நிகழ்வாக இது வரலாற்றில் பதிவானது. அரச யந்திரத்தின்,உண்மை பண்புகளை இப்படியாக படம் பிடித்து காட்டும், படுகொலைகள் வரலாற்றில் சகஜமானதுதான்.

இந்திய ஜாலியன் வாலா பாக் படுகொலைகளாகட்டும், 1971-1989-2009 இன் இலங்கை படுகொலைகளாகட்டும் அரச யந்திரத்தின், உண்மை முகத்தை இவை தோலுரித்து காட்டவே செய்கின்றன. ஆனால், ரசியாவில் நடந்ததைப் போல், இங்கே, இப்படுகொலைகளும், “இப்படுகொலைகளுக்கு இட்டுச் சென்ற” அரசியலும், சரியான விமர்சன கற்கைகளுக்கூடு மக்களை சென்றடைந்ததாக தெரியவில்லை. உண்மையை சொன்னால், ‘தவறுகளை’ புதைத்து, புதைத்து மீள மறைத்துவிடும் அரசியலே இங்கு காணக்கிட்டுகின்றது. இதுவே காலப்போக்கில் மக்கள் மீள மீள தொடர்ந்தும் அத்தகைய கனவுலகில் சஞ்சரிக்கச் செய்யவும், தொடர்ந்தும் மக்கள் தங்கள் அரசியல் இருண்மையில் ஆழ்ந்து போகவும் காரணிகளாகின்றன.

இவ்விமர்சனங்கள் ஒரு புறம் இருக்க, இப்படுகொலைகளை அடுத்து, 1905 இல், மாஸ்கோ வீதிகளில், பாதுகாப்பு அரண்கள் எழுப்பப்படுகின்றன. – கிட்டத்தட்ட யாழ் கோட்டையில் இருந்து ஊருக்குள் நுழையும் எமது படையினரை தடுப்பதற்காக எழுப்பப்பட்டவற்றை போலத்தான்.

இப்பாதுகாப்பு அரண்களில் ஒன்று கிளிம் வாழும் வீட்டை ஒட்டியும் எழுப்பப்படுகின்றது – மக்களை காக்கும் பொருட்டு. மக்கள் இப்பாதுகாப்பு அரண்களை, ‘எமது’ பாதுகாப்பு அரண்கள் என்று கொண்டாடத் துணிகையில், ஒரு இடதுசாரி புத்திஜீவியாகவும், ஒரு ‘இயக்கத் தோழனாகவும்’ வலம்வரும் கிளிம்மின் மனநிலையோ வேறுபட்டதாய் இருக்கின்றது. “இப்படியாய் வீதியை மறைத்து, தடைகளை தாம் நினைத்தபடி எழுப்பினால், சுடாமல் என்னத்தான் செய்வார்களாம்…” என்பது அவனது, அக்கணத்து, அந்தரங்க மனநிலையாக இருக்கின்றது. இதேப்போன்று, மக்கள் பொறுத்தும் ‘புரட்சி’ பொறுத்தும் அவன் கொள்ளும் மனநிலையினையும், பிறர் அறியா வண்ணம் - முக்கியமாக – தான் பழகக்கூடிய, தனது வட்டத்து நண்பர்கள், தோழர்கள், தனது இடதுசாரி தொடர்புகள் - இவர்களில், எவரேனும் அறியா வண்ணம் அந்தரங்கமாய் அவனுள்ளே பேணி பாதுகாத்து கொள்கின்றான், அவன்.

புரட்சி பொறுத்து நினைத்துக் கொள்வான்: “யாருக்காகவாம் இந்த ஐசெக்குகள் பலிகொடுக்கப்படுகின்றார்கள்” என. மேலும் முடிவு செய்வான்: "எந்த ஒரு புரட்சிக்காகவும், எக்காலத்திலும் நான், ஓர் ஐசெக்காக ஆகப்போவதில்லை” என.

பைபிளில் வரும், ஐசெக்கின் கதை வருமாறு: ஐசெக்கினது, தந்தையின் கனவில், தோன்றும் இறைவன், ஐசெக்கை எனக்குப் பலிகொடு, என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவனது தந்தை, ஐசெக்கை கட்டி, பலி கொடுக்க அழைத்துச் செல்வான்… (எமது சிறு தொண்டர் நாயனார், சிவனடியாரான இறைவனுக்குத், தன் மகனை வெட்டிக், கறி சமைத்துப் போட்டாற் போல). சுருங்கக் கூறினால், கிளிம்மின் புரட்சி பொறுத்த கற்பிதம், இப்படியாகவே இருக்கின்றது – ஒரு ஐசெக் தொடர்புபட்டதாய். அதாவது, இத்தொழிலாளர்கள், யாருக்காகவோ –எந்த ஒரு அப்பனுக்காகவோ பலி கொடுக்கப்படுகையில், தான் யாருக்காகவும் அல்லது எந்த ஒரு இறைவனுக்காகவும் ஒரு ஐசெக்காகப் போவதில்லை – என்பதே அவனது திண்ணமாகின்றது.

இருந்தும், இந்த எண்ண ஓட்டங்களை, தனக்குள்ளேயே அடக்கி, இப்படியாய் அடைக்கோழிப் போல பாதுகாத்து வரும் கிளிம், வெளியில், சகஜமாக, ஓர் மார்க்ஸிஸ்ட் தோழனாய், அல்லது அவர்களது நம்பிக்கைக்குரிய நண்பனாய், ஓர் இடதுசாரி வட்டத்துக்குள் தொடர்ந்தும் வலம் வருகின்றான். இதேப்போன்று ‘வர்க்க ஒற்றுமை’, ‘வர்க்க சகோதரத்துவம்’, ‘மக்கள் மேல் காதல்’ போன்ற கருத்துநிலைகள் யாவும் அவனை பொறுத்தவரை வெற்று கோ~ங்கள், பிதற்றல்கள்- தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் வெற்று கற்பனை முடிவுகள் என முடிவு செய்து கொள்கின்றான்.

ஓர் ஐந்நூறு பேர் சேர்ந்து, மாஸ்கோ நகரை பிடிப்பதாவது –பின்,ஆட்சி செய்வதாவது! இவ்வகையில் புரட்சி என்பது, வெறும் கட்டுகதை என்றளவிலேயே அவன் மனம் முடிவு செய்து விடுகின்றது. (பாரிஸ் கம்யூனை அவன் கற்றிருந்தாலும்). இப்படியாக, தான் வாழும் சுவாத்தியத்திலிருந்து, அந்நியம் பெற்றுக் கொள்ளும், கிளிம் ஓர் குறித்த திசை நோக்கி, நகரத் தொடங்குகிறான் - தன் சிறுபிராயத்து வாழ்வை போலவே. இது போன்றே, பெண்கள் தொடர்பிலும், வாழ்வில், அவன் கொள்ளக்கூடிய, ஒரு வகை அந்நியத் தன்மை, வாசகனை பெரிதும் உறுத்த பார்ப்பதுதான்.

‘படுக்கையறையை தவிர்ந்த, ஏனைய நேரங்களில் பெண் என்பவள், ஒரு தொந்தரவே’ என்பது அவனது, முடிந்த முடிபாகின்றது. ‘படுக்கை அறையில் கூட, அவளது பொருத்தப்பாடு அல்லது ஏற்புடைமை, ஒரு குறித்த நேரம் வரையிலேயே தாக்கு பிடிக்க கூடியது’ என்றும் முடிவு செய்து கொள்கின்றான். கூறிக் கொள்வான்: “புலமை உடைய, கண்டிப்பான மனிதர்கள், பொதுவில் புத்திஜீவிகள் எனப்படுவோர், பாலியல் தொழிழாலரையே விரும்புவது, என்பது ஏற்க்கத்தக்கதுதான்” என.

தனது 30களுக்கு வந்து சேருகையில் மேற்படி முடிவுகளை எடுத்துவிடும் கிளிம் தன்னை ஆகர்சிக்கும் ‘வரலாறு’ தொடர்பிலும், ஓர் தாமரை இலைத் தண்ணீராகவே ‘வரலாற்றை’ “தனக்கே உரிய” வகையில் எடுத்துக்கொள்வதோடு சரி. அதாவது வரலாற்றின் தேர்வு செய்யப்பட்ட ‘ஒரு பகுதி முகத்தில்’, மாத்திரம் விழிக்கவே, அவன் மனம் விருப்பம் கொள்கிறது (ஜெயமோகன், மரபுகளினதும் தொன்மங்களினதும், ஒரு முகத்தில் மாத்திரம் விளிக்க தெண்டிப்பது போல்).

ஒரு பாத்திரம் அவனிடம் முறையிடும்: ‘நீ வரலாற்றை கூட, ஈரமற்றதாய், தான் பார்க்கின்றாய் - உலர்ந்த சருகைத் தொடுவது போல…” என.

இவற்றில் ஒலிக்கும் உண்மைகளை, ஓரளவில், உள்வாங்கும் கிளிம், ‘வாழ்வில் தன்னை முழுவதுமாய், ஈர்க்கும் எந்த ஒரு புள்ளியையும் இதுவரை இந்த பிரபஞ்சத்தில் கண்டிலேன்’ என்று தனக்குள் அபிப்பிராயம் கொள்வது அல்லது தனக்கு தான் கூறிக் கொள்வது தர்க்க ரீதியாகவே, நாவலில், வந்து அமைந்து விடுகின்றது. போதாதற்கு, கிளிம், அவன் முகம் கொடுக்கும் வாழ்க்கை சூழலானது, எங்கெங்கும், தனக்கு விரோதமாய் விரிக்கப்பட்டிருக்கும் ஒரு வலையாகவே இருக்கின்றது என்றும்; கணித்து கொள்கின்றான்.

ஒரு பெண்ணாயிருக்கட்டும் - அல்லது ஒரு புரட்சியாளனாயிருக்கட்டும் அல்லது ஒரு சக மனிதனாய் இருக்கட்டும், அவர்களிடம் எல்லாம் - தன்னை மறைத்து, தன் அந்தரங்க எண்ண ஓட்டங்களை மறைத்து, அவற்றை ஒரு புத்தக உலகால் மூடிவிடக் கூடிய ஒரு புத்திஜீவி தோற்றத்தினுள் மறைந்து கொள்வதென்பது அவனுக்கு பிடித்தமானதாகின்றது.

இவை பதிலுக்கு ஒரு, புற உலகில் எப்படி ஓர் விரோத சூழலை அவனை சுற்றி உருவாக்குகின்றதோ அதே அளவில், தவிர்க்க முடியாதவாறு, அவனது அக உலகிலும், அவனை ஒரு வகை அக முரண்பாடுகளால் சிக்க வைக்கின்றது. இப்படியாய் ஒன்றுக்கொன்று முரண்படும், இந்த மோதல்களில் இருந்து –ஓர் அக – புற சூழலில் இருந்து – தன்னை தப்புவித்து, ஓர் போக்கிடத்தை ஏற்படுத்தி, தன்னை இவை யாதொன்றும் தீண்டாத வண்ணம், உயரத் தூக்கிப்பிடித்து, தன்னை அந்நியப்படுத்தி விடக் கூடிய ஓர் தத்துவத்தை, ஓர் சித்தாந்தத்தை காண கிளிம்மின் உள்ளம் பரிதவிக்கின்றது. அத்தகைய தேடலை மைய நோக்காக கொண்டு, முன்னகர்வதாக, பொதுவில், இம்மூன்றாம் தொகுதி கார்க்கியால் கட்டமைக்கப்பட்டுள்ளது எனலாம்.

இத்தகைய ஒரு பின்னணியில், அவன் தன் வாழ்வில், சந்திக்கும் மனிதர்கள், தத்துவங்கள், சம்பவங்கள் - என்ற நூற்றுக்கணக்கானவை இந்நாவலில் வந்து போகின்றன. கூடவே, அவனில், அவன் வளர்ச்சி போக்கில் ஏற்படக்கூடிய அக-புற மாற்றங்கள், இம்மியும் பிசகாதவாறு தர்க்கரீதியான உயிரோட்டத்துடன், இந்நாவலில் பெரும் காட்சிப்படுத்தல்களுக்கு உள்ளாகின்றன. மார்க்ஸியம் தொடர்பில் கூட, அவனது மாற்றங்களும் வேடங்களும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு, மாறி, மாறி, முன்னிறுத்தப்பட்டு, ஒரு வித நகைப்பை, சிரத்தையான வாசகனில் ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, ஒரு கணத்தில், குறித்த ஒரு சிலருடன் கதையாடும் போது, தான் ஒரு மாரக்ஸ்சியவாதி எனக் பிரஸ்தாபிக்கும் அவன், பிறிதொரு சந்தர்ப்பத்தில் பிறிதொருவர் மத்தியில் சந்தர்ப்பத்திற்கேற்ப ‘இல்லை’ என்று கூறிவிட்டு, வெறுமனே ஒரு புத்திஜீவியின் பாவத்துடன் நகர்வது நாவலில் சகஜமாகின்றது.

ஒரு சந்தர்ப்பத்தில், அவனில், ஆகர்ஷிக்கப்படும், ஒரு மத்திய தர வர்க்கப் பெண், ‘நீ ஒரு மார்க்ஸிஸ்ட் தானா’ என ஆர்வமுடன் வினவும் போது, ஆம் என்றோ அல்லது இல்லை என்றோ நேரடியாக பதில் கூறாமல், முகத்தை சிந்தனை பாவத்துடன் தூக்கி பிடித்து, ‘தான் மார்க்சியத்தின் பொருளாதார பக்கத்தை ஏற்பவன்” என்று மாத்திரம் பட்டும் படாமலும் கூறி, ஒதுங்கிக் கொள்வது அவனது பண்பாகின்றது. சுருக்கமாக கூறினால், சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு, ஒரு பூனை தன் கழிவுகளை மறைத்துக் கொள்வது போல், தன் அரசியல் அந்தரங்கங்களை மறைப்பதும், அதில் ஒரு பகுதியை மாத்திரம் சமயங்களில் வெளிவிடுவதும், அல்லது முற்றிலுமாய் அமிழ்த்தி விடுவதும் அவனது கை வந்த கலையாகின்றது. ஆனால், இம்மூன்றாம் தொகுதி, தன் இறுதி கட்டத்தை, எட்டிப் பிடிக்கும் தருவாயில், கிளிம் தனது இத்தகைய நிலைப்பாடுகளில் இருந்து வெளிப்படையாக வெளிவருவதும், அவனது மேற்படி நிலைப்பாடுகள் தொடர்பில் அவன் உறுதியாக செயல்படத் துவங்குவதும் அவதானிக்கத்தக்கதே. இவ்வளர்ச்சிக்கான அக-புற காரணங்களும் நாவலில் கட்டமைக்கப்படவே செய்யப்பட்டுள்ளன.
உதாரணமாக, மாஸ்கோவை விட்டு, நிரந்தரமாய், அகன்று, ஒரு மாகாண நகரில், பொருளாதார ரீதியாகவும் நகரின் முக்கிய வழக்கறிஞருள் ஒருவன் என்ற ரீதியிலும், ஓரளவிற்கு ஸ்திரமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் கிளிம்மை, ஓர் இக்கட்டான சூழலில், இரண்டு இயக்கத் தோழர்கள், ஒரு அவசர தேவை நிமித்தம், அணுகும் போது,‘;இயக்கமா’ எந்த ‘இயக்கம்’ என்பதுப் போல் சாதித்து, அவர்களை, அவன் மெதுவாக கத்தரித்து அனுப்பி விடும் அளவுக்கு, அவனது ‘நிரந்தரம்’ இப்படியாக வளர்ச்சி பெற்று விடுகின்றது.

இவ்வளவுக்கும், அவனை, முதன் முதலாக, அத்தொலை தூர மாகாண நகருக்கு, தமது பிரத்தியேக வழக்கறிஞனாய், ஒரு குறித்த நபரை சந்திக்கும் பொருட்டு அனுப்பிவைத்தது, இவ் இயக்கமே ஆகும். மேலும், கிளிம், இக்குறித்த நபருக்கூடாகவே, தன் வாழ்வை அந்நகரில் இருத்தி, மெது மெதுவாக, தன்னை அங்கே, ஸ்தாபித்துக் கொள்ளவும் செய்கிறான் என்பதும், நிதானித்து நோக்கத்தக்கதே. இருந்தும், நேரமும் காலமும் கனியும் போது. அவனது நிலைப்பாடு, மேலே கூறியப்படி, தீர்மானகரமாய், ஓர் அக-புற சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி அமைத்து கொள்வதாய் அமைந்து விடுகின்றது. இருந்தும் எந்த ஒரு மூலச்சிறப்புள்ள, அல்லது, எந்த ஒரு அசலான சிந்தனையையோ, அல்லது எந்த ஒரு அசலான கருத்தாக்கத்தையோ அவனது அகம் உருவாக்க முடியாதிருக்கும் நிலை குறித்து, கிளிம் அவ்வப்போது தனக்குள்ளாகவே சற்றுக் கலக்கம் அடையவே செய்கின்றான்.

நூற்றுக்கணக்கான நூல்களை கற்றிருந்தும் ஆயிரக்கணக்கான கருத்து பிம்பங்களை தனக்குள் பதிவு செய்து கொண்டிருந்தாலும்– அவை குறித்து ‘தன்னளவில்; தருக்க ரீதியாக சிந்தித்து ‘தன்னளவில்’ ஒரு சில முடிவுகளை அவன் எய்தியிருந்தாலும், எந்த ஓர் புதிய சிந்தனையை நோக்கியோ அன்றி மூலச்சிறப்புள்ள சாரத்தை நோக்கியோ நகர்வதில் திறனற்றவனாய் திரிகின்றான், அவன். ஒரு வகையான இம்மலட்டுத்தனம், தன்னையறியாமல் தன்னிடம் எப்படி குடியேறியது என்பது அவனுக்கே தெரியாமல் அவனை எரிச்சல் மூட்டுவதாகவும் மனதைக் குடைவதாகவும் இருக்கின்றது. கிளிம்மின் இப்படியான தேடல்கள் அனைத்தும் இப்படியாக ஒரு வகை வெறுமையை அல்லது மலட்டுதனத்தை நோக்கி படிப்படியாக நகர்வதை, ஓர் ஆழமான தத்துவ-உளவியல், பார்வையுடன் நூல் அணுக முற்பட்டுள்ளதும் நிதானிக்கத்தக்கதே. மேலும், இத்தகைய ஓர் விடயப் பொருளை வேறு யாரேனும், இதுவரை, ஒரு நாவலில் கையிலெடுத்துள்ளார்களா என்பதும் கேள்விக்கு உரிய ஒன்றாக இருக்கின்றது. (மனித மலட்டுத்தனத்தின் உருவாக்கம் பொருத்து!)

கிளிம்மின், படைப்பபாற்றல்கள் இப்படியாய்த் தேய்ந்திருப்பதை அல்லது பொதுவில், உலர்ந்த நிலையில் இருப்பதை, நாவல் நெடுகிலும் காணக் கூடியதாக உள்ளது. ஆனால், இந்நிலை குறித்த, நியாயப்பாடுகளைக் கூட, அவனது சிந்தை உருவாக்கி கொள்கின்றது என்பதனைப் பார்ப்பது, ரசனைக்குரியதாகவே இருக்கின்றது.

உதாரணமாக, கிளிம்மின் ‘புரட்சிகர’ மாஸ்கோ வாழ்வின் போது,ஒரு சமூக மேம்பாட்டையும், ஏதோ ஒரு மத நம்பிக்கையின் அடிப்படையிலான, ஒருவித சாத்வீக போராட்டத்தையும் முன்னெடுக்கும் ஒரு வயோதிப பிரச்சாரகர் (டால்ஸ்டாய் பற்றாளர் போன்றவர்) ஒருவர் வெறும் தெருநாயைப் போல், நடுதெருவில், படையினரால் சுட்டுத் தள்ளப்பட்டு, துடிதுடித்து கொண்டிருக்கும் போது, அவர்களுடன் வரும், ஊர்ப்படை வீரன்,‘இந்த நாயும் மக்களைத் தூண்டி விட்ட நாய்த்தான்’ என்று ஆத்திரத்துடன் கூறி துப்பாக்கி சனியனால் இரண்டு மூன்று முறை உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் அவ் வயோதிபரின் உடம்பில் ஆழக் குத்தி, குத்தி, இழுத்தெடுப்பதை, கிளிம் ஒரு மாதா கோவிலின் மறைவில் ஒளிந்திருந்து பார்க்கிறான். ராணுவம் சென்றபின், இறங்கி வந்து தனக்கு நன்கு தெரிந்த, நன்கு பரீட்சயமான, - தனக்கு ஒரு காலத்தில் அரசியல் வகுப்புகளையும் நடாத்திய – அம்முதியவர் - இப்படி நடு தெருவில் இரத்தம் ஆறாய் ஓட துடிதுடித்துக் கொண்டிருப்பதை பார்த்தவாறே, அவரை அவசர அவசரமாகத், தாண்டி கடக்கும் தருவாயில், நினைத்துக் கொள்வான்: “அப்;பப்பா, ஒரு மனித உடம்பில் வழிந்தோட இவ்வளவு ரத்தம் இருக்கின்றதா…” என. அவ்வளவே, அவன் காட்டக்கூடிய சலனம் என்றாகிறது. போதாதற்கு, ‘புத்திஜீவிகளின் உயரிய அடையாளமே, உணர்வெழுச்சிகளை அண்ட விடாது தடுத்து விலக்கி வைத்திருப்பதுதான்…”என்று வேறு தனக்குத்தான் நியாயம் கூறிக்கொள்ளவும் செய்கிறான். இருந்தும், இப்படியாய் இருக்கும் கிளிம்மின் மனநிலை, அடுத்து வரும் கணங்களிலேயே சடுதியாய் மாறுவதை, நூல் படம் பிடிக்கின்றது.

நகரில் இப்படி கண்மூடித்தனமாக, ஆத்திரத்தோடு, படுகொலைகளைக், கட்டவிழ்க்கும் ராணுவம்,ஒரு வழியாக, தனது படுகொலைகளை முடித்துகொண்டு, வெளியேறி, முகாம்களுக்கு திரும்பிய பின், மாதா கோயிலின் மறைவிடத்திலிருந்து வெளிவரும் கிளிம், அவசர அவசரமாக - இவ்விடயங்கள் தொடர்பில் வாதித்து கொண்டிருக்கும், ஓர் அரசியல் கூட்டத்தை சென்றடைந்து விடுகின்றான். கூட்டத்தை அடைந்ததும் அடையாததுமாக, தான் கண்டு வந்த திகில் காட்சி பொறுத்து,எப்படியாவது, கூட்டத்தின் முன் ஒரு அறிவிப்பொன்றை நடத்தியாக வேண்டும் என்றதுடிதுடிப்பு அவனில் கொந்தளித்து கொப்புளிக்கின்றது. கூட்டத்தில் பின்னால் இருந்து, தட்டு தடுமாறிக் கூவுகிறான். அல்லது கூவ எத்தனிக்கிறான். இப்போது அவனது, நா வரள்கிறது… குரல் வரவில்லை. உளறலுடன் மேனி எல்லாம் நடு நடுங்க உடல் தாங்க முடியாத உணர்வெழுச்சியுடன், மயக்கம் சூழ தரையில் சரிகின்றான். இந்த சித்திரம் உண்மையானதுதானா - அதிலும், இப்படி ஒரு கண்டிப்பான புத்திஜீவியாக கட்டி எழுப்ப பட்ட தோற்றத்தை கொண்ட, நன்கு கற்ற ஒருவனுக்கு, என்ற கேள்வி, வாசக மனதில் தோன்றுவது இயல்பானதே. ஆனால், ஒரு வகையில், இச்சித்தரிப்பு காந்தியின் சில தருணங்களையும் எமக்கு ஞாபகப்படுத்துவதுப் போலவும் அமைந்து விடுவது தவிர்க்க முடியாததை போல் இருக்கின்றது. இந்தியாவில், தன் முதல் வழக்கில், போதிய அலங்காரங்களுடன், வழக்காட எழும் காந்திக்கு, தலை சுற்றுகின்றது. வியர்க்கின்றது. நா குழறுகிறது, தட்டுத் தடுமாறி நாற்காலியில் அமர்ந்து கொள்கிறார்.

மண்டெலா ஒரு முறை, தன்னிடம் கூறியதாக கலாம் கூறுவார்: “நீங்கள் ஒரு காந்தியை எங்களிடம் அனுப்பி வைத்தீர்கள்… நாங்கள் ஒரு மகாத்மாவை, உங்களிடம் திருப்பி அனுப்பி வைத்தோம்” என்று. இவ்வார்த்தைகள்சற்று நிதானிக்கதக்கவை என்பதில் சந்தேகமில்லை. வழக்காட, எழுந்து, நா குழற நாற்காலியில் அமர்ந்து கொள்ளும் ஒரு இந்திய காந்தி, வேறு –தன் தென்னாபிரிக்க அனுபவத்துடன், அரசியல் ஒன்று கூடுகைகளில் முன்னின்ற காந்தி வேறு என்பதையே மண்டேலாவின் வார்த்தைகள் இங்கே கூற முனைவது. அதாவது மக்கள் திரள்களில் இருந்து அந்நியம் கொள்வதும், ஒன்று சேர்வதும் வௌ;வேறு வகையான விளைவுகளை ஏற்படுத்தும் விடயங்களாகின்றன. பம்பாய் காந்தியைப் போல் தன்னை முதன்மைபடுத்தி, நாக்குழறும், ஒரு கிளிம்மின் அகப்பார்வைக்கு நேரெதிரான உருவமாக, நாவலில், இக்காலக்கட்டங்களில் இருத்தப்படுபவள் அன்ஃபிமெவினா எனும் பெண்மணியாவாள். கிளிம் வீட்டை ஒட்டிக் கட்டப்படும், பாதுகாப்பு அரணின் பிரசன்னத்தோடு, நாவலில், முன்நிலைக்கு நகர்பவள் அவள் - இந்த அன்ஃபிமெவினா.

பெரும் மனித நேயத்தையும், சக மனிதருக்கான துயரையும் ஒருங்கே தன் இதயத்துள் சதா தேக்கி திரியும் இவள், ஒரு வகையில், கார்க்கியின் பாட்டியை ஒத்தவளாயும் (சுயசரிதை), அவரது மற்றுமொரு நாவலான,‘தாயின்’ பாவெலின் அன்னையை நினைவூட்டுபவளாகவும் தோற்றம் காட்டுகிறாள். பாதுகாப்பு அரணை, பகல் இரவாக, காக்கும் ஊர் இளைஞர்களுக்கும் கிழவர்களுக்கும், இயக்கத் தோழர்களுக்கும் தன்பாட்டில், அவ்வப்போது சுட சுட தேநீர் தருவதும், அவர்களுக்கு பசிக்கும் வேளைகளில் தன்னால் முடிந்த அளவில் உணவு அளிக்கவும், உறையும் பனிக் குளிரில் அவர்களது உடலை அடுப்படியில் சூடாக்கி கொள்ளவும், தன் சமையலறையை தாராளமாக பயன்படுத்துபவளாய் இருக்கிறாள், இம்மாது.

ஒரு கட்டத்தில், இவள், இப் பாதுகாப்பு அரணை, “எமது பாதுகாப்பு அரண்” என்று விளிக்க முற்படுவதை காணும், கிளிம்மின் மனம் துணுக்குறுகிறது. வீட்டில் உள்ள பொருட்கள், படிப்படியாக பாதுகாப்பு அரண் நோக்கி செல்லத் தலைப்படுகின்றன. இவற்றை வேண்டா வெறுப்புடன் சகிக்கிறான், கிளிம் பல்லை கடித்தவாறு. ஒரு கட்டத்தில், முழு மாஸ்கோ நகரும்,ஒடுங்கி நிசப்தமாகி,உணவே அற்ற ஒரு ஸ்தம்பித நிலையை எட்டிய நிலையில், கிளிம் ஏதேனும் வீட்டில் உளதா என்று இவளிடம் மெல்ல கேட்கும் போது,இல்லையே என்று துயருடன் கையை விரிக்கும் இவள், சிறிது நேரத்தில் தனது சில்லறைகள் சிலவற்றை தேடி பொறுக்கி எடுத்துக் கொண்டு, ‘ம்…இதை கொண்டு சில முட்டைகளை வாங்கலாம்… பொறு, இரண்டு வினாடிகள்…. பொறு…ஒரு ஆம்லெட்டை தயாரித்து விடுகிறேன்…” என்று தனது பட்டினியை மறைத்து மலர் முகம் காட்டுகிறாள் இவள்.

ஒரு சந்தர்ப்பத்தில், தூக்கில் தொங்கும் தன் கணவனை, தனி ஆளாக, (அனைவரும் அகன்ற நிலையில்), இறக்கி, முதுகில் அவனது பிணத்தைச் சுமந்து கிடத்துகின்றாள். ஈற்றில் கொள்ளை நோய் பீடிக்க, உணர்வற்று, செயலற்று தனது அறையில் துன்புற்று இறக்கும் அவளின் உடலை, வீட்டின் ஒரு ஒதுக்குபுற அறையில் கிடத்துகின்றார்கள். அவளை புதைக்கவும் வழி அற்ற நிலையில், எலிகள் அவளது கன்னங்களை, தின்று விடுகின்றன. இவ்வளவையும், கிளிம், ஓர் ‘புறவய’ பார்வையாளனாக மாத்திரமே, பார்த்து நிற்கின்றான் - எந்த ஒரு வழியிலும் உதவ முற்படாமல். பிணத்தை, அவள் சிரமப்பட்டு இறக்கும் தருவாயில் கூட: ‘தனியாக தூக்கி விடுவாயா…!” என்று அவன் கேட்பது மாத்திரமே.


[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.