இன்றைய, இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, தற்போதைய எதிர்ப்பலைகளுக்கு எதிராக அவசர கால சட்டத்தை அமுல்படுத்தும் மாபெரும் அரசியல் நெருக்கடிகளுக்கு இட்டு சென்றுள்ளது. எதிர்ப்பலைகள், அவசரகால சட்டம், ராணுவமயம், சுடுவதற்கான உத்தரவு – என தொடர்ந்த அரசியல் சுவாத்தியம் - இப்போது ரணிலின் பதவியேற்புடன் தன் முதற்கட்டத்தை நிறைவு செய்துள்ளது. இம்முதற்கட்டம் எவ்வழியில் தன் இரண்டாம் கட்டத்தை எய்தும் என்பது கேள்வி குறியாகவே இருக்கின்றது. இந்நெருக்கடியானது, கடந்த காலத்தின் 1953 இன் பொருளாதார நெருக்கடியுடனும் அதையொட்டி எழுந்த 1953 இன் ஹர்த்தாலுடனும் ஒப்பிட்டு கதைக்கப்பட்டாலும், சாராம்சத்தில் இவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டே காணக்கிட்டுகின்றன – (இவை இரண்டிடை, பல ஒற்றுமைகள் காணப்படினும்). 1953 இல் டட்லி சேனாநாயக்காவின் அரசு, அரிசியின் விலையை மூன்று மடங்கால் அதிகரித்தது. – 25 சதத்தில் இருந்து 70 சதம் வரை. இன்றும் ஏறக்குறைய நிலைமை அப்படியே. இதற்கான காரணங்கள், இன்றை போலவே, அன்றும் சர்வதேச அளவில், வெவ்வேறு விதமாய், வெவ்வேறு விகிதாசாரங்களில் எழுந்திருந்தன. இருந்தும், இன்றைய நெருக்கடிக்கான காரணங்களாய் கொரோனாவை அல்லது உக்ரைன்-ரசியப் போரால் விளைந்த சர்வதேச எண்ணெய் நெருக்கடியை அல்லது ஒரு சுற்றுலா நெருக்கடியை காரணமாக தூக்கிப்பிடிப்பது அரச அல்லது அரச நிர்வாகிகளுக்கு சகஜமாகி விட்டது. உதாரணமாக, அண்மித்த ஓரு நேர்காணலில் கூட எமது முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் கப்ரால் திட்டவட்டமாக பின்வருமாறு கூறியிருந்தார்:

“தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா பெருந்தொற்று பிரதான காரணியாக அமைந்தது. கொரோனா தொற்றுக்காக பல மில்லியன்கள் நிதியை மத்திய வங்கி செலவிட்டுள்ளது”. (வீரகேசரி நேர்காணல் : 01.05.2022) (இவர் புரியாமல் பேசுகின்றாரா, அல்லது அனைத்தையும் தெரிந்து கொண்டு “விடயங்களை காப்பாற்ற” இன்றைய ஏனைய ‘ஆளுமைகள்’ போல நடிக்க வருகின்றாரா என்பது வேறு விடயம்). இருந்தும், இப்படியாக பட்டியலிடப்படும் இந்நெருக்கடிகள் அனைத்தும் ஏதோ ஒரு வழியில் ஏனைய நாடுகளையும் பாதிக்கவே செய்தன என்பதும், அவை அவற்றிலிருந்து ஏதோ ஒரு வழியில் மீளவே செய்தன என்பதும் குறிக்கத்தக்கது. (அது இந்தியாவாக இருக்கட்டும் அல்லது இத்தாலியாக இருக்கட்டும்).

இவை ஒரு புறமிருக்க, சீன/ இந்திய கடன் பொறியே நாடு இன்று இந்நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளமைக்கு பிரதான காரணம் என்ற வாதமும் சில வட்டங்களில் இன்று தீவிரமாய் முன்னிறுத்தப்படுகின்றது. ஆனால் கலாநிதி அகிலன் கதிர்காமர் அவர்களின் அண்மைய கருத்துப்படி மேற்படி வாதங்களில் உண்மையில்லை என்பதும் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு பிரதானமான காரணமாக இருப்பது உலக நாணய நிதியம் (IMF)/உலக வங்கி (World Bank) போன்ற நிறுவனங்கள் இலங்கையின் மீது ஏற்றிய கடன் சுமையும் அதன் விளைபயனாய் நாடு மேற்கொள்ள நேர்ந்த கடன் முறி விற்பனையுமே என அவர் கூறத் துணிகின்றார். (27.03.2022) அவரது கூற்றின் பிரகாரம் சீன அல்லது இந்திய கடன்கள் 10% வீதமாகவே இருக்கின்றன என்பதும், குறிப்பாக இந்திய கடனானது ஆக குறைந்த மட்டத்திலேயே (2 அல்லது 3% ஆக) உள்ளது என்பதுமாகும். இத்துடன், இலங்கையின் கடன் பழுவை விவரிக்கும் பின்வரும் ஒரு புள்ளி விபரம் ஒப்பு நோக்கதக்கதே.



அதாவது IMF இன் தூண்டுதலால் ஆசிய அபிவிருத்தி வங்கியும் உலக வங்கியும் இணைந்து வழங்கிய தொகையான டொலர் 7545 மில்லியனை (22%) செலுத்த, இலங்கை தனது இறைமையை கடன் முறிகளாய் அடகுவைத்து பெற்ற கடன் தொகை 47% மாக (அதாவது டொலர் 16,583 மில்லியனாக) இன்று வளர்ச்சியடைந்துள்ளது.

  -  கலாநிதி அகிலன் கதிர்காமர் -

அதாவது கடன் முறியால் எழுந்த 47% கடன் சுமையானது, ஒரு மாபெரும் கடன் பொறியாக இருக்கும் போது, சுற்றுலா, எண்ணெய், கொரோனா போன்ற காரணிகள் இலங்கையின் கடன் பழுவை அதிகரித்துள்ளது என அரற்ற முற்படுவது விடயங்களை திசை திருப்பும் ஓர் முயற்சியாகவே இருக்கின்றன. இக்கடன்கள், அனைத்தும், உண்மையில் ஓர் இரண்டாம் பட்ச நிலைமையையே வகிக்கின்றன. இவ் உண்மைகளை மறைத்து மக்களை திசை திருப்புவது என்பது ஆழ்ந்த அரசியல் உள்நோக்கம் கொண்டது என சந்தேகப்படுவதில் தவறில்லை எனலாம். மறுபுறமாய் பார்க்குமிடத்து இந்நெருக்கடிகளுக்கான முக்கிய காரணம் கடன்களில் 47% மாய் அமைந்து போன, இறைமையை விற்ற கடன்முறிதான் காரணம் என்றால்,  கலாநிதி அகிலன் கதிர்காமர் அபிப்பிராயப்படுவதுபோல, இலங்கையின் தற்போதைய நெருக்கடி தீரப் பல வருடங்கள் சென்றாக வேண்டியுள்ளது என்பது மிக தெளிவாகின்றது.

IMF கடன் சுமை
22 வீத (22%) IMF கடன் சுமையை சமாளிக்க அரசு பல்வேறு நடைமுறைகளை கைக்கொண்டது. (அல்லது கைக்கொள்ள வைக்கப்பட்டது). இவற்றில் தலையானது Sovereign Bonds விற்பனையாகும். அதாவது, நாடொன்று தனது இறைமையை அடகுவைத்து, கடன்முறிகளை சர்வதேச சந்தையில், விற்க ஏற்பாடு செய்து கொள்வது. இக்கடன் முறிகளின் வட்டிவீதமானது (விற்பனையின் பின்) சர்வதேச சந்தையில் நாளுக்கு நாள் மாறக்கூடியதாக இருக்கும். மேலும், இக்கடன் முறிகள், சர்வதேச சந்தையில் ஆளுக்காள் கைமாறவும் செய்யலாம். இதற்கமைய, கடன் முறிகளின் வட்டிவீதம், சூழலுக்கேற்ப, நாளுக்குநாள் அதிகரிக்கப்படவும் செய்யலாம். அதாவது 6 வீத வட்டி அடிப்படையில் விற்கப்பட்ட ஒரு கடன்முறி இன்று 14% வட்டி கொண்டதாய் உயர்ந்திருப்பினும் அதிசயப்பட, அங்கே, ஒன்றுமேயில்லை. அதாவது  கலாநிதி அகிலன் கதிர்காமரின் வார்த்தையில் கூறுவோமானால் “500 மில்லியன் டொலரில் விற்ற கடன் முறிகளின் மொத்த பெறுமானம் 10 வருட கால இறுதியில் ஆயிரம் மில்லியன் டொலராக அதிகரித்திருக்கலாம் என்றால் அதிசயப்பட ஏதும் இல்லை என்றாகின்றது - இது சந்தை நிலவரத்தை பொறுத்தது என்றாகின்றது. இலங்கை ஏற்படுத்திக் கொண்ட, இத்தகைய கடன் முறி ஏற்பாடு, இலங்கை செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகையில் 47% த்தை சார்ந்துள்ளது என்பதே இங்கு வெளிப்படும் முக்கிய சங்கதியாகின்றது.

                 - புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க -

IMF வரலாறு:
IMF கடன் சுமையானது, இலங்கையை பொறுத்தவரை குறிப்பிடத்தக்க வரலாற்றை கொண்டுள்ளது என்பதனை கூறியாதல் வேண்டும். 2009 போர் முடிவுற்ற பின்னர், IMF இலங்கைக்கு 2.6 பில்லியன் டொலர்களை கடனாக தந்தது. இது, சிதைந்து போன நாட்டை மீள் கட்டியெழுப்ப உதவக்கூடிய கடன் என்றும் கூறப்பட்டது. மறுபுறத்தில் இது ஒரு வகை “கடன் பொறி” என்றும் வரையறுக்கப்பட்டது. கூடவே, இக்கடனானது இலங்கையின் அனைத்து நோய்களையும் நிவாரணப்படுத்தி விடும் சர்வகலா வல்லமை கொண்ட சர்வரோக நிவாரணி என்றும் கூறப்பட்டது. ஆனால் 2016 இல் இலங்கை மீண்டும் IMF முன்னால் நின்று 1.5 பில்லியன் டொலரை கடனாக கோரி பெற்றுக் கொண்டது. அதாவது IMF தொடர்ந்தும் இலங்கைக்கு அதிகபட்ச கடன்களை வாரி வழங்குவதில் முன்நின்றது என்பதும் அது விதித்த நிபந்தனைகள் இலங்கையால் மிக சாரியாக நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கின்றது என்ற திருப்தியும் IMF இற்கு இருந்திருக்க வேண்டும் என்பதனை இக்கடன் வழங்கும் IMF இன் செயற்பாடு வெளிபடுத்துவதாயுள்ளது. (குறைந்தபட்சம், தான் வகுத்த பாதையில் இலங்கை சென்றுக் கொண்டிருக்கின்றது என்ற நம்பிக்கை IMFக்கு இருந்திருக்க வேண்டும். அல்லது இவ் இரண்டாவது கடன் வழங்குகை ஏற்பட்டிருக்காது) இப்பின்னணியில் பார்க்கும் போது, IMF விதித்திருக்க கூடிய எழுதா நிபந்தனைகளில் ஒன்று இலங்கை தனது இறைமையை அடகு வைத்து கடன் முறிகளை சர்வதேச சந்தையில் விற்றாக வேண்டும் என்ற நிபந்தனை வெளிப்படுகின்றது.

இதற்கிணங்க, யுத்த காலத்தில், 2009 இல், இலங்கை தன் இறைமையை கடன் முறிகளாக அடகு வைத்து விற்று பெற்ற கடன்களின் பெறுமானம் 500 மில்லியன் டொலர்களாகும். 2007, 2009 என தனது மேற்படி செயற்பாட்டினை தொடர்ந்து, 2010 இல் மீண்டும் இலங்கை கடன் முறிகளை விற்றுப் பெற்றுக்கொண்ட பெறுமானம் 1 பில்லியன் டொலராகும். 10 வருட காலத்துக்கு பின் இக்கடனின் வட்டி 6.25 வீதமாய் இருத்தப்பட்டது. (21.01.2011: ராய்ட்டர்ஸ்) இதனை தொடர்ந்து 2019 இல் இலங்கை மீண்டும் ஒருமுறை, தான் விற்ற கடன் முறிகளின் மொத்த பெறுமானம் டொலர் 2.4 பில்லியனாகும். இம்முறிகளில் ஐந்து வருட முறிகளுக்கான வட்டி 6.85 ஆகவும் 10 வருட முறிகளுக்கான வட்டி 7.85 ஆகவும் இருந்தது. (07.03.2019: ராய்ட்டர்ஸ்)

இவற்றில் 5 வருட முறிகளை வாங்கி முதலீடு செய்தவர்களில் 39% சதவீதத்தினர் அமெரிக்கர்களாயிருந்தனர். இம்முறிகளில் 10 வருட முறிகளை வாங்கி முதலீடு செய்ய அமெரிக்கர்களின் மொத்த தொகை 44% மாக இருந்தது. இதற்கு அடுத்தபடியாக, இம்முறிகளை வாங்கியோரின் பட்டியலில் ஐரோப்பிய முதலீட்டாளர்களே இரண்டாம் இடத்தை வகித்தனர். அவர்கள் முறையே 38%, 39%, கடன் முறிகளை பெற்றவேளை ஆசிய முதலீட்டாளர்கள் 23%, 17% முறிகளை பெற்றவர்களானார்கள். இப்படியாக தனது இறைமையை கூறுபோட்டு, இலங்கை சந்தையில் தான்தோன்றித்தனமாக விற்பதற்கான காரணம், இலங்கை தனது வெளிநாட்டு கடன்களை அல்லது அதற்கான வட்டிகளை நியமித்த காலங்களில் செலுத்த முடியாமையே என்று காரணம் கூறப்பட்டது.

2011 இல் மாத்திரம் இலங்கை 5.9 பில்லியன் டொலர்களை தன் கடனாக செலுத்த வேண்டியிருந்தது. இதில் முதல் காலப்பகுதியில் மாத்திரம் 2.6 மில்லியன் டொலரை இலங்கை செலுத்த வேண்டிய நிர்பந்தத்துக்குள் இருந்தது. 2019 இல் நடந்தேறிய கடன் முறிகளின் விற்பனை, இலங்கை தனது பட்ஜெட்டை சமர்ப்பித்த இரு தினங்களிலும், பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்~வின் தலைமையில் நடந்தேறிய 51 நாள் எதேச்சதிகாரத்தையும் தொடர்ந்தது என நிபுணர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

மேலும், முறிகளின் விற்பனையால் பெறப்பட்ட தொகை, பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட செலவுகளை நோக்கியதாகவே இருக்கும் என்ற சமாதானமும் இதனிடை கூறப்பட்டது. இது ஒரு புறம் இருக்க முறிகளின் விற்பனையில் உலகத்தின் புகழ்பெற்ற சர்வதேச வங்கிகளில் ஐந்துக்கும் குறையாமல் பங்கும் ஏற்றன என்பதும் குறிக்கத்தக்கதே. (07.03.2019: ரொய்ட்டர்ஸ்) அதாவது கடனை அடைக்க அல்லது பெற்ற கடனால் பிறந்த வட்டியை அடைக்க மேலும் மேலும் கடன் பெற்ற கதி இலங்கை நாட்டின் கதியும் கதையும் ஆனது.

குளறுபடிகளும் சமாளிப்பும்
குறித்த நேரத்தில் கடனை அல்லது வட்டியை கட்டி விட IMF இன் ஆலோசனைகள் (அழுத்தங்கள்) மாத்திரமல்லாமல் ‘உதவியும்’ வழங்கப்பட்டது எனலாம். இதனை ஆளுக்காள் வித்தியாசப்பட்டு, ‘உதவி’ என்று வரையறுப்பதும் உண்டு. ‘பொறி’ என பெயரிட்டழைப்பதும் உண்டு. உதாரணமாக சர்வதேச மட்டத்தில், நாடுகளை கபளீகரம் செய்யவென்றே Black Rock போன்ற நிதி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு, மாபெரும் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன என்பது நிபுணர்களின் கணிப்பு. சர்வதேச ரீதியாக, முதலீடுகளை நிர்வகிக்கும் Black Rock என்ற இந்நிறுவனத்தின் மொத்த பெறுமதி 10 ட்ரில்லிலயன் டொலர் என மதிப்பிடப்படுகின்றது. ஜனவரி 2022 கணிப்புகளின் பிரகாரம் இந்நிறுவனமானது 70 கிளை அலுவலகங்களை 30 நாடுகளில் கொண்டுள்ள அதேவேளை உலகலாவிய ரீதியில் கிட்டத்தட்ட 100 முதலீட்டாளர்களை தன் வாடிக்ககையாளர்களாக கொண்டுள்ளது, என்பதும் மதிப்பிடப்பட்டுள்ளது.

IMF போன்ற நிதி அமைப்புகளின் வழிகாட்டல்கள் இலங்கை போன்ற, தத்துக்குட்டி நாடுகளை இம்முதலீட்டாளர்களிடம் கையை பிடித்து அழைத்து செல்வதே. இதன் இரண்டாம் படிநிலை, இலங்கையின் கடன் முறிகளை வாங்கிய முதலீட்டாளர்களின் வட்டியையும் முதலையும் நேரப்படி செலுத்த இலங்கை மேலும் மேலும் கடன் வாங்க வைக்கப்படுகின்றது. தான் பெற்ற முதல், அதற்குரிய வட்டியையும் செலுத்த, இலங்கை மேலும் மேலும் முறிகளை விற்க தூண்டுவிக்கப்படுகின்றது.

அதாவது வட்டி கடனை விழுங்குவதும், ஆனால் கடன் அப்படியே இருப்பதும், பின் புது கடன் உருவாகுவதும் தொடர்கதையாகின்றது. (இந்நடைமுறை தோற்றுவிக்கும் அல்லது கோரும் அரசியல் நடைமுறைக்கிணங்க). கடந்த பத்து வருடமாய் IMF உடன் கைகோர்த்து, இத்திசையில் பழகிய குதிரையை போல் பயணிக்கப் பழக்கிப்பட்டு விடப்பட்ட, நிலைமையில், இலங்கை, தற்போது கைநிறைய இவ்வழியாய் பெற்ற கடனாக 16,383 மில்லியன் டொலர்களை (கடன்களில் 47%) சுமந்து விழி பிதுங்கி நிற்கின்றது.

இந்நிலையில், இலங்கைக்கு இருந்த ஒரே போக்கிடம் தன் வட்டியையும் தான் பெற்ற முதலையும் குறித்த நேரத்தில், தவணை தவறாது செலுத்த முடியாது போயுள்ளது என்று உலக சந்தையில் பகிரங்கமாய் அறிவித்து விடுவதே. கிட்டத்தட்ட ஒரு அம்மணமாகிய நிலைத்தான். அதாவது தனக்கு இறைமையும் நாடும் இல்லை என்பதைப்போல் - அதையும் அடகு வைத்து சூதாடி முடிந்தாகி விட்ட தர்மனின் கதையாயிற்று, இலங்கையின் கதை. இச்சூழ்நிலையிலேயே, இலங்கை சுதந்திரத்துக்குப் பின்னதான தன் 70 வருட காலவரலாற்றில் மேற்குறிப்பிட்டது போல், முதன் முறையாக அறிவித்தது: “தான் தனது கடன் செலுத்துகையை இடைநிறுத்துவதாக (Default in Payments) இவ் அறிவிப்பு 12.04.2022 அன்று இலங்கையால் விடுக்கப்பட்டது.

‘இடைநிறுத்தலுக்கான’ இவ்அறிவிப்பு குறித்து நிபுணர்கள் மூன்று விடயங்களை குறிப்பிடுவர். ஒன்று, இவ்அறிவிப்பானது, மிக முன்பே அதாவது கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த போதே வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், தொற்றை காரணம் காட்டி சர்வதேச சட்ட விதிமுறைகளில் இருந்து, இலங்கை தனது கடனை செலுத்த வேண்டிய கடப்பாட்டில் இருந்து தப்பித்து இருக்கலாம் என்பது, ஒன்று. ஏனெனில், External Schocks என்ற விடயம் சர்வதேச சட்ட ஏற்பாடுகளில், ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒரு சமாதானம் அல்லது நியாயப்பாடு என்பதால், கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய புற காரணிகளின் அடிப்படையில் இலங்கை தன் கடப்பாட்டில் இருந்து இப்படியாய் தப்பித்திருக்க கூடும், என்பது இவர்களின் தெரிவு. ஏனைய நாடுகள், தமது கடந்த கால கடன் செலுத்தும் கடப்பாடுகளை நிராகரித்து கொள்கையில், இப்படியான நிலைப்பாடுகளை முன்னெடுத்தன. அவற்றில் வெற்றியும் கண்டன. ஆனால் இலங்கையோ அக்காலப்பகுதியில் வெறுமனே வாய்திறவாது இருந்துவிட்டு, தற்போது, இவ்அறிவிப்பை வெளிக்கொணர்ந்துள்ளது ஆட்சியாளர்களினதும், IMF இனதும் உள்நோக்கங்களையும் அவர்களின் சர்வதேச தொடர்பாடல்களையும் சந்தேகப்படுத்துவதாக வைத்து விடுகின்றது.

இது ஒரு புறம் இருக்க, நிபுணர்கள் குறிப்பிடும் இரண்டாம் விடயமானது, பல வருடங்களாய், தொடர்ச்சியாய் சீர்குலைந்து வந்த இலங்கையின் இந்த சீர்குலைவு நிலைமையானது IMF போன்ற நிறுவனங்களுக்கு தெரியாமல் நடந்திருக்க கூடிய வாய்ப்பில்லை என்பதாகின்றது. உதாரணமாக கலாநிதி அகிலன் கதிர்காமர் அவர்கள், இலங்கை கடந்த காலங்களில் கடன் முறிகளை விற்று பெற்று கடன் தொகைகள் பொறுத்தும் அவற்றிலிருந்து எழக்கூடிய பிரச்சினைகள் பொறுத்தும் கடந்த சில வருடங்களாய் தொடர்ச்சியாய், பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்துள்ளதாய் குறிப்பிட்டுள்ளார். விடயம் இதுதான் எனில், அகிலன் கதிர்காமருக்கு இருந்த - இருக்க கூடிய, இதே தெளிவு IMF இன் நிபுணர்களுக்கு இருந்திருக்காது என்று கொள்வது முழு பூசணியை சோற்றில் மறைக்கும் செய்கையே அன்றி வேறில்லை என்றாகின்றது.

மறுபுறத்தில், இவ் அறிவிப்பு செய்யப்பட்ட தருணம், செய்யப்பட்ட விதம், பின்னர், செய்ததன் பின்னணி, பின் செய்ததன் பின்னரான அரசின் நகர்வுகள், நிலைமைகளின் கருகட்டல்- இவை அனைத்தும் IMF க்கு அல்லது அதனது கொள்கைக்கு அல்லது இலங்கையின் கடன் முறிகளை வாங்கியும் தற்போதைய முறிகளின் சொந்தகாரர்களாக இருப்போருக்கு, சாதகமாகவே இருக்கின்றது, என்பதும் நுணித்து நோக்கத்தக்கது. அதாவது, ஏற்கனவே, கூறியபடி, இடைநிறுத்தும் இவ் அறிவிப்பு செய்யப்பட்ட தருணமானது, தாமதிக்கப்பட்ட தருணமாக ஒருபுறம் இருக்கின்றது. வேறு வார்த்தையில் கூறுவதானால் இடைநிறுத்தம் செய்ய மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பானது தற்போதைய கடன் முறி சொந்தகாரர்களுக்கு எந்தவொரு பாதிப்பினையும் ஏற்படுத்தாத, வகையில் தேர்ந்து, செய்யப்பட்ட ஒரு தருணமாகவே இருக்கின்றது.

இவ்விதமாய், நாடு, செயல்பட்ட விதம் எமது அவதானத்துக்குரிய ஒன்றே. இரண்டாவதாய், செய்யப்பட்ட அறிவிப்பு - ஓர் இடை நிறுத்தலே என்பதாகும் (Suspension). இது, 'Termination’ – ஒப்பந்தங்களை முறிப்பது அல்ல. அதாவது வட்டி அல்லது கடன் செலுத்தகையை இலங்கை தற்சமயத்துக்கு இடைநிறுத்துகின்றது – புது கடன் பெற்றவுடன் மீள அது நல்ல பிள்ளையாக, செலுத்த ஆரம்பிக்கும் என தற்போதைய முறி சொந்தகாரர்களுக்கு, (Black Rocks போன்றவற்றிற்கு) இலங்கை தரும் அறிவிப்பாகவே இது அமைகின்றது. இத்தகைய ஏற்பாட்டின் பின்னரேயே, இலங்கை, தற்போதும், IMFஐ அணுகக்கூடியதாக இருக்கின்றது. கேள்வி: இவ் அனைத்துக்குமான ஆலோசனைகளை யார் வழங்கியது அல்லது இலங்கையை வழிநடத்தியது யார் என்பதே. பதில்: அனைத்து நிகழ்தகவுகளையும் சிரத்தையுடன் ஒன்றுகூட்டி பார்க்குமிடத்து இது IMF போன்ற நிறுவனம் கட்டமைத்த ஓர் சித்திரமாகவே இருத்தல் வேண்டும் என்றாகின்றது. தொகுத்து கூறுவோமானால், இலங்கையின் Default in Paymants செய்யப்பட்ட விதமும், (Suspension and not Termination) தேறப்பட்ட தருணமும் (பிந்திய தருணம்) அதனை தொடர்ந்து இலங்கையின் பிற்பட்ட நகர்வு (மீண்டும் IMFஐ நாடியமை) - இம்மூன்று காரணிகளையும் ஒன்றுசேர பார்க்குமிடத்து, IMFஆல் இலங்கை ஆட்கொள்ளப்பட்டிருக்கும் விதம் அம்பலமாகின்றது.

IMF தரவிருக்கும் எதிர்கால கடன்!
இலங்கை தற்போது 4 பில்லியன் டொலர் கடனை பெற IMFஇடம் தெண்டித்து கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. இலங்கை ஈக்குவடோர் நாட்டை போன்று தன் கடன் ஒப்பந்தங்களை (கடன் முறிகளை) முற்றாக நிராகரிப்பதும், பின் அவற்றுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை கைக்கொள்வதும் இலங்கை கைக்கொள்ள எதிர்பார்த்துள்ள நடைமுறையாக தென்படவில்லை. வழமைபோல், பெற்ற கடனுக்காக, மேலும் புதுகடன் வாங்கி வட்டியையும் கடனையும் மிள, மீள முதலீட்டாளர்களுக்கு செலுத்தும் நடைமுறையே இலங்கை கைக்கொள்ளும் நடைமுறையாகின்றது.

நிபுணர்களின் அபிப்பிராயப்படி, பெற்ற கடன்களை, இலங்கை முற்றாக முறித்து, ஈக்குவடோர் நாட்டை போல் முற்றாக நிராகரித்துவிடும் பட்சத்தில், இலங்கை வளமுள்ள ஸ்தானத்தில் தன்னை இருத்திக் கொள்ள வாய்ப்புண்டு எனவும் கூறப்படுகின்றது. ஏனெனில் அப்படியான ஓர் அறிவிப்பை தொடர்ந்து, சர்வதேச சந்தையில், மதிப்பிழந்து போகும் தன் கடன் முறிகளை, இலங்கையானது 70-80% விலைகுறைப்பில் மீள பெற்றுக் கொள்ளலாம் என்ற வாதம் இவ்வடிப்படையில் முன்வைக்கப்படுகின்றது.

இதற்கு உதாரணமாக மீண்டும், ஈக்குவடோர் போன்ற நாடுகளின் விடயம் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஈக்குவடோர் நாடு, தான் பெற்ற கடன்களை முற்றாக நிராகரித்தது மட்டுமல்ல, அவற்றுக்கான கடன் ஒப்பந்தங்களை முற்றாக முறித்துக் கொண்டது மாத்திரமல்ல, அதற்கூடு தனது 91%மான முறிகளை சர்வதேச சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொண்டுள்ளது, என்ற உண்மையினை மேற்படி நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கை, ஈக்குவடோர் நாடு போன்று செயல்படாத காரணத்தால் தற்போது IMF இன் அணுசரனையோடு தற்போதைய கடன் முறி சொந்த காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வட்டியை 10 அல்லது 20 வீதத்தால் குறைக்கும் செயற்திட்டம் நோக்கியே செயல்படலாமே தவிர வேறொன்றில்லை என்றாகின்றது. எனவே சுருக்கமாக கூறினால், இரு வேறு நடைமுறைகள் இங்கே காணக்கிட்டுகின்றன எனலாம். ஒன்று, ஈக்குவடோர் போன்று செயற்படுகின்றது. ஆனால் இந்நடைமுறையை இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்றால், அதற்கு முன்நிபந்தனையாக ஓர் ஆட்சி மாற்றம் அவசியமுறுவதாக அமைந்து போகும்.

IMF இன் சிபாரிசுகள்
ரூபாய் மதிப்பிறக்கம், அதற்கியைய, டொலரின் விலைகூடல், அதனை தொடர்ந்து எண்ணெய் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், மின்சாரம் - தொலைதொடர்பு – அஞ்சல் சேவை – ரயில் பஸ் கட்டணங்கள் போன்ற அனைத்தினதும் சலுகைகளை வெட்டி விடுதல் – அரச நிவாரண ஏற்பாடுகளை அடியோடு இல்லாது ஆக்கல் - வரிகளை வெட்டி விடுதல் - இப்படியாக, IMF இன் சிபாரிசுகள் கிட்டத்தட்ட நிரந்தரமான ஒரு கட்டமைப்பாகவே கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க கூட ஓர் நேர்காணலின் போது, “ஏற்கனவே இலங்கைத்தான் IMFஇன் சகல ஆலோசனைகளையும் நடைமுறைப்படுத்தி விட்டதே! இனி அங்கு செல்வதற்கு எந்த ஒரு தடையும் இருப்பதாக தான் எண்ணவில்லை” என்ற கருத்தினை முன்வைத்தார்.

கடன் பெறுவதும் புதிய நடைமுறைகள் கட்டியெழுப்பபடுதலும்!
கலாநிதி அகிலன் கதிர்காமரின் கூற்றுப்படி, கடன் பெறுவதை விட அக்கடன் எப்படி செலவழிக்கப்பட போகின்றது என்பதிலேயே ஒரு நாட்டின் எதிர்கால முக்கியத்துவம் அடங்குகின்றது என்பார் அவர். அவரது ஆலோசனைகளின் அடிப்படையான விடயமானது, கடனானது தன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அல்லது அத்திசை நோக்கி பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதாகும். எண்ணெய் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்கள் அன்றி இறக்குமதியானது பொதுவில் மட்டுப்படுத்தப்படல், சொத்துள்ளோரின் வரிகள் அவையவற்றின் படிநிலைக்கு ஏற்ப அதிகரிக்கப்படுதல், மக்களின் வாழ்க்கை செலவை சமாளித்து அவர்கள் உற்பத்தியில் ஈடுபடும் வண்ணம் வழிவகை செய்தல் - இவை போன்ற சிபாரிசுகள் கலாநிதி கதிர்காமர் முன்வைக்கும் சில பிரேரிப்புகள் என்றாகின்றது. ஆனால் இவை IMFஇன் பரிந்துரைக்கு நேரெதிரானது என்பதில் ஐயமில்லை.

IMF இன் நடைமுறை, உற்பத்தி ஊக்குவிப்புகளை மையமாக கொண்டதல்ல. மாறாக, சர்வதேச முதலீட்டாளர்களை திருப்திபடுத்தலையே தன் மைய இலக்காக கொண்டு, அது இயங்குகின்றது. சுற்றுலா துறையை மேம்படுத்தல், பாதைகளை மேம்படுத்தல், விளையாட்டு மைதானங்களை அகலித்தல், நகரங்களை குளங்களை வெட்டி அழகுப்படுத்துதல் - இவை போன்ற ‘அழகுபடுத்தும்’ விடயங்களாகின்றன. உதாரணமாக, கடந்த காலங்களில், பெற்ற கடன்கள் அனைத்தும் விமான நிலையங்கள் அல்லது துறைமுகங்களின் அபிவிருத்திக்கும், (மத்தள-ஹம்பாந்தொட்டை), சூரியவௌ-தம்புள்ள கிரிக்கெட் மைதானம் அமைக்கவும், தாமரை தடாகம் - தாமரை கோபுரம் போன்ற கட்டடங்களை கட்டுவதற்கும் செலவாகின. இவை அந்தந்த ஆட்சியாளர்களுக்கும் ஆனந்தம் பிறப்பிக்ககூடிய திட்டங்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் ஒவ்வொரு கட்டுதலின் போதும் அதற்குரிய சன்மானம் கமிசனாய் போய் சேர்ந்துவிடும் என்பது இன்று உலகறிந்த நடைமுறையாகின்றது. இவை அனைத்தும் IMFஇன் உள்நோக்கம் யாது- அது எவ்வாறு இயங்குகின்றது என்ற ஆழமான விடயப்பொருளை நோக்கி எம்மை நகர்த்துவதாய் உள்ளது.

2009க்கு பின்!
போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கை அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து இலங்கை தேசத்தை புணரமைத்தல் என்ற கருத்து நிலை நோக்கி நகரவேண்டிய கடப்பாட்டில் இருந்தது. போருக்கான மூல காரணமாக இருந்த அதிகார பரவலாக்கத்தை ப10ரணமாக அமுல்படுத்துவதும் பின் அனைத்து இனங்களின் ஒற்றுமையோடு, போரால் சிதைந்து போன ஒரு தேசத்தை (அல்லது தேச பொருளாதாரத்தை) மீள் கட்டியெழுப்பி பாதிப்புற்ற மக்கள் மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்றி வைக்க வேண்டிய பொறுப்பும் இலங்கை ஆட்சியாளர்களிடம் இருந்தது.

ஆனால் 13ம் திருத்த சட்டத்தை கூட அவர்கள் அமுல் செய்ய தயாரில்லை என்பது ஒரு புறம் இருக்க IMF இடம் இருந்து பெற்ற கடன் போன்றவற்றின் பெரும்பகுதி தொடர்ந்தும் ராணுவ செலவினங்களுக்கே சென்று சேர்ந்தது. அது, நாட்டின் உற்பத்திக்காகவோ அல்லது குறைந்தபட்சம் கல்வி – வைத்தியசாலை போன்ற விடயங்களுக்காகவேனும் அல்ல, என்பதும் குறிக்கத்தக்கதே. அதாவது உற்பத்தியை நோக்கி பொருளியல் திட்டம் கட்டமைக்கப்படாமல், அதற்கான எந்த ஓர் அரசியல் சுவாத்திய நிலைமையும் உருவாக்கப்படாமல், இனங்களின் துருவப்படுத்தலை மையமாக கொண்டு ஒரு ராணுவ விஸ்தரிப்பை நோக்கி கடன்கள் செலவிடப்பட்ட வரலாறு, இலங்கையின் வரலாறாகின்றது.

2015ம் ஆண்டில் இலங்கையின் ராணுவ செலவுகள் தன் உச்சத்தை இக்காலப்பகுதியில் தொட்டது. (ரூபாய் 285 கோடி; கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 12.25% உயர்வு: மொத்த வருவாயில் இது 16.6%. இவ்வளவும் போர் நிறைவுற்று ஐந்து வருடங்களின் பின் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட்!) இதே வேளை இதற்கு இணையாக IMF இலங்கைக்கு வழங்கிய கடனும் தன் உச்சத்தை தொடுவதாய் உள்ளது. (2009 – 2.6 பில்லியன் டொலர் : 2015 – 1.5 பில்லியன் டொலர்) இவ்விரு நிகழ்வுகளுக்கும் இடையேயான ஒற்றுமை அல்லது இவ்விரு சமாந்திர நிகழ்வுகளுக்கான காரணியின் குறித்து பல்வேறு நிபுணர்களும் இன்று கேள்வி எழுப்ப தவறவில்லை. இத்தகைய ஓர் பின்புலத்திலேயே, IMF இன் கடன் வழங்கும் திட்டம், நேற்றைப்போலவே இன்றும், முற்றிலும் சந்தேகத்துக்கு இடமானதுதான் என்ற கருத்தை இந்நிபுணர்கள் இன்று வாதிட முனைந்துள்ளனர். IMFஇன் கடன் வழங்கும் திட்டமானது அரசியல் உள்நோக்கம் கொண்டு இயங்குதாகவும், சிற்சில நேரங்களில் ராணுவ ஆட்சிகளை கூட கட்டமைப்பதில் அது மறைமுக உதவிகளை வழங்குவதாகவும் சர்வதேசத்து பொருளியல் விமர்சகர்கள் அபிப்பிராயப்பட்டுள்ளனர். (Eric Toussaint போன்றோர்) உதாரணமாக, இன்றைய உக்ரைன்-ரசிய முரண்பாட்டை ஊக்குவிக்கவும், உக்ரைனின் அரசியலை கட்டமைக்கவும் IMF இன் செயற்பாடு எவ்வாறு உதவியுள்ளது என்பதனை இவர்கள் சுட்டிக்காட்டி உள்ளார்கள். உதாரணமாக, 2010 இல் இருந்து கடந்த ஆண்டு வரை IMF உக்ரைனுக்கு வழங்கிய மொத்த தொகை, குறைந்தது, 22 பில்லியன் டொலர் என இவர்கள் மதிப்பிட்டுள்ளனர். மேலும், 2010 இல், உக்ரைன் IMF இடம் இருந்து பெற்ற 10.6 பில்லியன் டொலர் அளவிலான கடன், IMFஇ உலக நாடுகளுக்கு தந்த கடனில் மூன்றாவது பெரும் கடன் எனவும், அது உக்ரைனின் அரசியல் சுவாத்தியத்தை எப்படி முற்றாக மாற்றி மீள் கட்டமைக்க உதவிற்று என்றும் இவர்கள் கூறுவர்.

இருந்தும் இப்பொருளியல் விமர்சகர்கள், ஒரு பகுதி உண்மைகளை கூறியும், மறுபகுதியை கூறாமல் இருப்பதிலும் திறன் படைத்தவர்கள்தாம் என்ற உண்மையினையும் நாம் இங்கே கூறாமல் விடலாகாது. இருந்தும், இவ்விடயத்திலும், கலாநிதி அகிலன் கதிர்காமரின் கண்ணோட்டமானது இங்கே சற்றே வித்தியாசப்படுகின்றது.

அரசியலும் தற்போதைய நெருக்கடியும்!
தற்போதைய அரசியல் நெருக்கடியானது, ஓர் ஆட்சி மாற்றத்தை நோக்கி செல்வதற்கான உந்து சக்தியாக அமைதல் வேண்டும் என்பதே கலாநிதி அகிலன் கதிர்காமரின் சாரமாக இருக்கின்றது. இதற்கான காரணம் புதிய கடன்களை பெற்று அவற்றை உற்பத்தி நோக்கி பிரயோகித்து நாட்டை மீள கட்டியெழுப்புவது என்பது ஓர் புதிய நடைமுறை சார்ந்தது – அது, ஓர் புது அரசியலை, அதன் ஸ்தாபிக்கப்படுதலை, தன் முன் நிபந்தனையாக கொள்கின்றது என்பதேயாகும்.

அதாவது புதிய கடன்களை பெறுவது, யாரிடமிருந்து பெறுவது, IMFஇடம் இருந்தா அல்லது பிற நாடுகளிடம் இருந்தா- முந்தைய கடன்கள் தொடர்பான அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன – அவற்றை தொடர்ந்து செலுத்தப்போகின்றதா அல்லது வெறுமனே இடைநிறுத்தல் மாத்திரம் தான் அரசின் நோக்கமாக இருக்கின்றதா (அதாவது புதிய கடனை பெற்று பழைய கடனை செலுத்தும் பண்டைய முறைமையையே அது கைக்கொள்ளப் பார்க்கின்றதா) புதிய கடனை உற்பத்தி துறை நோக்கி செலுத்த போகின்றதா அல்லது கடந்த காலத்தை போல சுற்றுலா துறையின் மேம்பாடு, நகர அழகுபடுத்தல் அல்லது கிரிக்கெட் மைதானங்களை அமைத்தல், பாதைகளை அகலப்படுத்துதல் - என்ற வகையில் பிரயோகிக்கப்பட போகின்றதா -இக்கேள்விகள் அனைத்தும், ஓர் மாறிய அரசியல் கண்ணோட்டத்தை தனது முன் நிபந்தனையாக கொள்ளக்கூடும். இருந்தும் கூட அண்மைக்கால எதிர்ப்பலைகளை, ஆதிக்க சக்திகள் தமக்கு சாதகமாக பாவித்துக் கொள்ளவும் இடமுண்டு, என்ற கருத்தும் நிராகரிக்கப்பட முடியாததே.

இவ்அடிப்படையிலேயே கலாநிதி அகிலன் கதிர்காமனின் கூற்று, இவ் எதிர்ப்பலைகள் முற்றுமுழுதாய் ஒரு ஜனநாயக ஏற்பாட்டிற்கு அல்லது ஜனநாயக முறை நோக்கி அசையும் ஏற்பாட்டிற்கு அடித்தளம் அமைக்கும் என்பது இல்லை - இது பாசிசம் நோக்கியும் அசைவதற்கான முதற்படியாக இருக்கலாம் என்ற அபிப்பிராயம் முக்கியத்துவப்படுகின்றது. ஏனெனில் அரசை சார்ந்தவர்களே பல்வேறு ரூபங்களில் - அரசை எதிர்ப்பவர்களாக அல்லது அரசை விமர்சிப்பவர்களாக இறக்கிவிடப்படுதலும், பின்னர் அவர்கள் பாராளுமன்றத்தில் அல்லது மக்கள் முன்னிலையில் அம்பலப்பட்டு, அப்படி அம்பலப்படுத்தப்பட்டதையும் ஓர் பொருட்டாக கருதாது கைகோர்த்து சிரித்தவாறே காட்சி தருவதும் இன்று, பழைய கதையாகி உள்ளது. இவை அனைத்தும் ஓர் பாசிசத்தின் எழுச்சிக்கு கட்டியம் கூறுகின்றனவா என்பதே இப்பொருளியல் நிபுணர்கள் முன்வைத்த வாத்தின் சாரமானது. இப்பின்னணியிலேயே ஓர் இந்திய பிரதேச வல்லரசின் இருப்பும் அது போலவே உள்நாட்டில்  JVP இன் எதிர்ப்பலையும் தத்தமது முக்கியத்துவங்களை ஏந்தின எனலாம். இதுபோலவே சீனத்தின் நிலைப்பாடும் புலம்பெயர் சக்திகளின் நிலைப்பாடும் எமது கவனத்துள் கொள்ளத்தக்கதாகவே இருக்கின்றது.

கடந்தகால– நிகழ்கால அரசியல்!
இன்றைய அரசை ஆட்சிபீடத்தில் இருத்துவதில், பெரும்பங்காற்றிய புலம்பெயர் அரசியல் அன்று கூறியதை நாம் மறக்கலாகாது: “ஜனநாயக உரிமைகளை மறுக்க கூடிய ஒரு கொடுங்கோல் அரசை பதவிக்கு கொண்டு வந்தோமானால் அது ஒரு சர்வதேச தலையீட்டை ஏற்படுத்தி சுயநிர்ணய உரிமைக்கான அடித்தளத்தை இட்டு விடும்” என்ற அவர்களின் நிலைப்பாடு இன்று காற்றில் பறக்கவிடப்பட்ட சங்கதியாகியுள்ளது.
இன்று பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கூற்று பின்வருமாறு இருக்கின்றது: “நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்கள் இன்று தாம் செய்த தவறை உணர்ந்துள்ளனர்” என்பதும் “தேர்தல் ஒன்றை நடாத்தாமல் அரசாங்கத்தை அகற்ற முடியாது. தேர்தலை எவ்வளவு தூரம் பிற்போடுகின்றார்களோ அந்தளவிற்கு நாட்டின் அரசியல் நிலைமை மேலும் மோசமாகும்… தேர்தல் ஒன்றே வழி” என்பதும் அவரது அண்மைக்கால பாராளுமன்ற கூற்றானது.

அதாவது, கொடுங்கோல் அரசை பதவிக்கு கொண்டு வந்து, அதன் மூலம் சர்வதேச வரவுக்கு அல்லது தலையீட்டுக்கு இடமளித்து, அதனூடு மக்கள் பிரச்சினையை தீர்ப்போம் என்ற நிலைப்பாடு மாறி, இவ் ஆட்சியை ஆட்சிபீடம் ஏற செய்தது மக்கள் விட்ட தவறு என இன்று நெட்டி முழங்குவது இவர்களை பற்றி மீளவும் சிந்திக்க தூண்டுகிறது. செய்வதை செய்து விட்டு கூசாது, மக்கள் மேல் பழியை போடும் நடைமுறையாகின்றது, இது. வேறு வார்த்தையில் கூறுவோமானால் செய்வதையெல்லாம், செய்துவிட்டு பிழைகளை – விட்ட தவறுகளை - மூடிமறைக்கும் வழமையான நடைமுறையாக இருக்கின்றது. இப்போக்கினை விக்னேஸ்வரனின் வடமாகாண சபை காலம் தொடங்கி இன்று வரை நாமும் எம் மக்களும் பார்த்துவரும் ஒரு சங்கதியே என்பதனையும் இங்கு கூறியாக வேண்டும். இத்தகைய ஓர் பின்னணியிலேயே, இப்போக்குகளை கட்டிவளர்ப்பதும் நிராகரிப்பதும் தமிழ் மக்கள் முன்னெடுக்கக்கூடிய இன்றைய அரசியல் வேலைத்திட்டங்கள் ஆகின்றது. காரணம், புலம்பெயர் அரசியலின் வேலைத்திட்டங்களோ சற்று வித்தியாசமானது. முரணானது. அவர்களின் மொத்த கவலை, மொத்தத்தில், இலங்கையில் வாழக்கூடிய மனிதர்களை பற்றியது அல்ல. மாறாக தமது கடந்த கால செழுமைகள் பற்றியது - அது IMFஇன் கொள்கைகளுடன் ஒருங்கே பயணிக்கத்தக்கதுதான்.

இலங்கையின் ராணுவ முகத்தை கட்டமைப்பது!
போருக்கு பின்னரான இலங்கையின் அரசியல் முகத்தின் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் ராணுவமயப்படுத்தலை நோக்கி அசைப்பதில் IMFஇன் பங்களிப்பு எந்தளவில் இருந்தது என்பது சுவாரஸ்யமான ஒரு கேள்வியாகும். அண்மைக்கால, புலம்பெயர் பிரமுகர் ஒருவரின் பேட்டி ஒன்றில், அவர் பின்வருமாறு கூறியிருந்தார்: “ஆட்சி மாற்றத்தினால் தமிழ் மக்களுக்கு எவ்வித பயனும் ஏற்பட போவதில்லை… போரின் முன்னரும் பின்னரும் ராணுவத்திற்காக செலவு செய்தவை இன்றைய நெருக்கடிக்கு காரணம்…” மேலும் கூறுவார்: “ஆனால் இத்தகைய ராணுவ செலவு சர்வதேசத்தின் அவதானங்களுக்கு இன்னமும் செல்லவில்லை” என. “இன்னும் சர்வதேச கவனங்களுக்கு இவை செல்லவில்லை” என இவர் குறிப்பது சற்று விநோதமானதுதான். இக்கூற்றுக்கள் ஒவ்வொன்றும் எமது ஆழ்ந்த கரிசனைக்கும் கேள்விகளுக்கும் உரியது என்பதில் சந்தேகமில்லை.

அதாவது, சர்வதேசம் கண்ணை மூடிய பூனையாக இருட்டில் தடவி திரிகின்றதா அல்லது புலம்பெயர் தமிழர்கள்தான் கூறாமல் விட்டார்களா அல்லது தாம் கூறுவதை சர்வதேசம் சட்டை பண்ண மறுக்கின்றதா – என்பதெல்லாம் இங்கே கேள்விகளாகின்றன. ஆனால், ஒவ்வொரு நாட்டின் அரசியலும் (கட்சியினது அல்ல – நாடுகளின் அரசியல்) பல படி நிலைகளில், பல நிபுணர்களால் - அதிலும் பல்துறை சேர்ந்த நிபுணர்களால் திட்டவட்டமாக உருவாக்கிக் கொள்ளப்படுகின்றது என்றும், யாதொன்றும், காரணமற்று இங்கு அசைவதில்லை என்பதும் அரசியல் விஞ்ஞானத்தில் புரிந்துக்கொள்ளப்பட வேண்டிய, அடிப்படை அரிச்சுவடிகளில் ஒன்று என்பது மிக ஆரம்பத்திலேயே தெரிந்துக் கொள்ளப்பட வேண்டிய சங்கதிகளில் ஒன்றாகின்றது. இத்தகைய ஒரு பின்னணியிலேயே, ரணில் விக்கிரமசிங்காவின் புதிய பிரதமர் பதவியேற்பும் நடந்து முடிந்திருக்கின்றது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.