இலங்கையின் எதிர்ப்பலைகள், ஒன்று, ஜனநாயக ஏற்பாட்டினை நோக்கி அசையக்கூடும் - அல்லது பாசிசத்தை நோக்கி நகர கூடும் என்பது கலாநிதி அகிலன் கதிர்காமரின் கணிப்பானது. (பௌசர் Zoom Meeting)). இருந்தும் இந்தக்கூற்றானது பிரதமர் ரணில் பதவி ஏற்பதன் முன்னர் வெளிவந்தது, என்பதும் குறிக்கத்தக்கது. இவ் எதிர்ப்பலையானது 1971, 1989இன் எழுச்சிகள் போல் தனித்து இயங்காது, ஒரு சமூக தளத்தை அரவணைப்பதாகவும், ஓர் தேசத்தின் கோபத்தை எதிரொலிப்பதாகவும் இருந்தது-இருக்கின்றது. (இவற்றில், வடக்கு மக்கள் எந்தளவில் இணைய முற்பட்டனர் என்பது தனித்து வாதிடப்பட வேண்டிய விடயமேயாகும்). தமிழ் மக்கள் இதில் இணைய வேண்டும் என்று ஒருபுறத்தில் சுமந்திரன், கலாநிதி அகிலன் போன்றோர் அபிப்பிராயப்பட்டாலும், புலம்பெயர் அரசியலின் நிலைப்பாடு என்பது, துருவமயமாக்கலை தொடர்ந்தும் தக்கவைத்தல், என்ற அரசியலை, மையமாக வைத்தே இயங்குவதாய் அமைந்திருந்தது. இது புலம்பெயர் அரசியலுக்கு மாத்திரமல்லாமல் இலங்கையின் ஆதிக்க சக்திகளுக்கும், கூடவே, மேற்கின் நலன்களுக்கும் மகிழ்ச்சி ஊட்டும் விடயம்தான் என்பதில் ஐயமில்லை. வடக்கு மக்களை தனிமைபடுத்தும் இந்நிகழ்ச்சி நிரலானது கடந்த காலங்களிலும், (தேர்தல் உட்பட) நடந்தேறியுள்ளது என்பதும் அவற்றுக்கு பல்வேறு வல்லரசுகளின் பின்னணி உண்டு என்பதெல்லாம் பிறிதான விடயங்களே. ஆனால், எதிர்ப்பலைகளானது மேலே கூறப்பட்டது போல, ராணுவமயமாக்கலுக்கும் அடித்தளம் அமைக்க கூடும் என்பதும், அதற்கான சமிஞ்சைகள் மிக தெளிவான முறையில் இலங்கை அரசியலில் ஏற்கனவே வெளிவரத் தொடங்கி இருந்தன என்பதும் முக்கியமான விடயங்களாகும்.

உதாரணமாக, ஒரு மாத காலமாய், ஊடகங்களில் தோற்றம் தராத பாதுகாப்பு செயலாளர் 10.05.2022இல், திடீரென முதன்முறையாக பரவலாக தோற்றம் காட்டினார் என்பதும், இது போலவே, நாடாளுமன்றமானது கூட்டப்பட மாட்டாது என விடுக்கப்பட்ட அறிவிப்பும், அதனை தொடர்ந்த அவசரகால சட்டத்தின் பிரகடனமும் மற்றும் தேவை ஏற்படின் சுடலாம் என அனைத்து படையினருக்கும் (பொலிசார் உட்பட) தரப்பட்ட அதிகாரமும், அறிவிப்பும் ‘அது - அதற்குரிய’ முக்கியத்துவத்தை உள்ளடக்கவே செய்தது. இதற்கு முன்னோடியாய் அமைந்தவை, காலிமுகத்திடல் எதிர்ப்பாளர்கள் மீது, கட்டவிழ்க்கப்பட்ட கொடூர தாக்குதல்களே என்பதும் மனங்கொள்ளத்தக்கது. இருந்தும் இச்சம்பவங்கள் அனைத்தும் (தோற்றம் தந்தது முதல், கூட்டப்படாது, சுடலாம் என்ற அறிவிப்பு வரை) ஓர் திட்டமிட்ட கோர்வையாக, கணவேகத்தில், (24மணி நேரத்துக்குள்) நடந்து முடிந்தன. (எதிர்ப்பலைகளில், குமார் சங்ககாரவின் மனைவி உட்பட பல்வேறு விளையாட்டு நட்சத்திரங்கள் முதல் பிரபல சட்டத்தரணியான பாயிஸ் முஸ்தப்பா வரையும், மேலும் பல்வேறு மத்திய தர, மேல் மத்திய தர இளைய பெண் எதிர்ப்பாளர்கள் உட்பட, வைத்தியர்களும் வழக்கறிஞர்களும், மற்றும் பல்வகையினரும் கலந்துக் கொண்டது – காலி முகத்திடல் எதிர்ப்பலைக்கு, ஓர் சமூக அந்தஸ்த்தினை ஏற்படுத்தியிருந்தது என்பது பிறிதாக குறிக்கத்தக்கதே).

தாக்குதல் பொறுத்து கருத்து தெரிவித்த அர்ஜுன ரணத்துங்க கூட, “இது திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல். ஒரு மாத காலமாய் மிக அமைதியான முறையில் தெரிவிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பலை இன்று கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றது. இவர்களை காப்பாற்ற வேண்டிய பொலிசாரும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் வெறுமனே வேடிக்கை பார்த்துள்ளனர்” என குறிப்பிட்டது எமது கவனத்துக்குரியது. இக்கூற்றில், “பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வேடிக்கை பார்த்தனர்” என்ற பகுதியே மிக முக்கியமானது எனலாம். அதாவது உயர்மட்டங்களின் நேரடி ஆதரவின்றி இப்படியான ஒரு நிலைமை உருவாகி இராது என்பதே அர்ஜுன ரணத்;துங்க போன்றோர் தொட்டுக்காட்டிய முக்கிய செய்தியாகும். இதனுடன் 58 சிறைகைதிகளின் பங்கேற்பும் இணைய அர்ஜுன ரணத்துங்க கூறுவது போல் “திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல்” என்பது தனது முக்கியத்துவத்தை இன்னும் கூடுதலாக ஏந்தியதாகின்றது. இதனை அடுத்தே, மேலே கூறப்பட்டாற்போல், அவசர கால சட்டத்தின் பிரகடனமும் - சுடக்கூடிய அறிவிப்பும் –இறக்கிவிடப்பட்டதாகின்றது. இருந்தும், இத்தாக்குதலை தொடர்ந்து வந்த நகர்வுகள், இலங்கை வரலாற்றில் என்றுமே காணப்படாதது என்பது அழுத்தமாய் கோடிடப்பட வேண்டிய ஒன்றே. தாக்குதல் நடந்த களத்தை நோக்கி இளைஞர்களும் விரைந்தார்கள் என்பதில் அவ்வளவாக முக்கியத்துவம் இருக்கவில்லை. ஆனால் சாதாரண மக்கள் - வயதில் முதிர்ந்தோர் - வைத்தியசாலை தாதியர் - பெண்கள் - உத்தியோகத்தர்கள் - வழக்கறிஞர்கள் என அனேகர் - ஊர்வலங்களாய், கோசங்களுடன் தாக்குதலுக்குள்ளான காலி முகத்திடலை நோக்கி விரைந்தனர் என்பதிலேயே, சராசரி மக்களின் கோபதாபம் எத்திசை நோக்கி பயணிக்கின்றன என்பதற்கான தடயங்கள் கிடைக்கப் பெற்றன.

அதாவது காலிமுகத்திடல் மக்கள் தாக்கப்பட்ட சம்பவமானது, முழுநாட்டினையும் (வடக்கு தவிர்ந்து) கொந்தளிக்க செய்த ஒரு சமாச்சாரமாகியது. கொந்தளிப்பானது சமூகத்தின் பல படிநிலைகளை ஊடுருவி உக்கிரமுற்று வெடிக்க தொடங்கியதாய் இருந்தது. அரசின் அமைச்சர்கள், முக்கியஸ்தர்களின் வீட்டுமனைகள், அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டது போக, நாட்டின் மத்திய தர வர்க்கமும், முக்கியமாக படித்தவர்கள் குழாமும் இதற்கான எதிர்வினையை ஆற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டதாக இருந்தது. உதாரணமாக, வைத்தியர்கள் தமது வாடிக்கையாளர்களான அரசியல்வாதிகளுக்கு முதலிடம் தருவதை நிராகரித்து விட்டதாக அறிக்கைகள் விட்டனர். இது போலவே, சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில், எந்தவொரு கொடுப்பனவும் இல்லாமல், சமூக கோபங்களால் உந்தப்பட்டு தாக்குதலில் ஈடுபட்டோருக்கு இலவசமாய் நூற்றுக்கணக்கில் தோற்றத் துவங்கினர். கூடவே, நீதிமன்ற தீர்ப்புகளிலும், ஆணைகளிலும் பாரிய ஓர் மாற்றத்தைக் காணக்கூடியதாக இருந்தது. ரம்புக்கனை, கொழும்பு நீதிமன்றங்கள் எதிர்ப்பலைகள் தொடர்பில் விடுத்த உத்தரவுகள் முதல் அண்மைக்கால ஜனாதிபதியின் மன்னிப்பை இடைநிறுத்தும் ஆணைகள் வரை (துமிந்த சில்வாவின் வழக்கு), நாட்டை உலுக்கி, மீள்பயணம் செய்த, ஆணைகள் தாம். இம்மாற்றத்திற்கு “மக்களின்” எதிர்ப்பலைகளே அடித்தளம் அமைத்தன – அமைப்பதாய் இருந்தன என்றால் அது மிகையாகாது. (துமிந்த சில்வாவின் வழக்கில் சுமந்திரன் வாதாடி, முதல் நாளிலேயே, ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு எதிராக, இடைக்கால தடை உத்தரவை பெற்ற விடயம் பல பெரும்பான்மையின மக்களால் வரவேற்க்கப்படுவதாய் உள்ளது - இதுவும் இன ஒற்றுமைக்கான தளத்தை விரிவுப்படுத்துமா என்பதும் அது ஆதிக்க சக்திகளின் தந்ரோபாயங்களை முறியடிக்குமா என்பதும் தனித்த கேள்வியாகின்றது). இதேவேளை, குறித்த காலப்பகுதியில் இந்தியாவின் தனு~;கோடி, தூத்துக்குடி பிரதேசங்களில் இந்திய கடலோர நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டதாக வேறு செய்திகள் வந்தபடி இருந்தன. இவை, மாறிய அல்லது ஆதிக்க சக்திகள் சற்றும் எதிர்பாராத யதார்த்தங்களை சுட்டுவதாய் இருந்தது.

அதாவது, இலங்கையில், குறித்த காலப்பகுதியில் நடக்கவிருந்த பாசிசத்தை நோக்கிய பயணம் இடைநடுவே தடுக்கப்பட்டது என்றால் அதற்குரிய முக்கியமான காரணிகளாக மக்கள் எதிர்ப்பலைகளையும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியலையும், இந்திய நகர்வுகளையும் நாம் இனங்காண துணியலாம். (கடலோர செயற்பாடுகள் போக ஸ்டாலினின் உணவு வழங்கும் திட்டமும் இதற்கான தடயங்களை தருகின்றதா என்பதும் தனித்து வாதிக்கக் கூடிய ஒன்றே). இச்சூழ்நிலையிலேயே, இலங்கை, திட்டம் ‘A’ என ஒன்று இருக்குமானால், அதனை, தற்சமயத்திற்கு, கைவிட்டு, திட்டம் B யை நோக்கி நகர நிர்பந்திக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் குறித்துள்ளனர்.

ஆய்வாளர்களின் கணிப்பில் திட்டம் ‘B’:

மகிந்த ராஜபக்சவின் அகற்றுதலோடு, திட்டம் ‘B’ நடைமுறைக்கு வந்துள்ளதாகவே விமர்சன தரப்புகளில் கூறப்படும் சேதியாகின்றது. இது உண்மையானால், இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள, திட்டம் ‘B’யானது, பல்வேறு படிநிலைகளில் செயல்படுவதாய் இருக்கின்றது. (தர்க்கங்களுக்கு இணங்க).

ரணிலின் பதவியேற்பும், மகிந்தவின் பதவி விலகலும், புதிய அமைச்சரவையின் தோற்றமும், (பலர் பழையவர் என்றாலும்) புதிய அரசியலமைப்பின் முன்னெடுப்பும் (அரசியல் அமைப்பு 21) – அதற்கான பேச்சுவார்த்தைகளும், இப்படியாய் ஒரு “புதிய அரசியல்” அல்லது புதிய அத்தியாயத்துக்கான வெளி, திறக்கப்பட்டு, மக்களின் கோப தாபங்களை தணித்து விடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என நம்பப்படுகின்றது. வேறு வார்த்தையில் கூறினால், IMF இன் அரசியலையும் ராஜபக்சவின் அதிகாரத்தையும் உறுதி செய்யும் நோக்கம் கொண்டதாகவே அண்மைகால அரசியல் நகர்வுகள் இடம்பெற்றுள்ளன என ஆய்வாளர்கள் கணிப்பராயுள்ளனர்.
ஏனெனில், இந்நகர்வுகள் அனைத்தும், இன்று, பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதாக இல்லை என்ற விடயம் ஏற்கனவே நிரூபணமான ஒன்றே. உதாரணமாக ரணில் தனது பதவியேற்பின் போது கூறிய ஐந்து பில்லியன் டொலர் கடனுதவி இலங்கைக்கு இன்னும் வந்து சேர்வதாக இல்லை. வரப்போவதற்கான நிகழ்தகவுகளும் இல்லை எனலாம். அதுபோலவே எரிபொருள் அல்லது எரிவாயு அல்லது உணவுகளின் பற்றாக்குறை - இவை அனைத்தும் தரப்பட்ட வாக்குறுதியின் பிரகாரம் நிறைவேற்றப்பட்டதாகவும் இல்லை. அதாவது நாட்டின் ஆதிக்கசக்திகள், கடனுக்காக தெண்டிக்கும், அதேவேளை, இவ் இடைக்காலத்தில், அவை, மக்களின் எதிர்ப்பலைகளை நிர்மூலமாக்க வேண்டிய தேவைகளையும் அவை எதிர்நோக்குவதாக, விடயங்கள் இன்று சான்று பகிர்வதாய் உள்ளன. இருந்தும் எதிர்ப்பலைகளை நிர்மூலமாக்குவது, என்பது ஓர் பன்முகம் கொண்ட வேலைத்திட்டமாகின்றது.

புத்திஜீவிகளின் மட்டத்தில்:

எதிர்ப்பலைகளுக்கு ஒரு பொருளாதார கொள்கை என்பதே இல்லை என்பதும், நாடு தற்போது முகங்கொடுக்கும் நெருக்கடியில் இருந்து அதனை மீட்டெடுக்க அவ் எதிர்ப்பலையாளர்களிடம் ஒரு மாற்று திட்டமோ அன்றி பொருளாதார கொள்கையோ இல்லை எனவும் குறித்த புத்திஜீவி மட்டங்களில் வாதிடப்படுகின்றது. எதிர்ப்பலைகள் ஒருபோதும் சர்வதேச கடன் பெறுகைகளை உறுதி செய்யப் போவதில்லை என்றும், உண்மையில் எதிர்ப்பலை சக்திகளுக்கு இலங்கையின் தற்போதைய நிலவரம் கூட சரிவர தெரியாத ஒன்றே எனவும் தர்க்கிக்கப்படுகின்றது.

உதாரணமாக இலங்கையை சேர்ந்தவரும் தற்போது கலிபோர்னியாவில் வசிப்பவருமான புத்திஜீவியான, அசோகா பண்டாரகே அவர்கள் மேற்படி வாதங்களை வலிமையுற முன்வைப்பார். (11.05.2022: ஏசியா டைம்ஸ்).

அவரது கூற்றுக்களின் சாராம்சம்:

“கோட்டா கோ” எதிர்ப்பலையானது, வெளிநாட்டு வங்கிகளையும் பிணைமுறிகளின், தற்போதைய சொந்தக்காரர்களையும், கெஞ்சுவதாக எதிர்பலைகளின் அரசியல் வடிவமைக்கப்பட வேண்டும் என்பதே அவர் கூறவரும் வாதங்களின் சாரமாகின்றது. ஆனால் IMF கடன்களை ரத்துசெய்வதில் முன்னின்ற ஈக்குவடோர் முனைப்புடன் இவ்வழியில் செயலாற்றியது என்றால், அதற்குரிய காரணம், ஈக்குவடோரில் புதிதாக பதவிக்கு வந்த அரசு, இடதுசாரி அரசு என்பதேயாகும். இவ் இடதுசாரி அரசுக்கு உற்ற துணையாக திகழ்ந்தது வெனிசுலாவின் இடதுசாரி அரசே என்பதனையும் ஆய்வாளர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்ட தவறவில்லை.

இத்தகைய ஒரு பின்னணியிலேயே, இலங்கை ஒரு புதிய அரசியல் கொள்கையை தொடக்க வேண்டுமாயின் (பொருளாதார கொள்கை முதல், வெளிநாட்டு அணுகுமுறை வரை) அதற்குரிய முன் நிபந்தனைகளில் ஒன்று ஆட்சி மாற்றமே என்பதனை இவ் இடதுசாரி விமர்சகர்கள் சுட்டிக்காட்ட முன்வந்துள்ளனர்.

இது மேற்படி கலிபோர்னியா புத்திஜீவி முன்வைக்கும் தர்க்கத்துக்கு நேரெதிரான தர்க்கமாய் அமைந்து விடுகின்றது. சுருக்கமாய் சொன்னால் இலங்கையின் நெருக்கடியை தீர்ப்பது எப்படி என்ற கேள்விக்கு இருவேறு பார்வைகளும், இருவேறு அரசியல்களும் பதிலாக முன்வைக்கப்பட்டுள்ளன. இது புத்திஜீவிகள் மட்டத்தில், வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுவது போலவே, இலங்கையின் நெருக்கடி தொடர்பில் “செயற்கையாய்” கட்டமைத்து நிறுத்தப்படும் பல்வேறு கருத்து நிலை ஏற்பாடுகளும் கூட எமது வாதப்பிரதிவாதங்களுக்கு உரித்தானவையே.

கட்டமைக்கப்படும் கருத்து நிலைகள்:

காலி முகத்திடலின் எதிர்ப்பலைகளை ஒடுக்குவதில் ஜனாதிபதியோ அல்லது பாதுகாப்பு செயலாளரோ பங்கேற்றார் இல்லை - இது அவர்கள் அறியாமல் நடந்த ஒரு விவகாரம் என்பதற்கான வாதம் இன்று மும்முரமாய் இலங்கையில் கட்டமைக்கப்படுகின்றது என்ற உண்மையை, இன்று, சர்வதேச ஆய்வாளர்கள், பல்வேறு தளங்களில் சுட்டிக்காட்டியே உள்ளனர். இது கிட்டத்தட்ட எமது மத்திய வங்கியின் ஆளுனர், கப்ரால் அவர்கள் இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் மூலகாரணம் கொரோனா பெருந்தொற்றுதான் என்று அறுதியிட்டு, முழு பூசணியை சோற்றில் அமுக்கி, மக்களை திசை திருப்ப முற்பட்ட செயலுக்கு ஒப்பானதுதான் என்பதனையும் இன்று பலரும் விளக்கியே உள்ளனர். (எரிக் சொல்ஹேமும் கப்ராலை போன்றே, அண்மைய ஓர் பேட்டியில் கொரோனாவையே இலங்கையின் பின்னடைவுக்கு காரணமாக இனங்காண்பது - இவர்களின் உள்நோக்கங்களையும் இவர்களது அரசியலையும் காட்டுவதாயுள்ளது). ஆனால், இதற்கு மாறாக, பாராளமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் போன்றவர்கள் காலிமுகத்திடல் குறித்து இன்னமுமே ஒரு பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்படவில்லை என்பது முதல் உயர் மட்டங்களின் பங்கேற்பு எந்தளவில் இருந்தது என்பதனையும் வலியுறுத்தி கூறவும் தவறவில்லை. (16.05.2022––Daily Mirror: 16.05.2022–தினக்குரல்).

ஆனால் இவற்றையெல்லாம் மிஞ்சும் வாதம் எமது புலம்பெயர் அரசியலின் ஒரு சாராரால் முன்னிறுத்தப்படுகின்றது. அவர்களின் கருத்துப்படி அமெரிக்க புலனாய்வு துறை, இலங்கை பாதுகாப்பு துறையை செயலிழக்க செய்வதற்கூடு காலி முகத்திடலின் மீதான தாக்குதலை சாத்தியப்படுத்தியது என்பதனை இவர்கள் முன்வைத்துள்ளனர். (தமிழ்வின்-ஊடறுப்பு). இதற்கூடாக, மேன்மைமிகு ஜனாதிபதி அவர்களால், தாக்குதல்களை, நிறுத்த முடியாமல் போனது என்பதே இவர்கள் முன்வைக்கும் வாதமாகின்றது.

இருந்தும் இந்நகைச்சுவை துணுக்கு, வழமைபோல், ஆழ்ந்த அரசியல் உள்நோக்கங்களை கொண்டது என ஆய்வாளர்கள் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர். இவற்றையெல்லாம் தொகுத்து சுருக்கமாக கூறுவதெனில், காலி முகத்திடல் மக்களின் மீதான தாக்குதல்கள், இன்று பல மட்டங்களில் வௌ;வேறு விதமாய் பொருள்கோடல் செய்யப்பட்டும், நியாயப்படுத்தப்பட்டும், சில மட்டங்களில் காப்பாற்றப்பட்டும் வருவது அத்தகைய நியதியாகின்றது. ஆனால், இத்தகைய நியாயப்பாடுகள், தாக்குதல்களை மேலும் தொடர வழி அமைத்து தருகின்றன என்பதிலேயே இவற்றின் அபாயங்கள் தொக்கி நிற்கின்றன.

இவ்வகையில், எண்ணற்ற முறைப்பாடுகள் பாராளமன்ற உறுப்பினர்களால் எதிர்ப்பலைகளுக்கு எதிராக பொலீசில் பதியப்பட்டுள்ளன என்பதும், இவ் உறுப்பினர்களில் சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளனர் என்பதும், வீடுகளில் இருந்து துப்பாக்கியும்(துமிந்த வீட்டில்) தங்க ஆபரணங்களும் (சேமசிங்க வீட்டில்) காணாமல் போய் உள்ளது என்ற முறைப்பாடுகளும் ஒருபுறம் ஆற்றப்படுகையில், தாக்குதலை தொடர்ந்த வன்முறைகள், முன் கூட்டியே ட்ரோன் கமராக்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் அரங்கேறின என்றும் செய்திகள் மறுபுறமாய் வெளியாகின. (22.05.2022).

இவை அனைத்துமே, எதிர்கால எதிர்ப்பலைகளை நிர்மூலமாக்கும் நிகழ்ச்சி நிரலின் ஒரு அம்சம்தான் என்பதனையே இடதுசாரி அரசியல் ஆய்வாளர்கள் வலியுறுத்துவதாயுள்ளனர். அவர்களது கூற்றின் பிரகாரம், இவை நாணயத்தின் ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் எதிர்ப்பலைகள் அனைத்தையும் நசித்த பின்னர், ஓர் எதேச்சதிகாரம் கட்டி எழுப்பப்படும் சாத்தியக்கூற்றை இவை திறந்து விடுகின்றதா என்பதேயாகும்.

இருவிதமான நெருக்கடிகள்:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுவது போல இன்றைய இலங்கையின் நெருக்கடி இருவிதமானதாகின்றது. ஒன்று பொருளாதார நெருக்கடி. மற்றையது அரசியல் நெருக்கடி. மே 9, காலிமுகத்திடல் தாக்குதலின் பின்னர் இலங்கையில் சூல் கொண்ட அரசியல் நெருக்கடிகளை, இன நெருக்கடிகளாக திசைதிருப்பும் ஒரு செயற்திட்டம் வெளிப்படையாகவே இறக்கிவிடப்பட முயலப்பட்டது. உதாரணமாக, நீர் கொழும்பில் வாகனங்களுக்கும் சொத்துக்களுக்கும், தீவைத்து, எரியூட்டி, இன முரணை அவிழ்த்துவிட்டு, மக்கள் எதிர்ப்பலைகளை இன எதிர்ப்பலைகளாக திசைதிருப்பும் வேலைத்திட்டமானது, சம்பவ இடத்திற்கு, விரைந்து விஜயம் செய்த கிறிஸ்தவ-முஸ்லீம் மதகுருக்களால், நடைமுறைப்படுத்த முடியாமல் தவிர்க்கப்பட்டது.

இதுபோலவே அண்மையில் இளம் பௌத்த குருக்கள் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்வுகளும் காலிமுகத்திடலில் இடம்பெற்று ஊடகங்களின் பெருத்த அவதானிப்பை பெறுவதாய் இருந்தது. (19.05.2022). இம்மக்களின் ஒற்றுமை, மாறிய ஓர் இலங்கை யதார்த்தத்தை சுட்டுவதாக இருந்தது. இருந்தும், சக்கரத்தை பின்நோக்கி சுழற்றும் எத்தனிப்புகள், நின்றதாயில்லை.

இனமுரண்களை ஊக்குவிப்பதற்கான நடைமுறைகள் பெருந்தேசியவாத அடித்தளங்களில் இருந்து மாத்திரம் கட்டியெழுப்படாமல், குறுந்தேசியவாத அடிப்படைகளில் இருந்தும் கட்டி எழுப்பப்படல் பொதுவானதாகின்றது. உதாரணமாக மனோகணேசன் அவர்கள் தற்போதைய நாட்டின் பின்னடைவுக்கான காரணம் தேரர்களே என்ற ஒரு அரிய அரசியல் கண்டுப்பிடிப்பை இன்று முன்வைத்துள்ளார். இதற்கூடு, இவர், எதனை சாதிக்க முற்படுகின்றார் என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்களும் ஆய்வாளர்களும் இன்று கேட்க தவறவில்லை. கடந்த 20 வருட காலங்களில் திரு.மனோகணேசன் அவர்களின் அரசியல், பல்வேறு விமர்சகர்களால் தொடர்ச்சியாக நுணுகி நோக்கப்பட்டு, கேள்விக்குட்படுத்தப்பட்டே வந்துள்ளது – எமது வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவினது போன்று.

இது போலவே, எமது பாராளுமன்ற ராதாகிருஸ்ணன் அவர்களும், தமது டாக்டர் பட்டத்தை புலம்பெயர் அணுசரனையில் பெற்றதில் இருந்து, அதிரடி கூற்றுக்களை ஆற்றுவதை தன் வழமையாக கொண்டுள்ளார் என்பதும் அவதானிக்கத்தக்கதே. இவை அனைத்தும், எதிர்ப்பலைகள் தொடர்பில் சிறுபான்மை தலைமைகளின் முன்னெடுப்புகள் எவ்வாறு இயங்க முற்படுகின்றன என்ற இன்றைய நிலவரங்களை சுட்டும் விடயங்களாகின்றன.

IMF இன் கடன் வசதி:
இத்தகைய ஓர் சூழ்நிலையிலேயே, நடந்து முடிந்த, எதிர்ப்பலைகள் தொடர்பில் பல்வேறு விதமான கூற்றுகளும் ஆற்றப்படுவதாயிருக்கின்றன. அண்மையில், “நடந்தது முன்னோட்டம் மாத்திரமே. திரைப்படம் இனிதான் ஓடும்” என்ற அதிரடி கூற்றை அமைச்சர் டலஸ் அழகபெரும அவர்கள் ஆற்றி இருக்க கண்டோம். (20.05.2022: தினக்குரல்)

அலரிமாளிகையின் வாயிற்கதவை இடித்த இளைஞர் குழாம் முதல், ராஜபக்~ சிலைகளை இழுத்து கவிழ்த்தல் வரையிலான சித்திரங்கள் வரலாற்று சித்திரங்களாயிருப்பினும் “நடந்து முடிந்தது, முன்னோட்டம் மாத்திரமே” என்ற கூற்று வரலாற்றை கவனம் கொண்டு, (மீள) பார்க்க வைப்பதாகவே உள்ளது. இப்பின்னணியிலேயே IMF இன் கடன் வசதியும் நிராகரிக்கப்பட்டுள்ளது என்ற “இன்றைய” உண்மையும் கவனத்தில் கொள்ளத்தக்கது. அதாவது ரூபாயின் மதிப்பிறக்கம், பண அச்சிடல், எரிபொருள்கள் -எரிவாயு – உணவு இவற்றின் விலை ஏற்றம், சலுகைகளை வெட்டி அகற்றல், மக்கள் மேல் இது போன்ற எண்ணற்ற சுமைகளை ஏற்றுதல் - இவை அனைத்தையும் செய்த பின்னரும் - IMFஇன் எதிர்ப்பார்த்த கடன் வந்து சேரவில்லை என்றால், IMF எதிர்ப்பார்ப்பதுதான் என்ன? ஓர் அரசியல் சூழலா? என்ற கேள்வியை இன்று சர்வதேச ஆய்வாளர்கள் கேட்கத் தொடங்கி உள்ளனர்.

இப்பின்னணியிலேயே, பாகிஸ்தானின் நிலவரத்தை முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தூக்கி பிடிப்பது, ஒப்பிடத்தக்கதாகவும் இருக்கின்றது. பாகிஸ்தான் பிரதமர், திட்டமிட்ட ரீதியில், தன் பதவி காலத்துக்கு முன்னதாகவே பதவியில் இருந்து “தூக்கப்பட்ட சம்பவம்” அறிந்த ஒன்றே. இதற்கு ஓர் ராணுவ பின்னணியும், ஓர் வல்லரசு பின்னணியும் ஓர் IMF பின்னணியும் உண்டென அவர் இன்று புரியும் வாதம் சர்வதேச மட்டங்களில், கணக்கில் எடுபடாமலும் இல்லை.

IMFஇன் நிபந்தனைகளை இம்ரான் கான் நிராகரித்தார் என்பது ஒரு புறம் இருக்க, இம்ரான் கானின் வெளிநாட்டுக் கொள்கை மேற்குலக நாடுகளின் நலன்களுக்கு தோதாக அமையவில்லை – என்பதும், அவரது அண்மித்த ரசிய பயணம் எவ்வாறு நோக்கப்பட்டது - என்பதுவும் ஆய்வாளர்களின் கேள்விகள் ஆகின. இருந்தும், இம்ரான்கான் அகற்றப்பட்டதும், படாததுமாய், IMF, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்தது. நடத்தியும் முடித்தது. அதாவது, இம்ரான் கானின் பதவி அகற்றலுக்கு, காத்திருந்தது போலத்தான், விடயங்களின் நகர்வுகள் இடம்பெற்றதாய் இருந்தன.

IMF, பாகிஸ்தானின், புது அரசுடன், கட்டாரில் தன் பேச்சுவார்த்தை சுற்றுக்களை, குறைந்தபட்சம், 3 பில்லியன் டொலருக்காக, முன்னெடுத்தது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். (18-25 மே, 2022). இதில், முக்கியமானது, 2019 இலேயே, IMF, பாகிஸ்தானுக்கு, 6 பில்லியன் டொலர் கடனை தருவதாக ஒப்புக்கொண்டு, இம்ரான் கான் அரசுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டிருந்தது என்ற உண்மையாகும்.
ஆனால் இதில் சரிபாதியான, 3 பில்லியன் டொலரே, பாகிஸ்தானுக்கு கிட்டியது. மிகுதி, பாகிஸ்தான் அரசு (இம்ரான் கானினது அரசு) நிபந்தனைகளை அமுல்படுத்த தவறியது, (சலுகைகளை வெட்ட மறுத்தது, வரிகளை கூட்ட மறுத்தது போன்றவை) என்ற “IMF காரணங்களின்” அடிப்படையில் கொடுபடாமல் நிராகரிக்கப்பட்டதானது.

தற்போது, 36 -37 பில்லியன் கடன் சுமை பாகிஸ்தானுக்கு, உண்டு. இச்சூழலில், இம்ரான் கான் அரசு, பதவி நீக்கம் செய்யப்பட்டு விட்ட ஒரு பின்னணியில் பாகிஸ்தானின் புதிய அரசு, IMFஇன் நிபந்தனைகளான, பாகிஸ்தானின் ரூபாய் பெறுமதியை குறைத்தது முதல் (மே மாதத்தில் 7 வீதமாக உயர்ந்தது) எரிபொருள் விலை உட்பட அனைத்து விலைகளையும் உயர்த்துதல், மக்கள் சலுகைகளை வெட்டி விடல் - இறுதியில் அச்சடிக்கும் இயந்திரத்தையும் கொணர்ந்து நிறுத்துதல் - இவை அனைத்தையும் சிரம் மேல் கொண்டு செய்து முடித்து விட்டது. அதாவது, இம்ரான் கான் அரசு அகற்றப்பட்டு, பேச்சுவார்த்தைக்கு சாதகமாக இருக்க கூடிய ஓர் புதிய அரசினை பதவியில் ஏற்றல் என்பது, IMFக்கு சாதகமானதே என்பது, இம்ரான் கானின், தற்போதைய குற்றச்சாட்டுகளில் ஒன்றாகின்றது. இது போலவே, இலங்கையில், இன்று ரணில் விக்கிரமசிங்க அவர்களும் பதவி ஏற்றப்பட்டுள்ளார். இருந்தும், பாகிஸ்தானின் புதிய அரசை போல், இவரும் பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதாக இல்லை. IMF கரங்களில் இருந்து நிதி வருவதாகவும் இல்லை. வர விடுவதாகவும் இல்லை. இருந்தும் பாகிஸ்தான் போலவே, அல்லது அதனையும் விஞ்சி, IMFஇன் நேரடி அல்லது மறைமுக நிபந்தனைகள் அனைத்தையும் ரணிலின் புதிய அரசு செவ்வன நிறைவேற்றியே உள்ளது - இன்றும் நிறைவேற்றி வருகின்றது எனலாம்.

இத்தகைய ஓர் சூழலில், IMF நிபந்தனைகளை அமுல்படுத்துவதும் கோட்டாபாய அரசை காப்பதுமே தான் ரணிலின் இரு கடமைகளா, எனும் கேள்வி மேலெழவே செய்கின்றது. மறுபுறத்தில், விஜித ஹேரத்தின் கூற்றுப்படி, 2000க்கு மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் இன்று கைது செய்யப்படுவதாயும் உளது. ஆனால் இதனுடன் ஒப்பிடும் போது காலி முகத்திடல் மக்களை, கொடூரமாக தாக்கியவர்கள், யார் யார் என தெரிந்தும், இன்னுமேன் அவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை என ஹேரத் கூறுகின்றார்.

இதில் உண்மை இருக்குமாயின், இலங்கை திட்டம், ‘A’யை நோக்கி மீள நகர்கின்றதா என்பதே கேள்வியாகின்றது. இந்நகர்வுக்கு, உக்கிரமடையும் பொருளியல் நெருக்கடி மேலும் வலுசேர்த்து கைக்கொடுக்கின்றதா என்பதுவும் கேள்வியாகின்றது. அதேவேளை, இதனாலா IMF தன் நிதியை தாமதப்படுத்துகின்றது? இப்பின்னணியில் IMF உடன் இடம்பெறும் பல சுற்று பேச்சுவார்த்தைகளின் நோக்கமும் இலக்கும் என்ன? (இவை அமெரிக்காவிலும் பின்னர் இலங்கையிலும் நாட்கள் நாட்களாய் நடந்து முடிந்திருந்தாலும்!), இன்று மேற்கொள்ளப்படும் கைதுகள் எதிர்ப்பலையை நிர்மூலமாக்குவதின் ஓர் அங்கமா – போன்ற ‘இலங்கையின்’ கேள்விகள் கிட்டத்தட்ட, இம்ரான் கானின் பின்னரான, இன்றைய ‘பாகிஸ்தானின்’ கேள்விகளாய் இருப்பது, சர்வதேச நிலவரங்களை, கவனத்துடன் எம்மை மீள் தூக்கி பார்க்க வைக்கின்றது. இச்சூழ்நிலையிலேயே, ரணிலை காட்சி பொருளாக வைத்து, ஏற்படுத்தப்படும் பொருளாதார நெருக்கடியும், அரசியல் நெருக்கடியும், தம் வழியே நகர்ந்து, நகர்ந்து, குறித்த ஓர் தளத்துக்கான வெளியை திறந்து விடுவதாய் இருக்கின்றது என வாதிடப்படுகின்றது. கேள்வி: யாதிந்த தளம் என்பதேயாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.