4

இதே போன்று, கிளிம், மாஸ்கோவை விட்டகன்று, மாகாணத்தில் குடியேறிய பின் சந்திக்க நேரும் பாத்திரங்களில், மற்றுமொரு முக்கிய பாத்திரம் - வெலண்டைன். அதி அற்புதமான சித்திரிப்பு எனலாம். கலைந்த தலை, அலங்கோலமான உடை, உடல் முழுவதும் தூசி, தும்பு, புறாக்களின் எச்சங்கள் - முகம் வேறு பூசணியைப் போல் - கண்களும் பாவமற்று வெறும் கண்ணாடித் துண்டுகளை போல்… “உங்களுக்கு மலர்கள் பிடிக்குமா… ஓ… இங்கே, சுடுகாட்டில் இருக்குமே, அவ்வளவு நிரம்ப மலர்கள்…– கிளிம்மிடம், கூறிக் கொண்டிருப்பான் வெலண்டைன்.

“விடயத்தை பாருங்கள்… என் மனைவி ஓடி விட்டாள், என்னை விட்டு… புறாக்கள் தான் காரணம்… நான் என்ன செய்ய…”

“அவள் ஏதோ ஒரு ஜிம்னேசியத்தில் படித்தவள்தான்… தெரியாதா… இளம், பதின்வயது நங்கைகளை…ஏராளமான காதல் காவியங்களை படித்துக் குவித்திருப்பாள் போலும் - நண்பிகளுடன். எனது பெயரோ,  ‘வெலண்டைன்’.  இது போதாதா – அவள் தன் கற்பனைக் குதிரையை தட்டி விட. அதாவது, என்னை அவள் காதலித்திருக்க மாட்டாள்… என் பெயரைத்தான் காதலித்திருப்பாள் - ஆனால், பாருங்கள், ‘வெலண்டைன்’ என்ற காந்தர்வ பெயருக்கும் எனக்கும் உள்ள ஒட்டுறவை… அட கடவுளே…”

இப்படியாய் கிளிம்முடன் ஏனோ அவன் மனம் விட்டு பேசத் தொடங்குகிறான் - தனித்து இருப்பதால் போலும்!. பின் அவன், தான் புறாக்கள் வளர்ப்பது ஏன் என்பதையும் மிக கிரமமாக கிளிம்முக்கு எடுத்துரைக்கின்றான்.

“பாருங்கள்… நான், ஒரு அசடு… முட்டாள்… கற்பனை செய்யுங்கள்… தெளிவான நீல வானம்… அதன் கீழே நான்…என் புறாக்களை மேலே பறக்க விடுகிறேன்… அவை வட்டமடித்து வட்டமடித்து உயர, உயர வானில் படிப்படியாக பறந்து ஏறுகின்றன… மேலே… மேலே… அவற்றுடன் என் பாவப்பட்ட ஆத்மாவும் கூடவே சிறகடித்துப் பறக்கின்றது, அவற்றை தொடர்ந்து… விளங்குகிறதா… என் ஆன்மா… இங்கேத்தான் அந்தப் புள்ளி – அதாவது… என் இதயத்தை வெடிக்க செய்யும், அப்புள்ளி… மயக்கம் கூட வந்துவிடும்…அப்போது ஒரு வகை அச்சம் வேறு எழுகிறது… அவை வராவிட்டால்…திரும்பாவிட்டால்”

“ஆனால், உண்மையில், அவை திரும்பக் கூடாது – திரும்பவே கூடாது என உங்கள் உள் மனம் கூவுகின்றது…”

கிளிம்முக்கு, இப்போது அவனில் ஓரளவு அனுதாபம் சுரந்து விடுகின்றது. தொடர்கின்றான், வெலண்டைன்: “அந்த தருணம் மகத்தானது…மதிப்பார்ந்தது…யாருடனும், யாரையும் தொந்தரவு செய்வதில்லை… யாரையும் துணைக்கு அழைப்பதும் இல்லை… அனைத்துச் சிறுமைகளும், கேடு கெட்ட இழிவுகளும் நாசமாய்ப் போய் ஒழியட்டும்… வாருங்கள், தயவு செய்து மதுவைப் பருகுவோம்…”

-கிளிம் தனக்குள் நகைத்துக் கொள்வான்: “ஓ…ஒரு அசட்டுத்தனம் கூட…தன் கவித்துவம் பீறிடும் புள்ளியை, தன் பரவச தரிசனத்தை எட்டிவிடும் தருணம் இதுவோ…போதும்…”- கிளம் நகைப்புடன் எண்ணிக் கொள்வான், தனக்குள்ளாக.

வெலண்டைன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் கூறுவான் கிளிம்மிடம்: “என் மனைவிக்கும் எனக்குமிடையிலான முறுகலுக்கே காரணம் புறாத்தான்… அவை, அவளது தன்மானத்தை தொட்டுவிட்டன… கோழிகளோடு, அவள் ஒரு வகையில் சமாதானம் செய்து கொண்டிருப்பாள்…ஆனால், பாருங்கள், இவை புறாக்கள்…”

" இருக்கலாம்…இருந்தும் அவள் ஏன் ஒரு கோழியை அல்லது ஒரு மாட்டை அல்லது ஒரு நாயை கூட வளர்ப்பதில் ஈடுபாடு காட்டியிருக்கக் கூடாது? நான் எனக்காக ஒரு புறாவை கண்டுப்பிடித்து பாடிக் கொள்ளவில்லையா? நான் பாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த பாடலை நான் கண்டுப்பிடித்துக் கொள்ளவில்லையா? சரி.. வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன? அவனவனுக்கு உரிய பாடலை அவனவன் கண்டுப்பிடித்து, தன் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து பாடுதல் தானே வாழ்வின் சாரம்…”]

கிளிம்மில், இப்போது அவனில் ஒரு சிறு ஆர்வம் கூட கொப்புளிக்க தொடங்குகிறது. அசடனாய் இருந்த இவனா, என்பதுப் போல் சற்றே கவனத்தைச் செலுத்தி மேலும் அவதானத்தோடு கேட்க முனைகின்றான், கிளிம். அப்பொழுதே அச்சம்பவம் நிகழ்கின்றது.

“பாருங்கள்… நான் சிறுவனாய் இருந்த போது, எனது தாயாரும், எனது ஞான தந்தையும், என்னிடம் அதி விN~ட அம்சங்கள் இருந்ததாக நினைத்துக் கொண்டார்கள்… ஆனால் என்னிடம் அப்படி எந்த ஒரு அபூர்வமும் இருக்கவில்லை… ஆச்சர்யமும் இருக்கவில்லை… எனவே நான் அந்த அபூர்வங்களை எனக்குள்ளாக கண்டுப்பிடிக்கத் தொடங்கினேன். அதாவது வாய்க்கு வந்தபடி, மூளைக்கு ஏற்றபடி “பொய்களைத்” திரிக்கத் தொடங்கினேன். இப்போது கிளிம் ஆச்சரியம் அடைகின்றான். இது கிட்டத்தட்ட அவனது பால்ய கதையை போல அல்லவா இருக்கின்றது என்பதை உணர்கிறான். கிளிம் சிறுவனாய் இருந்த போது, அவன் தந்தை உட்பட அவனை சூழ்ந்த பெரியவர்கள், அனைவரும் அவனை ‘வித்தியாசமாகவும்’, ‘மூலச்சிறப்புள்ள’, ‘சிந்தனை உள்ள’ சிறுவனாகவும் கொண்டாட முனைந்ததையும் அவன் நினைவு கூர்கின்றான்.

இந்த ‘அசடன்’ கதையும், என்னுடையதை போலானதா? சீச்சீ…கேவலம்…இவனா…இவனதா… இந்த அட்டுப்பிடித்தவன்…? என்னைப் போலவா…? இப்போது கிளிம்மின் உள் மனதில் சற்றே அவமானத்தின் சாயல் படியத் தொடங்குகின்றது. இவன், இந்த அசடு, இப்படி தலைவிரிகோலமாய் திரிபவன், எனக்கு சமமானவனா?

சம்பாஷனை இப்போது அரசியலை நோக்கி எகிறி பாயத் தொடங்குகின்றது: “உங்களுக்கு ஓர் அரசியலமைப்பு அல்லது புரட்சி, அல்லது ஏதோ ஒரு சீர்குலைவு தேவையுறுகிறது… ஆனால் எனக்கு அத்தகைய எந்த ஒரு தேவையும் இருப்பதாய் இல்லை. எனக்கு வேண்டாம். அவை அனைத்தும் - இவை எதுவுமே, எனக்கு வேண்டாம்…மற்றது… எனக்கு ஏன் வேண்டாம் என்கிறேன் என்பது குறித்தும் எந்த ஒரு பிரச்சாரத்தையும் நான் மேற்கொள்ளப் போவதுமில்லை… யாருக்கும் வகுப்பு நடத்த போவதும் இல்லை… என்னை விட்டு விடுங்கள்… என் பாட்டுக்கு… எனக்கு ஒன்றுமே வேண்டாம்… தொழிலாளர்களுக்கு புரட்சி வேண்டும் என கூவுகின்றார்கள்…இருக்கலாம்…ஒரு வேளை அது அவர்களுக்கு தேவைப்பட்ட, தேவையான, ஏன் அவசியமான ஒன்றாகக் கூட இருக்கலாம்… தேவையானதா… நல்லது…செய்து கொள்ளுங்கள்… ஆனால் என்னை விட்டு விடுங்கள் என் புறாக்களோடு… நான் ஒரு செவிட்டூமையாக இருந்துவிட்டுப் போகிறேனே… பரவாயில்லை…”

இப்போதே கிளிம்மிடம் ஒருவித மாறுதல் ஏற்படுகின்றது. மெல்ல அவனில் ஏதோ ஒரு கோபம் எட்டிப் பார்த்து, வேர் கொண்டு, வளர முற்படுகின்றது… பெருக்கெடுக்கின்றது… பிரவாகம் கொள்கின்றது… இப்போதே அவனை முற்றும் முழுதாய் கிளிம் புரிந்து கொள்ளத் தலைப்படுகின்றான்.

“விலங்கு… ஆஹா… ஒரு வெறுக்கத்தக்க விலங்கு இது” என கிளிம் அவனை வரையறை செய்கிறான்.

யாருக்குமே அபாயம் அற்ற, தான் உண்டு – தன் புறாக்கள் உண்டு என்று வாழ முற்படும் இத்தலைவிரி கோலத்து, மனிதன், புறாக்களோடு சேர்ந்து தன் ஆன்மாவை இணைத்து அனுப்பி, தன் பாடலை,தன் பாட்டில் பாடிக் கொண்டு திரிய முற்படும் இவன் - இவனிடம் கிளிம் இப்படி ஒரு வெறுப்பு கொள்ள என்ன காரணம்? காரணம் என்ன? உண்மைத்தான். வாசகனை குடைந்தெடுக்க கூடிய இக்கேள்வியை கார்க்கி, வாசகனிடமே விட்டு விட்டு நகர்கின்றார். ஆனால் ஒரு வழியில் பார்த்தால் இந்த கோபம், இந்த முரண் - அனைத்துமே நாம் ஏதோ ஒரு வழியில் ஏற்கனவே தரிசித்த ஒன்றாகத்தான் இருக்கின்றது. உதாரணமாக, தமிழ் இலக்கிய பரப்பினை எடுத்துக் கொண்டால், ஜெயமோகனின் ஜீ.நாகராஜ் மேலான கோபம் மேற்படி சித்திரத்தைதான் எமக்கு சடுதியாக நினைவூட்டுகிறது எனலாம். நாகராஜன் குறித்த ஜெயமோகனின் கூற்று பின்வருமாறு இருக்கின்றது:

ஜெய மோகனின் கேள்வி: “இவன் யார்? நடுத்தர வரக்கத்தை சேர்ந்தவன். இந்த வர்க்கத்திற்கு இந்த சமூகம் வழங்கியுள்ள அங்கீகாரத்தையும் பாதுகாப்பையும் அனுபவித்து வளர்ந்தவன். அதன் நிழலில் வாழ்பவன்” (பக்கம் 62 – நவீனத்துவத்தின் முகங்கள் - ஜெயமோகன்)

நாகராஜை நோக்கி ஜெயமோகன் வீசி எறியும் இக்கணைகள் அக்னியில் தோய்த்தெடுத்து எய்த அம்புகள் போலிருக்கின்றன.

“ஏன் இந்த கோபம்? இந்த கோபத்தின் சாரம் என்ன? இவ்வளவையும் உனக்கு செய்து தந்த ஓர் அமைப்பை - அதன் தேவைப்பாட்டை, அதன் நிலைபேற்றை புறந்தள்ளி – உன் அரசியல் நிலைப்பாட்டை – உன் கடைமையை மறந்து – வாழாவிருக்க பார்க்கின்றாயா?...மூடனே, என்பதுப்போல்” தர்க்கிக்கின்றது, இந்த கோபம். இதே போன்றுதான் மகாபாரதத்தில், அருச்சுனன் கதையும் வந்து போகின்றது… சாடைமாடையாக… கொல்லமாட்டானாம்…!கோபம் வராதா என்ன? (கிளிம்;முக்கு வந்தாற் போல்).

மீண்டும் வருவோம்.

ஜெய மோகனின் கேள்வி: “இவன் யார்? நடுத்தர வரக்கத்தை சேர்ந்தவன். இந்த வர்க்கத்திற்கு இந்த சமூகம் வழங்கியுள்ள அங்கீகாரத்தையும் பாதுகாப்பையும் அனுபவித்து வளர்ந்தவன். அதன் நிழலில் வாழ்பவன்”

தலையாய குற்றச்சாட்டு: நாகராஜ் ஒரு போகியாகத் திரிந்தவன். தன் வசதி, வாய்ப்புகளால், அந்த மக்களை சுரண்டியவன். இக்குறித்த குற்ற உணர்விலிருந்து தப்பவே நாகராஜ் இதுபோன்ற (குறத்தி முடுக்கு) கதைகளை எழுதுகிறான். இவர்கள் பெற எண்ணும் இவ்விடுபாடு (சுதந்திரம்) இக்குறித்த குற்ற உணர்வில் இருந்து விடுபடும் சுதந்திரமே, அன்றி வேறொன்றும் இல்லை என்பதே ஜெயமோகனின் விளக்கப்பாடு.

மேலும் கூறுவார்: “அவர்களைச் சுரண்டுவதற்காக ஆழமான குற்ற உணர்வை, சுய வெறுப்பை அவன் (நாகராஜன்) அடைந்தாக வேண்டும்”.

மனித சுரண்டலுக்கெதிரான இக்கோபம்,எந்த ஓர் ஆர்.எஸ்.எஸ் என்ற அடித்தளத்தில் இருந்தும் எழலாம். அல்லது வேறு எந்த வேர்களில் இருந்தும் எழலாம் - அல்லது எழுவது போல் “தோற்றமும்” காட்டலாம், என்பதுவும் மனங்கொள்ளத்தக்கதே.

கேள்வி: ஜெயமோகனின் மேற்படி கோபமானது, யாது, என்ன, எவ்வகை சார்ந்தது என்பதே.

உண்மையில், ஜெயமோகனின் பின்னணியையும், அவரது எழுத்தின் குணாம்சத்தையும்,அதன் தருக்கத்தையும் அறிந்தவர்கள், ‘சுரண்டலுக்கு’ எதிரான, இந்த இவரது தார்மீகக் கோபத்தைப், பார்த்து, ஒரு கணம் விக்கித்துத்தான் போவார்கள். ஆனால், சம்பந்தமுறும் சில தரவுகளை, கவனமாக, எடுத்து நோக்கினால், இத்தகைய, கோபத்துக்குரிய உண்மை வேர்கள் வெளிப்படவே செய்யும்.

“இவன் யார்? – கேள்வியின் தலையாய பகுதி இதுவே. ‘யார் அவன்’?

நாகராஜனின் வாழ்க்கை குறிப்பு கூறுகின்றது: “தந்தை கணேச ஐயர்… வக்கீல்… தாய்வழிக் குடும்பம் வசதியானது… கணிதத்தில் நூறு மதிப்பெண்கள் பெற்று சி.வி.ராமனிடம் தங்கப் பதக்கம் பெற்றார்… அதே கல்லூரியில் (மதுரை கல்லூரி) பி.ஏ முதல் வகுப்பில் தேறினார். அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளர்… இத்தியாதி…இத்தியாதி…”

இருந்தும், இதிலே, எமது பரப்புக்குத், தேவையானது: ‘தந்தை கணேச அய்யர்’ என்பதுவே. ஏனெனில் ஜெயமோகனின் கேள்வியும் பதிலும் வருமாறுத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது: ‘இவன் யார்?’– கேள்வி! பின் அவரே ‘தெரிவு’ செய்யும் பதில்: “நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன்…” இதற்கு முன்னால் அவரே, இக்கதை தொடர்பில் கூறியுள்ளார் : “இந்திய விபசார சூழலில் ‘சாதி’ முக்கியமான இடத்தை வகிப்பது…” (பக்கம்:46)
நல்லது. கேள்வி, இந்திய விபசார சூழலில் மாத்திரமா என்பதே. உண்மையை கூறினால், விபசார சூழலில் என்பதை விட, எழுத்தாளர் சூழலில் சாதி, ‘சில வேளைகளில்’, அதைவிட முக்கியமான இடத்தை வகிக்காமல் விட்டதில்லை, என்பது பல நுணுக்கமானவர்களின் அவதானிப்பு.

ஜெயமோகனே தனது கண்டுப்பிடிப்பைக் கூறுவார்: “வெள்ளாள சாதியை சேர்ந்த எழுத்தாளர்களிடம் தன்னிரக்கம் கலந்த சாதி உணர்வு வலுவாக இருக்கிறது. பிற்பட்ட சாதியை சேர்ந்த எழுத்தாளர்களிடம் வெறுப்பும், அச்சமும், சில சமயம் அருவருப்பும் ஊட்டக் கூடிய தீவிரமான சாதி வெறியின் கூறுகள் உள்ளன… பிராமணர்களும் தலித்துகளும் மட்டுமே தங்கள் சாதியை விமர்சித்து எழுதும் திறந்த மனதுடன் செயல்பட்டிருக்கிறார்கள்”. (மேலது:80)  அப்படி என்றால், தமிழ் நாட்டின், பின்புலத்தில், உண்மை, கேள்வியும் பதிலும் வருமாறுத்தான் அமையக்கூடும்: “இவன் யார்?” “பிரமாணன்!” தொடர்ந்தும் கூறலாம்: “இச்சாதிக்கு இச்சமூகம் வழங்கியுள்ள அங்கீகாரத்தையும், பாதுகாப்பையும் அனுபவித்து வளர்ந்தவன்…” இனி, கேள்வியின் உண்மை நிலை இதுதான் என்றால், அதாவது, உண்மைக் கொந்தளிப்பு இதுவாகத்தான் இருக்க முடியும் என்றால் இங்கே எழக்கூடிய ஆட்சேபனைதான் என்ன என்பதே அடுத்த கேள்வியாகின்றது.

‘குறத்தி முடுக்கின்’, ‘கதை’ மிக எளிமையானது. ஓர் 22 வயது இளைஞன், ஒரு இருபது வயது விபசாரியை குறத்தி முடுக்கில் சந்திக்கிறான். ஆரம்பத்தில் உடல் பசிக்காக செல்பவன், நாள் செல்லச் செல்ல அவள் மேல் காதல் வயப்படுகின்றான். ஒரு கட்டத்தில், அவளை மணம் முடிக்கவும் சித்தமாகிறான். அவளுக்காக, அவளது நலனை காப்பதற்காக, அவமானங்களை பொறுத்து, கோர்ட்-பொலீஸ் என்று ஏறி சாட்சி கூறவும் செய்கிறான் - வெறுமனே கை கழுவி விட்டு வந்துவிடாமல். இது ஒர் சரடு. இதுப்போக, சமாந்திரமாய், அவ்வப்போது, குறத்தி முடுக்கின் பெண்கள் நிலை, பிறிதொரு சரடாய், விஸ்தரிக்கப்படுகின்றது. தாய்மைக்காக, குழந்தைக்காக ஏங்கும் ஒரு விலை மாது, - நிறைமாத கர்ப்பிணி – பின், ஒரு வாடிக்கையாளனின் மூர்க்க கையாளுகையின் பிறகு கருச்சிதைவு அடைகிறாள் என்பது முதல் பொலிஸ் அடாவடித்தனத்தால் ஒரு பெண் அவர்களால் மொட்டை அடிக்கப்பட்டு, மனப் பிறழ்வு ஏற்பட்டு, புத்தி சுவாதீன நிலையை எட்டி கண்ணாடியில் முகத்தைப் பார்த்துப் பார்த்து பேதலித்து சிரித்துக் கொண்டிருக்கிறாள் என்பது வரை, கதையில் வந்து போகும் சமாச்சாரங்களாகின்றன. இது புறம் இருக்க, கதையின் ஆரம்பமே, இவ்வமைப்பின் பொய்மையை, இன்னும் கறாராக கூறுவோமானால், இவ் அமைப்பின் - அரசியலின், கேடு கெட்ட போக்கிரித்தனத்தை வெறுமனே தோலுரித்து அம்மணமாக நிறுத்துவதாக அமைந்து விடுகின்றது.

“மெத்தப் படித்தவரும், சிறிது படித்தவரும், படிக்க மட்டும் தெரிந்தவரும் வாசிக்கும் பத்திரிக்கை ஒன்றில், கதைசொல்லி, உத்தியோகம் பார்க்கின்றார். பத்திரிக்கை, ஜம்பர் காணாமல் போனது முதல் கிழவன் - குமரி கல்யாணம், சாவு, வெட்டு, குத்து, இத்தியாதி – என்றெல்லாம் அனைத்தையுமே வெளிவிடுகிறது – சர்வதேச விவகாரம், அறிவு சார்ந்த செய்தி உலகு, இவை– அதாவது மக்களுக்கு ‘தேவையற்ற’ விடயங்களை முற்றாய் தவிர்த்து, “மெத்தப் படித்தவரும்”, சிறிது படித்தவரும் எங்கள் பத்திரிகை மட்டகரமான செய்திகளை பிரசுரிக்கின்றது என்று கூறி, கூறிக் கொண்டே, எப்படியாகிலும் அதனை வாங்கியோ, வாங்காமலோ பெற்று வாசித்தனர் என்று கதைசொல்லி கூறும் போதே, தமிழ் நாட்டின் ‘மெத்தப் படித்த’ கூட்டத்தின் வண்டவாளத்தை ஊர் தேரில் ஏற்றி ஊர்வலம் அனுப்ப போகும், ‘கதைசொல்லி’யின் அரசியல், அம்பலமாக்கி விடுகின்றது.

போதாதற்கு மேலும் கூறுவான்: ‘சுதந்திரம் வந்துவிட்ட காலம். (அதாவது சுதந்திரம் வந்து முடிந்துவிட்ட காலம்) தேச பக்தர்கள் சிறை வாழ்க்கையையும், அகிம்சா போராட்டங்களையும் மறந்துவிட்டு தத்தம் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொரு இந்தியனும் தனது தொழில் திறம்படச் செய்வதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று தலைவர்கள் போதித்த…(காலம்). நானும் (கதைசொல்லி) காலத்துக்கு ஏற்றவாறு மாறி இருந்தேன்”

“நண்பன், ஒருவனுக்கு இரவலாக கொடுத்த “பாரதிபாடல்களை”க் கூட திரும்பக் கேட்க மறந்துவிட்டேன். போலீசிடத்தும், அரசாங்க அதிகாரிகளிடத்தும், எனது தகப்பனாரிடத்தும் எனக்கிருந்த வெறுப்பெல்லாம் படிப்படியாக மறைந்து விட்டது….”

“சிகரெட், பாப்ளின் சேர்ட்டு, அழகிய மோட்டார் கார்கள் இவையெல்லாம் என் மோகத்துக்கு இலக்காகின”

கால மாற்றத்தை, அல்லது இக்கால மாற்றத்துக்கு, வழிகோலிய ஒரு அரசியலை, அவ் அரசியலின் சாரத்தை, ஆழமாக, மிக ஆழமாக விமர்சித்து, வெளிக்கொணரும் இவ்வரிகள், வெறுமனே வெகுளித்தனமாக கூறுவதுப் போல் கதைசொல்லியால் கூறிச் சொல்லப்பட்டிருப்பது கூட, அவனது சமூகம் தொடர்பிலான மிக ஆழமான அரசியல் பார்வையை காட்டி நிற்கின்றது. ‘ஆழம்’ அவன் தேறும் உதாரணங்களின் எளிமையிலும், தாக்குதலுக்கு ஏற்ற, நடைமுறை யதார்த்தங்களுக்கு பொருந்தி வரும் தேர்வுகளிலிலும் வெளிப்படுவதாயுள்ளது.

உதாரணமாக மேலே குறிப்பிடப்படும் “பப்ளின் சேர்ட் மீதான மோகம்”, மற்ற இரு வார்த்தைகளின் நடுவே, இருத்தப்பட்டு, அமுக்கி வாசிக்கப்பட்டாலும், நாகராஜனே கூறி இருப்பது போல், “உண்மையை சொல்வதென்றால்... நான் விரும்பும் அளவுக்கு சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்” என்று படைப்பின் முகப்பிலேயே, முகாந்திரம் போன்று தனது வருத்தத்தை தெரிவித்திருப்பது, ஆழமானது, கவனிக்கத்தக்கது. கதையின் இரண்டாம் காட்சி, கதைசொல்லி, தன் கதாநாயகியான விபசாரியை, (தங்கத்தை) குறத்தி முடுக்கின் அறைகள் ஒன்றில் சந்திக்கும் காட்சி. முதல் தடைவையாக, அவ் அறைக்குச் செல்லும் கதைசொல்லி, நோட்டம் விடுகிறான், அறையைச் சுற்றி.

சுவரில் சிவன்-பார்வதி, ராமர்-சீதை படம் பக்கம் பக்கமாக மாட்டப்பட்டிருக்கின்றன. நாற்காலியை அவளருகில் நகர்த்திப் போட்டுக் கொண்டே கேட்கிறான், கதாநாயகன் “உன் பெயரென்ன?" இங்கே, சிவன்-பார்வதி படத்துடன், ராமர் சீதை படமும் இடம்பெறுவது தற்செயலான விவரிப்பா என்ற கேள்வி மிக எளிதில் எழக்கூடிய ஒன்றுத்தான். ஏனெனில், முன்னர் குறிப்பிட்ட, சுதந்திரத்தின் பின்னரான, அபிவிருத்திகளில் ஒன்றான,“பப்ளின் ~ர்ட் மோகம்” கதர் சட்டை மோகத்தின் தருக்க ரீதியான அபிவிருத்தித்தான் என்று ஒரு வாசகன் நினைப்பானாகில், ராமர்-சீதை படத்தையும், அதே திணுசில், அதாவது ராமராஜ்யம் என்ற திணுசில், யோசித்து வைத்துக் கொள்ளவும் அதனை கதாசிரியனின் கூற்றான, முழுவதையும்தான் சொல்ல முடியவில்லையே என்ற வருத்தத்துடன், இணைத்துப் பார்க்கவும் வசதி செய்வதாகத்தான் உள்ளது. அதாவது, ஒரு ராமராஜ்யத்தின் கீழேத்தான் இவ்வளவும் நடக்கின்றது எனும் கேள்வி பளீரென எழுகின்றது. உண்மையைச் சொன்னால், இன்னும் இராட்டையின் மோகம் தீர்ந்தபாடில்லை என்பதும் அவ்வப்போது, இராட்டை தூசு தட்டி, எடுக்கப்பட்டு, அதை வைத்து, ஆற்றப்படும் நகர்வுகளை அல்லது அரசியலை, உலகம் பார்த்துக் கொண்டுத்தான் இன்னும், இன்னும் இருக்கிறது, என்பதும் ஆழமாய் நினைத்துப் பார்க்கத் தக்கதே. முக்கியமாக, ஜெயமோகன் போன்ற‘காந்தி பக்தர்’ வாசிக்கும் போது…!

இத்தகைய ஒரு பின்புலத்திலேயே, கதை சொல்லி, காலப்போக்கில், தன் காதலியான தங்கத்துடன், இராட்டை சுழலுவது போல் சுழன்று சுழன்று மெதுவாக, காதல் வயப்படுகின்றான். அவர்களின்,-முக்கியமாக அவனது, மனநிலை மாறலை, அவனது பின்வரும் கூற்று மெதுவாக வெளிக்கொணர்கின்றது: “நான் தங்கத்தை பார்த்தேன். ஒன்றுமறியாத குழந்தையைப் போல் அவள் எனக்குத் தோன்றினாள்…அவள் ஒரு அநாதை. நானும் ஒரு அநாதை. எங்கள் கொள்கைகளாலும் நடத்தையாலும் சமுதாயத்திலிருந்து தங்களைத் தாங்களே பகி~;கரித்து கொண்டவர்களில் நானும் ஒருவன். அவளும் ஒருத்தி. நாங்கள் தனிப்பிறவிகள். எங்குமே அந்நியர்கள். நான் தங்கத்தின் அருகே சென்றேன். இரு கைகளாலும் அவளைத் தழுவி கண்களை மூடினேன். என் கண்களில் நீர் உகுந்தது. நான் எனக்காகவும் அவளுக்காகவும் சிந்திய கண்ணீர்.”

இக்கண்ணீரை சந்தேகப்படுமளவுக்கு, எதுவும் அங்கு அரங்கேறுவதாய் தெரியவில்லை – பூத கண்ணாடி போட்டு பார்த்தாலும் கூட. நல்லது. வினா: யாருடைய கண்ணீர் இது? இதையே முன்னர் கேட்டு கொண்டது போல் கேட்டுக் கொள்வோம்:

கேள்வி: “இவன் யார்?”– பதில்: “பிராமணன்!” அவனது அரசியல் கடமை என்ன? ‘இச்சாதீய அமைப்பை, தன் பலம் கொண்ட மட்டும் காப்பது. காலத்திற்கு ஏற்ற வகையில் மிக நுணுக்கமாகவும், நாசூக்காகவும் பிறர் எளிதில் அறிய முடியா வண்ணம், இப்படி காத்து முடித்து,காலா காலத்துக்கும் அது - இச்சாதீய அடுக்குகள் ஜீவித்திருக்குமாறு நிலைப்பெற செய்வது!!’

கேள்வியும், பதிலும் இப்படி இருக்கையில், இத்தகைய பிறப்பு கடமைகளில் இருந்து பிறழ்ந்து போனவனை என்னவென்பது? அதிலும் முக்கியமாக, ஒரு பிராமனணை? கோபம் வராதா என்ன? அதிலும் ‘கடமையை’ விட்டு விட்டுக் கண்ணீர் வடித்தால்…?

உண்மையில், ஜெயமோகன் தன் சாதீய பிரஞ்ஞைக்கு அப்பாற்பட்டவரா என்ன? ஜெயமோகனின் வாழ்க்கை சித்திரத்தில் ஒரு ஏடு:

“டே, நீ சி.வியை வாசிச்சிருக்கியா…”- பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.

“அப்போது நான் சுந்தர ராமசாமியின் ஞானப்பிடியில் அடங்கியிருந்த காலம்…” -ஜெயமோகன்.

“நீ என்னத்துக்கு கண்ட கண்ட தமிழ்ப் பட்டர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு சீரழிகின்றாய்? ஒன்றுமில்லையென்றாலும் நீ ஒரு நல்ல நாயரல்லவா? நமக்கு நம்முடைய ஞானமும் திறமையும் இல்லையா”– சுள்ளிக்காடு. (பக்கம் 30-31: முன்சுவடுகள்:ஜெயமோகன்)

வேறு வார்த்தையில் கூறுவதென்றால், இது வெறும் நாகராஜனின் மனிதாபிமானத்தின் மீது மாத்திரம் வந்த வெறுப்பல்ல. இது தற்போதிருக்கும் சாதீய அடுக்குமுறையை, சமூக அமைப்பு முறையை சீர்குலைக்கும் - சீர் குலைக்க கூடிய கண்ணீர் என்பதை ஜெயமோகனின் நுண்ணறிவு உணர்வதினாலேயே இவ் வெறுப்பு இப்படியாக மண்டுகிறது.

கிளிம் எப்படி குமுறுகின்றானோ – விலங்கு வெறுக்கத்தக்க விலங்கு என – அதே கோபத்தை – அல்லது அதைவிட மேலான கோபத்தை ஜெயமோனில் இங்கு காண்கின்றோம் - ஒருமையில் உறுமுகின்றார்: “யார் இவன்?”  ஒரு வேளை, மரீனா, வெலண்டைன் பொறுத்துக் கூறுவதுப்போல், “இவன், தன்னையும் போ~pக்க தெரியாதவன் - இந்த சமூகத்தையும் பேணி, போ~pக்கத் தெரியாதவன்…”

இருக்கலாம். இருந்தும் ஒரு பிராமணன். அதிலும் எழுத்தாளன். அதாவது ஏதோ ஒரு வகையில் தன் எழுத்தின் மூலம் பிரசாரத்தை மக்களிடையே முன்னெடுப்பவன் தான். வெலண்டைன் போன்ற தனித்த கட்டை அல்ல. எனவேத்தான் வெறுப்பு இங்கு இரு மடங்காய் மண்டுகிறது, கிளிம்மைப் போலவே, ஜெயமோகனிடம்.

எமது காலத்திய சாதீய அரசியலைக் கூர்ந்து நோக்கினால் (மோடியினது உட்பட) சாதீய அரசியல், தான் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாக, தலீத்திய அரசியலைத் துணையாக கொண்டுள்ளது என்பது நுணுகிப் பார்க்குமிடத்து அவதானிக்கதக்க ஒன்றாகவே இருக்கின்றது. இன்னும் சரியாக சொன்னால், தற்போது ஆட்சி செலுத்தும் அரசியல், தனது ஊன்று கோல்களாய் தலீத்திய அரசியலை ஒருகக்கத்திலும் மறுகக்கத்தில் மகாபாரதத்தையும் ஊன்றிக் கொண்டு நங்குநங்கென, நொண்டி, நொண்டி வருகின்றது, நாட்டை சுற்றி சுற்றி. இச்சூழலில், எந்த ஒரு சாதீய உணர்வும், சாதீயமற்ற உணர்வு போன்றே, பொய் தோற்றம் காட்டி, ஆளை மயக்கி, நுணுக்கமாகச் செயல்பட வேண்டிய ‘பொறுப்புமிக்க’ ஒரு காலக்கட்டம் இது. (அதுவும்- முக்கியமாக படித்த ஒரு தளத்தில் - எல்லாவற்றையும் விட – எனலாம்). விடயங்கள் இப்படியாக, தத்தமது மானசீக கொதிப்பு நிலையை எட்டும் ஒரு பின்னணியிலேயே, நாகராஜனின் மேற்படி நிலைப்பாடுகள் நம்மை வந்து சேர்ந்து, பரிசீலிக்கப்பட வேண்டிய ஒரு தேவையையும் வலியுறுத்தி நிற்கின்றன. போதாதற்கு சுந்தர ராமசாமி வேறு, ஒன்றும் புரியாதவராய்! “ஓஹோ…மகான்களுக்கு கிடைக்காத தரிசனங்கள் எல்லாம் இவருக்கு கொஞ்சம் கிடைத்து விட்டது மாதிரிப் படுகின்றது” என்று நாகராஜனைப் பற்றி எழுதித் தீர்த்து விட்டார். இத்தகைய ஒரு சூழலில், இக் கோடாரி காம்பை, இந்த அருவருக்கத்தக்கவனை என்ன செய்வது என்பதே கேள்வி.

சுருங்க சொன்னால், ஒரு ரசிய வரலாற்று காலக்கட்டம், அதாவது, புரட்சி கொந்தளித்துக் கரை புரளும் ஒரு காலக்கட்டத்தில், இளைஞர்கள் கைக்குண்டுகளை வீசி எறிந்து ரகளை செய்யும் ஒரு காலக்கட்டத்தில், தொழிலாளர்கள், பாதுகாப்பு அரண்களை வீதிகளில் எழுப்பி, தொழிற்சாலைகளின் உற்பத்தியையே முடக்கி ஊர்வலங்கள் போகத் துணிந்துவிட்ட ஒரு காலகட்டத்தில், விவசாயிகள் பண்ணைகளைத் தீயிட்டு கொளுத்தி ஆரவாரம் செய்யும் ஒரு காலக்கட்டத்தில், ‘புரட்சிகளா? அவர்களுக்கு தேவையா?? நல்லது அப்படி என்றால் நன்றாய் செய்து கொள்ளட்டும்… என்னை என் புறாக்களோடு விட்டு விடுங்களேன்’ என்று கெஞ்சும் இந்த வெலண்டைனை எதில் சேர்ப்பது? பிராமணனுடனா? கோபம் வராதா என்ன?

கிளிம், இச்சமுதாய அடுக்கின் சரிவுக்கான, முதல் கோடாரி காம்பாக இனம்கண்டு தன்னை ஒத்த இந்த வெலண்டைன் மீது அடையும் கோபமும் வெறுப்பும், நாகராஜன் எனும் பிராமண கோடாரி காம்பின் மீது, ஜெயமோகன் அடையும் இக்கோபத்திற்கும் வெறுப்புக்கும் நிகரானது என்பதே இங்கு குறிக்கத்தக்க ஒன்று.

வேறு வார்த்தையில் கூறுவதானால், ஒரு பிராமணன் உதிர்க்கும் இக் கண்ணீரில், அதன் புனிதத்தில், சாதிகள் கரையலாமென்றால், சாதிகள் ஒன்று சேரலாம் என்றால், இச்சாதீய அடுக்குமுறை சரியலாமென்றால், முதலில் தகர்க்கப்பட வேண்டியது அக்கண்ணீர்த் துளிகளையும், அதனை வடித்தவனையும்தான். இது நுண் அரசியல். இந்நுண் அரசியலின் முக்கிய அடிப்படை கோபம் - தன்னை பாதுகாத்த இச்சாதீய அமைப்பை சரிக்கின்றார்களே எனும் அரசியல் கோபமே. கிளிம், இக்காரணத்தினாலேயே வெலண்டைன் மீது கோபம் அடைகின்றான், ஜெயமோகன், நாகராஜனின் மீது அடைந்த கோபத்தைப் போன்று.

இதே போன்று நாவலில் வரும், ஒரு ரயில் காட்சியும், எமது தமிழ் இலக்கிய உலகுடன் ஒப்பிட்டு பார்க்க தக்கதுதான். மாஸ்கோவை விட்டு, மாகாணத்தை நோக்கி நிரந்தரமாய் புறப்படும் கிளிம், ஓர் இரண்டாம் வகுப்பு பெட்டியில் தனது ரயில் பயணத்தை மேற்கொள்கின்றான்.

அப்பெட்டியில் தன்னுடன் பயணிக்கும் பயணிகளில் ஓரமாய், இருக்கும் மனிதன், ஓர் நையாண்டி,(அங்கத) பத்திரிக்கையை வாசித்தவாறு இருப்பான். இந்த பக்கமாய், ஒரு திடகாத்திரமான பெண்மணி தனது பூனைக்குட்டிகள் உள்ள ஒரு பெட்டியை தாங்கியவாறு இருப்பாள். எதிர்த்தாற் போல், முகப் புள்ளிகளுடன் இருக்கும் ஒருவன், தனது கர்ப்பிணியான மனைவியோடு அமர்ந்திருப்பான். அவள், அவனுக்கு கொறிக்க அல்லது சப்பிக் கொள்ள அவ்வப்போது ஏதாவது திண்பண்டத்தை அவனது கையில் திணித்தவாறே இருப்பாள். எதிர்த்தாற் போல் உள்ள மூலை சீட்டு இருக்கையில் உள்ள நபர் தன் கண்களை மூடியவாறு கால்களை நீட்டி தியானம் செய்வதுப் போல் அமைதியாக இருப்பார். அவரவர், அவரவர் பாடு. கிளிம் பெருமையுடன் நினைத்து கொள்வான்;: இவர்கள்,இந்த இவர்கள்தாம்,வரலாற்றின் உண்மையான மூலப்பொருட்கள் ஆவர். இம்மூலப்பொருளில் இருந்தே, அனைத்தும், மானிட அம்சம் கொண்ட அனைத்தும், கலாசாரம் உள்ளடங்களாக, உருவாகின்றது… ம்… இவர்களுடன் இணைந்தாற் போல் விவசாயிகளும்…”

இப்படியாய், இந்த சாமானியர்கள், பொறுத்து, கிளிம் பெருமையுடனும் நன்றியுடனும் நினைத்துக் கொள்வான். இப்படியாக, இந்த சாமானிய மக்களை, உண்மை வீரர்களாகக் கொண்டாடும் பண்பு கிளிம்மிடம் மாத்திரம் அல்ல – எமது தமிழ் இலக்கிய உலகு உள்ளடங்களாக பல்வேறு வகைப்பட்டோரிடம் அவ்வப்போது கிளம்புவது உண்டுதான். ஜெயமோகனின் பார்வையில், சாமான்யர்களை கதாநாயகர்களாக, கொண்டாடும் பண்பு, அதிகமாக அசோகமித்திரனிடமே காணக்கிட்டுகிறது, என இனங்காணுகின்றார் அவர். அசோகமித்திரன் பொறுத்து பொதுவாக் கூறும் போது ஜெயமோகன் கூறுவது: “எல்லா கருக்களிலும் அவர் பொதுவாகப் பேசுவது நடுத்தர வர்க்க மனிதர்களை முன்வைத்து, வாழ்வின் ‘இன்றியமையாத’ இரும்பு விதிகளைப் பற்றித்தான்”. (இங்கே,‘இன்றியமையாத இரும்பு விதிகள்’என்ற சொற்களின் பாவிப்பு அவதானிக்கத்தக்கது). இதையே, இந்நடுத்தர வர்க்க மனிதர்கள் பொறுத்து, கிளிம்மும் மேற்கூறியவாறு, அவர்களின் ‘இன்றியமையாத’ தன்மை குறித்து கூறுகின்றான். (வரலாற்றின் மூலப் பொருட்கள்! என) கூறுவார்: “அசாதாரணமாக ஆகக்கூடிய சில தருணங்களை கூட அசோகமித்திரன் கவனமாக தவிர்த்து விடுகின்றார்…” “எந்த கதாபாத்திரத்துக்கும் நினைவில் நிற்கும் தனித்துவம் கொண்ட பெயர் (கூட) இல்லை. சந்திரசேகரன், மாணிக்கம், பங்கஜம், சீதா போல சாதாரணப் பெயர்கள்தான்…” (பக்கம்:14 மேலது)

“அசோகமித்திரனின் தார்மீக உணர்வு நவீனத்துவத்தின் அறவியலை ஒட்டியே அமைகிறது. தனிமனித அறச்சார்பு என்ற அந்த மையம்தான் அசோகமித்திரன் உலகின் தார்மீக அடிப்படையைத் தீர்மானிக்கின்றது…”

இவற்றையெல்லாம் ஒன்று கூட்டிப் பார்க்குமிடத்து, அசோகமித்திரன் தனது மையக் கருவாக, மைய அலகாக மைய கதாநாயகர்களாக, கிளிம்மை போன்றே, ஒரு நடுத்தர வர்க்கத்தையே அடையாளம் கண்டு கொள்கிறார், எனலாம்.

இக்கருத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ஜெயமோகன்,‘சொல் புதிது’ பேட்டியை வேறு, கோடிட்டுக் காட்டுகின்றார்: ‘ஆன்மீகம், தியாகம், துறவு என்றெல்லாம் சொல்கிறோம். எனக்குத் தெரிந்த எத்தனையோ எளிய விதவைகள் தங்கள் முழு வாழ்க்கையையும் பிறருக்காக செலவிட்டு அதில் நிறைவையும் கண்டிருக்கிறார்கள். எனக்கென்னவோ, அதில் தான் ஆன்மீகமான அம்சம் இருப்பதாகத் தோன்றுகின்றது”

இதை ஆமோதித்து ஜெயமோகன், அசோகமித்திரன் பொறுத்து மேலும் கூறுவது: “உத்வேகம் விழைந்த சம்பாசனை நிகழும்போது கூட, தான் அதை சாதாரணமான சம்பவங்களின் தளத்தில் பொருத்திவிடுகின்றார்….”

ஆக மொத்தத்தில், சாமான்ய மனிதர்கள்-சாதாரண சம்பவங்கள் - சாதாரணப் பெயர்கள் - இந்த நிசப்தம், இந்த இனிமை, இதை அசோகமித்திரனும் ஜெயமோகனும் பரஸ்பரம் கொண்டாடுவது புரிகின்றது. இதே போன்றுதான், கிளிம்மும், இந்த சாமான்ய மனிதர்களை, பெருத்த நன்றிப் பெருக்கோடு, நினைத்துக் கொள்கிறான், வரலாற்றின், பிறப்பாளர்கள் இவர்களே என.

கேள்வி: இந்த அணுகுமுறை எதைக் காட்டி நிற்கின்றது? ஒன்றையும் குழப்பிவிடக் கூடாது என்ற அவாவையா? அதாவது, சமூகம், இப்படியாய், மௌனமாய், சப்தமிடாமல், சாவதானமாய், வாழ்க்கையைப் பிறருக்காக செலவிட்டுவிட்டு, நிறைவு கண்டு, அசைந்து அசைந்து சென்றால் எவ்வளவு இனிமையாக இருக்கும்? – குலைந்து விடாமல்! ஒரு லட்சிய கனவுத்தான்.

அதாவது ‘அசோகமித்திரன்’ எனும் சரிகை மின்னும் குஞ்சலப் பெயர் (ஜெயமோகன் வார்த்தைகள்) நிலைக்க வேண்டுமாயின் அவரது கதாபாத்திரங்கள், வெகு சாதாரணமான பெயர்களாக, சந்திரசேகரன், மாணிக்கம், பங்கஜம் என்று ஏந்த வேண்டி உளது. சுருக்கமாகச் சொன்னால், இந்த சாமான்ய மக்களின் வாழ்வை கொண்டாடுவதே, ஓர் உயரிய அரசியல் தான். ஆனால் அது தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், பதுங்கி, மாறுவேடம் பூண்டாற் போல் அலுங்காமல் குலுங்காமல் வெளிவருவது தனித்திறமைத்தான். இவையே சமயங்களில் சாமான்யர்கள் பொறுத்த திருப்தியாகவும், அவர்கள் ஏதோ ஒரு லட்சிய புரு~ர்களாகவும் லட்சியப் பதுமைகளாகவும் வெளிவரும் கனவுகளாகின்றன.இக் கனவுகளின் அல்லது ஆகர்~pப்புகளின் பின், ஓர் ஆணித்தரமான அரசியல் உண்டு. சுந்தர ராமசாமியின் அரசியல் என்ன, நாகராஜனின் அரசியல் என்ன என்றெல்லாம் விலாவாரியாக எழுதத் துணிந்த ஜெயமோகன், அசோகமித்திரன் தொடர்பில் எழுதும் போது, மறந்தும் அரசியலைத், தொடாமல் விட்டதும், அசோக மித்திரனின் அரசியல் தான் என்ன – அப்படி ஏதும் அவரிடம் ஒன்று உண்டுதானா என்று கேட்க மறந்ததும்,கூட ஓர் ஆணித்தரமான அரசியலே.

இதேபோன்று – நடுத்தர வர்க்கத்து சாமான்யர்கள் மாத்திரமல்ல – எவரெவர் இச்சமூக அமைப்பை ஆட்டங்காண செய்யாமல், குலைத்து விடாமல், நேர்த்தியாக, முன்னெடுத்து செல்ல முனைவார்களோ, அவர்களெல்லாம் “வரலாற்றுப் பிறவிகளே”. அவர்களைக் கொண்டாடாமல், எதனை கொண்டாடுவது?

“விடயங்களைப்” பாதுகாப்பாக வரலாறு வரலாறாக சுமந்து செல்லும் இவர்கள், கிளிம் எண்ணுவதுப் போல், வரலாற்றுப் பிறவிகள் தாம். இவர்கள் போராடுவதும் இல்லை. குரல் எழுப்பவதுமில்லை. பசுமாடு, மௌனமாக, கால்களை மடித்து ரசித்துக் கொண்டு, உலகத்தைப் பார்த்தவாறே, மெல்ல தாடையை அசைத்து அசைத்து அசை போடுகின்றதே – அதிலேயே இவர்களின் வரலாற்றின் முக்கியத்துவமும் அடங்கி விடுகிறது போல. எனவேத்தான், இச்ஜீவன்களைக் கொண்டாடாமல் யாரைக் கொண்டாடுவது இங்கே? ஒரு வரலாற்றுக் கனவெனின், இவர்கள் இல்லாமல் வரலாறு ஏது? கனவேது? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

நாவலில், ரயில் பெட்டியில், கிளிம்மின் இந்தக் கனவுத்தான் குழம்பிப் போகின்றது. (ரசியாவின், 1905 இன், கால நிர்பந்தங்கள் காரணமாய்) ஆரம்பத்தில் ரயில் பெட்டியில் கட்டுக்கோப்புடன், தத்தம்பாட்டுக்குப், பயணம் செய்யும், இந்த நடுத்தர வர்க்கத்து பிரயாணிகள், சற்று நேரம் செல்லச்செல்ல, மாறி வரும் ர~;ய வாழ்வைத், தொட ஆரம்பித்து பின், ஜார் - புதிதாக வந்துள்ள பாராளமன்றம் - அதன் புதிர் இத்தியாதி என்றெல்லாம் தொட்டுத் தொட்டு, ஈற்றில் படிப்படியாக அல்லோல கல்லோலப்படத் தொடங்குகின்றனர். கர்ப்பிணிப் பெண்ணுடைய கணவன், துள்ளிக் குதித்து தர்க்கத்தில் ஈடுபடுவதை அல்லது அவனது வார்த்தையாடலை தடுக்கவோ என்னவோ… இந்தா இதைத் திண்ணு, இந்தா இதைக் கொறி, இந்தா இதைச் சப்பு என்று கூறி, அவள் தொடர்ச்சியாக அவளது கணவன் வாயில், அவனை பேச விடாமல் எதை எதையோ திணித்து திணித்து விடுவாள், எமது இலக்கிய கர்த்தாக்கள் மெல்லவும் இப்படி ஏதாவது ஒன்று திணிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழும் வண்ணம்.

கோபமுறும் கிளிம், அடுத்த நிலையத்தில் இறங்கி, டிக்கெட்டை அடுத்த பெட்டிக்கு மாற்றிக் கொள்கின்றான். அத்துடன் அவனது அக்கணத்து வரலாற்று இனிமை முற்றுப் பெறுகின்றது. ஆனால், இந்தக் கோபங்களின் அரசியலை, ஒரு சராசரி மனித வாழ்வியலுக்கூடு, இவ்வளவு கச்சிதமாய் நாடி பிடித்த எழுத்துக்கள் வெகு குறைவே – அல்லது – முற்றிலும் இல்லை என்;றே கூற துணியலாம். (ர~;ய எழுச்சிகள் சமூக கட்டமைப்புகளை முட்டி மோதும் போது அவை ஒரு அந்னியப்பட்டவனின் ஆன்மாவில் நிகழ்த்தக்கூடிய தாக்கத்தின் விளைபயன்கள் என்றும் இதனை கூறத்துணியலாம்). \

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.