அத்தியாயம் எட்டு!

கிளிம்மின், மாகாணத்தை நோக்கிய நகர்வு, முன்னரே குறித்தவாறு, மரீனாவால் ஏற்படுகின்றது.

தத்துவ தேடல் - வெறுமை நிறைந்த மனம் - வெளிறத் தொடங்கும் உணர்வுகள் - இந்த பின்னணியில் - மரீனா – என்ற மூவெழுத்து, இவை அவனுள் ஒரு பிடிப்பை ஏற்படுத்துகின்றன. அவளது, அறிவும் - அழகும் - ஸ்பரிசமும் - ஒரு தேவதையின் பாற்பட்டது என்றளவில் முடிவெய்துகிறான் கிளிம். இருந்தும் மர்மங்கள்…?

அவள், அவனை ஊடுருவி, அவனை எளிதாக இனங்கண்டு, அப்படியான தன் அபிப்பிராயத்தை, பின்வருமாறு, அவனிடம் நேரடியாகவே கேட்கின்றாள். “ஜார் நடைமுறைப்படுத்தும் இந்த ஜனநாயக ஏற்பாடுகள் - டூமா (பாராளுமன்றம்) போன்றவை, ‘அதிகாரங்களை எந்த வழியிலாவது பெற்றுக்கொள்ள ஏங்கும், எமது புத்திஜீவிகளுக்கு பொருத்தமானது…’ ஆனால் உனக்கு…?”– புன்னகைத்தவாறே, கேட்பாள், அவள்.
மரீனாவின் தனிப்பட்ட வழக்குரைஞனாக, அடி எடுத்து வைக்கும் கிளிம், காலப்போக்கில் அவளுடன் மிக அந்நியோன்யமாக, நெருக்கமாகப் பழக நேரிடுகிறது.

கிட்டத்தட்ட, மூன்று வருடங்கள் முடியும் தருவாயில், கிளிம்மின், நெற்றியில், ஆதரவாய் முத்தமிட்டு, அவனை வழியனுப்பி வைக்கும் அளவிற்கு அவர்கள் உறவு மேம்படுகின்றது.

இக்காலப்பகுதியில், அவளது தயவினால், கிளிம்மின் பொருளாதார நிலை மாத்திரமல்ல, அவனது பரிதவித்த – பிளவுண்ட – மனநிலை கூட  ஒரு ஸ்தீரதன்மையை எட்டிப் பிடித்து விடுகின்றது.

அவள் தொடர்பில் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் ஓரளவுக்கு ஈர்க்கப்படும் கிளிம்மிடம் மீளமீள பிறக்கும் கேள்வி: யார் இவள்? இவ்வளவு ஆளுமையுடனும் நிதானத்துடனும் உலக நடப்புகளை – அவை இலக்கியம், அரசியல், தத்துவம், மனிதர்கள் - என்று எவையானாலும் சரி – அவை தொடர்பான பிரச்சினைகளால் ஒரு சிறிதேனும் நிலைகுலைந்து விடாமல் - அனைத்தையுமே, ஓர் சிறு புன்னகையுடன் சாவதானமாய் - எதிர் கொள்ளும் இந்த பெண் உண்மையில் யார்? இவளை நிலைநிறுத்தும் அந்த சக்தி எது? எந்த ஆயுதத்தின் துணைக்கொண்டு, இவள் இப்படியாய் வலம் வருகிறாள்…?

இடைக்கிடை தன் அக உலக நடப்புகளையும் அவள் சற்றே அவனிடம் திறந்து காட்டவே செய்கின்றாள்.

அவ்வப்போது கிளிம்மிடம் கேட்பாள்: “ஆவிகள் பொறுத்து என்ன நினைக்கின்றாய்? பரிசுத்த ஆவி?...ம்…”

“மாதா கோயிலின் பைபிள் ஏற்பாடுகள் ஒருபுறமாய் எழுப்பப்பட்டு இருக்கும் போது, மக்கள் சாரிகளின் வழிபாட்டுமுறை – அவர்களின் ஆன்மீக உலகு, செயற்பாடுகள், இவை,- மறுபுறமாய் இருக்கவே செய்கிறது…” - இப்படியாய், மரீனாவின் கூற்றுகள், இடைக்கிடை, தெறிப்பதை, கிளிம் அவதானிக்க நேர்கின்றது.

இருந்தும் இவை பொறுத்து எந்தவொரு அலட்டல்களையும் அவன் மனம் கண்டுக் கொள்ளவில்லை. பத்தோடு பதினொன்றாக, இவற்றை ஏற்று நடக்கும் முனைப்பே அவனிடம் பெரும்பாலும் காணக்கிட்டுகின்றது, எனலாம். இருந்தும், மரீனா, தொழில் ரீதியில் வழக்குரைஞனாக அவனை, அவனது வழக்குகள் தொடர்பில் மாத்திரம், தனது, அந்தரங்க வழக்குரைஞனாக பாவிக்கவில்லை.

அதற்கும் மேலாக, சிற்சில சந்தர்ப்பங்களில், சில கையூட்டல்களை, சம்பந்தப்பட்ட நீதிமன்ற அதிகாரிகளுக்கு வழங்கவும், அதற்கூடு, நீதிமன்றத்தால் பாதுகாக்கப்பட்ட சில ஆவணங்களை, நீதிமன்றங்களின் பாதுகாப்பிலிருந்து மெதுவாக மீட்டெடுத்துக் கொள்ளவும், அவள், அவனை, நாசூக்காகப் பயன்படுத்திக் கொள்வதை அவன் உணரும் வேளை, திடுக்கிட்டுப் போகின்றான்.

‘ஏன் இப்படி’ இது என்ன ஆவணம்…”

“ஓ… அதுவா… அதை ரயிலில் வரும் போது வாசித்திருப்பாயே… எவ்வளவு கொடுத்தாய்…? அதிகமாகவே கூட நீ கொடுத்திருக்கலாம்… ஆழமான, மத போதனை சம்பந்தமானது…”

இவை அனைத்தும் கிளிம்மை ஒரு முடிவை நோக்கி தள்ளி விடுகின்றன. தனக்குள் முடிவு செய்து கொள்கின்றான்: இனியும் பொறுப்பது ஆபத்தானது நேரடியாக கேட்டு விடுவது சாலச் சிறந்தது என. மர்மமான முறையில் அவளுக்கு எழுதி வைக்கப்படும் சொத்து விபரங்கள் - அவளை சந்திக்க வரும் மர்மமான மனிதர்கள் - அவளை சூழ உள்ள மர்மங்கள்…? ‘நல்லது… இனியும் உன்னிடம் கூறாமல் இருக்க முடியாது… எங்களுக்கென ஒரு வழிபாட்டு முறை உண்டு… நாங்கள் எங்களுக்கென ஒரு மதத்தை கொண்டொழுகுகின்றோம்…அவரவர் சொத்துக்களை எங்கள் மத குழுவுக்கு எழுதி வைத்தாக வேண்டும்… அது ஒரு விதி…ஒரு மத குழுவினர்…நாங்கள்! குறித்த தினத்தில்… பரிசுத்த ஆவி, எங்களுக்குள் இறங்கும்… நீயும் வரலாம்… வந்து பார்க்கலாம்… ரகசியமாய்… எனது ஆள் ஒருவன் உன்னைக் கூட்டி வருவான், குறித்த நாளில்…குறித்த நேரத்தில்…”

          - எழுத்தாளர் மார்க்சிம் கோர்க்கி -

தனித்து, ஒரு மாடியின் ஒளியற்ற பாழடைந்த ஒரு சிறிய துளை போன்ற திரைச்சீலை பிளவுக்கூடாக, கிளிம் கீழே நடப்பதை பார்ப்பான், மேலிருந்து…

கீழே, வட்ட வடிவான சிறிய நீச்சல் குளம் போன்ற தடாகம்… சுற்றிவர ஆண்கள், பெண்கள், ஒருவருடன் ஒருவர் கை கோர்த்த வண்ணம் - கால்வரை, வெண்ணிறத்தில், போர்த்தியது போன்ற உடைகளில். மரீனா, அரசியை போல, ஒரு சிம்மாசனத்தில்…

பாடல் தொடங்கும்… பாடப்பாட உத்வேகம் பிறக்கும்… மந்திர உச்சாடனங்கள் போல் பலதும் தெறிக்கும்… இப்பொழுது, அவர்கள், ஆடி, ஆடி வட்டமாய் வந்து, தர்மா, தர்மா, சூடாமணி , சூடாமணி என்றெல்லாம் புரியாத பாசையில் கூவ தலைப்படுவார்கள்… சிலர் தெளிவற்ற குரலில், மிருகங்களை போல், உறுமி உறுமி ஆடுவார்கள்…வினோத ஒலிகளை எழுப்புவர்…சிலர் ஊளையிடுவார்கள்… மந்திர உச்சாடனம், தன் உச்ச நிலையை எட்டும் போது, மரீனா நீரில் இறக்கப்படுவாள்… ஓர் ஒளி, நீரில் மிதந்து வரும்… மிதந்து மேலே மேலே, மேலே, மேலே… முழுவதையும் நிரப்பி, நிரப்பி வியாபித்து, தன்னையும் விழுங்குவதுப் போல… கிளிம் - கண்கள் இமைக்காமல் பார்த்திருக்கும் கிளிம் பேயறைந்தவனாய், அசையாமல், அப்படியே கல்லாய் சமைந்து பார்த்திருப்பான். இப்போது அவனது கால்கள் அவனறியாமல் நடுங்கத் தொடங்குகின்றன. அவன் தன் கால்கள் ஆடுவதை உணர்கின்றான்… ஓ… என்ன இது…? எழுகின்றான். சரியாமல் இருக்க சுவரை பிடித்து கொள்கின்றான். ஒரு கட்டத்தில், சுவரில் முட்டி மோதி, எழுந்து ஓட தெண்டிக்கிறான் கிளிம்.

சுருக்கமாக கூறினால், மரீனா இதுவரை இலை மறை காய் மறையாக, பொத்தி பொத்தி வந்த, அவளது மத நம்பிக்கைகள், இப்போது தெறித்து விழுகின்றன.

குறித்த பௌர்ணமி தினம் போன்ற ஒரு தினத்தில், பரிசுத்த ஆவி, இவர்களுக்குள் இறங்கி வருகிறது… பரிசுத்த ஆவி இவர்களுடன் ஏதோ ஒரு புரியாத விலங்கின் மொழியில் உரையாடுகிறது… பரிசுத்த ஆவி இவர்களை ஆட்டுவிக்கின்றது… புனிதம் பெறச் செய்கின்றது. உய்விக்கின்றது. எகிப்தின், இந்தியாவின் பழைமை மிக்க வழிபாட்டு முறைகளில் இருந்து ஆங்காங்கே எடுக்கப்பட்ட மிச்ச சொச்சங்கள் இங்கே ஒன்று குவிக்கப்பட்டு இவர்களிடம் தலை விரித்தாடுகின்றது…“தர்மா, தர்மா… சூடாமணி… சூடாமணி… அருள் போன்ற வார்த்தைகள் பாடி ஆடப் பெறுகின்றன.

இப்போதே, வாசக மனம், திடுக்குற்று கண் விழிக்கின்றது. இவ்வளவு இலக்கியம், இவ்வளவு தத்துவம், இவ்வளவு அரசியல் - என்று மிகத் தீவிரமாய் பயணித்த அனைத்தும், இறுதியில் இந்த - இத்தகைய ஒரு வெறுமையில் முடிவடையத்தானா – என்ற கேள்வி தவிர்க்க முடியாத வண்ணம் வாசக மனதில் அறைந்து, அப்படியே அவனைக் கப்பிப் பிடித்து இறுக்குகின்றன.

வேறு வார்த்தையில் கூறினால், எதை எதையோ எண்ணி கிளிம்முடன் பயணப்பட்டு வரும், வாசகன், இறுதியில், இந்த சாதாரண, சராசரி “பேயாட்டத்தை”க் கண்டு விக்கித்து போகத்தான் செய்கின்றான் - ஓர் இலவு காத்த கிளி போல ஏமாற்றம் அவனைக் கப்புகிறது.

டால்ஸ்டாய், டஸ்தவாஸ்கி, கோகோல்;, புஷ்கின் என விரியும் ஒரு  பாரம்பரியம், இப்படியாய், ஈற்றில், ஒரு பேயாட்டத்திற்கு ஈடான ஒரு மத வழிபாட்டில் முடிவதை வாசக மனம் ஏற்க உண்மையில் சிரமப்படுகிறது. இது, இத்தொகுதியை வாசித்து முடிக்கும் தருணத்தில், எந்த ஒரு சாரசரி வாசகனின் அறிவு தேடலுக்கும் நிகழக்கூடிய ஒன்று. ஏனெனில், மரபுகள், தொன்மங்கள், ஆழ்மனப் படிவுகள், வரலாறுகள், தத்துவங்கள், அரசியல் என அனைத்தையும் பேசிப்பேசி விவாதித்து, ஈற்றில் ஆவிகள் முன்னால் மண்டியிடுகிறேன் என்று அறிவிப்பது சராசரி பகுத்தறிவு கொண்ட எந்த ஒரு வாசக மனதுக்கும் ஒவ்வாத ஒன்றுதான்.

ஆனால் சற்றே நிதானித்து, எம்மால் நம்ப முடியாதிருக்கும் இந்நிகழ்வை , - அதாவது, இத்தகைய மாடி மாடங்களை கட்டுவித்து – நடைபழகும், இந்நவீனம்,- இறுதியில் இப்படியாய் “ப்பூ…” என்று ஏமாற்றம் தொனிக்கும் வகையில் இதயத்தைக் கௌவும் போது கிடைக்கும் ஏமாற்றம் நம்ப முடியாததாகின்றது. அதிர்ச்சி கலந்ததாய் இது இருப்பினும், ஒரு கணம் நிதானித்து, எம்மை நாம் சுதாகரித்து, எம்மை சூழ உள்ள நிகழ்வுகளை, நாம் மிக மிக நிதானமாய் சிரத்தையுடன் நோக்கும் போது சில கேள்விகள் மெது மெதுவாய்ப், பனி புகாரில் இருந்து, எழும்புவது போல் மேல் எழும்பி, வாசக மனதிடம், வினாக்களை, அடுத்தடுத்தாய்த் தொடுப்பது தவிர்க்க முடியாததாகின்றது. எத்தனையோ தத்துவங்களை, இலக்கியங்களை, அரசியலைக் கட்டுவிக்கும் எமக்கு தெரிந்த ஆளுமை மிக்க மனிதர்கள் இறுதியில் நூற்றுகணக்கில் ஆயிரக்கணக்கில், ஏன், லட்சக்கணக்கில் வெறும் சற்குரு முன்னிலையிலும் தை சத்திய நிதி முன்னிலையிலும் நாராயண குருக்கள் முன்னிலையில் மண்டியிட்டு உட்காந்திருப்பதும், மணிக்கணக்கில் உச்சாடனம் (அக-புற) செய்வதும், குறைந்தபட்சம் ஆத்ம விசாரங்களில் ஈடுபடுவதும்- இப்பின்னணியில், இறுதியில் தாண்டிச் செல்ல முடியாததாகின்றது.

புதுமைபித்தன் முதல் ஜெயமோகன் வரை மரபு, தொன்மை, இலக்கியம். யதார்த்தம், டால்ஸ்டாய், டாஸ்த்தவஸ்கி, நவீனத்துவம், காந்தீயம், பீஃப் (புலால்) உண்ணுதல், திசையற்ற வெளி, என்றெல்லாம் நொடிக்கு நொடி பேசி, கதைத்து வந்தாலும் இறுதியில் ஒரு சற்குரு முன் மண்டியிட முனைவது தற்செயலானதா அல்லது தர்க்கபூர்வமானதா என்பது இலகுவில் தவிர்த்துச் செல்ல முடியாத உறுத்தும் வினாவாகின்றது.

உலகெங்குமிருந்து, ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்று கோசம் எழுப்பி விமானங்களில் வந்து சேர்வதும், சத்திய சாயிபாபாவின் விடுதிகளில் தங்குவதும், சற்குருவின் ஆச்சிரமங்களை அண்டுவதும், குளிப்பதும், இன்னும் எண்ணற்ற, குகைகளை, குடில்களை நாடுவதும் - உணர்வு துறந்த நிலையில் நடனம் புரியத் தலைப்படுவதும் நடந்தேறுகிறது.

ஜெயமோகன், புதுமைபித்தனை தலைசிறந்த, முதன்மையான தமிழ் இலக்கியப் படைப்பாளியாகவும், அவரது கதைகளான கயிற்றிரவு, கபாடபுரம் - இரண்டையும் புதுமைபித்தனின் உச்சநிலை படைப்புகளாகவும் கணித்துக் கொள்கின்றார்.

இதற்குரிய முக்கிய காரணம் இவை மரபுடனும், தொன்மத்துடனும் ஊடாடி நனவிலி மொழியிலும் சஞ்சரித்து, வாசகனுக்கு, தரிசனத்தை, உச்ச உணர்நிலை பரவசத்தை (SUBLIME) உண்டு பண்ணுகிறது என்பதே அவரது கண்டுணர்வு.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.