(சென்ற இதழ் தொடர்ச்சி)

பெலோஸ்கியின் விஜயம் நடந்துமுடிந்த, 12வது தினமே, செனடர் எட் மார்கியின்; தலைமையின்கீழ், செனட் குழு ஒன்று தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டது (16.8.2022).  இது அமெரிக்கா அணுகுமுறையின் தீர்மானகரமான நிலைமையினை புலப்படுத்தியது. மறுபுறுத்தே, ஏற்கனவே நூற்றுகணக்கான விமானங்களையும், பத்துக்கு குறையாத கப்பல்களையும் அனுப்பி, அதற்கூடு, தாய்வானுக்கென்று, உண்மையில், சொந்தமாக, வான்பரப்பு என்று ஒன்று உண்டா என்று சர்வதேச ஆய்வாளர்களை கேள்வி கேட்க வைத்த சீனத்தின் நடவடிக்கைகள் கட்டுக்கடங்காமல், இன்றும்,இன்னமும் தொடர்வதாகவே இருக்கின்றது.

இச்சுற்றி வலைப்பின் முக்கிய அம்சங்கள் இரண்டு: ஒன்று, தாய்வானைச்சுற்றி வளைத்து, தாய்வானுக்கு அதன் கையாலாகாத தனத்தை காட்டிக்கொடுப்பது. (அமெரிக்க ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்கள் நிறையவே இருந்த போதிலும்). மற்றது, அமெரிக்காவின் கடற்படைத் தளமான குஹாம் தளத்திலிருந்து அமெரிக்க போர் கப்பல்களை (அல்லது விமானங்களை) நிறுத்தி வைத்து, “கடல் வழி பாதை சுதந்திரம்” (Navigation Right) என்ற வாய்பாட்டை அர்த்தமில்லாமல் ஆக்கி, தாய்வானுடன் அதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லாமல் செய்துவிடுவது.

இதுவும் சரி, அல்லது ஏற்கனவே கூறினால் போல் தாய்வானின் மேலாக, தாய்வானின் வான்பரப்பை ஊடறுத்து, தான் செலுத்திய ஏவுகணையின் விளைபயன்களும் சரி- கிஸிஞ்ஞரின் பயங்களை மேலும் மேலும் அதிகரிக்க செய்வதாகவே இருந்தன.

பொருளாதார தடையின் தாக்கமின்மையும் புதிய அணுகுமுறையும்!

“பொருளாதார தடை” என்பது வலுவிழந்து போன நிலையில், உக்ரைன் போரை அல்லது தாய்வான் போன்ற நெருக்கடியை, கட்டவிழ்த்து விடும் கட்டாயத்துக்குள் அமெரிக்கா தள்ளிவிடப்பட்டதாயிற்று.  இதற்கான அடிப்படை காரணம்: தனது பொருளியல் பலமும், தனது இராணுவ ஆதிக்கத்தின் பலமும் கைமாறிய ஒர் உலக ஒழுங்கு என்பது மெது மெதுவாக உதித்து, நிலைநாட்டபட்டு வருவதே என்பது சர்வதேச ஆய்வாளர்களின் முடிவாகின்றது. ரஷ்யா-சீனாவின் பொருளாதார பலம், அவற்றின் சந்தை வலையமைப்புகள் போன்றவை நாளுக்கு நாள், நீண்டு வருகையில், முதலாளித்துவம் பெயரளவிலேனும் சிபாரிசு செய்திருக்கக்கூடிய, திறந்தவெளி அல்லது சமநிலைமிக்க சந்தைப்போட்டி (Free Market)) என்பது சாத்தியப்பட முடியாத ஒன்றென ஆகின்றது-அமெரிக்காவை பொருத்தவரையில் அதாவது, இத் திறந்தவெளி சந்தையின், முரண்பட்ட உண்மை சொரூபம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்து என்றை விடவும், தெளிவாக இன்று வெளிப்படத் தொடங்கியுள்ளது.

இனி, இத்தகைய சூழலில், திறந்தவெளி பொருளியல் போட்டி என்பதானது தனக்கு பாதகமாகவே அமையும் என்ற ஒரு சூழலில், அல்லது, அதனை சாதகமாக, தான், கையாள முடியாத ஒரு சூழலில், அச்சூழலையே தவுடுபொடியாக்கி விடுவது இதன் முதற்படியாகின்றது.

ஆரம்பத்தில், இதற்கு “கொரோனா பெருந்தொற்று”, கைக் கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதாவது, கொரோனா பெருந்தொற்றானது, அனைத்து உலக பொருளாதார முன்னெடுப்புகளையும், பின்தள்ளி, பின் உலக விநியோக வலையமைப்புகளையும் (Supply chains) சிதைத்து நிர்மூலமாக்கி, உற்பத்திகளை ஓய்வு நிலைக்கு அல்லது குறைந்த பட்சம், அதன் வாய்ப்;பையும் வலிமையையும் குறைத்து, தானும் போட்டியிடும் நிலைமைக்கு கொண்டுவந்து சேர்த்து விடும் என்ற எதிர்பார்ப்பில் முன்னெடுக்கப்பட்ட ஒன்று என்பது சிற்சில ஆய்வாளர்களின் கணிப்பாகின்றது.     
              
ஆனால் இது தோற்று விட்டது. உலகம், “கொரோனா பெருந்தொற்றை”, தன்னளவில் சமாளித்து, மீண்டும் உற்பத்தியையும் விநியோக கட்டமைப்புகளையும் மீள் புனருத்தாரணம் செய்து விட்டது.  ஆக, “கொரோனா” போலவே, அமெரிக்காவால் விதிக்கப்பட்ட “பொருளாதார தடைகளும்” எதிர்ப்பார்த்த அளவில் நம்பிக்கை தருவதாய் இருக்கவில்லை.

இச்சூழலில், சிதைத்து இடிக்கப்பட்ட, பெர்லின் சுவரானது, மீள கட்டியெழுப்பப்பட வேண்டிய தேவையை எதிர்நோக்கியது – ரஷ்யாவை, தனிமைப்படுத்துவதென்றால்! (அல்லது, தனது ஐரோப்பிய சந்தையை அல்லது ஐரோப்பாவுடனான தன் உறவுமுறைகளை வலுப்படுத்தி கொள்வது முடியாது போய்விடும் என்ற அச்சமும் எழுவதால்!!) இதன் நடைமுறைத்திட்டங்கள் தாம் “உக்ரைன்-ரஷ்ய” மோதல் எனவும் மேற்படி ஆய்வாளர்களால் முடிவுசெய்யப்பட்டது.

2

ஆனால், இப்படியாய் எழுப்பப்பட்ட இன்றைய பெர்லின் சுவரிலும், இன்று விரிசல்கள் கண்டிட துவங்கியுள்ளதே, என்பதுதான், கிஸிஞ்ஞரின் பயங்களுக்கான மூலக்காரணம் ஆகின்றது. அதாவது, ஸோரோஸ், விரிசல்களை கண்டுக்கொள்ளாமல், தொடர்ந்தும் ரஷ்யாவானது, யுத்தத்தில் தோற்று வருகிறது என்று வாதிடும் நிலைமையில், கிஸிஞ்ஞர் நின்றாரில்லை.

உண்மையில்,வெகு ஆரம்பத்தில், உக்ரைன்-ரஷ்ய போர், ஸோரோஸின் எதிர்ப்பார்ப்புகளுக்கு அமைய அல்லது திட்டங்களுக்கு அமைய நடந்தேறியதாகவே “காட்சி” தந்தது. அதாவது, ரஷ்யாவின் “தனிமை படுத்துகை” என்ற நிகழ்ச்சி நிரலும்;, ஐரோப்பிய யூனியனின் ஒன்றுபட்ட கூட்டு சக்தி என்பதும், நேட்டோ என்ற பெயரில் தங்கு தடையின்றி, முன்னேறி வேகமுடன் நகர்வதாக “ஆரம்பத்தில்” காணக்கிட்டியது.

ஆனால், நாள் செல்ல செல்ல ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒன்றுக்கொன்று தலை மறைவாய், ரஷ்யாவுடன், வௌ;வேறு மட்டங்களில், கொடுக்கல்-வாங்கல் செய்து கொள்ளும் நிலமைக்கு தள்ளப்பட்டு விட்டன. இதற்கான அடிப்படை காரணங்களாக இருப்பவை, ரஷ்யாவின் எரிவாயு-எரிபொருள் சக்தி என்பதும் இந்நாடுகள் அச்சக்திகளில் தங்கியிருந்தமையும்தான். (அண்மையில், ரஷ்யா, உணவு விடயங்கயளிலும், எரிபொருள்-எரிசக்தி விடயங்களிலும் மூன்றாம் நபர்களுடன் ஒப்பந்தங்களை செய்துக்கொள்ளலாம் என்று ஐரோப்பிய யூனியன் அண்மையில், தடையை தூக்கி பச்சை கொடி காட்டிய சமயத்தில், ஏற்கனவே உலகில் தடைகளாலும், உக்ரைன்-ரஷ்ய யுத்தத்தாலும் உணவு நெருக்கடி துவங்கியிருந்தது).  

இதுபோக, ரஷ்யாவும் தனது எரிபொருள் சக்திகளுக்காக இனி ரூபிலில் (டாலரில் அல்லாது) பணம் செலுத்துபவர்களுக்கு மாத்திரமே எண்ணெய்-எரிவாயு வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டது. (இனி ரூபிலைத் தேடி எங்கு போவது-வேறு ஏற்றுமதி போன்ற ஒப்பந்தங்களை ரஷ்யாவுடன் செய்து கொள்ளாமல்?) போததற்கு, அவ்வப்போது, ஏதாவது ஒரு அடிப்படையை வைத்து ரஷ்யா, எரிவாயு குழாய்களை மூடி-திறந்து, எலி-பூனை விளையாட்டை விளையாடவேறு தொடங்கிவிட்டது.  

இச்சூழலில், இந்தியாவும் சீனாவும் போட்டிப்போட்டுக்கொண்டு எண்ணெய்-எரிவாயு ஆகியவற்றை மிக,மிக லாபகரமான நிலைமையில் இறக்குமதி செய்து மகிழ்ந்தன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் (ஜெய்சங்கர்) ரஷ்யாவுடனான இந்த வியாபாரம் சம்பந்தமான விமர்சனத்தை எதிர்கொண்ட போது, “நாங்கள் ரஷ்ய எண்ணெய்யை வாங்க வில்லை – மாறாக லாபகரமான எண்ணெய்யையே –வாங்குகின்றோம்-உலக சந்தையில். அது ரஷ்ய எண்ணெய்யா அல்லது வேறு ஏதாவதா என்பது எமது கவனத்திற்கு அப்பாற்பட்டது” என்றார.; இந்நிலைப்பாடு, பார்வைக்கு தர்க்க பூர்வமாக இருந்தாலும், உண்மையில் இது  ஓர் அமெரிக்க-எதிர் நிலைப்பாடு அல்;லது அமெரிக்க எதிர்பார்ப்புக்கு மாறான நிலைப்பாடு என்பது வெளிப்படை.

இதே போன்று, சீனாவினது, ரஷ்ய எரிசக்தி கொள்வனவானது, போர்த் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை 75% த்தால் அதிகரித்து விட்டது என்ற உண்மையினை “Bloomberg”” அண்மையில் சுட்டிகாட்டியிருந்தது. (25.8.2022). அதாவது, சீனத்தின் முதல்தர, எரிசக்தி விநியோகஸ்தராக, ரஷ்யா, தன்னைத்தான் இன்று நிலைநாட்டிவிட்டது.

ரஷ்யாவை, இப்படி சீனத்தை நோக்கி அல்லது இந்தியாவை நோக்கி அல்லது மொத்தத்தில் கிழக்கை நோக்கி தள்ளிவிடும் இச்செய்முறையுடனேயே, கிஸிஞ்ஞரின் பயங்களும் உருவெடுக்கத் தொடங்குகின்றன.  ஆனால், பயங்கள் இத்தோடு முடிந்த கதையாகவும் இல்லை.

உலக அரங்கில், ரஷ்ய-உக்ரைன் போர், யாரை உண்மையில் தனிமைப்படச்செய்துள்ளது, என்பது இன்று மாபெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது.

உதாரணமாக, ஸெலன்ஸ்கி, இணைய வழி மூலம் கூட்டிய, 55 நாடுகளைக் கொண்ட ஆபிரிக்க மாநாட்டில், (மேற்கின் பல்வேறு அழுத்தங்களினது மத்தியிலும்), நான்கே நான்கு நாடுகள் மாத்திரமே பங்கேற்றன (25.6.2022) என்ற அறிவிப்பு உலக அரங்கில் அதிர்ச்சி அலைகளை உண்டுபண்ணுவதாகவே இருந்தது. இதனை போன்றே, கடந்த ஜூலை மாதத்தில,; ஒன்பது மத்தியகிழக்கு நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொண்ட, பைடனின் சுற்றுலாவும், எதிர்பார்த்த நன்மைகளை கொண்டு வந்து சேர்த்ததாயும் இல்லை.

உதாரணமாக, ட்ரம்ப் சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது, சவூதி மன்னரே விமான நிலையத்துக்கு விஜயம் செய்து, ட்ரம்பை வரவேற்று அழைத்து சென்ற காலம் போக, இம்முறை பைடனை விமான நிலையத்திலிருந்து அழைத்து செல்ல, இளவரசர் ஸ்தானத்தில் இருப்பவர் கூட வந்ததாயில்லை என்ற செய்தி சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாய் பேசப்பட்டது.

இதுபோலவே, மிக அண்மித்த செய்திகளின் படி இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான, அஜித் டோவால், ரஷ்ய தேசிய பாதுகாப்பாளரை சந்திக்க, பெரிதும் வெளிப்படுத்தப்படாத, விஜயத்தை மேற்கொண்டார் என்ற செய்தியும் வந்து சேர்ந்தது (20.8.2022).

மறுபுறமாய், நூறு நாட்கள் போர் முடிந்த நிலையில் அண்மையில் ஹைப்பர்சோனிக் (Hypersonic) ஏவுகணையை உக்ரைனுக்கு எதிராக பாவிக்க ஆரம்பித்து விட்டோம் என்றும் (செப்டெம்பர் 2022) தன் அதி நவீன ஏவுகனையான “சர்மத்-2” ஏவுகணையை பெருவாரியாக உற்பத்தி செய்ய (Serial Production) தொடங்கி விட்டோம் என்றும் ரஷ்யா அறிவித்து விட்டது. (ஹைப்பர்சோனிக் அல்லது சர்மத்-2 ஏவுகணை மணிக்கு 24,140 கிலோமீற்றர்கள் பயணம் செய்யும் ஆற்றல் உடையவை).

உலக நாடுகளில், ரஷ்யாவும் சீனாவும் மாத்திரமே ஹைப்பர்சோனிக்  ஏவுகணைகளை கொண்டிருக்கும் நாடுகளாக இருப்பதும், அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் இத்தொழிநுட்பங்கள் குறித்து மேலும் செயலாற்ற வேண்டிய நிர்பந்தங்களிலேயே இன்னமும் உள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது.  ஆனால், ரஷ்யா, இன்னமும் தன் முழு வலிமையையும் காட்டி போராட முன் வரவில்லை என்றே கூறப்படுகின்றது. இது உண்மையாக இருக்கலாம். ஏனெனில் ரஷ்யா தன் கிடங்கில் உள்ள அனைத்து ஆயுதங்களையும் இன்னமும் பாவிக்க தொடங்கி விட்டதாக தெரியவில்லை. மற்றும், ரஷ்ய ஏவுகணைகளை விட, வரவிருக்கும் குளிர்காலமே சிறந்த ஒரு ஏவுகணையாக ரஷ்யாவுக்கு, அமைந்து, விடயங்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து சேர்த்துவிடும் வல்லமை கொண்டதாக இருக்கும் என ரஷ்யா  கருதுவதாகவும் உள்ளது.

உதாரணமாக, “Bloomberg”” இன் அறிவிப்பின் படி, இங்கிலாந்தின் சராசரி வாழ்க்கை செலவு, ஒக்டோபர் மாதம் முதல், 80 சதவீதத்தால் அதிகரிக்க கூடும் என்பதும், எரிசக்தி விலைப்பட்டியலானது, ஒவ்வொரு சராசரி குடியிருப்புளை பொருத்த மட்டில், 3500 பவுன்களை தாண்ட கூடிய சாத்திய கூறுகள் உண்டு எனவும், இது, நோய்களுக்கும் மனித இறப்புகளுக்கும் இட்டு செல்ல கூடும் என்றும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது (25.8.2022).

இவை அனைத்தும் கிஸிஞ்ஞரின் பயணங்களின் பின்னால் அமர்ந்திருந்தவைதான் என்பதில் சந்தேகமில்லை. அதாவது, ஓர் தாய்வான்-உக்ரேனிய அணுகுமுறை, தன்னை காப்பாற்றி விடும், ஐரோப்பிய நாடுகளை ரஷ்யாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் பிரித்து விடும், முக்கியமாக ஒரு பெர்லின் சுவரை எழுப்பிவிடுவதில் வெற்றி கிட்டிவிடும்¬ - இது, ஐரோப்பாவை தன்னுடன் நிரந்தரமாக நெருக்கமாக்கிவிடும் - மேலும், உலக விநியோக வலைப்பின்னலை சிதைப்பதற்கூடு, மற்றும் சர்வதேச உற்பத்தி மட்டத்தை குறைப்பதற்கூடும், தானும,; தற்போது ஒரு பலமிழந்த நிலையில் இருந்தாலும் கூட, ஓர் கட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் வெற்றியீட்டிக்கொள்ளலாம் - என்ற நப்பாசை ஸோரோவில் இருப்பது போல் மேற்கின் அடியாழத்திலும் இருப்பதையிட்டு கிஸிஞ்ஞர் சஞ்சலப்பட்டு போனதாகவே தெரிகின்றது.

அவரது கூற்றின் பிரகாரம் போரின் முடிவு ஓர் “வெளிப்படை வெற்றியாளனை”  தருமிடத்து (A Clear Winner), அது ஓர் அபாயகரமான சூழலுக்கே இட்டுச்செல்லும் என்பது தவிர்க்க முடியாதது என்பதாகும். எனவேதான், அவர் ஆரம்பம் தொட்டே, யுத்தமானது ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டாக வேண்டும் என்பதற்காய்  போராடுபவராய் இருக்கின்றார். ஆனால் யதார்த்த நிலமைகளோ யுத்தங்களை தூண்டிவிடுதலை நோக்கி பயணிப்பதாய் இருக்கின்றது.

உதாரணமாக உக்ரைனுக்கு மேலும் மூன்று கோடி டாலர்கள் பெறுமதியான யுத்த உபகரணங்கள் வழங்கப்படும் என்ற அமெரிக்காவின் கூற்றும், இங்கிலாந்தின் மேலும் உக்கிரமுறும், யுத்தம் சார்ந்த நடவடிக்கைகளும், ஐரோப்பிய யூனியன்கூட்டில் ஏற்பட கூடிய விரிசலைத் தடுத்து, அவற்றை ஒன்றுபடுத்தி, அவற்றை மேலும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் ஒரு நடைமுறையின் பகுதியாகத்தான் பார்க்கப்படவேண்டியுள்ளது. அதாவது, மேலே கூறியவாறு போர் மேகங்களின் சூழுகை இன்னும் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. யுத்தங்களை நோக்கி நாடுகள் நெட்டித்தள்ளப்படுகின்றன.  இச்சூழ்நிலையிலேயே யுவான்-5 கப்பலும் இலங்கை வந்து சேர்ந்தது.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.