இரு தினங்களின் முன், இலங்கையின் தூதுவர் மிலிந்த மொரகொட, இந்தியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலை, புதுடெல்லியில் சந்தித்து சீன உளவு கப்பல் யுவாங்-5 வரவின் பின்னராய், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக  Hindustan times செய்தி வெளியிட்டிருக்கின்றது. (16.01.2023) இதற்கு இரு தினங்களின் முன்னதாக, இலங்கை தூதுவர் அவர்கள், குஜராத் மாநிலத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து, குஜராத் முதலமைச்சருடனும், வேறு சில பாரதிய ஜனதா முக்கியஸ்தர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும் செய்தி குறிப்புகள், பதிவு செய்திருந்தன.

அஜித் டோவாலுடனான மேற்படி சந்திப்பானது, யுவாங்-5இன் வரவால், சீர்குலைந்ததாய் கருதப்பட்ட இலங்கை-இந்திய உறவுநிலையை, மறுசீரமைப்பது குறித்தும், இனி வார இறுதியில் வரவிருக்கும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்களின் வரவு குறித்துமே சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.  உறவுகளை மறுசீரமைப்பதற்கான இவ்வகையான முயற்சிகள், இலங்கை-இந்திய உறவுகளுக்கு மாத்திரம் தனித்துவமான ஒரு பிரச்சினை என்றிராது, இஃது ஓர் உலகலாவிய நடைமுறையாக இன்று உருவாகத் தொடங்கியுள்ளது என்பது குறிக்கத்தக்கதாகும்.

அதாவது உலகம், ஓர் உக்ரைனிய-ரஷ்ய போரின் தாக்கத்தினால் அல்லது அமுல்படுத்தியதாய் கூறப்படும் ஓர் பொருளாதார தடையால் அல்லது ஒரு கொவிட் பெருந்தொற்றால் சின்னாப்பின்னமுற்று, தனது உறவுமுறைகளை ஒரு மீள் பரிசீலனையின் பின் புணரமைத்து கொள்ளும் ஓர் நடைமுறையில், இப்பேச்சுவார்த்தைகளும், உறவுமுறைகளை புதுப்பித்தல்களும் தவிர்க்கமுடியாதவை என்பது வெளிப்படை. அதாவது, இதுவரையில், இயங்கி வந்த ஒரு  Unipolar World என்ற ஓர் மாபெரும் சகாப்தம் தன் முடிவினை எட்டும் தருவாயில் ஒரு  Multipolar World இன் புதுவரவை, உலகம் இன்று எதிரொலிப்பதாகவே இப்பேச்சுவார்த்தைகள் காணப்படுகின்றன என்பதே ஆய்வாளர்களின் அனுமானமாகும்.

இத்தகைய ஒரு பின்னணியிலேயே, மேற்படி பேச்சுவார்த்தைகளும் இடம்பெறுவதாய் உள்ளன என்ற போதிலும் இப்பேச்சுவார்த்தைகளின் மொத்த சாரம் என்ன என்பதுவே ஆழமான வினாவாகின்றது. காரணம், இப்புதிய மீள் புணரமைப்பும், இதற்கான குறித்த கலந்துரையாடல்களும் மேலோட்டமாய் பார்க்குமிடத்து இரு நாடுகளுக்கிடையேயான ஒரு சராசரி கலந்துரையாடல் என்றளவில் தென்பட்டாலும், ஒரு விசாலபார்வையில், இப் பேச்சுவார்த்தைகள், ஓர் புதிய தளத்தில் இயங்குவதாக உள்ளன என்பது குறிக்கத்தக்கது.

இந்தியாவின் வளர்ச்சியும், அது உலக அரங்கில் இன்று பெற்றுறிருக்கும் அந்தஸ்த்தும் இன்றைய இந்தியா நேற்றைய இந்தியாவாக இல்லை என்பதனைத் தீர்க்கமாக வெளிப்படுத்துவதாக உள்ளது. உலக அரங்கில், நேற்றைய இந்தியாவின், நாசூக்காக விடயங்களை முன்னெடுக்கும், ராஜதந்திரங்கள் மறைய, இன்று ஜெய்சங்கரின் வெளிப்படையான குரல் ஓங்கி ஒலிப்பதை காண்கின்றோம்:

“எமது மக்களின் நலன் தொடர்பான விடயங்களே எமக்கு தலையானது. அந்த அடிப்படையிலேயே நாங்கள் செயற்படுகின்றோம். மேற்கு அல்லது ஐரோப்பிய யூனியன் ஆகியோரின் அளவுகோல்கள் முதலில் எங்கள் மீது பிரயோகிகக்கப்படுவதற்கு முன் அவர்கள் தாங்களாகவே தங்களுக்காய் பிரயோகித்து கொள்வது சால சிறந்தது. அதற்கு அவர்கள் கடமைப்பட்டவர்கள்”

என்ற அவரது குரலில் ஒலிக்கும் ஆணித்தரம் கவனித்து நோக்கத்தக்கதே.

பாகிஸ்தானுக்கு, F-16 விமானங்களை வழங்குவதற்கூடு, இந்தியாவின் மீது, மேலும் அழுத்தங்களை பிரயோகித்து, அதனை ஒரு வழிக்கு கொண்டுவந்து சேர்த்துவிடலாம் என்ற நடைமுறை, இன்று வெறும் நப்பாசையாகிவிட, இன்று, மேற்கு பிறிதொரு நடைமுறையை பின்பற்றத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.

இதற்கு வளம் சேர்ப்பது போல், சில தினங்களின் முன் பாகிஸ்தானின் பிரதமர், அல்-அரேபியா தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியானது பரவலான முக்கியத்துவத்தை பெற்றதாய் உள்ளது.   

2

காஷ்மீரையும் அது தொடர்பான தீவிரவாதத்தையும் கூடவே, தீவிரவாதிகளையும் போஷித்து வளப்படுத்தி வந்த பாகிஸ்தான், இதுகாலம் வரை, இந்நடைமுறையானது, தன் பாதுகாப்புக்கு இன்றியமையாதது என்பதில் மாற்றுக்கருத்து இல்லாமல் இருந்தது. அதாவது, ஒரு இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் ஓர் நடைமுறையில், தன் இருப்புக்கு இடம் தேடும் ஒரு நாடாக இருந்து வந்தது.  அதாவது, இந்தியாவே, இந்தியா மாத்திரமே தனது ஒரே பகை நாடு என்ற ஒரு நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே கடந்த கிழமைவரை பாகிஸ்தான், நடைமுறையில் செயற்பட்டு வந்துள்ளது.

‘நாங்கள் இந்தியாவின் மீது ஓர் அணுகுண்டை வீசி எறிவோம்’ என்ற இம்ரான்கானின் சூளுரை முதல், இம்ரான் கானின் பதவி கவிழ்ப்பிற்கு பின்னதான புதிய அரசின் கடந்த மாத சூளுரை வரை, இவ்வெளிப்பாடு சந்தேகத்துக்கிடமில்லாத வகையில் மிக நேரடியாக ஆற்றப்பட்டு வந்த ஒன்றுதான்.

இப்பகைமையைப் பாராட்டி, வளர்த்து, செழிப்பூட்டுவதற்கூடாகவே அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளுடனும், சீனத்துடனும் தன் உறவு முறைகளை வளர்த்து, அதற்கூடு, தன் நாட்டுக்குரிய வளங்களை பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை இன்று முடிவடைய தொடங்கியுள்ளது என்ற சமிஞ்சைகளை இன்று பாகிஸ்தான் வெளிப்படுத்த தொடங்கியுள்ளது.

தன் அல்-அரேபியா, நேர்காணலின் போது, இன்றைய பாகிஸ்தான் பிரதமர், சில தினங்களின் முன், வெளியிட்ட மூன்று முக்கிய கூறுகள் வருமாறு:

i. இந்தியாவுடன் இதுவரை தாம் நடத்திய மூன்று போர்களால் இன்றைய பாகிஸ்தான் சின்னாப்பின்னப்படுத்தப்பட்டிருக்கின்றது. இன்றைய பாகிஸ்தானின் பொருளாதார சீரழிவுகளுக்கு இவ்யுத்தத்தின் பெறுபேறுகளே அடிப்படை காரணங்களாகின்றன.

ii. பாகிஸ்தான் இதுவரை கைக்கொண்டிருந்த தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நடைமுறையானது இனியும் பாகிஸ்தானால் தொடரப்படலாகாது.

iii. இப்பின்னணியில், பாகிஸ்தான் இந்தியாவுடன் ஒரு நல் பேச்சுவார்த்தைக்காக இதய சுத்தியுடன் செயல்பட தயாராக உள்ளது –காஷ்மீர் தொடர்பிலான தனது நிலைப்பாடுகளை தளர்த்திக் கொண்டு.


3

பாகிஸ்தானின் விவகாரங்கள் இது போன்று நடக்க, இதனை போன்றே, எமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் இலங்கையின் 75வது சுதந்திர தினத்தில், இலங்கையின் தமிழ் அரசியல் பிரச்சினையை ஒட்டு மொத்தமாக முடித்து வைத்து விடுவது என்று சபதமிட்டு, ஒரு பேச்சுவார்த்தையை தொடங்கினார் எனலாம்.   ஆனால், அவரது இவ் அணுகுமுறையானது, இனி வரவிருக்கும் ஒரு பாகிஸ்தானிய அணுகுமுறைக்கு (பேச்சுவார்த்தை முடிவுகளுக்கு) கட்டியங் கூறுவதாகவே அமைந்து கிடக்கின்றது என கூறப்படுவதிலும் நியாயங்கள் இல்லாமல் இல்லை.

காரணம், 31ம் திகதிக்கு முன், தான் தீர்ப்பதாக இருந்த கைதிகள் பிரச்சினையும் சரி, காணி பிரச்சினையும் சரி, அல்லது காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையும் சரி அல்லது பயங்கரவாத தடைச்சட்டம் சார்ந்த பிரச்சினையும் சரி –அவர் தீர்த்தப்பாடில்லை –தன் ஆரம்பத்து உறுதிமொழிக்கு இணங்க என்பது இன்று அப்பட்டமாகி உள்ளது.

இருந்தும், கல்லைக் காணும் வரை நாயுடன் பேசியாக வேண்டும் என்று தமிழ் அரசியல்வாதி ஒருவரால் அண்மைக்காலங்களில் ஆற்றப்பட்ட கூற்று எம் அனைவராலும் கவனிக்கத்தக்கது என்பதிலும் ஐயமில்லை.  ஆனால், ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் என்பது, இந்நாட்டின் இனப்பிரச்சினையை தீர்க்க என்றுமே உதவபோவதில்லை எனும் விடயம், எமது விருப்பு வெறுப்புகளை தாண்டிய ஒரு யதார்த்தம் என்ற ரீதியில், ஏற்கனவே பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன என்ற உண்மையினையும் சுட்டாமல் இருக்க முடியாது. (உதாரணமாக இது தொடர்பில், சில கிழமைகள் முன்னதான “பதிவுகள்” கட்டுரையையும் பார்வையிடலாம்).

4

ரணிலின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு என்பது வெறுமனே ஒரு ‘நன்நோக்கத்தால்’ அல்லது ஒரு ‘நல் அரசியல்’ பண்பால் முகிழ்த்த ஒன்றல்ல எனும் உண்மையானது, நன்றாகவும் தெளிவாகவும், ஆரம்பத்திலேயே, புரிந்துக் கொள்ளப்பட வேண்டிய முதல் விடயமாகின்றது. (உண்மையிலேயே பேச்சுவார்த்தைக்கான அழைப்பு கிட்டும் போதே இவ்விடயங்கள் தொடர்பில் சிந்தித்து தெளிந்திருக்க வேண்டிய முன்நிபந்தனைகள் உண்டு).

மறுபுறத்தில், இப்படியான தேவைகளுக்கான, ‘கட்டாயங்களை’ (பேச்சுவார்த்தைக்கான கட்டாயங்களை) உருவாக்ககூடிய நிலையிலும் எமது தமிழ் தரப்பு இன்று இருந்ததாகவும் இல்லை.  அதாவது, ஒரு பேச்சுவார்த்தையை இடம்பெற செய்வதை வலியுறுத்தும் அகசக்தி பெறுபேறுகளை தமிழ் தரப்பு இன்று கொண்டதாயிருக்கின்றது என்பது சந்கேகத்துக்கிடமானதே. இதற்கான இரு முக்கிய காரணிகளை இலங்கை அரசு அறியாமலும் இல்லை எனலாம். அதாவது போராடி வந்த ஒரு இயக்கம் இல்லாமல் போனமை, மற்றது இதைவிட முக்கியமாக, கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள், புலம்பெயர் அகதிகளாக வெளியேறி உள்ளமை.

இவ்விரு காரணிகளும், ஒருங்கே செயற்பட்டு ஒரு சமூகத்தின் பேரம் பேசும் சக்தியை கிட்டத்தட்ட இல்லாமல் ஆக்கிவிட்டதோ என்று அஞ்சும் நிலைக்கு இன்று விடயங்கள் தாழ்ந்து விட்டதாய் உள்ளன.  காரணம், கைதிகள் விடயமாகட்டும், அல்லது காணாமல் போனவர்களின் பிரச்சினையாகட்டும், அல்லது காணி விடுவிப்புகளின் கோரிக்கையாகட்டும் - இவை கண்டுக்கொள்ளப்பட்டதாகவே இல்லை. ஆனால், இவை பேசு பொருளாக ஜீவிக்கின்றன என்பதும் மாத்திரம் உண்மையானதே.

ஆகவே, சாரம்சத்தில், ரணிலின் நகர்வும், இவற்றை வெறும் பேசு பொருளாக மட்டும் வைத்து, இழுத்தடித்து தம் நகர்வுகளை முன்னெடுப்பதா இல்லையா என்பதேயாகும்.  உதாரணமாக அன்னாரின் அண்மித்த வடக்கிற்கான தமது பொங்கல் விஜயத்தின் போது அன்னார் திட்டவட்டமாக அறிவித்தது மூன்றே மூன்று விடயங்கள் தான்:

ஒன்று, 13வது திருத்தச்சட்டம் பூரணமாக அமுல்படுத்தப்படும். மற்றது, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உண்மை கண்டுப்பிடிக்கப்படும். மேலும், இதற்காக தனியே ஓர் விசாரணை கமிஷனும் நியமிக்கப்படும் என்பதே அவையாகும்.  ஆனால், இச்செயற்திட்டங்கள் எப்போது அல்லது எத்தினத்தில் நடைமுறைக்கு வரும் என்பதெல்லாம் வெறும் கேள்வியாகவே நீடிக்கின்றது – நீடிக்கவும் செய்யும்.  அதாவது, எப்போது இம்மூன்றும், நடந்தேறும் என்பதற்கான நேர அட்டவணையோ அன்றி ஒரு தடயப்பொருளோ உரையில் எங்குமே ஒலித்ததாக இல்லை.  இதனாலோ என்னவோ, வீரகேசரி தன் தலைப்பு செய்தியாக, ‘13ஐ முழுமையாக அமுல்படுத்துவேன்’ என்று தலைப்பு செய்தி வெளியிடும் போது ‘13 உடனடியாக அமுலாகாது’ எனத் தினக்குரல் தன் தலைப்பு செய்தியை தீட்டியிருந்தது (16.01.2023).

இவ்விதமாய், இவ்விரு பத்திரிகைகளும் தத்தமது தலையை உடைத்து கொள்ளுமாறு செய்வது ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தனித்திறமை எனலாம்.  போதாதற்கு அவர், நாட்டின் மலையக பிரச்சினை, இஸ்லாமிய சமூகத்தின் பிரச்சினை, கிராமங்களில் நிலவக்கூடிய சாதிகளின் பிரச்சினை என ஏகப்பட்ட பிரச்சினைகளை தன் உரையின் போது முன்வைக்கவும் அன்னார் தவறியதாகவும் இல்லை.  அதாவது, பாகிஸ்தான் பிரதமரின் பிரேரிப்பு பேச்சுவார்த்தை-நல்லெண்ணம் போன்ற சொல்லாடல்கள் இலங்கையிலும், பேச்சுவார்த்தை-நல்லெண்ணம் என்ற நகர்வு போன்றே பிரயோகிக்கப்படுவதாய் உள்ளது என்பது மேற்படி ஆய்வாளர்களின் கருத்தாகின்றது.

போதாதற்கு தமிழ் கூட்டமைப்பும், தேங்காய்ச் சிதறல்கள் போல் சிதறடிக்கப்பட்ட இன்றைய நிலையில் இருக்கும் போது, கூடவே, மனோ கணேசனும் மலையக பிரச்சினைகள் கண்டுக்கொள்ளப்படாவிட்டால், நாங்களும் பேச்சுவார்த்தையில் பங்கெடுக்க போவதில்லை, என்ற ஓர் உள்குத்தை வழங்கிவிட்ட நிலையில் ரணிலின் விடயங்கள், எதிர்ப்பார்ப்பதை விட அவருக்கு எளிதாகி விட்டன என்பது இவ் ஆய்வாளர்களின் அபிப்பிராயமாகின்றது.  ஆனால் இவை அனைத்தும் நடந்தேறியது தற்செயலானதா அல்லது ரணிலின் சாணக்கிய நகர்வுகளால் சாத்தியப்பட்டு போனதா என்பதை, காலத்தில் அறிய தருவேன் என்ற சுமந்திரனின் கூற்றும் அவதானிக்கத்தக்கதே.  இருந்தபோதிலும், இவை அனைத்தும் வரவிருக்கும் (அல்லது வந்திருக்கும்) ஜெயசங்கருக்கான முன் அறிவிப்புகளாகவும் ரணிலால் விடப்பட்டிருக்கலாம் அல்லது தமிழ் அரசியல்வாதிகளுடனான ஜெய்சங்கரின் பேச்சுவார்த்தைகளை கட்டமைக்க அவிழ்த்து விடப்பட்டவையாக இருக்கலாம் என்பதிலும் சந்தேகமில்லை.

5

காலம் காலமாக, இந்தியாவுக்கு அழுத்தம் தரும் புள்ளிகளை கவனித்து தேர்ந்து கொள்வதில் ‘மேற்கு’ என்றுமே சமயோசிதமாகவே நடந்து வந்துள்ளது என்பதே ஆய்வாளர்களின்  மொத்த கணிப்பாகின்றது.  உண்மையாக இருக்கலாம். ஏனெனில், இத்தகைய உசிதமான நடைமுறைகள் கைக்கொள்ளாமல் தான் கோலோச்சி செய்யும், தன் உலக முதலிடத்தை, தொடர்ந்தும் தக்கவைத்து கொள்வது என்பது மேற்கிற்கு (இதுவரை) சாத்தியப்படாததாகும்.  ஆனால், இன்று விடயப்பொருள்களின் மாற்றம், அதாவது சம்பந்தப்பட்ட சக்திகளின் குணமாற்றம் என்பது அம்மாற்றங்களுக்கு சமதையான, அரசியல்-நகர்வு மாற்றங்களை கோருவதாய் உள்ளன.  இப்பின்னணியிலேயே ரஷ்ய-சீன-இந்திய நாடுகளின் இன்றைய வளர்ச்சி நிலை, உலக அரங்கில், ஒரு புதிய அணுகுமுறையைக் கோரி நிற்கின்றன.

இதனாலேயே, பாகிஸ்தானின் பிரதமர், இன்று தங்களின் கடந்த மூன்று முறை யுத்தமும் வீணாகி போன நிலையில், இனியும் தான் தீவிரவாதத்தின் பிறப்பிடமாகவும், பாதுகாப்பு அரணாகவும் இருக்க போவதில்லை என்று சூளுரைத்து, பேச்சுவார்த்தைக்கான ஒரு அவாவை வெளிப்படுத்தும் நடைமுறைக்கு வந்து சேர வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகி போயுள்ளது, தெரிய வருவதாயுள்ளது. கேள்வி, இவற்றை இந்தியா இன்று எந்தளவில் நம்பும் என்பதும், இதற்கான பின்னணி அரசியல்களை அல்லது இயக்குவிக்கும் கரங்களை இந்தியா ப10ரணமாக அறிந்த பின்னரே இது தொடர்பான தன் அடுத்த அடியை எடுத்து வைக்கும் என்பதும் தெளிவாகவே செய்கின்றது. அதாவது, ஓர் ரஷ்ய அரவணைப்பிற்குள் முற்றாய் தான் தள்ளப்படுவதை தடுத்து நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நகர்வுகளாக இவை அல்லது சில ஊடகவியலாளர்கள் அபிப்பிராயப்படுவது போல் தான் ஒரு அமெரிக்க கூட்டு சக்திகளோடு தன் இணைப்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே ஆற்றப்படும் நகர்வுகளா இவை அல்லது இவை இரண்டும் இணைந்ததின் விளைவினால் தோன்றியவைதாம் என்பது இந்திய சாணக்கியர்களால் ஆராயப்பட வேண்டிய கூறுகளாகவே இருக்கின்றது.

6

இத்தகைய ஒரு பின்னணியிலேயே, ‘இலங்கையின் தமிழ் தரப்பும்’ தனது பேரம் பேசும் பலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டிய ஒரு நிர்பந்தத்தில் உள்ளது, எனலாம்.  அதாவது, ஒரு பேச்சுவார்த்தைக்கான எந்த ஒரு  கட்டாயமும், தமிழ் தரப்பின் உள்-பலத்தால், உருவாகாத வேளை, இப்பிரச்சினையை ஓர் அழுத்தப்புள்ளியாக கருதக்கூடிய இந்தியா, ஓர் முக்கிய காரணியாக, வரைபடத்தில் வீற்றிருக்கவே செய்கின்றது, என்ற உண்மை அடிப்படையானது.  

இவ் உண்மையை, யாரைவிடவும், நுணுக்கமாக-மிக நுணுக்கமாக-உள்வாங்கிய இலங்கை தலைவர்களில், ரணில் விக்கிரமசிங்க முதலாமானவர் என்ற கருத்து இன்று இலங்கையிலும் இந்தியாவிலும் பரவலாக காணக்கிட்டுகின்றது என்பதும் உண்மையானதே. இதனாலோ என்னவோ, இந்தியாவை இலங்கை தொடர்பிலான விடயப்பொருள்களில் இருந்து முற்றாய் அகற்;ற முடியாது அல்லது அது சாத்தியமற்றது என்ற ஒரு பின்னணியிலேயே, குறைந்தபட்சம், அவர்களை, தமிழ் கேள்வியில் இருந்து விலக்கி வைக்க முடியுமென்றால் அதுவே முக்கியமானது அல்லது அதுவே போதுமானது என்பது அவரது தலையாய நகர்வாகின்றது.

மேற்கின், செல்லப்பிள்ளையாக திகழ்ந்துவரும், திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களின் நகர்வுகள் முன்னைய ஜனாதிபதி கைக்கொண்டவை போன்ற முட்டாள்தனமான நகர்வுகளில் இருந்து முற்றாய் வித்தியாசப்பட்டவையாகும்.  அதாவது, வெளிப்படையாக காட்டப்படும் இந்திய எதிர்ப்புணர்வோ அன்றி வெளிப்படையான தமிழ்-முஸ்லிம் எதிர்ப்புணர்வுகளையோ அவர் காட்டுவதாய் இல்லை.  உதாரணமாக, இலங்கை தூதுவர், தமது மூன்று நாள் குஜராத் விஜயத்தின் போது ஓர் ‘இராமாயண வழிதடத்தை’ முன்னெடுப்பதற்கான ஒரு யோசனையையும், குஜராத் முதலமைச்சரிடம் நகர்த்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. (A Proposal for a Ramayana Trails:16.01.2023).

சுருக்கமாக கூறினால், கையூட்டு, வட-கிழக்கு நலன்களை தாரைவார்த்து விடுவது என்பதை இலங்கை-இந்திய உறவுகளை நிர்ணயிக்க வீசி எறியப்படுவதாயுள்ளன. இது போக வட-கிழக்கு நலன்களை இப்படி தாரைவார்த்து விடுவதற்கூடு–ஓர் இந்திய–வட-கிழக்கு சக்திகளை ஆளுக்காள், அடிபடவைத்து அதற்கூடே ஓர் தமிழ் கேள்வியை இந்திய நோக்காளர்களிடம் இருந்து கத்தரித்து விடும் திட்டம் - இவை அனைத்தும், ஏற்கனவே கூறிவைத்தாற் போல் தலையாய விடயங்களாகவே இருக்கின்றன.

உதாரணமாக, இந்நகர்வுகளின், நேரடி விளைவான ஒன்றை பார்ப்போமெனில், திரு.டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அண்மையில் நமது கடற்றொழிலாளர்களுக்கு, தமிழ் நாட்டு மீனவ படகுகளை இடித்து தள்ளுவதற்கு வழி செய்யும் வகையில், இரு இரும்பாலான கப்பல்களை வழங்கப்போவதாக அறிவித்துள்ளமையை குறிப்பிடலாம் (17.01.2023). அதாவது, இலங்கை கடற்படையினர், வட-கிழக்கின் தமிழ் படகுகளை தடுப்பதை விடுத்து, இவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே முரண்பாடுகளை ஊக்கப்படுத்தி விடுவதுதான் இந்நகர்வுகளின் மையப்புள்ளியாகின்றது.  எமது நீண்ட வரலாற்றில், இது, ஒரு மிக, மிக சிறிய உதாரணம் மாத்திரமே.  எனினும் இச் சாணக்கியத்திற்கு தமிழ் அரசியல், காலம் காலமாக பழிவாங்கப்பட்டு போனமையே வரலாறு.  அதாவது ஒருவர், இரும்பாலான கப்பல்களை முட்டி மோத வழங்கும் போது, மற்றவர் Ramayana Trailஇல் உல்லாசம் போகும் பிரேரணையை சமர்ப்பிப்பதாய் உள்ளது. இதுவே, யதார்த்தங்களை புரிவதற்கும், கனவு உலகில் வாழ்வதற்குமான பிரிகோடுமாகின்றது. ஆனால், இத்தகைய வரலாறுகளில் இருந்து உண்மைகளை உள்வாங்குவது என்பது என்றும் எமக்கு கசப்பான விடயமாகத்தான் இருக்கின்றது. ஆனால், இப்புள்ளியிலேயே, துரதிர்ஸ்டவசமாய், எமது சமூகம் இன்று நிற்பதாயும் உள்ளது.  அதாவது, எம்மிடையே அடிபட்டு, சின்னாப்பின்னமாகி இருக்கும் அரசியல் கோரம் ஒருபுறம்.

இதற்கு எதிர்த்தாற்போல், யதார்த்தத்தையே மறந்து கனவுலகில் என்றும் தூங்க விழையும், எமது புலம்பெயர் அரசியலின் ஒரு பிரிவினர் தூண்டிவிடும் உசுப்பேத்தல் நிகழ்ச்சி நிரல்களின் விளைபயன்களின் ஒட்டுமொத்த தாக்கம், மறுபுறம்.  ஓர் அண்மைக்கால கனவுலக ஜீவியின் பின்வரும் கூற்று எம் அனைவரின் கருத்தையும் கவரக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றது. அவர் எழுதுவார்:

“நாம் கனவுகளை சேமித்து வைப்போம். மீண்டும் பலம் பெறும் காலம் ஒன்று வரும் போது, அந்த சேமிப்பை கவனமாக பயன்படுத்துவோம். வரலாறு முழுவதும் இவ்வாறுத்தான் வீழ்ந்த சமூகங்கள் எழுந்திருக்கின்றன”. (தமிழ்வின்:22.02.2022).

இதில், “மீண்டும்… காலம் ஒன்று வரும் போது…” எனும் வரிகள் ஆழ்ந்து கவனிக்கத்தக்கவைதான். இந்த, ‘மீண்டும் காலம் வரும்’ என்பதே ‘எப்போது’ என்ற கேள்வியினையும் எழுப்ப கூடியதாக இருக்கின்றது. கடந்த காலங்களில் அழிவுநிலையை தொட்டிருக்கும் சமூகங்களின் ஒரு பின்னணியில் (வட அமெரிக்காவின் செய்விந்தியர்கள் உட்பட அல்லது அமெரிக்காவின் செவ்விந்தியர்கள் உட்பட) கனவுகள் யதார்த்தங்களோடு கைக்கோர்க்காத நிலையில் அவ்வவ் சமூகங்கள் முகங்கொடுக்க நேரும் பின்னடைவுகளை இவை எம்மிடை எதிரொலிக்காமல் இல்லை எனலாம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.