ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுக்கு இயல்விருதா? எழுத்தாளர் நடேசன் கேள்வி!

எழுத்தாளர் நடேசன் தனது முகநூற் பக்கத்தில் தனது சந்தேகமொன்றினைத் தெரிவித்துள்ளார். அது: "சில காலங்கள் இயல் விருது சிறந்த சிலருக்கு சென்றிருக்கிறது. ... ஒரு சந்தேகம் ஓவியம் எப்பொழுது இலக்கியம் வடிவத்தில் வந்தது?"

இவரது கேள்வி இம்முறை 2025ஆம் ஆண்டுக்குரிய தமிழ் இலக்கியத்தோட்டத்தின் இயல்விருது ஏன் ஓவியரான ட்ராட்ஸ்கி மருதுவுக்குக் (மருதப்பன் மருது) கொடுக்கப்பட்டது என்பது பற்றியது.

இயல்விருது என்பதிலுள்ள இயல் என்பது தமிழ் மொழியின் எழுத்துகளை, மொழியைக் குறித்தாலும் , தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது தமிழ் மொழிக்கான விருதாகத்தான் நான் கருதுகின்றேன். தமிழ் மொழிக்கு வளம் சேர்த்த எவருக்காகவும் அவ்வமைப்பு விருது கொடுப்பதில் தவறில்லை என்பது என் கருத்து. ஓவியர் ட்ராட்ஸ்கியின் ஓவியங்கள் தமிழ் மொழியில் வெளிவான இலக்கியப் படைப்புகளுக்கு உயிரூட்டியிருக்கின்றன. அவ்வகையில் அப்படைப்புகளுடன் பின்னிப் பிணைந்தவை. இயல் விருது நூல்களுக்குக் கொடுக்கப்படுவதால் அது நூல்களில் வெளியான ஓவியங்களையும் உள்ளடக்கியது. ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் ஓவியங்கள் தமிழ் மொழியிலான அச்சூடகங்கள் பலவற்றில் வெளியாகியுள்ளன. அவ்வகையில் அவரது ஓவியங்கள் வெளியான புனைவுகள், அல்புனைவுகளை அவரதம் ஓவியங்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது.

அப்படைப்புகளுக்கு உயிரூட்டிய ஓவியங்களை வரைந்தவர் என்னும் அடிப்படையிலும் அவர் விருதுக்குப் பொருத்தமானவரே.
அடுத்தது ஓவியர் ட்ராட்ஸ்கி மருது வரைவதுடன் நின்று விடவில்லை. ஓவியம் பற்றிய கட்டுரைகள் பல எழுதியிருக்கின்றார். அவர் எழுதிய ஓவியங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு 'கோடுகளும் வார்த்தைகளும்' என்னும் பெயரில் நூலுருப்பெற்றுள்ளது. ஆக, ஓவியர் ட்ராட்ஸ்கி மருது எழுத்துப்பங்களிப்பும் செய்துள்ளார். ஆக இதற்காகவும் அவர் இவ்விருதுக்குப் பொருத்தமானவரே.

மேலும் குழந்தைகளுக்காக இவர் வரைந்த ஓவியங்களின் தொகுப்பு Line and Circle மற்றும் Look, the Moon ஆகிய பெயர்களில் நூல்களாக வெளிவந்துள்ளன. Line and Circle என்ற நூல் 27 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் இவரது ஓவியங்களைத் தாங்கிய நூல்கள் வெளியாகியுள்ளன. ஆக, தமிழ் மொழிக்கு ட்ராட்ஸ்கி மருதுவின் ஓவியங்களைப் பற்றிய கட்டுரைகளும், ஓவியத்தொகுப்பு நூல்களும் பங்களிப்புகளை வழங்கியுள்ளன.

மேலும் மொழியின் ஆரம்பமே ஓவியங்கள்தாமே. பண்டைக்காலக் குகை ஓவியங்களே மனிதரின் ஆரம்ப மொழி. சித்திரங்கள் மூலமே மனிதர்கள் தம் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். சித்திரங்களே எழுத்துகளின் ஊற்றுவாய்கள். இவ்வகையில் சித்திரங்களை மொழியிலிருந்து பிரித்துப்பார்ப்பது அவசியமற்றது.

அவரது ஓவியங்களைத் தாங்கிய நூல்கள், சஞ்சிகைகள் தமிழ் இயலுக்கு,தமிழ் மொழிக்கு வளம் சேர்த்துள்ளன. ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவுக்கு இயல் விருது கொடுக்கப்படுவதில் தவறில்லை.

[டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனொ பனானா வழி வநகி]


வேண்டாம் என்பதும் சரி வேண்டும் என்பதும் சரி ஒரே பொருள் தெரியுமா?

தமிழில் மட்டுமல்ல மொழிகளில் இலக்கணம் மீறிய சொற்கள் பல வழக்கில் உள்ளன. வழக்கில் உள்ளதால் அவற்றை இலக்கணம் உள்வாங்கியுமுள்ளது. முன்றில் என்பது தவறானது. இல்முன் என்பதே சரி. அதற்காக அதைப்பாவிப்பதை யாரும் நிறுத்தவில்லை. இவ்விதம் சொல்லுக்குச் சொல் இலக்கணப்பிழையைக் கண்டு பிடிக்க முயற்சி செய்வது பயனைத்தராது. நீங்கள் உங்கள் கட்டுரைகளில் உங்களுக்குச் சரியானது எது என்று படுகின்றதோ அதை எழுதுங்கள். தொடர்ச்சியாக எழுதுங்கள்.

தமிழறிஞர் தொடர்ச்சியாகத் தன் நாவல்களில் வேண்டா என்றுதான் எழுதுவார். வேண்டாம் என்று எழுத மாட்டார். எனென்றால் வேண்டும் என்பது இலக்கணப் பிழை. வேண்டா என்பதே சரியானது. ஆனால் வழக்கில் வேண்டாம் நிலைத்து நிற்கிறது. இலக்கணப்பிழை என்றாலும் அதை வேண்டும் என்பதற்கு எதிர்ச்சொல்லாகத்தான் இன்னும் பாவித்து வருகின்றோம். வேண்டு ஆம் தான் வேண்டாம். அப்படியென்றால் வேண்டும் என்பதும், வேண்டாம் என்பதும் ஒரே பொருள். ஆனால் நாம் பாவிப்பது அதன் எதிர்க்கருத்தில். வழக்கில் எதிர்க்கருத்தில் தொடர்ந்து பாவிப்பதால் அது நிலைபெற்று விட்டது.

உண்மையில் மு.வ.வின் நாவல்களை வாசிக்கும்போது அவர் சரியாக, இலக்கணச் சுத்தமாக வேண்டா என்று பாவித்திருப்பது , வேண்டாம் என்று இலக்கணப்பிழையுடன் வாசித்துப் பழகிய எனக்கு நெருடலாகத்தானிருந்தது.

உதாரணத்துக்கு ஒன்று:

"இப்போது எண்ணிப் பார்க்கிறேன். தாய்போல் பாசம் காட்டி வளர்த்த அந்த மனம் எவ்வளவு துன்பப்பட்டிருக்கும்? நீ தாய் அல்ல உன் பாசம் வேண்டா என்று மறுப்பதாக அல்லவா என்னுடைய கொடுஞ்செயல் இருந்திருக்கும்." (அகல்விளக்கு அத்தியாயம் நான்கு)

சில சமயங்கள் இலக்கணம் மீறப்படுவது மட்டுமல்ல , கருத்தும் மாற்றியமைக்கப்படுகின்றது. இன்று யாரையாவது பார்த்து வேண்டா என்று பாவியுங்கள் என்று கூறிப்பாருங்கள் அவர்கள் என்ன சொல்லுவார்கள் என்று நினைக்கின்றீர்கள். 'உனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்' என்பார்கள்.


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச : 'நாம் எல்லோரும் ஒன்றாக வாழ வேண்டாம்.'

முன்னாள் இலங்கை ஜனாதிபதி மகிந்த கூட்டமொன்றில் தமிழில் உரையாற்றுகையில் , ஓரிடத்தில் பின்வருமாறு கூறுவார் :

'இனவாத அரசியல் வேண்டாம்.
குறுகிய எண்ணம்
ஒரு நாளும் வேண்டாம்.
நாம் எல்லோரும்
ஒன்றாக வாழ வேண்டாம்.'

மகிந்த ராஜபக்ச வேண்டாம் என்று இறுதியில் கூறும்போது கூட்டத்தில் ஒருவர் வேண்டும் என்று அதனைத் திருத்துவார். அதை ஏற்றுக்கொண்டு மகிந்த அவர்களும் வேண்டும் என்பார். உண்மையில் மகிந்தவின் வேண்டாம் என்பது இலக்கணரீதியாகச் சரியானது. திருத்தியவரின் வேண்டும் என்பதுதான் தவறானது.

தமிழ் இலக்கணப்படி வேண்டும், வேண்டாம் (வேண்டு + ஆம்) இரண்டும் ஓரர்த்தம்தான். ஆனால் வழக்கில் பிழையாக வேண்டும் என்பதற்கு எதிர்க்கருத்துள்ள் சொல்லாக வேண்டாம் என்னும் சொல்லைப் பாவித்து வருவதால், அப்பிழையை நவீனத் தமிழ் மொழி உள்வாங்கிவிட்டது.

உண்மையில் மகிந்த அக்கூற்றில் 'நாம் எல்லோரும் ஒன்றாக வாழ வேண்டாம்.' என்பதும் 'நாம் எல்லோரும்
ஒன்றாக வாழ வேண்டாம்.' என்பது ஓரர்த்தம் தரும் சொற்றொடர்தான்.


ஶ்ரீ வேணுகோபாலனின் 'நீ நான் நிலா'

எழுத்தாளர் ஶ்ரீ வேணுகோபாலனின் சிறுகதைகள், குறுநாவல்கள் பல அறுபதுகளில் வெளியான தமிழ் வெகுசன இதழ்களில் , அவற்றின் தீபாவளி மலர்களில் வெளிவந்த காலத்தில் நான் என் பால்யப்பருவத்து வாசிப்பை ஆரம்பித்திருந்தேன்.அதனால் அவர் என் அபிமானத்துக்குரிய எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

அவரை நான் விரும்பி வாசிக்கத்தொடங்கியது அவரது படைப்புகள் தினமணிக்கதிரில் வெளியானபோதுதான். தினமணிக்கதிர் அப்போது இலவச இணைப்பாக புனைவை அல்லது அல்புனைவை வெளியிட்டு வந்தது. அதிலொன்றுதான் நடுவழியில் என்னும் ஶ்ரீ வேணுகோபாலனின் நெடுங்கதை. அது முதலில் கல்கியில் வெளியான விபரம் அண்மையில்தான் தெரிந்தது. அதன் பின் என்னைக் கவர்ந்த அவரது படைப்பு தினமணிக்கதிரில் தொடராக வெளியான 'நீ நான் நிலா' தொடர்கதை.

இந்தத்தொடர்கதை வெளியானபோது வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதனால்தான் அதே பாணியிலான இன்னுமொரு தலைப்பில் அவர் பின்னர் 'நந்தா என் நிலா' என்னும் தொடர்கதையினை எழுதினார். அதனை நான் வாசிக்கவில்லை. அதற்கும் 'நீ நான் நிலா'வுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்பதும் தெரியவில்லை.

நீ நான் நிலா அப்போது தினமணிக்கதிர் ஆசிரியரான எழுத்தாளர் சாவியின் தூண்டுதலின் பேரில் தான் எழுதிய, தனது முதலாவது நாவல் என அந்நாவல் பின்னர் இரு தொகுதிகளாக நூலுருப்பெற்றபோது அதன் முன்னுரையில் ஶ்ரீ வேணுகோபாலன் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஶ்ரீ வேணுகோபாலனாக எழுதியவரை புஷ்பா தங்கதுரையாக்கியவரும் சாவிதான் என்று நினைக்கின்றேன். புஷ்பா தங்கதுரையாக அவர் எழுதிய முதலாவது நாவலும் தினமணிக்கதிரில் வெளியான புகழ்பெற்ற நாவல். அது பின்னர் திரைப்படமாகவும் . கமல் ,சுஜாதா , ராஜேஷ் நடிப்பில் வெளியானது. வெற்றிப்படம். அது - 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது'.

நீ நான் நிலா வாசகர் நெஞ்சை உருக்கும் காதல் கதை. கதையின் நாயகனின் காதலுக்குரியவள் முடிவில் இறந்து விடுகின்றாள். இறக்கும் தருணம் அவன் மேலுள்ள தன் காதலை, அவனுடன் பழகிய பொழுதுகளைப்பற்றியெல்லாம் தன் தங்கையிடம் கூறி அவள் தானாக அவனுடன் இணைய வேண்டுமென வேண்டுகோளை வைக்கின்றாள். அதனை நாயகன் பாபுவும் ஏற்றுக்கொள்வதுடன் கதை முடிகின்றது.

நீ நான் நிலா தொடர் நாவலுக்குப் பின்னர் எழுத்தாளர் கு.அழகிரிசாமி கல்கியில் எழுதிய தொடர்நாவல் 'தீராத விளையாட்டு'. அதுவும் ஒரு காதல் கதை. அதில் காதலுக்குரியவளுடன் இணைய முடியாமல் , அவள் இன்னுமொருவனை மணம் முடிக்கும் நிலை ஏற்படுகின்றது. சமூக வேறுபாடுகள், நாயகனின் சமூகப் பிரக்ஞை போன்றவை காரணமாக அந்நிலை ஏற்படுகின்றது. இறுதியில் அவள் இறந்து விடுகின்றாள். அவளது தங்கையை நாயகன் மணம் முடிக்கின்றான். இந்த விடயத்தில் தீராத விளையாட்டு நாவலுக்கும், நீ நான் நிலா நாவலுக்குமிடையில் ஒருவித ஒற்றுமை இருப்பதை அவதானிக்கலாம்.

நீ நான் நிலா தொடர்கதையாக வந்தபோது அதற்கு ஓவியங்கள் வரைந்தவர் ஓவியர் கோபுலு. என் வாசிப்புப் படிக்கட்டில் ஓர் அழியாத கோலம்தான் ஶ்ரீ வேணுகோபாலனின் 'நீ நான் நிலா'


AI பற்றி ஒரு தர்க்கம்

சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அசோக் யோகன் கண்ணமுத்து தன் முகநூற் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றித்தெரிவித்த கருத்துகளில் பின்வருமாறும் குறிப்பிட்டிருந்தார்:

"தலைப்பு- கருத்துகளைத் திரட்ட AI-யைப் பயன்படுத்தலாம்..... வரலாறு- அரசியல் கட்டுரையாக இருந்தால், கிடைக்கும் தகவல்களை சரிபார்க்க பயன்படுத்தலாம்."//

இவ்விடயத்தில் என் எதிர்வினை இது :

"இவ்விடயங்களில் AI பல தவறான தகவல்களைத் தானே உருவாக்கி உண்மைபோல் தரும். நீங்கள் கண்டு பிடித்தால் தான் தவறு செய்ததை ஒப்புக்கொள்ளும். கண்டு பிடிக்காவிட்டால் அத்தவறுகள் உண்மைகளாக இணையத்தில் தொடரும். இது பாரதூரமான விடயம். AI தரும் எல்லாத் தகவல்களையும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஏனைய சான்றுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் திருத்துவது அவசியம்."

அதே நேரம் ஆக்கபூர்வமாகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தலாம். உதாரணமாகப் மொழிபெயர்ப்பு , தகவல் தொழில் நுட்பம், ஆய்வு போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம். அவ்விதம் பயன்படுத்தும்போது அதன் உதவி குறிப்பிடப்பட வேண்டும். ஒரு விடயத்தைப் பற்றிய Btain Storming ற்கும் பயன்படுத்தலாம். பொழுதுபோக்குக்காக உரையாடுவதற்கும் கூடப் பயன்படுத்தலாம். பயன்படுத்தும்போது சரி, பிழையையைச் சரிபார்த்துப் பயன்படுத்தலாம். அதில் தவறில்லை. செயற்கை நுண்ணறிவு என்பது தொழில் நுட்பத்தின் வளர்ச்சி. அதனைச் சரியாகப் பயன்படுத்துவதே முறையானது. அதன் எதிர்மறை அம்சங்களைப் புரிந்து கொண்டு, தவிர்ப்பதும் நல்லது. மேலும் பரீட்சை போன்ற விடயங்களில் அது முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும்.
உங்கள் கருத்துகள் என்ன? பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பர்களே!

* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி


நவீனத் தமிழ்க்கவிதையும், மரபுக் கவிதையும்

"சங்க காலத்திலிருந்து வளர்ந்து வந்த தமிழ்க் கவிதைத்துறையின் பரிணாமமே இன்றைய புதுக்கவிதை. இன்றைய காலகட்டத்திற்குரிய கவிதையின் வடிவம் புதுக்கவிதையே. இது இன்று ஒரு தேசிய இலக்கிய வடிவமாக ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டது."

இது நவீனத் தமிழ்க் கவிதை பற்றிய திடமான என் நிலைப்பாடு. இதை நான் கூறிய காலகட்டம் எழுபதுகளின் இறுதிக்காலகட்டம். இக்கூற்றை என்னைப்பற்றிய , தினகரன் வாரமஞ்சரியின் 'கவிதைச்சோலை' அறிமுகத்தில் என் கவிதை பற்றிய எண்ணமாகப் பிரசுரித்துள்ளார்கள். கவிதைச் சோலைப் பகுதியினை அக்காலடத்தில் நடத்தி வந்தவர் எழுத்தாளர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர். அவ்வறிமுகக் குறிப்புடன் என் கவிதையான 'அழிவு ' என்னும் கவிதையினையும் பிரசுரித்துள்ளார்கள். அப்பக்கத்தையே இங்கு காண்கின்றீர்கள்.

அழிவு! - வ.ந.கிரிதரன் -

கொப்புகள் தாவித் தோப்புக் கரணங்கள்
சில போட்டுச்
செல்லுமிந்த
அணிலுமோர் நாள் இங்கு
அழுகி, வீழ்ந்துபோம்.
அதன்மேல் முளைக்கும் புல்மேல்
மீண்டுமொரு
அணில் வந்து விளையாடி செத்து
அழுகி அழிந்துபோம்.
இங்கே விரிந்து கிடக்கும்
இந்த மண் மேல்
அந்த நாளில் எத்தனை அழகிகள்
சிந்து பாடி, மெல்ல நடை பயின்றிருப்பர்.
எத்தனை இளந் தம்பதியர்
சித்தம் மறந்து திளைத்திருப்பர்.
கற்பனை கொடி கட்டிப் பறந்த
சிற்பிகளெத்தனைபேர் செத்திருப்பர்.
செத்தொழிந்தவரெல்லாம்
செல்வது தானெங்கே?
நிர்ச்சலனமற்று அங்கே
நீண்டு கிடக்கும் ஆகாயத்து வெளிகளின்
ஆழங்களொரு பதில் சொல்லக் கூடுமோ?

* இக்கவிதை மொறட்டுவைப்பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வெளியீடான நுட்பம் (79/80) சஞ்சிகையிலும் வெளியானது


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்