[- எழுத்தாளர் ஆ.மாதவன்- ]

ஆ. மாதவன் அவர்களுக்கு நான் வாசகராகத்தான் ஆரம்பத்தில் அறிமுகமானேன். அவரின் கதைகளின் எதார்த்தப் போக்கில் திருவனந்தபுரம் மக்களின் அனுபவங்களும் பிரத்தியேகமாக இருந்தன .ஆனால் அவர் முன்னர் திராவிட இயக்கப் பத்திரிகைகளில் அதிகம் எழுதியவர் என்பதால் ஒரு வகை ஒவ்வாமை இருந்தது. ஆனால் பின்னால் அவருடைய படைப்புகளில் இருந்த்த் தீவிரம் அந்த பாதகமான அம்சங்களை விலக்கி விட்டது

பின்னால் நான் எழுத ஆரம்பித்தபோது அவர் தொடர்ந்து என் கதைகளை பற்றிக் குறிப்பிட்டு எழுதினார். தீபம் இதழில் இருவரும் நிறைய எழுதினோம். எழுத்தாள நண்பர் ஆனார். தொடர்ந்து தொடர்பில் இருந்தபடி அவரை வாசித்துக் கொண்டிருந்தேன்.. திருவனந்தபுரம் வரும் போதெல்லாம் அவரை சந்திப்பேன். சாலை பஜாரில் உள்ள அவரின் செல்வி ஸ்டோரில் பாத்திரங்கள் மத்தியில் அவரையும் பார்ப்பேன். இலக்கியம் சார்ந்த பல நல்ல உரையாடல்களை கண்டு கொண்டிருக்கிறேன். வழக்கமாக ஊடவே நகுலன், நீலபத்மநாபன் ஆகியோரைச் சந்திப்பதும் வழக்கம்.

திருவனந்தபுரம் பல்கலைக்கழக பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் என்னைப் பற்றி அறிமுகப்படுத்தும் போது கனவு இதழ் நாற்பது ஆண்டுகளாக வருவதைப் பற்றிக் குறிப்பிட்டார்.. அந்த கனவு இதழில் சில சிறுகதைகளை ஆ மாதவன் எழுதினார். முதல் 25 ஆண்டுகளில் வந்த கனவுப் படைப்புகளை காவியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதில் அவரின் சிறுகதையும் இடம் பெற்றிருக்கிறது

பின்னால் அவர் திருவனந்தபுரம் தமிழ் சங்கம் நடத்தும் கேரள தமிழ் மாத இதழின் ஆசிரியராக இருந்தபோது பல சிறுகதைகளையும் நான் எழுதி இருக்கிறேன். அப்போது தமிழகத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்களெல்லாம் கேரளா தமிழ் இதழில் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கான அங்கீகாரம் வாசகப்பரப்பும் குறைவாகவே இருந்தது. அந்த காலத்தில் ஜெயமோகன் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் விருதை நிறுவிய போது முதல் விருதை ஆ.மாதவன் அவர்களுக்கு அளித்தார். .அதற்கு முன்னால் திருப்பூர் தமிழ்ச்சங்கம் அவருக்கு விருது அளித்த போது அவர் வரவில்லை . அவர் சார்பாக நான் விருதைப் பெற்றுக்கொண்டு உரையாற்றினேன். பின்னால் திருப்பூர் வந்த திருவனந்தபுரம் பேராசிரியர் நயினார் அவர்கள் வசம் ஆமாதவன் அவர்களின் விருதுக் கேடயத்தை தந்தேன். பேச்சில் பேராசிரியர் நயினார் அவர்கள் ஆமாதவனுக்கு திருப்பூர் விருது தந்ததையும் இப்போது அவர் பெயரிலான விருது எனக்குத்தரப்படுவது பற்றியும் சொன்னார்.

ஆ மாதவன் படைப்புகளை புதுமைப்பித்தனுக்கும், ஜீ நாகரானுக்கும் இடைப்பட்ட எதார்த்தவாதப் படைப்பாளி என்று சொல்வார்கள். திருவனந்தபுரம் வாழ் தமிழர்களின் குறிப்பாக விளிம்பு நிலை மக்களையும் பற்றி அதிகம் எழுதினார் மொழிபெயர்ப்புகளையும் செய்தார். ஜி நாகராஜன் அவர்களைப்பற்றி அசோகமித்திரன் அவர்கள் விரல் என்ற ஒரு கதையை எழுதி இருக்கிறார். அந்த கதையில் ஜி நாகராஜன் முழு ஆளுமையை காட்டி இருக்கிறார் அப்படித்தான் அவர்களுடைய முழு ஆளுமையை ஒரு மலையாள சிறுகதையில் கண்டு கொண்டேன்..

0

பரிதி பதிப்பகம்டாக்டர் ராஜிவ் குமார் திருவனந்தபுரம் வருகை பற்றி கேட்டபோது ஆ மாதவன் இலக்கிய விருது பெற வந்திருக்கிறேன் என்று சொன்னேன் உடனே அவர் கடையில் இருந்த அவரின் சிறுகதைகளின் தொகுப்பான பெரிய நூலை ஒன்றை எடுத்து அதில் ஆ மாதவன் அவர்களைப் பற்றி அவர் எழுதியிருக்கும் 'வேதுகலம்' என்ற கதையை முழுக்க படித்துக் காண்பித்தார். நானும் கிள்ளி பாலம் சுப்பிரமணியம் என்ற திருவனந்தபுரம் எழுத்தாளரும் அவர் அந்த கதையை விவரிக்க முழுக்க்க் கேட்டோம்..( கில்லிப்பாலம் சுப்ரமணியன் தமிழிலும் மலையாளத்திலும் கதைகள் எழுதுபவர் இப்போது ஆங்கிலத்தில் கூட அவரின் கதைகளை வெளியிட்டு இருக்கிறார் )

அந்த 'வேதுகலம்' சிறுகதையில் டாக்டர் ராஜீவ்குமார் அவருடன் கொண்டிருந்த நட்பை பற்றிச் சொல்லுகிறார். சாலை பஜாரில் செல்வி ஸ்டோரில் பாத்திரங்களுக்கு மத்தியிலும், வியாபாரப் பொருள்களுக்கு மத்தியிலும் ஒரு இலக்கியவாதியாக அவர் தெரிந்து கொண்டிருந்தார். பாத்திரங்களுக்கும் பல பெயர்கள் இருந்தன பல கதாபாத்திரங்களை புராண ,இதிகாச விஷயங்களில் இருந்து கூட சூட்டி இருக்கிறார் .அவருடைய தொடர்பில் மனிதநேயமும் நட்பும் வெளிப்படும் விதத்தினை விவரித்திருக்கிறார். பின்னால் அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விடுகிறார்.. பின்னர் சாலை பஜார் போகும் ராஜிவ் குமார் அவர் கடை இருந்த இடத்தில் பழைய சாமான்கள் விற்கும் ஒரு கடை வந்திருப்பதைப் பார்க்கிறார். பல பழைய சாமான்கள் நிரநிது கிடக்கின்றன. உள்ளே போய் பார்த்தால் அந்த வேதுகலம் பாத்திரம் இருக்கிறது ஆமாதவன் இருந்தபோது அந்த வேதுகலம் பாத்திரம் அவரை வாங்கு வாங்கு என்று சொல்லுமாம். இப்போதும் அந்த வேதுகலம் பாத்திரம் அங்கு இருக்கிறது. பெண்களின் பிரசவ காலங்களில் சுடுநீர் வைத்து மூலிகைகளை போட்டு ஒத்தடம் கொடுக்கும் வேலைக்கு அந்த வேதுகலம் பாத்திரம் பயன்படும். அந்த பாத்திரத்தை அவர் பார்க்கிறார். அந்த பாத்திரத்தை முன்பு ஒரு திருடன் திருடிக் கொண்டுச் சென்றிருக்கிறான் இரவில் அதை திருடினான். தங்கமாக மினுமினுத்தது. தங்கத்தில் ஒரு பாத்திரம் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியாக அதை வைத்திருக்கிறான். ஆனால் பகலில் அது மீண்டும் ஒரு சாதாரண பாத்திரமாக மாறிவிடுகிறது. அந்த அலுமினியைப் பாத்திரத்தால் என்ன பயன் என்று அவன் பழைய சாமான்கள் விற்கும் கடைக்குப் போட்டு விடுகிறான். அது தான் இப்போது அந்த கடையில் இருப்பதை ராஜீவ்குமார் பார்க்கிறார்.

இந்த கதை ஆ மாதவன் அவர்கள் உயிரோடு இருந்த காலத்திலேயே ராஜீவ்குமார் அவர்கள் எழுதியிருக்கிறார் சாதாரண மக்களுக்கு அலுமினிய பாத்திரமாக மின்ன, அவர் எழுத்தாளர்கள் மத்தியில் தங்க பாத்திரமாக மினிங்கிக் கொண்டிருப்பதை அந்த கதை சொன்னது. ஆ மாதவனுடைய முழுமையான ஆளுமையை தெரிந்து கொள்ள இந்த கதை போதுமானதாக இருக்கிறது. அவருடைய கேரள தமிழ் ஆசிரியர் காலத்தில் வெளியீடு செய்த சிறுகதைகள் கவிதைகள் போன்றவற்றை கேரள திருவனந்தபுரம் தமிழ் சங்கம் தொகுத்து நூலாக வெளியிட வேண்டும். அது அவர்கள் அவருக்குச் செய்யும் சரியான அஞ்சலியாகக் கூட அமையும்.

தமிழின் முக்கியமான எழுத்தாளராக விளங்கிய ஆ.மாதவன் பேரில் தரப்படும் இந்த விருதை பெறுவதில் நானும் பெருமை கொள்கிறேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள் (Pathivukal)

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்