
எழுத்தாளர் முருகன் சிவலிங்கம் அவர்களின் மறைவு குறித்து முதலில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மலையகத்தில் இருந்து ஒலித்த மூத்த எழுத்தாளரின் குரல் இன்று ஓய்ந்துவிட்டது. இவரது மறைவு மலையகத்திற்கு மட்டுமல்ல, இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கும் பெரும் இழப்பாகும். இலக்கிய உலகில் இவரை ‘மூனாசீனா’ என்று சுருக்கமாக அழைத்தவர்கள் பலர்.
மலையகத்தில் தலவாக்கலையில் பிறந்த இவர் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் கல்வி கற்றார். ‘கலாபூசணம்’ பட்டம் மற்றும் ‘சாகித்திய ரத்னா’ விருது பெற்றவர். மேலும் கனகசெந்திநாதன் விருது, சுதந்திர இலக்கிய அமைப்பின் விருது, தமிழியல் விருது, கரிகாற்சோழன் விருது, தமிழ்ச்சங்கத்தின் ‘சங்கச் சான்றோர் விருது’ போன்ற பலவற்றையும் பெற்றிருக்கின்றார். மலையகத் தமிழ் மக்களின் அரசியல், மற்றும் சமூக உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தவர். இலக்கியத்தில் மட்டுமல்ல, அரசியலிலும் ஈடுபாடு ஏற்பட்டதால், மத்திய மாகாணசபை உறுப்பினராகவும் பணியாற்றியவர். இலங்கையில் இருந்து வெளிவரும் ‘வீரகேசரி’ பத்திரிகையில் பத்திரிகையாளராகவும் சில காலம் பணியாற்றினார்.
பெரும்தோட்டத் துறையில் இந்திய வம்சாவழி மக்களின் பங்களிப்பு அளப்பரியது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் மலையகத்தில் பணியாற்றுவதற்காக பிரித்தானியர்களால் இவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். இலங்கையின் பொருளாதாரத்தில் தேயிலை, கோப்பி, இறப்பர் என்று இந்த மூன்றும் ஒரு காலத்தில் முக்கிய பங்கு வகித்தது. குறைந்த கூலியில் இவர்களது உழைப்பே அதற்கு முக்கிய காரணமாகும். மழை, குளிர், அட்டைக்கடி, தினக்கூலி, வீடில்லை, கல்வி வசதியில்லை என்று பல இன்னல்களை இவர்கள் சந்தித்தவர்கள். இன்றும் சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
1964 ஆம் ஆண்டு சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் இவர்களில் பல குடும்பத்தினர் வலிந்து தாய் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். 1981 ஆம் ஆண்டு இவர்களில் சுமார் 160,000 மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டு சுமார் 280,000 மக்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். கேரளா சென்றபோது இவர்களில் சிலர் என்னை வந்து சந்தித்த போது, நாடுகடத்தப்பட்ட அவர்களின் சோகக் கதையைக் கேட்கக் கூடியதாக இருந்தது. இங்கு மட்டுமல்ல அங்கும் பல பிரச்சனைகளை அவர்கள் எதிர் கொள்வதை அறிந்து கொண்டேன்.
என்னை வந்து சந்தித்தவர்கள் நாவலப்பிட்டி தொலஸ்பாகே பகுதியில் இருந்து ஒப்பந்தத்தின்படி நாடுகடத்தப்பட்டவர்கள். நான் கணக்காளருக்குப் படித்தபோது மலையகத்தில் பல தோட்டங்களுக்கு கணக்குப் பரிசோதனைக்காகச் சென்றிருக்கின்றேன். அங்கேதான் இவர்களில் சிலரை முதலில் சந்தித்தேன். அப்போது அவர்களுடன் உரையாடியபோது அவர்களின் முக்கிய தேவை என்ன என்று கேட்டேன். அவர்கள் கூலியை உயர்த்தும்படியோ அல்லது உணவு ரேஸனைக் கூட்டித்தரும்படியோ, அல்லது குடியிருக்க வீடு, கல்விகற்றப் பள்ளி வேண்டுமென்றோ கேட்பார்கள் என நினைத்தேன். அவர்களில் ஒருவர் முன்வந்து ‘சாமி கும்பிடக் கோயில் வேணும்’ என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. புகுந்த மண்ணில் மொழியையும் மதத்தையும் காப்பாற்றுவதில் அவர்களின் பங்கை நினைத்துப் பார்த்தேன். அவர்கள் கேட்டபடி முருகன் கோயில் ஒன்றை தோட்ட முதலாளி கட்டிக் கொடுத்தார், இப்பொழுதும் நித்திய பூசை அங்கு நடைபெறுகின்றது, அனால் கும்பிடத்தான் அவர்கள் அங்கு இல்லை.
சமீபத்தில் மு. சிவலிங்கம் அவர்களின் 80 வது அகவையை முன்னிட்டு இலக்கிய ஆர்வலர்கள் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய கலையரங்கத்தில் ‘அமுதவிழா’ எடுத்து அவரைக் கௌரவித்திருந்தனர். இவரைப்பற்றிய விவரங்கள் அடங்கிய ‘சிவாமுதம்’ என்ற சிறப்பிதழும் அன்று வெளியிடப் பெற்றது. இதைத் தொடர்ந்து இவரது “ஒப்பாரிக் கோச்சி” என்ற சிறுகதையை பொன்.பிரபாகரன் நெறியாள்ளை செய்த நாடகமும் இடம் பெற்றிருந்தது.
இவரது 'ஒப்பாரி கோச்சி,” 'பஞ்சம் பிiழைக்க வந்த சீமை” போன்ற ஆக்கங்கள் தமிழ் இலக்கிய உலகில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கன. இதைவிட ‘வெந்து தணிந்தது காலம்,’ ‘தேயிலை தேசம்,’ ‘ஒரு விதை நெல்’ ‘நாட்டுப்புறபாடல்கள்’ போன்றவற்றையும் குறிப்பிடலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.










