
என் முகநூல் நண்பர்களில் ஒருவரான அருந்ததி குணசீலன் தனது முகநூற் பதிவொன்றில் அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து உரையாடியது பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு கூறியிருந்தார்:
" நடைமுறையில் சட்டங்கள் இருக்கும் போது, 'இவ்வாறு செய்யுங்கள்' என்று கட்டளையிட நான் விரும்பவில்லை. அப்படியானால் சட்டம் ஒருபுறம் இருக்க, அது எனது சட்டமாக மாறிவிடும். எனது விருப்பம் சட்டமாக மாறக்கூடாது. சாதாரண அரசியலில் சட்டம் என்பது ஆட்சியாளரின் விருப்பமாகும். என்று கூறப்பட்டாலும், எனது விருப்பத்தைச் சட்டமாக மாற்றிக்கொள்ள நான் எக்காலத்திலும் விரும்பவில்லை என்று, மகா சங்கத்தினரிடம் ஜனாதிபதி கூறினார். 'சட்டம் தற்காலத்திற்குப் பொருத்தமானதாக இல்லாவிட்டால் , உரிய முறையில் சட்டத்தை இயற்றிக்கொள்வதைத் தவிர, நமது விருப்பத் தின்படி சட்டத்தைச் செயற்படுத்துவது உகந்ததல்ல' எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்."
இது உண்மையில் வரவேற்கத்தக்கது. இலங்கையில் உள்ள அனைத்து மக்களிற்கிடையிலான உரிமைப் பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமே நாட்டில் சட்டம் என்பது இதுவரை காலமும் இன, மத, மொழிப் பாகுபாடற்று நடைமுறையில் இருக்கவில்லை என்பதுதான். ஆட்சிக்கட்டிலிருந்த இனவாத அரசியல்வாதிகளினால் அமுல்படுத்தப்பட்ட சட்டத்தில் பாகுபாடிருந்தது. குற்றவாளிகள் இன,மொழி அடிப்படையில் தப்பிக்க விடப்பட்டார்கள். அல்லது ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப்பெற்று விடுதலை செய்யப்பட்டார்கள். மக்களுக்கு நீதி கிடைப்பதில் பாகுபாடு காட்டப்பட்டது.
இதனால் நாட்டின் அனைத்துப்பிரிவினரும் சட்டத்தால் நீதி கிடைக்குமென்பதில் நம்பிக்கை இழந்திருந்தார்கள். ஒருவர் இன,மத, மொழி ரீதியில் பாதிக்கப்பட்டால் அதற்கான நீதியைப் பெறுவதற்காகச் சட்டத்தை நம்பும் நிலை இல்லாதிருந்தது. இதனை ஜனாதிபதி நன்குணர்ந்திருக்கின்றார் என்பது வரவேற்கத்தக்கது. சட்டம் மட்டும் அனைத்து மக்களையும் ஒரே மாதிரி கையாண்டால் நாட்டின் பல்லின மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுக்கு வழி வகுக்கும் நிலை உருவாகும். பாதிக்கப்படும் ஒவ்வொரு தடவையும் மக்கள் நம்பிக்கையுடன் நீதிமன்றத்தினை நாடும் நிலை உருவாகும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் நாட்டின் சட்டத்தை யாரும் வளைக்க இடம் கொடுக்கக் கூடாது. குறிப்பாக அரசியல்வாதிகள், மதகுருமார்கள் சட்டத்தில் தலையினை நுழைக்கும் நிலை முற்றாகத் தடுக்கப்பட வேண்டும். அப்படித்தலையிட்டால் அதற்காக அவ்விதம் தலையிடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் அடைக்கப்பட்ட புத்தமதகுருவான ஞானசார தேரருக்குச் சிறைச்சாலை ஆடை கொடுக்கப்பட்டது நியாயமானது. சரியானது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இதன் மூலம் நாட்டு மக்களுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கின்றது. இன்னுமொரு புத்தமத குருவும் எடுத்ததெற்கெல்லாம் கை நீட்டும் காணொளிகளை அடிக்கடி பார்க்கின்றோம். அவரும் நாட்டு மக்கள் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்த முனைவதற்காகவும், சட்டவிரோதமாக சக குடிமக்கள் மீது வன்முறையினைப் பிரயோகிப்பதற்காகவும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
வழக்கம்போல் இனவாதிகள் இவ்விடயத்தைக் கையிலெடுத்து அரசியல் செய்யத் தொடங்கி விடுவார்கள். தமிழருக்கு எம் உரிமையை விட்டுக்கொடுத்து விட்டார் ஜனாதிபதி என்றும், சிங்களவரான ஜனாதிபதியை நம்பக்கூடாது. இவர் முன்பு தமிழருக்கு எதிராக இயங்கிவர் என்றும் அரசியல் கூச்சல்கள் தொடங்கி விடும். உண்மையில் நாட்டில் அமைதியும், வளமும் நிறைய வேண்டுமென்றால் இது போன்ற ஆரோக்கியமான விடயங்களைக் குழப்பாதீர்கள். ஆதரியுங்கள். நியாயமான பிரச்சனைகளைச் சட்டரீதியாக அணுகுங்கள். சட்டம் இப்பொழுது ஓரளவு ஒழுங்காக வேலை செய்யத் தொடங்கியிருப்பதால் , பிரச்சனைகளைச் சட்டரீதியாக அணுகுவது ஆக்கபூர்வமானது.
ஏற்கனவே உள்ள , தீர்க்கப்படாத பிரச்சனைகளையும் சட்டரீதியாக, அரசியல்ரீதியாக, ஆக்கபூர்வமாக அணுகுங்கள். எடுத்ததற்கு எல்லாம் கடந்த காலத்தைப் போல் இனவாதச் சாயம் பூசிச் செய்யும் அரசியலைத் தவிருங்கள். காலம் நாட்டு அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. இதனை ஆரோக்கியமாகப் பாவிப்பதும், எதிர்மறையாகப் பாவிப்பதும் உங்கள் கைகளில்தாம் உள்ளது. மீண்டும் பழைய குழிக்குள் விழ வேண்டுமென்றால் பழைய பாணியில் உங்கள் அரசியலைச் செய்யுங்கள். இல்லை எதிர்காலத்தில் நம்பிக்கைக்கீற்று தெரிகிறதே. இதையும் ஏன் முயற்சி செயது பார்க்கக்கூடாது என்று கருதினால் ஆரோக்கியமாக அணுகுங்கள். நீங்கள் எப்படி அணுகினாலும், ஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுக்குக்கூறியதைப் போல் உறுதியாகத் தொடர்ந்தும் செயற்பட்டால், இனவாதிகளின் ஆதிக்கத்திற்கு நாட்டு மக்கள் பலியாகாமல் இருந்தால், நிச்சயம் புதியதொரு பாதைக்கான சாத்தியங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. உண்மையில் ஊழலுக்கு, சட்டத்தை மீறுவோருக்கு எதிராக அநுராவின் தலைமையிலான அரசு எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகள் அவ்வகையான சாத்தியங்களைத்தாம் சுட்டிக்காட்டுகின்றன.










