
அண்மையில் சிறுவர் தினமான அக்டோபர் முதலாம் திகதி ,கிளிநொச்சி உருத்திரபுரத்தில் பதின்ம வயதுச் சிறுமி ஒருவர் தன் உயிரைப் போக்கியுள்ளார். மிகவும் வருந்தத்தக்கது. இது பற்றி முகநூல் நண்பர் 'தமிழ் ஜேர்னலிஸ்ட்' தனது பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளர்:
'"அண்மையில் கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த 'சமரழகி' என்ற ஒரு பிஞ்சு உயிர், இணையவழி மிரட்டல்களுக்குப் பயந்து, உலக சிறுவர் தினமான அக்டோபர் 1ல் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்ட சோகம் ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. .... இன்றைய டிஜிட்டல் உலகம் பெண்களுக்குப் புதிய வெளிகளைத் திறந்துவிட்டாலும், அதன் மறுபக்கம் வன்மமும் ஆபாசமும் நிறைந்த ஒரு நச்சுப் பாதையாகவே நீடிக்கிறது.... பெண்கள் தங்களுக்கு ஒரு அச்சுறுத்தல் வரும்போது பின்வாங்குவதை நிறுத்த வேண்டும். என் உடலையோ, என் புகைப்படத்தையோ வைத்து என்னை மிரட்ட நீ யார்? என்ற கேள்வியைக் கயவர்களின் முகத்திற்கு நேரே கேட்க வேண்டும். இணையப் புகார்களை அளிக்க சட்டரீதியான வழிகள் இலங்கை உட்பட உலகெங்கும் உள்ளன என்பதைப் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.... சமரழகி... என்று போர்க்களத்தின் கம்பீரமாகத் திகழ வேண்டிய பெயருடையவளின் தற்கொலை முடிவு துயரந் தருகிறது. ஆனால், டிஜிட்டல் உலகின் போலிக் கயவர்களுக்காக அவள் தன் அரிய உயிரை மாய்த்துக் கொண்டாள். இனி ஒரு சமரழகி கூட இந்த மண்ணில் இத்தகு முடிவுகளை எடுக்க வேண்டாம் என்பதை பிள்ளைகளுக்கு சமூகம் கற்றுக் கொடுக்க வேண்டும்"
வைத்திலிங்கம் ரஜனிகாந்தன் (vaiththilingam Rajanikanthan) என்பவரும் இது பற்றிய தனது முகநூற் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:
"சிறுமியாக சமரழகி இருந்தாலும் தனது சாவிற்கு பக்கத்துவீட்டு பையன் தான்ரகாரணம் என தெளிவாக எழுதி வைத்துள்ளாள்.... ஆனால் பொலீஸார் அடுத்த நொடியே அந்த பொடியனை பிணையில் வெளியே விட்டிருக்கிறார்கள். உண்மையில் இந்த கொலைகளுக்கு குரல்கொடுக்க யாருமே இல்லாத நிலை காணப்படுகின்றது.... சமரழகிக்கு செய்யப்பட்டது ஒரு சைபர் குற்றம் (Cyber Crime) அப்படியானால் எப்படி பிணையில் விட முடியும்?... இந்த காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை அனுமதிக்காமல் ஒன்றாக நீதிக்காக நாம் இணைய வேண்டியது அவசியமாகிறது. பெண்கள் அமைப்புகளே நீங்கள் தூக்கத்திலா?"
இருவரையும் அச்சிறுமிக்காகக் குரல் கொடுத்ததற்காகச் சிரம் தாழ்த்திப் போற்றுகின்றேன். இது பற்றி எழுத்தாளர்கள், மனித உரிமை அமைப்புகள், குறிப்பாகப் பெண் உரிமை அமைப்புகள், ஊடகங்கள் குறிப்பகாகச் சமூக ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
தொழில் நுட்பமென்பது நேர்மறை,எதிர்மறை விளைவுகளைத் தரக்கூடியது. இவற்றில் எதிர்மறை விளைவுகளை அறிந்து தவிரப்பது முக்கியம். அவற்றைச் சட்டங்கள் இயற்றிக் கட்டுப்படுத்துவதும் அவசியம். இந்தச் சிறுமி தன்ம் மீது குற்றமில்லாத ஒன்றுக்காகத் தன்னுயிரைப் போக்கியுள்ளார். இதற்குக் காரணம் இவ்விதமான தொழில்நுட்பத்தின் எதிர்விளைவுகள் பற்றியும், அவற்றைக் கையாளவ்து எப்படி என்பது பற்றியும் போதிய விழிப்புணர்வு இல்லாததுதான்.
பெற்றோர்களுக்கு,குழந்தைகளுக்கு இவ்விடயத்தில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது சமூக அமைப்புகள், கல்வி நிலையங்கள், அரச நிறுவனங்கள், சமூகத் தலைவர்களின் முக்கிய கடமையாகும்.
நண்பர் தமிழ் ஜேர்னலிஸ்ட் குறிப்பிடுவதுபோல் 'பெண்கள் தங்களுக்கு ஒரு அச்சுறுத்தல் வரும்போது பின்வாங்குவதை நிறுத்த வேண்டும். என் உடலையோ, என் புகைப்படத்தையோ வைத்து என்னை மிரட்ட நீ யார்? என்ற கேள்வியைக் கயவர்களின் முகத்திற்கு நேரே கேட்க வேண்டும். இணையப் புகார்களை அளிக்க சட்டரீதியான வழிகள் இலங்கை உட்பட உலகெங்கும் உள்ளன என்பதைப் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.. இனி ஒரு சமரழகி கூட இந்த மண்ணில் இத்தகு முடிவுகளை எடுக்க வேண்டாம் என்பதை பிள்ளைகளுக்கு சமூகம் கற்றுக் கொடுக்க வேண்டும்"'. இது மிகவும் அவசியம்.
வைத்திலிங்கம் ரஜனிகாந்தன் கூறுவது போல் 'இந்த காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை அனுமதிக்காமல் ஒன்றாக நீதிக்காக நாம் இணைய வேண்டியது அவசியமாகிறது'. அவர் இறுதியி;ல் கேட்டுள்ள கேள்வி முக்கியமானது.
" பெண்கள் அமைப்புகளே நீங்கள் தூக்கத்திலா?"
ஆம். பெண்கள் அமைப்புகள் மட்டுமல்ல, பெண் எழுத்தாளர்கள் மட்டுமல்ல, எழுத்தாளர்கள், ஊடக்வியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் தூக்கத்திலிருந்து விழித்தெழுதல் அவசியம். இவ்விதமான குற்றங்களைப் புரிந்தவர்கள் மீது சட்டம் விரைவாகச் செயற்பட்டு, நீதியை நிலை நாட்டும் வகையில் நாட்டின் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.
தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சமரழகி எழுதி வைத்த குறிப்பில் இவ்விதம் குறிப்பிட்டிருக்கின்றார் 'இப்பிடி photo வச்சு பெண்ணிட வாழ்க்கையை நாசம் செய்ரவர்களை சும்மா விடாதீர்கள்'
நிச்சயம் சட்டம் இவ்விதக் குற்றவாளிகளைச் சும்மா விட்டுவிடக் கூடாது. எதிர்காலத்தில் இவ்விதக் குற்றங்கள் ஏற்படாத வகையில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது அவசியம்.அதே சமயம் இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விழிப்புணர்வு அடையும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதும் அவசியம்.
எதிர்காலத்தில் இவ்விதமான சந்தர்ப்பங்களில் சமரழகிகள் அநீதிக்கெதிராகச் சமர் புரியும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பெற்றோரின் பங்களிப்பும் முக்கியம். சரி . பிழைகளைச் சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.










