இலங்கை இளைஞர்க்குச் சவால்கள் கூடிப் போய் விட்டிருக்கின்றன​ .இயல்பாக​ வாழ​ முடியாத​ நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் . யாழ் இளைஞர்களுக்கு 77 ம் ஆண்டிலேயே போர்ப்பிரகடனம் விடப்பட்டு விட்டது . திரவியத்திற்கு மங்கலாகத் தெரியத் தொடங்கியது 84ம் பகுதியிலே தான் . 'முடியுமா , சண்டியக்குழுக்களாக​ நிற்கிற​ இலங்கைப்படைகளை எதிர்த்து நிற்க முடியுமா? ' . சுய வட்டத்திலே நிற்க​ முடியாத​ அவன் போர்க்கோலம் பூண்டு தைரியமாய் நிற்க​ முடியுமா ? 'முடியாது' என்று சொல்வதை விட​ 'முடியும் !' என்று நெஞ்சை நிமிர்த்தி நிற்பது தான் தர்மம் . நிற்கிற​ போதே நிலமையை ஒரு அலசு அலச​ முடியும் . இலங்கை சபிக்கப்பட்ட​ படுகொலைகளின் தேசம் .

நாம் அயலவர்களை விரோதமாக, ​ குரோதமாகப் பார்க்கவில்லை . ஆனால் , ' காணாமல் போனோர்களுக்காக​ நீங்களும் குரல் எழுப்ப​ வேண்டாமா? ஏன் எழுப்புவதில்லை?' என்றே ஆச்சரியம் . இஸ்ரேல் பாலஸ்தீன​ நிலங்களில் நடத்துற​ தாக்குதலின் போதும் புலம்பெயர்ந்தவர்கள் சமயத்தில் , பாதிக்கப்பட்டவர்கள் நடத்துற​ எதிர்ப்பு நிகழ்வுகளுக்கு எதிராக​ கொடி பிடித்து மட்டை பிடித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் . மன​ அளவிடைகள் சமதரத்தில் இல்லாமல் கிடக்கின்றன​ . உளவியல் ரீதியில் சோர்வடையச் செய்யும் வாழ்வின் நீட்சியில் ( வாழ்தல் தொடர்பான​) நம்பிக்கைகளை இழந்து விடவே கூடாது . முன் எதிரே , எதிரிக்கெதிராக​ போராட​ வேண்டிய​ அவசியம் என்றுமில்லாது கூடிக் கிடக்கிறது . திணிக்கப்பட்டிருக்கிறது .

'நமது கையில் ஆயுதங்களை திணித்தவர்கள் அவர்கள் தான் ' என்று தோழமையில் கூறக் கேட்டிருக்கிறான் . தொடர்ந்தும் 'நமக்கு எந்த​ மெசின்களையும் கையாளவும் தெரிய​ வேண்டுமடா! ' என்பார்கள் .அந்த​ நினைப்பில் இங்கே வந்த​ பிறகு 'வெல்டிங்' கோர்ஸும் எடுத்திருந்தான் . ஆனால் , அந்த வேலை தான் கிடைக்கவில்லை . ' தூக்கிய​ ஆயுதமும் திரும்பி எங்களைத் தான் சுடுகிறது . இதுவும் ...இப்படி 'என்று கூற​ , இங்கத்தைய​ நண்பன் ' என்ன​ நீ கோழையாய் இருக்கிறாய் . பகஃபயர் ' இது ! ...எல்லாத்திலும் கிடக்கிறது . இதைக்கட்டுப்படுத்தி தான் வெல்ல​ வேண்டும் . முதலாளித்துவத்தில் இது அதிகம் . கம்யூனிசத்தில் குறைவு . ஆனால் , தொழிலாளிக்கு அதிகாரத்தை கொடுக்க​ விரும்புவானா ? . சூழ்ச்சி சதிகளால் அது இனம் ,மொழி ...என​ எல்லாவற்றையும் எரிய​ வைத்துக் கொண்டு அந்தப்பிரிவில் பிரச்சனைகளை கூட்டிக் கொண்டேச் செல்லும் . இலங்கையன் தமிழனை வாட்டுகிறான் . அங்கேயும் தரகு முதலாளித்துவத்துக்கு எதிராகவும்​ போராட வேண்டும் '. ' தோழர் இங்கே வந்தும் திருந்தவில்லை ...'என்று சிரிப்பான் . ' டேய் , இது தான்ரா நிலமை . நாம​ வென்று தான் ஆக​ வேண்டும் . முதல் சந்ததி , 'தேற​ மாட்டாது என்றளவில் குத்துப்பட்டு பையித்தியம் பிடித்து அலையுமடா , அது தான் நடக்கிறது . நீயும் ஒரு பையித்தியம் ' என்கிறான் . அவன் சொல்றதிலும் ஒரு ஞாயம் இருக்கிறது தான் .

அவனுக்கு ஈழக்கவிஞரும் சமூக​ நேயருமான​ செழியனின் கவிதை ஞாபகம் வந்தது . அவன் இன்றைய​ நிலைமையை எவ்வளவு தெளிவாகக் கூறுகிறான்!

' மனிதத்தை துப்பாக்கி முனையில் நடத்திச் சென்று புதைகுழி விளிம்பில் வைத்து சுட்டு விட்டு, புறங்காலால் மண்ணை தள்ளி மூடி விட்டு , தெருவோரச் சுவர்களில் நியாயம் சொல்கிறார்களாம் நியாயம் !இது ஒரு அரசியல் தற்கொலை என​ உங்களுக்கு புரியவே இல்லையா ? நமது மரணங்கள் நம்மவர்கள் கையால் நடக்கும் என​ தெரிந்திருந்தால் நான் போராடுவதற்கே வந்திருக்க​ மாட்டேன் . சுதந்திரதிற்காகப் புறப்பட்டு சுதந்திரம் மறுக்கப்பட்ட​ மககளாக​ எவ்வளவு காலம் தான் வாழ்வது ?'

நீங்கள் நினைப்பதும் சரி .இப்படி எழுதியவன் வாழ்வு கடைசியில் குடியால் தான் முடிந்தது . அது ஒரு வகை தற்கொலை என்றே அவனுக்குப் படுகிறது .

இவன் எழுதிய​ ' ஒரு மனிதனி நாட்குறிப்பிலிருந்து ...' என்ற புத்தகத்தை கணனி நூலகத்தில் எடுத்து வாசிக்கத் தவறி விடாதீர்கள் . புத்தகமாக வைத்திருந்தால் இலங்கைப் போலிஸார் பயங்கரவாதச்சட்டத்தின் உங்களை கைது செய்வர் . தற்போது இலங்கையில் பாடகரை கைது செய்த​ போது திரவியம் , ' பாடகர் , சிங்கள மொழியிலும் இப்பாடல்களை பாடி இருக்க​ வேண்டுமோ ? ' என​ நினைத்தான் . அந்த​ முயற்சியும் முன்னெடுக்கப்பட​ வேண்டியதொன்று தான் . நாயை நடு ஆற்றில் விட்டாலும் குரைக்கிறதை விடாது , ஏன் வீண் வம்பு . அனைவரும் வாசிக்க​ வேண்டிய​ புத்தகம் . அவன் கழுகு ரசிகன் இல்லை . ஆனால் , பயங்கரவாதச்சட்டத்தில் நடப்பதை தான் அறவே வெறுக்கிறான் . இதன் கீழே கணக்கு வழக்கில்லாமல் பல பேர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் . 'கதாநாயகர்கள் மேடை , பூங்கா ஒன்றை எழுப்பி விட்டால் எல்லாவற்றையும் சாட்சியமற்றாக்கி விடலாம் ' என​ ஐரோப்பிய​ சமூகங்கள் வேதம் ஓதுகின்றன​ . இலங்கையும் அதன் கீழ் இருக்கிற ஒன்று தானே ,இவயள் பக்கங்களை... மறைத்தும் எழுப்பியும் வருகிறது . எனவே , அவயளுக்கு தொடர்ந்தும் 'பயங்கரம்' என​ காட்ட​ தேவை இருக்கிறது . அரசியலில் ஆயுதம் ,அதிகாரம் இருக்கிற​ வரையில் புத்தமும் தர்மமும் காற்றிலே பறந்து கொண்டு தானிருக்கும் .

எவர் ஆயுதம் தூக்கினாலும் சரி , அது தன் குணத்தை தான் காட்டும் .அதன் துளைக்கு எதிரி , மனைவி மக்கள் ,நண்பர் எல்லாரும் ஒன்று தான் . 'சுடு 'என்றால் சுட​ மட்டுமே தெரியும் . விடுதலை அடையும் நாடுகள் ஆயுதங்களைப் ஏன் பெருக்கினமோ ? மற்ற​ நாடுகள் தாம் ஆயுதங்களை இவர்கள் கையில் கொண்டு வந்து திணிக்கின்றன​ . சரி , இவர்களுக்கும் தான் புத்தி எங்கே போய் விடுகிற​து ? . தனது கொள்கைகளுக்கும் கருத்துக்களுக்கும் ...உலக நடப்புகளுக்கும் தொடர்பு ஏற்படுத்த​ முடியாமல் தவிக்கிறான் .

கோவிட் செய்த​ செய்கிற​ அறுவடையால் உலகமே அழிகிறது என்று சாத்திரிகள் 2000 இல் கூறியது காலம் தப்பி நடக்கிறதாகப் பதற்றம் பற்றி இருந்தது . இருக்கும் வரையில் எம்மை எவரும் ஒன்றும் செய்ய​ முடியாது என்றிருந்தத நம்பிக்கை கழன்று விடுமளவிற்கு லூசாகி விட்டிருக்கிறதே . 'கோவிட்டை ' ஒரேயடியாய் வையவும் முடியவில்லை . இச்சூழல் வரா விட்டால் இந்தப் பயணம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க மாட்டாது . வாழ்க்கை இப்படித் தான் ஓடுகிறது என்பதையும் ஏற்றுக் கொள்ளவும்​ வேண்டும் .

கோவிட்டுக்கு முதலே , கண்ணால் பேசும் மகளின் வாழ்வு வரைகோடு சரிந்து இறந்து போய்யிருந்தாள் . எனவே எங்கையாவது வெளியில் போய் வாரதே நல்லது எனப்பட்டது . நகரமே ஆமைப்பூட்டு போட்டு மூடியது என​ சுனாமி போல​ ஏற்பட்டு விட்ட​ நிலமை தணியுமா ? என்பதே பெரிய கேள்விக்குறியாய் கிடந்தது . வக்சீன் கண்டு பிடிப்பார்களா ? என​ ஒரு வருசமே ஓடி விட்டது . மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின​ . அதிலேயும் பனிப்போர் . ரஸ்யா முதலில் கண்டு பிடித்தது . சீனாவும் இரண்டாவதாக​ சேர்ந்தது . அமெரிக்கா, சீனா தான் பரப்பியது என​ பொய் பேசி அதையும் விலத்தியது . அவற்றை விருத்தி செய்ய​ மேற்கும் , ஐரோப்பாவும் தயாரில்லை . முதலில் , இந்தியாவும் இங்கிலாந்தும் கூட்டாக​ கண்டிருந்ததே உத்தியோகபூர்வ​ வரவாக​ இருந்தது . பிற கண்டுபிடிப்புக்களும் பயன்பாட்டுக்கு வர அடுத்த​ வருசமும் கழிந்தது . இவர்கள் கொடுத்ததை விட​ மற்றவர்களே இலவசமாகவும் கொடுத்து உடனடியாக​ ஆபிரிக்கா , தென் அமெரிக்கா நாடுகளுக்குக் கொடுத்து இந்தளவிற்காகவாது கட்டுபடுத்தி இருக்கிறார்கள் .

ஒரு வக்சின் ஏற்றல் நடந்தது .இரண்டாவதை ஏற்றிய​ பிறகு 'கனடாவில் பயணிக்க​ முடியும்' என​ பிரதமரின் அறிவிப்பு வெளியாகியது . பதற்றத்தை வெகுவாக​ வக்சின் தணித்து விட்டிருந்தது . இருந்த​ போதிலும் தினமும் கோவிட்டுக்கு பலியாகும் மனிதர்கள் இருந்து கொண்டேயிருந்தார்கள் .பெருமளவில் என்பது குறைந்திருக்கிறது தவிர​ பலிகள் நிற்கவில்லை .இரண்டாவதை ஏற்றிய​ பிறகு , இருவருக்கும் இதயத்தில் சிறு படபடப்பையும் கொண்டு வந்தது . விமானங்களை பறக்க​ அனுமதித்ததில் மனைவியின் வைத்தியர் பச்சைக் கொடி காட்டி விட​ , திரவியமும் விஜயாவும் அவனுடைய​ தங்கை மணிமலரின் அழைப்பை ஏற்று 'எயார் கனடா' விமானத்தில் ஏறினார்கள் . பறக்கும் யந்திரத்தில் ஏறித்தான் எவ்வளவு காலம் ஓடி விட்டிருக்கிறது .

ஏறத்தாழ​ ஏறியதே மறந்து போய் விட்டது . விஜயா சிறுமி போல​ ஊர்தியின் உள்ளே பார்க்கிறாள் . காலம் கரைந்தது கொஞ்சநஞ்சமா என்ன​ . இலங்கையில் ஈழத்தமிழர்க்கு விதிக்கப்பட்டிருக்கிற​ சராசரி ஆயுள்காலமே கடந்து விட்டது . ஆற்றோட்டமுள்ள​ சிலர் - மனிதர் வாழ்விலும் கடவுள் இப்படி தான் எழுதி விடுகிறார் .அன்று தொழினுட்பக்கல்லூரி நண்பன் ஒருவன் 'ஒவ்வொரு மனிதனும் தன்னைக் கடவுளாக​ நினைக்க​ ஆரம்பித்ததில் இருந்து தான் இந்த​ அவலம் எல்லாம் தொடங்கின​' என்று கூறியது நினைவுக்கு வந்தது . இவ்வளவு காலமும் காயத்திரி பின்னால் ஓடிக் கொண்டிருந்தார்கள் . கடவுள் இவளையும் இவர்களோடு சேர்த்து விட்டாரே . மலர்களாக​ சிரித்த​ கண்களை மூடிவிட்டாலும் , உள்ளத்தில் சிரிச்சமுகத்தில் அழகாக​ முளித்துக் கொண்டு தான் இருக்கிறாள் . கண்களால் பேசி அவன் மடியில் இருப்பது போல​ தோன்றிக் கொண்டேயிருக்கிறது . அதிருஷ்டம் கெட்ட​ பிறவி அவளா? அவர்களா ? . அவளோடு சேர்ந்து அவன் உயிரும் போய் விட்டது .

'பிறந்தால் ஊர் நிமிர​ வாழ​ வேண்டும் ' என்ற​ அவன் கனவு நனவாகவில்லை . மாணவனாய் இருக்கிற​ போதே ஓரளவு நாயகனாய் உருப்பெற்றிருந்தால் தான் ஒருவேளை சொல்லும்படியாக​ வாழ​ முடியுமா? நாட்டின் அரசியலைச் சொல்வதா , அறிவியலில் நாட்டமற்ற​ சமூகத்தைச் சுட்டுவதா ?

குலுக்கலுடன் ஊர்தி தரையிலிருந்து மேலேறுகிறது . இவர்கள் நினைப்பதொன்று . விதி நினைக்கிறது ஒன்று . விஜயா கையைப் பிடித்தாள் . 'சுவிங்கம் வேண்டுமா?'என்று கேட்கிறாள் . மணிமலரின் மூத்தவள் 'காதடைக்கும் அடைப்பை வைத்து சுவிங்கமும் மெல்லுவது நல்லம்' என்று கூறி இருந்தாள் . ' வேண்டாம் ' என்கிறான். எதையும் தாங்கும் குரங்கு அவன் . ஊர்தி கோதுக்குள் குட்டி குட்டி ஜன்னல்களின் அடைப்பை நீக்கி வெளியில் பார்க்கலானார்கள். அலுத்து விட்டதால் சிலர் மூடியும் விட்டிருந்தனர் .ஏறுகிற​ போது நிலத்திலுள்ளவை சிறுசுகளாக​ மாறி விடுகின்றன​ .மேகங்களை ஊடுருவி பறக்கிறது . பக்தி திரைப்படங்களில் நிறைய​ வெள்ளை பஞ்சு மேகங்கள் மிதப்பதை காட்டுவார்கள் .கற்பனையில் காட்சிகளை வடிவமைத்திருப்பதாக​ நினைத்திருந்தான் . இவற்றைப் பார்க்கிற​ போது தான் புரிகிறது .அகதியாய் ஏறிய​ விமானம் இதை விட​ மடங்கு பெரியது பிரமாண்டம் அதில் ஜன்னல் இருந்ததே ஞாபகம் இல்லை .

தரைக்கு மேலே மிதப்பது அலாதியான​ அனுபவம் தான் .முன் சீட்டில் இருந்தவருக்கு விரைவில் அலுத்து விட்டது . கறுப்பு அடைப்பை இழுத்து மூடி விட்டார் . பல​ தடவைகள் பறக்கிறவர் போல​ இருக்கிறது . இந்த​ விமானத்தில் இரு கழிவறைகள் இருந்தன​ . பின்னால் இருக்கிற​ ஒன்றையே பயணிகள் பயன்படுத்தினர் . ஆகாயத்தில் நடக்க​ வேண்டாமா? கழிவறைக்கு நடந்து சென்றான் . கிடக்கிற​ குட்டி அறையிலும் மனிதனால் ஜீவிக்க​ முடியும் என்பதை உணர்த்துகிறது . நாமோ தொடர்மாடி வீடுகளில் 'இடம் போதவில்லை 'என்று சொல்லி விமர்சிக்கிறோம் .யப்பானியர் குட்டி ஹொட்டல்களைக் கட்டி பயிற்சி எடுக்கிறார்கள் .விண்வெளிப்பயணம் அப்படிப் பிழங்கிறதையே கட்டாயப்படுத்துகிறது . தாயகத்தில் நாம் குடியிருக்க​ ஒரு ஏக்கர் காணி ( வீடு , விவசாயம் செய்ய​ ...) இல்லை எனப் போராடுகிறோம் . எங்களுடைய​ நிலத்தை 'தன்னுடைய​ உடமை ' என்கிறார்களே , அது தான் கொந்தளிக்க​ வைக்கிறது . உரிமை , உடமை தாம் பயங்கரங்கள் என்பதை அறிய​ நாம் ஒருநாளும் ஆன்மீகவாதி ஆகப் போவதில்லை .' பக்திமான் ' கைவந்த​ கலை .சாகிற​ வரையில் கெளரங்களுடன் தொடரப் போகிற​ கலை .அவனுள் குமுறல்கள் .

சுத்தமாக​ இருக்கும் கழிவறையில் கைகு சோப் போட்டு கழுவ​ குட்டி நீர்த்தொட்டி கிடக்கிறது .கை துடைக்க​ உலர​ வைக்க​ தான் தேட​ வேண்டியிருந்தது . வந்து சீற்றில் அமர்கிறான் . தள்ளு வண்டி ஒன்றில் பானம் ,தேநீர் , டீ .. திண்பண்டங்கள் வருகின்றன​ . இலவசம் இல்லை . முன்னொரு காலத்தில் இருந்தது . பின்னால் வங்கி மட்டை மெசினுடன் அறவிட​ ஒருவர் வருகிறார் . தரையை விட​ பறப்பில் இரண்டு -மூன்று விலை . தரம் . வெற்று தண்ணீர்ப் போத்தலைக் கூட​ எறியாது வீட்டில் அழகுப் பொருளாக​ வைக்கலாம் .

இருவரும் ஒவ்வொரு தண்ணீர் போத்தல்கள் வைத்திருந்தார்கள் . இரண்டு மணிநேர​ பறப்பு தானே , அதோடு கொறிக்கிறதுக்கு சிறிய​ கடலைக கலந்த​ சொக்கிலேற்று நீட்டங்கள் கொண்டு வந்திருந்தாள் . விஜயா ஒரு பக்கற்றை எடுத்து அவனிடம் தருகிறாள் . மென்று கொண்டு...கொண்டு வந்த​ சஞ்சிகையை எடுத்துப் புரட்டுகிறான் . ' தொடர்ந்தும் எறிகணைகளின் கோரப்பசிக்கு பலியாகி மாண்டனரோ இல்லை முதலை விழுங்க​... படையினரிடம் அகப்பட்டுக் கொண்டனரோ? . களமுனையில் வாகனங்களை ஓட்டியவன் கட்டடவேலைகளில் வாழ்வை ஓட்டுகிறான் .காலங்கள் கரைந்தாலும் காயாத​ நினைவுகளில் தோழமையை மீட்டுகிறான் . அழித்து சிதைக்கலாம், ஆனாலும் புதைத்த​ இடங்கள் மறந்து போகாது, உயிர்ப்பெற்று, பெற்றோர்களை இழந்த​ (சிறுவர்) அனாதை இல்லங்கள் கணக்கற்றுக் கிடக்கின்றன​ . ' காந்தி கண் கொண்டு பார்க்க​ காலமும் கருணை கொண்டதாகவும் இல்லை . வெற்றிச்செல்வியின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன.

சிறுகதையாய் எழுதுற​ போது அவன் மிகப் பெரிய​ உளவியல் சிக்கலை எதிர் கொள்கிறான் . சவாலாகவே இருக்கிறது . உண்மையாக​ இருக்க​ வேண்டிய​ நிர்ப்பந்தமும் ஏற்படுகிறது . பிறரது பார்வையில் எப்படியோ , தன்னில் தோல்வியை உணர்கிறான் . புனைவுக்குட்படுத்தி எழுதும் போது சிக்கலுக்குள் வேறு விழுந்து விடுகிறான் .எழுதி முடித்த​ பிறகு அவன் இயல்புக்கு வர​ பல​ நாட்கள் எடுக்கின்றன​ .சிலவேளை மூளை பிசகி தெருவில் அலையவும் வேண்டி நேரிட்டு விடுகிறது . அவன் பார்ளிமெண்ட் , வெலஸ்லி வீதியில் அப்படி ஈழத்தமிழர்கள் 2 ,3 பேரைப் பார்த்து விட்டிருக்கிறான் .'அண்ணே' என்று கையை நீட்டுவார்கள் . சிறு தடி ஒன்றையும் தோளில் சரித்து வைத்து 'பயிற்சி' என்கிறான் ஒருத்தன் . மனவறைக்குள் பலவிதமான​ எண்ணங்கள் நுழைந்து கிடக்கின்றன​ . தொடர்ந்தும் புகுவதற்கு அணை கட்ட கதையாய் எழுதி விட​ வேண்டியதும் அவசியம் ! தமிழர்கள் எண்ணற்ற​ அபத்தங்களுடனும் கூடிய​ தாழ்வுச்சிக்கல்களுடனும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .

விமானம் சமன் தப்பி சிறிது​ தளும்புறுது . பலத்த​ காத்து வீசுது போல​ வானின் பயமுறுத்தல் . விஜயா கண்ணை மூடி கும்பிட்டுக் கொண்டிருக்கிறாள் . தரையை விட​ காற்றில் மிதப்பதில் ...பயங்கரம் காவித்தான் இருக்கிறது . பிறகு இயல்பாகி இறங்கத் தயாராகிறது . இதிலே வேலை செய்ற​ பணியாட்களுக்கு ...' பயங்கரம் நிதம் நிதம் காவிக் கிடக்கிறது' . அனுதாபம் பிறக்கிறது . நம்மைப் போல அவலங்களை சுமக்கிற​ ​ மக்கள் மற்றைய​ நாடுகளிலும் இருக்கிறார்கள் . விமானத்தில் ஏறினால் உங்களுக்கும் எல்லா ஞானங்களும் வந்து கரையும் . மணிமலர் 'விமான​ நிலையத்திற்கு அருகில் இருக்கும் ரிகொற்றனில் நிற்கிறேன் , பரிசோதனை முடிந்த​ பிறகு தொலைபேசியில் அழை வருகிறேன் ' என​ வாட்ஸ அப்பில் செய்தி வருகிறது . கிங் மாவட்டப்பிரிவிலிருந்து நூறு கி.மீற்றர் தூரத்திற்கு கார் ஓடிவந்து ஹலிஃபக்ஸ் விமான​ நிலையத்திற்கு அருகில் காத்திருக்கிறாள் .

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்