இருட்ட தொடங்கி விட்டது. டீ நகர் பஸ் ஸ்டான்டில், இறங்கி, மறைவாக, சற்று இருட்டில் ஓரமாய், நிறுத்தப்பட்டிருந்த ஷேர் ஆட்டோவை நெருங்கி விசாரித்த போது, அது பாண்டி பஸார் செல்லாது என்று தெரிவித்தார்கள். பனகல் பார்க் வரை செல்லலாம். பெட்ரோல் பங்குடன் நீங்கள் இறங்கி நடக்கலாம் என்று அறிவுரையும் வழங்கினார்கள். மீண்டும் பஸ் ஸ்டேன்டை நோக்கி ஓடினேன். மூச்சு வாங்கியது. ஒரு பஸ் கிளம்பி சென்றது. இன்னுமொரு பஸ் நிறுத்தப்பட்டது. ட்ரைவரும், கண்டக்டரும் பின்வாசல் வழியாக இறங்கி கொண்டிருந்தனர். ‘உட்காரு’ என்று கூறிவிட்டு, எனது கேள்விக்கு பதிலளிக்காமல், எங்கேயோ சென்றனர். டீ குடிப்பதற்காக இருக்கும். மனிதர்களுக்கு களைப்புத்தான். பகல் முழுவதும் இந்த பயங்கர வெயிலில் ஓட்டியிருப்பார்கள். ஜன்னல் வழியாக, அமர்ந்தப்படி பார்வையை செலுத்தினேன். ஷேர் ஆட்டோ நிரம்பிக் கொண்டிருந்தது. சுற்றிவர ஒளிர்ந்து கொண்டிருந்த, நியான் விளக்குகள் இருளை பகலாக மாற்றிக் கொண்டிருந்தன. பாதை அங்கே நான்காக பிரிந்து கொண்டிருந்தது. சந்தி. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாய், நெருக்கி அடித்தபடி சென்றன. வேலை முடிந்து வருபவர்கள், கடைகளுக்கு சென்று வருபவர்கள் என பஸ் மெது மெதுவாக நிறைய தொடங்கியது. எனக்கு முன் சீட்டில், ஓர் பெண்ணும் பிள்ளைகளும். பக்கத்து சீட்டில், களைப்புடன் அமர்ந்திருக்கும், ஒரு கூலி வேலை செய்யும் பெண். மெலிந்த தோற்றம். பற்களில் காவி ஏறி இருந்தது. சேலையை ஏனோ தானோ என்று சுற்றி இருந்தாள். உஷ்ணத்தால் அவள் முகம் வியர்த்து, பிசு பிசுத்து, பளபளத்தது. எனது முகமும் அதே போன்று இருக்கக்கூடும். சற்று நேரத்தில், ஒரு சோளப் பொறி விற்பவன், நின்றிருந்தவர்களை தள்ளியபடி தண்ணீர் போத்தலுடன், கூவியபடி வந்தான். இவளும் தன் பையை திறந்து, ஒரு சிறிய போத்தலை வாங்கிக் கொண்டாள். தாகமாயிருக்கும். காலையில் இருந்து உழைத்த பணம் இப்படி பறிபோகிறதே - நான் வருத்தப்பட்டேன். இருந்தும் அவ்வளவு உஷ்ணம். இந்த மாலையிலும் இவ்வளவு. பகல் அடித்த வெயிலில், கிளம்பிய சூடு இன்னும் தணிந்த பாடில்லை. வியர்வையும் பிசுபிசுத்து, வழிகின்றது. மழை வந்தாலும் வரும் - அவ்வளவு புழுக்கம்.

இப்போது இவள் பக்கமாய், ஒரு இள நங்கை ஏறி அமர்ந்து கொண்டாள். இவளும், ஏழ்மையில் அடிபட்டவள்தான். மெலிந்த தோற்றம். ஒரு குழந்தை வேறு. குழந்தைக்கு மூன்று, நான்கு வயதிருக்கும். ஓர் இருபது வயதையே இவளுக்கு மதிப்பிடலாம். அல்லது பதின்வயதுக்காரி என்றாலும் பொருந்தக்கூடியதுதான். ஒரு சிறுமி எனலாம். அவ்வளவு சிறிய உடம்பு - கருத்தவள் - சின்னஞ்சிறு கூரிய முகம். இந்த இளவயதில் திருமணம் முடித்து, குழந்தையையும் பெற்றிருக்கின்றாள்?

குழந்தை கத்த தொடங்கியது… உஷ்ணமாயிருக்கும். குழந்தை முதலில் கீழே இறங்கிவிட தெண்டித்தது. அவள் பொருட்களை தனது கால் நடுவில் இறுக்கிக் கொண்டு, அடம்பிடிக்கும் குழந்தையையும் மடியில் இருத்திக் கொண்டு, மறு கையில் ஏதோ பொருட்களை பிடித்தவாறே குழந்தையுடன் மல்லுக்கட்ட தொடங்கினாள். குழந்தை இறக்கி விடுமாறு மீண்டும், மீண்டும் கத்த தொடங்கி விட்டது.

சோளப்பொறிகாரன் போது இரண்டாவது ரவுண்டுக்காய் பஸ்ஸேறி வந்தான். கூட்டமும் இப்போது கூட தொடங்கி இருந்தது. இப்போது காலி இருக்கைகள் இல்லை. பஸ் புறப்படும் லட்சணமும் இல்லை. நேரம் ஓட தொடங்கி கொண்டிருந்தது. வியர்வையும் வழிய தொடங்கி விட்டது. உ~;ணத்தாலோ என்னவோ குழந்தை இப்போது மடியில் திமிறியவாறே, உரத்த குரலில், சத்தம் வைத்து கதறத் தொடங்கி விட்டது. குழந்தையின் சத்தம் இப்போது அகோரமாய் பஸ்ஸை பிளக்க தொடங்கி இருந்தது. நேரமும் அரை மணித்தியாலத்தை இப்போது கடந்துவிட்டது. “கீழே இறக்கி விட்டுருவேன்…” இளம் தாய் அந்த குழந்தையை பயமுறுத்தினாள். குழந்தைக்கு அதுதான் தேவையாக இருந்தது. இவளோ, ஒரு கையில் பொருட்களை பற்றி பிடித்தவாறே, குழந்தையை ஒரு கையால் இறுக்கிப் பிடித்து மடியில் இருத்துவதில் ஈடுபட்டிருந்தாள். கூட்டம் திரும்பி பார்த்தது. அவ்வளவு சத்தம் வைத்து அழுதது குழந்தை. உஷ்ணமோ?. “இறக்கி விடம்மா…” அறிவுரை தாராளமாய் வழங்கப்பட்டது. இவள் மறுத்து விட்டாள். பஸ்ஸ{ம் புறப்படுவதாய் இல்லை. காற்றடித்தால் கூட உஷ்ணம் சற்று குறையும், இந்த புழுக்கமும் அகலும். குழந்தைக்கு இந்த பஸ்ஸே பிடிக்கவில்லை போலும். அப்படி அழுது பெருஞ்சத்தம் வைத்தது. இது வெறும் அழுகை அல்ல. அலறல். அனைவரும் திரும்பி பார்த்தனர். முன்வரிசையில் இருந்து இருப்புக் கொள்ளாத ஓர் அறிவுரை மீண்டும் ஒலித்தது: “குழந்தையுடன் நீயும் கீழே இறங்கி நில்லம்மா… பின்ன ஏறிக்கலாம்… காத்தும் வீசும்….” ஆனால் இவள் சம்மதித்த பாடில்லை. பக்கத்தில் அமர்ந்திருந்த, கூலி பெண் இப்போது சோளப்பொறி பக்கெட்டையும் வாங்கி இருந்தாள். பக்கெட்டை உடைத்து இரண்டு விரல்களால் சோள பொறியை எடுத்து வாயில் போட்டாள். பின், இவளுக்கும் இரண்டு விரலால் அள்ளி தந்தாள்.

“கொழந்தைக்கு ஊட்டி விடு. அழுகையை நிப்பாட்டும்…” அதையும் இவள் வாங்கினாள் இல்லை. குழந்தை இன்னும் பயங்கர சத்தம் வைத்தது. இப்போது இந்த இளம் தாய்க்கு புரிந்தது குழந்தையின் தேவை என்னவென்பது. பால்! ஆம்… அதுதான் இப்போது குழந்தையின் தேவையாக இருக்கலாம். ஆனால் இந்த இளம் தாய் இறுக்கமான சுடிதார் போட்டிருந்தாள். மெல்லிய உடம்பு வேறு. இவள் எப்படி பால் தருவாள்…? சுடிதாரை மேற்புறமாக இழுத்து கழட்டுவது என்பது முடியாத விடயம். “ரெண்டே ரெண்டு நிமிஷம் பொறுப்பியா… வீட்டுக்கு போயிடலாம்… கொஞ்சம் இரு…”. ஆனால் குழந்தை இப்போது மிகப் பெரிதாய் சத்தம் வைத்து அழ தொடங்கி இருந்தது. அனைத்தையும் அது நிராகரித்துவிட்டு திமிற தொடங்கி இருந்தது - பயங்கரமாய் - தன் சிறு கை கால்களை உதைத்து. இவள் தடுமாறி தள்ளாடினாள். சமாளிக்க முடியாமல். பக்கத்தில் இருந்த கூலி பெண் இப்போது இடி போல முழங்கினாள்: “ஒரு மணி நேரமாச்சு… இந்த டிரைவரும் கண்டக்டரும் எங்கே…” அவளது குரல் அந்த குழந்தையின் குரலை விஞ்சியது.

இளநங்கை, இறுதியில் சமாளிக்க முடியாமல், தான் சுற்றி இருந்த துப்பட்டாவால் குழந்தையையும், மார்பையும் மறைத்தவாறே, கஷ்டப்பட்டு, தனது சுடிதாரின் மேற்புறத்தை இழுத்து கீழிறக்கி, குழந்தைக்கு பருக்கத் தொடங்கி விட்டாள்.

கணநேரத்தில், குழந்தையின் அழுகை சத்தம் ஓய்ந்து அமைதியானது. குழந்தை சத்தமே வைக்காமல் சமர்த்தாய்த் தாயிடம் பால் அருந்தியது. இந்த இள வயதில், இந்த தாய்க்கு இத்தனை பொறுப்பா? இதன் காரணம், இவளது உடல் தேவையா? அல்லது இவள் ஏமாற்றப்பட்டாளா? அல்லது யாரோ இவளை பலவந்தப்படுத்தி அல்லது இவளை பயன்படுத்தி…. அவ்வளவு இள வயது இவளுக்கு… ஒடிந்து போகும் மெலிவு வேறு. அவன் மறைந்து விட்டானா? இதுவரை இவள் யாருக்கும் ஃபோன் செய்ததாகவும் இல்லை… காலிடுக்கில், ஒரு கையில் சாமான்களை இடுக்கியபடி வேறு. ஃபோன் உள்ளதா? இவள் ஏன் அழைத்தாள் இல்லை… இவளையும் யாரும் அழைக்கவில்லையே… இவளும், இவளது இந்த குழந்தையும் தனித்து விடப்பட்டுள்ளனரோ, இந்த உலகில்? எனது மனம் கேள்விகளை அடுக்க துவங்கி விட்டது. பொறுக்காது, பக்கத்தில் இருந்த கூலி வேலை செய்பவள் வெடி போல ஓங்கார குரல் எழுப்பினாள்: “ஒரு பேப்பர் தாங்க… சைன் வச்சு கொடுப்போம்… எவ்வளவு நேரம்! இனிதான் சோறு பொங்கி, கொழந்தைகளுக்கு சமைச்சாகனும்… கொழந்தைக பசியில கிடக்கும்…. எத்தனை மணிக்கு வீட்டுக்கு போறது…?

அவளது குரல் இந்த குழந்தையின் அலறலை விட ஓங்கி இருந்தது. அது, பஸ்ஸை இரண்டாக பிளந்தது. பஸ்ஸில் இருந்து அனைவரின் குரலும் ஒரு வகையில் இதுதான். அனைவரும் உளமாற கேட்க ஏங்கிய குரல் இது - நான் உட்பட. எப்படி இவள் மாத்திரம் வாய் திறந்து குரல் வைத்தாள்…? தனது குழந்தைகள் பசியால் வாடிக் கொண்டிருக்கின்றன என்ற உந்துதலா…? இனிதான் அடுப்பை மூட்டி உலையை வைக்க வேண்டும் என இவள் கதறுகின்றாள்…

இவளது, ஆவேச உணர்வா, இந்த குரலை, இவளில் தோற்றுவித்தது? இந்த கேள்விகளை என் மனது குடைந்து கொண்டிருந்தபோது, கண்டக்டரும் டிரைவரும் அவசர அவசரமாய் பஸ்ஸில் ஏறினர். குழந்தையை பார்த்தேன். இப்போது பாலை அருந்திவிட்டு, குழந்தை அமைதியாக உறங்க தொடங்கி இருந்தது. இனி, இந்த குழந்தையும், வியர்வை வழியும் பிசுபிசுத்த ஓர் மாலையில், இப்படித்தான், பெரியவளாகி, ஒரு பஸ்ஸில் ஏறி இருக்குமோ - வீடு செல்ல - சிந்தித்துக் கொண்டிருந்தபோது, கண்டக்டர் என்னிடம் வந்து கேட்டான்:

“எங்கு?"

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* டிஜிட்டல் ஓவியம் - Grok AI


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்