ஒரு முறை எனது ஆட்டோ நண்பன், ‘குடும்ப வாழ்வு’ பொறுத்து, தனது அபிப்பிராயத்தை கூறிக்கொண்டிருந்தான். குடும்ப வாழ்வு என்பது, ஆளுக்காள் விட்டுக் கொடுக்கும் மனப் பக்குவத்திலேயே தங்கி உள்ளது என்று அவன் பிரலாபித்தான். அவனது ஆட்டோ ரிப்பேருக்காக, ஆட்டோ ரிப்பேர் செய்யும் அவனது நண்பன் ஒருவனின் வீட்டின் முன்னால் நின்றிருந்தோம்.

அவனது நண்பன் ஒரு திறமான மெக்கானிக் போல. அது போலவே, இவனது நல்ல நண்பனும் கூட. திருத்தி முடித்ததிற்கு கூலியாக ஒரு சதத்தையேனும், இவனிடம் பெற்றானில்லை. ரிப்பேர் நடந்த அந்த இடமோ ஒரு தோப்பு போன்றது. சுற்றி வர உயர்ந்த உயர்ந்த மரங்கள். நடுவே வீடு –பழைய ஓர் இடிந்து விழும் நிலையிலிருந்த வீடு. வீட்டை சுற்றி, கூட்டாமல் கொள்ளாமல், ஒரு வகை ஈரலிப்புடன் வீழ்ந்திருந்த இலை குழைகள். ஈரமான தூசி படிந்திருந்தது. ஒரு ஆட்டோவோ, அன்றி ஒரு மோட்டாரோ அங்கே வந்து ஒரு ரிப்பேருக்காக நின்றதுமாயில்லை. அப்படி என்றால், இது இவனது கராஜ் கிடையாது. வேலை செய்வதற்கான, இவனது பட்டறையை வேறு இடத்தில் இவன் வைத்திருக்க வேண்டும். நான் உட்கார, ஓர் கதிரையை, ஓர் உயர்ந்த மரத்தடியில் இழுத்து போட்டுவிட்டு, ஆட்டோவின் பின்புறத்தை திறந்து, இருவருமாய், குனிந்து உட்கார்ந்து ரிப்பேர் செய்வதில் ஈடுபட்டனர்.

மரங்கள் அடர்ந்திருந்த, அந்த மர நிழலில், சுகமான காற்றை அனுபவித்தவாறு வெறுமனே உட்காந்திருந்தேன்.

அரைமணி நேரத்தில் ரிப்பேர் முடிந்தது. செல்லும்போது, பின்னால் இருக்கையில் இருந்து கூறினேன்: “திறமைசாலி இவன்”. உடனடியாக ஆமோதித்தான் எனது ஆட்டோ நண்பன்: “இந்த நகரிலேயே இவனை போன்ற திறமைசாலி இல்லை. விஷயத்தை கூறினால் போதும். சட்டென விவரத்தை பிடித்து கொள்வான் மனிதன். ஆனால் பாவம். தனியாகத்தான் இருக்கின்றான்”.

“எப்படி” என்றேன் நான். ஏனெனில், அவனுக்கு வயது ஓர் ஐம்பது இருக்கும். கறுவல். மெலிந்த தோற்றம். நாங்கள் போகையில், வெறு மேலுடன் ஓர் சாரத்தை மட்டும் அணிந்தவனாய் தோற்றம் தந்தான். இவன் கூறத் தொடங்கினான்: “வழக்கு இன்னமும் நடக்கின்றதாம். பிள்ளைகள் இருவர். இவன்தான், மாதந்தோறும், காசு கட்டி வருகின்றானாம். வழக்கு இன்னும் முடிந்தபாடும் இல்லையாம்…”.

“பிள்ளைகளின் வயது என்ன?” என்றேன்.

“ஒன்றுக்கு பதினேழு – மற்றதற்கு ஒரு வயது குறைவாகவே இருக்கும்…”.

எனக்கு தூக்கி வாரி போட்டது. அப்படி என்றால், நீண்ட நெடுங்காலமாய், வருட கணக்கில், காசு கட்டி வருகின்றான்.

“இல்லை… இல்லை… இப்பொழுது ஒரு ஆறு மாசமாய்த்தான்…”.

மீண்டும் எனக்கு தூக்கி வாரிப்போட்டது. “நாற்பது, ஐம்பது வயதில் இப்படியான ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது ஏன்? எப்படி? அது வரை அவனது மனைவியுடன் இவன் கூடி இருந்தானா? பிள்ளைகள்? குடிப்பானா?”.

“இல்லை. ஒரு சொட்டும் குடிக்க மாட்டான்”.

தொடர்ந்து, மெதுவாக கூறினான்: “குடும்பம் என்பது ஒரு வகை விட்டுக் கொடுப்பு தானே…”. இந்த சமாசாரம் எல்லாம் நான் அறியாதது. எனக்கு புரியாதது. ‘விட்டுக் கொடுப்பு’ என்பதன் உண்மை அர்த்தம் என்ன? இன்னுமொரு கள்ள உறவு வந்தாலும் அதனை விட்டு கொடுப்பதா? அல்லது ஒருவரது பாதக செயல்களை மற்றவர் மன்னித்து விடுவதா?. இந்த சிக்கல்கள குறித்து மேலும் யோசிக்காமல், பதில் கூறாது பராக்கு பார்க்க தொடங்கி விட்டேன்.

இதே, அக்கரைபற்றில் இருந்து, புறப்பட்டு வரும் வழியில்தான், நடுக்காட்டில் தன்னந்தனியாக அகப்பட்டுக் கொண்டேன்.

எனது பழுதடைந்த வாகனத்தை, அந்த கராஜில் நிறுத்தி இருந்தேன். இரு நாட்களின் பின், மீண்டும் அந்த கராஜை அடைந்தேன். கூறியப்படி, வாகனத்தை திருத்தி நிறுத்தியிருந்தான். பஸ்ஸில் போய் சேர்ந்தவுடன், முதலில் ஆள் அடையாளமே தெரியவில்லை. யார் இது - புது ஆள் என்று எண்ணி அவனிடம் விளக்கம் கூறத் தலைப்பட்டேன். “உங்களது வாகனம் தயார்” என புதியவன் கூறினான்.

எனது காரின் அருகில், நாற்புறமும், ஓர் இருபது அடி உயரத்தில், காற்று புகாதபடி, ஒருவகை ரப்பர் திரைச்சீலையால் மறைத்திருந்தார்கள். அதனை அதியசத்துடன் நோட்டமிட்டேன். ‘திரை சீலையை விலக்கி பாருங்கள்’ என்று அந்த புதியவன் சிபாரிசு செய்தான் - எனது பிரமிப்பை பார்த்துவிட்டு.

நான் அன்று பார்த்திருந்த ஒரு வாகனம், உள்ளே, அரைகுறை வண்ணம் அடிக்கப்பட்டு, நிறுத்தப்பட்டிருந்தது.

அதனது நான்கு டயர்களும் கழற்றப்பட்டு, கண்ணாடி போன்ற இடங்கள், கடதாசியால் இறுக்க மூடப்பட்டிருந்தன – பூச்சுகள் படாதவாறு. “முதலாவது தரம் அடிக்கப்பட்டுள்ளது”. தலையை, திரைச்சீலையின் பின்னால் இருந்து, இழுத்து அவனை நோக்கினேன். அப்போதுதான் புரிந்தது. இவன் பழைய மெக்கானிக் தான். ஆனால், தலையை இப்படி மொட்டையாக வெட்டி மீசையையும் தாடியையும் முற்றாக வழித்தெறிந்து விட்டு, உரித்த கோழி போல், மொழு மொழுவென்று, ‘புதியவனாய்’ காட்சி அளிக்கின்றான். என்னால் நம்ப முடியவில்லை.

தலையையும், தாடியையும், மீசையையும் வழித்து விட்டால் இப்படி முற்றாக புதியவன் போல் காட்சி அளிப்பார்களா?

அதிசயத்துடன், அவனிடம், எனது வாகனம் தொடர்பில் விசாரிக்க முற்பட்டேன். ஏற்கனவே, சோதனை பயணமும் மேற்கொண்டு, அனைத்தையுமே, திருத்தி விட்டதாக கூறினான். பின்னர், பதிலாக, பொருத்திய, பழைய பகுதியை எடுத்துக் காட்டினான்.

“காற்றடித்ததனால், தூசி, மண். அதனால்தான் இந்த திரைச்சீலை. இன்னும் ஒரு முறை அடித்தால், புதிது போன்று, பளபளப்புடன் வந்து விடும்” விளக்கமளித்தான். “உங்கள் வாகனத்தில், மேலும் இரண்டொரு ரிப்பேர்கள் உண்டு… ரேஸர் மாற்ற வேண்டி உள்ளது… பெல்ட் அருகே எண்ணெய் வடிகிறது. மற்றது…உங்கள் வாகனத்தையும் பெயின்ட் அடித்தால் என்ன…?”

விடை பெற்றுக் கொண்டு, வரத் தொடங்கினோம். புறப்படும் போது, அவனை அருகே அழைத்து மெதுவாய் கேட்டிருந்தேன்: “எதற்காக தலையையும் மீசையையும் இப்படி வெட்டினாய்” என. “எவ்வளவு அழகாக இருந்தது தெரியுமா…” பொறுக்க முடியாமல் உள்ளதை கூறிவிட்டேன்.

மிகுந்த சினேகபூர்வமாய் என்னை பார்த்து, என்னிடம் ரகசிய குரலில் கூறினான்: “மனைவித்தான்…வெட்டி எறிய சொல்லி விட்டாள்… அவளுக்கு பிடிக்கவில்லையாம்… அழகாக இருந்தது… எனது ஃபோனில் எனது படத்தை வைத்திருக்கின்றேன்… மீசையுடன்… காட்டவா” ஃபோனை உருவினான்.

நான் கூறினேன்: “ஆஹா… நீ செய்தது மகா மடத்தனம். மீசையும் தாடியும் உனது முகத்துக்கு பொருந்தியதாய், எவ்வளவு அழகாக இருந்தது… இப்போது, எனக்கு அடையாளமே தெரியவில்லை… புதிய ஆளாய் தோன்றுகிறாய்…”.

“சரி… வண்ணம் பூச எவ்வளவு செலவு பிடிக்கும் என்று சொல்… கோல் செய்கின்றேன்…” என விடை பெற்றேன்.

கூறியப்படி, இரண்டொரு நாட்களில், அவனுக்கு கோல் செய்தேன் - விலையை அறியும் பொருட்டு. அவன் எடுக்கவே இல்லை. ஒரு வேலை, தனது கடைசி பூச்சை பூசிக் கொண்டு இருப்பதால் இருக்கலாம்.

அந்த சமயத்தில்தான் ஒரு சிந்தனை தட்டுப்பட்டது.

ஒருவேளை, வீட்டில் இருந்த தன் மனைவியிடம், “யார் ஃபோனில் கதைப்பது” என்று அவள் கேட்க, இவனும் அவளிடம் என்னை பற்றி சொல்லி இருப்பானோ? அதனுடன் தனது தாடி, மீசை பொறுத்து நான் கூறியவற்றை எல்லாம் கூறி இருந்தால்… ஆம்… அவள் கூறத்தான் செய்வாள்: “அவனா… கதைக்காதே… கட் பண்ணு… பதில் பேசாதே”. அவளது கோபம் எனக்கு புரிந்தது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்