மொழிபெயர்ப்பாளர்: ஜெ. கார்த்திக், உதவிப்பேராசிரியர்(தமிழ்), மொழித்துறை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை
இனிமையுள்ள ஆஃப்டன் நதியே, பசுமைநிறக் குன்றுகளுக்கு இடையே அமைதியாகப் பாய்ந்து செல்,
அமைதியாகப் பாய்ந்து செல், உன் புகழ் பாடும் பாடலை நான் பாடுகிறேன்!
உன் முணுமுணுக்கும் சிற்றோடையின் அருகில் என் மேரி தூங்கிக் கொண்டிருக்கிறாள்.
இனிமையான ஆஃப்டன் நதியே, அமைதியுடன் பாய்ந்து செல், அவளது கனவைக் கலைத்துவிடாதே!
பள்ளத்தாக்கில் எதிரொலிக்கும் மாடப்புறாவே,
முள்ளுள்ள புதரில் கீழ்ச் சிறகடித்துப் பாட்டுப் பாடும் பறவைகளே!
ஆள்காட்டிப் பறவையே, உன் அலறலை நிறுத்திக் கொள்.
துயிலும் என் அழகியைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்!
இனிமைகொண்ட ஆஃப்டன் நதியே, உனக்கு அருகிலுள்ள மலைகள் எவ்வளவு உயர்ந்தவை,
தெளிந்து வளைந்து செல்லும் சிற்றோடைகளின் பாதைகளால் தொலைவிலிருந்தே அவை தெரிகின்றனவே!
நடுப்பகல் சூரியன் உயரும் போது நான் தினமும் அங்கே அலைந்து திரிகிறேன்!
என் ஆட்டுமந்தைகளும் என் மேரியின் இனிமையான குடிலும் என் பார்வையிலே உள்ளன.
கீழே உள்ள உன் கரைகளும் பச்சைப் பள்ளத்தாக்குகளும் எவ்வளவு இனிமையுடையவை!
காட்டுப் பகுதிகளில் பிரைம்ரோஸ் மலர்கள் தன்னிச்சையாக மலர்கின்றன...
அங்கே அடிக்கடி, மிதமான மாலை நேரம் புல்வெளியின் மீது பரவும் போது,
நறுமணம் வீசும் பர்ச் மரம் என் மேரிக்கும் எனக்கும் நிழல் தருகிறது...

ஆஃப்டன் நதியே, படிகம் போன்ற தூய நீரோடை எவ்வளவு அழகாக நழுவிச் செல்கிறது!
என் மேரி வசிக்கும் குடிலின் அருகே வளைந்து செல்கிறது!
அவள் அழகுள்ள சிறுமலர்களைச் சேர்க்கும் போதும், உன் தெளிவான அலையைத் தடுக்கும் போதும்,
உன் துள்ளும் நீர் அவளது வெண்மையான பாதங்களைக் கழுவுகிறது.
இனிமையுள்ள ஆஃப்டன் நதியே, பசுமைநிறக் குன்றுகளுக்கு இடையே அமைதியாகப் பாய்ந்து செல்,
அமைதியாகப் பாய்ந்து செல், உன் புகழ் பாடும் பாடலை நான் பாடுகிறேன்!
உன் முணுமுணுக்கும் சிற்றோடையின் அருகில் என் மேரி தூங்கிக் கொண்டிருக்கிறாள்.
இனிமையான ஆஃப்டன் நதியே, அமைதியுடன் பாய்ந்து செல், அவளது கனவைக் கலைத்துவிடாதே!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.