
“ஜி” என்ற எழுத்தானது, இங்கே, அழுத்தி கூறப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. காரணம் இதே காலப்பகுதியில் வாழ்ந்த எஸ்.சுப்ரமணிய ஐயர் என்பாரும் நீதியரசராக, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒருவராகும். அவரது வாழ்வு, ஜி.சுப்ரமணிய ஐயரின் வாழ்வோடு ஒப்பிடும் போது, ஒப்பிட கூடாத, பல்வேறு வித்தியாசங்களை காட்டுவதாய் இருந்துள்ளது.
தனது, 16ம் வயதில், 1871இல், மெட்ரிக்குலேஷனையும், 1873இல் எப்.ஏ பரீட்சையும் தேறி, 1875இல், சி.எஸ்.எம் மிஷன் கல்லூரியில், ஆசிரியர் ஒருவராக, ஒரு 40 ரூபாய் சம்பளத்தில் அமரும் இவர், பின் இரு வருடங்களில் பச்சையப்பா முதலியார் கல்லூரியில், அமர்ந்து, (1877) அடுத்த இரு வருடங்களிலேயே, “இந்து ஹைஸ்கூலின்” பிரதம ஆசிரியராக நியமிக்கப்படுகின்றார். அப்போது, இவ் இளைஞனின் வயது 24. (1879).
இப்படி பிரதம ஆசிரியராய் நியமிக்கப்படுவதற்கு, ஒரு வருடத்தின் முன்னரேயே, 1878இல், தனதுவேறு சில நண்பர்களுடன் இணைந்து (Triplicane Literary Society Members ) ஓர் ஆங்கில பத்திரிகையை இவ் இளைஞன் துவங்குகிறான். பத்திரிகையின் பெயர்: “The Hindu”. (02.09.1878). இவ்வளவும் நடந்தேறியது அவனது 23-24 வயதிலேயே என்பது முக்கியமானது. இவனது எழுத்து வண்மையை பற்றி கூற வரும் பாரதி, பிற்காலத்தில் எழுதுவான்: “காரம் மிகுந்த, அரைத்தெடுக்கப்பட்ட பச்சை மிளகாய் சாந்தில், தன் பேனையை முக்கி எழுதுபவன்”.
2
தந்தை ஒரு வக்கீல். குடும்பம் பிராமண குடும்பம். ஆறு சகோதரரர்கள். ஒரு சகோதரி. நான்காவதாய் அவதரித்த இவனது கல்வி முழுமையும் ஆங்கிலத்தில்தான்.
தனது 16வது வயதில், மெட்ரிக்குலேசன் பரீட்சையையும் (1871), தனது 18வது வயதில் எப்.ஏ பரீட்சையையும் (1873) தனது பி.ஏ பரீட்சையை 1877இல் தொழில் பார்த்தவாறே தேறினான். 16ஆம் வயதில் தனது தந்தையை இழந்து போன, இவ் இளைஞனின் ஆரம்பகால சரித்திரம் இப்படியாய் இருந்திருக்கின்றது. ஒரு கல்லூரியின், பிரதம ஆசிரியராய் நியமனம் கிடைத்த போதும், அதே பாதையை பின்பற்றி, தன் முன்னேற்றத்தை மேலும் தொடராமல், விதிவிலக்காய் “இந்து” பத்திரிகையை இவன் ஆரம்பிக்கின்றான்.
தனது, 23ம் வயதில், இப்படி, இவன், ‘இந்து’ பத்திரிகையினை ஆரம்பித்து, பிற்பட்ட காலங்களில், இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர்களில் தூணாக நின்றும், பின், இதைவிட பாரதி எனும் மகா கவிஞனை “இனங்கண்டு” அவனை மதுரை சேதுபதி கல்லூரியிலிருந்து “இழுத்து வந்து”, தனது சுதேசமித்திரன் பத்திரிகையில், “உதவி ஆசிரியராக” நியமித்ததே, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகின்றது. மிக பழைய சொல்லாடலான, “கற்றோரை கற்றோரே காமுறுவர்” என்பதற்கிணங்க, பாரதியை “இனங்கண்ட” இவனது கண்களின் உள்ளார்த்தம் குறித்ததே இக்கட்டுரை.
3
“இந்து”வின் தோற்றமும் வளர்ச்சியும்:
ஆரம்பத்தில் “இந்து” பத்திரிகை 1878இல் தோற்றம் கண்ட போது, அதன் அஞ்சல் செலவுகளுக்காக வெறும் ஒன்றே முக்கால் ரூபாயை, கடனாக பெற்றுக் கொண்டதை பதிவுகள் கூறுகின்றன. இது, இப்பத்திரிகையின் அன்றைய பொருளாதார நிலைமை பொறுத்து மாத்திரம் அல்ல. மாறாக, இவ் இளைஞனின் அன்றைய மனோ தைரியம் குறித்தும், எம்மவர்க்கு அறிய தருவதாக இருக்கின்றது. பத்திரிகை, நாளடைவில், ஒரு தேசிய பத்திரிகையாக தன்னை ஸ்தாபித்துக் கொண்டது என்பது வேறு விடயம்.
முக்கிய விடயம் யாதெனில், ஏனைய பத்திரிகைகள்,ஒரு காலனித்துவ பிரிட்டிஷ் அரசின் ஆசிர்வாதங்களுடன், அன்றைய தினங்களில், கொடி கட்டி பறந்த ஓர் சூழ்நிலையில், இப்பத்திரிகை, இதே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போர்கொடி தூக்கும் வன்மையை பெற்று, துவங்கப்பட்டதே என்பதே.
பத்திரிகை தொடங்கப்பட்ட, இரண்டாவது வருடத்திலேயே, சேலத்தின் இந்து-முஸ்லிம் கலவரம் வெடித்து கிளம்பிற்று. இதற்குக் காரணகர்த்தா, விஜயராகவாச்சாரியார்தான் என்று ஒரு தேசாபிமானிக்கு எதிராகவும், ஏனைய நால்வருக்கு எதிராகவும் சோடிக்கப்பட்ட ஒரு பொய் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
விஜயராகவாச்சாரியாருக்கு, பத்து வருட கடூழிய சிறையும், ஏனைய நால்வருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
தீர்ப்புகளை அறிந்த மக்களின், கொந்தளிப்பு நிலை அளவிட முடியாதபடி இருந்தது. ஐயர், தனது ‘இந்து’ பத்திரிகை மூலம் உண்மைகளை படிப்படியாக எடுத்தியம்ப தொடங்கினார். இவ் உண்மைகள், வெளிவர தொடங்கியதும், விதிக்கப்பட்ட 10 வருட கடூழிய சிறை, மேல்நீதிமன்றத்தால், அப்பீல் முறையில், ரத்து செய்யப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரின் தண்டனைகளையும் பிரிட்டிஷ் அரசே பின்னர் ரத்து செய்தது. இம்மாற்றங்களுக்கான அடித்தளத்தை, அய்யரின் ‘இந்து’ பத்திரிக்கையே ஆற்றியது என்பதை நாளடைவில், மக்கள் புரிந்து கொள்ளத் தலைப்பட்டனர். இது போன்றே, ஜனங்களின் குறைபாடுகளை, தயங்காது வெளிக்கொணர்ந்த, ‘இந்து’ பொதுமக்களின் ஆதரவையும் மதிப்பையும் பெற்று படிப்படியாக வளர தொடங்கியது.
இதனால், ஒரு வார பத்திரிகையாக 1878ல் தோற்றம் கண்ட ‘இந்து’ அடுத்து ஐந்து வருடங்களில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தோன்றும் இந்துவாக வளர்ச்சி கண்டு (1853), அதனைத் தொடர்ந்து அடுத்த ஐந்து ஆறு வருடங்களில் தன்னை ஒரு நாளாந்த பத்திரிகையாக நிறுவிக் கொண்டது (1889).
‘இந்து’வின், இக் கம்பீர வளர்ச்சியின் பின்னால், ஜி.சுப்பிரமணிய ஐயரின் அயராத உழைப்பும், மனோதிடமும், தியாக சிந்தையும் காரணமாக அமைந்தது என்றால் அது தர்க்கரீதியானதே. இச்சூழலில், தனது உபாத்திய தொழிலுக்கு முற்றாக முழுக்க போட்டுவிட்டு, ‘இந்துவின்’ முழு நேர ஊழியரானார்.
4
இந்திய தேசிய காங்கிரஸின் தோற்றுவிப்பு:
இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த ரிப்பன் பிரபு டிசம்பர் 1884இல் இந்தியாவை விட்டு நீங்கியபோது, அவரது பிரியாவிடையில், பங்கேற்ற, ஜி.சுப்பிரமணிய ஐயர், அங்கே பல்வேறு தேசிய ஆர்வலர்களை சந்தித்து, தனது கருத்து பரிமாற்றங்களை நிகழ்த்தினார். பொதுவான ராஜாங்க விஷ்யங்கள் தொடர்பிலும், இந்திய தேசத்தின் அன்றைய நிலை குறித்தும், இப்பரிமாற்றங்கள் நிகழ்வதாய் இருந்தன. இப்பரிமாற்றங்களே, அடுத்து வந்த இந்திய தேசிய காங்கிரஸின், உருவாக்கத்திற்கு வழி சமைத்தன எனலாம். அடுத்த வருடமே, காங்கிரஸ், தனது முதலாவது காங்கிரசை நிகழ்த்தியது (1885). இதன்போது, ஜி.சுப்ரமணிய ஐயருடன், எஸ்.சுப்ரமணிய ஐயரும் (அன்று மேல் நீதிமன்றத்தில், பிரிட்டிஷ்ரால் நியமிக்கப்பட்டவர்) பங்கேற்றது தற்செயல் நிகழ்வாக கொள்வதற்கில்லை. இருந்தும், இக்காங்கிரஸில், அதன் முதலாவது தீர்மானத்தை முன்மொழிந்த கௌரவத்தை ஜி.சுப்பிரமணிய ஐயர், சுவீகரித்து கொண்டார் எனலாம். தர்க்க பிரகாரம், இத் தேசிய காங்கிரஸில், திரு.எஸ்.சுப்பிரமணி ஐயர் போன்றே, ஐரோப்பிய கனவான்களும் நியமிக்கப்படுவது சகஜமாகியது. ஹியூம் என்ற ஐரோப்பிய கனவானே, இக்காங்கிரஸின் நெடுநாள் காரியதரிசியாக, நியமிக்கப்பட்டு இருந்தார். பின்னாட்களில், திலகர் போன்ற தீவிரவாதிகள் காங்கிரஸில் ஓரங்கட்டப்பட்டு, மிதவாதிகளான அன்னிபெசன்ட்(1917), காந்தி (1924) போன்றோர், தலைமையை கைப்பற்றி கொள்ளவும், இவ்வகை ஏற்பாடுகள் வழி சமைத்தனவா என்பதும் இன்று வரலாறு எழுப்பிக் கொள்ளும் கேள்விகளாகின்றது.
காங்கிரசில் காணப்பட்ட, இவ்வகை “முரண் அரசியல்”, சுழன்று சுழன்று அனைவரையும் தாக்கியது. மறுபுறத்தில், அவை, உண்மை தேசபிமானிகளை பழிவாங்குவதாகவும் அமைந்துவிட்டது. ஆகவே, திலகர் ஆகட்டும், ஜி.ப்பிரமணிய ஐயர் ஆகட்டும் அல்லது எமது மகாகவி பாரதியே ஆகட்டும் - இப்படியாய் விதைக்கப்பட்ட சூழ்ச்சி தீவிரம் பெற்ற ஒரு நிலைமையில், பின்னாட்களில், மேலே கூறியவாறு அது மனிதர்களை, வாட்டி வதைக்காமல் விடவில்லை.
5
ஜி.சுப்பிரமணிய ஐயரின் அரசியல்:
இது, இரு படிநிலைகளைக், கொண்டது. ஒன்று கலாச்சார ரீதியிலும் (அதாவது, பண்பாட்டு தளத்திலும்) மற்றது அரசியல் ரீதியிலும் இயங்குவதாக இருந்தது.
சாதிய பிரிவினைகள், பெண்களின் உடன்கட்டை ஏறுதல், விதவைகளின் திருமணம், இள வயது திருமணங்கள் - என்பது போன்ற அன்றைய காட்டுமிராண்டித்தனங்களுக்கு எதிராக, பண்பாட்டு தளத்தில், ஜி.சுப்பிரமணிய ஐயர் சளைக்காது போராடி, போர்க்கொடி உயர்த்தும் நபரானார்.
மறுபுறத்தில், அந்நிய பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக அரசியல் தளத்தில் சமரசமற்ற முறையில் போராடிய வீரருமானார்.
வரலாற்று ரீதியான, இவ்வகை இரு முகங்களை ஐயர் கொண்டிருந்தார்.
அம்பேத்கர் உட்பட்ட மனிதர்களை கல்வி கற்க வைப்பது, பின், அவர்களை அரசியல் ரீதியாக அல்லது சமூக ரீதியாக இறங்க செய்து, தமது நலன்களை மறைமுகமாக பேண வைப்பது, கூடவே, பெண்களின், திருமண வயது, சதி போன்ற காட்டுமிராண்டி தனங்களை நிறுத்துவது போன்றவை முன்னெடுக்கப்படுமானால், அவை, ஏனைய விடயங்களுடன், தோற்றுவிக்கக்கூடிய புது, புது அரசியல் பரிமாணங்களை அன்றைய ஆங்கிலேயர் நன்கு அறிந்தே இருந்தனர், எனலாம்.
எனவே, ஆங்கிலேயரின், இந்நகர்வுகள், ஒருபுறம் முற்போக்காகக் காட்சி அளித்தாலும், மறுபுறம், அதன் அடியே அவர்களின் லாபத் தன்மை, மறைந்திருப்பதாக இருந்தது.
ஆகவே, ஆங்கிலேயரின், இவ்வித செயற்பாடுகள், கூறுமாப்போல், “அவர்களின், இருவித
கடமைகளை, இந்தியாவில், விதைப்பதாக இருந்தது. ஒன்று, ஆக்குவது. மற்றது, அழிப்பது”.
இவை, ஐயரின் அரசியலிலும் எதிர்வினைகளை ஏற்படுத்தத் தவறவில்லை.
சமூக-குல-நீதிகள் தொடர்பில் ஐயர் கொண்டிருந்த எண்ணங்கள், எண்ணற்ற எதிர்ப்புகளை இந்திய பழமை வாதத்தில் இருந்து தோற்றுவித்தது. இச்சிக்கல்களை, தமது சந்தர்ப்பவாத நகர்வுகளுடன், சமரசப்படுத்திய காந்தி போன்றவர்களின் அரசியலில் இருந்து மாறுபட்டது ஐயரின் அரசியல்பிடிமானம். (அதாவது, காந்தியின் கோரிக்கைகள் ஐயரின் கோரிக்கைகளில் இருந்து சாரம்சத்தில் வித்தியாசப்பட்டது).
மறுபுறத்தில், திலகர் போன்ற தீவிரவாதிகளும், சாதீய கட்டுமானங்களை இறுக்கி பிடிப்பவர்களாகவே இருந்தனர். அவர்களால், ஐயரின் நவீன அரசியலுக்கு இறங்கி வர முடியவில்லை - அவர்கள் தீவிரவாதிகள் என பெயர் பெற்றபோதும் மக்கள் திரளை வெல்வதற்கு, “கணபதி பூஜையே” சால சிறந்த வழி என்ற அவர்களது கருத்து, அவர்களின் சொந்த விருப்பு- வெறுப்புகளுடன், ஒருங்கே பயணிப்பதாய் இருந்தது. இச்சூழலில்தான் அய்யர் அல்லது பாரதியின் அன்றைய நிலைப்பாடுகள் வியப்பூட்டுபவனவாக இன்றும் இருக்கின்றன.
மறுபுறத்தில், மேலே கூறியப்படி, ஐரோப்பியரின், ஒரு சில நடவடிக்கைகளையும், ஐயர் அவர்கள் ஆதரிக்க வேண்டிய தர்ம சங்கடங்களுக்கு ஆளாகிறார். உதாரணமாக, ஆங்கிலேயரின், சிறு பிராயத்துக்கு எதிரான திருமண மசோதா. எனவேத்தான், ஐயர் அவர்கள், ஆங்கிலேயரின் இரு முகங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது. ஆகவே, அவரது அரசியலும், “தோற்றத்தில்” இரு முகங்களை கொண்டதாகிறது.
6
தனிப்பட்ட வாழ்க்கையில் ஐயரின் நிலைப்பாடுகள்:
ஐயரின் மூன்று புதல்விகளில், மூத்தவள் தனது பன்னிரண்டாம் வயதிலேயே, தன் கணவனை இழந்து விதவையாகின்றாள். இவளது, மண்டை ஒட்டில், ஜனிக்கும் போதே பிரம்ம தேவனால் இப்படித்தான் முடியும் என்று எழுதப்பட்டிருந்தது என்பதை ஐயரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
1889இல், இந்திய தேசிய காங்கிரஸின் ஐந்தாவது மகாநாட்டில், கோக்லே-ரணடே போன்ற அரசியல் தலைவர்களின் முன்னிலையில், தமது புத்திரிக்கு, குல ஆசாரங்களுக்கு எதிராக மறு விவாதத்தை நடத்தி முடித்தார், அவர்.
இந் நடவடிக்கை, தனக்கெதிராய், ஓர் ஜாதி பிரஷ்டத்தையே கொண்டு வரும் என்பதை அறிந்திருந்தாலும், ஐயரின் சமரசமற்ற மேற்படி போக்கு, அவரது வாதங்கள் வெறும் மேடை பேச்சுகளுக்காக வடிவமைக்கப்பட்டவை அல்ல என்பதை தெளிவுறவே காட்டியது. (பாரதியும், கனக சபைக்கு பூணூல் அணிவித்த செய்கையை இவ்விடத்தில் நினைவூட்டி கொள்வது சிறந்தது…).
ஆனால், இக்குல எதிர்ப்புகளும், அவரின் தனிப்பட்ட பிரச்சினைகளும், பிரிட்டி~hரின் பல்வேறு ஈன செயல்களுக்கு எதிராக, ஐயர் தனது உக்கிர செயல்பாடுகளை முன்னெடுப்பதை தடுத்ததாயுமில்லை.
இதே காலகட்டத்தில், அய்யர் அவர்கள், ‘இந்துவுக்கு’ அடுத்ததாய், ‘சுதேசமித்திரன்’ என்ற தமிழ் பத்திரிகையையும் தொடங்கி இருந்தார்.
இவை ஐயரின் தேடல்கள் பொருத்த கருத்துக்களை திடமாக வெளிகொணர்ந்த அதே சமயத்தில்தான், ஆங்கிலேயரின் பதில் நகர்வுகளும் இடம் பிடிப்பதாய் இருந்தன.
வெல்பி கமிஷன்: ‘Welby Commission...’
இந்தியாவின் வருமானம், எவ்வகையில் செலவழிக்கப்பட வேண்டும் என வெல்பி கமிஷன் கோருவதாக பறைசாற்றப்பட்டது. (1885). இக்கமிஷனில், அங்கம் வகித்த நௌரோஜி போன்றவர்கள், இந்தியாவை பொருளியல் வறட்சிக்கு உட்படுத்தும் (Drain Theory) வாதங்களை முன்னெடுப்பதாய் இருந்தனர்.
இக்கமிஷனின் முன், தோன்றிய ஐயரும், தமது வாதங்களை தம்மளவில் நேர்த்தியாக முன் வைத்தார்.
பல கோடி ரூபாயில், புகைவண்டி திட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டாலும் அவற்றால் சிறிதளவு நன்மையே சனங்களுக்கு போய் சேருகிறது என்றும், பெருமளவில் தீமையே அதனால், மிஞ்சுவதாயுள்ளது எனவும் ஐயர் வாதிட முனைந்தார்.
மேற்படி திட்டத்தின், அனைத்து லாபங்களையும் பிரிட்டிஷாரே சுருட்டுகின்றனர் என்பதே ஐயர் முன்வைத்த வாதங்களின் சாரமாகியது. இந்திய விளைபொருள்கள், மூல வளங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதற்காகவே, புகைவண்டிகளின் திட்டம், உள்நோக்குடன் செயற்படுத்தப்படுகின்றன, என்பன ஐயரின் வாதங்களாகின. மூலவளங்கள், இப்படி, நாட்டை விட்டு வெளியேறுவதால், இந்தியர்கள் தொழிலற்று, மேலும், மேலும் வறுமை அடைகின்றனர் - அவர்களது கைத்தொழில்கள் அனைத்தும் நாசமடைகின்றன என்று ஐயர் வாதிட்டார்.
இதே போன்று, இதே காலத்தில், உயர்பதவிகளுக்கு ஆங்கிலேயர் மாத்திரமே நியமிக்கப்படுவது ஓர் வழமையாய் இருந்தமையையும் ஐயர் அவர்கள் கண்டிப்பவரானார்.
சுருக்கமாய் கூறினால், பிரிட்டிஷாரின் திட்டங்கள் யாவற்றையும் எதிர்க்கும் ஐயரால், எவ்வாறு, ஆங்கிலேயரால், எநோக்கப்பட்டிருக்கும் என்பது தெளிவு.
திலகரின் கைது:
வெல்பி கமிஷனில், தனது சாட்சியத்தை அளித்து முடித்துவிட்டு, நாடு திரும்பிய அய்யரின் கண் முன், திலகரின் கைது விரிவதாய் இருந்தது. (1897). ராஜதுரோக குற்றச்சாட்டின் கீழ், திலகர் கைது செய்யப்பட்டு அவருக்கு ஒன்றரை வருட கடூழிய சிறை தண்டனை என்றாயிற்று. வேறு வார்த்தையில் கூறுவதானால், வெல்பி கமிஷன் போன்றவற்றை, அன்றைய ஆங்கிலேய அரசு திட்டமிட்ட வகையில், ஒரு புறத்தில், பெயருக்கு அரங்கேற்றி இருந்தாலும், அதே நேரம், மோசமான அடக்குமுறைகளை, மறுபுறத்தில், இதே காலப்பகுதியில் கட்டவிழ்த்து விட்டது எனக் கூறலாம்.
இவற்றை எதிர்த்து, ‘இந்து’ பத்திரிக்கைக்கூடு, ஆவேசத்துடனும் சமரசமற்ற முறையிலும் போராட ஐயர் துணிந்தார். திலகருக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு, முற்றிலும் பிழையானது, என்பதை அய்யர் தனது ஆய்வுக்கூடு, நிறுவினார். அய்யரின் மேற்படி, விமர்சனங்கள், இந்தியாவை மாத்திரமன்றி, முழு உலகின் மனசாட்சியையும் உலுக்குவதாக இருந்தது. அவை, அன்றைய ஆங்கில அரசை அதிர்ச்சியில் உறைய வைத்தன.
‘இந்து’ சந்தித்த பொருளியல் நெருக்கடிகள்:
மேற்படி ‘இந்து’ தலையங்கங்கள் தீட்டப்பட்ட ஒரு வருட காலத்திற்குள்ளாகவே, திட்டங்கள் நன்கு தீட்டப்பட்டு அவை, ஐயருக்கு எதிராக, நடைமுறையில் இறக்கிவிடப்பட்டன. மொத்தமாய், நான்கு வழக்குகள், பெரும் நட்டங்களை “இந்துவுக்கு” ஏற்படுத்தும் வண்ணம், ‘இந்துவுக்கு’ எதிராக போடப்பட்டன. கூடவே, ‘இந்துவுக்கு’ எதிராக ராஜதுரோக குற்றச்சாட்டும் அண்மை காலத்தில்முன்னெடுக்கப்படும் என்ற வதந்தியும் உலாவிடப்பட்டது. வேறு வார்த்தையில் கூறினால், ‘இந்துவில்’ இருந்து ஐயரை வெளியேற்றி விடும் திட்டம், கிரமமாக முன்னெடுக்கப்படுவதாயிற்று.
‘இந்துவை’ முதன் முதலில் தொடங்கிய, அறுவரில், ஐயரையும் வீரராகவச்சாரியாரையும் தவிர்த்து, ஏனையோர், ஏற்கனவே நீங்கி இருந்தனர். இதனால் தற்போது ‘இந்து’, மேற்படி இருவராலேயே சொந்தம் கொண்டாடப்பட்டது.
உண்மையை கூறினால், பத்திரிகையானது, அய்யரின் கொள்கை பிரகாரமே நடந்து வந்தது. ஆனால், வெல்பி கமிஷன் முன் அவர் வாதங்கள் புரிந்த விதமும், திலகரின் கைதின் பின்னர், போர்குணமிக்க தலையங்கங்களை அவர் தீட்டிய விதமும், ஆங்கிலேய ஆட்சிக்குப் பெரும் பாதகமாக கருதப்பட்டன. (முக்கியமாக வளர்ந்து வரும் ஒரு இந்திய தேசிய எழுச்சியின் பின்னணியில்).
தொடுக்கப்பட்ட நான்கு வழக்குகளில், மூன்றில், ‘இந்துவுக்கு’ எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. பெருத்த பொருள் நட்டத்தை ஏற்படுத்தும் இவ் அவதூறு வழக்குகளில், மிஞ்சியது, பெருத்த பொருளியல் நட்டங்களுடன், சமரசமாய் முடிக்கப்பட்டது. (Hindu: 125 Years – S.Muththiah – 13th September 2023). இதனுடன், “இந்துவுக்கு” எதிரான ராஜ துரோக, குற்றச்சாட்டு தொடர்பிலான வதந்தியும் உலாவர தொடங்கி விட்டது. இவை, அனைத்தும், ஐயரின் தீவிரவாத கொள்கையினாலேயே வந்து சேர்ந்தது என்ற வாதம் பலப்படத் தொடங்கியது. ஐயர் தொடர்ந்து இருப்பாரேயானால், “இந்துவுக்கு” பண நெருக்கடிகளும், பாரிய பேராபத்துமே மிஞ்சப்போவது – எனவே, இவை, தொடர்பில், ‘இந்து’ தனது தீவிரவாதம், கொள்கை பிடிப்பு, என்பவற்றை தற்போது விடுதல் தவிர்க்கமுடியாததாகின்றது – மேலும், இந்துவின் வாசகர் எண்ணிக்கையையும் இக்கொள்கையினால் கூடப் போவதில்லை என்றும் வாதிக்கப்பட்டது.
இந்த சூழலில், “மூழ்கும்” ‘இந்து’வை காப்பாற்ற, ‘இந்து’வை விட்டு, ஐயர் நீங்கியாக வேண்டும் என்ற குரல் எழுவதாய் இருந்தது.
“நான் ‘இந்து’வை விட்டு பிரிந்த காலம் முதல், ஓர் பல் பிடுங்கிய பாம்பை போல் ஆகி விட்டேன்” என்று அய்யர், பின்னாட்களில், தனது நண்பர்களிடம் மனம் வருந்தி கூறி இருக்கின்றார் என்பது பதிவு. மறுபுறத்தில், ஐயர் அவர்கள், முற்றிலும் சோர்ந்து போனதாயும் இல்லை. ‘சுதேசமித்திரன்’ ஊடாக அவர் தனது தீவிர செயற்பாடுகளை தொடர்ந்தாலும், அவரது பிரதான செய்கை, இப்போது, இந்திய பொருளாதாரத்தை, ஆழ்ந்த படிப்புக்கு உள்ளாக்குவது என்று திட சிந்தையுடன் இயங்குவதாக இருந்தது.
இதற்கிடையில், ‘இந்து’வை, கஸ்தூரி ஐயங்காருக்கு, மொத்தமாய் ரூபாய் 75000க்கு விற்றுவிட, வீரராகவச்சாரியார் தீர்மானித்து விட்டார். ஜி.சுப்பிரமணிய அய்யர் அவர்கள் கையெழுத்திட நேர்ந்தாலும், முடிவு என்னவோ ஐயருடையது இல்லை என்பது வெளிப்படை உண்மையாகியது. இம்முழு விவகாரத்திலும், பிரிட்டிஷாரின், “மறைகரம்” எவ்விதம் செயல்பட்டது, என்பது, ஆழ கவனிக்கத்தக்கது.
ஐயரின் பொருளியல் ஆய்வு:
“ ‘இந்து’வை விட்டு அகன்ற பின்னர்தான், இந்திய பொருளாதாரத்தை பற்றி, சற்று ஆழமாக கற்கும் வாய்ப்பு அடியேனுக்கு கிட்டியது” என 1903ல், தனது நூல் முன்னுரையில் ஐயர் எழுதினார். (British Rule in India).
கிட்டத்தட்ட 400 பக்கங்களை கொண்ட இப் பெரிய நூலின், 11, 12, 13-வது அத்தியாயங்கள் அன்றைய இந்திய யதார்த்தத்தை படம் பிடிப்பதாக அமைந்தன. நாள் கூலி (Day Labourer) குறித்தும், வேதனம் (Wages) குறித்தும், திறந்த வர்த்தகமும் உழைப்பும் (Free Trade and Labour) குறித்தும் இவ் அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் விடயங்களை தம்மளவில் முடிந்த வரையிலும் முன்வைப்பதாக இருந்தன.
பதினோராவது அத்தியாயமானது, நிலமான்ய உழைப்பாளியின் (Agricultural Labourer) சாதிய அடிப்படைகளையும், தேசத்தை விட்டு நீங்க, இவர்களை ஊக்குவித்த சக்திகள் யாவை என்பதையும் பரிசீலிப்பதாக இருந்தது.
அக்காலத்தில், பிரிட்டிஷ் அரசால், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட, ‘பெருந்தோட்ட முதலாளிமார்
சட்டம்’ என்னும் மசோதா தொடர்பில், “கூலிகள், சம்மதம் தெரிவிக்கும் பட்சத்திலேயே நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்” எனும் வாதம் தீவிரமாக முன்வைக்கப்பட்டது. “அவர்கள் செய்து கொண்டுள்ள ஒப்பந்தமானது முற்று முழுதாய், தங்களின் இஷ்டப்படி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும்” என்று கூறப்பட்ட போது, இது வெறும் கேலிக்கூத்து, என்று பரிகசிக்கின்றார் அய்யர்.
உண்மையில் நாடு கடத்தப்படும் அவர்கள், மஜிஸ்ட்ரேட் முதல் துரைமாரின் அனைத்து கட்டளைகளுக்கும், சவுக்கடிகளுக்கும் கீழ்படிய வேண்டிய, அச்சுறுத்தப்பட்ட நிலைமையே, குடியேறும் நாடுகளில் நீடித்தது என்பதை எந்த ஒரு ஒப்பந்தமும் இம் மக்களுக்கு என்றும் எடுத்து சொன்னதாயில்லை என சாடினார் ஐயர்.
“இந்திய கிராமங்களில், பிரிட்டிஷாரின் பணமூட்டையுடன், கிராமங்களில் ஆள்கட்டும் மேஸ்திரிகள் இறக்கி விடப்பட்டு, அவர்கள் போலி வாக்குறுதிகளை மக்களிடம் அள்ளி வீசினர்”.
“தேயிலையின் அடியில், தேங்காயும் மாசியும் குவிந்து கிடக்கின்றது என்பது போன்ற பசப்பு வார்த்தைகள் இவனது பேச்சில் மலிந்து கிடந்தது. அங்கே தரப்படும், கூலி எவ்வளவு என்பதையோ அன்றி அவர்கள் எவ்வளவு நேரம் உழைக்க வேண்டியவர்களாயினர் என்பது பொருத்தோ (காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை) அவன் பேசியதாக இல்லை. உழைப்பின் சுமையை விளக்குவதை இப்படியாய் இவன் கவனமாக தவிர்த்து விடுகின்றான்”.
இதைத்தான் இவர்கள், ஒப்பந்தம் என்றும் இது சுயாதீனமானது என்றும் வர்ணிக்கின்றனர் என ஐயர் தனது நூலில் எழுதுபவரானார். ஐயர் மேலும் எழுதுவார்:
“தோட்டத்தை விட்டு தப்பி செல்லும் அவனை பிடித்து, அவனிடம் 500 ரூபாய் (அந்த காலத்தில்!) தண்டப்பணம் அறவிடவும், மூன்று மாதங்கள் வரை அவனை கொடுஞ்சிறையில் அடைத்து விடவும் இந்த ஒப்பந்தம்தான் வழி செய்கிறது”.
கிராமிய சூழல்:
“போதாதற்கு, பஞ்சமும் வரட்சியும் எமது தென்னிந்திய விவசாயியை, கிராமத்தை விட்டு, கடல் கடந்து வேறு நாடுகளுக்கு தப்பி போக வழி செய்வதாய் உளது…” (பக்கம்:190).
பஞ்சங்களை செயற்கையாக உருவாக்கும், பிரிட்டிஷாரின் வித்தையை, கார்ல் மார்க்ஸ் ஏற்கனவே வெகுவாக கதைத்துள்ளதை நாம் நினைவூட்டிக் கொள்வது இங்கே பொருந்தும்.
மேற்படி பஞ்சங்கள், இந்தியாவில் என்ன அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டன என்பதனை இன்று புரிந்து கொள்ள, அண்மைக்கால, எமது கோவிட் மரணங்களை ஒருமுறை நோக்குவது சிறப்பானது. (லட்சக் கணக்கான மரணம்).
மறுபுறத்தில், பெருந்தோட்ட முதலாளிகளின் பெருத்த ஆதரவுடனேயே, பிரிட்டிஷ் அரசால் முன்வைக்கப்பட்டுள்ள இம் மசோதா, ஓர் சிவில் ஒப்பந்தத்தை, முதல் முறையாக ஒரு கிரிமினல் விவகாரமாக மாற்றி அமைப்பதாய் உள்ளது என ஐயர் அவர்கள் குற்றம் சாட்டினார். (தொழிலாளி, தோட்டத்தை விட்டு தப்பி ஓடுகையில் சிறைபிடிக்கப்பட்டு, சிவில் நீதிமன்றத்தில் அன்றி ஓர் மஜிஸ்ட்ரேட் முன்நிலையில் தோன்ற செய்வதற்கூடு: Madras Planters Act 01 of1903).
இது தவிர, தென்னிந்திய விவசாய பட்டாளத்தில்; (70 லட்சமாக கணிப்பிடுகிறார்) பறையர்கள் 20 லட்சம் என்றும், பள்ளர்கள் எட்டு லட்சம் என்றும், தெலுங்கு நாட்டில் இருந்து வரும் மலாக்கர்கள் 14 லட்சம் என்றும் மிகுதியானவர்கள் ஏனைய சாதிகளை சேர்ந்தவர்கள் என்றும் ஐயர் கணிப்பிடுகின்றார். (பக்கம்: 190).
பஞ்சத்தின் அரசியலை, அய்யர் இனங்கண்டது போல் மேற்படி சாதீய சூழலில் முகிழ்க்ககூடிய, கிறிஸ்தவ மிஷ்ன்களின் தோற்றத்தின் அரசியலையும் ஐயர் புரிந்து கொள்வதை அவரது நூல் தொடுவதை காண்கின்றோம்.
ஒரு கிறிஸ்தவக் கனவான் எழுதுவதாக ஐயர் கோடிடுகின்றார்: 'ஐந்து மைல் தொலைவை கூட, கடப்பானா இவன், என அதிசயமாக பார்க்கப்படும் பார்வைத்தான் இப்போது எம்மிடை மாறுகின்றது. கடல் தாண்டிய பயணத்தில் இவன் குதிக்க வேண்டியவனாகிறான்” (பக்கம்:196).
இங்கேயே, பஞ்சத்தில், அல்லது பட்டினியில் தோன்றும் ஒரு மனித மனநிலையை உருவாக்க, பிரிட்டிஷாரின் மறைகரம், எவ்வாறு செயல்படுகின்றது என்பது காட்டப்படுவதாக இருக்கின்றது.இந்தியாவின் சாதிய பிளவுகள், இவற்றுக்கு, உறுதுணை புரிந்தவையாக இருக்கலாம். இதனையே, ஐயரின், சாதீய அவதானங்கள் எமக்கு புரிய தருபவையாகவும் இருக்கின்றன. இலங்கையை பொறுத்தவரை, கோ.நடேச அய்யர் அல்லது அவருக்கு பிற்பட்டவர்களின் எழுத்துக்களில் மேற்காணும் வரலாற்று விவரங்கள் வெளிவந்தனவா என்பது கேள்வியே. (புதுமைபித்தன் தொட்டு கோ.நடேச ஐயர், ஊ.ஏ.வேலுப்பிள்ளை முதலானவர்களைக் கூறலாம்).
புதிய விதைகளின் அறிமுகம்:
ஐயரின் நூல், மற்றுமொரு வாதத்தையும் முன்னெடுக்கின்றது:
“புதிய வகை பயிர் செய்கைகளை, ஏற்றுமதிக்காகவே, பிரிட்டிஷார் இன்று பயிரிட கோருகின்றார்கள். எண்ணை தயாரிக்க, ஏற்றுமதியாகும் நிலக்கடலை, வருடம் ஒன்றுக்கு 10-10 1/2 லட்சம் ஸ்ரேலிங் பவுண்கள் பெறுமதியான வியாபாரத்தை உள்ளடக்குவதாய் உள்ளது. இச்சூழலில்தான், அண்மையில், பிரிட்டிஷார் புதிய வகை நிலக்கடலை விதைகளை அறிமுகப்படுத்தி உள்ளனர். Morris Kottai என அழைக்கப்படும், இவ்வகை புதிய விதைகள், வருடத்தில் மூன்று முறை பயிர் செய்யும் புதிய வாய்ப்பினை விவசாயிக்கு அளிக்கின்றது. ஆனால், இதற்கு மிக அதிகமான உடல் உழைப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். இப்போது, தனது சொந்த அறுவடைக்காக உழைப்பாளிகளை தேடி திரியும் தென்னிந்திய விவசாயி, பரிதவிக்கின்றான். ஒன்று, இவன், தான் தரும் கூலியை இரு மடங்காக்க வேண்டிய தேவை தற்போது உருவாகி உள்ளது. அல்லது தனது பயிர் செய்கையை இவன் ஓரளவுக்கு மட்டுப்படுத்தி கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது.
மறுபுறத்தில், இப்போது நடந்தேறும், அனைத்து வகையான பயிர் செய்கைகளும், ஐரோப்பிய 'மூலதனங்களுடன்', ஏற்றுமதிக்காகவே நடந்தேறுகின்றன. கரும்பு, பருத்தி, கௌப்பி, தேயிலை, நிலக்கடலை - என இவற்றில் எவற்றை எடுத்துக் கொண்டாலும், அவை புதிய வகையில் பயிரிடப்படுகின்றன. அங்கே இடப்படும், 'மூலதனத்தின்' முன், சிறு விவசாயியின் 'மூலதனம்' ஒரு பொருட்டாக போவதில்லை. அண்மையில், தஞ்சாவூர் விவசாயிகள், ஒன்று திரண்டு ஓர் மனுவை மதராஸ் அரசுக்கு சமர்ப்பித்திருந்தார்கள்.
அதன்படி, கடல் கடக்கும் உழைப்பாளர்களை தடுத்து நிறுத்தப்படாவிடின், தமது அறுவடைகள் பாதிக்கப்படும் என அவர்கள் கூறியிருந்தார்கள்”. (பக்கம்-207).
“இவ் யதார்த்தமானது, கூலியை அதிகப்படுத்த கோரக்கூடும். ஆனால், அண்மையில் விதிக்கப்பட்டுள்ள பிரிட்டிஷாரின் “வரிக் கொள்கையின்” பிரகாரம், நிலங்களுக்காக அவர்கள் விதித்துள்ள “புதிய வரிகள்”, விவசாயிகளின், மொத்த லாபங்களில், அரைவாசியை பறித்து கொள்கின்றன…இப்படி புதிய சம்மட்டி அடிகளால் திணறடிக்கப்படும் நில சொந்தக்காரர்கள், இன்று ஓர் புதிய வடிவை தேடி திரிகின்றனர்…” (பக்கம் -238).
இக்கூற்றுக்களைப் போன்றே, Adam Smith போன்ற பொருளியல் வாதிகளை மேற்கோள் காட்டும் ஐயரின் கருத்துலகம் எவ்வளவு பரந்தது என்பதை நாம் கண்டுக்கொள்ள கூடியதாக இருக்கின்றது. அதே நேரம் அவரது எல்லைப்பாடுகளையும் நாம் அவதானிக்க கூடியதாகவே உளது.
உதாரணமாக, Adam Smith இன் பொருளாதார தத்துவத்தை மார்க்ஸ் எப்படி விஞ்சுகிறார் என்ற புரிதல் ஐயரிடம் இல்லை, என்பதை கூறியாக வேண்டும்.
இருந்தும், ஒரு நேர்மைமிக்க ஸ்தானத்தை தேடி, ஐயர் அவர்கள் சுயநலமற்ற விடா முயற்சியுடன், போராடுவதை இங்கே காணலாம். இதற்கான அடிப்படை, யாது என்பது கேள்வியாகின்றது. தனது சொந்த வாழ்க்கை நெறியையும் தனது சொந்த அரசியலையும் ஐயர் என்றுமே வேறு பிரித்ததாக இல்லை. இதில் மிக முக்கியமானது, இவரது அரசியல் என்பது, அநேக சந்தர்ப்பங்களில், வெகு சனங்களின் அரசியலுடன் - நலன்களுடன் நேரடி தொடர்புபட்டதாய் இருப்பதை நாம் கண்டுணரலாம்.
7
‘இந்து’வை விட்டு நீங்கி, தனது, ‘சுதேசமித்திரனில்’ அதிக அக்கறை காட்டிய அய்யர், சமயங்களில் தனது சுதேசிய அரசியல் தொடர்பில், மத யாத்திரிகளை போல், தமது பிரசங்க யாத்திரைகளையும் மேற்கொண்டுள்ளதை பதிவுகள் சுட்டுகின்றன. (இத்தகைய யாத்திரைகளில் ஒன்றின் போதே ஐயர், பாரதியை கண்டுப்பிடிக்கவும் வாய்ப்புகள் அமைந்திருக்கலாம்).
இதுபோக, சூரத் காங்கிரசின் போது, திலகர் தரப்பிலான தீவிரவாதிகளுக்கும், மிதவாதிகளுக்குமிடையிலான சமரசத்தை தோற்றுவிக்கவும் ஐயர் அவர்கள் முனைப்புடன் செயலாற்றுகின்றார்.
இதனால், இவ்விரு முகாம்களாலும் இவர் நிராகரிக்கப்படுவது சகஜமாகின்றது. திலகரின் பார்வையில், “இவர், ‘அஹிம்சா’ வழியில் சட்டரீதியான சீர்திருத்தங்களை எதிர்பார்த்து இந்திய சுதந்திரத்துக்காக போராடுகிறார்” எனவும் மிதவாதிகள் இவரை ஒரு தீவிரவாதியாக இனங்காணவும் ஐயரின் மேற்படி நடவடிக்கைகள் வழிவகுத்தன. வ.உ.சியுடன் இவருக்கு இருந்த நெருக்கத்தையும், சுதேசிய கப்பல் கம்பனிகளை இவர் ஆதரிக்கும் விதத்தையும் மிதவாதிகள் கண்டுணர்ந்தும், இவரை ஒரு தீவிரவாதியாக, தள்ளி வைக்க தலைப்படுகின்றனர்.
ஆனால், பிரிட்டிஷாரே, ஐயரின் அரசியல் நடவடிக்கைகளின் “ஆழத்தை” சரியாக எடை போட தெரிந்தவர்கள் என ஒட்டுமொத்த கணிப்பின் பின் கூறலாம்.
ஒரு கட்டத்தில், ராஜ துரோக குற்றச்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படும் இவர், அங்கே, தொழுநோய் தொற்றுக்கு இலக்காகின்றார். அதே நோய் அவரை 1916இல் பலி கொள்வதாயும் உளது. 1915இல், காந்தி அவரை மரணப்படுக்கையில், விஜயம் செய்கின்றார். இதற்கு முன் காந்தி இவரை தொடர்பு கொண்டு, சந்தித்தது (பொருளியல் ஆதரவு கோரி) 1896இல். 21 நீண்ட வருடங்களின் பின் 1915இல் நாடு திரும்பிய காந்தி, அய்யரின் இறுதி காலத்தில், அவரை சென்று பார்க்கின்றார். காந்தியின், விஜயத்திற்கான உண்மை காரணம், யாது என்பதை வரலாற்றாசிரியர்கள் கேட்காமல் இல்லை. காரணம், ஐயரின், அநாதரவான நிலை குறித்து, கேள்வியுற்றிருக்க கூடிய காந்தி, இதற்கு முன்னதாக, எத்தகைய உதவிகளை ஐயருக்கு ஆற்றினார் அல்லது ஆற்ற முனைந்தார் என்ற கேள்விகள் பதிலற்ற கேள்விகளாகவே இன்றும் ஒலிக்கின்றது. (ஜாலியன் வாலா பாக் கொலைகள் போன்று…).
முடிவுரை:
தனது விதவா மகளின் திருமணம் தொட்டு, தனது உடல்-பொருள்-ஆவி அனைத்தையும் நாட்டுக்காக ஈந்த உண்மை மனிதர்களில் ஜி.சுப்பிரமணிய ஐயரின் பெயரும் நிலைக்கவே செய்கிறது.
ஒரு கட்டத்தில், ஆயிரம் விழிகள், பாரதியை ஏறெடுத்து இருப்பினும், அவனை மிக சரியாக இனங்கண்டு, எடை போட்டு, அவனை, சுதேச மித்திரனில், கொண்டுவந்து சேர்த்த பெருமையை, ஐயரின் கண்களே அன்று ஏந்தி இருந்தன.
இருட்டடிப்பு என்ற அம்சமானது ஐயரின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செயற்பட்ட ஒன்றாகும்.
அவர் மறைந்த பின், இது, இன்னமும், (இன்றும்) தொடர்வதாகவே உள்ளது என்பதுவே வேதனை.
ஓர் விதிவிலக்காக, சீனி.விஸ்வநாதன் அவர்கள், தமது நூலின் ஒரு தொகுதியை, ஐயர் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளமை உண்மையில் பாராட்டத்தக்கதே. ஆனால், பாரதி முகம் கொண்ட அதே வேதனையை அய்யரும் முகம் கொள்ள நேர்ந்தது வெறும் விதி வசப்பட்ட ஒன்றால் மாத்திரம் சாத்தியமானது அல்ல எனக் கூறலாம்.
தம் வாழ்நாளில், பாரதியும், அவனை கண்டுப்பிடித்து, அபயம் தந்து அவனை போஷித்த ஐயரும், தம் வாழ்நாட்களில் தேடியலைந்த, உண்மை அரசியல் தலைமையை கண்டனர் இல்லை. உழைக்கும் பாட்டாளி மக்கள் தங்களுக்கான உயரிய தலைமையை உருவாக்கிக் கொள்வது வரலாற்றின் தேவையாகின்றது. இவை என்றுமே எழுந்தமானமாய் நடப்பதும் இல்லை.
மேற்படி தலைமைகளே, எமது குட்டி பூர்ஷீPவா, பண்புகளை களைந்தெறிந்து, மனுகுலத்தின் உண்மை செழுமைகள் யாவற்றையும் உள்வாங்கி, விடயங்கள் அனைத்தையும் விமர்சன கண்கொண்டு நோக்கி, மக்களின் நலனை உண்மையாக எடுக்கத்தக்கன.
இலங்கையில், மலையக தொழிற்சங்க இயக்கத்தை நுணுகி பார்க்குமிடத்து, ஊ.ஏ வேலுப்பிள்ளை, வெள்ளையன் போன்றோர் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு நிகராக ஐயர் அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸில் ஓரங்கட்டபட்டமையையும், “இந்து” பத்திரிகையில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டமையையும் நாம் ஒப்பிட்டு காணலாம். இவை தற்செயல் நிகழ்வுகள் அல்ல. பொருளியல் பலமானது அற்ற ஓர் நிலையிலும், அவற்றை சேர்க்கும் கொள்கைகளை நிராகரித்தும், மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு, அவர்களின் சமூக நீதிக்காக குரல் தந்து உரிமை கோரிக்கைகளை முன்னெடுக்க முனையும் நபர் இப்படி பழிவாங்கப்படுதல் இயற்கையானதே.
இவ்விடத்திலேயே, மனுகுலத்தின் செழுமைக்கு, எவ்வாறு ஒரு தொண்டமானின் காங்கிரஸ் வழி சமைக்க முடியாதோ, அதே போன்று, ஓர் இந்திய தேசிய காங்கிரஸ் வழி சமைக்க முடியாது என்ற தர்க்கம் மேலெழுகின்றது. இதனாலேயே, மேற்படி அமைப்புகள், பாரதிக்கோ அல்லது ஐயருக்கோ ஓர் தலைமையை வழங்குவதாயும் இருக்கவில்லை. இத்தகைய மனிதர்க்கு தலைமை தரக்கூடிய, ஓர் உண்மை தலைமை–உழைப்பவர்களுக்கான கட்சி– அங்கே, கட்டி எழுப்பப்படவில்லை, என்பதே உண்மையாகும்.
மறுபுறத்தில், இத்தகைய தலைமைகளை தேடியலைந்த கார்க்கி, லெனினால் அரவணைக்கப்படுவதும், அவ்வாறே டால்ஸ்டாயால் மறுபுறத்தில் இவர் கட்டியணைக்கப்படுவதும் நியதியாகின்றது.
இப்புள்ளியிலேயே, இதற்கு எதிர்மாறாய், ஐயரின் அநாதரவான இந்த நிலை துலாம்பரமாகின்றது – வெள்ளையன், வேலுப்பிள்ளை–பாரதி போன்றே. இந்நல்லிதயங்கள், வரலாற்றின் மேன்மையைக் காண துடித்திட்ட விதத்தை குறித்து காட்டுவது எமது கடமையாகின்றது.
இந்நெடிய தனது பயணத்தில், ஐயர், எங்கோ மதுரையில் இருந்த ஒரு பாரதியை இனங்காண்பதும் தர்க்கரீதியானதே. “சுதேச மித்திரனை” விட்டு பாரதி ஒரு கட்டத்தில் அகன்று வேறு ஓர் பத்திரிகையை அவன் தொடங்கி கொண்டாலும், இந்திய காங்கிரஸில், ஐயரிடம் இருந்து வேறுபட்டு, திலகரின் கட்சியை அவன் ஆதரிக்க முடிவு செய்திருந்தாலும் அவனை தொடர்ந்தும் ஓர் தாயின் பாசத்துடன் அரவணைத்து, அவனை ஆரத்தழுவி, அபயம் அளித்து, போஷிப்பதில் எந்த ஓர் விடுபாடும் இல்லாதவராய் ஐயர் இருந்தார். பாரதி பொறுத்த அவரது மனநிலையை விபரிப்பதென்றாலும், பாரதியின் வரிகளையே, நாம் இரவல் வாங்க வேண்டியிருக்கும். ஆனால், இம் மனநிலை பாரதிக்கானதா அன்றி ஐயருக்கானதா என்பதை சரியாக கூற முடியாது இருக்கின்றது:
“மகனே போகுதி… வாழ்க நீ….
நின்னை தேவர்கள் காத்திடுக…
தோற்றேனென நீ உரைத்திடும் பொழுதிலே வென்றாய்…. வாழ்க நீ…”
உசாத்துணை நூல்கள்:
1. Some Economic Aspects of British Rule in India (G.Supermaniya Iyer) -1903
2. ஜி.சுப்ரமணிய ஐயர் சரித்திரம் - குருமலை சுந்தரம்பிள்ளை - 1907
3. G. Subramania Iyer – Grokipedia http://share.google/07p2aV AaH1xVQOtjp
4. Hindu: 125 Years – S.Muththah -13th September,2023)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.











