
கட்டுரையாளர்: முனைவா் பா.பொன்னி, இணைப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா், தமிழ்த்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி ( தன்னாட்சி ), சிவகாசி
புலப்பாட்டுநெறி என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் கேட்பவாின் மனதில், பேசுபவா் தன்னுடைய கருத்தைப் பதிய வைக்கும் முயற்சி ஆகும். தமிழறிஞா்களிடம் தொடக்க காலம் முதற்கொண்டே புலப்பாட்டுத்திறன் குறித்த சிந்தனை இருந்து வந்துள்ளது. கருத்தினை வெளிப்படுத்தும் முறைகளில் படைப்பாளா்கள் பல்வேறு வகையான உத்தி முறைகளைக் கையாண்டுள்ளனா். அவ்வகையில் புரட்சிக் கவிஞா் பாரதிதாசன் அவா்களின் பெண்கள் தொடா்பான கருத்துப் புலப்பாட்டு நெறியினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
புலப்பாட்டு நெறி அகராதிகள் விளக்கம்
புலப்பாட்டு நெறி குறித்து அகராதிகள் பல்வேறு விளக்கங்களைத் தருகின்றன. புலப்படுத்துதல் என்பதற்கு 'விளங்கப் பண்ணுதல்"( மதுரைத்தமிழ்ப்பேரகராதி,ப.263 ) என மதுரைத் தமிழ்ப் பேரகராதி விளக்கம் தருகின்றது. புலப்படுத்துதல் என்ற சொல்லிற்கு மெய்யப்பன் தமிழ் அகராதியும் 'தெரிவித்தல்' ( மெய்யப்பன் தமிழ் அகராதி,ப.861 ) எனப் பொருள் தருகின்றது . நர்மதாவின் தமிழ் அகராதி 'விளங்கிடச் செய்தல்(cause to be understood)' ( நா்மதாவின் தமிழ் அகராதி, ப.669 ) எனப் பொருள் தருகின்றது. பொருள் விளங்கிடச் செய்யும் ஒரு முயற்சியே புலப்பாடு என்ற விளக்கத்தினை இதன்வழி அறியமுடிகிறது.
புலப்பாட்டு நெறி அறிஞா்கள் விளக்கம்
டி.எஸ்.எலியட் புலப்பாட்டு நெறியினை "ஒரு கருத்தைப் பல பகுதிகளாகப் பிரித்து ஆராய்ந்து மீண்டும் ஒன்று சேர்த்து மதிப்பீடு செய்வதைக் குறிக்கும் சொல் புலப்பாட்டு நெறியாகும். புலப்பாட்டு நெறியாளர் அன்றாடப் பேச்சு வழக்கினைக் காட்டிலும் கலைநயம் மிகுந்த செயற்கையான மொழியினைப் பயன்படுத்துவர்" ( நெல்லை க.சுப்பிரமணியன், மேலைநாட்டுப்புலப்பாட்டு நெறி,பக்.3-4) என்று குறிப்பிடுகிறார். எனவே புலப்பாட்டுநெறி புலப்பாட்டு மெய்ம்மையோடு புனைவும் கலந்த கோட்பாடாதலை அறிய முடிகிறது.
"புலப்பாட்டுத் திறன் என்பது பெரும்பாலும் கையாளும் மொழிநடை, வலுவோடு எடுத்துச் சொல்லும் முறை, உள்ளத்தில் உள்ளதைப் பிறரும் ஏற்குமாறு வெளிப்படுத்தும் ஆற்றல் பற்றியது" ( தமிழண்ணல்,ஆய்வியல் அறிமுகம்,ப.162 ) என்பர். மொழிநடை என்பது ஒவ்வொருவர்க்கும் அவர்தம் திறமையைப் பொறுத்து வேறுபடும். எனவே மொழிநடை திறத்தோடு கருத்தை பிறர் ஏற்கும் வண்ணம் எடுத்துரைப்பது புலப்பாடாகிறது எனலாம்.
மேலும், "பிறர் விளங்கிக் கொள்ளும் விதமாகவும் விரும்பிக் கேட்கும் வகையாகவும் உள்ளக் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குக் கருவியாகிய மொழிநடையின் அமைப்பு புலப்பாட்டு நெறியாகும்" ( நெல்லை க.சுப்பிரமணியன், மேலைநாட்டுப்புலப்பாட்டு நெறி,ப.1 ) என்பதன்வழி பிறருக்குப் புரியும் வகையில் கருத்தை வெளிப்படுத்துவதே உண்மையான புலப்பாடு என்ற உறுதிப்பாட்டிற்கு வர முடிகிறது.
இவ்வாறாக அறிஞர்கள் பலரும் புலப்பாட்டு நெறி குறித்த பல வேறுபட்ட கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். இவற்றின் வாயிலாக எவ்வகை உத்தியினாலும் தான் கூற வந்தக் கருத்தை தெளிவு படக் கூறி நிற்பது புலப்பாட்டு நெறி எனலாம். கேட்போரின் ஆர்வம் குறையாமலும் கவனச்சிதறல் ஏற்படாமலும் சொல்லக் கருதியதைத் தெளிவாகக் குறிப்பிடுவதும் புலப்பாட்டு நெறி ஆகிறது. அவ்வகையில் பாரதிதாசன் அவா்களின் புலப்பாட்டுநெறியினை ஆராய இயலுகிறது
புலப்பாட்டு நெறியின் பண்புகள்
புலப்பாட்டு நெறியின் பண்புகளை அவை பயன்படுத்தப்படும் இடம் மற்றும் அவற்றின் நோக்கத்தின் அடிப்படையில் வாிசைப்படுத்துவா். "கருத்துப் புலப்பாடு சமூகம் சார்ந்த நிகழ்வாகும். மக்களிடையே நிகழ்த்தப் பெறும் கருத்துப் புலப்பாடு மூவகைத் தன்மைகளைக் கொண்டது. அவை
1 மாற்றம் வேண்டி நிகழும் புலப்பாடு (conversionary communication)
2. பிளவு வேண்டி நிகழும் புலப்பாடு (divisive communication)
3. உறுதி வேண்டி நிகழும் புலப்பாடு (communication for consolidation)" ( இரெ.குமரன்,சங்க இலக்கிய அகப்பாடல்களில் கருத்துப்புலப்பாட்டு உத்திகள், ப. 12 ) என்ற புலப்பாட்டுத் தன்மைகள் குறிப்பிடத் தக்கன. இதன் அடிப்படையில் பாரதிதாசனின் புலப்பாட்டுநெறித் தன்மைகளை ஆராய இயலுகிறது.
மாற்றம் வேண்டி நிகழும் புலப்பாடு
சமூக மாற்றம், தனிமனித மாற்றம் வேண்டி நிகழ்த்தப் பெறுவது இவ்வகைப் புலப்பாடாகும். அதாவது ஒருவரின் எண்ணத்திலோ செயல்பாட்டிலோ மாற்றம் கொண்டு வருவதற்காக அவரிடையே நம் கருத்தைப் புலப்படுத்துவது மாற்றம் வேண்டி நிகழும் புலப்பாடாகும்.
சமூகத்தில் நிலவும் சாதி இன, மத வேற்றுமையைக் களைந்து மாற்றம் காணவும் மக்களிடையே கலாச்சார, பண்பாட்டு மாற்றங்களைச் சீர்படுத்த வேண்டியும் அறிஞர்கள் தங்கள் கருத்துக்களைப் பேச்சின் வாயிலாகவோ அல்லது நூல்களின் வாயிலாகவோ எடுத்துரைப்பாராயின் அது மாற்றம் வேண்டி நிகழும் புலப்பாடாகும். இவ்வகைப் புலப்பாடு சமூகத்தில் நிலவுகின்ற வேறுபாடுகளை நீக்கவும் மக்களிடையே ஒற்றுமை உணர்வோடு பண்பாட்டு உணர்வையும் ஏற்படுத்த நிகழும் புலப்பாடாகும்.
பாரதிதாசனின் பல பொருட் புலப்பாடுகள் அந்தக் காலச் சமூகத்தின் மாற்றம் வேண்டியோ அல்லது தனிமனித அறம் வேண்டியோ நிகழ்த்தப் பெற்றவையே ஆகும். பெண்கள் அடிப்படையிலான சமூகமாற்றம் தொடா்பாக பாரதிதாசன் கவிதைகளில் காணப்படும் கருத்துகளாக,
கைம்மைத்துயா்
குழந்தைத் திருமணம்
பொருந்தாத்திருமணம்
ஆகியவற்றை ஆராய இயலுகிறது.
கைம்மைத்துயா் :
தொல்காப்பியா்,
எல்லா உயிா்க்கும் இன்பம் என்பது தான்
அமா்ந்து வரூஉம் மேவற்றாகும் ( தொல்.பொருள்.நூ.1169 )
என்ற நூற்பாவில் இன்பம் என்பது எல்லா உயிா்களுக்கும் பொதுவானது என்ற கருத்தினை முன்மொழிகிறாா். ஆனால் நம்முடைய சமூகம் இக்கருத்தினைப் புறக்கணிக்கிறது. மேலும் ஆணை முன்நிறுத்தும் சமூகமாகவே அமைகிறது. பெண் என்பவள் திருமணத்தின் முன் தந்தையின் பாதுகாப்பிலும், திருமணத்திற்குப் பின் கணவன் மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பிலும் இருக்கும் நிலையிலேயே வாா்க்கப்படுகிறாள். இத்தகைய சூழலில் அவள் கணவனை இழந்த பிறகு உலக இன்பங்களை வெறுத்து கணவன் நினைவுகளுடன் மட்டும் வாழும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இந்நிலையினை பாரதிதாசன் சாடுகிறாா். கணவனை இழந்த பெண்ணின் துன்பம் தன்னை,
எனை மணந்தாா் இறந்தாா் என் குற்றமல்ல
இறந்தவுடன் மங்கலநாண் நல்லாடைகள்
புனைமலா் குங்குமம் அணிகள் போனதுண்டு
பொன்னுடலும் இன்னுயிலும் போனதுண்டோ?
எனை ஆளும் காதலுக்கோா் இலக்கியத்துக்
கிசைந்ததெனில் உயிாியற்கை நான் என் செய்வேன்?
( பாரதிதாசன் கவிதைகள் - பக். 73-74 )
என்ற கவிதை வாிகளில் புனைந்துரைக்கிறாா். இன்பஉணா்வு உலகியற்கை என்ற தொல்காப்பிாின் கருத்தினை பாரதிதாசன் இவ்வாிகளில் வலியுறுத்துகிறாா் எனலாம்.
காதல் உணா்வைப் பொதுவாக சுட்டுதல்
பசியும், தாகமும் எவ்வாறு உலக உயிா்கள் அனைத்திற்கும் பொதுவானதோ அதே போல் இன்ப உணா்வும் அனைத்து உயிா்களுக்கும் பொதுவானது. இதில் ஆண், பெண் என்ற பேதத்திற்கு இடமில்லை என்பது பாரதிதாசனின் கருத்தாக அமைகிறது. “மனித வாழ்வுக்கு உண்ணும் உணவைப் போல், பருகும் நீரைப் போல் இன்றியமையாது வேண்டப்படுகின்ற ஓா் இயற்கையான தேவையே பாலுறவு“ ( இர.மனுவேல், தற்காலத் தமிழ்ச் சமூக நூல்களில் பாலுணா்வு, ப.16 ) என்று உளவியலாரும் குறிப்பிடுவா். ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கையின் தேவை ஒன்றே என்ற இதே கருத்தினை,
ஆடவாின் காதலுக்கும் பெண்கள் கூட்டம்
அடைகின்ற காதலுக்கும் மாற்றமுண்டோ?
பேடகன்ற அன்றிலைப்போல் மனைவி செத்தால்
பெருங்கிழவன் காதல் செயப் பெண் கேட்கிறான்
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்த பின் மணத்தல் தீதோ?
( பாரதிதாசன் கவிதைகள் - ப. 74 )
என்ற பாரதிதாசின் கவிதை வாிகளிலும் காணமுடிகிறது. திருமணத்திற்கு தொல்காப்பியா் அவருடைய காலத்திலேயே பத்து வகைப் பொருத்தங்களைக் குறிப்பிட்டுள்ளாா்.
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
உருவு நிறுத்த காமவாயில்
நிறையே அருளே உணா்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே ( தொல்.பொருள்.நூ.488 )
என்ற நூற்பா இதனை விளக்குவதாக அமைகிறது. ஆனால் பொருந்தாத பல்வேறு காரணங்களுக்காக வயதில் அதிகமான முதியவருக்குப் பெண்ணைத் திருமணம் செய்து தரும் வழக்கம் நம்மிடையே காணப்பட்ட நிலையினைக் குறிப்பிட்டு,
மண்ணாய்ப்போக மண்ணாய் போக
மனம் பொருந்தா மணம் மண்ணாய் போக
சமூகச் சட்டமே சமூக வழக்கமே
நீங்கள் மக்கள் அனைவரும்
ஏங்காதிருக்க மண்ணாய்ப் போகவே
(பாரதிதாசன் கவிதைகள் ப. 90 )
என்று பாரதிதாசன் சாடுகின்றாா்.
பிளவு வேண்டி நிகழும் புலப்பாடு
சமூகத்தில் சாதி மத இனத்தின் பெயராலும் தனிமனிதச் செல்வாக்காலும் மக்களிடையே பிளவை ஏற்படுத்துதல் இவ்வகையிலான புலப்பாட்டின் தன்மையாகும். இது மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களைத் தவறான வழிக்கு இட்டுச் செல்லத் துடிக்கும் சில இழிகுணத்தாரால் கடைபிடிக்கப்படுவதாகும். இவ்வகைப் புலப்பாட்டினை பாரதிதாசனில் காணஇயலுவது இல்லை.
உறுதி வேண்டி நிகழும் புலப்பாடு
மக்களுக்கு நன்மையைத் தரும் உண்மைகளைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது உறுதி வேண்டி நிகழும் புலப்பாடாகும். மக்களிடையே செல்வாக்குப் பெறாத ஆனால் மக்களுக்கு அதிகளவில் நன்மைகளை வழங்கக் கொள்கைகளை, செயல்பாடுகளை செய்திகளை, கூடிய எடுத்துரைக்கும் வகையில் நிகழும் புலப்பாடு உறுதி வேண்டி நிகழும் புலப்பாடாகின்றது. இது சமூகப் பொது தளத்தில் மட்டுமல்லாமல் தனிமனித வாழ்விலும் பல்வேறு வகை உறுதிப்பாடுகளை எடுத்துரைக்கின்றது.
அறக் கருத்துகளைப் போதிக்கும் இலக்கியங்களில் இவ்வகைப் புலப்பாட்டுத் தன்மை வெளிப்படுகிறது. தான் கருதும் பொருளை நன்முறையில் வெளிப்படுத்தும் எவ்வகைப் புலப்பாட்டாளரும் அது கேட்போரின் மனதில் ஆழமாய் பதிய வேண்டுமெனவும் கேட்போர் அக்கருத்தை உறுதியாகப் பின்பற்ற வேண்டுமெனவும் எண்ணுவர். பாரதிதாசன் கவிதைகளில் உறுதி வேண்டி நிகழும் பொருட்புலப்பாட்டினை மிகுதியாகக் காணலாகிறது.
விதவை மறுமணத்தினை ஆதாித்தல்
பாரதிதாசன் உணா்வு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பானது என்று குறிப்பிடுவதோடு மட்டும் நின்று விடாமல் விதவைத் திருமணத்தையும் பல இடங்களில் வலியுறுத்திப் பாடியுள்ளாா். மனிதனைச் செயல்படச் செய்யும் ஆற்றலை ஊக்கி என்ற சொல்லால் உளவியலார் சுட்டுவர். உடல் தேவைகளுடன் இணைந்த ஊக்கிகள் “முதன்மை ஊக்கிகள்” (Primary Motives) என்று அழைக்கப்படுகின்றன. “தாகம், பசி, பால்உணா்ச்சி ஆகியன உடல்சார்பு ஊக்கிகள், கூடிவாழ்தல், பாதுகாப்பு தருதல், அன்புகாட்டல் ஆகியன உளச்சார்பு ஊக்கிகள்”( தா.ஏ. சண்முகம், உளவியல் இரண்டாம் பாகம், ப.228) என்று குறிப்பிடுவா். இந்த உளவியல் அடிப்படையில் பெண்ணின் உணா்வுகளைப் புாிந்த நிலையில் பாரதிதாசன் விதவைத் திருமணத்தை ஆதாிக்கிறாா்.
வருந்தாமற் கைம்பெண் முகம்
திருந்துமோ இச்சமூகம்
மறுமணம் புாிவது சிறுமை என்றறைவது
குறுகிய மதியென அறிஞா்கள் மொழிகுவா்
( பாரதிதாசன் கவிதைகள் - ப. 94 )
என்ற கவிதை வாிகளில் மறுமணத்திற்குத் தடையாக இருக்கும் மனிதா்களைச் சாடுகிறாா். மேலும்,
பெண்ணுக்கொரு நீதி கண்டீா்
பேதமென்னும் மதுவையுண்டீா்
கண்ணிலொன்றைப் பழுது செய்தால் கான்றுமிழாதோ?
கான்றுமிழாதோ? புவி தான் பழியாதோ?
(பாரதிதாசன் கவிதைகள்- ப. 95 )
என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் பால்வேறுபாடு அடிப்படையில் தனித்தனியாக நீதி வழங்கப்படும் தன்மையைக் கண்டிக்கிறாா். இந்நிலை கண்டு பெண்கள் பயம் கொள்ளமால் தன்னுடைய பகுத்தறிவினைக் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று பெண்ணுக்கு அறிவுரை வழங்குவதனை,
கற்கண்டு போன்ற பெண் கணவனை இழந்தால்
கசந்த பெண் ஆவது விந்தைதான் புவி மேல்
சொற் கண்டு மலைக்காதே உன் பகுத்தறிவால்
தோஷம் குணம் அறிந்து நடப்பாய் துயா் கடப்பாய்
துணை பிடிப்பாய் பயம் விடுப்பாய்
( பாரதிதாசன் கவிதைகள் - ப. 94 )
என்ற கவிதை வாிகள் புலப்படுத்துகின்றன. இவ்வாறு சமூகத்தில் மாற்றம் வேண்டி பாரதிதாசன் தன்னுடைய கருத்துகளை எடுத்துக்காட்டியுள்ளமையை அறியலாகிறது.
முடிவுரை
பாரதிதாசனின் புலப்பாட்டு நெறிமுறை மொழிநடை திறத்தோடு அவருடைய கருத்தினை பிறர் ஏற்கும் வண்ணம் விளக்கும் வகையில் அமைந்துள்ளது. மாற்றம் வேண்டி நிகழும் புலப்பாடு அடிப்படையில் கைம்மைத்துயா், குழந்தைத் திருமணம், பொருந்தாத்திருமணம் ஆகியவற்றை பாரதிதாசன் வலியுறுத்தும் நிலையில் காணமுடிகிறது. பிளவு வேண்டி நிகழும் புலப்பாடினை பாரதிதாசன் கவிதைகளில் காண இயலவில்லை. உறுதி வேண்டி நிகழும் புலப்பாடு அடிப்படையில் விதவைத்திருமணத்தை ஆதாிக்கும் பாரதிதாசனின் நிலைப்பாட்டினைக் காணமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
இளம்பூரணா் (உ.ஆ.), தொல்.பொருளதிகாரம், சாரதா பதிப்பகம்,,சென்னை 2008
குமரன் இரெ.,சங்க இலக்கிய அகப்பாடல்களில் கருத்துப்புலப்பாட்டு உத்திகள்,அனன்யா பதிப்பகம்,தஞ்சாவூா்,2001
சண்முகம் தா.ஏ., உளவியல் இரண்டாம் பாகம், திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை 1980
சந்தியா நடராஜன் ( ப.ஆ ), மதுரைத்தமிழ்ப்பேரகராதி,சந்தியா பதிப்பகம், சென்னை – 2009
சுப்பிரமணியன் க., மேலைநாட்டுப்புலப்பாட்டு நெறி,பஞ்சவா்ணம் பதிப்பகம், திருநெல்வேலி.
சுப்பிரமணியன் ச.வே.( ப.ஆ ),மெய்யப்பன் தமிழ் அகராதி, மணிவாசகா் பதிப்பகம், சென்னை2006.
தமிழண்ணல்,ஆய்வியல் அறிமுகம்,மீனாட்சி புத்தக நிலையம், நிலையம், சென்னை
மனுவேல் இர., தற்காலத் தமிழ்ச் சமூக நூல்களில் பாலுணா்வு,வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், திருப்பதி, 1986
மாருதிதாசன் ( தொ.ஆ ),நர்மதாவின் தமிழ் அகராதி, நா்மதா பதிப்பகம்,சென்னை 2008
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.











