
கட்டுரையாளர் - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 -
முன்னுரை
சுக்ரீவனின் மனைவி ருமை.முக்கியப் பாத்திரமான ருமை கம்பராமாயணத்தில் நேரடியாக யாருடனும் பேசவில்லை. யாரும் நேரடியாக அவளிடம் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கதாப்பாத்திரமே நூலின் அடிப்படையைப் பேசவைக்கிறது.பேசாமடந்தையே அதிகமாக நினைக்கப் படுகிறாள். கதை தொடர்ந்து செல்ல அடி நாதமாக இருந்தது இந்த ருமையே. கம்ராமாயணத்தின் அடி நாதம் பிறர் மனைவியை விரும்பக் கூடாது என்பதாகும். இதன் மூலம் கம்பர் ஒருவித புது உத்தியைக் கையாண்டுள்ளார் என்பதை இக்கட்டுரையின் வழி நாம் ஆராய்வோம். .
உருமை குறித்த அறிமுகம்
நட்புக் கோட் படலத்தில் இராமனுக்கு, சுக்ரீவன் கனிகளையும், கிழங்குகளையும் விருந்தாக உண்ணக் கொடுத்தான். அப்போது சுக்ரீவனைப் பார்த்து இராமன், ’பொருந்தும் நல்லற வாழ்க்கைக்கு இன்றியமையாத மனைவியை நீயும் பிரிந்துள்ளாயோ’ என்று வினவினான்.
“பொருந்து நன் மனைக்கு உரியபூவையைப்
பிரிந்துளாய்கொலோ நீயும்பின் என்றான்“
(நட்புக் கோட்படலம் 112)
வாலியின் பெருமை குறித்துக் கூறும் அனுமன்
அனுமன் பதிலாக இராமனிடம், வாலியின் பெருமைகளைக் கூறி நாட்டை விட்டு துரத்தியதையும் கூறினான். பின்னும் இச்சுக்ரீவனுக்கு உருமை என்று பெயர் பூண்ட மனைவியாகிய கிடைப்பதற்கு அரிய அமிழ்தத்தையும் அந்த வாலி விரும்பி கவர்ந்து கொண்டான்.இச்சுக்ரீவன் செல்வத்தையும், மனைவியையும் துறந்து இருந்தான். நடந்த செயல் இதுவாகும் என்று சொல்லி முடித்தான்.
“உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம்
அரு மருந்தையும் அவன் விரும்பினான்
இருமையும் துறந்து இவன் இருந்தனன்
கருமம் இங்கு இது எம் கடவுள் என்றனன்”
(நட்புக் கோட்படலம் 144)
முதலில் இராமனுக்கு, ருமை குறித்துக் கூறியவன் அனுமனே.
இராமன் வாலியைக் கொல்வதாகக் கூறல்
பதினான்கு உலகங்களிலும் உள்ள எல்லா உயிர்களும் அந்த வாலியின் உயிரைக் காப்பதற்கு உதவியாய் வந்து தடுத்தாலும், நான் வில்லினின்று விடும் அம்பால் அவனை அழித்து அரசாட்சியோடு நின் மனைவியையும் உனக்கு இப்போதே அளிப்பேன். அவன் இருக்குமிடத்தைக் காண்பிப்பாயாக என்று கூறினார்.
“தலைமையோடு நின் தாரமும் உனக்கு என்று தருவென்
புலமையோய் அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான்”
(நட்புக் கோட் படலம் 147)
வாலி-இராமன் வாக்குவாதம்
இராமன் ஏவிய அம்பினால் கீழே விழுந்த வாலி, இராமனிடம் பலவாறாக அடுக்கடுக்காக வினாக்களைத் தொடுத்தான்.
இராமன், வாலியிடம் அன்புச் செயலாவதும், உயர் குடியில் பிறந்ததன் பயனா வதும், வீரத்தின் பயனாவதும், கல்வி கற்றதன் பயனாவதும், மற்றொருவனுக்குச் சேர்ந்த மனைவியைக் கற்பு தவறாத படி பாதுகாக்கும் பெருமையே அன்றோ, தெளிந்த அறிவுடையவர்கள் எல்லாம் யாம் வலிமை உடையோம் என்ற கருதி உள்ளம் வீரத்தில் தவறாகச் சென்று, எளியவர் மீது சினம் கொள்ளுதல் அவ் வீரத்தினின்று தவறுதலாகும். பாதுகாவலையுடைய மங்கையரின் கற்பின் வலிமையை அழித்தல் அறத்தினின்று தவறுதலாகும். அறம் இத்தகையது என்னும் தகுதியையும், இம்மை மறுமைப் பயன்களையும் நீ எண்ணிப் பார்க்கவில்லை, அவற்றை ஆலோசித்துப் பார்த்தால், அரிய உயிர் போன்ற உன் தம்பியின் மனைவியைப் பெருமையின்று நீங்கிச் சேர்வாயோ என்று கேட்டான்.
“அருமை உம்பிதன் ஆர் உயிர்த் தேவியைப்
பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ”
(வாலி வதைப் படலம் 335)
வாலியின் எதிர்மொழி
வாலி, இராமனிடம் ஐயனே உங்களது அரிய குலத்தில் தோன்றிய கற்பினை முக்கியமாகக் கொண்ட பொய்மையில்லாத அம்மங்கையர்க்குப் பொருந்திய, மணத்தைக் கொண்டு அவரையேக் கலத்தல் போல எங்களுக்கு நான்முகன் விதிக்கவில்லை. நேர்ந்தபோது நேர்ந்தபடியாகுமாறு நியமித்தான்.உள்ளத்தின் உணர்வு போனவழியே நடப்பது எங்களுக்கு உள்ளனவே அல்லாமல், வேதமுறைப்படி மணங்களும் இல்லை. பரம்பரைக்கு ஒத்த நற்பண்பும் இல்லை. நான் பெற்றுள்ள சாதியின் தன்மைபடி ஒரு குற்றத்தையும் செய்யவில்லை. அதை நீ உள்ளத்தில் கொள்வாயாக என்றான்.
“ஐய நுங்கள்அருங்குல கற்பின் அப்
பொய் இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சிபோல்”
(வாலி வதைப்படலம் 338)
“மணமும் இல்லை மறைநெறி வந்தன
குணமும் இல்லை குல முதற்கு ஒத்தன”
(வாலி வதைப்படலம் 339)
“பெற்றி மற்று இது பெற்றது ஓர் பெற்றியின்
குற்றம் உற்றிலன் நீ அது கோடியால்”
(வாலி வதைப்படலம் 340)
வாலி இவ்வாறு கூறினான்.
கதை தொடர்ந்து செல்ல அடி நாதமாக இருந்தது இந்த ருமையே. கம்பராமாயணத்தின் அடி நாதம் பிறர் மனைவியை விரும்பக் கூடாது என்பதாகும். பிறர் மனைவியை விரும்புபவர் கிளையோடும் கெடுப என்கிறது பாவிகம். இராவணனும், இராமன் மனைவி சீதையைக் கவர்ந்து சென்றான். அவனைப் பின்பு இராமன் அழிப்பான் என்பதை முன்பே குறிப்பாக சொன்ன இடம்.
கம்பராமாயணம் முழுவதிலுமே ருமை குறித்து மூன்று இடங்களில் மட்டுமே கூறப்பட்டுள்ளது இராமன், வாலியைக் கொன்று அரசையும் உன் மனைவியையும் உனக்குத் தருவேன் என்று கூறியது போலவேத் தந்தான். இலட்சுமணனை வைத்து சுக்ரீவனுக்கு முடி சூட்டினான். கிஷ்கிந்தை சென்று ருமையோடு வாழ்ந்தான் என்பதைக் கம்பராமாயணத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. சுக்ரீவன் கிஷ்கிந்தையின் மன்னனாக முடிசூடிக் கொண்ட பிறகு நளன் என்ற வானரனால் அமைக்கப்பட்ட அரண்மனையினுள்ளே இதழ்கள் நிறைந்த மலர்களைப்பரப்பி அமைக்கப்பட்ட படுக்கையிலே, தொங்கும் கூந்தலையும், இளமையான கொங்கைகளையும் கொண்ட இள மகளிர் கால் பிடிக்க மது அருந்திவிட்டு தூங்கினான் என்று கம்பரேக் கூறியுள்ளார்.
“நளன் இயற்றிய நாயகக் கோயிலுள்
தளமலர்த் தகைப் பள்ளியில் தாழ் குழல்
இளமுலைச்சியர் ஏந் தடி தைவர
விளைதுயிற்கு விருந்து விரும்புவான்”
(கிஷ்கிந்தைப் படலம் 578)
கம்பர் கூறும் தவறிய பெண்கள்
ஆண்கள் தவறிழைத்தாலும் அதை ஏற்றுக் கொண்ட பெண்களாக கியாதி, சுயம்பிரபையின் தோழி, அகலிகை என்று கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்களைப் பயன்படுத்திக் கொண்ட ஆண்கள் சொந்தமில்லை.
பிருகு முனிவரின் மனைவி கியாதி. அவள் அரக்கர்களிடம் உள்ளம் உருகும் காதல் கொண்டு உறவு கொண்டாள். திருமால் அவள் உயிரை வாங்கினார்.
“பிருகு என்னும் பெருந்தவன்தன் மனை
வரு கயல் கண் கியாதி வல் ஆசுரருக்கு
உருகு காதலுற உறவாதலே
கருதி ஆவி கவர்ந்தனன் நேவியோன்”
(தாடகை வதைப்படலம் 381)
‘மயன்’ என்ற அசுரன் தேவப்பெண்களுள் ஒருத்தியின் இன்பத்தை விரும்பினான். அந்த அழகிய தேவமாது சுயம்பிரபையின் உயிர்த் தோழி. அந்த அசுரன் சுயம்பிரபையிடம் மன்றாடிக் கேட்டதால், அவளை தேவ உலகிலிருந்து இந்துருட்ச பிலத்தில் சேர்க்க, இருவரும் இங்கு தங்க, இந்திரன் சினந்து விபரம் தெரிந்துகொள்ள, “நீ இந்த நகரிலேயே தங்குக என்றும், நகரத்தைக் காக்கும் வேலை உன்னுடையது என்றும் கூறி சாபமிட, இராமனால் அனுப்பப்படும் வானரர்கள் இங்கு வந்தால், அப்போது உன் துன்பம் நீங்கும்” என்றார்.
“வனைந்து முடிவுற்றது என மன்னனும் இது எல்லாம்
நினைந்து இவண் இருத்தி நகர் காவல் நினது என்றான்”
(கிஷ்கிந்தா காண்டம்- பிலம் புக்கு நீங்கு படலம் 873)
இந்த சுயம்பிரபை சாபவரலாறு கிஷ்கிந்தா காண்டம் பிலம்புக்கு நீங்குபடலத்தில் கூறப்பட்டுள்ளது.
கௌதம முனிவரின் மனைவி அகலிகை, இந்திரன் அவள் மேல் ஆசை கொண்டு முனிவர் வடிவில் ஆசிரமம் அருகில் வந்தான். சேவல் போல் கூவ முனிவரும் விடிந்து விட்டது என்று எண்ணி குளிக்கச் சென்றார். முனிவர் இல்லாத நேரத்தில், அவர் வடிவில் சென்று இந்திரன், அகலிகையுடன் இணைந்தான். திரும்பி வந்த முனிவர் இருவருக்கும் சாபமிட்டார்.
இதில் கியாதிக்குத் தான் தண்டனை கிடைத்தது. கூட இருந்த அசுரன் என்ன ஆனார் என்ற குறிப்பு இல்லை. சுயம்பிரபையின் தோழிக்கு என்ன தண்டனை கிடைத்தது என்றும் இல்லை. சுயம்பிரபைக்கே சாபம் கிடைத்தது. சாபநிவிர்த்தியும் கூறப்பட்டுள்ளது. அனுமனால் விமோச்சனமும் கிடைக்கப் பெற்றாள். அகலிகைக்கும், இந்திரனுக்கும் சாபம் கிடைத்தது. சாபநிவிர்த்தியும் கூறப்பட்டுள்ளது. இராமனால் சாபமும் நீக்கப் பெற்றது.
புட்பக விமானத்தில் வானர மகளிர்
மீட்சிப் படலத்தில் இராம-இராவண யுத்தம் முடிந்த பிறகு புட்பக விமானத்தில் இராமன், சீதை உட்பட அனைவரும் அயோத்தி நோக்கி சென்றனர். அப்போது இராமன் ஒவ்வொரு இடமாக சீதைக்குக் காட்டி விளக்கிக் கொண்டே வந்தான். கிஷ்கிந்தை நகரம் வந்தபோது சீதை இராமனிடம் நாயகனே, இது கிஷ்கிந்தை நகரமாயின் யான் சொல்வதைக் கேட்பாயாக. தான் பல வெள்ளம் என்னும் எண்ணை உடையதாகி தேவர்களும் அஞ்சும் படியான போரில் வல்ல படை சுற்றி இருக்க, மகளிரின் துணையில்லாத நான் ஒருத்தி மட்டும் அயோத்தி நகரத்தை அடைந்தால், என் பெண் தன்மை குறைவுபடும். ஆகவே கிஷ்கிந்தையில் உள்ள மகளிரைப் புட்பக விமானத்தின் மீது ஏற்றிக்கொண்டு செல்வது முறையானதாகும் என்று சீதை கூறினாள்.
சீதை கூறிய அந்தச் சொல்லை இராமன், சுக்ரீவனுக்குச் சொன்னான். அந்த வானரவீரன் அனுமனைப் பார்த்து வீரனே நீ விரைவாக வானரப் பெண்டிரை முறைப்படி அழைத்து வருவாயாக என்று ஆணையிட்டான். அனுமன் வானரப் பெண்டிரை அழைத்துக் கொண்டு வந்தான். அனுமன் எல்லைக் காண இயலாதபடி இருந்த வானர மகளிர் கூட்டத்தை ஓர் இமைப்பொழுதுள்ளே அவரவருக்குரிய சிறப்புகளில் குறைவு உண்டாகாதபடி பார்த்து அழைத்துக் கொண்டு வந்தான். உடனே அந்த மகளிர் விமானத்தின் மேல் ஏறித், தன் மன்னவனை வணங்கி இராமனையும் பெண்களுக்குத் தலைவியான சீதையையும் அடிகளில் விழுந்து வணங்கினர். அப்போது அந்த வானர மகளிர் முறையாகக் கொண்டு வந்த அட்டமங்கலங்கள் ஆதியாக உள்ள பொருள்கள் அனைத்தையும் எதிரில் வைத்து சீதையைத் தொழுது சுற்றி நின்றனர். சீதையும் மகிழ்ந்து இனி வேறு ஒரு குறையும் இல்லை என்றாள். அப்போது ஒளி மிக்க எழுகின்ற புட்பக விமானம் மனவேகத்துடன் மேலே சென்றது. (மீட்சிப் படலம் 4069)
இதிலிருந்து அனுமன் வானர மகளிரை முறைப்படி அழைத்து வந்தான்.அவர்களுக்குரிய சிறப்புகளில் குறைவு உண்டாகாதபடி பார்த்துக் கொண்டான் என்றே கூறப்பட்டுள்ளது. இறுதிவரை ருமை என்ற பெயரைக் கூட கூறவில்லை.விடை கொடுத்த படலத்திலும் இராமன் அனைவருக்கும் பரிசு வழங்கினான். வீடணன் புட்பகவிமானத்தில் அனைவரையும் ஏற்றிக் கொண்டு வந்து அவரவருக்குரிய நாடுகளில் விட்டு விட்டு இலங்கை சென்றான் என்றே கூறியுள்ளார்.
வாலி குறித்து தாரையின் புலம்பல்
இராவணன் இறந்தபோது மண்டோதரி புலம்பலில் சீதையைக் கடத்தியதே அவன் அழிவுக்குக் காரணம் என்றே புலம்பினாள். ஆனால் வாலி இறந்தபோது தாரை, வாலியைப் பற்றி தவறாக ஒரு வார்த்தைகூட புலம்பவில்லை என்பதையும் நினைத்தற்குரியது. அதுதவிர வாலியும் வேறு பெண்கள் பின்னால் சென்றதாகவோ, யாரிடமும் தவறாக நடந்ததாகவோ கூறப்படவில்லை என்பதையும் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.அரசியல், ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு போன்ற காரணங்களுக்காக அவ்வாறு சொல்லப்பட்டதாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே ஒரு பாடலில் மட்டுமே வாலியே, இராமனிடம் நாங்கள் மிருகங்கள் எங்களுக்கு பிரம்மன் விதிக்கவில்லை என்ற அந்த ஒரு கருத்து மட்டுமே அவன் தம்பி மனைவியை அபகரித்தான் என்பதையும், அதை அவனே ஒப்புக் கொண்டான் என்பதையும்அறிந்து கொள்ள முடிகிறது.
ஒரு புதுவித உத்தி
ருமை, நூலில் எந்த இடத்திலும் நேரடியாக யாரிடமும், பேசவில்லை. அவளிடமும் யாரும் நேரடியாகப் பேசவேயில்லை.கம்பராமாயணம் நூல் முழுவதிலும் மற்றவர்கள் மூன்றே மூன்று இடங்களில் தான் பேசியுள்ளனர்.
இந்தக் கதாப்பாத்திரமே நூலின் அடிப்படையைப் பேசவைக்கிறது. பேசாமடந்தையே அதிகமாக நினைக்கப் படுகிறாள்.இதன் மூலம் கம்பர் ஒருவித புது உத்தியைக் கையாண்டுள்ளார்.
வாலி, இராமனிடம் நாங்கள் விலங்குகள் எங்களுக்கு பிரம்மன் முறை வகுக்கவில்லை என்கிறான்.அதற்கு பதில் அளிக்கும் விதமாக இராமன், மிருகங்களோ,பறவைகளோ எந்த குலத்தில் தோன்றியவர்க்கும் உயர்வும், தாழ்வும் அவரவர் செய்த வினைகளாலேயே வரும். இதனை உணர்ந்திருந்தும் நீ பிறர் மனைவியின் கற்பை அழித்தாய் என்று மனு நூலில் சொன்னபடி அறநெறி தவறாது நடப்பவன் கூறினான். பிறர் மனை விரும்பக்கூடாது என்ற உயரிய நெறி மனிதர்களுக்கு மட்டுமல்ல வானரகுலத்திற்கும் பொருந்தும் என்று காட்டியுள்ளார்.இந்தத் தவறைச் செய்தவர்களுக்கு மரணதண்டனையே சரியானது என்று காட்டியுள்ளார்.
முடிவுரை
சுக்ரீவனின் மனைவி ருமை. முக்கியப் பாத்திரமான ருமை கம்பராமாயணத்தில் நேரடியாக யாருடனும் பேசவில்லை. யாரும் நேரடியாக அவளிடம் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கதை தொடர்ந்து செல்ல அடி நாதமாக இருந்தது இந்த ருமையே. கம்பராமாயணத்தின் அடி நாதம் பிறர் மனைவியை விரும்பக் கூடாது என்பதாகும். பிறர் மனைவியை விரும்புபவர் கிளையோடும் கெடுப என்கிறது. ருமை குறித்து அனுமனே முதலில் இராமனிடம் கூறுகிறான். அடுத்து இராமன் வாலியைக் கொன்று அரசாட்சியும், உன் மனைவியையும் உன்னிடம் தருவேன் என்று கூறியபடியே தந்தான். இராமன்,, வாலியிடம் நீ உன் தம்பி மனைவியைக் கவர்ந்தது தவறு என்கிறான். வாலி நாங்கள் மிருகங்கள் பிரம்மன் எங்களுக்கு எவ்வித விதியும் வகுக்கவில்லை என்கிறான். சுக்ரீவன் கிஷ்கிந்தை சென்று ருமையோடு வாழ்ந்தான் என்பதைக் கம்பராமாயணத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. சுக்ரீவன் கிஷ்கிந்தையின் மன்னனாக முடிசூடி கொண்ட பிறகு நளன் என்ற வானரனால் அமைக்கப்பட்ட அரண்மனையினுள்ளே இதழ்கள் நிறைந்த மலர்களைப்பரப்பி அமைக்கப்பட்ட படுக்கையிலே, தொங்கும் கூந்தலையும், இளமையான கொங்கைகளையும் கொண்ட இள மகளிர் கால் பிடிக்க மது அருந்திவிட்டு தூங்கினான் என்று கம்பரேக் கூறியுள்ளார்.மீட்சிப்படலத்தில் வானர மகளிர் முறைப்படி புட்பகவிமானம் ஏறினர் என்று கூறிய இடத்தில்கூட, பொதுவாகவே கூறினாரே அன்றி ருமை பெயரைக்கூட கூறவில்லை.
இராவணன் இறந்தபோது மண்டோதரி புலம்பலில் சீதையைக் கடத்தியதே அவன் அழிவுக்குக் காரணம் என்றே புலம்பினாள். ஆனால் வாலி இறந்தபோது தாரை, வாலியைப் பற்றி தவறாக ஒரு வார்த்தைகூட புலம்பவில்லை என்பதையும் நினைத்தற்குரியது. அதுதவிர வாலியும் வேறு பெண்கள் பின்னால் சென்றதாகவோ, யாரிடமும் தவறாக நடந்ததாகவோ கூறப்படவில்லை என்பதையும் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.அரசியல், ஆட்சி,. அதிகாரம் செல்வாக்கு போன்ற காரணங்களுக்காக அவ்வாறு சொல்லப்பட்டதாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே ஒரு பாடலில் மட்டுமே வாலியே, இராமனிடம் நாங்கள் மிருகங்கள் எங்களுக்கு பிரம்மன் விதிக்கவில்லை என்ற அந்த ஒரு கருத்து மட்டுமே (அவன் தம்பி மனைவியை அபகரித்தான் என்பதையும், அதை அவனே ஒப்புக் கொண்டான்) என்பதையும்அறிந்து கொள்ள முடிகிறது.
இந்தக் கதாப்பாத்திரமே நூலின் அடிப்படையைப் பேசவைக்கிறது.பேசாமடந்தையே அதிகமாக நினைக்கப் படுகிறாள்.இதன் மூலம் கம்பர் ஒருவித புது உத்தியைக் கையாண்டுள்ளார் என்பதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
1.சுப்பிரமணியம்.வ.த.இராம.தண்டியலங்காரம்,முல்லைநிலையம்,சென்னை, 2019.
2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.
4.நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012.
5.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
6. கம்பராமாயணத்தில் தாரை – Link: https://doi.org/10.5281/zenodo.17270527
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.











