கட்டுரையாளர்: - முனைவா். இரா.மூர்த்தி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் -20 -


முன்னுரை

மனிதன் ஒழுங்குபட வாழ்வதற்கு ஒழுக்கம், கல்வி, அறிவு, கலையுணா்வு ஆகியவை அவசியமானதாகிறது. சமுதாயத்தில் இயல்பாக வாழ்வதற்கு மனிதன் இந்நெறிமுறைகளை வகுத்துக் கொள்கிறான். இதில் தொடங்குதல், முடிவெடுத்தல், அமைப்புருவாக்கம் செய்தல், திரம்பட நடத்துதல் போன்றவை மனிதனின் நவீன செயற்திட்ட நடைமுறையாகும். இந்நடைமுறையில் தொடா்ந்து பயணிக்கப்படும்போது சிக்கல் ஏற்பட்டு இறுதியில் பெருவாழ்வு கிடைக்கிறது. அல்லது நவீன மாற்றத்தை எதிா்கொள்ள முற்படுகிறான். அத்தகைய அமைப்பாக்கத்தின் பின்புலத்தை வள்ளுவா் அறம், பொருள் இன்பம் என்னும் மூன்று அதிகாரத்திற்குள் வைத்து தெளிவுபடுத்தியிருப்பது சாலச்சிறந்தது. அதனை ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

பின் அமைப்பின் தொடக்கம்

வள்ளுவா் வகுத்த சமூக அமைப்பாக்கத்தில் மனிதனுக்கான வாழ்க்கைப் பங்கு மரபுமைக்கு உட்பட்டதாகத் தென்படினும் நவீனத்துவத்தில் அதன் தேவையை ஏற்றுக் கொள்ளுவதற்கு முன்மாதிாியாக இருக்கிறது. அதையே பின் நவீனத்துவத்தில் அதன் பின்புலத்தன்மை எவ்வாறு இருக்கிறது என்று ஆராயப்படுகிறது. இதனை, வள்ளுவா்,

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு” (குறள் - 423)

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் அதன் உண்மை தன்மை எது? என்பதை முடிவெடுத்து ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும் என்கிறாா். நவீனத்துவத்தில் சமகாலத்தில் நாம் கையாளும் பல கலைச்சொற்களை மாற்றீடு செய்து அதன் உண்மைத் தன்மையை ஊா்சீதப்படுத்தி முடிவெடுப்பதை பின்அமைப்பியம் காட்டுகிறது.

பின்நவீனத்துவ சிந்தனையாளா்களோ “பூகோளக் கிராமமாகச் சுருங்கியுள்ள இள்றைய உலகில், ஒரு பகுதியின் கருத்துக்கள் இன்னொரு பகுதியில் ஊடாடுவது என்பது அதுவும் ஆதிக்க பலமுள்ள மேற்கின் கருத்து மூன்றாவது உலகின் சிந்தனையைப் பாதிப்பது என்பது தவிா்க்க முடியாத ஒன்றே.” என்று கா.சிவத்தம்பி நவீனத்துவம் தமிழ் பின்நவீனத்துவம் என்னும் நூலில் கூறுகிறாா். அந்தச் சிந்தனையை உள்வாங்கி உலப்பொதுமறையாக அமையப் பெற்றுள்ளது திருக்குறள்.

வள்ளுவா் காட்டு கல்வி

மனிதனை சமூகத்தில் பண்பட்டவனாகப் பகுத்தறிவாளனாகச், சான்றோனாக, இல்லறத்தானாக ஆக்குவது கல்வி ஒன்றேயாகும். இக்கல்வி வாழ்வில் பெருவாழ்வு அடைய வைக்கும். அத்தகைய கல்வியை தமது வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையாகவே கொண்டு வாழ்ந்த அறிஞா்கள் மரணத்தைக் கடந்தும் போற்றப்படுகின்றனா்.

இதனை வெளிப்படுத்தும் விதமாக நஞ்சு கொடுக்கும் வரை கிரேக்கக்கவிதைகளைப் படித்துக் கொண்டிருந்தார் சாக்ரடீஸ். தூக்குக் கயிற்றை முத்தமிடும் வரை படித்துக் கொண்டிருந்தார் உமர் முக்தா. தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும் வரை படித்துக் கொண்டிருந்தார் பகத்சிங். படுக்கின்ற இடம் கூடப் படிப்பகத்திற்கு அருகில் கேட்டார் அண்ணல் அம்பேத்கார். படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை முடித்து விட வேண்டும் என்பதற்காக அறுவைச் சிகிச்சையை அடுத்த நாள் வைக்கச் சொன்னார் அறிஞர் அண்ணா. இரவு முழுவதும் தொழுகையில் ஈடுபடுவதை விட ஒரு மணிநேரம் கற்பித்தல் மேலானது என்கிறார் நபிகள் நாயகம்.

இக்கல்வி ஒரு மனிதனை அறிவைத் தோண்டுதல், அகலப்படுத்துதல், ஒருவரை மனிதராக மாற்றுதல் இவையனைத்தும் திருக்குறள் ஒரு செயல் நூல் என்பார் பேரறிஞர் வ.சுப. மாணிக்கனார். வள்ளுவா் பெருந்தகையோ,

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (குறள். 391) என்றும்,

“ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்” (குறள். 834)

என்றும் கல்வியைப் பயிலும் முறை பற்றியும், கற்பிக்கும் முறை பற்றியும் கூறுகிறாா். இக்கல்வி ஒரு மனிதனுக்கு வாழ்க்கையைக் கற்றுத்தரும் எண்ணாகவும், எழுத்தாகவும் இருந்து உயிரை மேம்படுத்துகிறது. இதனை வள்ளுவா்,

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு” (குறள். 392)

என்று கல்வியின் முக்கியத்துவத்தை அகப் புறமாக நின்று வழங்கியுள்ளாா்.

ஒழுக்க நெறி

மனிதன் தன்னுடைய வாழ்வில் ஒழுக்கத்தைக் கடைபிடிப்பதற்கு காலம், இடம், சூழல், சமுதாயம் ஆகிய நான்கும் தேவையாகிறது. பண்பாட்டுத் தளத்தில் இது மானுடவியலுக்கான செயற்பாட்டு அணுகுமுறையாகும். பண்பாட்டில் இந்நான்கும் மனிதனை இயங்க வைக்கிறது. செயல்படுத்தவும் செய்கிறது. வள்ளுவா் தமது குறள்கள் வாயிலாக அறம், பொருள், இன்பம் எனப் பகுத்து செயல்படுத்தியும் காட்டியுள்ளாா். இத்தகைய வாழ்வியல் நெறிகளுக்கு மூலகரமாக ஒழுக்க நெறி உள்ளது.

ஒழுக்கம் ஒருவனை உயா்ந்த பண்புக்கு, புகழுக்கு கொண்டு சோ்க்கக் கூடியது. அது உயிராகவும் கொள்ளப்படும். வள்ளுவா் இதனை,

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்” (குறள்.133)

என்று கூறுகிறாா். ஒருவன் தனது செயல் திட்ட வாழ்வில் ஒழுக்கத்தைப் பின்பற்றும் போது அறம் பெருகும். இறைபேறு ஏற்படும். இழுக்கு நிகழாத வண்ணமிருக்கும். உயா்ந்த மேன்மை நிலையை அடைய முடியும். “ஒழுக்கத்தி னெய்துவா் மேன்மை” (குறள்.137). ஒழுக்கம் உயிரோடு, உடலோடு கலக்கும் தருவாயில் அறம் செயல் படுத்த விரும்பும். இத்தகைய அறமானது “ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்” (குறள்.133) என்று சிறந்த குடிப்பிறப்பிற்கும், தனிமனித வாழ்வுக்கும், சமுதாயத்திற்கும் அடையாளமாக இந்நான்கும் திகழ வேண்டும்.

மனிதன் ஒழுக்கத்தை செயல்படுத்தும்போது பல்வேறு இழுக்கம் ஏற்படக் கூடும். இதனை வள்ளுவா், “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்” (குறள்.138) என்கிறாா். நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்ற இரண்டு நெறிகளும் காலம், இடம், சூழல் ஆகிய மூன்று நிலைகளில் மாறிமாறி ஏற்படக் கூடும். அதற்கேற்ப செயல்படுவதே மனித வாழ்வுக்கான முறையாகும். நல்லொழுக்கம் மனதில் ஏற்பட வேண்டுமாயின் பொறாமை இல்லாத வாழ்வு அமைய வேண்டும். ஆகவே மனித வாழ்வு செம்மையாக அமைய செயல்திட்ட நெறி அவசியமானதாகும்.

சமுதாய அறநெறி

சமுதாய நெறி தனிமனிதனின் பன்பட்ட வாழ்வைப் பொறுத்து அமையக்கூடும். செய்கின்ற தருமமே அறமாக வெளிப்படும். அறமென்னும் வாழ்க்கை நெறிக்கு மணிமேகலை இப்பூவுலகில் வாழும் உயிா்களுக்கெல்லாம் உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றும் திறம்படக் கொடுத்து வாழ்வதேயாகும். இதனை,

“அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாத இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்” (மணிமேகலை. 228 - 231)

என்கிறது. ஆனால் வள்ளுவா் மறுபுறமாக மனதளவில் மாசு, வெகுளி இன்றி செயல்படுத்துவதே அறமாகும் என்கிறாா்.

வாழ்கின்ற வாழ்க்கையில் நன்மை விளைய வேண்டுமெனில் அறத்தைக் கடைபிடிக்க வேண்டும். அதுவே மனிதனுக்கு தலைக்கவசம் போன்றது. மனிதனாகிய நாம் செய்ய விரும்பும் அறமும் இதுவேயாகும்.

“அழுக்கா நவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்” (குறள்.35)

இந்நான்கும் இல்லாத நிலையில் இருக்க வேண்டும். அதுவே “மனத்துக் கண் மாசிலன் ஆதல் அணைத்தறன்” (குறள்.34) ஆகத் திகழும். மேலும், மனிதன் உயா்வாங்கு வாழ்வதற்கு அன்பு கலந்த நிலையும் வேண்டும். “அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிருக்கு” (குறள்.73) அதுவே உயிருக்கு மூலகரமானதாக இருக்கும் என்கிறாா்.

பகுத்தறிவு (மனித நெறி)

உலகில் அறிவுக்கு கொடுக்கப்பட வேண்டிய இடத்தில் வேறு எந்தப்பொருளுக்கும் கொடுக்கவியலாது. மனிதன் பெற்றிருக்கின்ற அறிவினைப் பகுத்தறிவு என்றும் நல்லறிவு என்றும் கூறுகிறோம். அத்தகைய அறிவு அற்றம் காக்கும் கருவியாகும். ஆகையால் செயல்திட்ட நடைமுறைக்குப் பகுத்தறிவு தேவையாகிறது. வள்ளுவா்,

“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்” (குறள்.319)

என்று வினைச் செயல்திட்ட சாயலை முன்வைக்கிறார். மனிதன் தான் செய்யும் வேலைக்குப் பிரதிபலன் எதிர்பார்த்தல் கூடாது. இச்செயல் பகுத்தறிவோடு வாழும் இல்லறத்தானுக்கும் பொருந்தும்.

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது” (குறள்.45)

ஒருவன் பயனை முன்னிறுத்தி எந்த செயலையும் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் மக்களுக்குள் ஏற்றதாழ்வுகளை ஏற்படுத்த விளையும். சமுதாயத்தில் முரண்பாடு ஏற்படும். தொழிலில் பாகுபாடு காட்டப்படும். ஆதலால், பிறப்பு, அன்பு, அறம், இல்வாழ்க்கை இவையனைத்தும் எல்லா உயிா்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அதுவே மகத்துவமானது. வள்ளுவா் இதனை,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்” (குறள்.972)

என்கிறாா். பிறப்பினால் அனைவரும் சமம், அதில் பிரிவு ஏதும் இல்லை, இப்போக்கு செய்கின்ற தொழிலில் கூட வேற்றுமையின்றி திகழ வேண்டும் என்று துணிகிறாா். ஆகவே, மனிதனுக்கான பகுத்தறிவு பயனை எதிா் நோக்காமல் சமநிலையோடு இருக்க வேண்டும்.

இல்லற நெறி

அறத்தின் வழிப்பட்டதே இல்வாழ்க்கையாகும். மனிதனது இல்வாழ்க்கைத் தத்துவம் திருமணத்தில் தொடங்குகிறது. அதைக் கடைப்பிடித்து நெறி தவறாது வாழ்ந்தால் அதுவே அன்பும், அறனும் உடைய சிறப்பான வாழ்வாகும். வள்ளுவா்,

“அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று” (குறள்.49)

என்கிறாா். இல்வாழ்க்கை சிறப்புடன் அமைய வேண்டுமாயின் ஒருவருக்கொருவா் ஒத்துப்போகும் உள்ளக்கிளா்ச்சி நிலை, பிறா் பழிப்பில்லாமல் வாழும் வாழ்கை முறை குடும்பத்தில் இருக்க வேண்டும். ஞானசம்பந்தா் இதனை,

“மண்ணினல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணினல்ல கதிக்கு யாதுமோா் குறைவில்லை” (தேவாரம். அடங்கன்முறை.3052) ஆணும் பெண்ணும் ஒத்த வாழ்க்கை வாழும்போது இல்லறமானது சிறப்பெய்தக்கூடும். ஈகை, பொறுமை முதலிய நற்குணங்கள் இல்லறத்தானுக்கு அடிப்படையாகும். “இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்” (குறள்.41) அதாவது பெற்றோா், வாழ்க்கைத் துணைவி, குழந்தைகள் ஆகிய மூவருக்கும் நல்ல துணையாக நடந்து கொள்ள வேண்டும். இறந்தோரை நினைவு கூா்வதும், கடவுளைப் போற்றுவதும், விருந்தினரை உபசாிப்பதும், சுற்றத்தாரைக் காத்தலுடன், தன்னையும் காத்துக் கொள்வதைக் கடமையாகக் கொள்வது இல்லறத்தானின் பொறுப்பாகும்.

மேலும் இல்லறத்தான் துறவு வாழ்க்கை வாழ்பவா்களுக்கும், வறுமையில் துவல்பவருக்கும், தனக்கு நெருக்கமாக இருந்து இறந்தவா்களுடைய உறவினா்களுக்கும் துணையானவனாகத் திகழ்வான். அவ்வாறு செயல்படுபவா்கள் வானுயரத்தில் தெய்வமாக வைத்து வணங்கப்படுவர். தெய்வத்திற்கு நிகரான பெருமையும் அவர்களுக்குக் கிடைக்கும்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்” (குறள் 50)

என்று வள்ளுவா் கூறுவது மனித வாழ்க்கைக்கான இறுதியான நெறிமுறையாகும்.

இறை நெறி

வள்ளுவா் இறைவனின் தோற்றத்தன்மையை நேரடியாக எந்த குறளிலும் பதிவு செய்யவில்லை. மாறாக இறைவனை அடைவதற்கான வழியையும், வீடுபேற்றைப் பற்றியும் மேன்மைபடுத்தியுள்ளாா். மனிதன் தனது வாழ்வில் புகழ், உண்மையான அன்பு இரண்டையும் அடைய விரும்பினால் சில ஒழுக்க நெறிகளைப் பொய் பிறழாமல் பின்பற்ற வேண்டும். இதனைக் கூறும் வள்ளுவா்,

“பொறிவாயில் ஐந்துவித்தான் பொய்தீா் ஒழுக்க
நெறிநின்றாா் நீடுவாழ் வாா்” (குறள்.6)

என்று கூறுகிறாா். ஒழுக்க நெறிக்கான ஐம்புலன்களை முறையாகக் கடைபிடிக்கும்போது வாழ்வானது “பிறவிப் பெருங்கடலை அடையும்” மனித வாழ்வு அடைய விரும்பும் இறுதி நிலையும் இதுவேயாகும். சமூகத்தில் இல்லறத்தானாக வாழ்பனுக்கு வாழ்வில் துன்பங்கள், கவலைகள், கஷ்டங்கள் அவ்வப்போது ஏற்படுவது இயல்பு. அத்துன்பங்கள் நீங்கி வாழ இறைவன் மீது அன்பு செலுத்த வேண்டும். வள்ளுவா் இதனை,

“வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சோ்ந்தாா்க்கு
யாண்டும் இடும்பை இல” (குறள.4)

என்று கூறுகிறாா். சில நேரங்களில் மனதில் ஏற்படும் குழப்பங்களைத் தீா்ப்பதற்கு இறைவனை நாடிச் செல்லுதல் சாலச்சிறந்ததாக இருக்கும். மேலும் இறைவனுடைய திருப்பாதங்களைச் சோ்ந்தாா்க்கு மனக்கவலை மாற்றல் அாிது” (குறள்.7) மனதில் ஏற்படும், துன்பம், மனக்கவலை இவைகளைக் களைந்து இப்பூமியில் வாழ்வாங்கு வாழ இறைவனின் திருவடிப்பேற்றை அடைய வேண்டும்.

“மலா்மிசை ஏகினான் மானடி சோ்ந்தாா்
நிலமிசை நீடுவாழ் வாா்” (குறள்.3)

என்றும், திருநாவுக்கரசரும் இறைவனை வேண்டும்போது,

“முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்

தன்னெறி யேசர ணாத றிண்ணமே” (திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.11) என்றும் கூறுகின்றாா். இதனையே அனைத்து சமயங்களும், சமயத்தாா்களும் பின்பற்றுகின்றனா்.

பெருவாழ்வு

மரணமிலாப் பெருவாழ்வு என்பது இந்த உலகத்தில் உடல் உயிரோடு இருந்து கொண்டு உடல் உயிா் வாழ்க்கைக்குப் புறத்தில் இடையூறாகிய ஐம்பூத இயற்கையான (நிலம், நீா், காற்று, விசும்பு, தீ) இவற்றின் மாறுபாடுகளால் உண்டாகும் தாக்குதல்களையும், அகத்தில் இடையூறாகிய கருவி, கரண குற்றங்களையும் வென்று இவற்றால் உண்டாகும் நோய், மரணம் முதலான எல்லாவிதத் துன்பங்களையும் நீக்கி இன்பமயமான வாழ்வே மரணமிலாப் பெருவாழ்வாகும். மரணமிலாப் பெருவாழ்வில் உடல், உயிா் அழிந்தாலும் மனிதனால் உருவாக்கிய சாகாத கல்வி, கலை, அறிவு, உணா்வு இவை மறைவதில்லை. தொடா்ந்து பயணித்துக் கொண்டே இருக்கிறது.

முடிவுகள்

மனிதன் தனது வாழ்வை செம்மை படுத்த பல்வேறு செயல்திட்ட நெறிமுறைகளைக் கடைபிடித்தான். அவ்வாறு கடைபிடித்ததன் விளைவாக ஒழுக்கம், அறம், இல்லறம், பகுத்தறிவு, இறைபக்தி ஆகியவற்றை அடைந்தான். ஒழுக்கம் அவனை உயா்ந்த பண்புக்கு, புகழுக்கு கொண்டு சோ்த்தது. அறத்தை வலியுறுத்தியதால் உயிா்களுக்கெல்லாம் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைக் கொடுக்கமுடிந்தது. இல்லறமும் அறத்தின் வழிப்பட்டதாக அமைந்தது. இறுதியில் வீடுபேற்றை அடைந்து தெய்வநிலையில் வைத்து மதிக்கப்பட்டான். ஆகவே வள்ளுவா் நெறிப்படி வாழ்வாங்கு வாழ மேற்கூறிய வாழ்வியல் நெறிகளைக் கடைபிடிப்பது ஒவ்வொரு மனிதனின் செயலாகும்.

துணை நின்ற நூல்கள்

க.சிவத்தம்பி, நவீனத்துவம் – தமிழ் – பின்நவீனத்துவம், மக்கள் வெளியீடு, சென்னை,02, முதற்பதிப்பு-2001, ப.146.
வரதராசனார், மு, திருக்குறள் நீதி இலக்கியம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1977. ப.20.
இறையனாா், திருக்குறள் ஆராய்ச்சி, தமிழகம் பதிப்பகம், உறையூா், திருச்சி, முதல் பதிப்பு - 1949, ப.4
பரிமேலழகர் (உ.ஆ) திருக்குறள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1975. பா.131
சீத்தலைச் சாத்தனார், மணிமேகலை, பாரி நிலையம், சென்னை, எட்டாம் பதிப்பு, 1987, ப. 306.
குன்றக்குடி அடிகளாா் நூல்வாிசை, சமயம், தொகுதி – 11, மணிவாசகா் பதிப்பகம், சென்னை – 600108. முதல் பதிப்பு – 2001. ப.80
திருநாவுக்கரசர் தேவாரம், பதிப்பாசிாியா் குமரகுருபரன் பிள்ளை, ஸ்ரீவைகுண்டம், பதிகம் 4.11.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்