
கட்டுரையாளர்: - ப. அமுதலட்சுமி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கழைக்கழகம்,காந்திகிராமம் -
முன்னுரை
இந்திய இலக்கியம் 3000 ஆண்டுகால பழமையான இலக்கிய வரலாற்றையுடையது. தமிழ், சமஸ்கிருதம், பிராகிருதம் போன்ற இந்திய மொழிகள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகால பழமையைத் தன்னகத்தே கொண்டது. மிகப் பரந்த நிலப்பரப்பில் தோன்றிய இந்திய இலக்கியம் பன்மொழி இலக்கியக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டது. பல்வேறு சமூக அரசியல் ஆட்சிமுறைகள் இருந்தாலும் கூட இந்தியச் சமூகத்தில் சாதிய அமைப்பு என்பதும் பொருளாதார அமைப்பு என்பதும் பண்பாட்டு அடிப்படையில் ஒரு பொதுத்தன்மையைக் கொண்டுள்ளன. இராமாயணம், பாரதம், 18 புராணங்கள் போன்றவை இந்தியா முழுவதும் நிலவுகின்றன. இவை இந்நாட்டு இலக்கியமாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
தற்போதைய இந்திய அரசியல் பண்பாட்டுச் சூழலில் இதிகாசங்களின் கதை நிகழ்வுகள் மொழி, இலக்கியம், ஆன்மீகம், சுற்றுலா, திரைப்படம் எனப் பல்வேறு துறைகளிலும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மறுநிர்ணயம் செய்யப்படுகின்றன. மேலும் தாம் காண விரும்பும் சமூக மாற்றத்திற்கான அனைத்து மூலங்களும் புராணங்களிலிருந்தும் குறிப்பாக இதிகாசங்களிலிருந்தும் தேடப்படுகின்றன.
எஸ்.இஸ்ரவேல் “இதிகாசங்களின் காலத்தை கிமு.200 முதல் கிபி.300 என்ற அளவில் கணிப்பதுண்டு. ஆனால் இப்போதைய நிலையில் இராமாயணமும் மகாபரதமும் முற்றுப் பெறக் கூடுதல் காலம் ஆகியிருக்க வேண்டும்” என்கிறார். (இஸ்ரவேல்.எஸ்., 1988, ப.40) மேலும் அவர் ‘இதிகாசம் என்றால் இப்படியன்றே இதிலிருப்பது’ என்று பொருள் கொள்கிறார். வால்மீகியின் இராமாயணமும் வியாசரின் மகாபாரதமும் இதிகாசங்கள் எனும் வகையைச் சார்ந்தவை. இவற்றில் காலந்தோறும் புதுப்புது மாற்றங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. இவ்விதிகாசங்கள் ஆரியர்களின் நடைமுறை வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுவனவாக விளங்குகின்றன. இவை இலட்சிய மனித சமூகத்தையும் நீதிமயமான சமூக அமைப்பையும் வீரதீரச் செயல்களையும் காட்டுகின்றன. இந்திய சமூகத்தில் வேதங்களாக மதிக்கப்படுவன இவ்விரு இதிகாசங்களாகும். ஆரியர் தமது அடையாளத்தை மக்களிடையே திணிப்பதற்காக இதிகாசங்களைப் பயன்படுத்திக் கொண்டனர்.
இந்திய மரபில் இதிகாசங்கள்
உலகெங்கிலும் இன்று இதிகாசங்கள் மக்களிடையே செல்வாக்கு பெற்றதோடு நின்றுவிடாமல் இலக்கியங்களிலும் அரசியலிலும் ஒரு மிகையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்திய மொழிகள் அனைத்திலும் இலக்கியமாகவும், பண்பாடாகவும் வாழ்வியலோடு அவை பெருமளவு இயங்கி வருகின்றன. மேலும் சிற்பங்கள், ஓவியங்கள், நடனங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் வாயிலாகவும் இதிகாசக் கதைகள் பரப்பப்பட்டு வருகின்றன. மக்களிடம் நன்கு அறியப்பட்ட கதைமாந்தர்கள் சமூகத்தின் முன்னோடிகளாக அடையாளப்படுத்தப்பட்டு இக்கதைகள் வழியாக இவர்கள் கடவுள் நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டனர். இக்கதைகள் ‘வேற்றுமையுள் ஒற்றுமை’ எனும் பாரதத் தன்மைக்கு வலுசேர்ப்பவையாக உள்ளன.
அவ்வாறாக கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்ட இராமன் குறித்து இஸ்ரவேல் “ஒரு முழுமையான மனிதனை வடிக்கத்தான் வால்மீகி விரும்பினார். ஆனால் ஓர் இளவரசன், ஒரு வீரன், பின் விஷ்ணுவின் அவதாரம் என்று இராமனை தெய்வ பிறவியாக மேம்படுத்தும் வளர்ச்சியை இராமாயணத்தில் பார்க்க முடிகிறது. இந்த அவதாரக் கருத்தும் பிற்சேர்க்கையாகவே இருக்க வேண்டும் ” (இஸ்ரவேல். எஸ். 1988, ப.50) என்கிறார்.
இராமாயணத் தொன்மம்
தொன்மம் என்பது சமயத்தோடும், நாட்டுப்புறப்பாடலிலிருந்த மானிட இயலோடும், சமூக இயலோடும், உளவியல் நுண்மு7றை அறிவோடும், நுண்கலைகளோடும் தொடர்புகொண்டு பலவகைப் பொருள் உணர்ந்து பொதிந்திலங்கும் செறிவுமிக்க ஒரு சொல்லாகும் (ப.126உளவியலும் தொன்மவியலும், திறனாய்வு அணுகுமுறைகள், 2011)
மித் என்பதற்கு அறிஞர்கள் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை கூறுயுள்ளனர். நார்த்ராஃப்ரை இயற்கை இறந்த நிகழ்ச்சிகளைத் தன் செயல் முறையாகக் கொண்டிருக்கும் என்கிறார். அவ்வகையில் இராம கதையின் நிகழ்வுகளும் பத்துத் தலை கொண்ட இராவணனும், அனுமனின் கடலைக் கடக்கும் அதீத ஆற்றலும் கொள்ளப்படுகின்றன.
இதிகாசக் கதைகள் தொன்மமாக மக்களிடம் நிலைநிறுத்தப்படுகையில் மேல்தட்டு மக்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் பெண்ணடிமைத் தனத்திற்கு வழிவகுத்து எதிர்மறை எண்ணங்கள் உருவாக முற்படுகின்றன. புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூறப்படும் கதைகள் பெரும்பாலும் இவ்வகையில் அமைந்ததாகும்.
வடமொழி இலக்கியத்தில் இராமாயணம்
வால்மீகி கண்ட இலங்காபுரியின் காட்சியே காளிதாசனுக்கு இரகு வம்சத்தின் அயோத்தியை உருவகப்படுத்துவதற்கு உதவியது. பருவ காலங்கள், மலைகள், ஆறுகள் என்பனவற்றின் வருணனைகள் காவியங்களிலே பெரிதும் இடம் பெறுகின்றன. இவற்றிற்கெல்லாம் அடியெடுத்துக் கொடுத்தவர் வால்மீகியே ஆவார். மழைக்காலம், இலையுதிர்காலம், குளிர்காலம், சித்திரகூடமலை, மந்தாகினி நதி என்பவற்றின் வருணனைகளில் வால்மீகி முன்மாதிரியாக இருந்தார். அழகிய உருவகங்களை அவர் அதில் கையாள்கிறார். இவை பிற்காலக் காவியப் புலவர்க்குப் பெரு விருந்தாய் அடியொற்றப்பட்டன.
நிர்மலமான வானம், தூசு படியாத காற்று, வானத்திலிருந்து பூ மழை பொழிதல், அந்தரத் துந்துபி முழங்குதல் என்ற பற்பல கருத்துக்கள் இராமாயணத்திலிருந்து வழிவழியாகக் காவியத்திலும் புராணங்களிலும் பரவின. “இந்திரவிழா முடிவில் இந்திரத்துவசம் இறங்கியது போலத் துக்கத்தால் மடிந்தான்” (நவாலியூர் நடராஜன், 1999,)என்ற உவமை பிற்காலக் காவியங்களில் பெரு வழக்காயிற்று. மகிழ்ச்சியால் மலர்ந்த கண்கள், பொற்கலசம் போன்ற மார்பகம், நயமான கம்பீரத்துவனி செய்யும் மேகங்கள் என்பன போன்ற பிரயோகங்கள் இராமாயண ஆதி காவியத்தின் பயனாக உண்டான எதிரொலிகளாகும். மோனை, சமாசோக்தி என்பன இராமாயணத்திலே பெரு வழக்காயிருந்தன.
பிற்காலக் கவிகளுக்கு வழிகாட்டிய இராமாயணம்
இராமாயணத்திலே காணப்படும் பல காவிய அம்சங்கள் புத்த சரிதத்திலே காணக் கிடைக்கின்றன. இராமனை ஏற்றிக் கொண்டு அயோத்தியைப் பிரிந்து சென்ற தேர் இராமனின்றி வருவதக் கண்ட அயோத்தி மக்கள் அழுதார்கள் என்றும் சித்தார்த்தர் திரும்பாததைக் கண்ட கபிலவஸ்து மக்களும் அவ்வாறே அழுதார்கள் என்வும் வருகிறது. இராமன் திரும்பி வராத செய்தியைக் கேட்ட தசரதன் உடனே உயிர் துறந்தான் என்பதைப்போல சுத்தோதனன் சித்தார்த்தர் திரும்பி வராததைக் கேட்டு தசரதன் பாக்கியசாலியென எண்ணித் தன்னிலைக்கு இரங்குகிறான்.
சி.என். ராம சாஸ்திரி 1905 ஆம் ஆண்டில் ராவணன் – சீதை உடையாடல் என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் இராவணன் சொல்வதாக இருக்கும் பாடலிலிருந்து ஓர் எழுத்தை அகற்றிவிட்டால் அது அந்தக் கேள்விக்குச் சீதை அளிக்கும் பதிலாக அமைந்துவிடும்.
வங்காள மொழியில் இராமாயணம்
பண்டைய வங்காளக் கவியான கிருத்திவாசரால் 14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இராமாயணமே இந்திய இலக்கியங்களில் முதன்மையானதாகும். இது வங்காளப் பாரம்பரியமான பாஞ்சாலி வடிவத்தில் எழுதப்பட்டதாகும். நவீன கால மாற்றத்திற்கேற்ப இக்காவியங்கள் மீண்டும் படைக்கப்படலாயின. மைக்கேல் மதுசூதன்தத் அவற்றில் புகழ்பெற்றவராவார். அவர் புராணங்களில் வலிமையும், திண்ணிய உடலும், மனஉரமும் யாருக்கும் அடங்காத முரட்டுத்தனம் கொண்டவர்களாக விளங்கும் வீரர்களையே பெரிதும் விரும்புபவர். அவ்வகையில் இராமாயணத்தில் துயரமான முடிவைக் கொண்ட ராவணனின் கதையையும், அவனுடைய வீர மகனான இந்திரசித்தின் கதையும் (மேகநாத்வத்) கூறுகிறார். சாதுவாகவும் நற்குணமுடையவனாக விளங்கும் இராமனை விடுத்து ஆற்றலுடன் இயங்கிக் கொண்டிருக்கும் அரக்கர்களையே அவர் விரும்பினார். ஆதலால் தத் இயற்றிய இரண்டாவது வீர காவியத்தில் இலங்கை முற்றுகை இடப்பட்டதையும், அது வீழ்ச்சியுற்றதையும் கதைப் பொருளாகத் தேர்ந்தெடுத்தார். இந்திரஜித் எனும் பெயரை விடுத்து மேகநாதன் எனும் பெயரை இட்டார். இராமனுக்கு வெற்றி கிடைக்க காரணம் ராவணனுக்கு துரோகம் செய்த அவனது தம்பியின் துணை தான் என எண்ணினார். “ராவணன் மேன்மைக் குணங்கள் உடையவன். அந்த அயோக்கியனான விபீஷணன் இல்லாதிருந்தால் குரங்குச் சேனையை அவன் கடலுக்குள் உதைத்துத் துரத்தியிருப்பான்” (சுகுமார் சென், 2019, ப.321) என்றார்.
அம்மொழியில் ராய் உயர் நோக்குடைய நாடகங்களை எழுதுவதில் வல்லவர். அவரது நூல்களில் ஐந்து இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது.
ராஜ் கிருஷ்ணராய் எனும் கவிஞர் இராமாயணத்தை மொழிபெயர்த்தார்.
கிரீஸ் சந்திர கோஷ் (1884-1911) பக்திச் சுவை உடைய நாடகங்களையும்
ராவண வத் (ராவணன் வதம்) என்னும் நாடகத்தையும் எழுதினார்.
டி. எல். ராய் இயற்றிய முக்கிய நாடகங்களில் 2 ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது. பாஷாணி (கல்லாக மாறிய மங்கை,1900) என்பதும் ஸீதா (1902) என்பதும் செய்யுள் வடிவில் எழுதப்பட்டவை. இந்திரன் அகலிகையைக் கற்பழித்த கதையை, மிகப் புதிய முறையில் இப்படைப்பு கூறுகிறது.
மலையாள இலக்கியத்தில் இராமாயணம்
மலையாள இலக்கியத்தில் எழுத்தச்சன் வகிக்கும் இடம் இந்தியில் துளசிதாசர், தமிழில் கம்பன் வகிப்பதைப் போன்றது. அவர் இயற்றிய அத்யாத்ம இராமாயணம் , மகாபாரதம் போன்ற நூல்களை பெரும்பாலான மக்கள் பக்தியுடன் படித்து வருகின்றனர். அதில் எழுத்தச்சன் இன்னும் பல நூல்களுக்கும் ஆசிரியராவார். அவற்றில் எல்லாம் மிக உயர்ந்த இலக்கியச் சிறப்பும் தத்துவ தரிசனமும் காணப்படுகின்றன
கிபி 12 ஆம் நூற்றாண்டில் தோன்றியதாக கூறப்படும் ராமசரிதம் 30 படலங்களைக் கொண்டதாகும். இதை கிபி. 1195 முதல் 1208 வரை திருவிதாங்கூரை ஆண்ட ஸ்ரீ வீரராமவர்மா இயற்றியதாகக் கூறுவர். போர் வீரர்களை மனதில் கொண்டு ஆசிரியர் இயற்றியதால் ராமாயணத்தின் யுத்த காண்டத்தை அதில் கூறியுள்ளார்.
17 ஆம் நூற்றாண்டை அடுத்து தற்கால உருவத்தை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க ஆட்டக்கதை இலக்கியம் கதகளி ஆகும். ஒவ்வொரு காலகட்டத்தின் புது முறைகளுக்கும் ஏற்றவாறு மக்கள் ரசனையில் விளைகிற மாறுதலுக்குட்பட்டு இது இயங்கியது. சாதாரணமாக, இராவணனை ஒரு கொடிய அரக்கனாகச் சித்தரிப்பதே வழக்கம். ஆனால் தம்புரான் அவனை மனிதப் பண்புகள் நிரம்பப் பெற்ற ரசிகனாகப் படைத்திருக்கிறார். ஒரு நாடகத்தில் கதாநாயகனுக்கு இருக்க வேண்டிய நல்லியல்புகள் அனைத்தும் ஒருங்கே வரப் பெற்று, பழிப்புக்கு இடமான புராணச் செய்திகள் பலவற்றைத் தள்ளியும் தம்புரான் ராவணனின் ஓவியத்தை தீட்டுகிறார்.
மலையாளக் கவிதை வரலாற்றில் தன்னிகரில்லாது திகழ்ந்தவர் குமாரனாசான் ஆவார். தத்துவ சிந்தனையே ஆசானுடைய கவிதையை ஏனையோர் கவிதையினின்றும் இனம் பிரித்துக் காட்டுகிறது. ஸ்ரீ ராமனுடைய அசுவமேத யாகத்தில் பங்கு பெற வால்மீகி லவனையும் குசனையும் அயோத்திக்கு அழைத்துச் சென்ற வேளையில் குடிபோன வீடுபோல் ஆசிரமம் வெறிச்சோடி கிடந்தது. கடந்த காலத்தின் நினைவில் ஆழ்ந்திருந்தால் சீதை. அவள் மனதில் எழும் உணர்ச்சிகளை சித்தரிக்கிறது சிந்தாவிஷ்டயாய ஸீத. (1919)
இக்கவிதையின் ஆரம்பம் முதலே சோகம் நிறைந்திருக்கிறது. வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைகள் நிரம்பிய அழகொழுகும் இக்கவிதையில் சீதையின் இதயத்தோடு ஒன்றிவிடுகிறார் ஆசான். வாழ்க்கையின் கடுமையை அனுபவித்துத் தவித்தவள் சீதை. எழிலும் மென்மையும் சற்று கசங்கிவிட்ட நிலையை எய்தியவள். கணவனால் தனக்கு நேர்ந்தவற்றை எண்ணி அவரைக் கடுமையாக பேசுகிறாள். கற்பின் கனலியான சீதையின் தூய்மையைச் சந்தேகிக்க இடமேயில்லை என்றாலும் அவளைக் காட்டிற்கு அனுப்பிய ஸ்ரீராமனிடம் கடைசியில் பரிவும் காட்டுகிறாள்.
தெலுங்கு இலக்கியத்தில் இராமாயணம்
கம்ப இராமாயணத்தை 1950 களில் ஆதிபூடி சோமநாதராவ், பூதலப்பட்டு ஸ்ரீ ராமலுரெட்டி ஆகிய இருவரும் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளனர்.
ரங்கநாத இராமாயணம்
வால்மீகியின் தழுவலாக அமைந்த இன்னூலில் இந்திரன் கோழியாக மாறிக் கூவுதல், அகலிகை கல்லாக மாறுதல், அனுமன் இலங்கை எரித்தல் போன்ற புதுக் கதைக்கூறுகள் காணப்படுகின்றன. இராவணன் தனக்கு அறிவுரை கூறிய விபீடணனை எட்டி உதைத்து சபைக்குச் செல்வதும் புதிய செய்தியாக உள்ளது.
மொல்ல இராமாயணம்
தெலுங்கு இலக்கியத்தில் மொல்ல இராமாயணமே மிகுந்த செல்வாக்கு பெற்றதாகும். இதற்கு காரணம் எளிய சொற்களும், பழமொழிகளும் கலந்த சுவை மிக்க அவரது நடையேயாகும்.
ஸ்ரீ கிருஷ்ண இராமாயணம்
ஸ்ரீ பாத கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி இதனை இயற்றியுள்ளார். வால்மீகி இராமாயணத்தின் தழுவலான இந்நூலில் வால்மீகியில் இல்லாத கௌசல்யா தசரதன் திருமணம் கூறப்பட்டுள்ளது. ராமனும் சீதையும் திருமணத்திற்கு முன் ஒரு பூங்காவில் சந்திப்பது போன்று தற்கால நோக்கில் பாடப்பட்டுள்ளது. சீதையின் வயிற்றுக்குள் இருக்கும் போதே லவகுசலர்களுக்கு இராமாயணம் போதிக்கப்படுவது, சீதை இராமனின் ஐயத்தால் காட்டிற்குப் போகாமலிருப்பது போன்றனவும் புதிய செய்திகளாகும்.
அத்யாத்ம இராமாயணம்
இது இராமனுடைய பரபிரம்ம சொரூபம், சரஸ்வதி பிரம்மா உரையாடலில் வருகிறது. இந்த இராமாயணத்தை சிவன் பார்வதிக்கு உபதேசித்ததாகக் கூறப்படுகிறது. வால்மீகியில் இல்லாத சில கதைக்கூறுகள் இதில் வருகின்றன. அவை இராமனே தனது கடவுள் வடிவைக் கைகேயிக்கு காட்டுதல், குகன் கதை, இராமனிடம் நாரதன் அவதார நோக்கத்தைக் கூறுதல், இராமன் சபதம் எடுத்தல், சித்திரகூடத்தில் வால்மீகியை இராமன் சந்திப்பது. இராவணன் பாதாள உலகில் யாகம் செய்வது, வயிற்றில் அமுத கலசம் இருப்பது போன்றன ஆகும்.
நிர்வசன உத்தர இராமாயணம்
இதில் ‘இராமன் இராவணனைக் கொன்று அரசாட்சி புரியும் வேளையில் இராவணனின் மூத்த அண்ணன் சகஸ்ரகண்டனைப் பற்றிக் கேள்வியுற்று இராமன் அவனிடம் போருக்குப் போகிறான்.’ போரில் இராமன் மரணமடைய, சீதை காளி அவதாரமெடுத்து சகஸ்ரகண்டனைக் கொன்று விடுகிறாள் என்பது கதைப் பொருளாக அமைகிறது.
திராவிட மொழிகளில் கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகியவற்றில் இராமாயணம் காப்பியமாகவும் நாட்டுப்புறக்கதைப்பாடல் வடிவிலும் வழங்கி வருகிறது. குறிப்பாகத் தெலுங்கு மொழியில் இத்தொன்மக் கதையின் செல்வாக்கு மிகுந்திருப்பதைக் காணமுடிகிறது. கன்னடத்தில் 13 ஆம் நூற்றாண்டில் எழுந்த அபிநவபம்பா எனும் நாகச்சந்திரன் எழுதிய இராமாயணம் முதல் இராமாயணமாக உள்ளது.14 ஆம் நூற்றாண்டில் தெலுங்கில் எழுந்த ரங்கநாத இராமாயணமும் 12 ஆம் நூற்றாண்டில் மலையாளத்தில் எழுந்த ராமசரிதமும் முதல் இராமாயண நூலாகும். (சுப்ரமணியம், 1984, ப.140 - 142)
கம்பராமாயணம்
இது தமிழில் கம்பரால் தமிழ் மொழிக்கேற்ப எழுதப்பட்ட காவியமாகும். இது 12 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. தமிழுக்குக் கதி என்று போற்றப்படும் இரு நூல்களுல் முதன்மையானதாகும். தமிழ் யாப்பு வடிவமான விருத்தப்பாவிற்கு ஏற்ற வடிவமாகும். காவியத்தின் அடிநாதமாக அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பதை கொண்டு கட்டமைத்துள்ளார். இக்காவியத்தில் இராமனின் தோழனாக படகோட்டியான குகன் சித்தரிக்கப்படுவது, சமூகத்தில் நல்லொழுக்கங்களையும், சமத்துவமான நீதியையும் வலியுறுத்துகிறது. இராமன் சீதை இருவருக்குமான காதல் உணர்வுகளும், இலக்குவணன் போன்றோருடனான சகோதர பாசமும், மற்ற சமயத்தவருடன் பகிர்ந்துண்ணும் தன்மையையும் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
துணைநூற்பட்டியல்
க. பஞ்சாங்கம் ,தொன்மத்திறனாய்வு, அன்னம் பதிப்பகம், தஞ்சாவூர், 2011
இஸ்ரவேல், எஸ்., இதிகாசங்களும் புராணங்களும் தமிழ் இறையியல் நூலோர் குழு, தமிழ்நாடு இறையியல் கல்லூரி, மதுரை, 1988
சுப்பிரமணியன், ச.வே., திராவிடமொழி இலக்கியங்கள், printed by pelican india, Madras, 1984.
சுகுமார் சென், வங்காள இலக்கிய வரலாறு, சாகித்திய அகாடமி, 2019
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* ஓவியம் - கூகுள் நனோ பனானா










