கட்டுரையாளர்! - முனைவர் கா.சுரேஷ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு), பூ.சா.கோ. கலை மற்றும் அறிவியல், கோயம்புத்தூர் – 14. 


சங்கக் கால தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வியலை வாழ்ந்து வந்தனர். அதன் விளைவாக எழுந்த படைப்பிலக்கியமே சங்க இலக்கியமாகும். சங்க இலக்கியம் தமிழரின் பண்பாட்டு அடையாளங்களின் மூல ஆதார நூலகவே பார்க்கப்பட வேண்டும். அறிவியல் வளர்ச்சி அடைந்தாலும் மனிதன் பண்பாட்டு நெறியோடு வாழ்ந்து வருவதே இலக்கியங்கள் மூலம் நன்கு உணர்த்துக் கொள்ள முடியும்.

எந்த ஒரு மக்கள் இனமும் தன்னுடைய நிகழ்காலத்திய சமூக, அரசியல் கலாச்சாரச் சூழ்நிலைக்கு ஏற்ப, தன்னுடைய பண்பாட்டு வேர்மூலங்களைத் தேடி இனங்காண முற்படுவதும், பாரம்பரியப் பெருமைகளைப் பறைசாற்றிக் கொள்ளவும் இலக்கியங்கள் மூல ஆதாரங்களாக விளங்குகின்றன. இன்றைய சமூகத் தேவையை முன்னிட்டு ஒரு தேசிய இனத்தின் கடந்த காலப் பண்பாட்டு பாரம்பரியப் பெருமையை இன்றைய நவீன நாகரிகம்டைந்த மக்கள் உணர்ந்து கொள்ளும் பொருட்டு பண்டைய இலக்கியப் படைப்புகளை ஆதாரமாகக் கொண்டு பண்பாட்டுப் பெட்டகமாகச் சங்க இலக்கியங்களில் காணமுடியும்.

அறிவியல், தொழில்நுட்பம், பொருளியல், கலை இலக்கியம் முதலிய துறைகளைச் சார்ந்த பருண்மையான மற்றும் அரூபமான படைப்புகளும், அரசியல், நீதி, நிர்வாகம், குடும்பம், உறவுமுறை, சமயம் முதலிய நிறுவனங்களும் மனித சமுதாயத்தின் பண்பாட்டுப் படைப்புகளாகும். சமூகத்திற்குரிய இவ்வனைத்து வகைப்பண்பாட்டுப் படைப்புகளும் அச்சமுதாயத்தின் சமூகப் பண்பாட்டை ஒருவர் புரிந்து கொள்வதற்கு உதவக்கூடிய மிகவும் இன்றியமையாத தரவுகளாகச் சங்க இலக்கியங்கள் கருதுகிறது. இச்சங்க இலக்கியப் படைப்பின் வழி தமிழரின் பண்பாட்டினை எடுத்துரைப்பது இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

பத்துப்பாட்டு பற்றி பொதுவான கருத்துகள்

அக – புற வாழ்வு

முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை போன்ற அகப்பண்பாட்டையும் (காதல் குடும்பம்) நெடுநல்வாடை போன்ற அகப்புறத்தையும் மதுரைக்காஞ்சி ஆற்றுப்படை நூல்கள் வீரத்தையும் கொடையையும் போற்றும் புறப்பண்பாட்டையும் விளக்குகின்றன.

ஆற்றுப்படை பண்பாடு

மன்னர்களின் கொடைத்திறனைப் பாடிப் பரிசில் பெற்றுவரும் கூத்தர், பாணர், விறலியர், புலவர் போன்றோர் மற்றொரு வரை மன்னனிடம் ஆற்றுப்படுத்துவது சிறந்த பண்பாடாக இருந்தது.

விருந்தோம்பல்

பண்டையத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு குறிப்பாக ஆற்றுப்படை நூல்களில் பரிசில் வழங்கிய மன்னர்களின் பண்பாகச் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

இயற்கை வாழ்வு

ஐந்திணை சார்ந்த நில அமைப்புகள், காடுகள், மலைகள் மற்றும் கடல் சார்ந்த வாழ்க்கை முறை இயற்கையோடு இயைந்த தமிழர்களின் பண்பை வெளிப்படுத்துகிறது.

மன்னன் மாண்பு

குடிமக்களைக் காக்கும் மன்னனின் கடைமை, போர், வீரம் மற்றும் கொடைத்திறன் ஆகியவை பத்துப்பாட்டில் முக்கிய பண்பாட்டு விழுமியங்களாக வலியுறுத்தப்படுகின்றன. பத்துப்பாட்டில் நிலச் சார்ந்த உணவுமுறையைப் பண்பாடாகக் கருதப்படுகிறது.

அகப்பண்பாடு

தமிழரின் அகப்பண்பாடு என்பது உள்ளத்தால் உணரப்படும் அன்பு, காதல், கற்பு, அறம், அடக்கம் மற்றும் விருந்தோம்பல் போன்ற உயரிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டது. தமிழர் வாழ்வியலின் அகத்திணைக் கோட்பாடுகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற ஐந்திணைகளை மையமாகக் கொண்டு தனிமனித ஒழுக்கம் மற்றும் அகஉணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அகத்திணை இலக்கியங்கள் பெரும்பாலும் தலைவன் தலைவியின் அன்பை மையமாகக் கொண்டு காதலை உன்னதமான உணர்வாகப் போற்றுகின்றன. முகம் தெரியாதவராக இருந்தாலும் அன்போடு உணவளித்து உபரிக்கும் உயரிய பண்பு தமிழரின் அகப்பண்பாட்டின் தனிச்சிறப்பாகும்.

விருந்தோம்பல்

வீட்டிற்கு வரும் விருந்தினர்களை நன்கு உபரித்து அனுப்புவது தமிழரின் பண்பாடு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. வீடு தேடி பசி என்று வருபவர்களுக்கு இல்லை என்று கூறாமல் உடனே உணவளிக்கும் பழக்கத்தினைக் கொண்டவர்கள் தான் தமிழர்கள். சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல் என்பது வெறும் உணவிடுதல் மட்டுமல்ல, அது தமிழர்களின் தலையாய அறமாகவும், பண்பாட்டு அடையாளமாகவும் போற்றப்பட்டது. தனி மனிதனின் இல்லறம் உணவை அன்புடன் படைத்து, உபசரிப்பது சிறந்த பண்பாட்டு அடையாளமாகக் கருதப்படுகிறது.

”விருந்து” என்ற சொல் புதுமையைக் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக் குறித்து வழங்கலாயிற்று.

”விருந்து தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே”1

என்ற தொல்காப்பிய நூற்பாவின் வழி விருந்தினர் என்பவர் நமக்கு அறிமுகமில்லாதவராக இருந்தாலும் தன் இயன்ற உணவு அளித்து விருந்தோம்பவது சிறந்த பண்பாடு என்று தொல்காப்பியம் எடுத்துரைக்கிறது. மேலும் வள்ளுவர்,

”மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.”2

அதாவது வீட்டிற்கு வரும் விருந்தினரை முகம் மலர்ச்சியோடு வரவேற்று, அவர்களின் மனம் குன்றாதப்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அனிச்ச மலர் முகர்ந்த உடனே வாடிவிடும். அதுப்போல விருந்தினர் இன்முகத்தோடு வரவேற்று உபசரிப்பது சிறந்த பண்பாடாக வள்ளுவப் பெருந்தகை எடுத்துரைக்கிறார்.

”எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங் குறை
மைவான் பெய்த வெண்னெல் வெண்சோறு
நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி”3

என்ற பாடலில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் என்ற சங்கப் புலவர் பாராட்டும் போது, பழக்கமான பசியால் வருந்திய எங்களின் துன்பத்தைப் போக்கினாய். கத்தியில் வெட்டி அறுத்த ஆட்டுக்கறியும், அரிசிச்சோறும் கலந்த புலவு தந்து போக்கினாய். மூங்கில் குழாயில் வைத்திருந்த தேறல்கள்ளும் தந்தாய் அள்ளி அள்ளி நாங்கள் உண்டு மகிழ்ந்தோம் என்ற மன்னனின் செயல்பாட்டினைப் புலவர் நயம்பட எடுத்துரைத்துள்ளார்.

அகநானூறு 86 ஆம் பாடலில் தமிழர் திருமணமுறையில் விருந்தோம்பலின் சிறப்பினை நன்கு எடுத்துரைக்கிறது.

”உழுந்து தலைப்வெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப நிரைகன்”4

சங்கக் காலத் திருமண விருந்தில் உழுந்த வடையுன் கூட்டுப்பொரியல், நல்ல நெல் சோறு படைத்து வரும் விருந்தினரை உபசரிக்கும் வழக்கம் மரபு ரீதியாக பழக்கத்தில் உள்ளதை எடுத்துரைக்கின்றது.

கருணை

கருணை என்பது மனித நேயத்தின் மிக உயர்ந்த பண்பாக உயிருள்ள அனைத்தின் மீது காட்டும் அன்பாக சங்க இலக்கியங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது. சங்க கால மக்கள் அஃறிணை உயிர்கள், தாவரங்கள் மீது மிகவும் கருணையோடு இருந்ததைச் சங்கப் பாடல்கள் வெளிப்படுகிறது. முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி போன்ற வள்ளல்களின் ஈகை, பறவைகளுக்கு அஞ்சிய தேரோட்டம், பகைவர் மீது காட்டும் அன்பு எனப் பிற உயிர்கள் மீதான அக்கறையைச் சங்கப்பாடல்கள் அழகுறப் படம்பிடித்துக் காட்டுகின்றன. மனிதன் – மனிதன் மீதும், மனிதன் – அஃறிணை உயிர்கள் மீதும் கருணையோடு இருந்துள்ளனர். இதனை அகநானூறு 262 பாடலில் முள்ளுக்காட்டை வெட்டி எரித்து உருவாக்கிய விளைநிலம் விதை விதைத்து நிலத்தை உழுது பயிறு விதைத்திருந்தனர். விளைந்திருந்த அந்தப் பயிற்றக் கொடியை பசு ஒன்று வயலில் புகுந்து மேய்ந்துவிட்டது. பசு வயலில் இருந்து பயிற்றக் கொடியை மேய்ந்ததினால் அப்பசுவின் உரிமையாளரை, ஊர் மன்றம் ஒன்று கூடி பசு மேய்த்தவனின் கண்ணை இரக்கம் இல்லாமல் தோண்டி விட்டனர். அக்கண்ணைத் தோண்டியவர் முதுகோசர் இனத்தைச் சார்ந்தவர். கண் தோண்டப்பட்ட வரும் வாய்மொழி என்னும் அடைமொழியுடன் அழைக்கப்பட்ட மற்றொரு கோசர் குடியில் பிறந்தவரே. கண் தோண்டப்பட்டவனின் மகள் அன்னிமிஞிலி என்பவாள். தன் தந்தைக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக அவள் வருந்தினாள். அந்தச் செயலுக்குகாக வஞ்சினம் கொண்டு, உண்கலத்தில் உணவு உட்கொள்ளவில்லை. துவைத்த ஆடைகளை உடுத்தாமல் பழைய அழக்குத் துணிகளை உடுத்திக் கொண்டாள். இந்த நோன்புக் கோலத்துடன் திதியன் என்னும் அரசனிடம் முறையிட்டு, அச்செயலுக்குத் தீர்ப்பு கிடைக்கும் வரை இந்நோன்பு மேற்கொள்வேன் என்கிறாள். இதை கேள்விப்பட்ட திதியன் கண்ணைத் தோண்டியவர்களைத் தன் பெரும் படையுடன் போரிட்டு முதுகோசர்களை வெற்றிப் பெற்றான் என்ற செய்தி அன்னிமிஞிலிக்குச் சென்றதும் அவள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தாள். திதியன் என்ற அரசன் அன்னிமிஞிலியின் தந்தைக்கு நடந்த அந்நிகழ்விற்கு கருணையோடு இருந்ததை அகநானூறு 262 ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.

மேலும்,

”பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுஉண் பறவை பேதுஉறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்”5

பொருள் வயிற் பிரிந்த தலைவன் குறித்த காலத்தில் வருவதாகச் சொன்ன கார்காலம் வந்தது. அக்காலத்தில் தலைவன் வருவதாகச் சொன்ன காலத்தில் முல்லை நிலத்தில் தேரில் வரும் தலைவன். முல்லைக் காட்டில் வரும் வழியில் உள்ள சோலையில் பூத்த பூக்களில் ஆண் வண்டும் பெண் வண்டும் சேர்ந்து தேன் உண்ணும் வேளையில் தன் தேரில் கட்டப்பட்ட மணிகளில் ஒலியில் பிரிந்து விடுமோ என அஞ்சி தலைவன் தேரின் மணியில் உள்ள நாக்குகளை இழுத்துக் கட்டியவாறு ஓசை எழுப்பாமல் வருகின்றான். தலைவன் அஃறிணை உயிரியான வண்டுகள் மீது கருணையோடு செயல்பட்ட விதத்தைச் சங்கப் பாடல்கள் வெளிப்படுத்துகிறது. சங்கச் சான்றோர்கள் மனிதர்கள் மீதும் அஃறிணை உயிர்கள் மீதும் கருணையோடும் மனித நேயத்தோடும் செயல்பட்ட பாங்கினைச் சங்கப் பாடல்கள் அழகுற வெளிப்படுத்துகிறது.

அன்பு

சங்க இலக்கியத்தில் காதல் (அகம்) என்பது களவு (காதல்) மற்றும் கற்பு (திருமணம்) வாழ்க்கையை ஐந்திணை நிலப்பரப்புகளுடன் இணைத்து, உணர்ச்சிகளின் ஆழத்தை, இயற்கை எழிலுடன் பாடும் இலக்கிய மரபினைக் கொண்டது. ஐந்திணை அமைப்பினைக் கொண்ட சங்கப் பாடல்கள் தலைவன் தலைவியின் காதல் வாழ்வை மையமாகக் கொண்டு பாடல்கள் இயற்றப்பட்டன. ஐந்திணை அமைப்பில் காதலின் மிக நுட்பமான உணர்ச்சியாக மட்டும் பார்க்காமல் அது மனித வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாகவும், இயற்கையோடு இயந்த வாழ்வியலாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. நற்றிணையில் பொருள் தேடச் செல்லும் தலைவனின் அறிவு இடைவழியில் அங்கும் இங்கும் அலைப் பாய்கிறது. அதாவது தலைவனின் அறிவு பொருள் தேடிச் சென்று வறுமை நிலையைப் போக்க எண்ணுகிறது. ஆனால் அவனின் மனத்து தலைவியை நினைத்து வாடுகிறது. பொருள் ஈட்டாமல் திரும்புதல் கேளிக்கூத்து என்று எண்ணம் இன்னொருபுறம் தலைவனின் இப்படி உறுதி இல்லாமல் என் அறிவு ஊசலாடுகிறது என்பதை யானையைக் கட்டி வைத்திருக்கும் தேய்த்து போன கயிறு போல என் உயிர் அறுந்து உடல் மாய்ந்து விடும் போல இருக்கிறது என்று தலைவன் தலைவியின் மீது வைத்திருக்கும் தூய்மையான அன்பினை அழகுறச் சித்தரிக்கிறது.

மேலும்

”அணிற்பல அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர் நின் னெஞ்சுநேர் பவளே.”6

குறுந்தொகையில் தலைவியை விட்டுப் பரத்தையோடு இருந்த தலைவன் மீண்டும் தன் இல்லத்திற்கு வந்து தன் மனைவியோடு வாழ்கிறான். தன் கணவன் பரத்தையிடமிருந்து விலகி வீட்டிற்கு வந்ததால், பெருமகிழ்ச்சியுற்ற மனைவி, இப்பிறவி மட்டுமல்லாமல் மறுபிறவியிலும் அவனே தனக்குக் கணவனாகவும் தானே அவன் விரும்பும் மனைவியாகவும் இருக்க வேண்டும் என்று தன் விருப்பத்தைத் தன் கணவனிடம் கூறுகிறாள். அதாவது தலைவியனாவள் தன் தலைவன் மீது பேரன்பின் காரணமாக இப்பிறவி மட்டுமல்லாமல் மறுபிறவியானுலும் நீயே என் கணவன் என்று எடுத்துரைக்கும் விதம் பேரன்பின் வெளிபாடே அகப்பண்பாட்டினை வெளிப்படுகிறது.

வானத்தில் ஊர்ந்து சென்ற சூரியன் நெருப்புக் கட்டியாகிக் கிடப்பது போல இலை இல்லாமல் செந்நிறப் பூக்களாகவே பூத்துக் கிடந்தது. அது விழாக் கொண்டாடும் மகளிர் ஆயக்கூட்டம் சர – விளக்குகளை ஏந்திச் செல்வது போல இருந்தது. குளங்கள் நீர் இல்லாமல் பயனற்றுக் கிடந்தன. அவர் என்னையும் தன்னுடன் கூட்டிச் சென்றிருந்தால் வழியில் காட்டாறு பாயும் மணலில் புதுப்பூ விரிந்து கிடப்பது போன்ற மணலில், மரக்கிளை தாழ்ந்திருக்கும் மணலில் நான் கட்டிப் பிடித்து இருக்கும் இன்பத்தை அவள் பெற்றிருக்கலாம். (அகம் பா.11) அதாவது தலைவன் தலைவியை விட்டு பொருள் வயிற் பிரிந்துச் செல்கின்றான். அதனை தங்கிக் கொள்ள முடியாமல் தலைவி தலைவன் மீது பேரன்பு (காதல்) கொள்கிறான் என்பது தலைவியின் அகப்பண்பாடு வெளிப்படுகிறது.

தர்மம்

தர்மம் என்பது அறம், அறன், அறநெறி எனப் பல சொற்களால் குறிப்பிடப்பட்டு, வாழ்வியல் ஒழுக்கம், கொடை, நீதி மற்றும் வீரத்தை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் தர்மம் என்பது சமூக நீதி மற்றும் தனிமனித ஒழுக்கத்தின் ஒரு பகுதியாகப் பேசப்படுகிறது. அகப்பாடல்களில் தர்மம் என்பது அறநெறி சார்ந்த காதலோடு சமூகக் கட்டுப்பாடுகள், பெண்ணின் கற்பு, தலைவனின் நேர்மை மற்றும் நற்பண்புகளை வலியுறுத்தும் அகப்பொருள் விழுமியங்களாகப் பேசப்படுகிறது.

”நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே
சான்றோர் செல்வ மென்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வமென்பதுவே.”7

பரத்தையிடம் சென்று வந்த தலைவனிடம் ஊடல் கொண்டிருந்த தலைவியின் கோபத்தைக் தணிக்கக் கருதி தலைவன் தோழியிடம் செல்கின்றான். அப்போது தலைவனுக்குத் தோழி உலகியல் நீதியைச் (தர்மம்) சுட்டிக்காட்டி நெறிப்படுத்துகின்றார். அதாவது சிறப்பு மிக்க ஊர்தியில் பகட்டாகச் செல்வதோ செல்வம் ஆகாது. இவையெல்லாம் உன் முன்னோர்களின் செய்வினைப் பயனாகக் கிடைத்தவை. நம்மோடு சேர்ந்திருப்பவர் படும் துன்பத்துக்கு அஞ்சி தன் சான்றோர் மதிக்கும் வகையில் செல்வத்தையும் நன்மதிப்பையையும் சேர்த்து வைப்பது தான் நற்பண்பின் அடையாளம் என்று தோழி தலைவனுக்குத் தலைவியின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து தலைவிக்கு நேர்மையாக நற்குணத்தோடு நடந்துக் கொள்வது மிகவும் முக்கியமானப் பண்பாடாகும் என்பதைத் தோழி எடுத்துரைக்கிறாள்.

அறம்

சங்க இலக்கியத்தில் அறம் என்பது வாழ்வியல் நெறியாகவும், மனித உறவுகளின் மையமாகவும் இயற்கையோடு இணைந்த அறமாகவும் போற்றப்பட்டது. உலகமே பரிசாகக் கிடைத்தாலும் வழிதரும் செயல்களைச் செய்ய மறுத்தல் இயற்கையை மதித்தல், உண்மையைப் பேசுதல் போன்றவை சங்க மக்களின் முக்கிய அறங்களாக இருந்தன. அதாவது மனிதன் இயற்கை மீதும் அஃறிணை உயிர்கள் மீதும் அறத்தோடு செயல்பட்டு வந்துள்ளான். அதோடு இயற்கை மனிதனைப் பாதுகாக்கும் அறம் சார்ந்த செயல்பாடு போற்றத்தக்கதாக உள்ளன.

”அறம் சாலியரோ! அறம் சாலியரோ!
வறன் உண்டாயினும் அறம் சாலியரோ!
வாள் வனப்பு உற்ற அருவிக்
கோள்வல் என் ஐயை மறைத்த குன்றே!.”8

தலைவன் தலைவியுடன் உடன்போக்கு மேற்கொள்கிறான். அப்போது அவர்கள் கடந்து செல்லும் குன்றைப் பார்த்துத் தலைவி, ஒளி பொருந்திய வானைப் போல மலையிலிருந்து ஓடிவரும் அருவியிடம் நீ கொண்ட கொள்கையைக் கைவிடாத என் தலைவனாகிய காதலனைத் துரத்தி வந்த என் உடன் பிறந்தாருக்கு அகப்படாமல் எங்களை மறைத்துக் காப்பாற்றினாய். ஆதலால் நீ உலகமே வறட்சியில் வாடினாலும் நீர் வளம் குறையாத அறம் நிறைந்து வாழ்க என்று தலைவி மலையருவிக்கு நன்றி தெரிவிக்கும் காட்சி இப்பாடலில் வெளிப்படுகிறது. மேலும் குறுந்தொகை 262 ஆம் பாடலில் தலைவன் தலைவியைக் கூட்டிக் கொண்டு உடன்போக்கு மேற்கொள்ள தோழி வழிகாட்டுகிறாள். அதாவது அன்னை தலைவியை வீட்டுக்காவல் வைத்து அவளின் காதலைத் தடுக்கும் முயற்சியே மேற்கொள்ளகிறாள். அதனை அறிந்து கொண்ட தோழி ஊரே பழிப் பேசுகிறது. சேரி முழுவதும் சத்தமாக இருக்கிறது என்று சொல்லி, அறமே இல்லாத உன்னை எப்போதும் வீட்டிற்குள்ளேயே வைத்துத் துன்புறுத்துகிறாள். அவள் தன் வீட்டிலே இருக்கட்டும். நீ உன் தலைவனுடன் வெகுதொலைவில் உள்ள மலை நாட்டுக்குச் செல். அங்கு நெல்லிக்காயைத் தின்றுவிட்டு, உன் பற்கள் மின்னும்படியாக ஒரு நீரைப் பருகலாம். அவ்வளவு கடினமான பாலை நிலத்தில் நீ சென்று தலைவனோடு நல்லதோரு இல்வாழ்க்கை மேற்கொண்டு நல்லறம் பெருவாயாக என்று தோழி தலைவியிடம் எடுத்துரைக்கிறாள்.

நற்றிணை 355 ஆம் பாடலில் தலைமகள் தலைவனைப் பிரிந்து வருத்தியிருக்கின்றாள். இதனைக் கண்ட தோழி தலைவனுக்கு வாழ்வியல் அறத்தைச் சுட்டிக் காட்டுக்கிறாள். அதாவது

”முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்”9

முன்னோர்கள் ஒரு பழக்கம் வைத்துள்ளனர். தமக்கு நெருக்கமான நண்பர்கள் நஞ்சையே பரிசாகக் கொடுத்தாலும் முக மலர்ச்சியோடு அதனைப் பருகும் மிக்க பண்பாடு உடையவர்கள். அதுப்போல என் தோழி உன்னைத் தவிர வேறு யாரையும் அறியாதவள். உன்னுடன் கூடி வாழ்வதில் உனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கூட அவளது நிலையை எண்ணி நீ அவளுக்காக அருள் புரிய வேண்டும். அதாவது நட்பிற்காக நஞ்சையும் அருந்தும் பண்பாடு உடையவர்கள் தமிழர்கள். அந்தப் பண்பாட்டின் அடிப்படையில் தலைவியின் அன்பை ஏற்று அவளை விரைவில் திருமணம் செய்துக் கொள்வாயாக என்று தனிமனித அறத்தைத் தோழி தலைவனுக்கு எடுத்துரைக்கும் சங்கப் பாடலைக் காணமுடிகிறது. அதனை வள்ளுவர்

”பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர்”10

எல்லோராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர் தமக்கு நெருக்கமானவர். நஞ்சையே தருகிறார் என அறிந்துக் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகும் குணம் கொண்டவராகத் திகழ்வர்கள் என்று எடுத்துரைக்கிறார்.

புறப்பண்பாடு

புறப்பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் வெளிப்படையாக நிகழும் வாழ்க்கை முறை, தனிமனித நடத்தைகள், ஒழுக்கம் மற்றும் பழக்க வழக்கங்களைக் குறிப்பது. இது உணவு, உடை, இருப்பிடம், கலை, மொழி, விழாக்கள், போர் நெறி, கொடை, போர் அறம் போன்ற கண்ணுக்குத் தெரிந்த அல்லது உணரக் கூடிய அம்சங்களை உள்ளடக்கியது எனலாம்.

அகப்பண்பாட்டின் வெளிப்பாடான இந்தப் புறப்பண்பாட்டுக் கூறுகள் காலமாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் அடைந்தன. ஆனால் சங்கக் காலத்தில் புறப்பண்பாடு என்பது தனிமனிதனின் செயல்களில் போர், கல்வி, அறம், கொடை மிக முக்கியமான விடயம் பொருள்களாகக் கருதப்படுகிறது. ஒரு சமூகத்தின் கலாச்சார அடையாளத்தை வெளிப்படுத்தும் முக்கியமானக் கூறுகளாகப் பண்பாடு அமைகின்றது எனலாம்.

கொடை

கொடை என்பது பொருள் இல்லாத வரியவர்களுக்குத் தகுந்த நேரத்தில் உதவுவதே உண்மையான கொடை எனலாம். கொடை என்பது இரக்க குணத்துடன் தேவை உடையோருக்குப் பணம், பொருள், உணவு போன்றவற்றைத் தன்னலமின்றி வழங்கும் உயர்ந்த பண்பாகும். சங்க இலக்கியத்தில் கொடை என்பது குறிப்பாகப் பாரி முல்லைக்குத் தேரையும், பேகன் மயிலுக்குப் போர்வையையும் கொடுத்தது போன்ற நிகழ்வுகள் காரணமில்லாமல் வழங்கும் “கொடை மடம்“ என்று புகழப்படுகின்றன. பத்துப்பாட்டில் கடையெழு வள்ளல்களை கொடைச் சிறப்பினை எடுத்துரைக்கிறது.

உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்குமே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேன் எனினே தப்பு நபலவே”11

உலகம் முழுவதையும் தன் குடைக்கீழ் ஆளும் மன்னனாக இருந்தாலும், காட்டில் இரவு பகல் பாரமால் வேட்டையாடும் வேடனாக இருந்தாலும் ஒரு நாளைக்கு அவர்கள் உண்ணும் உணவு ஒரு சிறிதளவு தான். அவர்கள் உடுத்தும் உடையும் இரண்டே தான். அப்படி இருக்கையில் ஒருவனிடம் அதிகமாச் செல்வம் இருந்தால், அதன் உண்மையான பயன் அதைத் தானே அனுபவிப்பதில்லை மாறாக வரியவர்களுக்குக் கொடுத்து உதவுவதில் தான் கொடைப் பண்பு உள்ளதை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் கொடையின் சிறப்பனை இப்பாடல் வழி எடுத்துரைக்கிறார்.

கல்வி

சங்கக் காலத்தில் தலைவனின் பிரிவு என்பது பலவகையில் நிகழ்ந்துள்ளது. அதில் தலைவன் புறப்பண்பாட்டில் கல்விக்காகத் தலைவியைப் பிரிந்து சென்ற நிகழ்வுகள் புற இலக்கியங்களில் வெளிப்படுகிறது. புறப்பண்பாடு தமிழரின் மிக முக்கிய அங்கமாகக் கல்வி விளங்கியதைச் சங்கப் பனுவல்கள் எடுத்துரைக்கின்றன.

உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம்திரியும்,
ஒரு குடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
“மூத்தோன் வருக“ என்னாது, அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.”12

பாண்டிய நெடுஞ்செழியன் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார். அதாவது கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்கு துன்பம் நேரும் போது உதவி செய்ய வேண்டும். அவ்வாறு பின்பற்றி நடப்பதற்கு தயங்கக் கூடாது. இப்படி கற்கும் ஒருவன் பெரிதும் நன்மையை அடைவான். ஒரு தாய் தன் வயிற்றில் பிறந்த பல குழந்தைகள் இருப்பின் யார் ஒருவன் கல்விக் கற்ற பிள்ளையே அவனை அதிகம் பிடிக்கும் என்ற தரவினையும் அரசக் குடியில் பிறந்த மூத்தவன் கல்விக் கற்கவில்லையெனில் அவனை அரசன் மதிக்கமாட்டான். கல்விக் கற்ற இளையவனையே மதிப்பான். அதன் விளைவு கல்விக் கற்றவன் சிறந்த அரசாட்சியை மேற்கொள்வான் என்பதே புலப்படுத்துகிறது. மேலும் சமூகத்தில் நிலவும் பிறப்பின் அடிப்படையில்யுள்ள நான்கு குலத்தாரில் கீழ்நிலையில் உள்ளவன் கல்விக் கற்றவன்யெனில் மேல்நிலையில் உள்ளவன் அவனிடம் அடக்கமாவன் என்ற முக்கிய விடயத்தைப் பாண்டிய நெடுஞ்செழியன் என்ற மன்னன் எடுத்துரைக்கும் விதம் போற்றத்தக்கது எனலாம். மேலும் கல்வி ஒருவனை பலநிலைகளில் மேம்படுத்தும் என்பது இப்பாடல் வழி வெளிப்படுகிறது.

நெடுஞ்செழியனைப் பற்றி ரா.பி.சேதுப்பிள்ளை ” தமிழ்நாட்டை அரசாண்ட மற்றொரு வீர மன்னன் நெடுஞ்செழியன். அவன் கருவிலே திருவுடையவன். அஞ்சாத நெஞ்சினன். செஞ்சொற் கவிஞன். இளமையிலே அவன் அரசாளும் உரிமை பெற்றான். இளமையை எளிமையாகக் கருதினர் மற்றைய இரு வேந்தரும் படைத்திறமற்ற சிறுவன் என்று ஏளனம் பேசினர். அதனை ஒற்றர் வாயிலாக அறிந்தான் செழியன். பெருஞ்சீற்றமுற்றான் மாற்றார் என் நாட்டைப் பழித்தனர். என்னையும் இழித்துரைத்தனர். சிறு மொழி பேசிய அவ்வரசரைச் சிதற அடிப்பேன், சிறை பிடிப்பேன். வெற்றி பெறுவேன். பெறேளாயின் என் குடிகள் என்னை இகழ்வ மாபெரும் புலவர்கள் என் நாட்டைப் பாடாதெழிக என்று வஞ்சினம் கூறினான். போர்க் கோலங் கொண்டு எழுந்தான்.”13

வீரம்

வீரம் என்பது அச்சமின்றித் துணிச்சலுடன் ஆபத்து மற்றும் சவால்களை எதிர்கொண்டு அறநெறி தவறாமல் வெற்றி காண முயலும் மன உறுதியாகும். இது வெறும் வன்முறையல்ல. தன் உயிரைப் பொருட்படுத்தாமல் நாடு, இனம் மற்றும் அறத்தைக் காக்கும் உயரிய பண்பாகும்.

தமிழர்களின் போர் அறம் மிகவும் முக்கிமானது. அதாவது எதிரி நாட்டினரைப் போர் வெற்றிப் பெற அவர்களின் போருக்குத் தயாராகத் தூதுவர்கள் அனுப்பி பின் போர் நிகழும். இது தமிழர் போர் அறமாகவே நம் முன்னோர்கள் கருதி வந்தனர் எனலாம். போரில் வெற்றிப் பெற வேண்டுமானால் எதிரியும் முழு பலத்தோடு போர் செய்து வெற்றி பெற்ற வரலாற்றை, நம் தமிழ்ச் சமூகம் இலக்கியங்களில் காணலாம். போரில் வீர மரணம் அடைந்து வீரர்களுக்கு நடுகல் வழிபாடு மிகவும் முக்கியமானது. புறநானூற்றில்

”சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டு உளனோ? என வினவுதி என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!”14

சிறிய வீட்டின் நல்ல தூணைப் பிடித்துக் கொண்டு, உன் மகன் எங்கே உள்ளான் என்று ஒரு பெண் கேட்கிறாள். என் மகன் எங்கே உள்ளான் என்பதை நான் அறியேன். புலி தங்கிச் சென்ற குகையைப் போல் அவனைப் பெற்ற வயிறு இது. அவன் போர்க்களத்தில் தோன்றுவான் என்ற ஒரு வீரத்தாயின் உரைக்கும் விதம் போற்றத்தக்கது எனலாம். ”அது கேட்ட வீரத்தாய் முகமலர்ந்தாள் ஊக்கமுற்று எழுந்தாள். சிறிது தூரத்தில் ஊமைத்துரை குருதியாடிக் கிடக்கக் கண்டாள். தாய்மார் எல்லோரும் சேர்ந்து அவனைத் தூக்கியெடுத்து ஒரு குடிசையில் கொண்டு சேர்த்தார்கள். இரவு முற்றும் கண்விழித்து மருந்து கொடுத்துப் பிழைக்க வைத்தார்கள். பொழுது விடிந்தது. வீரத்தாய் போர்க்களம் சென்றாள். தன் மைந்தன் – தியாக வீரன் – மடிந்து கிடக்கக் கண்டாள். பெருமிதம் கொண்டாள். தன்னுயிரின் மேல் வைத்த பாசம் துறந்து தலைவனுயிரைக் காப்பாற்ற விரும்பி பெற்ற தாயை அன்பில் அனுப்பிய மைந்தனது தியாகம் பெரிதோ? அன்றிப் பிள்ளையெனும் தன்னறிய பாசம் தவிர்த்து, அவனைப் போர்க்களத்தில் இறக்கவிட்டுத் தலைவனுயிரைக் காப்பாற்றிய தாயின் தியாகம் பெரிதோ என்று வியந்து வினவினர் வீரரெல்லாம்”15 இப்படி தமிழரின் வீரதீரச் செயல்களை நம் முன்னோர் சங்க இலக்கியங்களில் பதிவுச் செய்து வைத்துள்ளனர் என்பது புலனாகிறது.

போர்க்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட மைந்தர் செயல் கண்டு அவரைப் பெற்ற போதிலும் பெருமகிழ்வுற்ற வீரத் தாயார் பலர் தமிழ்நாட்டில் இருந்தனர். மேலும் புற இலக்கியங்களில் வீரம் பற்றிய குறிப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. அதில் போர் அறம், போர் நெறி போன்ற தமிழிரின் மிக முக்கியமானப் பண்பாடாகவே கருதலாம். இன்றைய நவீனக் காலத்தில் நிகழும் போர்கள் அனைத்தும் போர் நெறி, போர் அறத்தைப் பின்பற்றி நிகழ்வதில்லையென்று கூறலாம். எந்தவொரு முன் அறிவிப்புமில்லாமல் போர் நிகழ்ந்த பல உயிர்கள் மண்ணோடு மண்ணவதை, நம் தினம் தினம் செய்திகள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதைப் பார்க்கம் போது தமிழர்களின் போர் அறம் மிக முக்கியமான பண்பாட்டு நெறியைக் கொண்டுள்ளது என்பதைப் புற இலக்கியங்கள் வழி காணலாம்.

முடிவுரை

இன்றைய உலகமயமாக்கல், மேலைநாட்டு கலாச்சார ஊடுருவல், தொடர்பாடல் வளர்ச்சி, நீண்ட பயணங்களின் தோற்றம் போன்ற பல்வேறு அம்சங்கள் தமிழர் பண்பாட்டில் சவால்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றன.

சங்கக் காலத் திருமண விருந்தில் உழுந்த வடையுன் கூட்டுப்பொரியல், நல்ல நெல் சோறு படைத்து வரும் விருந்தினரை உபசரிக்கும் வழக்கம் மரபு ரீதியாக பழக்கத்தில் உள்ளதை எடுத்துரைக்கின்றது.

உலகமயமாக்கல் காரணமாக பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்றோடு ஒன்று கலக்கின்றன. இதனால் தமிழர்களின் தனித்துவமான உணவு, உடை போன்ற மிக முக்கியமான பண்பாடுகள் மறைந்து போகும் அபாயம் உள்ளது.

மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் இளைஞர்கள் தங்கள் பாரம்பரிய உடைகள், உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை கைவிட்டு, மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றத் தொடங்குகின்றனர்.

போர்க்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட மைந்தர் செயல் கண்டு அவரைப் பெற்ற போதிலும் பெருமகிழ்வுற்ற வீரத் தாயார் பலர் தமிழ்நாட்டில் இருந்தனர். மேலும் புற இலக்கியங்களில் வீரம் பற்றிய குறிப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. அதில் போர் அறம், போர் நெறி போன்ற தமிழிரின் மிக முக்கியமானப் பண்பாடாகவே கருதலாம்.

நம்மோடு சேர்ந்திருப்பவர் படும் துன்பத்துக்கு அஞ்சி தன் சான்றோர் மதிக்கும் வகையில் செல்வத்தையும் நன்மதிப்பையையும் சேர்த்து வைப்பது தான் நற்பண்பின் அடையாளம் என்று தோழி தலைவனுக்குத் தலைவியின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து தலைவிக்கு நேர்மையாக நற்குணத்தோடு நடந்துக் கொள்வது மிகவும் முக்கியமானப் பண்பாடாகும் என்பதைத் தோழி எடுத்துரைக்கிறாள்.

சங்கச் சான்றோர்கள் மனிதர்கள் மீதும் அஃறிணை உயிர்கள் மீதும் கருணையோடும் மனித நேயத்தோடும் செயல்பட்ட பாங்கினைச் சங்கப் பாடல்கள் அழகுற வெளிப்படுத்துகிறது.

அதன் அடிப்படையில் தமிழர்களின் ஆடை அணிகலன்கள், இயற்கை வைத்திய முறைகள், உணவு முறை, விருந்தோம்பல் போன்ற அனைத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவை தமிழர் பண்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள சவாலாக உள்ளன. உதாரணமாக பாரம்பரிய பட்டு மற்றும் பருத்தி ஆடைகளுக்குப் பதிலாக நவீன ஆடைகளை அணியும் போக்கு அதிகரித்து வருகிறது. சித்த மருத்துவத்திற்குப் பதிலாக ஆங்கில மருத்துவத்தை மக்கள் நாடும் போக்கு நிலவுகிறது. பாரம்பரிய உணவுகளுக்குப் பதிலாக துரித உணவுகளை உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது எனலாம்.

அடிக்குறிப்புகள்

தொல். பொருள்.நூ. 237

குறள்.90

பதிற்று.12.16-23

அகம்.பா.86

அகம் பா.4

குறுந்தொகை. பா.49

நற்றிணை பா.210

ஐங்குறுநூறு.பா.312

நற்றிணை பா.355

குறள்.580

புறம்.189

புறம். பாடல். 183

தமிழர் வீரம், ரா.பி.சேதுப்பிள்ளை, ப.22-28

புறம். பா.86

தமிழர் வீரம், ரா.பி.சேதுப்பிள்ளை, ப. 74-75

ராஜ்கௌதமன், தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு (சங்க காலம்).

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* ஓவியம் - கூகுள் AI 


பதிவுகள் (Pathivukal)

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்