எம் தலைமுறையைப் பொறுத்தவரை 1983 முக்கியமானதோர் ஆண்டு. குறிப்பாக ஜூலையில் நடைபெற்ற தமிழர்களுக்கெதிரான கொடிய இனக் கலவரம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு அழிக்க முடியாத களங்கம். இக்கலவரம் தமிழர்களை உலகின் நானா பக்கங்களுக்கும் அகதிகளாக ஓட வைத்தது. இக்கலவரம் தமிழர்களின் ஆயுதரீதியிலான விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது. இக்கலவரம் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் குடித்தது. இக்கலவரம் தமிழர்களின் உடமைகளைச் சூறையாடியது. பல்வகை வன்முறைகளையும் தமிழர்கள் மேல் ஏவிவிட்டது.

இக்கலவரம் ஊதிப்பெருப்பிக்கப்பட்டதுக்கு முக்கிய காரணம் அன்று ஆட்சியிலிருந்த அரசியலில் குள்ளநரி என வர்ணிக்கப்படும் ஜே.ஆரின் அணுகுமுறை. முன்பு பண்டா& செல்வா ஒப்பந்தத்தைக் கிழிப்பதற்காகக் கண்டிக்குப் பாத யாத்திரை சென்றவர் சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட 'த(ர்)ம்மிஷ்ட்ட' ஜனாதிபதியாகியிருந்தார். அவரது அமைச்சர்களான சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க போன்றவர்கள் அவரது ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீதான இனவாதச் செயற்பாடுகளை ஊக்குவித்தனர்.

யாழ் நூலகம் எரிக்கப்பட்டது ஜே.ஆரின் ஆட்சியில்தான். பயங்கரவாதத்தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழர்கள் மேல் பயங்கர வன்முறை ஏவிவிடப்பட்டது ஜே.ஆரின் ஆட்சியில்தான். 77, 81, 83 என்று தமிழர்கள் மீது இனக்கலவரங்கள் ஏவிவிடப்பட்டதும் ஜே.ஆரின் ஆட்சியில்தான். இவ்விதமான இனக்கலவரங்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றை அடக்குவதற்குப் பதில் 'போரென்றால் போர். சமாதானமென்றால் சமாதானம்' என்று அவற்றை ஊதிப்பெரிதாக்கியவரும் ஜே.ஆர்.தான்.

தமிழர்கள் மேல் மட்டுமல்லாமல் தென்னிலங்கையிலும் தன் அரசியல் எதிரிகள் மீதும் தனது அடக்குமுறைகளை ஏவிவிட்டவர் ஜே.ஆர். சிறிமா அம்மையாரின் குடியுரிமையைப் பறித்தார். ஜே.வி.பி போன்ற இடதுசாரிக்கட்சிகளை 83 இனக்கலவரத்துக்குக் காரணமென்று பொய்க்காரணத்தை முன்வைத்துத் தடை செய்தார். ஜே.ஆரின் அணுகுமுறைதான் இந்தியாவையும் இலங்கை விவகாரத்தில் தலையிட வைத்து, உள்நாட்டுப் பிரச்சினையை உபகண்டப் பிரச்சினையாக, சர்வதேசப் பிரச்சினையாக உருவெடுக்க வைத்தது. இனக்கலவரக் காலத்தில் சிறைச்சாலையினுள் தமிழ் அரசியற் கைதிகளைக் கொன்று குவித்ததும் ஜே.ஆரின் அரசின் காலகட்டத்தில்தான். இன்று இலங்கை எதிர்கொண்டுள்ள நிலைமைக்கெல்லாம் அடிப்படை அன்று ஜே.ஆர் விதைத்த இனவாத விதைதான். அதுதான் வளர்ந்து , கிளைவிட்டு, நாட்டை வங்குறோத்தாக்கியுள்ளது.

இன்று கறுப்பு ஜூலை 83யினை நினைவு கூரும் நாள். நாடெங்கும் தமிழர்கள் மேல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட நாள். அந்நாள் அடைந்த அனுபவங்கள், கொழும்பு நகரெங்கும் உயிரைக் காப்பதற்காக ஓடிக்கொண்டிருந்த தமிழர்களின் தோற்றங்கள் பற்றிய நினைவுகள் பெருக்கெடுக்கின்றன. மறக்க முடியாத அனுபவங்கள். மீண்டுமொரு தடவை அத்தகைய வன்முறைகள் தமிழர்கள் மற்றும் சிறுபான்மை மக்கள்மீது ஏவிவிடப்படாதிருப்பதற்காக இலங்கையின் அனைத்து மக்களும் இக்கரிநாளை , இக்கரிநாளையடுத்து நாட்டில் ஏற்பட்ட சம்பவங்களை நினைவு கூர வேண்டும். நினைவு கூர்வோம்.

அந்த அரசியலின் குள்ளநரியின் மருமகனான புதிய குள்ளநரி ரணில் இன்று மக்களின் ஆணையற்று, குள்ளத்தனமாக நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகியுள்ளார். மாமனின் வழியில் இந்த நரியும் நாட்டு மக்கள்மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டு, இனவாதம் பேசி மக்களைப் பிரித்து, நாட்டைப் படுகுழிக்குள் மீண்டுமொரு தடவை தள்ளவுள்ளதா என்னும் ஐயத்தை அவரது உடனடி நடவடிக்கைகள் ஏற்படுத்துகின்றன. மனித உரிமைகளுக்காகப் போராடும் அனைவரும் இவ்விடயத்தில் விழிப்புடனிருந்து தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து அவ்விதமானதொரு நிலை ஏற்படாமல் இந்த ரணிலென்னும் முரட்டுக்குதிரைக்குக் கடிவாளமிடுதல் அவசியம்.

ஜூலை 83யினை நினைத்ததும் தமிழ் மக்கள் அடைந்த துயரங்களுடன் , அவற்றுக்கெல்லாம் பிரதான காரணமாக அக்காலகட்டத்தில் விளங்கிய ஜே.ஆரின் நினைவுகளும் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை. ஜே.ஆர் என்னும் தனி மனிதன் இச்சின்னஞ்சிறு தீவுக்கு ஏற்படுத்திய அழிவுகள் பற்றி இன்னும் முறையான ஆய்வுகள் ஆற்றப்படவில்லை. ஆற்றப்பட வேண்டிய தருணமிது. ஆற்றுவோம். அனைத்து மக்களும், ஒன்றிணைந்து சம உரிமையும் , மகிழ்ச்சியும் நிறைந்த பாதையில் நடைபோடுவதற்கு மிகவும் அவசியமது. அவரது அணுகுமுறையால் பாதிக்கப்பட்ட அனைவரதும் நீதிக்கான போராட்டக் குரல் அதுவாகத்தானிருக்க முடியும்.