கட்டுரையாளர்: முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம்.


மாவட்டம் – திருப்பத்தூர்
வட்டம் - திருப்பத்தூர்
ஊர் - (காக்கங்கரை) ஆவல்நாயக்கன் பட்டி
எழுத்து - தமிழி
கல்வெட்டு கண்டறிந்த நாள் - 07.07. 2026
கல்வெட்டு அளவு – 4 அடி அகலம் 5 அடி உயரம்

திருப்பத்தூர் 07.07.2026 அன்று திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.சந்திரன், கல்வெட்டறிஞர் விழுப்புரம் சி.வீரராகவன், ஆய்வாளர் திரு. உதயமூர்த்தி ஆகியோர் மேற்கொண்ட களாய்வின்போது திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை அருகில் உள்ள ஆவல் நாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் பிற்காலச் சோழ மன்னன் மூன்றாம் இராஜ ராஜனின் (பொ.ஆ.1223) 7-வது ஆட்சியாண்டு கல்வெட்டைக் கண்டுபிடித்தனர். இது தமிழ் ஆய்வில் புதிய வரவாகும். கல்வெட்டறிஞர் விழுப்புரம் சி.வீரராகவன் அவர்களால் படிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு கந்திலி தி.மு.க ஒன்றிய செயலாளர் திரு k.முருகேசன் மற்றும் வேலாயுதம், சந்திரன், ரகுநாத், செல்வம் முதலான ஊர்மக்கள் முன்னிலையில் ஆவணப்படுத்தப்பட்டது.

கல்வீடு அமைப்பில் கிழக்குப் பார்த்தவாறு அமைந்துள்ள மூன்று நடுகற்கள் 4 அடி அகலமும் 5 அடி உயரமும் கொண்ட பலகைக்கற்களால் மூன்று புறமும் (கிழக்குப் பர்த்தவாறு) நடப்பட்டுள்ளன. மேற்புறத்தில் 5 அடி சுற்றளவுள்ள பலகைக்கல் கொண்டு மூடப்பட்டுள்ளது. இந்தக் கல்வீட்டிற்கு எதிரே 3 அடி உயரமுள்ள குத்துக்கல் ஒன்றும் நடப்பட்டுள்ளது. கல்வீட்டைச் சுற்றிலும் 20 - க்கு 20 அளவிற்கு 5 அடி உயரத்திற்கு சுற்றுச் சுவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக கட்டப்பட்டுள்ளது. சுற்றிலும் வெப்பாலை மரங்கள் பல உள்ளன.

கல்வீட்டின் இடதுபுறம் உள்ள முதல் நடுகல்லின் மேற்பகுதியில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை எட்டு வரிகளில் இடம்பெற்றுள்ளன. பிற்காலச் சோழ மன்னன் மூன்றாம் இராஜ ராஜனின் 7- வது ஆட்சியாண்டில் (பொ.ஆ.1223) நடப்பட்ட நடுகல் என்று அதில் எழுதப்பட்டுள்ளது.

கல்வெட்டில் உள்ள எழுத்துகளின் தற்கால தமிழ் எழுத்து வடிவம்

சுவஸ்ஸ்ரீ கம்பிளி நாயக நல்லூர் ப
இட்டி கற்கரை ஜெயதாம்ப நாட்டி வெம்பு துயர்
விளங்கும் ஸ்ரீ திற்ற பிரிதிகாலை நாகத்து வீற்றிருந்தா
ளை(ய்) கோப்பரகேசரி பன்மர் ஸ்ரீ உடையார் இரா
ஜ ராஜ தேவர்க்கு யாண்டு ஏழாவது தகடு நாட்டு
எயி(ல்) நாட்டு கலிஞ்சிறைக்கும் வநபள்ளி இரங்கூர் நற்
வூ(ரு)க்கு போளையன் சோலி இவன் மணவாட்டி கு
ருமன் மகள் பூவுக்குள் தீப்பாஞ்சாள்.

கல்வெட்டு விளக்கம்

‘கோப்பரகேசரி பன்மர் ஸ்ரீ உடையார் மூன்றாம் இராஜ இராஜனின் 7 - வது ஆட்சியாண்டில் (பொ.ஆ.1223) தகடூரின் அருகிலுள்ள எயின்(ல்) நாட்டு கலிஞ்சிறைக்கும் வநபள்ளி இரங்கூர் என்ற நல்ல ஊரைச் சேர்ந்த போளையன் சோலி என்பவனின் மனைவியான குறும்பர் இனப்பெண் திரு கம்பிளி நாயக்க நல்லூர்ப் பட்டிக்கு அருகிலுள்ள காக்கங்கரையில் கடுஞ்சினத்துடன் தீப்பாய்ந்தாள். பெரும்மனத்துயரைத் தன்னுள் தாங்கியபடி தீப்பாய்ந்த அவளின் ரூபம் ஜெகதாம்பாவைப் (ஆதி சக்தியான) போல் வானளவிற்கு அக்கினிப் பிழம்பாய்க் காட்சியளித்தது. இது கல்வெட்டில் உள்ள வாசகமாகும்.

கல்வெட்டுச் செய்தி தரும் வரலாறு

மேற்கண்ட கல்வெட்டு வாசகங்களில் இருந்து சில வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த கல்வெட்டு பொ.ஆ.1223 அதாவது மூன்றாம் இராஜ ராஜனின் 7- வது ஆட்சியாண்டில் எழுதப்பட்டது. அப்போது இந்தப் பகுதியில் நாயக்கர்களின் வருகை அல்லது செல்வாக்குத் தொடங்க ஆரம்பமாகியுள்ளது. அதைக் கல்வெட்டின் தொடக்கத்தில் உள்ள ‘கம்பிளி நாயக்க நல்லூர் பட்டி’ என்று ஊர்ப்பெயரில் இடம்பெற்றுள்ள குறிப்பு நன்கு புலப்படுத்துகிறது. அப்பெயர் தற்போது ஆவல் நாயக்கன்பட்டி என்று சிறிய அளவிலான மாற்றத்துடன் வழங்கப்பட்டு வருகிறது.

அதற்கடுத்ததாக ‘கற்கரை’ என்ற அந்த ஊரின் அருகிலிருந்த இன்னொரு ஊரைப் பற்றிய குறிப்பும் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. அந்த ஊர் தற்போது காக்கங்கரை என்றழைக்கப்படுகிறது. அதாவது, நீர் நிலையை ஒட்டிய பகுதியில் கல்லால் உருவாக்கப்பட்ட கரை. கற்கரை என்று தொடக்கத்தில் அழைக்கப்பட்டுள்ள அது பின்னர் மக்களைக் ‘காக்கும்கரை’ என்று வழங்கப்பட்டுள்ளது. அதன் திரிந்த வடிவமே இன்றைய காக்கங்கரை என்பதாகும். தற்போது திருப்பத்தூரின் மேற்கில் அமைந்துள்ள அவ்வூர் அப்போது தகடூரை அடுத்திருந்த எயின் நாட்டின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.

பொதுவாக மன்னனின் பெயரைக் கொண்டுதான் கல்வெட்டின் வாசகம் எழுதத் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்தக் கல்வெட்டில் இறந்து போன பெண்ணின் ஊர்ப் பெயரில் தொடங்கியுள்ளதுடன் அவளது இறப்பு ‘ஜெகந்தாம்பாவின் (ஆதிசக்தியின்) வடிவத்தைப் போல் தீப்பிழம்பாக இருந்தது’ என்ற செய்தியை அடுத்தே மன்னனைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. தன் கணவனின் இறப்பிற்குப் பின்னர் தீயில் இறங்கினாள் அப்பெண் என்று கூறப்பட்டிருப்பதால் அதைக் கணவனுடன் உடன்கட்டை ஏறிய ஒரு நிகழ்வாகக் கருதிக் கடந்துவிட முடியாது. ஒரு வேளை அப்படி நிகழ்ந்திருந்தால் அவளது இறப்பிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படிருக்காது. இறந்த பெண் வீரனின் மனைவியான ‘குறும்பன் மகள்’ என்றும் அவள் ‘வெம்பு துயருடன்’ இருந்தாள் என்றும், தீயில் எரிந்த அவள் உருவம் ‘ஜெகந்தாம்பாவைப் போல்’ வானில் காட்சியளித்தது என்றும் குறிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இந்தக் குறிப்புகள் அவளது மரணத்திற்கான காரணம் கணவனின் மரணத்தைத் தாண்டிய வேறு ஏதோ ஒன்றிருப்பதை உணர்த்துகிறது.

ஜெகதாம்பா (Jagadamba) என்பது ஓர் இந்து தெய்வத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு அடைமொழியாகும். இது துர்கைக்கும், லட்சுமிக்கும் பயன்படுத்தப்படுகிறது. துளசிதாசர் எழுதிய இராமாயணத்தில் ஒன்றான ராமசரிதமானஸில் "இலங்கையின் அரசரே, நீங்கள் பெருமையினாலோ அல்லது காமத்தினாலோ அரியின் மனைவியான ஜெகதம்பாவை (உலகின் தாய்) கடத்திச் சென்றீர்கள் என்று அங்கதன் இராவணனிடம் கேட்பதாக இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் மத்தியப் பிரதேசத்திலுள்ள கஜூராஹோவில் ‘தேவி ஜெகதாம்பா’ என்ற பெயரில் பார்வதி தேவிக்கான கோவில் ஒன்று உள்ளது. அதுபோல் மகாராட்டிராவின் நாக்பூரிலுள்ள ‘சிறீ மகாலட்சுமி ஜெகதாம்பா மந்திர் கோரடி’ என்ற பெயரில் லட்சுமி தேவிக்கான ஒரு கோயிலும் உள்ளது. இன்னும் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஜெகதாம்பா என்ற பெயரிலான கோயில்கள் ஏராளமாக உள்ளன.

இந்தப் பின்னனியில் கல்வெட்டில் உள்ள குறிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்க, வீரனின் மனைவி தீயில் இறங்கியதைச் சீதை என்றும் தீப்பிழம்பாய் வானில் வியாபித்து நின்றதைப் பார்வதி தேவி என்றும் இவ்விரு தெய்வங்களுடனும் ஒப்பிட்டுக் குறிக்கப்பட்டுள்ளார் என்று அறியமுடிகிறது. அதாவது, மண்ணிலிருந்து பிறந்த சீதையைப் போல் பொறுமையின் வடிவமாகத் திகழ்ந்த அப்பெண் கோபத்தில் துர்க்கை போல் மாறியதைக் கல்வெட்டுச் செய்தி வெளிப்படுத்துகிறது எனலாம்.

திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி முதலான மாவட்டங்களில் வழிபடப்படும் பெண் தெய்வங்களுள் ஒன்று தீப்பாஞ்சம்மன். அத்தெய்வ வழிபாடு நிகழும் இடங்களில் அத்தெய்வத்தைப் பற்றிய கதைகள் சில சொல்லப்படுகின்றன. அக்கதைகளில் முரண்படும் இடங்கள் சில உள்ளன. எனினும் அக்கதையுடன் கல்வெட்டுச் செய்தியில் இடம்பெற்றுள்ள பெண்ணின் நிகழ்வு நெருக்கமான உறவைக் கொண்டுள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது. கல்வெட்டில் ‘தீப்பாஞ்சாள்’ என்று தீயில் இறந்துபோன பெண்ணைப் பற்றிய குறிப்பு பேச்சு வழக்கிலே பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று ‘தீப்பாஞ்சம்மன்’ என்ற அந்தத் தெய்வம் அதே பெயரிலேயே அழைக்கப்படுவது கவனிக்கத்தக்கது. இறந்த அந்தப் பெண்தான் ‘தீப்பாஞ்சம்மன்’ அம்மன் வழிபாட்டின் தொடக்கப் புள்ளியாக இருந்திருக்கிறது. அங்கிருந்தே பிற பகுதிகளுக்கு அந்த அம்மனின் வழிபாடு பரவி இருக்கிறது என்று கருத வேண்டியுள்ளது. இது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும்.

மற்ற இரு நடுகற்களில் உள்ள உருவங்கள்

கல் வீடு வடிவில் உள்ள மற்ற இரண்டு நடுகற்களில் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கிழக்குப் பார்த்தவாறு உள்ள இரண்டாவது நடுகல்லில் இறந்த வீரனும் அவனது மனைவியும் அமர்ந்த நிலையில் உள்ளவாறு செதுக்கப்பட்டுள்ளன. அவ்வுருவங்கள் நடுகல்லின் பாதிக்கு மேல் இரண்டடி உயர அளவிற்குச் செதுக்கப்பட்டுள்ளன. ஓர் ஆணின் வடிவம் பத்மாசனத்தில் அமர்ந்துள்ளவாறு உள்ளது. இரு கைகளும் மார்பை ஒட்டியபடி வணக்கம் செலுத்துவது போல் உள்ளது. கழுத்திலும் காதிலும் அணிகலன்கள் இடம்பெற்றுள்ளன.

பெண்ணின் இடதுகால் பத்மாசனத்தில் இருக்க, வலது கால் இடதுகால் மேல் ஊன்றியபடி மேல் நோக்கி உள்ளது. கால்முட்டியின் மீது கை ஊன்றி இருப்பது போல் உள்ளது. கையில் கண்ணாடி உள்ளது. கழுத்திலும் காதிலும் அணிகலன்கள் இடம்பெற்றுள்ளன. கால்களில் ஒற்றைக் காப்பு இடம்பெற்றுள்ளது.

அவ்விரு உருவங்களுக்கு இடப்பக்கம் மேற்புறத்தில் இரண்டு சிறிய உருவங்கள் நின்று கொண்டிருப்பது போல் உள்ளன. அவற்றின் உருவம் சரியாகப் புலப்படவில்லை. (என்றாலும் அவற்றை இரண்டு பணிப்பெண்கள் சாமரம் வீசுவது போல வடிக்கப்பட்டுள்ளதாகக் கருதலாம்.) அந்த இரு உருவங்களுக்குக் கீழ் மேலே பார்த்த வீரனின் வடிவத்தை ஒத்த வடிவிலான சிறிய உருவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

வலப்புறம் உள்ள மூன்றாவது நடுகல்லில் வீரன் இறந்ததை விளக்கும் விதமாக போர்க்களக் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. மூன்றடி உயரத்திற்கு உள்ள வீரன் தன் இடது காலை முன்னே நிலத்தில் ஊன்றியவாறும் வலது காலை பின்னால் நிலத்தில் ஊன்றியவாறும் நேராகப் பார்த்தவாறு இருப்பதாக செதுக்கப்பட்டுள்ளது. வீரனின் இடையில் பெரிய போர் வாள் ஒன்று வலதுபுறம் நிலத்தை நோக்கியபடி உள்ளது. கழுத்தில் சரபளி எனும் ஆபரணமும் வளர்ந்து தொங்கும் காதில் குண்டமும் இடம்பெற்றுள்ளன. இடதுகையில் வில்லினை ஏந்தி வலது கையில் அம்புகொண்டு எதிரிகளைத் தாக்கியபடி காட்சி உள்ளது. எதிரிகளும் இவன் மேல் அம்பு எய்கின்றனர் என்பதை விளக்கும் காட்சி அமைப்பும் உள்ளது. வீரனின் எதிரில் இரு வீரர்கள் தங்கள் கைகளில் வில்லை வைத்துத் தாக்குவதான சிறிய அளவிலான உருவங்களின் காட்சிகள் அதை உறுதிப்படுத்துகின்றன. அவ்வாறு அவர்கள் எய்த அம்புகளில் ஒன்று வீரனின் மார்பில் பாய்ந்துள்ளதை விளக்குமாறு ஒரு அடி நீளத்திற்கு வீரனின் மார்பில் தைத்த அம்பு ஒன்றும் உள்ளது. பகைவர்களின் அம்பு மார்பில் தைத்த காரணமாக அவன் இறந்துள்ளான் என்பதை விளக்கும் வகையில் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. வீரனின் பின் பகுதியில் மேல் பகுதியில் நின்ற நிலையில் இரு உருவங்கள் சிறிய அளவில் இடம்பெற்றுள்ளன. இரு தேவ கன்னியர்கள் வீரனைக் கரம்பிடித்து மேல் நோக்கி தூக்கிச் செல்வது போல் அக்காட்சி உள்ளது. வீரனின் காலடியில் மூன்று விலங்குகளின் சிறிய அளவிலான கோட்டுருவங்களும் இடம்பெற்றுள்ளன. இரண்டு குதிரைகளும் ஒரு திமிலுள்ள காளையுமாக அவை காட்சியளிக்கின்றன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள் (Pathivukal)

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்