
7
அடுத்த நாள் காலை பஸ்சில் லா ஸ்பீசியா(La Spezia) கால் மணி நேர ரயில் பயணத்தின் பின்பு ஐந்து கடற்கரை ஊர்களுக்கு (Monterosso, Vernazza, Corniglia, Manarola மற்றும் Riomaggiore) சென்றோம். இவை அக்காலத்தில் முக்கியமான நகரமான மான்ரெஸ்சோயை அடைந்தோம். உள்ளே பெரிய ஊர்: ரயில் நிலையத்திலிருந்து பாதை நேரடியாக கடற்கரைக்கு இறங்குகிறது. அழகான கடற்கரை தொடர்ச்சியாக நடந்தபோது என்னைக் கவர்ந்தது மலைப்பாறையில் செதுக்கப்பட்ட நெப்டியூன் சிலையாகும். ஆரம்பத்தில் கையிலுள்ள சூலத்துடன் நேப்டியூன், இரண்டாம் உலக யுத்தத்தில் குண்டுவீச்சில் சூலத்தையும், கையையும் இழந்த நிலையில், இன்னும் கம்பீரமாகக் காட்சியளித்தது.
போரில் கடவுளருக்கும் அதே கதியே?
சூரியக் குடும்பத்தில் எட்டாவது கோள் ஆனால் ரோமர்களது ஆறு, கடல் மற்றும் எரிமலைக்கு மட்டுமல்ல, குதிரைகளுக்கும் உரிய கடவுளாகும். ஐந்தாயிரம் வருடங்கள் பழமையான கிரிக்கர்களின் பொசிடோன்தெய்வத்தின் ரோமானியப் பதிப்பே நெப்டியூனாகும். கடல் மாலுமிகளது முக்கிய தெய்வமாகும்.
ரோம அரசு இருந்த ஆயிரம் வருடங்கள் இயற்கையின் சக்திகளை( Pagan Gods) தங்கள் தெய்வங்களாக வழிபட்டார்கள். கிரிக்க தெய்வங்களை விட ரோமர்களது தெய்வங்களின் எண்ணிக்கை அதிகமானவை . நாங்கள் இப்பொழுது பாவிக்கும் ஃபுளோரா(Flora) இயற்கையில் உள்ள தாவரங்களைச் சொல்வது: ரோமர்களது முக்கிய தெய்வமாகும் அதேபோல் காட்டு விலங்குகளுக்கு ஃபோனா(Fauna) என்ற பெண் தெய்வம் உண்டு. கதவு, பிணைத்தல், படலை எல்லாவற்றிற்கும் தெய்வங்கள் உள்ளது. நுழைவாசலின் தெய்வம் ஜானா: அதனாலே ஜனவரி என்ற பெயர் வந்தது – புதிய வருடம் ஜனவரி மூலம் உள்ளே நுழைக்கிறது. விவசாயத்திற்கு கைத்தொழில்கள் ஒவ்வொன்றிற்கும் கடவுள் உண்டு. இதற்கப்பால் தெய்வங்களுக்கு மிருகப்பலிகள் பலிகள் கிடைக்கும். . பன்றிகள் வெட்டப்பட்டுப் படைக்கப்படும். தெய்வங்கள் மனித உருவிலானவை. அவைகளுக்கும் எங்களைப்போல் கோபம், காதல் இரக்கம் என்ற குணங்கள் ஏற்படும்.

இந்த ரோமர்களின் மதத்தில், இந்து மதம்போல் சடங்குகள் உண்டு. மேலும் சடங்குகள் ஊர் கூடி நடத்தப்படவேண்டும். ஓரே வித்தியாசம்: தியானம் தவம்போல் அகவணங்கங்கள் இல்லை. புறம் சார்ந்த வழிபாடல்கள் ஒவ்வொரு ஊரிலும் உள்ளது அதை ஒவ்வொரு ஊருக்கும் உள்ள மதத் தலைவர் மேற்பார்வையிடுவார்.
மான்ரெஸ்சோ கடற்கரையிலிருந்து மற்றைய மூன்றுக்கு நகரங்களுக்கு நடந்தும் போகலாம் ஆனால் நாங்கள் ரயிலில் போனோம் .மலை உச்சியிலுள்ள கோனிலியா (Corniglia) என்ற நகரத்திற்கு நடந்து போக முயன்றபோது எங்களுடன் அமெரிக்காவிலிருந்து வந்த எங்கள் வயதான தெலுங்கு தம்பதிகள் சேர்ந்து கொண்டார்கள். இறுதியில் அவர்கள் தங்கள் முயற்சியைக் கையை விட நாங்களும் கையை விட்டோம்
ஆரம்பத்தில் இவை ஐந்தும் மீன்பிடி கிராமங்களே - கடற்கரைகள் சுத்தமாகவும் அழகாகவும் உள்ளன. அங்கிருந்த வீடுகள் பல வண்ணங்களில் இருந்தன. அதே நேரத்தில் மீனவர்கள் தங்களுடைய தொழிலைச் செய்கிறார்கள். தொடர்ச்சியாக நடந்து கால் முடியாது என கெஞ்சியது . இறுதியில் ஒரு கைத்தடியை வாங்கி கால்களுக்கு உதவினேன் .
அடுத்த நாள் எங்கள் பயணம் போலோனா என்ற புரதன நகரமாக இருந்தது. போலோனா நகரில் நடக்கத் தொடங்கியபோது, கடைகளின் முன்பான கொரிடோர் ஒரு கிலோ மீட்டர் நடந்தோம், ஆனால் பல பிரிவுகளாக அமைந்துள்ள கொரிடோரின் மொத்த நீளம் 62 கிலோ மீட்டர் ஆகும். கொரிடோர்கள் பல வளைவுகள் கொண்டது. இங்கு கொரிடோர்கள் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஒரு பக்கம் கடைகள், மறுபக்கம் பாதை என்பவை உள்ள கொரிடோர்கள் யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்டது. இந்த நகரத்தின் இவை முக்கியமானவை. நாங்கள் போனபோது மழை தூறியது, கலாச்சார முக்கியத்துவத்துடன் பாதுகாப்பாக நகர் முழுவதும் பார்க்க உதவுகிறது.
இந்த கொரிடோரில் நடந்து போகும்போது, கொஞ்சம் நிதானித்து நின்று படம் எடுப்போமென்று தயங்கியபோது ஒரு இளம்பெண் என் கையை பிடித்து இழுத்தார். சியாமளா பார்ப்பதற்கு முன்பாக என் கையை இழுத்தபடி விலகிச் சென்றேன். பெரும்பாலும் பணம் கேட்பதற்காக என நினைத்தேன்: பல நாடுகளிலிருந்து வந்த அகதிகள் இங்கும் உள்ளார்கள்.
அப்படியே சென்று நகரின் மத்திய இடத்தில் நீர் நிலையில் அழகான நெப்டியூன் சிலை, தேவதைகள் சூழ இருந்தது . அதற்கப்பால் தேவாலயங்கள் உயரமான இரு மணிக் கோபுரங்கள், நகரசபை கட்டிடங்கள் உள்ளன. அருகருகே பல கடைகள் என அந்த இடம் மக்கள் திரளாக இருந்தது. பொலோனாவில் பல முக்கியமான அருங்காட்சியங்கள் உள்ளது.
எட்டாம் வகுப்பில் படித்தபோது தெரிந்த கரிபால்டி என்ற பெயர் நினைவுள்ளது. அந்தப் பெயரைக் கறுப்பாக இருந்த சகமாணவனை அழைப்பதற்குப் பாவித்தது நினைவு வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் சேகுவாரா எப்படி மற்றைய நாடுகளின் சுதந்திரத்திற்குப் போராடியது போல 19 ம் நூற்றாண்டில் கரிபால்டி நகர அரசுகளாக இருந்த இத்தாலியை ஒன்றாக்க ஆயுதமெடுத்து போராடியவர். பிற்காலத்தில் மரணதண்டனை கிடைத்தபோது தென் அமரிக்கைக்குத் தப்பிச்சென்று அங்கு பிரேசில் உருகுவே நாடுகளுக்காக 14 வருடங்கள் ஆயுதப்போராட்டம் செய்தவர்.
இத்தாலியை ஒன்றிணைக்கப் போராடிய கரிபால்டியின் (Giuseppe Gaibaldi) சிலையைப் பார்த்தபோது பல காலத்தின் பின் பார்த்த நண்பரைப் பார்த்தால் ஏற்படும் உணர்வை அடைந்தேன்.
பொலானா இத்தாலிய உணவிற்கு பேர் போன இடமாகும் என்பதால் அங்கு உண்பதற்காக ஒழுங்கு பண்ணியிருந்தார்கள். ஃபெரேராரி(Ferrari) மற்றும் மசராட்ரி (Maceratti) போன்ற வேகமான கார்கள் தயாரிக்கும் இடங்கள் பொலானா நகரிலிருந்து அதிக தூரத்தில் இல்லை என அறிந்தேன். பொலானா நகரில் நான் பார்க்கவிரும்பி அரைவாசி தூரம் நடந்துவிட்டு நேரமில்லை எனத் திரும்பியது 1088 ஸ்தாபிக்கப்பட்ட ஐரோப்பாவின் முதல் பல்கலைக்கழகமாகும்.
8

இந்தப் பயணத்தின் இறுதியில் நாங்கள் சென்ற இடம் வெனீஸ் நகரம். இது ஒரு தீவு என்றதால் சிறிய வள்ளத்தில் சென்றோம். எங்கள் எழுவைதீவுக்கு வள்ளத்தில்போன இளமைக்காலம் நினைவுக்கு வந்தது.
வெனிஸ் தானாக உருவான ஒரு தீவல்ல. உருவாக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளின் கூட்டம் அந்த தீவுக் கூட்டத்தை இணைப்பதே கால்வாய்கள்.ஒரு காலத்தில் இவை குடிசைகளாக இருந்தன.
அப்படி ஏன் தீவுகளைக் கடலில் உருவாக்க வேண்டியது அவசியமாகி வந்தது?
ரோமர்களின் வீழ்ச்சி ஐந்தாம் நூற்றாண்டில் நடந்தது. இக்காலத்தில் ரோமராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டு 1000 வருடங்கள் ஆகிவிட்டது. ரைன் நதிக்கு வடக்கே உள்ள ஆதிவாசிகளால் தொடர்ச்சியாக ரோம ராச்சியம் தாக்கப்பட்டது . அந்த காலத்தில் பாபரியன் எனப்படும் ஜெர்மனிய ஆதிவாசிகளால் தொடர்ச்சியாகத் தாக்கப்படுத்தப்பட்டதால் ரோமர்கள் 5ம் நூற்றாண்டில் தங்களுடைய நிலத்தை விட்டு விலகி, அகதிகளாக கடலுக்குள் தீவுகளை தங்களுக்கு உருவாக்கினார்கள்.அதற்கான மரங்கள், தொழில்நூட்பம், பணம் அவர்களிடம் இருந்தது.
இதில் முக்கியமான இரண்டு வார்த்தைகள் - ஜெர்மானியர்களை பாப்பேரியன் (Barbarians) என ரோமர்கள் கணக்கிட்டார்கள். அக்கால ஜெர்மன் மொழி பேசும் சக்சனி பிரதேசம் (Saxony) - நாகரிகம் அடையாத ஆதிவாசிகள் வாழ்ந்த இடம். தற்போது அமெரிக்கர்கள் தென்னமரிகர்களை லட்ரினோ எனக் குறிப்பிடுவது போன்றதே ஆகும்.
மற்றைய நாடுகளில் முடியரசுகளின் வீழ்ச்சியின் பிறகு நிலப்பிரபுத்துவ ஆட்சி உருவானது (Feudal Society), ஆனால் வெனிஸ் நிலமற்றதால் உடனடியாக வர்த்தக அல்லது வணிக ஆட்சி வளர்ச்சி அடைந்தது. இதனால் ஒரு ஜனநாயக அரசு டூக் (Duke or Doge) உருவானது. மற்ற இத்தாலிய நகர அரசுகளில் இருந்து வித்தியாசமான குடியரசு மனப்பாங்கை கடைபிடிக்கின்றது. இங்கு வணிகத்துடனும் ஓவியக் கலையும் சேர்ந்து வளர்கின்றன. பிற்காலத்தில் 1800-இல் அவுஸ்திரியா அதன்பின் நெப்போலியன் ஆக்கிமிப்பு உருவாகும்வரையில் தனித்து பிரகாசித்தது.
ஆரம்ப பாடசாலை காலத்தில் சேக்ஸ்பியரின் “வெனிஸ் நகரத்து வாணிகன்” என்ற கதையைக் கேட்டபோதே வெனிஸ் நகரம் எனக்கு அறிமுகமாகியது.: வெனிஸ்சில் யூத வியாபாரி வட்டிக்குப் பணம் கொடுத்து,அந்தப் பணம் திருப்பிக் கிடைக்காதபோது தசையைக் கேட்டதாகவும் ‘நீ தசையை ஒப்பந்தப்படி எடுக்கலாம், ஆனால் ஒரு துளி இரத்தமோ அல்லது ஒரு பவுண்டுக்கு சிறிதளவும் மேலாகத் தசை எடுக்கக்கூடாது ‘ என்ற கட்டுப்பாடு வைத்தபோது சைலொக் என்ற யூத வியாபாரியால் தசையை எடுப்பதை கைவிடப்படுகிறதாக கதை இறுதியில் முடிகிறது .
இக்காலத்தில் அன்ரி செமரிக் என்ற குற்றச்சாட்டு சேக்ஸ்பியரில் வைக்கமுடியும் . அதைவிட வெனிசில் இருந்தே கெற்றே (Ghetto) அதாவது ஒடுக்கப்பட்ட, அசுத்தமானவர்கள் நகரத்தில் வாழும் இடம் . இந்த கெற்றோவின் ஆரம்பம் வெனிசாகும் . ஆயிரத்திற்குக் குறைந்த யூதர்கள் ஆடுமாடுகளை பட்டியில் அடைப்பதுபோல் இரவில் இப்படியாகப் பூட்டி வைத்து காலையில் திறந்து விடப்படுவார்கள். அந்த கட்டிடங்கள் இன்னமும் வெனிஸ் நகரத்தில் உள்ளன. பிற்காலத்தில் நெப்போலியன் வெனிசைக் கைப்பற்றிய பின்பே, யூதர்கள் சுதந்திரமாக இத்தாலி எங்கும் நடமாட முடிந்தது. நான் சந்தித்த இத்தாலிய வழிகாட்கள் நெப்போலியன்மீது வெறுப்பில் “லிட்ரில் மான்(Small man)“ என்றே குறிப்பிட்டார்கள். அப்படியான வெறுப்பை நாங்களோ இந்தியர்களோ பிரித்தானிய காலனியாளர் மீது வைப்பதில்லை.
வெனீஸ் என்பது ஐந்தாம் நூற்றாண்டில் அறியப்பட்ட, அட்ரியடிக் கடலில் பல லட்சக்கணக்கான காட்டு மரங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நகரம். வெனிஸ் நகரத்தின் வீதிகளில் வாகனங்கள் இல்லை. அதற்குப் பதிலாக பெரிய கால்வாய் மற்றும் கிளைக் கால்வாய் ஓடுகின்றன. நகரத்தின் கழிவுகளை வள்ளங்களில் ஏற்றி அகற்றும் முறையைப்பார்த்தேன்.
இங்கு வருபவர்கள் எல்லோரும் கொண்டலா என்ற படகுகளின் மீது வெனிசின் கால்வாய்களின் மீது போய் வரைபட முடியும். நாங்கள் அரை மணி நேரம் ஒரு சீன மற்றும் அவுஸ்திரேலியப் பெண்களுடன் அப்படி சுற்றினோம். கொண்டலாவில் நாலு பேர் சென்றாலும் இரண்டு பேர் சென்றாலும் அதே பணம் என்றதால் நாலு பேர் செல்ல முடிவு செய்தோம். 18 நூற்றாண்டு காலத்தில் 14ooo . கொண்டலாக்கள் இப்பொழுது 500 மட்டுமே உள்ளது
அப்படி சுற்றியபோது ஐரோப்பாவின் முக்கிய பயணியான மார்கோபோலோவின் வீட்டைப் பார்த்தோம்.இவர் தனது பயணத்தை சில்க்(Silk Road) எனும் தரைவழிப் பாதையால்சென்று, பிறகு கடல் வழியாக வந்தார்.
மார்கோபோலோ, ஜெங்கிஸ்கானின் பேரனாகிய குப்பிளாய் கானுடன் அரச சபையில் பேசியதாக படித்தேன். குப்பாளாய் கான் ‘நீங்கள் போன நகரங்களைப்பற்றி கூறுங்கள் ‘ எனக்கேட்டபோது பல கற்பனையான கதைகளை சொல்லியதாகவும் அவை இறுதியில் எல்லாம் வெனிஸ் நகரத்தை பற்றியது ‘ எனக் கூறி முடிந்ததாகப் படித்தேன். அந்த நாவலை எழுதியவர் இத்தாலிய எழுத்தாளர் (Invisible Cities by Italo Calvino. Published in 1972).
சீனாவிலிருந்து மீண்டும் வரும்போது மார்கோபோலா இலங்கை வழியாகப் போனார். தான் பார்த்தவற்றில் இலங்கையே அழகிய தீவு எனச் சொன்னதான செய்தியும் என் நினைவில் மிதந்தது.
வெனிசின் பிரதான வாய்கால் மீது மூன்று பாலங்கள் இருந்தபோதும் முக்கியமானதான ரியால்ரோ பாலமாகும் -ஆரம்பத்தில் மரத்தாலானது நாம் கொண்டலாவில் சென்றபோது பார்த்துவிட்டு இறங்கி அதன்மீது நடந்தோம் கடைகள் , சந்தைகள் ரெஸரோரண்ட் என பல நிறைந்த இடமது .
வெனிஸ் ஒரு கடல் வணிகக் குடியரசாக பல நூற்றாண்டுகள் இருந்தது. அதனால் இங்கு குடியரசை நிர்வகிப்பவரை டோஜி (Doge) என்று அழைக்கிறார்கள். வெனிசின் பிரதான வாய்காலுக்கு முன்பே அந்த மாளிகை உள்ளது. அந்த மாளிகை அரச நிர்வாகம், நீதிமன்றம், சிறை போன்ற பல்வேறு பயன்பாடுகளில் இருந்தது; தற்போது அது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. உள்ளே போக பதிவு வேண்டும்.
இதைக் கடந்து போனால் சென் மார்க் முன்றலை சுற்றி அழகான சென் மார்க் தேவாலயம் உண்டு. இங்கே வேதாகமத்தை எழுதிய மார்க்கின் தலையற்ற உடல் அலக்சான்ரியாவிலிருந்து கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ளது என அறிந்தேன் . உள்ளே தங்கத்தாலாக வேலைப்பாடுகள் இருப்பதாகத் தெரிந்தும் உள்ளே செல்ல நேரமிருக்கவில்லை தேவாலயத்தின் முன்பாக ரோமானிக்(Romanesque arches) வளைவுகளும் கொத்தி(Gothic Columns) )தூண்களும் இருந்தபோதும் கட்டிடஉச்சிகள் இஸ்லாமிய கட்டிடக்கலையை நினைவு படுத்தி ஒரு கதம்பமான அழகை தந்தது. அருகே உயரமான மணிக்கோபுரம் உள்ளது .
தற்போது 30 மில்லியன் உல்லாசப் பயணிகள் இங்கு வருகிறார்கள், அதனால் பல வெனிசியர் ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். தற்போது பெரிய பயணக் கப்பல்கள் வருவது தடைசெய்யப்பட்டுள்ளது.
அடுத்தநாள் காலையில் இரண்டு தீவுகளுக்கு வள்ளத்தில் போனோம்
அதில் முரானோ (Murano) ஆரம்பத்தில் மீன் பிடித்த தொழிலுக்காக, ஆறாம் நூற்றாண்டில் கடலின் மீது கட்டப்பட்ட தீவு: இது ஒரு தீவுவல்ல , ஏழு தீவுகள், ஆனால் சிறிய பாலங்களால் அவைகள் இணைக்கபட்டு இருந்தன. பிற்காலத்தில் வெனிஸ்சியில் உள்ள கண்ணாடி வார்ப்பாளர்கள் இந்த தீவுக்கு வந்து சேர்ந்தார்கள் என்பதால், கண்ணாடி வேலைகளுக்கு பிரபலமானது. அக்காலத்தில் ஆடம்பர கண்ணாடி விளக்குகள் தயாரிக்கப்படும் தீவாக மாறியது. இது ஐரோப்பாவெங்கும் பிரபுக்களின் மாளிகைகளின் கண்ணாடி விளக்குகள்(Chandeliers) அலங்காரப் பொருளாக மாறிய காலம்.
இந்தத் தீவு பெரியதல்ல; 2 கிலோமீட்டர்கள் நீளமானது, ஆனால் தீவெங்கும் பல அழகிய கண்ணாடிப் பொருட்கள் விற்கும் கடைகள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக இந்த கலை இவர்களிடம் உள்ளது. இங்கும் மீன்பிடித் தொழில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு கடைகளையும் உள்ளே உள்ள அலங்கார கண்ணாடி வேலைப்பாடுகளையும் யன்னல்களுடாக பார்த்தபடி நடந்தோம் . வெனிசுக்கு வருபவர்கள் இந்த தீவுக்கு நிட்சமாக வள்ளத்தில் வருவார்கள் .இந்த தீவில் தனது பேத்திக்கு ஆபரணம் வாங்குவதற்காக எங்களுடன் வந்த ஒரு பெண் கடைகளுக்கு சென்றவர், சில மணி நேரமாக தொலைந்து விட்டார். நாங்கள் அவர் வரும்வரை காத்து நின்றோம். 80 வயதானவரை புதிய இடத்தில் தொலைந்தபோது நாங்கள் எங்கேபோய்த் தேடுவது எண்ணியபடி, அந்த துறைமுக வாசலில் அங்கலாய்தபடி இரு மணிநேரம் நின்றபோது, கடைசி தன் மூச்சைப் பிடித்தபடி வந்து சேர்ந்தார்.
அன்று நாங்கள்போன இன்னும் ஒரு சிறிய தீவு புரானோ(Burano) :வள்ளத்தில் சென்றபோது பல விதமான அழகிய வர்ணத்தில், மீனவர்கள் வீடுகள் .இருந்தன இங்கு தற்போது முக்கியமான விடயம் லேஸ் செய்வதாகும் .லேஸ்க்கென அருங்காட்சியகம் உள்ளது இந்தியாவில் பட்டு வேலைபோல் இது இங்கு பாரம்பரியமாகச் செய்யப்படுகிறது இதுவும் ஆறு தீவுகள் கொண்டது 5000 பேர் வாழ்கிறார்கள் இங்கும் வள்ளங்களே போக்குவரத்துக்காக உதவும் .
இரண்டு தீவுகளிலும் தலா இரண்டு மணிநேரம் செலவழித்துப் பார்க்கலாம் போக்குவரத்து இரு மணி நேரம் செல்லும். பார்ப்பதற்கு கண்நிறைந்த காட்சியும் நினைவுக்குப் படங்களும் எடுத்துக்கொண்டு மீண்டும் வெனிஸ் திரும்பினோம் .
அடுத்த நாள் வெனிசிலிருந்து லண்டனில் சென்றோம் அங்கு ஒரு இந்திய வம்சாவளிப் பெண் எங்கள் இருவரையும் இரு வரிசையில் அமருங்கள் என பிரித்து போடிங் பாஸ் தந்திருந்தார். வேறு வழியில்லாது அவளை நினைத்து மனத்துள் நினைத்து பொருமியபடி பறந்து குவான்சோ(Guangzhou) விமான நிலையம் அடைந்தோம். சிலமணி நேரத்தில் எங்களது விமான பாதுகாப்பு சோதனை நடந்தது. அப்போது ஒரு சீனப்பெண் என்னை தன்னுடன் வரும்படி அழைத்தாள்.
முகநூலில் ரடொனால் ரம்பையும்(Donald Trump) கியர்ஸ் ராமரையும்(Keirs Starmer) பற்றித்தான் எரிச்சல்ப்பட்டு எழுதுவேன். ஜி ஜிங்பிங்(Xi Jingping) எக்காலத்திலும் விமர்சம்வைக்கவில்லையே? என நினைத்துச் அவளுடன் சென்றபோது அந்தப் பெண் சிரித்தபடி ‘உங்கள் இருவருக்கும் அருகருகே இருக்கை தந்துள்ளோம். மகிழ்ச்சியாக மெல்பேனுக்க பயணியுங்கள் ‘என புதிய போடிங் பாஸ்களைத் தந்தபோது அந்த பெண் எனது இதயத்தில் அமர்ந்து கொண்டாள்.
சீன விமானத்தில் நான் பார்த்த ஒரு விடயம்: நீண்ட பயணம் முடிந்தபின்பு இருக்கையில் அமர்ந்து உடற்பயிற்சி செய்யும் காணொளி படத்தைப் பார்த்தேன். நான் பார்த்தபோது ஏராளமான சீன பயணிகள் அப்படியே பயிற்சி செய்தார்கள். குவான்சோ (Guangzhou) இருந்து மெல்பேன் வருகையின் பத்துமணி நேரப் பயணத்தின் போது, அவர்கள் தந்த உணவில் எந்த குறை சொல்ல முடியாமல் இருந்தது. விரைவில் சீன விமான சேவை தற்போதைய கட்டார் மற்றும் எமிரேட் விமான சேவைகளை பின் தள்ளிவிடும் ஆசிய விமான சேவைகளில், தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் விமான சேவையில் மட்டுமே போட்டி நடத்தும் என நினைக்கிறேன்.
முற்றும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.











