
நண்பர் Alex EraviVarma 'கல்வியாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் தமிழறிஞரான டாக்டர் டி. சங்கர சரவணனுடன் "உலகெலாம் தமிழோசை" என்ற தலைப்பில் ஒரு சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்' பற்றியொரு முகநூற் குறிப்பினை இட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த பின்வரும் கூற்று என் கவனத்தை ஈர்த்தது:
"கனடாவில் அல்லது ஈழத்தில் வெளியிடப்பட்ட நாவல்களை ஏன் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்ய முடியவில்லை என்று அங்கிருந்த சில எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் கேள்வி எழுப்பினர்."
இந்தியாவை நோக்கிக் கேள்வி எழுப்புவதற்கு முன், டொரோண்டோ , மிஸ்ஸிஸாகா , பிராம்டன் , மார்க்கம் போன்ற தமிழர்கள் அதிகமான அளவில் வாழும் பகுதிகளிலுள்ள நூலகங்களில், எம் வரிப்பணத்தில் பணி புரியும் தமிழ் அதிகாரிகளிடம் இந்தக் கேள்வியை வையுங்கள்.
ஏன் அவர்கள் ரமணிசந்திரன் போன்றவர்களின் நாவல்களை வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை, கனடாத் தமிழ் எழுத்தாளர்கள் எழுதி வெளியிடும் நூல்களை நூலகங்கள் வாங்குவதற்குத் தேர்வு செய்வதில்லை? கனடா எழுத்தாளர் சிலரின் நூல்களையே காண முடிகின்றது. ஏன் இங்குள்ள தமிழ் எழுத்தாளர்கள், பதிப்பகங்களுடன் கலந்துரையாடி, இங்கு வெளியாகும் தமிழ் நூல்களை நூலகங்கள் வாங்குவதற்குரிய திட்டங்களை வகுப்பதில்லை. அல்லது நூலகங்களின் உயர் அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்வதில்லை?
இவர்கள் பணி புரிவது எங்கள் வரிப்பணத்தில், ஆனால் தமிழகப் பதிப்பகங்களிடமிருந்து நூல்களை வாங்குவதற்கு முண்டியடிக்கும் இவர்கள் இங்கு வாழும் தமிழ் எழுத்தாளர்களின், பதிப்பகங்களின் நூல்களை நூலகங்கள் வாங்கும் வகையில் பரிந்துரை செய்வதில்லை. நூலக உயர் அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் அதற்கான வழி முறைகள் ஏற்கனவே உள்ளன என்கிறார்கள். ஆனால் அவ்வழி முறைகளைச் சீராக நடத்த வேண்டியது நூலகங்களில் பணி புரியும் , பிறமொழி நூல்களைத் தேர்வு செய்யும் அம்மொழிகளுக்குரிய பரிந்துரைக்கும் அதிகாரிகளே. ஆனால் அவர்கள் தம் கடமையினைச் செய்வதில்லை.










