இயற்கை எழிலும், தொழில்நுட்ப மேம்பாடும் ஒன்றையொன்று விஞ்சும் San Francisco - 3 - ஶ்ரீரஞ்சனி -
உங்களைச் சந்திப்பதற்காக பாமட்டும்தான் வருகிறோம், Yosemite National Park ஐப் பார்ப்பதற்கு நேரம் வராது என ராஜாவை அழைத்துக் கூறிவிட்டுத்தான் படுக்கைக்குச் சென்றிருந்தோம். அடுத்த நாள் Fresnoக்குப் போகமுதல், Golden Bridgeஐப் பார்த்துவிட்டுப் போவோமா, கார் இல்லாமல் அதனைப் பார்ப்பது சிரமமென்றா மகள். சரியென, வழியில் யூகலிப்பரஸ் மரங்களால் நிறைந்திருந்த 909 அடி உயரமான Mount Sutroஇல் பார்த்துவிட்டு Golden Bridgeக்குப் போனோம். அது மனதைக் கொள்ளைகொள்ளும் அளவுக்கு மிகவும் அழகாக இருந்தது. பொன் கண்டுபிடித்த காலத்தின் அடையாளத்தில் இதுவும் ஒன்றென்றனர்.
அதைத் தொடர்ந்து இரண்டு மணி நேரமாகப் பயணித்தபோது, என் வேகத்தில் Fresnoஐ அடைய ஐந்து மணிக்கு மேலாகிவிடுமென்பது தெரிந்தது. ஐந்து மணிக்குப் பின்னர் அங்குபோய் காலையில் 7 மணிக்கு அங்கிருந்து நாங்கள் புறப்படுவது சிரமமாகவிருக்கும், திருமணமொன்றுக்காக அடுத்த நாள் காலையில் 7 மணிக்கு அவர்களின் வீட்டிலிருந்து வெளியேற வேண்டியிருந்ததால்
அவர்களுக்கும் அசெளரியமாகவிருக்குமென்ற யதார்த்தமும் புரிந்தது. எனவே அவர்களை அழைத்து எங்களுக்காகச் சிரமப்பட்டு உணவு தயாரித்திருப்பீர்கள், வராமல் விட்டால் மன்னிப்பீர்களா என நிலைமையை விளங்கப்படுத்தினேன். சமையலுடன் தொடர்ந்தும் வேறுபட்ட சிற்றுண்டிகளையும் அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்தனர். சாப்பிடுவதற்கோ, சந்திப்பதற்கோ கொடுத்துவைக்கவில்லையென மிகவும் வருத்தமாக இருந்தது. சரி, பரவாயில்லை, அடுத்த ஆண்டில் நாங்கள் கனடா வருகிறோம். அப்போது இதற்கான தண்டனையாக உங்கள் வீட்டில் வைத்து எங்களை உபசரியுங்கள் எனப் பகிடியாகச் சொன்னார் ராஜா.