நனவிடைதோய்தற் குறிப்புகள்: டிசம்பர் 06 – பேராசிரியர் க. கைலாசபதி (1933- 1982) நினைவு தினம்! - முருகபூபதி -
நம்மிடத்தில் – நம்மவர்களைப் பற்றிய எதிர்பார்ப்பு ஒன்று உண்டு. அவருக்கு கடிதம் எழுதினேன் – பதிலே இல்லை. கடிதமா ? ஐயோ – எழுத நேரம் எங்கே கிடைக்கிறது. அமர்ந்து கடிதம் எழுதுவதற்கு நேரம் தேடி போராடுகின்றோம். கோபிக்க வேண்டாம். உங்கள் கடிதம் கிடைத்தது. பதில் எழுத முடியாமல் போய்விட்டது. அவ்வளவு பிஸி. இவ்வாறு உரையாடுபவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். இந்த நிலைமை முன்புதான். ஆனால், தற்போது நாம் வேறு ஒரு யுகத்தில் வாழ்கின்றோம். முன்னைய யுகம் எப்பொழுது?
மி.மு. காலத்தில். அதென்ன மி.மு? மின்னஞ்சலுக்கு முன்னர் நாம் வாழ்ந்த காலத்தில். தற்பொழுது மி.பி. காலத்தில் வாழ்கின்றோம். அதாவது மின்னஞ்சலுக்கு பிற்பட்ட காலத்தில். மின்னஞ்சல் தந்த கொடைகள் முகநூல் – டுவிட்டர் – இன்ஸ்டகிராம். ஸ்கைப். இனிவரும் காலத்தில் மேலும் புதிய சாதனங்கள் வரலாம். ஆனால் – இந்த மென்பொருள் சாதனங்கள் எல்லாம் வருவதற்கு முன்பே இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட சமாதானங்களைக் கூறி தப்பிப் பிழைக்காமல் – தனக்கு வரும் கடிதங்களுக்கெல்லாம் தளராமல் பதில் கடிதம் எழுதிய ஒருவர் நம் மத்தியில் வாழ்ந்து மறைந்தார் என்பதை எத்தனை பேர் அறிந்திருப்பார்கள்?.
அவர்தான் பேராசிரியர் கைலாசபதி. கடிதம் எழுதுவதும் ஒரு கலைதான் என உணர்த்திய இலக்கிய வாதியாக அவரை நான் இனம் காண்கின்றேன்.