மு.த: அவசரக் குறிப்புகள் அல்ல - மு. நித்தியானந்தன் -
மு. தளையசிங்கத்தின் 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' கட்டுரைத்தொடர் கண்டியிலிருந்து வெளியான 'செய்தி' பத்திரிகையில், 1964/65 காலப்பகுதியில் வெளியான தொடராகும். மு.த. அவர்கள் இத்தொடருக்கு, 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி: அவசரக் குறிப்புகள்' என்றுதான் தலைப்பிட்டிருந்தார். இத்தொடர் வெளிவந்துகொண்டிருந்தபோதே, 'என்ன அவசரம்?' என்ற தலைப்பில், ப.வயிரவன் 2, 3 இதழ்களில் இக்கட்டுரைத்தொடரை விமர்சித்து எழுதியிருந்தார். கே.எஸ்.சிவகுமாரன், 'ஒரு விமர்சகரின் இலக்கியப் பார்வை' என்ற தனது நூலில், மெய்யியலாளர் காசிநாதன் அவர்களே வயிரவன் என்ற பெயரில் விமர்சனங்கள் எழுதிவந்தார் என்று குறிப்பிடுகிறார்.
இந்நூல் ‘க்ரியா’ வெளியீடாக வெளிவருவதற்கான இறுதி வேலைகள் முற்றுப்பெற்றுவிட்ட நிலையில், 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி என்று போட்டிருக்கிறீர்கள். எந்த ஏழாண்டுகள்?' என்று ராமகிருஷ்ணனிடம் கேட்டபோதுதான், அவர் அந்நூலின் உட்பக்கத் தலைப்பில், 1956-1963 என்ற ஆண்டு விபரத்தைச் சேர்த்து, முக்கிய அம்சமொன்றினைச் சுட்டிக்காட்டியதற்கு எனக்கு நன்றியும் தெரிவித்தார்.
மு.த.வின் 'போர்ப்பறை', ‘புதுயுகம் பிறக்கிறது', ‘கலைஞனின் தாகம்', 'மெய்யுள்', 'ஒரு தனி வீடு' ஆகிய நூல்களையும் கோவை சமுதாயம் பிரசுராலயம் மூலமாகத் தமிழகத்தில் வெளியிட்டுவைத்த பெருமை பத்மநாப ஐயரையே சாரும். பத்மநாப ஐயரின் தன்னலமற்ற முயற்சிகள் பெரும் பாராட்டிற்குரியன.
'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’ நூலில் தன்னைப் பற்றித் தவறாக மு.த. எழுதியிருப்பதாகவும், இந்நூலைப் பிரசுரித்தால், ‘க்ரியா’மீது தான் வழக்குப்போடுவேன் என்று தர்மு சிவராமு அவர்கள் க்ரியா ராமகிருஷ்ணனுக்கு எழுதிய கடிதத்தை, ராமகிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை. .
மு.த.வின் இந்த இலக்கியத்தொடரின் பெருமளவு கட்டுரைச் சேகரங்களை உதவிய மு.புஷ்பராஜனைப் பற்றி இந்நூலில் ஒரு குறிப்பும் இல்லை. சில இதழ்களைத் தேடி உதவிய விக்னேஸ்வரனுக்கும், நான்கு நாட்கள் மூலப் பிரதியைப் பார்வையிட்டு உதவிய ஜீவகாருண்யத்திற்கும் நன்றி தெரிவித்த பெருந்தன்மை, புஷ்பராஜன் விஷயத்தில் ஏன் காட்டப்படவில்லை என்று தெரியவில்லை. மூலப் பிரதியிலிருந்து இந்நூல் தொகுக்கப்பட்டபோது, மூலப் பிரதியின் சில குறிப்புகள் நீக்கப்பட்டிருக்கின்றன.