நனவிடை தோய்தல் (2): சீனிக்குட்டி- மணியம் பேக்கரி.சண்முகநாதன் கடை. ஐயாத்துரை கடை. சங்கக்கடை. - இந்து லிங்கேஷ் -
- இந்து லிங்கேஷ் நினைவு கூரும் இந்த நனவிடை தோய்தல் முக்கியமானது. இதில் அவர் நினைவு கூரும் சீனி என்னும் சீனிக்குட்டி யாழ் இந்துவைப் பற்றி நினைத்தால் நினைவில் சிறகடிக்கும் முக்கியமானதோர் ஆளுமை. -
சங்கக்கடையின்ர இடது பக்கமா, ஒதுக்குப்புறமா,ஒரு மூலையில குமாரம்மானின்ர இருப்பிடம். நறுக்குப் புகையிலைத்துண்டு, வெத்திலை பாக்கு,பல்லி முட்டாய்,அரி நெல்லி,தோடம்பழ இனிப்பு என்றபடி சின்ன வியாபார மூலையது.குமாரம்மான் சேட்டுப்போட்டு நான் பார்த்ததில்லை.எப்போதும் சாரமும்,அவரது வண்டியும் அவர் கைகளில் பாக்கு வெட்டியுமாக வாங்கிலில் இருந்துகொண்டு பாக்குச்சீவிய காட்சிதான் இன்றும் அவர் நினைவாக! சின்னதாய் ஒரு மேசையில சப்பட்டைப்போத்தல்களுக்குள்ளே அரி நெல்லி,பல்லி முட்டை, தோடம்பழ இனிப்பென கண்ணைக்கவருகிறமாதிரி இவையெல்லாம் வெயிலுக்கு மின்னிக்கொண்டிருக்கும்.எங்கட கையில 10 சதம்,ஆக மிஞ்சிப்பார்த்தா 5 சதம்தான் வீட்டில தருவீனம். அதுக்கு குமாரம்மான் சரியா எண்ணி எதாவது தருவார்.பல்லி முட்டை தந்தால் அது வாயில கடிபட சீரகமும் சேர்ந்து அது வேற லெவல்.
அடுத்தநாள் உப்புத்தண்ணிக்குள்ள போட்ட அரி நெல்லி வாங்குவம்.ஒரு கடி கடிக்க அதுவும் வரண்ட தொண்டைக்கு ஊறிக்கிடந்த உப்பும் சுள்ளாப்பா இறங்கி வாய்க்குள்ள பாத்திகட்டி நெல்லிச்சாறாய் ஓடும்.தேகம் சிலுசிலுக்கும். அந்த அரிவரிபடிச்ச இளங்கன்று வயசில சுவைக்க குமாரம்மானின் தோடம்பழ இனிப்பு வாய்க்குள்ள சேர்ந்து கரைஞ்சு தித்தித்த அந்த ருசியும் இன்னும் மனசுக்குள் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டே யிருக்கின்றது. ஒருபக்கம் பாண்,பணிஸ் வாசம்.பேக்கரி மூலையில கொட்டிக்குவிஞ்சுகிடக்கும் உமி, மாக்கழிவுகளைக்கூட மாடுகள் வந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதும்கூட அதிலிருந்து நீராவிபோல காத்தில 'மா' பறக்குமே அந்தக்காட்சிதான் இந்தப்பெயர்போன சந்தியின் அன்றைய மெய்யழகு!